Home Historical Novel Nagadevi Ch 8 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 8 | Nagadevi Sandilyan | TamilNovel.in

66
0
Nagadevi Ch 8 Nagadevi Sandilyan, Nagadevi Online Free, Nagadevi PDF, Download Nagadevi novel, Nagadevi book, Nagadevi free, Nagadevi,Nagadevi story in tamil,Nagadevi story,Nagadevi novel in tamil,Nagadevi novel,Nagadevi book,Nagadevi book review,நாகதேவி,நாகதேவி கதை,Nagadevi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Nagadevi ,Nagadevi ,Nagadevi ,Nagadevi full story,Nagadevi novel full story,Nagadevi audiobook,Nagadevi audio book,Nagadevi full audiobook,Nagadevi full audio book,
Nagadevi Ch 8 | Nagadevi Sandilyan | TamilNovel.in

Nagadevi Ch 8 | Nagadevi Sandilyan | TamilNovel.in

நாகதேவி – சாண்டில்யன்

அத்தியாயம் – 8. மாறிய வேடங்கள்

Nagadevi Ch 8 | Nagadevi Sandilyan | TamilNovel.in

எதிர்பாராத விதமாக உபேந்திரன் தமது விடுதிக்குத் திடீரென விஜயம் செய்ததன்றி யோக அறைக்குள்ளும் புகுந்தபோதே குருநாதரின் முகத்தில் அச்சத்தின் களை சொட்டி வழிந்ததென்றால், அவன் கட்டிலில் நாகதேவியின் வேடத்தில்
கிடந்த மருதியை உற்று நோக்கியதும் பிறகு, இரட்டைப் பிறவிகள் சிருஷ்டியில் புதிதா என்ன?”“ என்று கேள்வியை விடுத்ததும் அந்தத் துறவியின் முகம் பூராவும் பிரமிப்பைப் படரவிட்டது. அதனால் சற்று பெருமூச்சுவிட்ட குரு நாதர் “
ஆம் ஆம் புதிதல்ல”என்று குழறினார்.
அவர் குரலில் ஒலித்த குழப்பத்தைக் கவனிக்கவே செய்தான் உபேந்திரன்.
அதன் விளைவாக மேலும் ஒரு கேள்வியை வீசினான். “குருநாதரே! யோக அறையில் இத்தகைய அழகிய கட்டிலும் பஞ்சணையும் எதற்கென்று பலநாள் நான் யோசித்ததுண்டு. ஆனால் எதற்கும் ஓர் உப யோகம் என்றாவது ஒருநாள்
நிச்சயமாக இருக்கும் என இப்பொழுது தெரிகிறதல்லவா?” என்று.
இந்தக் கேள்வி எதற்கும் அசையாத குருநாதரை மேலும் அசைய வைத்தது. “ஆம் ஆம் தெரிகிறது” என்று அவரும் தமது ஒப்புதலைத் தெரிவித்தார்.
சிறிது நேரம் சிந்தித்தான், மருதியைப் பார்த்த வண்ணம் உபேந்திரன், “நல்ல வேளை” என்று பிறகு பெருமூச்சு விட்டான்.
“நல்ல வேளையா! எது நல்ல வேளை” என்று குருநாதர் கேட்டார் ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக.
“கட்டிலும் பஞ்சணையும் இருப்பது” என்றான் உபேந்திரன்.
“அவற்றுக்கும் நல்ல வேளைக்கும் என்ன சம்பந்தம்” என்று குருநாதர் வினவினார்.
“இவையில்லாவிட்டால் நாகதேவியைப் போன்ற ஓர் அப்ஸரஸை எங்கு படுக்க வைப்பீர்கள்? இத்தகைய அழகி, அதுவும் நாகர்கள் தலைவி, தரையில் படுக்க முடியுமா?” என்று உபேந்திரன் கேட்டான்.
‘முடியாது. முடியாது” என்றார் குருநாதர்.
“ஆகவே கட்டிலிருப்பது நல்ல வேளைதானே?”
“ஆம்.”
மீண்டும் சிந்தனையில் இறங்கினான் உபேந்திரன், பிறகு “குருநாதரே!” என்று மெல்ல அழைத்தான்.
“என்ன உபேந்திரா?” என்று கேட்டார் குருநாதர் அடுத்து என்ன கேள்வி வருமோ என்ற அச்சத்தால்.
“இப்பொழுது மருதி வந்தால் அவளை எங்கே படுக்க வைப்பீர்கள்?” இந்தக் கேள்வியைச் சர்வசாதாரணமாகக் கேட்டான் உபேந்திரன்.
“இதென்ன கேள்வி உபேந்திரா! அவள் எதற்காக இங்கு வர வேண்டும்? அவளை நான் ஏன் படுக்க வைக்க வேண்டும்? இந்தத் துறவியின் ஆசிரமத்தில் பெண்களுக்கு என்ன வேலை?” என்று சற்று கோபத்தைக் காட்டினார் குருநாதர்.
