Home Historical Novel Nagadevi Ch 3 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 3 | Nagadevi Sandilyan | TamilNovel.in

115
0
Nagadevi Ch 3 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 3 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 3 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 3. மாயா தேவி

Nagadevi Ch 3 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி எட்ட பஞ்சணையில் உட்கார்ந்திருந்த போதும், கட்டிலை விட்டிறங்கி நின்று நாகர்கள் கட்டளையை விளக்கியபோதும் அவள் உடலிலிருந்து எழுந்த சுகந்தம் உபேந்திரனை ஓரளவு ஈர்த்ததென்றால், அவள் அவனருகில்
வந்ததும் அந்தப் பரிமளம் அவன் உணர்ச்சிகளைப் பெரிதும் அள்ளவே செய்தது. அவள் அவன் குழலைப் பிடித்திழுத்துக் குனிய வைத்த போதே அவள் மார்புக்கெதிரே மிக அருகே அவன் முகம் இருந்த காரணத்தால் லேசாகக் கச்சை
இடங்கொடுத்துத் தெரிந்த அவள் மார்பு விளிம்புகளும் இடையே ஓடிய குறுகிய பாதையும் அவன் கண்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியதல்லாமல், அருகாமையின் காரணமாகப் பெருகிவிட்ட பரிமள சுகந்தத்தின் முழு வேகம் அவன்
சுவாசத்தின் மூலம் இதயத்திலும் சென்று உறைந்து அவனை நிதானமிழக்கும் நிலைக்குக் கொண்டு வந்ததால், அவன் மயக்கத்தில் ஆழ்ந்திருப்பான். ஆனால் அந்த மயக்கத்தை அவள் அவன் காதில் ஓதிய மந்திரம் உடைத்தெறிந்து
அதிர்ச்சிக்கும் பிரமிப்புக்குமே இடங் கொடுத்தது.
அந்தப் பிரமிப்பின் விளைவாக அவள் பிடியிலிருந்து தனது குழலை விடுவித்துக் கொண்டு சட்டென்று பின்னடைந்த உபேந்திரன் “நாகதேவி! நீங்கள் சொன்ன தன் பொருள் உங்களுக்கு விளங்குகிறதா?” என்று கேட்டான். அந்தக்
கேள்வியில் விவரிக்க இயலாத அச்சம் விரிந்து கிடந்தது.
நாகதேவி அவன் தன்னிடமிருந்து பின்னடைந்ததைக் கவனித்தாள். அவன் சொற்களில் ஒலித்த அச்சத்தையும் கவனித்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக தன் அருகாமை அவனுக்களித்த குழப்பத்தையும் கவனித்தாள். இவற்றையெல்லாம்
கவனித்ததன் விளைவாகத் தன் இதழ்களில் லேசான புன் முறுவலொன்றையும் படர விட்டுக் கொண்டாள். “புரிகிறது உபேந்திரா! நாகதேவி புரியாமல் எதையும் சொல்வதில்லை. நான் விரும்புவதெல்லாம் நாகர்களின் பழைய ராஜ்யம்.
நாகர்களின் கட்டளையை உனக்கு முன்பே எடுத்து விளக்கினேன். அதற்குப் பதில் அவர்களுக்குப் பைத்தியக்காரப் பட்டத்தைச் சூட்டினாய். சுயராஜ்யம் கேட் பவர்களெல்லாம் பைத்தியக்காரர்களல்லர்” என்றும் கூறினாள் நாகதேவி
புன்முறுவலின் ஊடே.
அவள் அழகிய உதடுகளில் விரிந்த மோகனப் புன்முறுவலில் சிறிதளவு விஷமும் கலந்திருப்பதை உபேந்திரன் கவனித்தான். எதற்கும் துணிந்துள்ள மிகப் பயங்கரமான ஒரு பெண்ணிடம் தான் சிக்கி இருப்பதை உணர்ந்தான். “நாகதேவி
சோழ ராஜ்யத்துக்குள் ஒரு சிறு ராஜ்யத்தை அமைக்க முயலுகிறாய், அது வெறும் கனவு. நனவாகக் கூடியதல்ல” என்று சுட்டிக் காட்டினான் உபேந்திரன்.
