Home Na Parthasarathy Pandima Devi Part 3 Ch 1 | Pandima Devi Na. Parthasarathy |...

Pandima Devi Part 3 Ch 1 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

130
0
Pandima Devi Part 3 Ch 1 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Pandima Devi Part 3 Ch 1 | Na. Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch 1 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம், அத்தியாயம் 1 : நாளைக்கு நாண்மங்கலம்

Pandima Devi Part 3 Ch 1 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

கடலின் அடி மூலையும், தொடுவானமும் ஒன்றுபடுகிற இடத்தில் அளவும், பரப்புமற்ற பொன்னிறத்துப் பேரொளிப் பெருமலர் ஒன்று பல்லாயிரம் சோதிக் கதிர்களை நீட்டிக் கொண்டு மேலெழுந்தது! அந்த ஒளியின் எழுச்சியில் கடல் நீர் மாணிக்கக் குழம்பென மாறிச் செம்மை ஒளிர மின்னியது. அலைகள் கரையில் மோதும் ஒலியும், ஊழியர்கள் கப்பலை இழுத்து நங்கூரம் பாயச்சும்போது பாடும் ஒருவகைப் பாட்டின் கூட்டமான குரல்களும் கேட்டன. வைகறைக் காலத்தின் கீதமென்காற்று உடலைத் தழுவித் தண்மை பூசிச் சென்றது. கடற்பறவைகளின் குரல்களும் கேட்டன.

குமாரபாண்டியன் இராசசிம்மன் உறக்கம் கலைந்து புரண்டு படுத்தான். கண் இமைகள் கனத்துப்போய் விழிகளுக்குள் எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

“இளவரசே! எழுந்திருங்கள் கரை வந்துவிட்டது” என்று மெல்லத் தட்டி எழுப்பினார் சக்கசேனாபதி. குமார பாண்டியன் கண்களைத் திறந்தான்.

அடடா! என்ன அற்புதமான காட்சி அவன் கண்களுக்கு முன் விரிகிறது! நீலக்கடல் முடியுமிடத்தில் தரைமேல் ஒரு பசுமைக் கடல் தென்படுகிறதே! கரைக்குமேல் கண்பார்வை எட்டிப் பிடிக்கிற தொலைவுவரை அடர்த்தியான பசுமைக்காடு தெரிகிறது. கரைமேல் பிரயாணத்துக்கு ஏற்ற முறையில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு உயர்ந்த சாதிக் குதிரைகளோடு நாலைந்து வீரர்கள் நின்று கொண்டிருப்பதையும் இராசசிம்மன் பார்த்தான்.

“சக்கசேனாபதி ! காசிய மன்னர் வரவில்லை போலிருக்கிறது! யாரோ வீரர்கள்தான் குதிரையோடு வந்து காத்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி இவ்வளவு கணக்காக

நாம் இன்று வருவோமென்று தெரிந்து கொண்டார்கள்? நாம் இந்தத் துறையில் இறங்குவோமென்று இவர்களுக்கு எப்படித் தெரிந்தது!” என்று கேட்டான் குமாரபாண்டியன்.

“நான் இங்கிருந்து புறப்படும்போதே இரண்டு மூன்று நாட்களைக் குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒரு நாள் வருவதாகச் சொல்லிவிட்டுத்தான் இடையாற்றுமங்கலத்துக்கு உங்களைச் சந்திக்க வந்தேன். எந்த இடத்தில் இறங்குவதென்று அப்போது நான் உறுதி செய்யாததால் மாதோட்டம், புத்தளம் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் குதிரைகளும் ஆட்களும் காத்திருக்குமாறு ஏற்பாடு செய்து விட்டு வந்தேன். காசிபமன்னர் இன்றைக்கு அனுராதபுரத்தில் இருப்பார். நாம் அனுராதபுரத்தில் அவரைச் சந்திக்கலாம். அடடா ! உங்களிடம் நான் முன்பே சொல்ல மறந்து விட்டேனே! நாளைக்குக் காசிப மன்னரின் பிறந்த நாள். வெள்ளணி விழாவாகிய நாண்மங்கல திருநாளைக் கொண்டாட அனுராதபுரத்தில் பிரமாதமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும். தம்முடைய வெள்ளணி விழாவன்று பெளத்த பிட்சுக்களையெல்லாம் அவர்கள் இருப்பிடம் சென்று வணங்கி ஆசிபெற வேண்டுமென்பதுதான் கோநகரமாகிய பொலன்னறுவையில் கொண்டாட வேண்டிய இவ்விழாவை அனுராதபுரத்துக்கு வந்து கொண்டாடுகிறார் அரசர்.”

