Home Na Parthasarathy Pandima Devi Part 3 Ch 20 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch 20 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

95
0
Pandima Devi Part 3 Ch 20 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Pandima Devi Part 3 Ch 20 | Na.Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch 20 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம், அத்தியாயம் 20 :தீவினை பரவுகிறது

Pandima Devi Part 3 Ch 20 | Na.Parthasarathy | TamilNovel.in

புவனமோகினி பேயறைபட்டு ஓடி வருகிறவளைப் போல் ஓடிவந்ததைக் கண்டவுடன் மகாராணி, குழல்வாய் மொழி, விலாசினி எல்லோரும் திகைப்போடு விரைந்து வந்து அவளைச் சூழ்ந்துகொண்டனர்.

“என்னம்மா? ஏன் இப்படி நிலைகெட்டுத் தடுமாறி ஓடி வருகிறாய்? என்ன நடந்தது?” என்று அந்தப் பெண்ணை நிறுத்தி நிதானப்படுத்தி விசாரித்தார்கள், பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும். பயந்து வெளிறிய கண் பார்வையால் தன்னைச் சூழ்ந்து நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தாள் புவனமோகினி. மகாராணியாரையும் விலாசினியையும் பார்த்துவிட்டுக் குழல்வாய்மொழியின் மேல் அவள் பார்வை திரும்பியபோது அவள் கண்கள் சுருங்கி வெறுப்புப் படர முகம் சிறுத்தது. அவளைப் பார்க்க விருப்பம் இல்லாதவள்போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு விட்டாள் புவனமோகினி.

இதைக் கண்டு குழல்வாய்மொழியின் உள்ளம் அவமானப்பட்டுவிட்டது போலக் கொதித்தது. புவனமோகினி என்ற சாதாரணமான வண்ணமகள் தன்னிடம் இப்படி நடந்து கொண்டாளே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு. “பகவதியைப்பற்றி விசாரித்துக்கொண்டு வரப்போன புவனமோகின் உண்மையைத் தெரிந்துகொண்டு வந்துவிட்டாளோ? அதனால்தான் என் முகத்தை இப்படி வெறுப்போடு பார்க்கிறாள் போலும்! ஐயோ, நான் ஏன் இந்தச் சமயத்தில் இங்கே இருக்க நேர்ந்தது? நான் மறைத்து வைத்த உண்மை என் முன்னாலேயே வெளிப்பட்டு என்னைத் தலைகுனிய வைக்க வேண்டுமா!” என்று மனதுக்குள் எண்ணிப் பதற்றமடைந்தாள் குழல்வாய்மொழி.

“வண்ணமகளே! ஏன் இப்படிப் பதற்றமும் பயமும் அடைந்து வாய் பேசாமல் நிற்கிறாய்? நீ பகவதியைப் பற்றி விசாரித்துக்கொண்டு வரச் சென்ற இடத்தில் என்ன நடந்தது? சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்? சொல் அம்மா!” என்று மகாராணி புவனமோகினியைக் கேட்டார். புவனமோகினி வெறுப்பும் அச்சமும் கலந்த முகபாவத்தோடு மறுபடியும் குழல்வாய்மொழியை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்துவிட்டுப் பதில் சொல்லத் தயங்குவதுபோல் நின்றாள். இனிமேலும் தான் அங்கேயே நின்றுகொண்டிருந்தால் வெளிப்படையாக அவமானப்பட்டுத் தலைகுனிய நேர்ந்துவிடும் என்று அஞ்சினாள் குழல்வாய்மொழி.

