Home Na Parthasarathy Pandima Devi Part 3 Ch4 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch4 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

112
0
Pandima Devi Part 3 Ch4 Pandima Devi Na. Parthasarathy, Read Pandima Devi Online Free, Pandima Devi PDF, Download Pandima Devi novel, Pandima Devi book
Pandima Devi Part 3 Ch4 | Na. Parthasarathy | TamilNovel.in

Pandima Devi Part 3 Ch4 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

பாண்டிமாதேவி – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம், அத்தியாயம் 4 : கப்பல் கைப்பற்றப்பட்டது

Pandima Devi Part 3 Ch4 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

செம்பவழத் தீவில் மதிவதனி என்ற பெண்ணிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட பின்பு சேந்தனும், குழல்வாய்

மொழியும் அந்தப் பெண் தங்களிடம் கூறிய ஒரு முக்கியமான செய்தியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். கூத்தன் ஒன்றும் பேசாவிட்டாலும், அவர்கள் இருவரும் பேசுவதை யெல்லாம் அருகிலிருந்து உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அம்மணி! அந்தப் பெண் மதிவதனி கூறுவதைக் கேட்டதிலிருந்து எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. ஒரு இளைஞர் இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் கொடுத்துச் சங்கு வாங்கிக் கொண்டு சென்றதாக அவள் குறிப்பிட்டாள் அல்லவா, அப்படி வாங்கிச் சென்றவர் நம்முடைய இளவரசராக இருக்கலாமென்று நான் நினைக்கிறேன். குமார பாண்டியருக்கு அப்படி ஒரு பண்பு உண்டு. அழகுணர்ச்சியும் கலைநுணுக்கமும் அவருக்கு அதிகம். ஒரு பொருள் அவருடைய மனத்துக்குப் பிடித்துவிட்டதானால் அதன் விலை மதிப்பை எவ்வளவு உயர்வாக்கவும் அவர் தயாராகி விடுவார்!” என்று கப்பலில் போய்க்கொண்டிருக்கும்போது குழல்வாய்மொழியிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் சேந்தன்.

“நீங்கள் சொல்வது போலவே எனக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்த இளைஞர் எப்படி இருப்பாரென்று நீங்களும் நானும் அடையாளம் கேட்க ஆரம்பித்த உடனேயே அந்தப் பெண் வாயை மூடிக்கொண்டுபோய் விட்டாளே!”

“அவள் சாமர்த்தியக்காரப் பெண் அம்மணி! பிறருடைய வாயிலிருந்து இரகசியங்களை அறிந்து கொண்டு வருகிற திறமை எனக்கு அதிகம் என்று தங்கள் தந்தையாரிடம் நல்ல பெயர் வாங்கிய என்னையே ஏமாற்றிவிட்டாளே அந்தப் பெண்” என்று சேந்தன் கூறியபோது பக்கத்தில் அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்த கூத்தன் சிரித்து விட்டான். –

“ஐயா! சாமர்த்தியசாலிகள், அறிவாளிகள் எல்லோரும் அனேகமாகப் பெண்பிள்ளைகளுக்கு முன்னால் ஏமாந்து போகிறவர்களாகத்தான் இருப்பார்கள்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு சேந்தன் அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு வருவதை எதிர்பார்க்கிறவனைப் போலப் பயந்து ஒதுங்கினான் அவன். uir. G5-38

“பொட்டைப் பயலே! வரவர உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. நாக்குத் துளிர்த்துவிட்டது. மட்டு மரியாதை இல்லாமலா பேசுகிறாய்?” என்று சேந்தன் கூப்பாடு போட்டான். “கூத்தா! நாங்கள் முக்கியமான செய்தி ஒன்றைப் பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். சமயம் தெரியாமல் நீ ஏதாவது குறுக்கிட்டுப்பேசி நேரத்தை வீணாக்காதே’ என்று குழல்வாய்மொழி கூத்தனைக் கடிந்துகொண்டாள். கூத்தன் அடங்கி நின்றான். அவளுடைய பேச்சு மேலே தொடர்ந்தது. சேந்தன் மிக மிக அந்தரங்கமானவற்றையெல்லாம் மகாமண்டலேசுவரரின் புதல்வியிடம் விவரிக்கலானான்.