“சக்கசேனாபதி! அந்த ஒரு நாளிலாவது உள்ளும் புறமும் வெள்ளையாகத் தூய்மையோடு இருக்க எண்ணிப் பிறந்த நாளை வெள்ளணி விழாவாக அமைத்திருக்கும் நம் முன்னோர் மரபு எவ்வளவு அற்புதமானது பார்த்தீர்களா? ‘வாழ்நாளெல்லாம், பொய்க்காக வாழ்ந்தாலும் அந்த ஒரு நாளாவது உண்மைக்காக வாழு’ என்று அறிவுறுத்தவது போலல்லவா அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்” என்று சிரித்துக் கொண்டே கூறினான் இராசசிம்மன்.

“இளவரசே! தென்பாண்டி நாட்டுக்குரியவர் என்பதை நீங்கள் தமிழைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நிரூபித்து விடுகிறீர்கள். நேற்றுக் கப்பல் மேல்தளத்தில் நின்று கொண்டு

பாடிய கவிதையோ உங்கள் நாவன்மையையும் எனக்குப் புரியவைத்துவிட்டது. உங்கள் கவித்திறனைப் பற்றி இதுவரை காசிப மன்னருக்குத் தெரியாது. தெரிந்தால் மிகவும் பெருமைப்படுவார்.” –

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே கப்பல் முழுமையாக நங்கூரம் பாய்ச்சப்பட்டுக் கரையை அணுகியிருந்தது.

‘இங்கிருந்து அனுராதபுரம் வரையில் நாம் குதிரையில்தான் போகவேண்டும். கடற்காய்ச்சலோடு உங்களால் குதிரைப் பயணம் செய்ய முடியுமா என்றுதான் தயங்குகிறேன்’ என்று கூறி, அருகில் நெருங்கிக் குமாரபாண்டியனின் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்தார், சக்கசேனாபதி. %。

“அது ஒன்றும் எனக்கு அவ்வளவு சிரமமான காரிய மில்லை. பசுமையும், வனப்பும் குளிர்ச்சியும் நிறைந்த இந்தக் காட்டு வழியில் பயணம் செய்யும்போது கடற்காய்ச்சலையே மறந்துவிடுவேன் நான். உங்கள் நாட்டின் வனங்களில் வழிநெடுகப் பெளத்த ஆலயங்களும், பிட்சுக்களின் சாது சங்கங்களும் நிறைய இருக்குமே. அன்புள்ள இடங்களும், அன்பு நிறைந்த மனிதர்களும் இருக்கும்போது துன்பங்களை யாராவது பொருட்படுத்துவார்களா?”

“அப்படியானால் இறங்கிவாருங்கள். அதோ குதிரைகளை வைத்துக்கொண்டு நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். நாம் போகலாம்.” – –

“நாம் போவது சரி, கப்பல் அறைக்குள் இருக்கும் பாண்டி நாட்டின் அரசுரிமைப் பொருள்களை முதலில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்பதை மறந்து விட்டீர்களா?” –

“அதைப்பற்றித் தங்களுக்குக் கவலையே வேண்டாம் இளவரசே! கப்பல் ஊழியர்களும், நம்மை வரவேற்க வந்திருக்கும் ஈழ நாட்டு வீரர்களும் அவற்றைப் பாதுகாப்பாக

எடுத்துச் சென்று அரண்மனையில் சேர்த்துவிடுவார்கள். அதற்கு நான் சொல்லி ஏற்பாடு செய்துவிடுகிறேன்” என்று சக்கசேனாபதி உறுதிமொழி கூறியதும்தான் குமாரபாண்டியனுக்கு மனச் சமாதானம் ஏற்பட்டது.

