Home Na Parthasarathy Pandima Devi Part 3 Ch12 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch12 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

120
0
Pandima Devi Part 3 Ch 12 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Pandima Devi Part 3 Ch12 | Na. Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch12 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம், அத்தியாயம் 12 : அறிவும் வீரமும்

Pandima Devi Part 3 Ch12 | Na. Parthasarathy | TamilNovel.in

படைகளைப் போர்முனைக்கு அனுப்பச் செய்கிறவரை தன்னிடம் கோபித்துக்கொள்ளாமல் தந்திரமாக நடந்து கொண்ட மகாமண்டலேசுவரர், காரியம் முடிந்ததும், அவ்வாறு கண்டிப்பும், கடுமையும் காட்டு வாரென்று தளபதி எதிர்பார்க்கவே இல்லை. பொங்கும் சினத்தோடு அவர் வாரி இறைத்த வரம்பு கடந்த ஆத்திரச் சொற்கள் அவனது இயற்கைக் குணமான முரட்டுத் தனத்தைக் கிளர்ந்தெழச்செய்தன. பழக்கப்படாத புதுப் பாகன் பயந்து கொண்டே பெரிய மதயானையை நெருங்குகிற மாதிரித் தயங்கும் மனத்தோடும், தயங்காமல் சிவந்து சினம் கனலும் கண்களோடும் மகாமண்டலேசுவரரைப் பார்த்தான் தளபதி. அந்தப் பார்வையைப் பொறுக்காமல் சீறினார் மகாமண்டலேசுவரர்.

“அப்படிப் பார்க்காதே, நீ உன் கோபம் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. இன்று கன்னியாகுமரியிலிருந்து நீ இடையாற்றுமங்கலத்துக்கு என்னைத் தேடிக்கொண்டு வந்த இரவிலிருந்து இந்த விநாடி வரை ஒவ்வொன்றாக எத்தனைத் தவறுகள் புரிந்திருக்கிறாய் என்று எண்ணிக்கொண்டே வந்திருக்கிறேன் நான். ஒழுக்கத்தையும், பண்பையும் போற்றி ஆளத்தெரியாத நீ படைகளை ஆளத் தகுதியற்றவன்.”

“நிறுத்துங்கள், மகாமண்டலேசுவரர் என்ற பதவிக்கும் அறிவுக்கும் என் நெஞ்சம் செலுத்திவந்த மரியாதையை நான் விடவேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. இந்தக்கணம் முதல் அந்த மகாமேதையை நான் ஒரு சாதாரண எதிரியாகப் பாவிக்க வேண்டியதுதான். நான் சாதாரண எதிரியாகப் பாவிக்கத்தக்க மனித உணர்ச்சிக்கு அவரும் ஆளாகிவிட்டார்” என்று தளபதி அவர் முகத்தைத் துணிவுடன் நிமிர்ந்து பார்த்துக்கொண்டே கூறினான். அவன் வார்த்தைகள் அவருடைய கோபத்தை மேலும் துண்டிவிட்டன.

“முட்டாள்களின் மரியாதையை அறிவாளிகள் எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை, தளபதி ! என்னை எதிரியாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நீ பெரியவன் என்பதைக் கூட நான் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. ஓர் இரகசியத்தை நீ இந்தச் சமயத்தில் என்னிடமிருந்து தெரிந்துகொள். அறிவின் துனி மிகவும் கூர்மையானது. நன்றாகத் தீட்டப் பட்ட கத்தியை போல் சந்தர்ப்பமும் வீசும் இலக்கும் கிடைத்தால் அதற்கு எதையும் குத்தி அழிக்க வலிமை உண்டு. சந்தர்ப்பமும் இலக்கும் தவறிவிட்டால் கை தவறி விழுந்து தானே கூரழியும் கத்தியைப்போல் தன்னையே அழித்துக் கொள்ள வேண்டியதுதான்.” –

தளபதியின் முகத்தில் கோபவெறி கூத்தாடியது. கைகள் எதற்காகவோ துடித்தன. முகம் முழுவதும் கருணைக் கலப்பற்ற கொடுமை மறம் வந்து குடிகொண்டிருந்தது. அவன் வெறியனாக மாறினான். –