“அம்மணி! விரைவாகவும், திட்டமிட்டுக் கொண்டும் செய்யவேண்டிய செயல்கள் இனிமேல்தான் நம்மை நெருங்குகின்றன. விழிளுத்துக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள தொலைவில் ஏறக்குறையச் சரிபாதிக்குமேல் கடந்து விட்டோம். மகாமண்டலேசுவரரும், மகாராணியாரும் ஒவ்வொரு நாளும் நாம் குமாரபாண்டியரை அழைத்துக் கொண்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இளவரசரை அழைத்து வருவதற்காக நாம்தான் அனுப்பப் பட்டிருக்கிறோம் என்ற விவரம் மகாராணியாருக்குத் தெரியாது. ஆனால் இளவரசரை அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பது தம் பொறுப்பென்று உங்கள் தந்தை மகாராணியாருக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். இன்னொரு பரம இரகசியமான செய்தியையும் இப்போது நான் உங்களிடம் சொல்லப்போகிறேன். உங்கள் தந்தைக்கு இப்போது மறைமுகமான எதிரிகள் அதிகமாகி இருக்கிறார்கள். தளபதி வல்லாளதேவனுக்குக் காரணம் கூறமுடியாத ஒருவகை வெறுப்பு உங்கள் தந்தைமேல் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் தந்தையின் ஒவ்வொரு ஏற்பாடுகளையும் மறைமுகமாகத் தகர்த்து அவமானப்படுத்துவதற்குத் தளபதி முயற்சி செய்கிறான். இந்த முயற்சியில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனின் ஒத்துழைப்பும் மிக இரகசியமாகத் தளபதிக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அரண்மனையில் நடந்த கூட்டத்துக்குப் பின்பு கூற்றத் தலைவர்களும் உங்கள் தந்தை மேல் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். வேறொரு வராயிருந்தால் இவ்வளவு எதிர்ப்புக்களைத் தாங்கிக் கொண்டு

இருக்கவே இயலாது, அம்மணி! என் மதிப்பிற்குரியவரும், உங்கள் தந்தையுமாகிய மகாமண்டலேசுவரரைப் பற்றி நினைக்கும்போது நான் கேள்விப்பட்டிருக்கும் விநோதமான பறவையைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகிறது. மேலைக் கடலின் தீவுகளில் நெடுந்துாரத்துக்கு அப்பாலுள்ள தேசங்களில் நெருப்புக் கோழி என்ற பெயரில் விந்தையானதொரு தீப்பறவை இருக்கிறதாம். அது கங்குகங்காக நெருப்புத் துண்டுகளை விழுங்கினாலொழிய அதற்கு வயிறு நிறையாதாம். அந்தத் தீப்பறவையைப் போல் வெம்மையும் கொடுமையும் நிறைந்த எதிர்ப்புகளையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டுப் பசியாறி வளர்ந்து கொண்டிருக்கிறார். மகாமண்டலேசுவரர். உங்கள் தந்தை நம்மை இலங்கைக்கு அனுப்புகிற விவரம் தெரிந்திருந்தால், தளபதி அதைத் தடுக்கவும் ஏதாவது சூழ்ச்சி செய்திருப்பான். அரண்மனையில் நடக்கிற எந்த அந்தரங்கமான செய்தியும் தன் காதுக்கு எட்டச் செய்து கொள்கிற அளவுக்கு வசதியுள்ளவன் தளபதி” –

“அது எந்த வசதியோ?” என்று குழல்வாய்மொழி இடைமறித்துக் கேட்டாள். –

“உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மணி! தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள்; எமகாதகப் பெண் பிள்ளை அவள். மகாராணிக்குத் துணையாக அரண்மனையில் தங்கியிருக்கிறேன்’ என்று பேர் செய்துகொண்டு, அரண்மனையில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் உளவறிந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்” “பகவதிதானே? அந்தப் பெண்ணை நான் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். அவள் இப்போது அவ்வளவு சாமர்த்தியக் காரியாகிவிட்டாளா?” என்று குழல்வாய்மொழி நாராயணன் சேந்தனைக் கேட்டபோது கூத்தன் அச் என்று இரைந்து ஒரு தும்மல் தும்மினான். சேந்தனும் குழல்வாய்மொழியும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு கூத்தனை ஒருகணம் கூர்ந்து நோக்கினார்கள். கூத்தன் உடனே வேறு எங்கோ கவனிப்பது போல் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். சேந்தன் குழல்வாய்மொழியின் காதருகே நெருங்கி, “அம்மணி! ஊர் பேர் தெரியாத இந்தப் பயலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நாம்