கப்பலிலிருந்து இறங்கி ஈழ நாட்டு மண்ணில் கால் வைக்கு முன் கடைசியாகத் திரும் பிப் பார்த்தான் இராசசிம்மன். கடந்து வந்த கடல் ஆர்ப்பரவம் செய்து கொண்டிருந்தது. திடீரென்று அந்தப் பெரிய கடல் முழுவதும் தன் தாய் வடித்த கண்ணிரோ என அவன் மனத்தில் ஒரு பிரமை எழுந்தது. துயரத்தை மனத்துக்குள்ளேயே அடக்கிக் கொண்டு மேல் தளத்திலிருந்து கீழே சென்று சக்கசேனாபதியுடன் கரையில் இறங்கினான்.

“சக்கசேனாபதி! இந்த இடத்தில் கடல்துறை மிக அழகாக இருக்கிறதே? இதற்கு முன் சில முறை உங்கள் நாட்டுக்கு வந்திருந்தும் இதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படவே இல்லையே!” என்று அந்தப் பகுதியின் அழகைப் பார்த்து வியந்து வினவினான் இராசசிம்மன். –

“இதுவரை பார்க்க வாய்ப்பில்லாமல் போனதால்தானே இப்போது உங்களால் இதைப் பார்த்து வியக்க முடிகிறது. இளவரசே! இந்தப் புத்தளம் துறைக்குப் பழமையான பெயர் ‘தமனன்தோட்டம்’ என்பதாகும். உங்கள் நாட்டில் கடற்கரைத் துறைகளெல்லாம் பாலைவனம்போல் மணல் வெளிகளாகவோ, வறண்ட பனைமரக் காடுகளாகவோ இருக்கின்றன. ஆனால் இங்கே கடற்கரையிலும் பசுமை வளம் இருக்கும் துறைகள் உண்டு. அதனால்தான் அவற்றை மாந்) தோட்டம், தமனன்தோட்டம் என்றெல்லாம் வளமாகப் பெயர் சூட்டி அழகாக அழைக்கின்றோம் நாங்கள்.”

“ஏதேது? உங்கள் நாட்டு மண்ணுக்கு வந்து இறங்கியவுடன் தற்பெருமை பேசும் பண்பு உங்களைப் பற்றிக் கொண்டுவிட்டதே! உங்கள் இலங்கையை நீங்களே புகழத் தொடங்கிவிட்டீர்கள்!” என்று சக்கசேனாபதியை வம்புக்கு இழுத்தான் இராசசிம்மன். ஆனால் அவரோ பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார். “இளவரசே! செம்பவழத் தீவில் ஏதோ

ஒரு சோழ நாட்டுக் கப்பலைப் பார்த்ததாக நீங்கள் கூறினீர்கள் அல்லவா? அந்தக் கப்பலைப் பற்றி எழும் சில சந்தேகங்கள் இன்னும் என் மனத்தில் நீங்காமல் இருந்து கொண்டே பயமுறுத்துகின்றன. எந்த வகையிலாவது சூழ்ச்சி செய்து உங்களைத் துன்புறுத்துவதற்கென்று சோழநாட்டு ஆட்கள் அந்தக் கப்பலில் மறைவாகப் பின் தொடர்ந்து வருகிறார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே, குமாரபாண்டியனின் முகத்தை உற்றுப் பார்த்தார் சக்கசேனாபதி. அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் இராசசிம்மன் திகைத்தான். அவன் முகத்தில் மருட்சியும், அச்சமும் தென்பட்டன. சக்கசேனாபதியால் அவ்வளவு சரியாக எப்படி அனுமானிக்க முடிந்தது என்றே அவன் வியந்தான். தான் தற்செயலாக அந்தச் சோழநாட்டுக் கப்பலைப் பற்றிக் கூறியதை அவர் ஏன் இன்னும் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டு கவலைப்படுகிறார் என்பதுதான் அவனுக்குத் திகைப்பையளித்தது.

