Home Historical Novel Nagadevi Ch 4 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 4 | Nagadevi Sandilyan | TamilNovel.in

183
0
Nagadevi Ch 4 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 4 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 4 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 4. மருதி

Nagadevi Ch 4 | Nagadevi Sandilyan | TamilNovel.in

உபேந்திரனுக்குச் சுரணை வந்தபோது அவன் தனக்கு மிகவும் பழக்கப்பட்ட பஞ்சணையில் படுத்துக் கிடந்ததாகத் தோன்றியதால், அதில் கண்ணை விழிக்காமலே ஒருமுறை புரண்டு படுத்தான். அப்பொழுதும் அவன் காதில்
நாகதேவியின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒலியில் எந்த மதுரமும் இல்லை; ஏதோ வெறிச் சிரிப்பு போல் இருந்தது. அவள் கண்கள் அவனை அப்பொழுதும் உற்றுப் பார்ப்பதாகத் தோன்றியதால் மிகுந்த சீற்றத்துடன்
அவள் கழுத்தை மீண்டும் நெரித்துவிடும் நோக்கத்துடன் தனது கைகள் இரண்டையும் பொருத்திக் கொண்டான். ஆனால் கையில் ஏதும் கிடைக்காது போகவே தான் இருக்கும் நிலையை அறிய கை கால்களை உதறிக் கொண்டான்
கண்களைத் திறக்காமலே. கைகால்களில் கட்டு ஏதுமில்லை சுதந்தரமாகவே கிடப்பதை உணர்ந்ததால், நாகதேவி தன்னை ஏதோ ஓர் அறையில் அடைத்து வைத்திருக்கிறாளென்றும் விடிந்ததும் தன்னை அவசியம் பார்த்து ராஜத் துரோகப்
பணிக்குத் தூண்டுவாளென்றும் எதிர்பார்த்தான்.
ஆனால் அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. “ஐயா! எழுந்திருக்கிறீர்களா? சூரியன் உதித்து நான்கு நாழிகை ஆகிவிட்டது’ என்ற குரலைக் கேட்டுப் பெரும் பிரமிப்படைந்தவனாய் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து
கண்களைக் கசக்கிக்கொண்டு சுற்றுமுற்றும் நோக்கி, தான் தனது மாளிகை சயன அறையில் இருந்ததை உணர்ந்ததும் விழித்தான். நாற் புறமும் பார்த்து, எதிரே கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தவன் தனது பணி மகன் என்பதை
அறிந்ததும், தனக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியா துன்பமா என்பதைக்கூட உபேந்திரனால் நிர்ணயிக்க முடியவில்லை.
அவன் விழிப்பதைப் பார்த்த பணிமகன், “ஐயா! என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? தாங்கள் இப்பொழுது இருப்பது தங்கள் மாளிகைதான். தாங்கள் நேற்று முழுவதும் காணாதிருந்ததால் நாகை நகர அதிகாரிகூட அச்சமடைந்தார்.
தங்களைத் தேட பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார். தாங்கள் நேற்றிரவு வந்த விஷயத்தை அறிந்த பிறகு தான் சிறிது சாந்தியடைந்தார்” என்று சொன்னான்.
உபேந்திரன் சிறிது தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்தான். பிறகு தனது வலதுகையை நோக்கினான். மீண்டும் அவனது பணியாள் உதவிக்கு வந்து, “அந்த முட்காயங்களைப் பற்றிக் கவலைப்பட
வேண்டாம். நள்ளிரவிலேயே மருத்துவரை அழைத்து அதற்கு மருந்து போட்டு விட்டேன். தாங்கள் தேடிக் கொண்டு வந்த அந்த ஆபரணத்தையும் பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறேன்” என்று விளக்கினான்.
பணியாள் சொன்ன ஒவ்வொரு சொல்லில் இருந்தும் நடந்ததை ஓரளவு ஊகித்துக் கொண்டான் உபேந்திரன். இருப்பினும் மேற்கெர்ண்டு விவரங்களை அறிய வினவினான், “நான் தனியாகவா மாளிகைக்கு வந்தேன்?” என்று.