“உள்பக்கம் போய்விட்டு இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்” என்று ஏதோ அவசர காரியமாகச் செல்கிற வளைப்போல் சொல்லிவிட்டு மெல்ல நழுவிச் சென்றாள் குழல்வாய்மொழி. முகத்திலோ, குரலிலோ, தான் அங்கிருந்து செல்வது மற்றவர்களுக்கு அநாகரிகமாகத் தோன்றிவிடுவதற்குரிய குறிப்பே காட்டாமல் சுபாவமாகச் சொல்கிறவளைப் போல் சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு உட்புறமாகச் சென்றுவிட்டாள் அவள், சென்றுவிட்டாள் என்று முடித்துச் சொல்வது தவறு. செல்வதுபோல் போக்குக் காட்டிவிட்டு அருகேயிருந்த ஒரு கதவுக்குப் பின் மறைந்து நின்று கொண்டாள். புவனமோகினி என்ன சொல்லப்போகிறாள் என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளும் ஆவல் அவளுக்கு இருக்குமல்லவா? செவிகளைக் கூர்மையாக்கிக்கொண்டு விநாடிக்கு விநாடி விரைவாகத் துடிக்கும் நெஞ்சத் துடிப்புடன் கதவு மறைவில் நின்றாள் அவள், – –

“இன்னும் ஏன் அம்மா தயங்குகின்றாய்? இடையாற்று மங்கலத்துப் பெண் இருக்கும்போதுதான் அவள் முகத்தைப் பார்த்துப் பேசக் கூசி மருண்டு நின்றாய்! அவளோ உள்ளே போய்விட்டாள். பயப்படாமல் நீ சொல்லவேண்டியதைச் சொல்லலாம்” என்று பவழக்கனிவாயர் புவனமோகினியைத் துண்டிக் கேட்டார்.

“பெண்னே! இன்னும் எங்கள் பொறுமையைச் சோதித்துக்கொண்டு நிற்காதே! சொல்” என்று மகாராணியும் தூண்டவே புவனமோகினி வாய் திறந்தாள்.

“அதை நான் எப்படிச் சொல்வேன், தேவி! சொல்வதற்கே நாக் கூசுகிறது எனக்கு. கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போகிற பாதையில் மகாமண்டலேசுவரருக்கு எதிராகக் கலவரங்களும் குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பெரியவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் பற்றி மிகக் கேவலமான முறையில் பேசிக்கொள்கிறார்கள். குழல்வாய்மொழியும் நாராயணன் சேந்தனும் ஈழத்துக்குப் பயணம் செய்த கப்பலில் பகவதியும் சென்றாளாம்; மகாமண்டலேசுவரர் தம்முடைய சூழ்ச்சியால் அந்தப் பெண் பகவதியை ஈழ நாட்டிலிருந்து திரும்ப முடியாதபடி அங்கேயே இறக்கும்படி செய்துவிட்டாராம் தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்குப் போகக்கூடாதென்று தடுத்துச் சிறைப்படுத்தினாராம். மகாமண்டலேசுவரருடைய காவலிலிருந்து தப்பித் தளபதியும் ஆபத்துதவிகள் தலைவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு பெரிய கலகக் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் முரட்டுக் கொள்ளைக் கூட்டத்தைப்போல் ஆயுதபாணிகளாகத் திரிந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள். நான் தப்பி ஓடிவரத் தெய்வம்தான் துணை புரிந்தது. போகிற வழியில் இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டேன். ஆனால் இவை எவ்வளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் பலர் கூறக்கேட்ட போது நம்பாமலும் இருக்க முடியவில்லை. இந்த நிலையில் கலக்கமுற்றுப் பதறி ஓடி வந்தபோது கலகக்காரர்களிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் உயிர் பிழைத்து வரவேண்டுமே என்ற பயம் இங்கு வந்து சேர்கிறவரை என்னை விடவில்லை. ஒருவழியாக அரண்மனைக்கும் வந்து உங்களிடமே நடந்ததைக் கூறிவிட்டேன். பேசி முடிப்பதற்குள் புவனமோகினிக்கு மூச்சு இரைத்தது. அச்சத்தினாலும் குழப்பமான மன நிலையினாலும்

பா.தே.45

சொற்கள் தடைப்பட்டு உருக்குலைந்து வெளிவந்தன. அவள் அவ்வாறு பேசி நிறுத்தியபின் அங்கு ஒரு விதமான அமைதி நிலவியது. . . – .

