Home Historical Novel Nagadevi Ch 36 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 36 | Nagadevi Sandilyan | TamilNovel.in

72
0
Nagadevi Ch 36 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book
Nagadevi Ch 36 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 36 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 36. ராஜேந்திர நீதி

Nagadevi Ch 36 | Nagadevi Sandilyan | TamilNovel.in

சுத்ததத்தர் பெரும் கிலியால் பிரமித்து நின்றார் பல விநாடிகள்.
பிறகு, “இது பெரும் பொய். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்று குழறினார். “அப்படியானால் நேற்று என்னைக் கடற்கரையில் கண்டதும் ஏன் ஓடப் பார்த்தீர்?” இரண்டாவது பாணத்தைப் பிரயோகித் தார் இந்தளதேவர். –
“பயத்தால்…” என்று குழறினார் குருநாதர்.
“என்ன பயம்? நாகதேவியுடன் சேர்ந்து நீர் செய்த சதியை நான் கண்டு பிடித்திருப்பேன் என்ற பயமா? சோழ தேவரின் படைத்தலைவனைக் கடத்திச் செல்ல நாகதேவிக்கு உடந்தையாக இருந்ததை நான் அறிந்திருப்பேன் என்ற அச்சமா?
நாகதேவியும் மருதியும் உண்மையில் உமது குழந்தைகள் என்பதை நான் ஊகித்திருப்பேன் என்ற பயமா? எந்த பயத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று இந்தளதேவர் வினவினார்.
சபையில் எள்ளு விழுந்தால் ஓசை கேட்கும் பயங்கர நிலை! “இருவரும் என் மக்களா? ஒருக்காலும் இல்லை. சுத்த கட்டுக்கதை” என்று கூவினார் சுத்த தத்தர்.
சுத்ததத்தரின் கூவலை இந்தளதேவர் சிறிதளவும் லட்சியம் செய்யவில்லை. ‘ஆம் சுத்ததத்தரே! நீர் சாவகத்தில் பெற்றுவிட்டு வந்த இரட்டைக் குழந்தைகள்! ஒருத்தியை சாவகத்தில் விட்டு ஓடினீர்! இங்கு ஒரு குழந்தையைக் கொண்டு
வந்து நாகலிங்கக் காட்டில் விட்டுப் போனீர்! பிறகு துறவி உடையணிந்து நாகைக் கடற்கரையில் ஆசிரமம் அமைத்துக் கொண்டீர்! இல்லையென்று சொல்கிறீரா?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டார் இந்தளதேவர்.
“இல்லை இல்லை, முழுப்பொய். கட்டுக்கதை” என்று கூவினார் குருநாதர்.
“அப்படியானால் சாட்சிகளை அழைக்கட்டுமா தர்மாதிகாரி? இவன் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் காணோம்” என்றார் இந்தளதேவர்.
“சாட்சியை அழையுங்கள்” என்றார் தர்மாதிகாரி,
முதல் சாட்சி சாவகத்திலிருந்து வந்திருக்கும் தூதர்” என்றதும் முதல் வரிசையில் நாகதேவியுடன் உட்கார்ந்திருந்த தூதர் எழுந்திருந்தார். சக்கரவர்த்தியை நோக்கித் தலை தாழ்த்தினார். தேவர் சொன்னது முற்றிலும் உண்மை. இவருக்கு
இந்த இரு மாணிக்கங்களையும் பெற்றுக் கொடுத்தவள் எனது சகோதரி. அவள் மக்களை ஈன்ற போது நான் சாவகத்தில் இல்லை. அரசாங்க அலுவலாக வெளிநாடு போயிருந்தேன். திரும்பி வந்ததும் விஷயமறிந்தேன். இவனைத்
தேடினேன். கிடைக்கவில்லை. இவன் தமிழ் நாட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆகவே நாகதேவியை விட்டு ஓலைகள் எழுதச் செய்தேன். நாகையை வளைக்க வேண்டுமானால் உபேந்திரன் என்ற படைத்தலைவனையும் வளைக்க
வேண்டும் என்று இவன் ஓலை அனுப்பினான். அப்படியே ஓலையும் அனுப்பப்பட்டது. நாகதேவியை நாகர்களின் தலைவியாக நானே மகுடம் சூட்டி இங்கு அனுப்பி வைத்தேன். இதோ இவன் எழுதிய ஓலை” என்று விளக்கி தமது
மடியிலிருந்த ஓர் ஓலையையும் எடுத்து இந்தளதேவரிடம் கொடுத்தார்.