“சக்கசேனாபதி! அந்தக் கப்பல் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? நமக்கு இனிமேல் அதைப்பற்றிக் கவலை இல்லை. நாம்தான் வரவேண்டிய இடத்துக்குப் பத்திரமாக வந்த சேர்ந்து விட்டோமே!” என்று அவரிடம் பதிலுக்குக் கேட்டான் அவன். – – –

“அப்படியல்ல, இளவரசே! எப்போது நம் பகைவர்களின் கப்பல் நம்முடைய வழிகளில் தென்பட்டுவிட்டதோ, அப்போதே அது கடைசிவரை நம்மைப் பின்தொடரலாம் என்று நாம் சந்தேகப்படவேண்டியதுதான். அந்த மாதிரிக் கப்பல்கள் எவையேனும் வந்தால் தடுத்து நிறுத்தி, அதிலிருக்கும் ஆட்களைச் சிறைபிடிக்குமாறு ஏற்பாடு செய்து விடுவதற்காகத் தான் உங்களைக் கேட்கிறேன். அந்தத் தடுப்பு ஏற்பாட்டை இப்போதே இங்கேயே செய்துவிடுவேன் நான்.” “அந்த மாதிரி ஓர் ஏற்பாடு நீங்கள் செய்ய முடியுமானால் நல்லதுதான்”- என்று அதற்கு ஒப்புக்கொண்டான் குமார பாண்டியன். உடனே சக்கசேனாபதி அங்கிருந்த கடல்துறை ஆட்களிடம், “நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக்

கொள்ளுங்கள் : இந்த இடத்திலோ அல்லது மா தோட்டத்திலோ இறங்குவதற்காக இன்றிலிருந்து இன்னும் சில நாட்களுக்குள் தமிழ்நாட்டுக் கப்பல்கள் எவையேனும் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டு எங்களுக்குத் தகவல் அனுப்பவேண்டும். இந்தக் கட்டளை அவசரமும், அவசியமும் வாய்ந்தது. நினைவிருக்கட்டும்” என்று கண்டிப்பான குரலில் உத்தரவிட்டார். பின்பு குதிரைகளோடு காத்திருந்த ஈழ நாட்டு வீரர்களிடம் “நீங்களும் கப்பல் ஊழியர்களுமாகச் சேர்ந்து கப்பல் அறையில் இருக்கும் பாண்டியநாட்டு அரசுரிமைப் பொருள்களைத் தக்க பாதுகாப்புடன் அரண்மனையில் கொண்டுபோய் சேர்த்துவிட வேண்டும்” என்று வற்புறுத்திக் கூறினார். குமாரபாண்டியனின் வரவை அனுராதபுரத்திலிருக்கும் காசிப மன்னருக்கு முன் சென்று அறிவிப்பதற்காக அவர்கள் இருவரும் புறப்படுவதற்கு முன்பே ஒரு வாலிபவீரன் குதிரையிற் பறந்தான்.

அங்கே பசுமையான தென்னைமரங்களுக்கு நடுவே மிகப் பெரிய தேங்காய் மூடியொன்றைக் குடுமியோடு தலைகீழாகக் கவிழ்த்ததுபோல் வெண்ணிறத்துடன் கூடிய பெளத்த விஹாரக் கட்டடம் ஒன்று தெரிந்தது. குதிரையில் ஏறிக்கொள்வதற்கு முன்னால் அந்த ஆலயத்துக்குப் போய்க் குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் புத்தர் பெருமானை வணங்கிவிட்டு வந்தார்கள். – –