“இல்லை. தனியாக வரவில்லை ; நாகையின் படைத்தலைவனை, வரும் மரக்கலங்களைச் சோதனை செய்யும் சுங்க மேலதிகாரியை யார் தனித்து விடுவார்கள். தாங்கள் நாகலிங்கக் காட்டில் விழுந்து கிடந்ததைப் பார்த்து நமது வீரர்கள்
இருவர் தூக்கி வந்தார்கள். அதுவும் நீங்கள் அந்த ஆபரணத்தின் மீது எக்கச் சக்கமாக விழுந்து விட்டதால் அதன் மூன்று தங்க முட்கள் கையில் தைத்து உதிரத்தைக் கிளப்பியிருப்பதைப் பார்த்ததும், அதையும் எடுத்துக் கொண்டு
உங்களையும் தூக்கி வந்தார்கள். எஜமான் தாங்கள் அதிகமாக மது அருந்தும் பழக்கமில்லையே, நேற்று எதற்காக அத்தனை மது அருந்தியிருந்தீர்கள் சுரணை கெட்டு விடும்படியாக?” என்று வினவியதோடு நடந்த கதையையும்
விவரித்தான் பணியாள் எல்லன்.
உபேந்திரன் தீவிர சிந்தனையில் இறங்கினான். நாகதேவி மிக சாமர்த்தியமாக நடந்துகொண்டிருக்கிறாளென்பதைப் புரிந்து கொண்டான். சுரணை கெட்ட தன்னை இரவில் அவள் ஆட்கள் தான் கொண்டு வந்து நாகலிங்கக்காட்டில்
கிடத்தியிருக்க வேண்டுமென்பதையும், தான் சுரணையிழந்த சமயத்தில் சுரணை திரும்பாதிருக்க வலுக்கட்டாயமாகத் தனக்கு மதுவைப் புகட்டியிருக்கிறாளென்பதையும் லவலேசமும் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிந்து கொண்டான்.
அப்படி தன்னைக் காட்டில் தள்ளியபோதும் தனது கை அவள் ஆபரணத்தில் படும்படியாகக் குப்புறக் கிடத்தியிருக்கிறார்களென்பதையும் உணர்ந்ததால் அவன் உள்ளத்தில் அந்தக் கொடியவளைக் கொலை செய்துவிட வேண்டுமென்ற
உக்கிரா காரமான கோபமும் கொழுந்து விட்டெரிந்தது.
இத்தனை உள்ளக் குமுறலையும் உபேந்திரன் வெளிக்குக் காட்டினான் இல்லை. சிந்தனை வசப்பட்டுத் தலையைத் தொங்கப் போட்ட வண்ணம் நீண்ட நேரம் மௌனம் சாதித்தான். பிறகு அழைத்தான் பணியாளை மெள்ள “எல்லா”
என்று.
“எசமான்!” எல்லன் பணிவுடன் கைகட்டி நின்றான் எதிரில்.
“நேற்றிரவு நமது வீரர்கள் என்னைத் தூக்கி வந்த போது யாராவது உடன் வந்தார்களா?” என்று விசாரித்தான்.
“இங்கு வரவில்லை. நாகலிங்கக் காட்டு முகப்பு வரை வந்ததாகக் கேள்வி” என்றான் எல்லன்.
“யார்?”
“ஒரு பெண்.”
“என்னை வீரர்கள் அவர்களாகக் கண்டுபிடித்தார்களா அல்லது அந்தப் பெண் சொல்லிக் கண்டுபிடித்தார்களா?” என்று கேட்டான் உபேந்திரன்.
“அந்தப் பெண் தான் ஓடி வந்து துறைமுகக் காவலரை அழைத்தாளாம். நீங்கள் மயக்கமாகக் கிடப்பதாகவும் சொன்னாளாம். உங்கள் கையில் நீலம் பாய்ந்திருப்பதால் உங்களைப் பாம்பு கடித்திருக்க வேண்டும் என்று ஊகித்துச்
சொன்னாளாம். நல்ல வேளை அப்படியொன்றுமில்லை. வீரர்கள் பந்தம் கொண்டு பார்த்தபோது கை சாதாரணமாகவே இருந்தது. இருமுறை உங்களை அசக்கிப் பார்ததும் நீங்கள் எழுந்திருக்காததால் நீங்கள் மதுவருந்தியதால்
மயக்கமடைந்திருக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். நீங்கள் அப்படிக் கிடந்தது அவர்களுக்கே வியப்பா யிருந்தது” என்றான் எல்லன்.
மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான் உபேந்திரன். சில விநாடிகளுக்குப் பிறகு கேட்டான் பணியாளை, எல்லா! அந்தப் பெண் என்னைத் தூக்கி வந்த வீரர்களுக்குத் தெரியுமா?” என்று.
