Home Na Parthasarathy Pandima Devi Part 3 Ch 23 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch 23 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

124
0
Pandima Devi Part 3 Ch 23 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Pandima Devi Part 3 Ch 23 | Na.Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch 23 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம், அத்தியாயம் 23 :மாதேவியின் கண்ணிர்

Pandima Devi Part 3 Ch 23 | Na.Parthasarathy | TamilNovel.in

மகாமண்டலேசுவரரைப் பற்றி யார் சொல்லியும் அதை நம்பாமல் பொழுதுவிடிந்ததும் இடையாற்று மங்கலத்துக்குப் புறப்படுவதற்கிருந்த மகாராணி, அப்படிப் புறப்பட வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. பொறிகலங்க வைக்கும்படியான அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மகாராணி வானவன்மாதேவி மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பலவித மனக் குழப்பங்களாலும், முதல் நாளிரவு நன்றாக உறக்கம் வராததாலும், தளர்ந்து போயிருந்த அவருக்கு அந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“இடையாற்றுமங்கலத்தையும், அதைச் சுற்றியுள்ள அழகான இடங்களையும் கலகக்காரர்கள் நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டார்கள். முதல் நாள் இரவு முழுவதும் மகாமண்டலேசுவரர் யார் கையிலும் அகப்படவில்லையாம். காலையில் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவில் குறட்டில் அவர் இறந்து கிடப்பதைக் கண்டார்களாம்” என்று கேள்விப்பட்ட இந்தச் செய்திதான் மகாராணியை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டது.

புவனமோகினியும், விலாசினியும், மகாராணியின் உடலைத் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிந்து நினைவு வருவதற்கேற்ற சைத்தியோபசாரங்களைச் செய்தனர். பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் கவலையோடு நின்றுகொண்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு வந்த அரண்மனை மெய்காவற் படை ஒற்றனை மேலும் சில கேள்விகளைத் தூண்டிக் கேட்டார் பவழக்கனிவாயர்.

“நேற்று காலையில்தானே அந்தப் பெண் குழல்வாய் மொழி இங்கிருந்து புறப்பட்டு இடையாற்றுமங்கலத்துக்குப் போனாள்? அவள் போய்ச் சேர்ந்தாளோ, இடைவழியிலேயே கலகக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு விட்டாளோ? அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே?’ என்று பவழக்கனிவாயர் கேட்ட கேள்விக்கு ஒற்றன் கீழ்க்கண்டவாறு மறுமொழி கூறினான்.

“சுவாமி! மகாமண்டலேசுவரரின் புதல்வியும் அந்தரங்க ஒற்றன் நாராயணன் சேந்தனும் கலகக்காரர்கள் கையில் சிக்கவில்லையாம். அவர்களையும் எப்படியாவது பிடித்து விடுவதென்று கலகக்காரர்கள் வலை போட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்!” இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் மகாராணியின் மூர்ச்சை’ தெளிந்தது. எழுந்து உட்கார்ந்து மிரள மிரள விழித்தார் அவர். சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்தார். தட்டுத் தடுமாறி எழுந்து நின்றார். தம்முடைய அந்தரங்க அறையை நோக்கிச் சென்றார். பின்பு நீண்ட நேரம் அவர் அந்த அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை. “மனம் நொந்திருப்பவர்களைத் தனியே விடக் கூடாது! நீங்களும் போய் உடன் இருங்கள்” என்று புவன மோகினியையும் விலாசினியையும் அனுப்பினார் அதங்கோட்டாசிரியர். அந்தப் பெண்கள் இருவரும் மகாராணி வானவன்மாதேவியாரின் அறைக்குள் தயங்கித் தயங்கிச் சென்றார்கள். .