“மகாமண்டலேசுவரரே! எனக்கு அறிவின் வலிமையைப் பற்றிய இரகசியம் தெரியவேண்டியதே இல்லை. ஆனால்

வீரத்தின் இரகசியம் இதுதான் என்பதை இப்போதே உங்களுக்குத் தெரிவிக்கிறேன். தான் அழிவதாயிருப்பினும் அப்படி அழியுமுன் தன் எதிரியை முதலில் அழித்துத் தீர்ப்பதுதான் வீரத்தின் வலிமை” என்று கூறிக்கொண்டே குபிரென்று வாளை உருவிக்கொண்டு அவர்மேல் பாய்ந்தான்.

அவன் நினைத்ததுபோல் அவர் பயந்து ஓடவோ, திடுக்கிட்டுச் கூச்சலிடவோ இல்லை. அவன் அப்படிச் செய்வான் என்பதை முன்பே எதிர்பார்த்தவர்போல் அசையாமல் நின்றார். அளப்பரிய ஆற்றல் நிறைந்த தம் கண்களை இமைக்காமல் குத்துவதற்கு வாளை ஓங்கிக்கொண்டு வரும் அவனையே பார்த்தார். சலனமும் அசைவுமற்ற சிலையாகிவிட்டாரா அவர்? பின்னால் கட்டிக் கொண்ட கைகளை எடுக்காமல் மார்பை நிமிர்த்திக்கொண்டு நின்ற அந்தத் தோற்றத்தை நெருங்கி நெஞ்சுக்குக் குறிவைத்து வாளை ஓங்கியபோது தளபதியின் கை வெடவெடவென்று நடுங்கியது. மனமும் நடுங்கியது. கால்களும் நடுங்கின. நேர்கொண்டு பார்க்கும் அந்தக் கண்கள் இரண்டும் கணத்துக்குக் கணம் பெரியதாய்ப் பிரம்மாண்டமாய் அகன்று விரிந்து தன்மேற் கவிந்து தன்னை அமுக்குவதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு.

அந்தப் பிரமை ஏற்பட்ட அடுத்த விநாடி அவன் முகம் வெளிறியது. கண்கள் மருண்டன. உடல் நடுங்கி ஒய்ந்தது. கையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்தது. ஏதோ ஒரு பயம்-காரணமற்ற பயம் அவனைத் தடுத்தது. ஒவ்வோர் அடியாக நகர்ந்து பின்வாங்கினான் அவன். என்ன செய்கிறோம் என்ற உணர்வேயின்றிப் பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் என்ற அகண்டமான தோற்றம் அப்படியே நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. . . .

‘தளபதி ! ஏன் தயங்குகிறாய்? எதற்காக்ப் பின் வாங்குகிறாய்? என்னை அழித்து விடுவதற்கு இதைப்போல தனிமையான சந்தர்ப்பம் இனி வேறு எப்போது உனக்கு வசதியாகக் கிடைக்கப்போகிறது? இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்” என்று மகாமண்டலே

சுவரர் வாய் திறந்து சொன்னபோது தளபதி அவருக்கு அருகிலேயே இல்லை. சிறிது தொலைவு தள்ளி ஒதுங்கிப் பயந்து நிற்பவன் போல் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் வியர்வை அரும்பி வழிந்தது. உடலில் ஏற்பட்டிருந்த நடுக்கம் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. தெரியாமல் பாம்புப் புற்றை மிதித்துவிட்டு இடறி விழுந்தவன் பயத்தோடு எழுந்து நிற்கிற மாதிரி நின்றான் வல்லாளதேவன்.

வானத்துக்கும் பூமிக்குமாக, நிறுத்தி வைத்த சிலைபோல் அசையாமல் நின்றுகொண்டிருந்த மகாமண்டலேசுவரர் மெல்லக் கீழே குனிந்தார். நழுவி விழுந்து கிடந்த தளபதியின் வாளைக் கையில் எடுத்துக்கொண்டார். நிதானமாக அடியெடுத்து வைத்து நடந்தார். அவனை அணுகினார். ஒருவர் மூச்சுக் காற்றை மற்றொருவர் உணர முடிந்த அளவுக்கு நெருங்கி நின்று கொண்டார்.

