Home Historical Novel Nagadevi Ch 6 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 6 | Nagadevi Sandilyan | TamilNovel.in

81
0
Nagadevi Ch 6 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 6 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 6 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 6. மருதியின் மாமன்

Nagadevi Ch 6 | Nagadevi Sandilyan | TamilNovel.in

தாழை மலர் மடலை எடுத்து மருதியின் தாமரை வதனத்தருகில் நீட்டி மூக்கினால் முகரவைத்து அவளை மயங்கவும் செய்த நாகதேவி, மருதியைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்து மும்முறை நகைத்தபோது வெறுப்பினால் முகம்
சுளித்தார் சுத்தானந்தர் என்ற சுத்ததத்தர். அவர் முகம் சுளித்ததைப் பார்த்ததும் அதை லவலேசமும் லட்சியம் செய்யாத நாகதேவி தனது அழகிய கண்களை அவர்மீது ஓடவிட்டு, “குரு நாதரே! அறைக்கதவை தாளிட்டு வாரும்” என்று
உத்தரவும் பிறப்பித்தாள்.
“எதற்கு?” என்று கேட்ட சுத்தானந்தர் குரலில் சினம் ஒலித்தது. வெறுப்பா பயமா என்று நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் அதில் குழப்பமிருந்தது மட்டும் தெளிவாகத் தெரியவே செய்தது.
“இது யோக அறையல்லவா?” என்று வினவிய நாகதேவி மருதியைக் குழந்தையைப்போல் அநாயாசமாகத் தனது இரு கரங்களிலும் தூக்கிக் கொண்டாள்.
நாகதேவியின் மெல்லிய கைகளில் இருந்த வலுவைக் கண்டு வியந்தார் சுத்தானந்தர். அவள் கேள்வியைக் காதில் வாங்கியதால் அவர் வியப்பு அதிகமாயிற்று.
“ஆம். யோக அறைதான் அதற்கென்ன?” என்று வெறுப்புடன் கேட்டார்.
“நானும் தங்களுடன் சிறிது யோகம் செய்யலாமென்று நினைக்கிறேன்” என்ற நாகதேவி சுத்தானந்தர் முகத்தில் துளிர்த்த வெறுப்பின் சாயையைக் கண்டு மெல்ல நகைத்தாள்.
“யோகம் இருவர் சேர்ந்து செய்யக்கூடிய விஷயமல்ல” என்று சுட்டிக் காட்டினார் சுத்தானந்தர்.
“மூவர் சேர்ந்தால் செய்யலாமா?” என்று கேட்ட நாகதேவி, “சரி; அப்படியே செய்வோம்” என்று பதிலும் சொல்லி, “குருநாதரே; இந்தப் பெண்ணைப் படுக்க வைக்க வேண்டும். எங்கிருக்கிறது இடம்?” என்று வினவினாள். “அடுத்த அறை
உள்ளே எனது கட்டிலிருக்கிறது” என்று தயக்கத்துடன் சொன்ன குரு நாதர் தமது யோக அறைக்குப் பின்னாலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார் நாகதேவியை.
அந்த அறையிலிருந்த கட்டிலில் மருதியைப் படுக்க வைத்த நாகதேவி அறையைச் சுற்றுமுற்றும் நோக்கினாள். பௌத்த சம்பந்தமான சில ஓலைச் சுவடிகளையும் ஒரு வெண்கல விளக்கையும் தவிர வேறு எதுவும் அங்கு இல்லை.