அறை நடுவே உட்கார்ந்து பச்சைக் குழந்தைபோல விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார் மகாராணி. அவர் மடியில் ஒரு பழைய ஓலை கிடந்தது. விலாசினியையும் புவன மோகினியையும் நிமிர்ந்து பார்த்த மகாராணி கையாற் குறிப்புக் காட்டி அவர்களை உட்காரச் சொன்னார். கண்களைத் துடைத்துக்கொண்டு தன் மடியில் கிடந்த ஒலையை விலாசினியின் கையில் எடுத்துக் கொடுத்தார் மகாராணி,

அவள் அதை வாங்கிக்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று கேட்பதுபோல் மகாராணியின் முகத்தைப் பார்த்தாள்.

“விலாசினி! இந்த ஒலையில் எழுதியிருக்கும் பாட்டைப் பற்றி உனக்கு நினைவிருக்கிறதா?” என்று அவர் அவளைக் கேட்டார். அந்த ஒலையிலிருந்த பாட்டை ஒருமுறை மனத்திற்குள் படித்துப் பார்த்துக்கொண்டே விலாசினி, ‘மகாராணி ! இது முன்பு ஒருமுறை கோட்டாற்றுப் பண்டிதரிடம் தாங்கள் எழுதி வாங்கிக் கொண்ட பாட்டு அல்லவா? பகவதி இங்கே தங்கியிருக்கும்போது இந்தப் பாட்டைக் கொடுத்து அடிக்கடி அவளைப் பாடச் சொல்லிக் கேட்பீர்களே?” என்றாள். பகவதி என்ற பெயரைக் கேட்டவுடன் மறுபடியும் கண்ணிர் அரும்பியது மகாராணியின் கண்களில். ‘இப்போதும் அவள் பாடிக் கேட்க வேண்டும்போல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பாவிப் பெண் கண்காணாத தேசத்தில் போய் மாண்டு போனதாகச் சொல்லுகிறார்களே, விலாசினி நான் இப்போது சொல்லப்போகிற செய்தி இதற்கு முன்பு உனக்குத் தெரிந்திருக்காது. ஒரு நாள் இரவு மன வேதனை தாங்க முடியாமல் அரண்மனை நந்தவனத்திலிருந்த பாழுங்கிணற்றில் வீழ்ந்து என்னை மாய்த்துக்கொள்வதற்கு இருந்தேன். அப்போது அந்த நள்ளிரவில் என்னைக் கைப்பிடித்துத் தடுத்துக் காப்பாற்றியது யார் தெரியுமா? அந்தப் பெண் பகவதிதான். அவள் காப்பாற்றியிரா விட்டால் இன்று என்னை யார் உயிரோடு பார்க்க முடியும்? அவள் போய்விட்டாள். நான் இருக்கிறேன். அவளுடைய தமையன் வீராதி வீரனாகப் போர்க்களத்தில் நின்று போரிட வேண்டியதை மறந்து இந்தத் தென்பாண்டி நாட்டின் அறிவுச் செல்வரைக் கொன்று கலக மிடும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக மாறிவிட்டான். எவ்வளவு கேவலமான காரியம்? மகாமண்டலேசுவரர் இறந்துபோய் விட்டார் என்று கேட்கும்போது என் உடல் பயத்தாலும், துக்கத்தாலும் நடுங்குகிறது, பெண்ணே! நேற்று நாமெல்லோரும் பேசிக்கொண்டிருந்தபோது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்றுமங்கலத்துக்கு ஒடிப் போனாளே குழல்வாய்மொழி, அவள் கதி என்ன ஆயிற்றோ?

போர்க்களத்து நிலைமைகளைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. வடக்கே பகைவர்களோடு போர் செய்து கொண்டிருக்கிற சமயத்தில் நம்மோடு நாமே போரிட்டுக் கொள்ளும் இந்தக் கலகத்தைத் தளபதி ஏன் உண்டாக்கினானோ? தேசத் துரோகியாக மாறவேண்டுமென்று நன்றியை மறந்து துணிந்து விட்டானா வல்லாளதேவன்? இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா! கரிக்குப்பைக்கு நடுவில் வைரத்தைப் பார்ப்பதுபோல் இத்தனை துன்பத்துக்கும் நடுவில் இந்த ஒரு பாட்டை எடுத்துப் பார்த்தால் எனக்குச் சிறிது மெய்யுணர்வு உண்டாகிறது. கொஞ்சம் இதைப் படி, கேட்டு ஆறுதல் அடைகிறேன்” என்று சோகம் கனிந்த உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார் மகாராணி, விலாசினி படிக்கலானாள்:

“இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல வளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும் விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொள்மின்!” பாட்டைக் கேட்டுவிட்டு மகாராணி கூறலானார்:

“நிலையாத பொருள்களை நிலைப்பனவாக எண்ணி மயங்கியிருந்தால் இப்படித்தானே அந்தப் பொருள்கள் அழியும் போதுதுக்கப்படவேண்டியிருக்கிறது? நிலையாததையெல்லாம் படைத்துவிட்டு நிலைத்திருப்பது எதுவோ அதை நினைக்கப் பழகிக்கொண்டிருந்தால் இப்போது என் மனம் இப்படிக் குமுறுமா ? உணர்ச்சி நைப்பாசைகளையும், எண்ண அழுக்குகளையும் வைத்துக்கொண்டே மெய்யுணர்வை இழந்து விட்டேனே ? விலாசினி! துக்கத்தையும், ஏமாற்றங்களையும் அனுபவிக்க இந்தப் பாட்டின் அர்த்தம் கடல் போல் விரிவடைந்து கொண்டே போவதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது, பார்த்தாயா? அந்தப் பாட்டைக் கேட்டு மகாராணி பேசிய வார்த்தைகளால் அவருடைய மனம் எந்த அளவுக்கு வேதனையும், விரக்தியும் அடைந்து போயிருக்கிற தென்பதை விலாசினி உணர்ந்தாள்.

அறைவாயிலில் அந்தச் சமயத்தில் ஒரு காவலன் அவசரமாக வந்து வணங்கி நின்றான். “தேவி! குமாரபாண்டியர் அவசரமாகப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். தங்களைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறார்” என்று அந்தக் காவலன் கூறியதும் விலாசினியும், புவனமோகினியும் விறுட்டென எழுந்து அந்த இடத்திலிருந்து ஒதுங்கிச் சென்றனர். மகாராணியின் நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. கண்கள் அறைவாயிலை நோக்கிப் பதிந்து நிலைத்தன.

வாட்டமடைந்த தோற்றத்தோடு பயணம் செய்து களைத்துக் கறுத்த முகத்தில் கவலையும் பரபரப்பும் வேகமாக தென்பட அறைக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன். அவனைக் கண்டதும் துயரம் பொங்க, குழந்தாய்! இந்த நாட்டின் அறிவுச் செல்வரைப் பறிகொடுத்து விட்டோமே!” என்று கதறினார் மகாராணி.

‘அம்மா ! என்ன நடந்துவிட்டது? நிதானமாகச் சொல்லுங்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் குழப்பங்களையும், கவலைகளையும் சுமந்துகொண்டு போர்க்களத்திலிருந்து இங்கே ஒடி வந்திருக்கிறேன். நீங்கள் எதையோ சொல்லிக் கதறுகிறீர்களே?” என்று அருகில் வந்து அமர்ந்து வினவினான் இராசசிம்மன்.

“சொல்லிக் கதறுவதற்கு இனி என்ன இருக்கிறது? இலங்கையில் உன்னைத் தேடிவந்த இடத்தில் பகவதி இறந்து போனாள் என்ற உண்மையை இங்கு வந்ததுமே நீ என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா? எல்லோருமாகச் சேர்ந்து அதை மறைத்தீர்கள். தளபதியைப் போர்க்களத்துக்கு வர விடாமல் செய்தீர்கள். அவற்றால் எத்தனை பெரிய உள்நாட்டுக் கல்கம் எழுந்துவிட்டது. மகாமண்டலேசுவரர் மாண்டு போனார். இடையாற்றுமங்கலம் தீயுண்டு அழிந்து விட்டது. இன்னும் என்ன நடக்கவேண்டும் அப்பா? எல்லாவற்றையும் கேட்டுவிட்ட பின்பும் துக்கத்தையும் உயிரையும் தாங்கிக்கொண்டு சாக மாட்டாமல், உட்கார்ந்திருக்கிறேன் நான்” என்று தன் தாயின் வாயிலிருந்து மகாமண்டலேசுவரரின் மரணச்செய்தியைக் கேட்டபோது அப்படியே திக்பிரமை பிடித்துப்போய் அயர்ந்து கிடந்தான் இராசசிம்மன். பயமும் திகைப்பும் உண்டாக்கும் நா. பார்த்தசாரதி 73;