இருவரும் எதையெதையோ ஒளிவு மறைவின்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். எனக்கு என்னவோ தொடக்கத்திலிருந்தே இவன் மேல் நம்பிக்கையில்லை” என்று மெல்லச் சொன்னான். “கூத்தா! இப்போது இங்கே உனக்கு ஒரு காரியமும் இல்லை. நீ மேல் தளத்தில் போய் இரு உன் உதவி எதற்காவது தேவையானால் நான் உன்னைக் கூப்பிடுகிறேன்” என்று குழல் வாய்மொழி அவனுக்குக் கட்டளையிட்டாள். கூத்தன் அந்த இடத்திலிருந்து மேல் தளத்துக்குப் போக மனமில்லாதவனைப் போல் தயங்கித் தயங்கி நடந்து படியேறிச் சென்றான்.

“அம்மணி! இந்தப் பிள்ளையாண்டானால் நமக்குக் கெடுதல்கள்தான் வருமே ஒழிய நன்மையில்லை என்று என் மனத்தில் ஏதோ குறளி சொல்கிறது. நம்மை ஏமாற்றக் கூடிய மர்மமான அம்சம் ஏதோ ஒன்று இவனிடம் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஒரு வார்த்தை சரி என்று சொல்லி விட்டால் நாளைக்கே நடுவழியில் ஏதாவது ஒரு தீவில் இவனை இறக்கி விட்டுவிடுவேன். இவன் நம்மோடு இலங்கை வரை வந்து இறங்குவதில் எனக்குச் சம்மதமே இல்லை. நாம் போகிற காரியத்தின் இரகசியம் இவனால் வெளியாகவும் கூடும்” என்று சேந்தன் சொன்னபோது அதற்கு இணங்கி விடலாமா, வேண்டாமா என்று குழல்வாய்மொழி மனப் போராட்டத்துக் கிடமானாள். அந்தச் சமயத்தில் மேல் தளத்துக்கு ஏறுகிற படியின் திருப்பத்தில் அடக்கிக் கொள்ள முடியாமல் யாரோ தும்முகிற ஒலி கேட்க சேந்தன் விரைவாக நடந்து போய்ப் பார்த்தான். கூத்தன் அந்த இடத்திலேயே திருப்பத்தின் முதல் படியில் நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சேந்தனுக்குக் கோபம் அளவின்றிப் பொங்கியது.

“பொட்டைப் பயலே ! ஒட்டுக் கேட்டுக்கொண்டா நிற்கிறாய் இங்கே?’ என்று அவன் இரையத் தொடங்கிய போது, தடதடவென்று படியேறி மேலே ஓடினான் கூத்தன். இந்த திகழ்ச்சியைப் பார்த்ததும் குழல்வாய்மொழிக்குக்கூட மனம் மாறிவிட்டது. அந்தப் பிள்ளையின்மேல் அவளுக்கு உண்டாகியிருந்த சிறிது நல்ல எண்ணமும் போய்விட்டது.

“உங்கள் விருப்பம் போலவே கப்பலிலிருந்து இறக்கி விட்டுவிடுங்கள். ஆனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அந்த

வாலிபன் விழித்திருக்கும்போது கீழே இறக்கிவிட நேர்ந்தால் அவனுடைய எதிர்ப்பையும் கலகம் முதலிய வம்புகளையும் சமாளிக்கவேண்டியிருக்கும். அதனால் இரவில் அவன் துரங்கிக் கொண்டிருக்கும்போது காதும் காதும் வைத்தாற்போல் நம் ஆட்களிடம் சொல்லிப் படுக்கையோடு அப்படியே தூக்கி ஏதாவது ஒரு தீவில் வைத்துவிட ஏற்பாடு செய்யுங்கள்” என்றாள் குழல்வாய்மொழி. அன்றிரவே அதைச் செய்து விடுவதாக மகாமண்டலேசுவரரின் புதல்வியிடம் ஒப்புக்கொண்டான் சேந்தன். ஆனால் அன்றிரவு சேந்தனின் சூழ்ச்சி பலிக்காதபடி கூத்தன் தப்பித்துக்கொண்டான். கீழ்த்தளத்திலிருந்த குழல்வாய்மொழியின் அலங்கார அறைக்குள் படுத்துக்கொண்டு கதவையும் உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுவிட்டான், அவன். குழல்வாய்மொழி முன்னதாகவே படுத்துத் துரங்கிவிட்டதால் அவளுக்கு இதொன்றும் தெரியாது. அறைக் கதவை இடித்துக் கூத்தனை வெளியேற்ற முயன்றால் குழல்வாய்மொழியின் தூக்கம் கெட்டுவிடுமோ என்பதற்காகச் சேந்தன் அன்றிரவு அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டான். மறுநாள் காலை கப்பல் இலங்கைக் கரையை நெருங்கிக் கொண்டிருந்த போது சேந்தன், குழல்வாய்மொழி, கூத்தன், யாருமே எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது. கப்பல் மீகாமன் குய்யோ முறையோ, வென்று அலறிக்கொண்டு கீழ்த்தளத்துக்கு ஓடிவந்தான். சேந்தன், குழல்வாய்மொழி, கூத்தன் மூன்று பேரும் அங்கே இருந்தனர்.