“இந்தா, உன்னுடைய வாள்! இப்போது என் நெஞ்சுக் குழி உன் கைக்கு மிக அருகில் இருக்கிறது. பாய்வதற்கும், வாளை ஓங்குவதற்கும் வேண்டிய சிரமத்தைக்கூட உனக்கு நான் அளிக்கச் சித்தமாயில்லை. என்னை இந்த வாளால் கொன்றுவிடு. நான் அழிந்து போக வேண்டிய காலம் வந்து விட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில் நான் அழிவது உன்னைப் போலவே இன்னும் பல பேருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கழற்கால் மாறனாரும், அவரோடு சேர்ந்த கூற்றத் தலைவர்களும் என்னை இவ்வளவு சுலபமாகக் கொன்றதற்காக உன்னைப் பாராட்டுவார்கள். படையெடுத்து வந்திருக்கும் பகையரசர்கள் பெருமை கொள்வார்கள். என்னுடைய அறிவின் கூர்மைக்குப் பயந்து தங்களுடைய எண்ணற்ற பேராசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தெரியாமல் தயங்கிக் கொண்டிருக்கும் எத்தனை பேருக்குத் திருப்தியளிக்கும் தெரியுமா, இந்தக் கொலை?” அவருடைய சொற்களின் வேகத்தையும், கண்களின் கூர்மையான பார்வையையும் மிக அருகில் தாங்கிக்கொள்ள முடியாமல் தலை குனிந்தான் தளபதி. … “

“இவ்வளவுதானா உன் துணிவு! நீ உண்மை வீரன் இல்லை!

உணர்ச்சியால் முரடன்! மனத்தால் கோழை! என்னை

எதிரியாகக் கொள்வதற்கேற்ற தகுதியும், பெருமையும் கூட உனக்குக் கிடையாது. நீ சாமான்யமானவன்” என்று ஏளனமாகச் சொல்லிக் கொண்டே, கையிலிருந்த வாளை அலட்சியத்தோடு சுழற்றி மூலையில் வீசியெறிந்துவிட்டார் மகாமண்டலேசுவரர். வல்லாளதேவன் தலை நிமிரவே இல்லை.

“உன் உணர்ச்சிகளை என் சாமர்த்தியத்தினால் கிளறி வேடிக்கை பார்க்க விரும்பவில்லை நான். ஆயிரக்கணக்கான வீரர்களின் மதிப்புக்குரிய படைத்தலைவனே! நீ உண்மை குற்றவாளி. நான் உன்மேல் கொண்ட ஆத்திரம் நியாயமானது. நீ பதிலுக்கு என்மேல் ஆத்திரப்படுகிறாயே, அது தான் நியாயமற்றது. என்மேல் அவ்வப்போது உனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் உன்னை என்னென்னவோ செய்யத் துரண்டியிருக்கின்றன. அறியாமையால் தாயின் ஒழுக்கத்தைப் பற்றியே சந்தேகப்படும் பேதைப் புதல்வனைப் போல நீ என்னைச் சந்தேகத்தோடு நோக்கி வந்திருக்கிறாய். உன்னுடைய சந்தேகங்களை இதுவரை மன்னித்து வந்திருக்கிறேன். நீ கடைசியாகச் செய்த தவறு, குமாரபாண்டியனைக் காண்பதற்காக உன் தங்கையை இரகசியமாக ஈழ நாட்டுக்கு அனுப்பியது. இவையெல்லாம் எனக்குத் தெரியாதென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். முகத்தின் கண்களால் முதுகுக்குப் பின் நடப்பதையும் உணர எனக்குத் தெரியும்.”