மொட்டைத் தலையும் ஒளி நிறைந்த மஞ்சள் நிற ஆடையுமாகக் காட்சியளித்த புத்தபிட்சு ஒருவர் அந்த ஆலயத்தில் இருந்தார். அவர்களை அன்புடன் வரவேற்று, “உங்களுடைய பிரயாணம் சுகம் நிறைந்ததாக இருக்கட்டும்” என்று புன்னகையோடு வாழ்த்துக் கூறி அனுப்பினார் அவர். குதிரைகள் புறப்பட்டன. வெயில் படாத காட்டில் விரைவாகச் செல்லவல்ல சாதிப் புரவிகளில் பயணம் செய்வது காற்றில் பறப்பது போல் இன்பமாக இருந்தது. நண்பகல் நேரத்துக்கு ஒரு காட்டுச் சிற்றுாரில் இருந்த பிட்சுக்களின் சங்கம் ஒன்றில் தங்கி, நாட் கடன்களையும் உணவையும் முடித்துக் கொண்டனர். பழகிய மனிதருக்கே

வழிகள் மறந்து போகக்கூடிய காடு அது கொஞ்சம் வழிதவறி, இடம் தவறி நடுக்காட்டில் போய் மாட்டிக்கொண்டால் கூட்டம் கூட்டமாகத் திரியும் யானை மந்தைகளிடம் சிக்கித் திண்டாட வேண்டியதுதான்.

“இளவரசே! இருட்டுகிற சமயத்தில் எந்த ஊர் வருகிறதோ அங்கே தங்கிவிட்டு, மறுபடியும் காலையில் பயணத்தைத் தொடங்கி அரசருடைய வெள்ளணி விழாவுக்கு அனுராதபுரம் போய்விடுவோம். இந்தக் காடுகளில் இரவுப் பயணம் ஆபத்தானது !’ என்றார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “கண்ட இடங்களில் தங்கித் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு கிடப்பதைவிட இரவிலும் பயணம் செய்தால் சற்று முன்பாகவே போய் அரசருடைய நாண்மங்கலத்தில் கலந்துகொண்டு வெள்ளணிக் கோலத்தில் அவரைக் கண்டு மகிழலாம்” என்றான் அவன்.

‘இரவிலும் தங்கி விடிவதற்கு ஐந்து நாழிகை இருக்கும்போது புறப்பட்டாலும் விழாவுக்கு நாம் போய் விடமுடியும். இந்தப் பக்கத்துக் காடுகளின் நிலவரத்தை நன்கு தெரிந்து கொண்டு நான் சொல்கிறேன். என் வார்த்தையைத் தட்டாதீர்கள். இரவுப் பயணத்துக்கு இந்தக் காடு ஏற்றதில்லை” என்று மீண்டும் இராசசிம்மனைக் கெஞ்சினார் அவர். அவனோ இரவே போகவேண்டும் என்று பிடிவாதமாக ஒற்றைக் காலில் நின்றான். –

அப்போது மாலை மயங்குகிற நேரம் ஆகியிருந்தது. ஆதிபுரம் என்ற ஊரைக் கடந்து வடகிழக்காக அனுராத புரத்துக்குச் செல்லும் காட்டுப் பாதையில் அவர்களுடைய குதிரைகள் சென்றுகொண்டிருந்தன. அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த பகுதி மிக மிக அடர்ந்த பயங்கரமான வனப் பகுதி. நாகராகப் பெருவனம் என்று வழங்கும் அந்த இருண்ட காட்டில் அவர்கள் புகுந்தபோது கதிரவன் மறைந்தான். ஏற்கெனவே இருந்த இருள் பெருகிக் கனத்தது. குமாரபாண்டியனின் பிடிவாதத்தை எண்ணி, மனம் வருந்திய சக்கசேனாபதி, “கருணை நிறைந்த எங்கள் புத்தர்

பெருமானே ! எங்களுக்கு ஒரு துன்பமும் நேராமல் காப்பாற்றுங்கள்” என்று மனத்தில் தியானம் செய்தவாறே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தார். காட்டில் அங்கங்கே பிரும்மாண்டமான புத்தர் சிலைகளையும், பெளத்த விஹாரங்களையும் கண்டபோதெல்லாம் திரும்பத் திரும்ப இந்த ஒரே தியானம்தான் ஈழ நாட்டுப் படைத்தலைவரின் மனத்தில் உண்டாயிற்று. –