அவள் சொல்லி முடித்த பின்பும் சிறிது நேரம்வரை மகாராணி முதலியவர்களுக்கு அவர்களுடைய சொற்களில் நம்பிக்கை உண்டாகவே இல்லை. மகாராணி சோகம் தோய்ந்த குரலில் கூறலானார். –

“பவழக்கனிவாயரே! இதெல்லாம் உண்மையாயிருக்கு மென்றே என்னால் நம்பமுடியவில்லையே? பகவதி எப்போது இலங்கைக்குப் போனாள்? மகாமண்டலேசுவரர் ஏன் அவளைக் கொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்? தளபதிக்கும் அவருக்கும் அவ்வளவு பெரிய பகைமை இருப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே? இந்த மாதிரிச் செய்திகளையெல்லாம் மகாமண்டலேசுவரர் மேல் வெறுப்புக்கொண்ட கூற்றத் தலைவர்கள் யாராவது பொய்யாகத் திரித்து விட்டிருப்பார்களோ? இது என்ன கெட்ட காலம்: ஒரு பக்கத்தில் நாட்டின் எதிர்காலத்தையே முடிவு செய்து நிர்ணயிக்கும்படியான போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் இன்னொரு பக்கத்தில் இப்படி உள் நாட்டுக் குழப்பம் எழுந்தால் எவ்வளவு கேவலம்?”

“மகாராணி! நீங்கள் கூறுவதுபோல் எனக்கும் இதில் நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது. பகவதி ஈழ நாட்டில் போய் மரணமடைந்திருந்தால் குமாரபாண்டியருக்குத் தெரியாமலா போகும்? அவ்வளவேன்? நம்மோடு இங்கேயே தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியைக் கேட்டால் எல்லா விவரமும் தானே தெரிந்துவிடுகிறது. எங்கே? அந்தப் பெண்ணை உள்ளேயிருந்து இப்படிக் கொஞ்சம் கூப்பிட்டு அனுப்புங்களேன். உடனே விசாரித்துவிடலாம்” என்று பவழக்கனிவாயர் கூறியவுடன் “இதோ நான் போய் உடனே இடையாற்றுமங்கலத்து நங்கையை உள்ளேயிருந்து கூப்பிட்டுக்கொண்டுவருகிறேன்” என்று விலாசினி சென்றாள். அப்போது அதங்கோட்டாசிரியர் கூறினார்; ‘மகாராணி! நம்பிக்கை உண்டாவதும்,

உண்டாகாததும் நம் எண்ணங்களின் அடிப்படையைப் பொறுத்தது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாது. வெளியில் இவ்வளவு பெரிய கலவரம் எழவேண்டுமானால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் வேண்டும்.” –

“காரணம் இருக்கிறதோ, இல்லையோ? இவையொன்றும் நல்ல காலத்துக்கு அறிகுறியாகத் தோன்றவில்லை. மனக்கலக்கம் தான் அதிகமாகிறது” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் மகாராணி. அந்தச் சமயத்தில் குழல்வாய்மொழியைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றிருந்த விலாசினி, திரும்பி வந்தாள்.

“மகாராணி ! இடையாற்றுமங்கலத்து நங்கையைக் காணவில்லை. அநேகமாக அரண்மனையின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிப் பார்த்துவிட்டேன். எங்கே போனாளென்று தெரியவில்லை’ என்று திரும்பி வந்து விலாசினி கூறியபோது எல்லாரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

“உள்ளே சென்று வருகிறேன் என்று போனவள் அதற்குள் எங்கே சென்றுவிட முடியும்? நன்றாகத் தேடிப்பாருங்கள். அரண்மனைக்குள்ளேதான் எங்காவது இருப்பாள்!” என்றார் அதங்கோட்டாசிரியர். அவர்கள் இவ்வாறு திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அரண்மனையின் பிரதான வாயிலாகிய பராந்தகப் பெருவாயிலைக் காக்கும் காவலர்களில் ஒருவன் அங்கு வந்து வணங்கி நின்றான். அவன் மகாராணியை நோக்கிக் கூறினான்;