“எல்லாம் தெரிந்த உங்களுக்கு நீங்களே செய்கிற சில தவறுகள் மட்டும் ஏன் தெரியவில்லையோ? நேற்றுவரை தென்பாண்டி நாட்டின் படைகளைக் கட்டிக்காத்து அணி வகுத்தவன் நான். போருக்குப் பயிற்சி கொடுத்தவன் நான். இப்போது திடீரென்று படைகளை முன்னால் அனுப்பிவிட்டு என்னைத் தனியே நிறுத்தி அவமானப் படுத்துகிறீர்கள். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்கிறீர்கள். குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூறவேண்டும் என்கிறீர்கள். விசாரித்துத் தீர்ப்புக் கூறுமளவிற்கு நான் என்ன தப்புச் செய்திருக்கிறேனென்று எனக்கே தெரியவில்லை.” தலை குனிந்து நின்ற தளபதி வல்லாளதேவன் சற்றே நிமிர்ந்து அவரைக் கேட்டான். நா. பார்த்தசாரதி 549

“தெரியவில்லையா? நீ செய்தவற்றில் எது ஒழுங்கு எது தவறு என்று உனக்கே பகுத்துணர முடிந்தால்தானே உன் குற்றங்களை நீ தெரிந்துகொள்ள முடியும்! முதன்முதலாக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்திலிருந்து ஓடி வந்தாயே, அந்த இரவிலிருந்தே உன் தவறுகள் ஆரம்பமாகிவிட்டன. அரண்மனையில் உளவறிவதற்கு ஆபத்துதவிகள் தலைவனை உன் கையாளாகப் பயன்படுத்தினாய். இடையாற்று மங்கலத்தில் என் மாளிகையிலிருந்து இரவோடு இரவாக ஆயுதங்களைத் திருட ஏற்பாடு செய்தாய்! குமாரபாண்டியரை அழைத்துவர நான் ஒருவன் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதை நம்பாமல் நீ உன் தங்கையை அனுப்பினாய்.”

“இதே வகையில் எனக்குத் தாங்களும் சில தவறுகளையும் குற்றங்களையும் செய்திருக்கிறீர்களென்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

“செய்திருக்கலாம் மறுக்கவில்லை. எனக்குப் பொறுப்புகள் அதிகம். என் நிர்வாகம் பெரியது. நான் உன்மேல் சந்தேகப்பட்டு உன்னைச் சோதனை செய்திருந்தால் அது நியாயமானது. படைகளைத் தவிர வேறெந்தப் பொறுப்பையும் பற்றிக் கவலைப்பட வேண்டாத நீ, அநாவசியமான கவலைகளை உண்டாக்கிக்கொண்டு இப்படியெல்லாம் செய்தது மன்னிக்க முடியாத தவறு.” . .

“நான் நினைத்தால் இன்னும் ஒரு பெரிய தவற்றையும் செய்ய முடியும். இப்போதே ஒடிப்போய் என் அதிகாரத்துக்கு அடங்கிய அத்தனை படைகளையும் போர் முனைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். மகாமண்டலேசுவரர் அப்போது என்னைக் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.” “கனவிலும் அப்படி நினைக்காதே, தளபதி ! உன்னால் அதைச் செய்ய முடியாது. நீ இப்போது என் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நிற்கும் சாதாரணக் குற்றவாளி. அகந்தையினால் உன் நிலையைப் புரிந்துகொள்ளாமல் பேசாதே!”

“முடிகிறதா, இல்லையா என்றுதான் பாருங்களேன்” எனத் தன்மானத்தோடு சொல்லிவிட்டு வெளியேறினான் அவன்.

பின்னால் அவர் சிரிக்கும் ஒலி அவனுடைய செவிக்கு எட்டியது. மகாமண்டலேசுவரரிடம் வீறாப்பாகப் பேசி வெளியே வந்த அவன், மேலே நகரமுடியாமல் அப்படியே திகைத்துப்போய் நின்றான். வெளியே அந்த இடத்தைச் சுற்றிலும் இடையாற்றுமங்கலத்து யவனக் காவல் வீரர்கள் உருவிய வாளுடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் தளபதி, மகாமண்டலேசுவரரின் முன்னேற்பாடு அவனுக்குப் புரிந்தது. எப்போது, எப்படி அந்த வீரர்களை அங்கே வரவழைத்துக் காவல் போட்டாரென்று அநுமானிக்கவே முடியாதபடி அவ்வளவு சாதுரியமாகச் செய்திருந்தார்.