எல்லனிடமிருந்து முற்றும் எதிர்பாராத பதில் வந்தது. “நன்றாகத் தெரியும் எஜமான். போயும் போயும் யாரென்று நினைக்கிறீர்கள்? நமது நாகர்சேரி மருதி இருக்கிறாளல்லவா அவள் தான்” என்றான் எல்லன்.
மருதி என்று ஒரு பெண்ணைப் பற்றி எல்லன் அடிக்கடி உபேந்திரனிடம் சொல்லியிருக்கிறான். அவள் சுத்த துடுக்குக் காரியென்றும், ஊர் வம்புகளை எல்லாம் விலைக்கு வாங்குகிறவளென்றும் கடிந்து பேசியிருக்கிறான். இருப்பினும்
காலங்கெட்ட நேரத்தில் அந்தப் பெண் எதற்காக நாகலிங்கக் காட்டுக்கு வர வேண்டுமென்று தனக்குள் வினவிக் கொண்ட உபேந்திரன், “எல்லா! அந்தப் பெண் இருக்குமிடம் உனக்குத் தெரியுமா?” என்று வினவினான்.
“யாருக்குத்தான் தெரியாது? அவள் குடிசை தனிக்குடிசை. அவளுக்குத் துணையும் யாரும் கிடையாது. எங்கிருந்து வந்தாளென்பதும் யாருக்கும் தெரியாது, ஐந்து ஆண்டுகளாகத்தான் இங்கு வந்து குடியேறி இருக்கிறாள். நாகர்
சேரிக்கே தலைவிபோல் எல்லோரையும் மிரட்டி நடத்துகிறாள். நாகலிங்கத் தோப்பு அவளுக்குத்தான் சொந்தம் போலிருக்கிறது. கோயில் குருக்களைத் தவிர வேறு யாரையும் அந்த பூக்களைப் பறிக்க விடுவதில்லை. அவளை
யாராலும் அடக்க முடியவும் இல்லை “ என்று விளக்கினான் எல்லன்.
“இத்தனை பிரபலமானவளைப் பற்றி ஏன் என்னிடம் இதுவரை நீ சொல்லவில்லை?” என்று வினவினான் உபேந்திரன் சற்று உஷ்ணம் துளிர்த்த குரலில்.
“எசமான்!”
“எல்லா!”
“தங்களிடம் எட்டு ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறேன்.”
“ஆம், அதற்கென்ன?”
“இத்தனை நாள் நீங்கள் எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்த்ததில்லை. நாகை அரச வீதியில் புரவியில் செல்லும்போதுகூட தலை நிமிர்ந்து உப்பரிகைகளைப் பார்ப்பதில்லை.
“உப்பரிகைகளை எதற்காகப் பார்க்க வேண்டும்?”
“உங்களைப் பார்க்கும் அழகு முகங்களைப் பார்க்க” என்ற எல்லன் புன்முறுவல் செய்தான். “எசமான்! உங்கள் கண்வீச்சுக்கு எத்தனைப் பெண் கள் ஏங்குகிறார்கள் தெரியுமா? நீங்களோ வெறும் மரக்கட்டைபோல் இருக்கிறீர்கள்.
அப்படியிருக்க எந்தப் பெண்ணைப் பற்றி நான் உங்களிடம் பிரஸ்தாபிக்க முடியும்?” என்று வினவிய எல்லன், “ இப்பொழுது உத்தரவு கொடுங்கள் எசமான், அந்த மருதியை இங்கு இழுத்து வருகிறேன்” என்று அறிவித்தான்.
உபேந்திரன் வேண்டாம் என்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்தான். நாமே அந்த மருதியின் குடிசைக்குப் போவோம்” என்று உபேந்திரன் கூறி விட்டு “எல்லா! நீராட்டத்துக்கு ஏற்பாடு செய்” என்று உத்தரவிட்டான்.
