Home Historical Novel Nagadevi Ch 32 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 32 | Nagadevi Sandilyan | TamilNovel.in

105
0
Nagadevi Ch 32 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 32 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 32 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 32. தேவரின் ஆராய்ச்சி

Nagadevi Ch 32 | Nagadevi Sandilyan | TamilNovel.in

மருதியிருந்த மாளிகையிலிருந்து வெளியே வந்த இந்தளதேவரை வாயிலிலேயே காத்திருந்த குருநாதர் எதிர்கொண்டு, “தேவரே! நாகதேவியைப் பார்த்து விட்டீர்களல்லவா?” என்று மிகுந்த ஆவலுடன் வினவினார்.
அவர் ஆவலின் காரணத்தை உணர்ந்திருந்த இந்தளதேவர், பார்த்தது மட்டுமா? பேசியும் விட்டேன்” என்று சொல்லி லேசாகப் புன் முறுவல் செய்தார். பிறகு நடக்கவும் தொடங்கினார்.
அவருடன் கூடவே நடந்த குருநாதர் மேற்கொண்டும் விஷயங்களை அறிய, “தேவியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைத் தொடுத்தார்.
“நினைப்பதற்கென்ன! மிக அழகாக இருக்கிறாள்” என்றார் இந்தளதேவர்.
“அழகி மட்டுமல்ல; அவள் மகா புத்திசாலி” என்று சிலாகித்தார் குருநாதர்.
“அப்படியொன்றும் பிரமாத புத்திசாலியல்ல குரு நாதரே? ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளும். அழகும் அறிவும் சேருவது மிக அபூர்வம்” என்று சுட்டிக்காட்டினார் தேவர்.
இதைக் கேட்டதும் சிறிது அச்சத்திற்குள்ளான குருநாதர் “நீங்கள் நினைப்பது தவறு. நாகதேவி அழகு அறிவு இரண்டுமே நிரம்பியவள்” என்று விளக்க முயன்றார்.
இந்தளதேவர் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த குருநாதரைத் திரும்பி நோக்கி, “நாகதேவிக்கு இருக்கலாம்” என்று அரையும் குறையுமாகச் சொல்லி விட்டுப் படிகளில் இறங்கலானார்.
தேவரின் அரைகுறைப் பேச்சால் இடிந்தேபோன குருநாதர், “என்ன சொல்கிறீர்கள் தேவரே” என்று வினவினார் அச்சம் குரலில் ஓரளவு துலங்க.
“நாகதேவிக்குத் தனது கிரீடத்தைக்கூட சரியாக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை! முத்தலை நாகம் பக்கவாட்டில் இருந்தது. நான் சரியாக வைத்துக் கொள்ளச் சொன்னேன்!” என்று சொல்லிவிட்டுப் படிகளில் அசட்டையாக
இறங்கிக் கொண்டு போனார்.
“அப்படியா?” என்று வியப்பைக் காட்டினார் குரு தேவர்.
“ஆம். சர்வ சாதாரணமாக வந்தது தேவரின் பதில்.
“அவசரத்தில் கிரீடத்தை வைத்துக் கொண்டிருக்கலாம்.”
“இருக்கலாம்.”
“அதனால் நாகதேவியை நாகதேவி அல்லவென்று சொல்ல முடியாது.”
“இருக்கலாம்.”
“என்ன இருக்கலாம்?” குருநாதர் எரிச்சலைக் காட்டினார்.
“நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம்” என்று இந்தளதேவர் மாளிகைப் படிகளில் ஒரு விநாடி நின்று தூரத்தே கடலில் ஆடி நின்ற சாவகக் கப்பல் மீது தமது பார்வையை நிலைக்க விட்டார். பிறகு படி களில் இறங்கி உபேந்திரன்
தங்கியிருந்த முதல் மாளிகையில் நுழையாமல் வீதியை நோக்கிச் சென்றார்.
குருநாதரும் அவரைத் தொடர்ந்தார். அதை இந்தளதேவர் தடுக்கவுமில்லை. குருநாதரைக் கூட வரும்படி அழைக்கவுமில்லை. நேராகக் கடற்கரையை நோக்கிச் சென்று பரதவர்கள் குடியிருப்புகளை அடைந்தார். அங்கிருந்த பரதவன்
ஒருவனை அழைத்து, “உன் பெயர் என்ன?” என்று வினவினார்.
“மாடன்” என்றான் பரதவன்.
“அதோ இருக்கிறதே ஒரு மரக்கலம்” என்று சாவக மரக்கலத்தைச் சுட்டிக்காட்டி, “அது எத்தனை நாளாக இங்கு இருக்கிறது?” என்று வினவினார்.
“இரண்டு நாள்களாக” என்றான் மாடன்.
“அதில் ஏதாவது விசேஷமுண்டா?” என்று மீண்டும் வினவினார் தேவர்.
“உண்டு. அங்கிருந்த ஒருவருக்குப் பைத்தியம் பிடித்ததாகப் பேசிக் கொண்டார்கள்” என்றான் மாடன்.
தேவர் குருநாதரைத் திரும்பி நோக்கினார். யாருக்குப் பைத்தியம் பிடித்தது குருநாதரே?” என்று வினவினார்.
“எனக்குத் தெரிந்தவரை யாருக்கும் பைத்தியமில்லை. பிடித்திருந்தால் எனக்குத்தான் பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது பிடிக்காவிட்டாலும் இப்போது பிடிக்கும் போலிருக்கிறது” என்ற குருநாதர் துன்பத்தை முகத்திலும்
காட்டினார், குரலிலும் காட்டினார்.
இந்தளதேவர் லேசாக நகைத்தார். “உமக்குப் பைத்தியம் பிடிப்பதால் யாருக்கும் அனுகூலமில்லை” என்று நகைப்பின் ஊடே சொன்னார்.