சுத்ததத்தர் முகத்தில் மிதமிஞ்சிய கிலி படர்ந்தது. “எல்லாம் பொய் நான் சாவகத்திற்குப் போனதே இல்லை அங்கு யாரையும் பார்த்ததும் இல்லை” என்று கூவினார். “மகாராஜா! இதெல்லாம் என்னை ஒழிக்கச் செய்யப்படும் சதி” என்று
கூறி மண்டியிட முயன்றார். அவரை அணுகி இரு புறங்களிலும் நின்ற இரு வீரர் அவர் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார்கள்.
“அப்படியானால் அடுத்த சாட்சி வரட்டும்” என்றார் இந்தளதேவர்.
அடுத்து ஒரு மூதாட்டி வந்தாள். அவள் அழகு அந்தச் சபையை பிரமிக்க வைத்தது. அவள் தன் குருநாதரை நோக்கி “என்னை அடையாளம் புரிகிறதா?” என்று.
குருநாதரின் விழிகள் பிதுங்கின. “இது ஏதோ பிசாசு, நீதான் செத்துவிட்டாயே” என்று உளறினார்
“சாகவில்லை துறவியாரே! செத்ததாக நினைத்து நீர் ஓடி விட்டீர்! உம்மைப்போல் தமிழகத்திலிருந்து ஓடி வந்து எங்கள் நாட்டுப் பெண்களைக் கெடுத்து ஓடுபவர்கள் தமிழகத்தின் சிறப்பைக் கெடுக்கிறார்கள். அவர்களில் முதல் பரிசு
உங்களுக்கு. பெற்ற பெண்களை இல்லையென்கிறீர்! கட்டிய பெண்டாட்டியைப் பிசாசு என்கிறீர்! என்ன மனிதன் நீ? இந்தத் துறவி வேஷம் உனக்கு அடுக்குமா? புத்தர் பெருமான் உன்னை மன்னிப்பாரென்று நினைக்கிறாயா? அந்தக்
கருணாமூர்த்தியின் சினம் உன்னைப் பூதத்திடம் கொண்டு போகப் போகிறது” என்றாள். அவள் குரல் தழுதழுத்தது. பிறகு நீர் மல்கிய கண்களுடன் சக்கரவர்த்தியை நோக்கி, “பிரபு! நான் என் சகோதரருடன் சாவகம் போகிறேன். நான்
மங்களத்துடன் வாழ அருள் புரியுங்கள்” என்று விம்மினாள். பிறகு அன்ன நடை நடந்து மகளிர் பகுதிக்குச் சென்று மறைந்தாள்.
அடுத்து இந்தளதேவர் “உபேந்திரன்” என்றழைத்தார். உபேந்திரன் அவை நடுவுக்கு வந்தான். தலை தாழ்த்தி மன்னனை வணங்கினான். “நீ ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று தேவர் வினவினார்.
“ஏதுமில்லை. இந்தள தேவர் வருமிடங்களில் யாரும் எதையும் மறைக்க முடியாது என்பதைச் சோழமண்டலம் அறியும்” என்றான்.
“கடமையைத் துறந்து கடலில் நாகதேவியுடன் இந்தளதேவர் சென்றது?” வினவினார்.
“என் தவறு.”
“நாகதேவி உன்னை ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்கிறாள.”
“இல்லை. அவள் ஏமாற்றினாலும் கர்ம வீரனான நான் ஏமாந்திருக்கக் கூடாது.”
“மருதியைக் காப்பாற்ற எண்ணியிருக்கலாம் மருதி இந்த நாட்டுப் பிரஜை” என்று இடம் கொடுத்தார் இந்தளதேவர்.
“ நன்றி தேவரே! என் குற்றங்களைத் தளர்த்தப் பார்க்கிறீர்கள். ஆனால் கடமை தவறிய வீரனுக்கு எந்தவிதக் காரணமும் உதவாது” என்று திட்டமாகச் சொன்னான் படைத்தலைவன்.