“ஓகோ! புரிகிறது.” என்று கடுமையாகக் கூறிக் கொண்டே பின்னால் சிரித்தவாறு நின்ற மகாமண்டலேசுவரரைத் திரும்பிப் பார்த்தான் அவன். – – –

“வேறொன்றுமில்லை; தளபதி ! உன் அதிகாரத்துக் குட்பட்ட படைக் கோட்டத்திலேயே உன்னைச் சிறைவைத்துப் பார்க்கவேண்டுமென்று எனக்கு ஆசை. அதை நிறைவேற்றிக் கொண்டேன்” என்றார் அவர்.

“இது கேவலமான சூழ்ச்சி!” – “இருக்கட்டுமே. அப்படியே பார்த்தாலும், நீ செய்த காரியங்களைவிடக் கேவலமானதில்லை இது. குமார பாண்டியர் வருகிற நாளாயிற்று. நான் விழிஞத்தில் போய் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டும். அவர் வந்ததும் இங்கே அழைத்துவருகிறேன். அது வரையில் உன் நிலை இதுதான்” என்று சிறிதும் இரக்கமின்றிச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் மகாமண்டலேசுவரர். கூண்டிலடைப்பட்ட புலிபோல் வெகுண்டு நின்றான் தளபதி வல்லாளதேவன். போர்க்களத்தில் படைகளை ஆண்டு போர்புரிய வேண்டிய நல்ல சமயத்தில் அநாதையைப்போல் தனியே நிறுத்திக் காவலில் வைக்கப்பட்ட சூழ்ச்சியை எண்ணிக் குமுறினான் அவன்.

மகாமண்டலேசுவரரோ தளபதி என்ற வீரப் புலியைச் சாமர்த்தியமாகச் சிறைப்படுத்திவிட்ட பெருமிதத்தோடு மகாராணியைச் சந்திப்பதற்காக அரண்மனைக்குச் சென்றார்.

நாடு முழுவதும் வெள்ளுரில் நடந்து கொண்டிருக்கும் போரின் முடிவு என்ன ஆகுமோ என்ற பயமும், கலவரமும் நிலவிக்கொண்டிருந்தன. நாட்டின் வடக்கு எல்லையில் மாபெரும் போர் நடந்துகொண்டிருப்பதன் அறிகுறியாக அங்கங்கே வளமிகுந்த நாஞ்சில் நாட்டு ஊர்கள் களையிழந்து கலகலப்புக் குன்றிக் காணப்பட்டன. பண்டங்கள் விலையேறி விட்டன. எங்கிருந்தாலும் இந்தப் போர்க் காலத்தில் குமார பாண்டியர் திரும்பி வந்துவிடுவாரென்ற நம்பிக்கை நாட்டு மக்கள் எல்லோருக்கும் இருந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான் கழற்கால் மாறனார் முதலிய கூற்றத் தலைவர்கள் மகாமண்டலேசுவரரைப் பற்றிய தீய செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். – – –

எல்லாக் குழப்பங்களுக்கும் மனத்தை ஈடுகொடுக்க முடியாமல் அரண்மனை அந்தப்புரமே கதியென்று கிடந்தார் மகாராணி. கருணையும் அன்பும் நிறைந்து சாந்தம் தளும்பும் அவருடைய மனத்துக்கு மகாமண்டலேசுவரருக்கு இருந்தது போல் துன்பங்களை விழுங்கிவிட்டு நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் இல்லை. உணர்ச்சிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்து விடும் மெல்லிய பெண் மனம் அவருடையது. குமாரபாண்டியனை அழைத்துவர ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் தாங்கள் அவரைக் காணலாம் என்று மகாமண்டலேசுவரர் கூறிய சில வார்த்தைகள்தாம் மகாராணியின் உயிரைத் தாங்கிக் கொண்டிருந்தன. அதுவும் அன்று மாலை கோட்டாற்றுப் பண்டிதர் வந்து சென்றபின் மறுநாள் காலை துண்ட்ா மணிவிளக்கு அணைந்ததிலிருந்து மகாராணியின் மனம் நிம்மதியாகவே இல்லை. ஊமைக் குழப்பங்கள் மனத்தைச் செல்லரித்தன. குமாரபாண்டியனின் கப்பல் வந்ததும், தகவல் சொல்லி அனுப்புமாறு விழிஞத்தில் ஆள் நிறுத்தியிருந்தாலும் மகாராணியின் மனத்துக்கு உற்சாகமூட்டுவதற்காகத் தாமே அவரையும் அழைத்துக்கொண்டு விழிஞத்துக்குச் செல்லலாம் என்று மகாமண்டலேசுவரர் நினைத்தார். அதனால் தான் யாரும் அறியாமல் தளபதியைச் சிறைப்படுத்தி விட்டுத் தாம் மட்டும் அரண்மனைக்குப் புறப்பட்டார் அவர்.