அந்தத் துயரச்செய்தி மனத்தில் உறைந்து நாவுக்குப் பேசும் ஆற்றல் உண்டாகச் சில கணங்கள் பிடித்தன அவனுக்கு. அவனால் அதை நம்புவதற்கே முடியவில்லை.

“அம்மா! மகாமண்டலேசுவரர் இறந்துவிட்டார் என்று உண்மையாகவே சொல்கிறீர்களா, அல்லது என்னைச் சோதனை புரிகிறீர்களா?”

“சோதனை நான் செய்யவில்லையப்பா! உன்னையும் என்னையும், இந்த தேசத்தையும் விதி சோதனை செய்கிறது. தெய்வம் சோதனை செய்கிறது. நம்பிக்கைகள் சோதனை செய்கின்றன” என்று சொல்லிக் கொண்டே குலுங்கக் குலுங்க அழுதார் மகாராணி.

“மகாராணி மனங் குழம்பிப் போயிருக்கிறார்கள், நடந்தவற்றை நாங்கள் சொல்கிறோம்’ என்று அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் அங்கு வந்தார்கள். எல்லாவற்றையும் அவர்களிடம் கேட்டு அறிந்தபோது அவனும் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். அவனுக்கும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

‘அம்மா! விழிஞத்தில் இறங்கியதும் பகவதியின் மரணத்தை யாருக்கும் கூறவேண்டாமென்று மகாமண்டலேசுவரர்தான் வாக்குறுதி வாங்கிக் கொண்டார். தளபதி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் செய்தியும் இரகசியமாக இருக்க வேண்டுமென்று அவர்தான் சொன்னாரம்மா! தளபதி சிறையிலிருந்து தப்பித் தங்கையின் மரணத்தைத் தெரிந்து கொண்டதுமல்லாமல் அதற்கு மகாமண்டலேசுவரர்தான் காரணமென்று தப்பாக அவர்மேல் வன்மம் கொண்டு விட்டான். அதன் விளைவுகள் இவ்வளவு கொடுமையாக முடியுமென்று நான் நினைக்கவே இல்லை, அம்மா! இங்கேதான் இப்படி என்றால் அங்கே போர்க்களத்திலும் புகுந்து கலகம் செய்து பாசறையிலுள்ள தென்பாண்டி வீரர்களையெல்லாம் மனம் மாற்றி இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். உங்களையும், மகாமண்டலேசுவரரையும் கலந்து கொண்டு தளபதி வல்லாளதேவனை எப்படியாவது சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லலாமென்று நான் ஓடி வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய பேரிடியை என் காதில் போடுகிறீர்கள். நான் என்னதான் செய்யப் போகிறேனோ? இப்போதுள்ள படைகளை வைத்துக்கொண்டு இரண்டு நாள் போரைக்கூடச் சமாளிக்க முடியாதென்று சக்கசேனாபதி கையை விரித்துவிட்டார்.”

“போரைச் சமாளித்து வெற்றி பெற்றாலும் இனி என்ன பயன் மகனே? கடமையையும், நன்றியையும் போற்றிவந்த தூய வீரனாக இருந்த தளபதி கண்மூடித்தனமான வெறிச் செயலில் இறங்கிவிட்டான். கூற்றத் தலைவர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு விட்டார்கள். எவ்வளவோ சாமர்த்தியமாக இருந்த மகாமண்டலேசுவரரும் கெடுமதி நெருங்கியதாலோ என்னவோ, இப்படியெல்லாம் செய்து தம்மை அழித்துக் கொண்டுவிட்டார். தளபதியைச் சிறைப்படுத்தியும், பகவதியின் மரணத்தை மறைத்தும் அவர் சூழ்ச்சிகள் செய்திராவிடில் இந்தக் கலகமே ஏற்பட்டிராது. அழியப் போகிற தீவினை விளைவு நெருங்கிவிட்டால் எவ்வளவு பெரிய அறிவாளிக்கும் நாணயம் தவறிவிடும் போலிருக்கிறதே!” என்று மகாராணி விரக்தியோடு மறுமொழி கூறினார்.