“அதைத்தான் நானும் கேட்கலாமென்றிருந்தேன்” என்றான் உபேந்திரன். குருநாதர் ஒரு விநாடி விழித்தார். பிறகு சமாளித்துக்கொண்டு, “உபேந்திரா! எந்தப் பெண்ணுக்கும் இங்கு வேலை எதுவும் இல்லை, இந்த விடுதியை விளக்கும்
வேலையைக்கூட எனது சீடர்கள் செய்கிறார்கள். சீடப் பெண்கள் இங்கு வரலாம். படிக்கலாம், போகலாம், அவ்வளவுதான்” என்றார், வாசகத்தை முடிக்கவில்லை அவர்.
“நாகதேவி அந்தப் பொது விதிக்கு விலக்கு போலிருக்கிறது.”
“ஆம். இவள் வேறு நாட்டைச் சேர்ந்தவள். ஏதோ அரசாங்க அலுவலாக வந்திருக்கிறாள். இங்கு என்னைப் பார்க்க வந்தாள்.”
“அரசாங்க அலுவலாக வந்தவள் உங்களைப் பார்க்க வந்தாள்!… உம்…” என்று நிதானித்த உபேத்திரன்,”ஆமாம் குருநாதரே அரசாங்க அலுவல்களுக்கும் உமக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான்.
இந்தக் கேள்வியை உபேந்திரன் கேட்டதும் சிறிது நிமிர்ந்து நின்றுகொண்டார் குருநாதர். “உபேந்திரா! உனது கேள்வி மிக்க விசித்திரமாயிருக்கிறது. சூடாமணி விஹாரம் யார் மேற்பார்வையில் கட்டப்படுகிறது? சாவக மன்னன் சார்பில்.
அதைக் கட்டுவதற்கு முதலில் இராஜராஜ சோழதேவரிடம், பிறகு இராஜேந்திர சோழதேவரிடம் அனுமதி பெற்றது யார்? இந்த சுத்தானந்தன் நினைப்பிருக்கட்டும். துறவறத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லையென்று சொல்ல முடியாது.
சாணக்கியன் துறவிதான். அவன் சந்திரகுப்தனை மகதத்தின் மன்னனாக்கினான். அதற்காக…” என்று பேசிக் கொண்டு போன குருநாதர் என்ன காரணத்தினாலோ சட்டென்று பேச்சை நிறுத்தினார்.
உபேந்திரன் இதழ்களில் புன்முறுவல் விரிந்தது. “அதற்காகப் பல ஒற்றர்களைச் சாணக்கியர் வைத்துக் கொண்டார். தந்திரங்கள் பலவற்றைச் செய்தார். எதிரிகளை முறியடிக்க சாணக்கிய தந்திரம் இன்றும் பிரமிப்புடன் பேசப்படுகிறது”
என்றான் உபேந்திரன் புன் முறுவலின் ஊடே. “குருநாதரே! அந்த மாதிரி உமது பெயரும் சரித்திரத்தில் நிலைக்க வேண்டும் என்பது உமது சீடன் ஆசை” என்றும் கூறினான்.
“சீடனா? யார் சீடன்?”‘ என்றொரு கேள்வியை வீசினார் குருநாதர்.
“நான் தான். ஏன் சீடப்பெண் வந்ததும் சீடனை மறந்து விட்டீர்களா?” என்று கேட்டான் உபேந்திரன்.
சீடப்பெண்ணா! யாரது?”
“என்ன குருநாதரே! மருதிதான். அவளை என்னிடமிருந்து காக்கவில்லை நீர்?”
“ஆம், ஆம். நீ நடந்து கொண்டது சரியல்ல இன்று காலை…”
“குரு நாதரே! அது என் தவறல்ல. இரட்டைப் பிறவிகளைப்பற்றி அப்பொழுது எனக்குத் தெரியாதல்லவா?” என்று ஆரம்ப கதைக்கு வந்தான் உபேந்திரன்.
இந்த உரையாடலை மேற்கொண்டு நடத்துவது ஆபத்து என்பதை உணர்ந்த குருநாதர் “அது கிடக்கட்டும் இங்கு நீ எதற்காக வந்தாய்?” என்று வினவினார் சற்று எரிச்சலுடன்.
“நாகதேவியைப் பார்க்கலாமென்று வந்தேன்” உபேந்திரன். –
“நாகதேவி இங்கு இருப்பாளென்பது உனக்கு எப்படித தெரியும்?”
“எனது ஒற்றர்கள் சொன்னார்கள். மருதியைப் போலவே ஒரு பெண் இங்கு வந்ததாகவும் ஆனால் அவள் நாகாபரணம் அணிந்து பெரிய அரசியைப் போலிருந்ததாகவும் கூறினார்கள். சாவகத்திலிருந்து கப்பல் வருகிறது. நானோ
கப்பல்களைச் சோதிக்க வில்லை. அதற்கு நீங்களே கோபித்துக் கொண்டீர்கள் என்னிடம். அப்படியிருக்க அந்தக் கப்பலிலிருந்து ஓர் அரசி வந்தாளென்றால் அதுவும் அவள் மருதியைப் போலவே இருக்கிறாளென்றால் அவளைப் பார்த்து
விசாரிக்க வந்தேன். இங்கோ அவள் மயக்கமாய் படுத்திருக்கிறாள் என்று அலுத்துக் கொண்டான் உபேந்திரன்.
குருநாதர் பாடு பரம திண்டாட்டமாயிருந்தது. உபேந்திரன் திறமையை இராஜேந்திர சோழ தேவர் போலவே அவரும் நன்றாக உணர்ந்திருந்தார். அவன் கண்ணோட்டத்திலிருந்தும் அவன் ஒற்றர்கள் கண் ணோட்டத்திலிருந்தும் எதுவும்