அவன் எச்சரிக்கையை அவள் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. மெல்ல நகைத்துவிட்டுத் திரும்பித் தனது கட்டிலை நோக்கி நடந்து சென்று கட்டிலில் உட்கார்ந்து அந்தக் கட்டிளங் காளையை உற்று நோக்கினாள். “உபேந்திரா
சரித்திரத்தை மறந்து பேசுகிறாய். பெரும் பெரும் கனவுகள் நனவுகளாயிருக்கின்றன. மேதைகளால் மாபெரும் வீரர் களால், சாதிக்க முடியாத காரியங்கள் உலகத்தில் எதுவும் கிடையாது. இந்தப் பெரிய பணியைச் சாதிக்க சாவகத்தின்
நாகர்களில் நான் யாரையாவது அனுப்பியிருக்க முடியும். ஆனால் நானே வந்தேன் ஏன்? சரியான தலைமையில்லாத காரியங்கள் உலகத்தில் சரிவர நிறைவேறுவதில்லை. சரியான அறிவில்லாதவர்கள் பெரும் பணிகளில் ஈடுபடுவதால்
பணிக்குத்தான் பாதகம். இதை நானே நேரில் சாதிப்பதென்று இங்கு வந்திருக்கிறேன். இந்தப் பணியில் நான் அறிவு! நீ ஆயுதம்! உன்னைக்கொண்டு நாகையில் நமது ஆட்சியை அமைப்போம். நாகப்பட்டினம் நாகர்களின் பழைய
குடியிருப்பு. அவர்கள் இடமாதலால் தான் இதற்கு அந்தப் பெயர் வந்தது” என்று கனவில் பேசுவது போல் பேசினாள். இதைச் சொன்னபோது அவள் கண்களில் பெரும் கனவு விரிந்து கிடந்தது.
அது ராஜ்யக் கனவு என்பதையும் புரிந்து கொண்டான் உபேந்திரன். நாகர்களின் ஆசையை, லட்சியத்தை அவள் சற்று முன்பு விளக்கியபோதும் இப்படி தானிருந்தது அவள் தோற்ற மென்பதை எண்ணிப் பார்த்தான். அவள் தான்
வந்த காரணத்தை, நாகர்களின் எண்ணத்தை விளக்கிய திடத்தையும் அப்பொழுதிருந்த அவள் குரலின் உறுதியையும் நினைத்துப் பார்த்த உபேந்திரன் எண்ணமெல்லாம் எங்கோ சுழன்றன. அவள் பழைய தோரணை, நின்ற நிலை, பேசிய
உறுதி, விளக்கிய வரலாறு எல்லாம் மீண்டும் அவன் மனக்கண் முன் எழுந்து வலம் வந்தன. பழைய சொற்கள் மீண்டும் காதுகளில் ஒலித்தன. “உபேந் திரா! நாகப்பட்டினம் நாகர்களின் பூர்வ சொத்து. அவர்கள் அதை விரும்புகிறார்கள்.
அதை எப்படியும் சோழனிடமிருந்து மீட்டு அங்கு நமது அரசு ஒன்றை நிறுவுவதற்கு என்னை நியமித்திருக்கிறார்கள்” என்று அவள் திட்டவட்டமாகக் கூறியது அப்பொழுதும் அவன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன.
அகண்ட சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை இராஜேந்திர சோழ தேவரிடமிருந்து கைப்பற்ற முயலுவதைவிடப் பெரிய பைத்தியக்காரத்தனம் உலகத்தில் ஏதுமிருக்க முடியா தென்ற காரணத்தால்தான் உபேந்திரன் முதலில்
கொதித்தெழுந்தான். அந்தக் கொதிப்பை அடக்கவும் தன்னை ஓர் ஆயுதமாக்கி ராஜத்துரோகத்துக்குத் தூண்டவுமே நாகதேவி தன் காதில் அந்த மந்திரத்தை ஓதினாள் என்பதை நினைக்க அவன் மனம் அலைகடல் துரும்பென
அலைந்தது திக்குத் திசை தெரியாமல்.
இத்தனைக்கும் அவள் அவன் காதில் “நாக இலச்சினை” என்ற இரண்டே வார்த்தைகளைத்தான் சொன்னாள். மந்திரம் ஓதப்பட்டது போன்ற அந்த வார்த்தைகளின் பொருள், சக்தி, அதனால் ஏற்படக் கூடிய விளைவு, விபரீதம்
அனைத்தையும் உணர்ந்த தால்தான் அதிர்ச்சியுற்று நின்றான் சோழர் வீரனும் நாகையின் தலைவனுமான உபேந்திரன். எந்த ஒருவன் உடலில் நாகர்கள் நாக இலச்சினையைப் பொறிக்கிறார்களோ, அவன் அந்த நாள் முதல் அவன்
அடிமையாகிறானென்பதையும், நாக இலச்சினையைப் பெற்றவன் சுயமாக எதுவும் செய்ய முடியாதென்பதையும், நாகர்கள் கட்டளையை மீறினால் எப்படியும் அவன் உயிர் வாங்கப்படுமென்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.