“அம்மா நீங்களும் இப்படி மனம் வெறுத்துப் பேசினால் நான் என்ன செய்வது? சேர நாட்டுப் படைத் தலைவனும், பெரும்பெயர்ச்சாத்தனும் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். கடல் கடந்து வந்தவன் சக்கசேனாபதி இரவும் பகலும் நம் வெற்றிக்காக முயல்கிறார். இந்தச் சமயத்திலா தளர்வது? வாருங்கள்! நானும் நீங்களுமாகப் போயாவது தளபதியைக் கெஞ்சிப் பார்க்கலாம். அவன் மனம் இரங்காமலா போய்விடுவான்? அம்மா! எல்லாத் துன்பங்களையும் மறந்து புறப்படுங்களம்மா, கடைசியாக முயல்வோம்” என்று தாயின் பாதங்களைப் பற்றிக்கொண்டு க்ெஞ்சினான் இராசசிம்மன். மூன்றாம் நாள் காலை பதினொரு நாழிகைக்குள் தளபதியோடு போர்க்களத்துக்கு வரவில்லையானால் வெற்றியைப்பற்றி நினைப்பதற்கில்லை யென்று சக்கசேனாபதி கூறியனுப்பியிருந்த நிபந்தனையையும் தாயிடம் கூறி முறையிட்டான் அவன்.

அவனுக்குப் பதில் சொல்வதற்காக மகாராணி வாயைத் திறந்தார். அவர் பேசத் தொடங்குமுன் அரண்மனை வாயிலில் ‘விடாதே! பிடி! கொல்லு’ என்ற வெறிக் குரல்களோடு பலர் ஓடிவரும் ஓசையும் “ஐயோ! காப்பாற்றுங்கள்” என்று ஒர் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஒலமிட்டு அபயம் கோரும் அடைக்கலக் குரலும் எழுந்தன. அதைக் கேட்டு யாவரும் திடுக்கிட்டுத் திகைத்தனர். “இராசசிம்மா! ஒடு; அது என்னவென்று போய்ப் பார்” என்று மகனைத் துரத்தினார் மகாராணி, இராசசிம்மன் உட்பட எல்லோருமே அந்தக் குழப்பம் என்னவென்று பார்ப்பதற்காக எழுந்து வாசற்புறம் ஓடினார்கள். மகாராணி, விலாசினி, புவனமோகினி ஆகிய பெண்கள் மட்டும் போகவில்லை. –

அரண்மனையில் பராந்தகப் பெருவாயிலில் மூடு பல்லக்கு ஒன்று கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னால் – உருவிய வாள்களும், வேல்களுமாக, யாரோ சில முரட்டு மனிதர்கள் துரத்தி ஓடிவந்துகொண்டிருந்தார்கள். மூடு பல்லக்கு அருகிலிருந்து குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் அபயக் குரல் கொடுத்து அலறியவாறு உள்ளே ஓடிவந்து கொண்டிருந்தார்கள். என்ன கூப்பாடு என்று பார்ப்பதற்காக வெளியே வந்த குமாரபாண்டியனும் மற்றவர்களும் இந்தக் காட்சியைக் கண்டு திகைப்பும் வியப்பும் அடைந்து ம்ருண்டுபோய் நின்றனர். இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. – – – பின்னால் துரத்திவந்த கூட்டம் கணத்துக்குக் கணம் அதிகமாயிற்று. ஆயுதபாணிகளாகத் தாக்குவதற்கு ஒடி வருவதுபோல் வந்த அவர்களுடைய வெறித்தனமும் கூப்பாடுகளும் பெருகின. உள்ளே உட்கார்ந்திருந்த மகாராணி முதலியவர்களும் ஆவலை அடக்கமுடியாமல் பார்ப்பதற்காக எழுந்து ஓடிவந்து விட்டார்கள். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறிக் கொண்டே ஓடிவந்த குழல்வாய்மொழியும், சேந்தனும் மகாராணியின் காலடியில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் இருவரும் பயந்து நடுங்கி முகத்தில்