தப்ப முடியாதென்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆகவே கேட்டார், “ இப்பொழுது அவளுடன் எப்படி நீ பேச முடியும்?” என்று.
“முடியாது. ஆனால் இவள் ஏன் மயக்கமாயிருக்கிறாள்?” என்று விசாரித்தான் உபேந்திரன். அவன் குரலில் அனுதாபம் ஒலித்தது.
“காரணம் தெரியாது. இங்கு வந்ததும் சற்று மயக்க மாயிருக்கிறதென்றாள். யோக அறையில் படுக்கச் சொன்னேன்” என்று சமாளித்துக் கொண்டார் குருநாதர்.
“அப்படியா! அதை ஏன் இத்தனை நாழி சொல்லவில்லை நீங்கள்? நான் நமது அரண்மனை மருத்து வரை இங்கு அனுப்பியிருப்பேனே” என்றான் உபேந்திரன்.
குருநாதர் சற்று நிமிர்ந்து நின்றார். “ஏன் எனக்கு வைத்தியம் தெரியாதா?” என்று கேட்டார்.
“தெரியும். ஆனால் நீங்கள் ஏன் இவள் மயக்கத்தைத் தீர்க்கவில்லை?” என்று உபேந்திரன் கேட்டான்.
“இப்பொழுது அவள் மயக்கத்தில் இல்லை. நல்ல உறக்கத்திலிருக்கிறாள்.”
“தாங்கள் அதற்கு மருந்து கொடுத்திருக்கிறீர்களா?”
“ஆமாம்.”
“எப்பொழுது எழுந்திருப்பாள்?”
“இரவு தான்.”
“எழுந்திருந்ததும் என் இல்லத்திற்கு அழைத்து வாருங்கள்.”
“ஆகட்டும்.”
அதற்குப்பின் அங்கு நிற்கவில்லை உபேந்திரன். “வருகிறேன் குருநாதரே! நீங்கள் வருவதற்கு முன்பு எனக்குச் சொல்லியனுப்புங்கள். நாகதேவியை முறைப்படி வரவேற்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிவிட்டு யோக
அறையிலிருந்து கிளம்பினான் உபேந்திரன். குருநாதரும் வாயில்வரை சென்று அவனை வழியனுப்பி விட்டுத் திரும்பினார். பிறகு மீண்டும் யோக அறைக்குத் திரும்பியபோது அங்கு உண்மை நாகதேவி நின்றிருந்தாள். அவள் முகத்தில்
கோபம் ஜாலித்துக் கொண்டிருந்தது.
“குருநாதரே! உமக்கு அறிவு லவலேசமாவது இருக்கிறதா” என்று வினவினாள்.
குருநாதரின் இதழ்கள் இகழ்ச்சியுடன் மடிந்தன. “ இல்லை “ என்று திட்டமாக அறிவித்தார். “ இருந்தால் உன் சதிக்கு இசைந்திருப்பேனா?” என்றும் வினவினார்.
“மிகவும் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக உமது எண்ணமோ?” என்று வினவிய நாகதேவி கோபத்துடன் காலை தரையில் உதைத்தாள்.
“அந்த எண்ணம் சிறிதளவும் இல்லை; இத்தனை நேரம் உபேந்திரன் பேசியதையெல்லாம் கேட்டாய் அல்லவா? என்று வினவினார் குருநாதர்,
“கேட்டேன். மருதியை ஏன் என் வேடத்தில் அவர் வீட்டுக்கு அழைத்துப் போகச் சம்மதித்திருக்கிறீர்?”
“வேறு வழி? உன் வேடத்தை மருதிக்குப் போட்டது நீதானே?”
“ஆம் போட்டேன். அவளை எனது கப்பலுக்கு அனுப்பும் நோக்கத்துடன்.”
“நீ உபேந்திரன் வீட்டுக்குப் போகத் திட்டமிட்டாய்?”
“ஆம்.”
“இப்பொழுது கதை மாறிவிட்டது. இவள் அவன் வீட்டுக்குப் போகிறாள். நீ குடிசைக்குப் போகிறாய்.” இதைச் சொன்ன குருநாதர் மெல்ல நகைத்தார். “உன் புத்திசாலித்தனத்தின் விளைவைக் கவனித்தாயா” என்று கேட்கவும் செய்தார்
நகைப்பின் ஊடே.
நாகதேவி நிமிர்ந்து நின்றாள். “ குருநாதரே! இப்பொழுதும் குடிமுழுகிப் போய்விடவில்லை. கதையை மறுபடியும் மாற்றிவிடுகிறேன். எனக்கும் மருதிக்கும் ஆடையும் முத்தலை நாகாபரணமுந்தானே வித்தியாசம்? அவற்றை மாற்ற
அரை நாழிகைக்கூடப் பிடிக்காது. நீங்கள் வெளியே செல்லுங்கள் நான் ஆடையை அவிழ்க்க வேண்டும்” என்றாள்.
“மறுபடியுமா?” என்று விஷமத்தனமாகக் கேட்டார் துறவி.
“எத்தனை தடவை வேண்டுமானாலும் அவிழ்ப்பேன். நீ யார் கேட்க?” என்றாள் நாகதேவி.
குருநாதர் வெளியே நடந்தார். மீண்டும் நாகதேவி அவரை உள்ளே அழைத்தபோது வேடங்கள் மாறி இருவரும் சுய உருவில் இருந்தார்கள். அப்பொழுதும் மருதி மயக்கத்தில் இருந்தாள் அப்பொழுது இன்னொரு திட்டத்தைச்