காட்டில் ஒரிடத்தில் பெளத்த விஹாரத்தில் விளக்கேற்றிக் கொண்டிருந்த புத்த பிட்சு ஒருவர் விளக்கோடு ஓடி வந்து அவர்கள் குதிரைகளை வழிமறித்து நிறுத்தினார். விளக்கோடு பதறிப்போய் ஓடிவந்த அவரைக் கண்டு என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவர்களும் குதிரைகளை நிறுத்தினார்கள். பெரியவரே ! நான் சொல்வதைக் கேளுங்கள். இந்த இருட்டில் பயணம் வேண்டாம். என்னோடு நீங்களும் இந்த இளைஞரும் இந்தப் பெளத்த விஹாரத்தில் தங்கிவிட்டு அதிகாலையில் போகலாம், நான்கூட அரசரின் வெள்ளணி விழாவைக் காண்பதற்காகக் காலையில் அனுராதபுரம் புறப்படலாமென்றிருக்கிறேன்” என்று சக்கசேனாபதியை நோக்கிச் சொன்னார், புத்த பிட்சு, சக்கசேனாபதி இராசசிம்மனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

“அடிகளே! உங்களுடைய அன்புக்கு நன்றி. பயத்தை நாங்கள் மறந்துவிட்டோம். எங்களுக்கு அவசரமாகப் போக வேண்டும். புதிய இடத்தில் இந்தக் காட்டுக் குளிரில் எங்களுக்கு உறக்கம் வரப்போவதில்லை. ஆகவே எங்களுக்கு விடைகொடுங்கள்” என்று இராசசிம்மனே முகத்திலடித்தாற் போல் மறுத்துப் பதில் சொல்லிவிட்டான். –

“உங்கள் விருப்பம் அதுவானால் சரி! மறுப்பதற்கு நான் யார்?” என்று வழியை விட்டு விலகி நின்று கொண்டார் புத்த பிட்சு. குதிரைகள் மீண்டும் ஓடின.

“இளவரசே! அந்தப் புத்த பிட்சு வலுவில் ஓடிவந்து கூறியதைக் கேட்டீர்களா? இந்தக் காடுகளைப் பற்றி விவரம்

தெரிந்தவர்கள் யாரும் நம்முடைய பிரயாணத்தை அநுமதிக்க மாட்டார்கள்” என்றார் சக்கசேனாபதி. அதற்குக் குமார பாண்டியன் மறுமொழி கூறவில்லை. அந்தச் சமயத்தில் தொலைவில் எங்கோ கூட்டமாக யானைகள் பிளிறும் ஒலி காடுமுழுதும் எதிரொலித்தது. மேலே தலையில் இடிக்கிறார் போல மரக்கிளைகள் பின்னிப் பிணைந்திருந்த ஒரு பகுதியில் தேர்வடம் போலப் பெரிய மலைப் பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்து அதைக் கண்டுகொண்டார் சக்கசேனாபதி. இராசசிம்மன் அதன்மேலே இடித்துக் கொள்கிறாற் போலக் குதிரையைச் செலுத்திக்கொண்டு போவதற்கு இருந்தான். நல்லவேளையாக சக்கசேனாபதி அவனைத் தடுத்து நிறுத்திக் குதிரையை விலக்கிச் செலுத்திக்கொண்டு போகச் செய்தார். வன்த்தின் அந்த அடர்ந்த பகுதிக்குள் போகப் போகத்தான் தன்னுடைய துணிவு அசட்டுத்தனமானதென்று இராசசிம்மனுக்குப் புரிந்தது. அப்போதே சக்கசேனாபதி சொன்னதைக் கேட்டிருக்கலாமென்பதை அவன் உணரலானான். இரண்டாவதாக அந்தப் புத்தபிட்சு வந்து தடுத்த போதாவது கேட்டிருக்கலாமே என்று தன்னையே நொந்து கொள்ளும் நிலை அவனுக்கு ஏற்பட்டது. பயங்கரமான காட்டு மிருகங்களின் கூக்குரல்களெல்லாம் பாதைக்கு மிக அருகில் கேட்கத் தொடங்கின. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலே குதிரைகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். இருள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்கவிடாமல் செய்தது. இளங்கன்று பயமறியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது. அப்போதே கண்டித்துச் சொல்லித்தடுக்காமல் உடன் புறப்பட்டது என் தவறு என்று சக்கசேனாபதி சிறிது சினத்தோடு நினைத்தார். அவருடைய கண்களின் பார்வை கூர்மையாகி, எதிரே வழியையே உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தன.