உயிரைப்பற்றி என்றுமே அவன் கவலைப்பட்டதில்லையென்றாலும், தான் இந்தப் பணிக்கு உடன்படாவிட்டால் நாகை துறைமுகம் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்ளுமென்றும், சமயம் பார்த்து சோழ சக்கரவர்த்தியையும் அழிக்க நாகர்கள்
தயங்கமாட்டார்களென்பதையும் உபேந்திரன் உணர்ந்திருந்ததால் பெரும் சங்கடத்துக்குள்ளானான்.
அவன் அப்படிக் குழம்பி நின்ற நேரத்தில் நாகதேவி அவனை அழைத்தாள். “உபேந்திரா! இப்படி வா!” என்று. அவள் அழைப்பை, மறுக்க முடியாத உபேந்திரன் கனவில் நடப்பவன் போல் அவளை நோக்கி நடந்து சென்றான். கட்டிலை
அணுகியதும், “குனி உபேந்திரா” என்று கட்டளையிட்டாள். மந்திரத்தால் கட்டுண்டவன் போல் அவள் உத்தரவை ஏற்றுக் குனிந்தான். இம்முறை அவள் அவன் குழலைப் பிடித்து இழுக்கவில்லை. காதில் மந்திரமும் ஓதவில்லை. அவன்
கழுத்தைத் தன் கைகளால் வளைத்துத் தன் செவ்விய இதழ்களை அவன் இதழ்களோடு பொருத்தினாள்.
சாதாரண சமயமாயிருந்தால் சொட்டும் அவள் சௌந்தர்யத்துக்கு, சௌந்தர்யத்தைச் சூழ்ந்து பரந்த பரிமள சுகந்தத்துக்கு, அதரங்களின் இன்சுவைக்கு அவன் அடிமையாயிருப்பான். ஆனால் அந்த சமயத்தில் அவள் இதழின் ஸ்பரிசம்
அவனுக்கு அச்சத்தையே ஊட்டியது. ராஜத் துரோகம் செய்வதற்கு அந்த அதரங்களை அவள் தனக்குப் பரிசாக அளிப்பதாக அவன் எண்ணினான், அதனால் ஏற்பட்ட வெறுப்பின் விளைவாக அவன் இதழ்கள் உணர்ச்சியற்றுக் கிடந்தன.
போது
அதன் அருகாமையால் முதலில் மயங்கிய உபேந்திரன் இப்பொழுது மரக்கட்டையாகிவிட்டதை நாகதேவி உணர்ந்தாள். தன் அதரங்களுக்கு எதிர் இழைப்பை அவன் உதடுகள் நல்காததற்குக் காரணமும் அவளுக்குப் புரிந்து
தானிருந்தது. ஆகவே தனது அதரங்களை மீட்டுக்கொண்டு உபேந்திரனை நோக்கிக் கேட்டாள். “உபேந்திரா! உன் உடலில் நான் நாக இலச்சினையைப் பொறிப்பது இருக்கட்டும். இப்பொழுது பொறித்தேனே அந்த இலச்சினையின் காரணம்
புரிகிறதா உனக்கு?” என்று. அத்துடன் கட்டிலிலிருந்து இறங்கி நாவாயின் மரத்தரையில் அவனுக்கு வெகு அருகாமையில் நின்றாள். “உபேந்திரா! இந்த உதடுகள் இதுவரை யாரையும் தொட்டதில்லை. நாகக்கன்னிகைகள் ஆயுளில்
ஒருவனுக்குத் தான் தங்கள் அதரங்களை அர்ப்பணிக்கிறார்கள். அந்த ஒருவன் அவள் கணவன். நாகர்களின் தலைவியான நான் எனக்குத் தலைவனாகவும் என்னை ஆள்பவனாகவும் இருக்கும் உரிமையை உனக்கு அளிக்கிறேன்.