இந்தளதேவர் மேற்கொண்டு ஏதும் பேசாமல் தமது ஆசனத்தில் அமர்ந்தார். ராஜேந்திர சோழதேவன் பக்கத்திலிருந்த தர்மாதிகாரியிடம் ஏதோ சொல்ல தர்மாதிகாரி உரத்த குரலில் சொன்னார். பக்கத்தில் நின்ற ஓலை தீட்டுபவன் அரசர்
உத்தரவை ஓலையில் தீட்டினான். “இராஜேந்திர சோழதேவர் சூடாமணி விஹாரத்தைப் பூர்த்தி செய்து சாவக மன்னனிடம் ஒப்படைக்க ஒப்புக் கொள்கிறார். அதற்கான செலவுத் தொகையையும் நிர்வாகச் செலவையும் சோழநாடு
ஒப்புக்கொள்ளும். அதற்கான தர்மச்சீட்டு சாவகத் தூதரிடம் ஒப்படைக்கப்படும். அவர் இன்றே தமது மகனுடனும் சுத்ததத்தருடனும் சாவகத்துக்குக் கிளம்புவார். துறவியென்ற காரணத்தால் சுத்ததத்தர் மன்னிக்கப்படுகிறார். நாகையின்
படைத்தலைவனான உபேந்திரன் புகாரின் தலைவனாக நியமிக்கப்படுகிறான். இந்த விவகாரத்தின் சிக்கலை அவிழ்த்த இந்தளதேவருக்கு மன்னர் நன்றி தெரிவிக்கிறார்” என்று இராஜேந்திரன் நீதியைச் சொன்னார் தர்மாதிகாரி.
அத்துடன் மன்னன் எழுந்தான். சபையும் எழுந்தது. மன்னன் மேடையில் பின்புறப் படிகளில் இறங்கிச் சென்றான். சபை முழுதும் கலைந்தது- சபா மண்டபத்தில் இந்தளதேவர், மருதி, உபேந்திரன் மூவர் மட்டுமே நின்றனர்.
படைத்தலைவன் வினவினான்.
“தேவரே! இத்தனை விஷயங்களை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று.
“உபேந்திரா! சோழநாடு விரிவடைந்து வருகிறது, அதைக் கண்களை இமை காப்பது போல் காப்பது அவசியமாகிறது. அதற்காகத்தான் மன்னர் என்னை நியமித்திருக்கிறார். மன்னர் அறியாமல் இந்த நாட்டில் எதுவும் நடவாது” என்றார்
தேவர்.
“இன்று யாருக்கும் மன்னர் தண்டனை ஏதும் கொடுக்கவில்லையே? தவிர சாவகத்துக்கு சூடாமணி விஹாரத்தை நிர்மாணிக்க ஒப்புக்கொண்டு விட்டாரே?” என்று கேட்டான் உபேந்திரன்.
“இராஜேந்திர நீதி எப்பொழுதும் கருணை கலந்தது. அதை நீ புரிந்து கொண்டால் மற்றதைப் புரிந்து கொள்வது கஷ்டமல்ல. சுத்ததத்தர் தான் இதில் குற்றவாளி. அவரை நாடு கடத்திவிட்டார். வேறு தண்டனைக்கு அவசியமில்லை.
ஆனால் ஒன்று புரியவில்லை எனக்கு. உன்னை ஏன் புகாரின் தலைவனாக நியமித்தார்?” என்றார் இந்தளதேவர்.
அந்த சமயத்தில் அவர்கள் மூவருக்கும் மன்னரிடமிருந்து அழைப்பு வந்தது. மன்னர் தமது அறையில் மஞ்சத்தில் சாய்ந்த வண்ணம் இந்தளதேவரை தமது அருகில் உட்காரச் சொல்லிவிட்டு உபேந்திரனையும் மருதியையும் நோக்கினார்.
அவர் செவ்விய ராஜ இதழ்களில் கம்பீரப் புன்னகை விரிந்து கிடந்தது.
“உபேந்திரா! இந்த மாற்றம் உனக்குத் திருப்திதானே” என்று கேட்ட சக்கரவர்த்தி, “நாகையைவிட புகார் சரித்திரப் பிரசித்தி வாய்ந்தது. இதன் கடல் பெரும் சரித்திர நிகழ்ச்சிகளைக் கண்டது. கடற்கரை மாளிகையும் உல்லாசத்துக்குத்
தகுந்தது” என்றார்.
உபேந்திரன் மண்டியிட்டான் மன்னர் முன்பாக. மருதியும் மண்டியிட்டாள். மன்னர் தமது கழுத்திலிருந்த ஒரு நாகாபரணத்தை எடுத்து உபேந்திரனிடம் கொடுத்தார். “இது நம்மூர் நாகாபரணம். இதில் விஷம் கிடையாது, இதை மருதியின்
கழுத்தில் போடு” என்றார்.
