Home Na Parthasarathy Pandima Devi Part 3 Ch 9 | Pandima Devi Na. Parthasarathy |...

Pandima Devi Part 3 Ch 9 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

93
0
Pandima Devi Part 3 Ch 9 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Pandima Devi Part 3 Ch 9 | Na. Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch 9 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம், அத்தியாயம் 9 : அவசரப் பயணம்

Pandima Devi Part 3 Ch 9 | Na. Parthasarathy | TamilNovel.in

பாதி வழியில் எதிர்கொண்டு சந்தித்த தமனன் தோட்டத்துக் கடற்படை வீரர்கள் கூறிய செய்தியிலிருந்து இறந்த பெண் கப்பலில் வந்து இறங்கியவளாக இருக்க முடியாதென்று தெரிந்தது. அவ்வளவில் தற்காலிமான திருப்தி ஒன்று ஏற்பட்டது இராசசிம்மனுக்கு. ‘கப்பலில் வந்த மூன்று பேர்களில் ஒரே ஒர் இளைஞன்தான் காணாமற் போய்விட்டானென்று, இவர்கள் கூறுகிறார்கள். எனவே பகவதி இந்த கப்பலில் வந்து இறங்கியிருக்க முடியாது என்று தன் மனத்தை ஆற்றிக்கொண்டு, “சக்கசேனாபதி! என்னைத் துன்புறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு, என் பகைவர்கள் அனுப்பிய முரட்டு ஒற்றர்கள் சிலர் பிடிபட்டிருக்கும் இந்தக் கப்பலில் வந்திருக்கலாம் என்று நீங்களும் நானும் வந்து பார்த்தோம். ஆனால் கப்பலில் விழிஞ்த்திலிருந்து வந்தது என்றும் அதில் ஏற்கெனவே தப்பிச் சென்ற இளைஞனைத் தவிர ஒரு முன்குடுமிக்காரரும், இளம் பெண்ணொருத்தியும் இருக்கிறார்களென்றும் இவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் யாராயிருக்கலாம் என்பதை இப்போதே நான் கூறிவிட முடியும்” என்று அவரிடம் சொன்னான் இராசசிம்மன்.

“முடியுமானால் சொல்லுங்கள், பார்க்கலாம். யார் அவர்கள்?” என்று அவர் அவனைக் கேட்டார்.

“வேறு யாராயிருக்க முடியும்? மகாமண்டலேசுவரர்தான் தம் பெண்ணையும் நாராயணன் சேந்தனையும் அனுப்பி யிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“அவர் அவ்வாறு அனுப்புவதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது:”

“எனக்கு ஏதாவது அந்தரங்கமான செய்தியை அவர் சொல்லி அனுப்பியிருக்கலாம் அல்லவா?”

“அவரிடம் தங்கியிருப்பதுபோல் இருந்து அவரையும் ஏமாற்றிவிட்டு அரசுரிமைப் பொருள்களையும் சொல்லாமல் கடத்திக்கொண்டு என்னோடு இங்கு ஓடி வந்திருக்கிறீர்கள் நீங்கள். இவ்வளவு அவமதிப்பாக நடந்துகொண்ட பின்பும் உங்களைத் தேடிக் கடல் கடந்து தம் பெண்ணையும், அந்தரங்க ஒற்றனையும் அவர் எப்படி அனுப்புவார்?”

“எல்லா மனித உணர்ச்சிகளையும் அளவிடுவதுபோல் மகாமண்டலேசுவரருடைய உணர்ச்சிகளையும் சாதாரணமாக அளவிட முயல்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு இப்படித் தோன்றுகிறது, சக்கசேனாபதி!” .

“அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இளவரசே! முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏறக்குறைய தீர்ந்துவிட்டது. இந்தத் துறையில் நாம் வந்து இறங்கிச் சென்ற நாளுக்குப் பின் எந்தக் கப்பலிலும் வல்லாளதேவனின் தங்கை பகவதி வந்து இறங்கிச் சென்றதாக யாரும் அடையாளம் கூறவில்லை. அதனால் நேற்றிரவு காட்டில் இறந்த பெண்ணைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட்டு அழுதது வீண் மனப்பிரமைதான். உருவ ஒற்றுமை உங்கள் கண்களை ஏமாற்றிவிட்டது.”