ஆனால் அதன் தெற்குப் பகுதியில் இருந்த சாளரம் மட்டும் அவள் சிந்தனையைக் கிளறவே கதவுகளை நன்றாகத் திறந்துவிட்டாள் நாகதேவி. அந்தச் சாளரம் காரணமாகவே வைக்கப்பட் டிருந்ததை உணர்ந்த நாகதேவி திருப்திக்கு
அறிகுறியாகத் தலையை அசைத்தாள். அதன் மூலம் நாகையின் துறைமுகம் மிக நன்றாகத் தெரிந்தது. துறைமுகத்தில் வரும் அத்தனை நாவாய்களையும் ஏன் மனிதர்களையுங்கூட நன்றாகப் பார்க்க முடியும் என்பதை உணர்ந்து
கொண்டாள் நாகதேவி. தவிர அந்தச் சாளரம் ஓரளவு நாகலிங்கக் காட்டையும் நோக்கிக் கொண்டிருந்ததால் அதுவும் குருநாதரின் பார்வையில் இருப்பதைப் புரிந்துகொண்ட நாகதேவி சற்று திரும்பி “குருநாதரே! இந்தச் சாளரம் மிகவும்
உபயோகமுள்ளது. நான் எனது கப்பலில் தங்குவதைவிட இங்கு தங்குவது பயன் தரத்தக்கது என்று நினைக்கிறேன்” என்று சொன்னாள்.
குருநாதரின் சாந்த விழிகளில் குரூரத்தின் சாயை விரிந்தது. “முதலில் மூடு அந்தக் கதவை” என்று உத்தரவிட்ட அவர் குரலிலும் குரூரம் ஒலித்தது.
ஆனால் அவள் கதவை மூடவில்லை. வெளியே உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றவள் திடீரென்று, நன்று. நன்று’ என்று பாராட்டு தலையும் தெரிவித்தாள்.
“எது நன்று?”‘ சுத்தானந்தர் கேட்டார் ஏதும் புரியாமல், பாப்ப்டு
“சூடாமணி விஹாரம் நன்றாகத் தெரிகிறது இங்கிருந்து, அது மட்டுமல்ல…” நாகதேவி வாசகத்தை முடிக்காமல் விட்டாள்.
“வேறென்ன?”
“விஹாரத்தின் அமைப்பு ரகசியங்களும் தெரிகின்றன.”
“புத்த விஹாரத்தில் ரகசியங்கள் ஏது?”
“நிலவறைக்கும் அதில் இடமிருந்தால் அது நிர்மாணிக்கப் பட்டால் ரகசியந்தானே?”
இதைத் கேட்ட குருநாதரின் வதனத்தில் சிறிது அச்சமும் நிலவியது. ‘நிலவறையாவது!’ என்று ஏது மறியாதது போல் கேட்டார் சுத்தானந்தர்…
“ஆம், அதோ அந்தக் கடைசி இரண்டு தூண்களுக்கும் இடையில் ஒரு பள்ளம் இருக்கிறது…” என்று சுட்டிக் காட்டினாள் நாகதேவி.
“இன்னும் தரை வேலை முடியவில்லை. மேல்தள வரிசையே முடியவில்லையே, அதை முடித்தல்லவா தரைக்கு வர வேண்டும்” என்று கட்டடக் கலையை எடுத்துச் சொன்னார் சுத்தானந்தர்.
“அப்படியானால் மற்ற இடங்களில் ஏன் கற்களைப் பரப்பி விட்டீர்கள்?” என்று வினவினாள் நாகதேவி.
“சிற்பியைத் தான் கேட்க வேண்டும்” என்று தப்பப் பார்த்தார் குருநாதர்.
நாகதேவி நகைத்தாள். “குருநாதரே! உமக்கு பதில் சொல்ல சங்கடமாயிருக்கும் விஷயங்களுக்கு சிற்பி வருவார் போலிருக்கிறது” என்று நகைப்புக்கு ஊடே சொல்லிச் சாளரத்திலிருந்து திரும்பி மருதி கிடத்தப்பட்ட கட்டிலுக்கருகில்
வந்தாள். வந்து அதன் மீது உட்கார்ந்தாள். கட்டிலின் மீது விரிக்கப்பட்டிருந்த காஷாயத்தின் அடியிலிருந்த இலவம் பஞ்சு மெத்தை மிக மிருதுவாயிருந்தது. அதை இரு முறை கையால் அழுத்திப் பார்த்த நாகதேவி “குருநாதரே! இது எத்தனை
மிருதுவாயிருக்கிறது!” என்று சிலாகித்தாள்.