மகாமண்டலேசுவரர் அரண்மனைக்கு வந்து சேர்ந்த போது, காந்தளூர் மணியம்பலத்திலிருந்து பவழக்கனிவாயர் அதங்கோட்டாசிரியர், விலாசினி ஆகியோர் ஏற்கெனவே அங்கு வந்திருப்பதைக் கண்டார். அவர்கள் எப்போது எதற்காக வந்தார்கள் என்று புவனமோகினியிடம் விசாரித்தார். மகாராணியே ஆள் அனுப்பி அவர்களை வரவழைத் திருப்பதாகப் புவனமோகினி தெரிவித்தாள். பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர் ஆகியோருக்கும் மகாமண்டலேசுவரருக்கும் எப்போதுமே அவ்வளவு சுமுகமான உறவு இல்லை. காய்ந்த மண் பிண்டத்தோடு மற்றொரு காய்ந்த மண் பிண்டம் ஒட்டாத மாதிரி முற்றிய அறிவுக்கும் முதிர்ந்த அறிவுக்கும் இடையேயுள்ள பொறாமை அவர்களுக்குள் வெளியே தெரியாமல் இருந்துவந்தது. சந்திக்கும்போதோ, பழக நேரும்போதோ, அதைக் காட்டிக் கொள்ளாமல் நாகரிகமாக நடந்து கொண்டுவிடுவார்கள். ஒருவர் காரியத்தில் மற்றொருவர் அநாவசியமாகத் தலையிடமாட்டார்கள். காந்தளூர் மணியம்பல நிர்வாகத்தில் மகாமண்டலேசுவரரோ, மகாமண்டலேசுவரருடைய நிர்வாகத்தில் அவர்களோ குறுக்கிடாமல் கண்ணியமாக நடந்து கொண்டு விடுவது வழக்கம்.

அன்றைக்கு அந்தச் சூழ்நிலையில் அவர்களை அங்கே எதிர்பார்க்கவில்லை அவர். சந்தித்தபோது வெறுப்பதாகக் காட்டிக் கொள்ளவும் இல்லை. மகாராணியைச் சந்தித்துப் போர்க்கள நிலைமையையும் படை ஏற்பாடுகளையும் கூறி விட்டு, விழிளுத்துக்குப் போகலாம் என்பதையும் தெரிவித்தார். தளபதியைத் தடுத்து நிறுத்திக் காவல் வைத்ததை மட்டும் சொல்லவில்லை.

“ஆகா! இது என் வாழ்க்கையிலேயே நல்ல நாள். குமார பாண்டியனை வரவேற்க நாம் எல்லோருமே விழிஞத்துக்குப் போகலாம். விழிஞத்தில் என் மகனை நான் சந்திக்கா விட்டால், அவன் நேரே போர்க்களத்துக்குப் போனாலும் போய் விடுவான். அப்புறம் போர் முடிகிறவரை எனக்கு அவனைச் சந்திக்க அவகாசமே இராது. கப்பல் எப்போது வந்தாலென்ன? இன்றே விழிஞத்தில் போய்க் காத்திருப்போம்” என்று மகாராணி மற்றவர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார். அவர்கள் உடன் வரவேண்டாம் என்று எண்ணியும் மகாமண்டலேசுவரரால் அதைத் தடுக்க முடியவில்லை.

Previous articlePandima Devi Part 3 Ch 11 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articlePandima Devi Part 3 Ch13 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here