“இல்லை, சக்கசேனாபதி! நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் இப்போதைக்கு அதை நான் தீர்மானிப்பதற்கு இயலாது. இறந்தது அந்தப் பெண்ணில்லை என்பதை அங்கே சென்று அவளை உயிருடன் பார்த்தாலொழிய நான் நம்பமாட்டேன்” என்ற இராசசிம்மன் அப்போதும் பிடிவாத மாகத்தான் அவருக்குப் பதில் கூறினான்.

தமனன்தோட்டத்துக் கப்பல் துறை நெருங்க, நெருங்க அவர்கள் இருவருடைய மனத்திலும் ஆவல் அடித்துக் கொண்டது.

அவர்களுடைய குதிரைகளுக்குப் பக்கத்திலேயே அடக்கமாகக் கடற்படை வீரர்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். –

“பிடிபட்ட கப்பலிலிருந்து யாரோ ஒர் இளம் பிள்ளை மட்டும் தப்பி விட்டதாகக் கூறுகிறீர்களே! நீங்கள் ஏன் அவ்வளவு கவனக் குறைவாக நடந்து கொண்டீர்கள்? உங்களுக்குத் தெரியாமல் அவன் எப்படித் தப்பினான்?” என்று அந்த வீரர்களிடம் கடுமையான குரலில் கேட்டார் சக்கசேனாபதி.

“அதை எங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. கப்பல் பிடிபட்ட அன்று நடுப்பகலில் அந்த இளைஞன் கீழ்த்தளத்திலுள்ள அறைக்குப் போனான். அதன் பின் அவனை நாங்கள் காணவேயில்லை. முன்குடுமிக்காரரிடமும் அந்தப் பெண்ணிடமும் விசாரித்ததில் அந்த இளைஞன். கப்பலிலிருந்து தப்பிச் சென்று விட்டான் என்றும், எப்படித் தப்பினான், எங்கே போனான் என்பது தங்களுக்குத் தெரியாதென்றும் அவர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் முடிந்த வரையில் தேடிப் பார்த்தோம். அந்த இளைஞன் அகப்படவில்லை” என்று கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் கூறினர்.

“முன் குடுமிக்காரரும், அந்தப் பெண்ணுமே, அவனை உங்களுக்குத் தெரியாமல் தப்பச் செய்துவிட்டு உங்களிடம் ஒன்றும் தெரியாதது போல் நடித்திருக்கிறார்களென்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் உங்கள் பாதுபாப்புக் குறைவுதான் காரணம்.” –

“அப்படியிருப்பதற்கில்லை, மகாசேனாபதி! ஏனென்றால் முன் குடுமிக்காரரும் அந்தப் பெண்ணும் தப்பிச் சென்ற இளைஞன்மேல் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த இளைஞனைப் பற்றித் தங்களுக்குள் வெறுப்பாகவும், கேவலமாகவும் பேசிக் கொள்கிறார்கள். அவன் அவர்களுக்கு வேண்டியவனாக இருக்கமுடியாது.”

“இவர்கள் சொல்வதைக் கேட்டால் எல்லாம் ஒரே புதிராக அல்லவா இருக்கிறது?” என்றான் அதுவரையில் குறுக்கிட்டுப் பேசாமல் அமைதியாகக் குதிரையைச் செலுத்தி வந்த குமாரபாண்டியன். –

தமனன் தோட்டம் வந்தது. எதிரே கடலும், நிறுத்தப் பட்டிருந்த அந்தக் கப்பலும், துறையும் தெரிந்தன.

“நேற்று மழையால் இந்தப் பகுதியில் ஒன்றும் அழிவு நேரவில்லையா?” என்று சக்கசேனாபதி கேட்டார்.

“பலமான காற்றும் சாரலும்தான் அடித்தன. மழை ஒன்றும் கடுமையில்லை. இங்கே கப்பலின் பாய்களையெல்லாம் இறக்கி, நங்கூரத்தை வன்மையாகக் கட்டி வைத்தோம். அதனால் ஒன்றும் அழிவு இல்லை” என்று ஊழியர்களிடமிருந்து அவருக்கு மறுமொழி கிடைத்தது.