குருநாதர் பதில் சொல்லவில்லை. நாகதேவியே ஏளனமாகத் தொடர்ந்து பேசினாள். “சுத்தானந்தரே. யோக அறையை அடுத்து ஒரு போக அறையையும் வைத்துக் கொள்கிறீர்கள்” என்று.
அதுவரை குருநாதர் காட்டிய பொறுமை காற்றில் பறந்தது. “என்னைப் பற்றிய விவாதம் இருக்கட்டும். நீ வந்த காரியத்தைச் சொல்” என்று கடுப்புடன் பேசினார்.
நாகதேவி கட்டிலிலிருந்து இறங்கி மருதியை நோக்கினாள். அவள் சந்திரமுகம் குவிந்து பங்கஜக் கண்கள் மூடி இருந்த நிலையே மனோகரமாயிருந்தது. தானும் கண்களை மூடிப்படுத்தால் இப்படித்தானிருக்கும் என்பதை
நினைத்ததால் மகிழ்ச்சி கொண்டாள் நாகதேவி. ‘உபேந்திரன் நாகதேவியை வெறுக்கலாம். மருதியை வெறுக்கமுடியாது’ என தனக்குள் சொல்லிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள். அதன் விளைவாக குருநாதரை நோக்கித் திரும்பி,
“சுத்தானந்தரே! நீங்கள் சற்று அடுத்த அறையில் இருங்கள்” என்று உத்தரவிட்டாள்.
சுத்தானந்தர் தயங்கினார். “ஏன்?” என்று வினவினார்.
“இவள் ஆடைகளை அவிழ்க்கப் போகிறேன்” என்றாள் நாகதேவி.
“என்ன! என்ன!” என்று பதற்றப்பட்டார் குரு நாதர்.
“என் ஆடையையும் அவிழ்க்கப் போகிறேன்…” என்று சொல்லிய நாகதேவி முறுவல் கொண்டாள்.
“மகாபாவம்… மகாபாவம்” என்று காதுகளைப் பொத்திக் கொண்டார் சுத்தானந்தர்.
“நாங்கள் இருவரும் சிறிது நேரம் நிர்வாணம் அடைவோம்” என்ற நாகதேவி நகைத்தாள் சற்றுப் பெரிதாக
“அடி பாவி! நாசக்காரி! எத்தனை புண்ணியமான சொல்லை எத்தனை பாப காரியத்துக்கு உபயோகப்படுத்துகிறாய்” என்று சீறினார் சுத்தானந்தர். “மருதியை ஒன்றும் செய்துவிடாதே” என்று சீற்றத்துடன் கெஞ்சவும் செய்தார்.
“இந்த மருதிக்கும் உமக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள் நாகதேவி. அவள் கண்களில் விஷம் சொட்டியது.
“அவள் எனது சீடப்பெண். என்னிடம் சமயப் பாடங்கள் கேட்கிறாள்.”
“உம்மிடம்?”
“ஆம்.”
“சமயப்பாடங்கள் கேட்கிறாள்?”
“ஆம்.”
“அவள் உருப்பட்ட மாதிரிதான்” என்ற நாகதேவி “சரி சரி நீர் போய் அடுத்த அறையில் இரும்; சில நிமிடங்களில் உம்மை அழைக்கிறேன்” என்று அதி காரத்துடன் கூறி அவரை வெளியே செல்லும்படி தன் கையைக் கதவை நோக்கியும்
நீட்டினாள்.