“சற்றுமுன் இடையாற்றுமங்கலத்திலிருந்து அம்பலவன் வேளான் என்ற படகோட்டி மகாமண்டலேசுவரரின் புதல்வியாரைச் சந்தித்து ஏதோ முக்கியமான செய்தி தெரிவிக்க வேண்டுமென அவசரமாக வந்தான்! நான் அவனை உள்ளே அனுப்புவதற்குத் தயங்கிக் கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரரின் திருப்புதல்வியாரே அந்தப் பக்கமாக வந்து விட்டார்கள். சந்தித்துப் பேசிக்கொண்டதும் அவசரமாக இடையாற்றுமங்கலம் போவதாகத் தங்களிடம் கூறிவிடுமாறு என்னிடம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள் இடையாற்றுமங்கலத்து நங்கை” என்று தெரிவித்துவிட்டுக் காவலன் போய்விட்டான்.

“மகாராணியாரைச் சந்தித்து விடைபெற்றுக் கொள்ளாமல் போவதற்கு அவ்வளவு அவசரமான காரியம் என்னதான் வந்துவிட்டதோ? இருந்தாலும் இடையாற்றுமங்கலத்து நங்கைக்கு இவ்வளவு அலட்சியம் ஆகாது!” என்று உதட்டைக் கடித்துக்கொண்டு சொன்னாள் விலாசினி.

“பரவாயில்லை! அது அந்தப் பெண்ணின் சுபாவம். அதைப்பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. புவனமோகினி வந்து தெரிவித்த செய்திகள் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்; எல்லாவற்றையும் கேட்டு என் மனம் ஒரேயடியாகக் கலங்கிப் போயிருக்கிறது. போர்க்களத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. இடையாற்றுமங்கலத்துக்குச் சென்றுவிட்டுக் கூடிய விரைவில் அரண்மனைக்கு வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்ற மகாமண்டலேசுவரரை இன்னும் காணோம்” என்று மகாராணி வானவன்மாதேவியார் கூறினார்.

“மகாராணிக்கு அந்தக் கவலை வேண்டாம். புவன மோகினி கூறியவை உண்மையா, இல்லையா என்பதை இன்று மாலைக்குள் நானும் அதங்கோட்டாசிரியர் பிரானும் விசாரித்துக் கூறிவிடுகிறோம்” என்று உறுதி தெரிவித்த பவழக்கனிவாயர் ஆசிரியரையும் அழைத்துக்கொண்டு அப்போதே வெளிக்கிளம்பினார். ஒரு நினைவிலும் மனம் பதியாமல் அவர்கள் உண்மையை விசாரித்துக்கொண்டு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் மகாராணி, விலாசினியும் புவனமோகினியும் உடனிருந்து ஆறுதல் தோன்றப் பேசிக்கொண்டிராவிட்டால் அன்றைய தினம் மகாராணிக்குத் தன் நினைவு தடுமாறிப் பித்துப் பிடித்திருக்கலாம். அந்த அளவுக்கு மனம் குழம்பியிருந்தது.

அந்தி மயங்கிய சிறிது நேரத்துக்குப் பின் பவழக்கனி வாயரும், அதங்கோட்டாசிரியரும் திரும்பி வந்தார்கள். அவர்கள் என்ன கூறப்போகின்றார்களோ என்று அறியப் பதை பதைத்துக்கொண்டிருந்தது மகாராணியின் நெஞ்சம். திரும்பி வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ தென்படவில்லை. வாட்டமே மிகுந்திருந்தது.

“மகாராணி! காலையில் புவனமோகினி வந்து கூறியவற்றில் பொய் எதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும் மகாமண்டலேசுவரருக்கு எதிராகக் கலகம் விளைவிப்பதற்குப் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். கழற்கால் மாறனார் முதலிய கூற்றத்தலைவர்களும், தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும், இந்தக் கலகக் கூட்டத்துக்கு முதன்மையாளர்களாகியிருக்கிறார்கள். தளபதியின் தங்கை ஈழ நாட்டில் இறந்தது உண்மைதானாம். அதற்கும், தளபதி போர்க் களத்துக்குப் போய்த் தலைமை தாங்கிப் போர் செய்ய முடியாமற்போனதற்கும், மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிதான் காரணமென்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்” என்று அவர்கள் கூறினார்கள்.