மன்னர் முன்பாக அந்த மாலையை மருதியின் கழுத்தில் போட்டான் உபேந்திரன். அவர்களிருவரையும் மன்னரும் தேவரும் ஆசீர்வதித்தார்கள். பிறகு மன்னர் ஆசனத்தைவிட்டு எழுந்தார். இந்தள தேவரும் எழுந்தார். மன்னர் உபேந்திரன்
அருகில் வந்து, “உபேந்திரா! உன்னை புகாருக்கு ஏன் தலைவனாக நியமித்தேன் தெரியுமா?” என்று கேட்டார் ரகசியமாக.
“தெரியாது மன்னவா?” என்றான் உபேந்திரன்.
“இந்த புகார் அழிந்து விட்டதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அழியவில்லை. முன் கோட்டையும் சில இடங்களுந்தான் கடலால் மூடப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பரதர் பழைய பரம்பரையினர். கப்பல் கட்டு வதில் நிகரற்றவர்கள்.
அவர்களைக் கொண்டு இன்னும்! ஓராண்டுக்குள் நூறு கப்பல்களை நிர்மாணிக்கலாம்…
“ஆம்.”
“நிர்மாணித்து விடு.”
“உத்தரவு மன்னவா.”
“தாமதம் செய்யாதே. அடுத்த ஆண்டு அனேமாக நாம் கடாரத்தைத் தாக்குவோம்” என்ற மன்னன் புன்முறுவல் செய்தான்.
“சாவகர் நாகையைக் கைப்பற்ற முயன்றார்கள். சூடாமணி விஹாரம் அதற்கு ஒரு சாக்கு. ஆகையால் அதை நாம் அறியாததுபோல் நடந்துகொள்வோம். புலி கடாரத்தின் மீது பாயும்போது உண்மை புரியும் சைலேந்திர
மன்னர்களுக்கு” என்று கூறிவிட்டு இந்தளதேவருடன் நடந்து சென்றுவிட்டான் இராஜேந்திரன்.
மன்னனுடன் தனித்து நடந்தபோது இந்தளதேவர் கேட்டார், “சுத்ததத்தருக்குத் தண்டனையில்லை. சதிகாரி நாகதேவியையும் மரியாதைகளுடன் அனுப்பி விட்டீர்கள், கடமை தவறிய உபேந்திரனுக்கு இன்னும் பெரிய பதவி. இதென்ன
நீதி?” என்று.
“இராஜேந்திர நீதி என்று வைத்துக்கொள்ளும். இந்த நீதி கடாரத்தை நம் வசப்படுத்தும்” என்றார் சோழதேவர்.
மறுநாள் காலையில் சாவகத்தின் தூதர், நாகதேவியுடனும், அவள் தாயுடனும் சுத்ததத்தருடனும் புகாரின் துறைமுகத்தை அடைந்தார். சாவகக் கப்பலுக்கு அவரை அழைத்துச் செல்ல ஒரு பெரிய படகு தயாராக அருந்தது. புகாரின்
படைத்தலைவன் என்ற முறையில் உபேந்திரனும் பூர்ண ஆயுத உடை அணிந்து ஒரு வெளிநாட்டுத் தூதரை அனுப்ப வேண்டிய கோலத்தில் இரு வீரர்களுடன் நின்றிருந்தான். சாவகத்தின் தூதர் படித்தும் படகைக் கரைக்கு இழுக்கச்
சொல்லி அவருக்குக் கைலாக கொடுத்து ஏற்றிவிட்டான். அப்படியே நாகதேவியையும் தூக்கிவிட கையைப் பற்றப் பானான். அவள் அவனை கம்பீரமாகவும் அலட்சியமாகவும் நோக்கிக் கையை இழுத்துக் கொண்டாள். நாங்கள்
கைப்பிடிக்க வேண்டியவள் அதோ இருக்கிறாள்” என்று தூரத்திலிருந்த மருதியை சுட்டிக் காட்டினாள். பிறகு அவள் உதடுகள் லேசாகத் துடித்தன.
கண்களில் நீர் ததும்பிற்று. அந்த நிலையில் படகில் ஏறிக் கொண்டாள். சுத்ததத்தரும் அவரது பூர்வாசிரம மனைவியும் படகில் ஏற படகு மாலுமிகளால் உந்தப் பட்டு நகர்ந்து, அலைகளில் பாய்ந்து சென்றது.