இன்னும் சிறிது தொலைவு சென்றால் தென் கிழக்கே விசிதபுரத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வரும் சாலையொன்று காட்டுச் சாலையோடு ஒன்றுகூடும். அந்த இடத்துக்குப் போனதும் இளவரசரைக் கடுமையாகக் கண்டித்து பா.தே.37

விசிதபுரத்துக்குக் குறுக்கு வழியாக அழைத்துப் போய்விட வேண்டும் என்று மனத்துக்குள் திட்டமிட்டிருந்தார் சக்க சேனாபதி. விசிதபுரத்தில் ஆயிரம் பிட்சுக்களை உறுப்பினர் களாகக் கொண்ட மகாபெளத்த சங்கம் ஒன்று உண்டு. அந்தச் சங்கத்தின் தலைவர் தத்துவசேன அடிகளைச் சக்க சேனாபதிக்கு நன்கு தெரியும். அங்கே தங்கிவிட்டு விடிந்ததும் அனுராதபுரப் பயணத்தைத் தொடரலாமென்பது அவர் திட்டமாயிருந்தது. ஆனால் அந்தத் திட்டப்படி எதுவும் நடைபெறவில்லை. முற்றிலும் வேறான பயங்கர நிகழ்ச்சி ஒன்று நடந்தது. –

காட்டுச்சாலையும் விசிதபுரத்துச் சாலையும் சந்திக்கிற இடம் வந்தபோது இடிமுழக்கம்போல் யானைகள் பிளிரும் ஒலிகளும், மரக்கிளைகள் முறிகிற சத்தமும் காடே கிடுகிடுக்கும்படி எழுந்தன.

“இளவரசே! குதிரையை நிறுத்துங்கள்…” என்று கூச்சலிட்டார் சக்கசேனாபதி. குதிரைகள் நின்றன. எதிரே வழி மறிக்கிறார்போல் பத்திருபது கருங்குன்றுகள் நீண்ட தந்தங்களை ஆட்டிக்கொண்டு நின்றன. அந்த யானைகளின் தந்தங்கள் அவ்வளவு இருட்டிலும் பளிச்சென்று தெரிந்தன. சக்கசேனாபதி “பேசாமல் நான் செய்வதுபோல் செய்யுங்கள்” என்று இராசசிம்மனிடம் கூறிவிட்டுக் குதிரைமேல் எழுந்து நின்றார். அப்படி நின்றவுடன் மேலே தாழ்வாக இருந்த ஒரு மரக்கிளை அவர் கைகளுக்கு எட்டியது. அதைப் பற்றிக் கொண்டு மரத்தில் ஏறினார் அவர். இராசசிம்மனும் அதே வழியைப் பின்பற்றி அதே மரத்தில் ஏறினான். யானைகளின் மதம் மரக்கிளைகளைச் சாடிக்கொண்டிருந்தது. “உயிரைப்பற்றி உறுதியாக நம்புவதற்கில்லை. குலதெய்வங்களைத் தியானித்துக் கொள்ளுங்கள்! விதி இருந்தால் பிழைப்போம்” என்று நடுங்கும் குரலில் குமாரபாண்டியனுக்குச் சொன்னார் சக்கசேனாபதி. தங்கள் உயிர்களைப் பற்றி அவர்கள் நம்பிக்கையிழந்துவிட்ட அந்தச் சமயத்தில் விசிதபுரத்துச் சாலையில் ஒரு பெரிய ஆச்சரியம் நிகழ்ந்தது.

Previous articleRead Pandima Devi Part 2 Ch37 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articlePandima Devi Part 3 Ch 2 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here