சுத்தானந்தர் வேறு வழியின்றி வெளியே சென்றார். நிமிடங்கள் ஓடின. நாகதேவி கதவைத் திறக்கவில்லை. சுத்தானந்தர் தமது யோக அறையில் யோகத்தை மறந்து தாம் துறவி என்பதையும் மறந்து நாகதேவியை கண்டபடி சபித்துக்
கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அவர் அறைக்குள் மாலுமிகள் இருவர் நுழைந்தனர். “எங்கள் தலைவி இங்கு வந்ததாகக் கேள்விப் பட்டோம், எங்கே அவர்கள்?” என்று குரூரமாக மாலுமிகளில் ஒருவன் வினவினான்.
அவர்கள் உடையிலிருந்தும் முகத்திலிருந்தும் அவர்கள் சாவகப் போர்க் கப்பலின் மாலுமிகளென்பதைப் புரிந்து கொண்ட சுத்தானந்தர், “உள் அறையில் இருக்கிறார்கள்; வருவார்கள்” என்று கூறியதும் இருவரும் உள்ளறைக்
கதவுக்கு இருபுறத்திலும் துவாரபாலகர் போல் நின்று கொண்டார்கள். சில விநாடிகளில் கதவு திறந்ததும் இருவரும் தலையை வணங்கினார்கள். வணங்கிய வேகத்தில் தலையை நிமிரவும் செய்தார் கள். “நீ யார்?” என்று ஒருவன்
அதிகாரத்துடன் கேட்கவும் செய்தான்.
வாயிற்படிக்கு அப்புறம் நின்ற நாகதேவி மும்முறை நகைத்தாள். அதனால் மேலும் குழப்பமடைந்த மாலுமிகள் தாங்கள் தான் எங்கள் தேவியாக இருக்க வேண்டும். ஆனால்…” என்று ஏக காலத்தில் பேசினார்கள்.
நாகதேவி சற்று நகர்ந்து எட்ட இருந்த கட்டிலைக் காட்டினாள். அங்கு தலையின் முன்னுச்சியில் முத்தலை நாகாபரணத்தைச் சூடிப் படுத்திருந்த மருதியைக் கண்டதும் நாகதேவியை விலக்கித் தள்ளிவிட்டு உள்ளே ஓடி மருதியை
வணங்கினார்கள். அவர்களில் ஒருவன் திரும்பி “தேவியார் ஏன் இப்படி மயக்கமாயிருக்கிறார்கள்!” என்று வினவினான்.
“அவர்கள் ஏதோ சாந்திக்கு மருந்து அருந்துவது வழக்கமாமே…” என்று நாகதேவி ஏதும் புரியாதது போல் விழித்தாள்.
“ஆமாம். மனம் சஞ்சலத்தில் இருந்தால் அருந்துவார்கள். அதை அருந்தினால் ஒரு நாள் முழுவதும் எழுந்திருக்க மாட்டார்களே” என்றான் மாலுமி.
“அப்படியானால் எப்பொழுது விழிப்பார்கள்” என்று ஏதும் அறியாதது போல் கேட்டாள் நாகதேவி.
“எப்பொழுது நாக ரசாயனம் அருந்தினார்கள்?” என்று ஒரு மாலுமி கேட்டான்.
“சுமார் ஒரு நாழிகைக்கு முன்பு” என்றாள் நாகதேவி.
“அப்படியானால் இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு சுரனை சிறிது வரலாம்” என்றான் இன்னொரு மாலுமி.
“அப்படியானால் தேவி இங்கேயே இருக்கட்டும். நீங்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு அவளை எடுத்துச் செல்லுங்கள்” என்றாள் நாகதேவி.
“அதுவரை?” சந்தேகத்துடன் கேட்டான் ஒரு மாலுமி.
“இது உங்கள் தேவியின் குருநாதரின் மடம். இவர் தான் குருநாதர். இங்கு உங்கள் தேவிக்கு எந்த ஆபத்துமில்லை “ என்று உறுதி கூறினாள் நாகதேவி.
அதுவரை ஏதோ யோசனையிலும் குழப்பத்திலும் இறந்த மாலுமிகள் சட்டென்று நாகதேவியை ஏற இறங்கப் பார்த்தார்கள். பிரமித்தார்கள். நீங்கள்… நீங்கள்” என்று இழுத்தான் ஒரு மாலுமி.