பிறகு கடற்கரையில் இருந்து திரும்பி நாளங்காடி பூதமிருந்த இடத்துக்கு வந்து அதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு நின்றார். அவர் பெரும் ஊக்கத்துடன் பூதத்தைப் பார்த்ததைக் கண்ட குருநாதர், அதை எதற்காக உற்றுப்
பார்க்கிறீர்கள்?” என்று விசாரித்தார்.
“நாளை மன்னர் வந்தால் விசாரணை இருக்கும். விசாரணை இருந்தால் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும்; அதை நிறைவேற்ற இந்தப் பூதத்தின் கால்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா என்று பார்க்கிறேன்” என்றார்
தேவர்.
“மன்னர் இங்கு பலி கொடுக்கவா வருகிறார்?”
“இல்லை நீதி வழங்க வருகிறார். நீதி வழங்கும் போது யாருக்காவது மரண தண்டனை கொடுக்கவேண்டியிருந்தால் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டாமா?”
“அதுவும் உங்கள் அலுவல்தானா?”
“மன்னர் ஆணை எதுவும் என் அலுவல் தான்! வேறு எதற்காக குடிமக்கள் இருக்கிறார்கள்? மன்னரைப் பணியத்தானே! அவர் கட்டளைகளை நிறை வேற்றத்தானே?” என்று கேட்ட இந்தளதேவர் மீண்டும் திரும்பி மாளிகையை நோக்கி
நடக்கலானார்.
மாளிகைக்கு வந்தவர் குருநாதரை அவரது அறைக்குள் போகச் சொல்லிவிட்டு தாம் மட்டும் உபேந்திரன் அறைக்குள் நுழைந்தார். நுழைந்ததும் அவரே கதவைச் சாத்திவிட்டுப் படைத்தலைவனுக்கு எதிரிலிருந்த ஆசனத்தில் அமர்ந்து
கொண்டார்.
உபேந்திரன் தலை நிமிர்ந்து இந்தளதேவரை நோக்கினான். தேவரே! உமது வருகை மன்னர் வரப் போவதைக் குறிக்கிறது” என்றான்.
அதை ஒப்புக் கொள்ளுவதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார் இந்தளதேவர்.
“எப்பொழுது வருகிறார்?” என்று வினவினான் படைத்தலைவன்.
“நாளை வருகிறார்” என்று இந்தளதேவர் பதில் சொன்னார்.
“எப்படி வருகிறார்? நில மார்க்கமா? கடல் வழியா?” என்று உ.பேந்திரன் வினவினான்.
“சொல்லவில்லை மன்னர்” என்றார் இந்தள தேவர்.
“கடல் வழியாகத்தான் இருக்கும்” என்ற படைத்தலைவன், “எனக்கு ஏதாவது உத்தரவு உண்டா?” என்று வினவினான்.
“ஏதுமில்லை. நிலைமையை உங்களால் சமாளிக்க முடியாவிட்டால் உதவுவதற்கு என்னை அனுப்பினார்” என்று தாம் வந்த காரணத்தை விளக்கினார், இந்தள தேவர்.
“இந்த நாகதேவியைப்பற்றி மன்னருக்கு என்ன தெரியும்?” என்று படைத்தலைவன் கேட்டான்.
“மன்னருக்குத் தெரியாதது சோழ மண்டலத்தில் என்ன இருக்க முடியும்?” என்று பதிலுக்கு வினவினார் தேவர்.
“எதுவுமிருக்க முடியாது. மன்னர் பார்வை சோழ மண்டலமெங்கும் பாய்கிறது. சோழதேவர் அறியாதது ஏதுமில்லை” என்ற படைத்தலைவன் மன்னரை எண்ணித் தலை வணங்கினான்.
இந்தளதேவரும் தலை வணங்கினார், மன்னர் எதிரிலிருப்பதாக நினைத்து. பிறகு படைத்தலைவனை நோக்கிக் கேட்டார்: “மன்னர் வருமுன்பு நாகதேவியை நான் சந்திக்க முடியுமா?” என்று.
படைத்தலைவன் புன்முறுவல் கொண்டு “ இங்கு தேவியைச் சந்திக்கவில்லையா?” என்று வினவினான்.
“தேவி வேஷம் போட்டவரைச் சந்தித்தேன்” என்றார் இந்தளதேவர்.
“இந்தளதேவரின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது என்பதை அறிந்திருந்த உபேந்திரன், சவேண்டுமானால் நாகதேவியை இன்றிரவு சந்திப்போம்” என்றான்.
“எங்கிருக்கிறாள் அவள்?”‘ இந்தளதேவர் வினவினார்.
“அவள் மரக்கலத்தில்தான்.”
“காவலில் வைத்திருக்கிறீர்களா?”
“காவலென்று சொல்ல முடியாது. கூடியவரை தப்ப முடியாமல் வைத்திருக்கிறேன்.”
“அப்படியா! அவளுக்குத் தீங்கு ஏதுமில்லையே!”
“இல்லை ! நன்றாகவே இருக்கிறாள்!”
“பூட்டி வைத்திருக்கிறீர்களா?”
“ஆம்! வேறு வழியில்லை.”
அதை ஆமோதித்த இந்தளதேவர், “எதற்கும் இன்றிரவு நாம் சாவக மரக்கலத்திற்குச் செல்வோம். இரவு நான் தங்களைக் கடற்கரையில் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்தார்.
“எங்கு தங்குகிறீர்கள்?”
“பரதவர் தலைவன் விடுதியில்.”
“இரவு…”
“இரண்டாம் ஜாம ஆரம்பத்தில் சந்திப்போம்” என்று கூறிய இந்தளதேவர் உபேந்திரனிடம் விடை பெற்றுச் சென்றார்.
அவர் படிகளில் இறங்கிச் சென்றதும் குருநாதர் உபேந்திரன் அறைக்குள் தலையை நீட்டினார். “குரு நாதரே?” என்று வினவினான் படைத்தலைவன்.
“இந்தளதேவர்…” மென்று விழுங்கினார் குருநாதர்.
“உம்…”
“மருதி நாகதேவியல்லவென்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்.”