.
சொன்னாள் நாகதேவி. அதைக் கேட்ட குருநாதர் பேரதிர்ச்சி அடைந்தார். “உன் குரூரத்துக்கு எல்லையே இல்லையா?” என்று வின வினார்.
“என் எண்ணம் நிறைவேற எதையும் செய்வேன் குருநாதரே! இன்றிரவோடு நாகையில் இரட்டைப் பிறவிகள் இல்லை. இருக்கப் போவது ஒருத்தி. அவளே நாகதேவி அவளே மருதி. இனி குழப்பத்துக்கு இடமில்லை. நீரும் நானும் சேர்ந்து
இங்கு ஒரு புது சிற்றரசை அமைப்போம்” என்றாள் நாகதேவி.
அன்றிரவு அவள் குருநாதருடன் உபேந்திரன் இல்லத்துக்குப் புறப்பட்டாள். அவள் புறப்பட்டதும் சாவகக் கப்பலின் மாலுமிகள் இருவர் குருநாதரின் யோக அறையில் பெரிய சீலையால் மூடப்பட்டிருந்த மருதியை அப்படியே
தூக்கிக்கொண்டு நாகலிங்கக் காட்டை நோக்கி விரைந்தனர். அதைச் சற்று எட்ட இருந்து பார்த்துக் கொண்டிருந்த நாகதேவி பக்கத்திலிருந்த குருநாதரை நோக்கி, “குருநாதரே! வாரும் இனி பயமின்றிப் போகலாம் உபேந்திரன்
மாளிகைக்கு” என்றாள்.
குருநா தரும் நாகதேவியும் உபேந்திரன் இல்லத்தில் சகல மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். உள்ளே கூடத்தில் உட்கார்ந்தபிறகும் உபேந்திரன் தலைகாட்ட வில்லை. “உபேந்திரன் எங்கே?” என்று குருநாதர் வினவினார் அங்கிருந்த பணி
மகனிடம்.
“அவசர வேலையாக வெளியே போயிருக்கிறார். சீக்கிரம் வந்துவிடுவார். உங்களிருவரையும் இருக்கச் சொன்னார்” என்று பணிமகன் பதிலுறுத்தான்.

Previous articleNagadevi Ch 7 | Nagadevi Sandilyan | TamilNovel.in
Next articleNagadevi Ch 9 | Nagadevi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here