கொலையச்சம் பரவியதுபோல் தோற்றமளித்ததை எல்லோரும் கண்டனர். இருவரும் ஓயாமல் அழுதிருந்த சாயல் தெரிந்தது. “தாயே! எங்களைக் கொல்ல ஓடிவருகிறார்கள். நீங்கள் தான் அடைக்கலம் அளித்துக் காப்பாற்றவேண்டும்” என்று மகாராணியிடம் முறையிட்டுக் கதறினார்கள், குழல்வாய்மொழியும் சேந்தனும் எல்லோருக்கும் அவர்கள் நிலை ஒருவாறு புரிந்துவிட்டது.

உடனே குமாரபாண்டியன் வாயிற்புறம் பார்த்தான். கலகக் கூட்டம் வரம்பு மீறிக் காவலைக் கடந்து உள்ளே நுழைய முயன்று கொண்டிருந்தது. –

“காவலர்களே! பராந்தகப் பெருவாயிலை மூடிவிட்டு உட்புறம் கணைய மரங்களை முட்டுக்கொடுங்கள். கோட்டைக்குள் யாரும் நுழையவிடாதீர்கள்” என்று சிங்க முழக்கம் போன்ற குரலில் கட்டளையிட்டான் இராசசிம்மன். அடுத்த விநாடி ஒன்றரைப் பனை உயரமும் முக்காற்பனை -அகலமும் உள்ள அந்தப் பிரம்மாண்டமான கதவுகள் மூடப்படும் ஒலி அரண்மனையையே அதிரச் செய்துகொண்டு எழுந்தது. . – – –

“குழல்வாய்மொழி! எங்களையெல்லாம் தவிக்கவிட்டுப் போய் விட்டாரே அம்மா உன் தந்தை அவர் இருந்த பெருமைக்கு இப்படியெல்லாம் ஆகுமென்று யாராவது எதிர் பார்த்தோமா!” என்று தணிக்கமுடியாமல் கிளர்ந்தெழும் துக்கத்தோடு அந்தப் பெண்ணைத் தழுவிக்கொண்டு கதறினார் மகாராணி. குழல்வாய்மொழி குமுறிக் குமுறி அழுதாள்.

“தேவி! அவருடைய காலம் முடிந்துவிட்டது. எங்களைத் தப்பிவாழச்செய்துவிட்டு அவர் போய்விட்டார். இரவோடு இரவாக இடையாற்று மங்கலத்திலிருந்து நாங்கள் இருவரும் முன்சிறைக்குப் போய்விட்டு இப்போது ஒரு முக்கிய காரியமாக வந்தோம். யாருக்கும் தெரியாமல் மூடு பல்லக்கில் வந்தோம். அரண்மனைக்கு அருகில் வந்தபோது இந்தக் கலகக்காரர்கள் எப்படியோ தெரிந்துகொண்டு துரத்தத் தொடங்கி விட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பாற்றி அபயமளித்தீர்கள். தம்முடைய அந்திம நேரத்தில் மகாமண்டலேசுவரர் தங்களிடம் சேர்த்துவிடச் சொல்லி ஓர் ஒலையை என்னிடம் அளித்துச் சென்றார்” என்று சொல்லிக் கொண்டே இடுப்பிலிருந்து அந்த ஒலையை எடுத்தான் சேந்தன். துக்கம் அவன் குரலையே மாற்றியிருந்தது.

Previous articlePandima Devi Part 3 Ch 22 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in
Next articlePandima Devi Part 3 Ch 24 | Pandima Devi Na.Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here