அன்று காலை அவன் நீராடிய போதும் சரி, நீராடி புத்தாடை புனைந்த போதும் சரி, முந்திய நாள் நிகழ்ச்சிகளையே நினைத்துக் கொண்டிருந்தான். நீராடி உடை புனைந்ததும் எல்லனை அழைத்துக் கொண்டு மருதியின்
குடிசைக்குப் போகப் புறப்பட்டான். அந்தச் சமயத்தில் அவன் மாளிகைக்கு வெளியே இருவர் சச்சரவு செய்யும் ஓசை பலமாகக் கேட்டது. “ இப்பொழுது யாரும் எசமானைப் பார்க்க முடியாது, போய் நடுப்பகலுக்கு மேல் வா” என்ற
காவலனின் அதிகாரக் குரல் கேட்டது. அடுத்து ‘ இரு இரு ஓடாதே’ என்ற காவலன் எச்சரிக்கைக் குரலும் யாரோ ஓடிவரும் சத்தமும் கேட்டது. சரேலென சத்தத்துடன் அந்த அறைக் கதவு திறக்கப்பட்டு ஒரு பெண் வேகமாக உள்ளே ஓடி வந்து
கதவை மூடித் தாழிட்டாள். பிறகு அங்கு எல்லன் இருப்பதைப் பார்த்து, “நீயும் வெளியே போ” என்று உத்தரவிட்டாள்.
எல்லன் நகைத்தான். “போகிறேன். எஜமானே உன்னைப் பார்க்க வருவதாயிருந்தார். நல்ல வேளை! நீயே வந்துவிட்டாய்” என்ற எல்லன், “எஜமான்! இவள் தான் மருதி! அடங்காப்பிடாரி” என்று கூறி விட்டு வெளியேறினான்.
இம்முறை அவள் கதவைத் தாழிடவில்லை. உபேந்திரன் தலை சுற்றும் போலாகிவிட்டது. தன்னெதிரே முதுகைக் கதவில் சாய்த்து நின்ற அந்தப் பெண்ணைப் பலமுறை உற்று நோக்கினான் உபேந்திரன். எதிரே நாகதேவி நின்று
கொண்டிருந்தாள் சாதாரண பணிப் பெண்ணின் உடையில்.
“நாகதேவி நீயாக வந்து என் வலையில் சிக்கிக் கொண்டாய். உன் கொட்டத்தை இன்று அடக்கிவிடுகிறேன்” என்று கூறி இரண்டு எட்டில் கதவை அடைந்து அவளை தனது இரு கைகளாலும் தூக்கிக் கட்டிலுக்குக் கொண்டுவந்து
பஞ்சணையில் எறிந்தான்.
“எஜமான் என்னை விட்டுவிடுங்கள்” என்று கூவினாள் அந்தப் பெண்.
“உன் வேஷம் என்னை ஏமாற்றா தடி நச்சுப் பாம்பே” என்று சீறிய உபேந்திரன் அவளைக் கட்டிலில் அழுத்திப் பிடித்தான். அப்பொழுது கதவைத் திறக்க உள்ளே நுழைந்த எல்லன் சிலையென நின்றான் ஒரு விநாடி. மறுவி நாடி
அலறினான், “எஜமான்! இது உங்களுக்கு அடுக்காது, மருதியை விட்டுவிடுங்கள்” என்று.
கட்டிலிலிருந்து திரும்பி எல்லனைப் பார்த்த உபேந்திரன் “மருதியாவது மண்ணாங்கட்டியாவது, இவள் நாகதேவி” என்று கூவினான் கடும் சினத்துடன்.
எஜமான் கூறியதை எல்லன் காதில் வாங்கவில்லை. “எஜமான்! அவள் மருதிதான். எந்த தேவியுமல்ல. இந்த ஊரில் எல்லோரும் அவளை அறிவார்கள்” என்று கெஞ்சினான் எல்லன்.
உபேந்திரன் கட்டிலில் கிடந்த பெண்ணையும் பார்த்து எல்லனையும் பார்த்தான். “நீ மருதியா?” என்றும் வினவினான் குழப்பத்துடன்.
அந்தப் பெண் கட்டிலிலிருந்து எழுந்து இறங்கி உபேந்திரனைச் சுட்டு விடுவதுபோல் பார்த்தாள். “அட பதரே, உனக்கு உதவியதற்கு இது தான் பரிசா? நீ பெண் பித்துப் பிடித்தவ னென்று தெரிந்திருந்தால் நேற்று நாகலிங்கக் காட்டிலேயே
சாகவிட்டிருப்பேன். இங்கு நான் வந்தேயிருக்கமாட்டேன்” என்று சீறினாள் மருதி!
உபேந்திரன் ஏதும் புரியாமல் சிலையென நின்றான். அப்பொழுது தான் சுத்தானந்தரும் வந்தார். அந்த அறைக்குள் வந்தவர், “படைத்தலைவரே! மருதி இங்கு வந்தாளா?” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

Previous articleNagadevi Ch 3 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 5 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here