“அதே உருவம், வித்தியாசமே இல்லை. அந்த நாகாபரணம் மட்டும் உங்கள் தலையில் இருந்தால் உங்களையே ராணியென்று நினைத்திருப்போம்” என்றான் இன்னொருவன்.
“ஏன் சும்மா நிற்கிறீர்கள் குருநாதரே? விஷயத்தை சொல்லுங்களேன்” என்று நாகதேவி கடிந்து கொண்டான்
“இவள் நாகதேவியின் சகோதரி. எனது வளர்ப்புப் பெண்” என்று குருநாதர் பொய்யைச் சொன்னார்.
“இருவருக்கும் வித்தியாசமே தெரியவில்லையே?” எள்றான் ஒரு மாலுமி பிரமிப்பால் குரல் அசைய.

.
“இரட்டைப் பிறவிகள். எல்லாம் புத்தபிரான் கருணை” என்றார் குருநாதர்.
இரு மாலுமிகளும் குருநாதரை வணங்கிச் சென்றனர். அவர்கள் சென்றதும் மருதியின் உடையிலிருந்த நாகதேவி, “குருநாதா! கடலுக்குச் சென்று நீராடி வருகிறேன். நாகதேவி ஜாக்கிரதை. ஆமாம். மருதியின் வீடு எங்கிருக்கிறது?” என்று
வினவினாள்.
“நாகலிங்கக் காட்டின் தென்பகுதியில் தனியான குடிசை. அதன் மீது சந்தன முல்லைக் கொடி படர்ந்திருக்கும்” என்று அடையாளம் சொன்னார் சுத்தானந்தர்.
அதற்குமேல் அங்கு நிற்காத நாகதேவி அசைந்து ஆடி நடந்தாள் நாகலிங்கக் காட்டை நோக்கி. பெரும் மரங்கள் சிவப்பும் மஞ்சளும் கலந்த நாகலிங்கப் புஷ்பங்களை ஏராளமாக உதிர்த்திருந்தன. அந்த மலர் களில் ஒன்றை எடுத்துத்
தலையில் சூட்டிக் கொண்டு மருதியின் குடிசையை நோக்கி நடந்தாள் அநாயாசமாக.
குடிசை மற்ற குடிசைகளிலிருந்து தள்ளி தனித்திருந்தது. அந்தத் தனிமையில் ஓர் அழகும் இருந்தது. அதன் மீது படர்ந்து கிடந்த சந்தன முல்லை தனது வெள்ளை மலர்க் கொத்துக்களைக் காற்றில் ஆட்டிக் கொண்டிருந்தது. ஒரு
கொத்து மலரைக் கிள்ளி நாகலிங்கப்பூவுடன் தலையில் சொருகிக் கொண்ட நாகதேவி மெள்ள குடிசைக்குள் புகுந்தாள். புகுந்து சுற்று முற்றும் நோக்கினாள். குடிசையின் கிழக்கு மூலையில் ஒரு மனிதன் தரையில்
உட்கார்ந்திருந்தான் முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு. அவனைக் கண்ட நாகதேவிதான் மருதியென்பதை மறந்து வெளியே செல்லத் திரும்பினாள்.
“நில்” என்று எழுந்தது அவன் கட்டளை.
“எனக்கு ஆணையிட நீ யார்!” என்று கேட்டாள் நாகதேவி.
“உரிமையுள்ளவன்.”
“என்ன உரிமை உனக்கு.”
“தாய் மாமன்! மணம் செய்யும் உரிமையிருக்கிறது.”
“சே! உளறாதே.”
“அடி மருதி! இம்முறை நீ என்னிடமிருந்து தப்ப முடியாது” என்று கூறிய அந்த மனிதன் சரேலென்று எழுந்திருந்து நாகதேவியின் கையை இறுகப் பிடித்தான்.

Previous articleNagadevi Ch 5 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 7 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here