அந்தப் படகைப் பார்த்துக்கொண்டே நின்றான் படைத்தலைவன். படகிலிருந்தவர்கள் சாவகக் கப்பலில் ஏறிய பின்னும் அங்கேயே நின்றிருந்தான். நாகதேவி முதல் நாள் நாகையில் தோன்றிய அதே நேரம். அன்றும் பாய் மரத்தின் உச்சிக்
கோட்டையில் நாக தேவி நின்றிருந்தாள். அன்று அவள் அழகிய குழலும் ஆடையும் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரே ஒரு வித்தியாசம்… இன்று அவள் அந்தப் பாய்மரத் தட்டிலேயே நின்றாள். புகாரின் கரையில் நின்ற படைத்
தலைவனையும் பார்த்த வண்ணம். அவள் கண்களில் நீர் சுரந்து வழிந்து ஓடியது. கரை சரியாகத் தெரியவில்லை. அந்தத் தட்டிலேயே உட்கார்ந்து விட்டாள் நாகதேவி. சுருண்டு தட்டில் விழவும் செய்தாள்.
உபேந்திரன் இதயம் சுக்கு தூறாக உடைந்து கொண்டிருந்தது. அவளிடமும் தனது இதயம் பறி போயிருந்ததை உணர்ந்தான். திரும்பியபோது மருதி நின்றிருந்தாள். “போகலாம்” என்று ஒரு சொல்லை மட்டும் சொன்னாள். அவள்

.
கையைப் பற்றி அழைத்துச் சென்றான் படைத்தலைவன் தனது மாளிகைக்கு.
அன்று முழுவதும் நாகதேவியின் நினைப்பு, அவனை ஆட்கொண்டிருந்தது. ஆகவே அன்றிரவு ஏறிய பின்பு “மருதி கடற்கரைக்குப் போவோம் என்றான்.
“எதற்கு?”
“அரசர் கப்பல் கட்டச் சொல்லியிருக்கிறார் அதற்குத் தகுந்த இடம் பார்க்க வேண்டும்.”
மருதி பதில் சொல்லவில்லை. அவனுடன் கடற்கரை சென்றாள். வெண்மதி புகாரை வெள்ளி மயமாக அடித்திருந்தது. அதன் அலைகளுக்குத் தனி மெருகையும் ஊட்டியிருந்தது. அந்த இயற்கையிள் அழகைப் பருகி நடந்து
கொண்டிருந்த மருதி முதல் நாள் மன்னரை இந்தளதேவர் கேட்ட கேள்வியையே கேட்டாள். “மன்னர் யாரையுமே தண்டிக்கவில்லையே, இதென்ன நீதி?” என்று.
“உட்கார் சொல்கிறேன்” என்று அவளைத் தரையில் உட்கார வைத்துத் தானும் அருகில் உட்கார்ந்த உபேந்திரன் “இராஜேந்திர நீதி கருணையை அஸ்திவாரமாகக் கொண்டது. ஆனால் அவர் நீதியின் ஆழத்தைப் புரிந்து கொள்ள
முடியாது. பெண்களின் மனத்தைப் போன்றது” என்ற உபேந்திரன் அவளை மணலில் படுக்க வைத்துத் தானும் படுத்து அவளை இறுகக் கட்டினான்.
“உங்களைப் புகாரில் கட்டச் சொன்னது கப்பலை” என்று கூறி நகைத்தாள் மருதி.
“அதற்காகத்தான் இந்தக் கப்பலைக் கட்டுகிறேன்” என்று கூறி அவளைத் திருப்பி பலமாக இறுக்கினான்.
“நான் என்ன கப்பலா?”
“ஆம் ஆம். என் எண்ண அலைகளில் எப்பொழுதும் மிதக்கிறாய்.”
“நல்ல அழகு” என்றாள் மருதி உணர்ச்சி மிகுதியால் பெருமூச்சு விட்டு.
“நான் கட்டும் கப்பலை நானே செலுத்துவேன் ஏன் தெரியுமா?”
“ஏன்?”
“அதன் முகப்பு உன் முகத்தைப் போலிருக்கும்” என்று கப்பலின் அமைப்பைக் கூறினான். பிறகு பகுதிகளைப் பிரித்து விவரிக்கலானான்.
அந்த விவரங்களை, விவகாரங்களை, அறிய இஷ்டப்படாத வெண்மதி ஆகாயத்தில் தவழ்ந்த ஒரு கருமேகத்தில் மறைந்து கொண்டான்.

Previous articleNagadevi Ch 35 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleMohini Vanam Ch1 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here