“சக்கசேனாபதி! அதோ பாருங்கள், நான் அனுமானித்துக் கூறியபடிதான் நடந்திருக்கிறது. நாராயணன் சேந்தனும், குழல் வாய்மொழியும்தான் வந்திருக்கிறார்கள். கப்பல் மேல்தளத்தில் நிற்கிறார்கள் பாருங்கள்..” என்று வியப்போடு சுட்டிக் காட்டினான் குமாரபாண்டியன். அவர் பார்த்தார். தங்கள் இளவரசனைக் கண்ட மகிழ்ச்சியோடு முகம் மலரக் கப்பல் மேல்தளத்தில் நின்றார்கள் சேந்தனும் குழல்வாய்மொழியும். சக்கசேனாபதிக்குப் பெருத்த ஏமாற்றமாகி விட்டது. குமார பாண்டியனின் பகைவர்களால் அனுப்பப் பெற்றவர்கள் அந்தக் கப்பலில் வந்திருக்கலாமென்று எதிர்பார்த்த அவருக்கு உண்மையிலேயே வந்திருப்பவர்களைப் பார்த்தவுடன் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் உண்டாகவில்லை.

குதிரையைவிட்டு இறங்கியதும் சக்கசேனாபதியையும் முந்திக் கொண்டு குமாரபாண்டியன் ஓட்டமும் நடையுமாகக் கப்பலை நோக்கிச் சென்றான். ஆவலின் உள்ளத் துடிப்பும், கால்களின் வேகமும் போட்டியிடும் நடை அது. –

“அடடா! நான் எவ்வளவு பாக்கியசாலி.மகாமண்ட லேசுவரரின் அருமைப் புதல்வியும் அந்தரங்க ஒற்றரும் சேர்ந்து என்னைப் பார்க்கக் கடல் கடந்து வந்திருக்கிறார்களே?. வரவேண்டும்…வரவேண்டும்…’ என்று புன்னகை செய்துகொண்டே அவர்கள் முன் போய் மேல்தளத்தில் நின்றான் இராசசிம்மன்.

குழல்வாய்மொழியும் சேந்தனும் மரியாதை செய்து வரவேற்கிற பாவனையில் வணங்கினார். குழல்வாய்மொழி

பேசவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள். அவன் இடையாற்றுமங்கலத்திலிருந்து சொல்லிக்கொள்ளாமல் வந்து விட்டதற்காகத் தன் மேல் கோபம் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தான் இராசசிம்மன். அந்தப் பெண்மைத்தனமான பொய்க் கோபம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தச் சமயத்தில் சேந்தன் அருகில் வந்து கூறலானான் – குமார பாண்டியருக்கு மிக அவசரமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். இங்கேயிருக்கும் கடற்படை வீரர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் அநியாயமாக எங்களைத் தடுத்து நிறுத்தித் தாமதமாக்கிவிட்டார்கள். நாங்கள் உங்களைத் தேடி வந்த காரியம் மிக முக்கியமானது. அவசியத்தோடு கூடிய அவசரம் நிறைந்தது. மகாமண்டலேசுவரர் எங்களை அனுப்புவதற்கு முன் இந்த அவசரத்தை மிகவும் வற்புறுத்தியிருக்கிறார்.” –

சேந்தன் இராசசிம்மனிடம் இப்படிச் சொல்லிக் கொண்டி ருக்கும்போது சக்கசேனாபதியும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் நாராயணன் சேந்தன் பேச்சை நிறுத்திவிட்டான். குழல்வாய்மொழி மருண்டு நின்றாள்.

“நான் எதிரிகளின் கப்பல் ஒன்றை நினைத்து இந்தக் கட்டளை இட்டிருந்தேன். இவர்கள் விவரம் தெரியாத குறையினால் உங்கள் கப்பலைத் தடுத்து நிறுத்தி, அநாவசியமாக உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து விட்டார்கள். நீங்கள் இருவரும் தயவு செய்து மன்னிக்க வேண்டும்” என்று வந்து நின்றவுடன் சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் மன்னிப்புக் கேட்டார் அவர். மன்னிப்புக் கேட்டவருக்குக் கேட்கப்பட்ட இருவருமே பதில் எதுவும் சொல்லவில்லை.

இரண்டு மூன்று விநாடிகள் அமைதியில் கரைந்தன. “சேந்தா, மகாமண்டலேசுவரர் ஏதோ அவசரமான செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறாரென்றாயே! அதை இன்னும் நீ எனக்குச் சொல்லவே இல்லையே?’ என்று அந்த அமைதியைக் கலைத்து இராசசிம்மன் கேட்டான்.

“மன்னியுங்கள், அதை உங்களிடம் கூறுவதற்கு நீங்கள் என்னோடு இப்படிக் கொஞ்சம் தனியே வரவேண்டும்.”