.
“அதனாலென்ன?”
“நாளை மன்னர் வருகிறார்.”
“அதனாலென்ன?”
“நாம் செய்த துரோகச் செயல் தெரிந்தால் என்ன ஆகும்?”
“நான் என்ன துரோகச் செயல் புரிந்தேன்?” என்று கேட்ட உபேந்திரன் நகைத்து விட்டு, “குரு நாதரே!” கலங்காதீர் மன்னர் நீதிக்குப் புறம்பாக எதையும் செய்யமாட்டார் என்று ஆறுதல் சொல்லி அவருக்குப் போக விடையும்
கொடுத்தான்.
அன்றிரவு இரண்டாவது ஜாம ஆரம்பத்தில் கடற்கரையில் இந்தளதேவர் சித்தமாகக் காத்திருந்தார். படைத்தலைவன் வந்ததும் இருவரும் ஒரு படகை எடுத்துக்கொண்டு சாவகத்தின் கப்பலை நோக்கி விரைந்தனர். கப்பலின் தளத்தில் ஏறி
நாகதேவியை அடைத்துப் பூட்டியிருந்த அறைக்கு தேவரை அழைத்துச் சென்ற உபேந்திரன் அறைக்கதவண்டை வந்ததும் சிலையென நின்றான். அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது நாகதேவி அறையில் இல்லை.

Previous articleNagadevi Ch 31 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 33 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here