உபேந்திரா! என்னருகில் வா. என்னை நாகர்களில் எத்தனையோ பேர் இன்றும் விரும்புகிறார்கள். ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் மன்னன் விஜயதுங்கவர்மனும் என்னை விரும்புகிறான். அவர்கள் யாரையும் நான் மதிக்கவில்லை. கண்
ணெடுத்தும் பார்க்கவில்லை. இன்று தான் உன்னைச் சந்தித்தேன். உன்னிடம் என் மனம் லயித்துவிட்டது. நமக்குள் ஏதோ பூர்வஜன்ம பந்தம் இருக்க வேண்டும். நாம் ஏதோ பெரியகாரியங் களைச் சாதிக்க இந்த உலகத்துக்கு
அனுப்பப்பட்டிருக்கிறோம். இது எனக்கு நன்றாகப் புரிகிறது. வா என்னிடம்” என்று கூறி அவனை மிக நெருங்கி அவன் உடலின் மீது தன் அங்க லாவண்யங்கள் படும்படி நின்றாள்.
உபேந்திரன் இரும்பு மனம் சுக்கு நூறாக உடையலாயிற்று. அவன் உணர்ச்சிகள் சுழன்றன. அவள் நெருக்கம் அவனை திக்குமுக்காடச் செய்தது. சற்று முன்பு அவள் தன் குழலைப் பிடித்துத் தன்னைக் குனிய வைத்து நாக
இலச்சினையைப் பற்றி பிரஸ்தா பித்தபோது இருந்த ஒரு நறுமணம் தனது நாசிகளில் மீண்டும் பிரவேசிப்பதை அவன் உணர்ந்தான். ஏதோ தாழம்பூவின் வாசனை தன் உணர்ச்சிகளை அள்ளிச் செல்வதை அவன் உணர்ந்தான். எதிரே
நெருங்கி வந்துவிட்ட நாகதேவியின் கவர்ச்சிப் பிரதேசங்கள் மெல்ல தன் மீது அழுந்துவதையும் உராய்வதையும் உணர்ந்த உபேந்திரன் ஏதோ ஒருவித மயக்கத்துக்கும் உள்ளானான்.
அவள் அவன் மார்புமீது தனது தலையை மெதுவாக வைத்துப் படுத்தாள். அவள் இரு கரங்கள் வழவழவென அவன் உடலில் பாய்ந்து வளைந்து பின்பிறம் சென்று அவனை இறுக்கின. அவன் கண்களுக்கெதிரே கிடந்த அவள் தலையில்
ஒரே ஒரு தாழை மடல் புத்தம் புதிதாகச் சொருகப்பட்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய சுகந்தம் அவனை வேறு உலகத்துக்கு இழுத்துச் சென்றது. உபேந்திரன் தனது நிலையை அடியோடு இழந்தான். அவன் கைகள் அவனையும் மீறி
அந்தக் கட்டழகியை வளைத்தன. இறுக்கின. அடுத்த வினாடி நாகதேவி தரையிலிருந்து பலவந்தமாகத் தூக்கப்பட்டாள். தூக்கிய நிலையில் உபேந்திரன் தனது வலிய உதடுகளை அவள் கழுத்தில் புதைத்தான். அப்படிப் புதைத்த
உதடுகளை எடுக்காமல் வெறிபிடித்தவன் போல் கட்டிலை நோக்கி நடந் தான். கட்டிலில் அவளைக் கிடத்திக் கட்டிலின் முனையில் தானும் உட்கார்ந்து அவள் அழகிய உடலை நோக்கினான்.
அவள் பருவ எழுச்சிகள் அவன் கண்களைக் குத்தி விடுவனபோல் பார்த்தன. கிடத்தப்பட்ட நிலையில் அவள் மூச்சு பெருமூச்சாக வந்ததால் இரண்டு மார்புகளும் ஏதோ சர்ப்பங்கள் சீறி எழுவதைப் போலும் மகுடிக்கு இணங்க
ஆடுவது போலவும் தெரிந்தன. ஆலிலை வயிறு அடங்கிக் கிடந்தாலும், இடை சிறுத்துக் கிடந்தாலும், இடைக்குக் கீழேயுள்ள உருண்ட கால் பகுதிகள் செழித்துக் கிடந்தன. செழித்த இடங்களில் மறைந்து கிடந்த மர்மங்கள் பற்பல
ஊகங்களுக்கு இடங்கொடுத்தன!