சேந்தனின் இந்த சொற்களைக் கேட்டு இராசசிம்மன் சிறிது தயங்கினான். சக்கசேனாபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். ‘போய் வாருங்கள்! எனக்குப் பிறருடைய இரகசியங்களைத் தெரிந்துகொள்வதில் அக்கறை கிடையாது. நான் இங்கேயே நின்று கொண்டிருக்கிறேன்” என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

சேந்தன் குமாரபாண்டியன் பின் தொடரக் கீழ்த்தளத்துக்கு இறங்கிக் குழல்வாய்மொழியின் அறைக்குள் போனான். குழல்வாய்மொழியும், அவர்கள் இருவருக்குப் பின்னால் சென்றாள். மூன்று பேரும் கப்பல் அறை வாசலை அடைந்த போது முதலில் குமாரபாண்டியனை உள்ளே போகவிட்டு, அடுத்து வந்த குழல்வாய்மொழியை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் சேந்தன். சேந்தனின் அந்தச் செயல் இராசசிம்மனைத் திகைக்க வைத்தது. குழல்வாய்மொழிக்கு முகத்தில் அடித்தாற் போல் இருந்தது. –

“என்னுடைய அறைக்குள் நான் நுழைவதை நீங்கள் யார் தடுப்பதற்கு?”என்று சிவந்த உதடுகள் துடிக்க ஆத்திரத்தோடு சேந்தனைக் கேட்டாள் குழல்வாய்மொழி.

“இது உங்களுடைய அறைதான் என்பதில் சந்தேகமில்லை, அம்மணி! ஆனால் இப்போது நாங்கள் பேச வேண்டிய செய்தி எங்களுடையது” என்று அழுத்தமாகக் கூறிவிட்டுத் தானும் உள்ளே போய்க்கொண்டு, கதவை உட்பக்கம் தாழிட்டுக் கொண்டான் சேந்தன்.

முகத்தில் அறைந்ததுபோல் படீரென்று அடைபட்ட கதவுக்கெதிரே நின்ற குழல்வாய்மொழியின் அழகிய முகத்தில் கோபம் விளையாடியது.

நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக் கூடாது என்கிற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது என்று ஆத்திரந்தீரத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் அவள். கோபத்தில் இரண்டு கைவிரல்களையும் சேர்த்து நெரித்துச் சொடுக்கிக்கொண்டே வேகமாக மேல்தளத்துக்கு ஏறிப் போனாள் குழல்வாய்மொழி. அங்கே சக்கசேனாபதி நின்று கொண்டிருந்தார். வேறொரு பக்கமாகப் பாய்மரத்தில் சாய்ந்தபடி அவளும் போய் நின்றுகொண்டாள்.

‘அம்மா! நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உண்மையை எனக்குத் தெரிவித்துவிட்டால் நல்லது. இதே கப்பலில் உங்களோடு யாரோ ஒர் இளைஞனும் வந்தானாமே? இப்போது அவன் எங்கே தப்பி ஓடினான்? அவனாகத் தப்பி யிருந்தாலும், நீங்களாகத் தப்பவிட்டிருந்தாலும் நடந்ததை மறைக்காமல் என்னிடம் கூறிவிடுங்கள். அந்த வாலிபன் யாரென்பதையும் எனக்குச் சொல்லிவிடுங்கள்” என்று சக்கசேனாபதி குழல்வாய்மொழியிடம் கேட்டார்.

“எனக்கு ஒன்றும் தெரியாது, எல்லாம் அந்தக் குட்டை மனிதரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இப்போது அவர்தான் இங்கே சர்வாதிகாரி!” என்று எரிச்சலோடு பதில் சொன்னாள் அவள். அதே சமயத்தில் சேந்தன் பின்தொடர இராசசிம்மன் அங்கே வந்தான். அவன் முகம் இருண்டிருந்தது. “சக்கசேனாபதி! மிக அவசரமான சூழ்நிலை என்னை இப்பொழுது அழைக்கிறது. நான் உடனே இதே கப்பலில் தாய்நாடு திரும்பப் போகிறேன். காசிப மன்னர் எனக்கு வாக்களித்தபடி இன்னும் எட்டு நாட்களுக்குள் ஈழத்துப் படையோடு உங்களை எனக்கு உதவியாக அனுப்புவார்” என்று பதற்றத்தோடு கூறினான் இராசசிம்மன்.

Previous articlePandima Devi Part 3 Ch 8 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articlePandima Devi Part 3 Ch 10 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here