“பொய்! முழுப் பொய்! நான் இவற்றை நம்பவேமாட்டேன். வேண்டுமென்றே அவருக்கு எதிராக யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள். மகாமண்டலேசுவரரையே நேரில் சந்தித்துக் கேட்டாலொழிய நான் நம்பமாட்டேன். அவர் அப்பழுக்கற்ற நேர்மையாளர்” என்று ஆவேசமுற்றவர்போல் கூச்சலிட்டார் மகாராணி, மற்றவர்கள் அவரிடம் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்துப் போய்த் திகைத்து நின்றார்கள்.

மகாராணியே மீண்டும் பேசினார். “நான் இப்போதே இடையாற்றுமங்கலத்துக்குப் புறப்பட்டுப் போகிறேன். அவரைப் பார்த்துக் கேட்கிறேன். அப்போதாவது உண்மை தெரிகிறதா, இல்லையா, என்று பார்க்கிறேன்.” –

“எங்கும் கலகக்காரர்கள் ஆயுதங்களோடு திரிகிற இச்சமயத்தில் தாங்கள் தனியே இடையாற்றுமங்கலம் புறப்படுவது கூடாது” என்று எல்லோருடைய குரல்களும் ஒன்றாக எழுந்து ஒலித்து மகாராணியைத் தடுத்தன. மகாராணி அதைக் கேட்கவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்ததும், புவனமோகினியை உடன் அழைத்துக்கொண்டு சிவிகையில் இடையாற்றுமங்கலம் புறப்படுவதற்கு உறுதி செய்துகொண்டு விட்டார் அவர் அந்தப் பிடிவாதத்தை எப்படித் தடுப்பதென்று தெரியாமல் ஆசிரியரும், பவழக்கனிவாயரும், விலாசினியும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்களையெல்லாம் இதே நிலையில் விட்டுவிட்டு மறுபடியும் போர்க்களத்துக்குச் சென்றால், அங்கே குமாரபாண்டியனின் நிலையைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டுவிடலாம்.

நள்ளிரவில் படைவீரர்களின் பாசறைகள் இருந்த பகுதியில் கலவரமும் குழப்பமும் எழுந்தனவாகச் சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? “படை வீரர்களுக்குள் ஏதாவதொரு சாதாரணமான தகராறு உண்டாயிருக்கலாம். அதை நாமிருவரும் போய் உடனே தீர்த்துவிடலாம்” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு எழுந்து சென்ற குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் அங்கே போய்ப் பார்த்தவுடன் திடுக்கிட்டார்கள்.

படை வீரர்களல்லாத வெளி மனிதர்கள் பாசறைப் பகுதிகளில் வந்து வீரர்களைக் கூட்டம் கூட்டி ஏதேதோ கூறி மனத்தை மாற்றிக்கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த இடத்தை அணுகியவுடன் ஒரே எதிர்ப்புக் குரல்களாக எழும்பின.

‘மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியமாட்டேன்” என்றது ஒரு குரல்.

“தளபதி வல்லாளதேவர் வராவிட்டால் நாளையிலிருந்து களத்தில் இறங்கிப் போர் செய்யமாட்டோம்!” என்றது மற்றொரு குரல். தொடர்ந்து அதே இரண்டு எதிர்ப்பு வாக்கிய ஒலிகள் நூற்றுக்கணக்கில் பெருகி ஒலித்தன. எந்தக் காரியங்களுக்காகப் பயந்து மகாமண்டலேசுவரர் தன்னிடம் வாக்குறுதிகள் வாங்கினாரோ அவை பயனில்லாமற் போய்விட்டதைக் குமாரபாண்டியன் அந்த நள்ளிரவில் அங்கு கண்டான்.

Previous articlePandima Devi Part 3 Ch 19 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articlePandima Devi Part 3 Ch 21 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here