உபேந்திரன் கண்களில் என்றுமில்லாத வெறி தெரிந்தது. மல்லாந்து கிடந்த அந்த மங்கையின் அங்க லாவண்யங்களில் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு சிறப்பு இருந்ததை அவன் கவனித்தான். உண்மையிலேயே பாதாளத்திலிருந்து ஒரு
நாககன்னிகை தன்னை அடைய வந்திருக்கிறாளென்ற எண்ணம் அவனுக்கு உண்டாகவே அவன் மீண்டும் குனிந்தான். அவள் கழுத்தை நோக்கி. மீண்டும் ஏதோ ஒரு சுகந்தம் அவன் உணர்ச்சிகளை ஆட்கொண்டது. பழைய
நறுமணமல்ல அது. புதுவகை வாசனை. அது அவன் உயிரையும் உணர்ச்சிகளையும் ஒருங்கே உறிஞ்சிவிடும் போலிருந்தது. அதற்கு அடிமைப்பட்டு ஏதும் பேசாமல் அவள் கழுத்தில் தனது முகத்தை அடைக்கலம் செய்வித்துக் கிடந்தான்
உபேந்திரன். அப்பொழுது அவன் காதுக்கருகில் அவள் சொற்கள் ஒலித்தன, மிக மதுரமாக, உபேந்திரா! நாமிருவரும் நம்மை மீறிய சக்தி யால் இணைக்கப்பட்டிருக்கிறோம். உன் வலது கையை ஏன் அப்படி என் உடலுக்குக் குறுக்கே
போட்டிருக்கிறாய்? என் இடையைத் தொட்டுப் பார்” என்றாள்.
ஏதோ மந்திரத்தால் இயக்கப்பட்டவன் போல் தனது வலது கையை அவள் இடையருகில் கொண்டு போனான் உபேந்திரன். அவன் கைகளுக்கு ஏதோ ஒரு ஆபரணம் தட்டுப்படவே அதை அவள் பட்டுச் சீலைலிருந்து எடுத்தான்.
“அதை இப்படிக் கொடு” என்று முணுமுணுத்தாள் அவள்.
அவள் கையில் அந்த ஆபரணத்தைச் சிறிது அழுத்தியே திணித்தான் அவன். அடுத்து அவன் வலது கையை அவள் இடது கை பலமாகப் பிடித்தது. அந்தக் கையில் சுருக்கென்று ஏதோ தைத்தது தெரிந்தது உபேந்திரனுக்கு. தனது
கையை மீட்டுக் கொள்ள அவன் முயலும் முன்பாகவே அவன் கையில் அந்த ஆபரணம் புதைந்து மீண்டது. எதிலிருந்து தான் தப்ப எண்ணினானோ, அது நடந்துவிட்டதைத் தெரிந்து கொண்ட உபேந்திரன் நாகதேவியின் எழில்
உடலிலிருந்து எழுந்தான். கட்டிலை விட்டுத் தரையிலும் இறங்கி நின்றான். “அடி மாயக்காரி! இதற்காகவா இத்தனை ஜாலம் காட்டினாய்? இதற்காகவா சரசமாட முற்பட்டாய்? வெட்கமில்லை உனக்கு?” என்று சீறினான் கட்டிலில் கிடந்த
கட்டழகியை நோக்கி. இவள் நாகதேவியல்ல; தன்னை நரகத்தில் தள்ள வந்த மாயா தேவி என்றும் உள்ளூர எண்ணினான்.
பதிலுக்கு அவள் கலகலவென நகைத்தாள் பஞ்சணையில் கிடந்தபடி. உபேந்திரன் மனம் எரிமலையாகிக் கொண்டிருந்தது. தனது வலது கையில் துளிர்த்துக் கொண்டிருந்த மூன்று இரத்தத் துளிகளை உற்று நோக்கினான்,
அப்பொழுது நாகதேவியின் கையிலிருந்த ஆபரணத்தையும் பார்த்தான். தனக்கு ஆயுள் முழுவதும் அடிமைப் பதவி கிடைத்துவிட்டதை உணர்ந்ததால், “உன்னை இப்பொழுதே நான் கொன்றுவிடுவதை யார் தடுக்க முடியும்?” என்று
இரைந்தான். கொல்லக் தீர்மானித்துக் கட்டிலை இரண்டு எட்டில் அடைந்து அவள் அழகிய கழுத்தில் தனது இரு கைகளையும் வைத்து இறுக்க முற்பட்டான். அப்பொழுதும் அவள் நகைத்தாள். மும்முறை ஒரேவிதமாக நகைத்தாள். அவள்
நகைப்பில் ஏதோ மந்திரம் இருந்திருக்க வேண்டும். அவன் கண்கள் திடீரென சுழன்றன. கட்டிலின் மீதிருந்த அவள் உடல் மீது அவன் உடல் தடாலென விழுந்தது. அவன் சுரனை இழந்தான்.

Previous articleNagadevi Ch 2 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 4 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here