“ஐயோ! கப்பலைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். இந்த அநியாயத்தை வந்து பாருங்கள்’ என்று மீகாமன் முறையிட்டான். பேச்சு சுவாரசியத்தில ஈடுபட்டுப் போயிருந்த அந்த மூவரும் அப்போதுதான் கப்பல் நின்று போயிருப்பதைக் கவனித்து உணர்ந்தார்கள். உடனே மாலுமியைப் பின் தொடர்ந்து குழல்வாய்மொழி உள்பட மூன்று பேரும் மேல் தளத்துக்கு ஏறி ஓடினார்கள். –

அந்தக் கப்பலைச் சுற்றிலும் ஐந்தாறு படகுகள் வழியை மறைப்பது போல வளைத்துக்கொண்டு நின்றன. அந்தப் படகுகளில் ஆயுதபாணிகளாக முரட்டு வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றத்திலிருந்தும், அந்தப்

படகுகளில் கட்டியிருந்த சிறுசிறு கொடிகளிலிருந்தும் அந்த வீரர்கள் ஈழநாட்டுக் கடற்படையைச் சேர்ந்தவர்களென்று நாராயணன் சேந்தன் நிதானித்துப் புரிந்து கொண்டான்.

“அம்மணி! ஏதோ சில காரணங்களுக்காகக் கப்பல்களைச் சோதனை செய்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களெல்லாம் ஈழநாட்டுக் கடற்படை வீரர்கள்” என்று பீதிகலந்த குரலில் குழல்வாய்மொழியிடம் சொன்னான் சேந்தன். குழல்வாய்மொழி கூத்தனை விசாரிக்கத் தொடங்கிவிட்டாள். “கூத்தா! ஈழ நாட்டு நடைமுறைகளும், கடற்பயணமும் எனக்கு நன்றாகத் தெரியுமென்று அப்போது பெருமையடித்துக் கொண்டாயே. இதெல்லாம் என்ன? நம்முடைய கப்பலை எதற்காக இந்த வீரர்கள் இப்படித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்? ஏன் ஊமையாக நிற்கிறாய்? பதில் சொல்லேன்.”

கூத்தன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திரு திருவென்று விழித்தான். அவனுக்குத் தெரிந்தால்தானே சொல்வதற்கு! ஆரம்பத்தில் கப்பலில் இடம் பிடிப்பதற்காக அளந்த பொய் இவ்வளவு தூரத்துக்குத் தன்னைப் பாதிக்கு மென்று தெரிந்திருந்தால் அவன் அந்தப் பொய்யைச் சொல்லியிருக்கவே மாட்டான்.

“கப்பல் புறப்படும்போதே அபசகுணம் மாதிரி இந்தப் பயல் வந்து வம்பு பண்ணினான். அப்போதே இது மாதிரி ஏதாவது தொல்லை வருமென்று நான் நினைத்தேன்” என்று சேந்தன் படபடப்போடு கூத்தனை நோக்கிச் சீறினான். குழல் வாய்மொழி சினம் பொங்கப் பார்த்தாள். எல்லோருடைய கோபமும் கூத்தனின் மேல் திரும்பி அடிகள் உதைகளாக உருவெடுப்பதற்கு இருந்த சமயத்தில் அப்படி நடந்துவிடாமல் ஈழ நாட்டு வீரர்களெல்லாம் கப்பலுக்குள் ஏறி வந்து கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.

“இந்தக் கப்பல் எங்கே இருந்து வருகிறது?” சேந்தனைப் பார்த்து அதிகார மிடுக்குடன் இப்படிக் கேட்டார்கள், கப்பலுக்குள் ஏறிவந்த கடற்படை வீரர்கள்!

கேள்விக்குப் பதில் சொல்லலாமா, வேண்டாமா என்ற பாவனையில் சேந்தன் குழல்வாய்மொழியின் முகத்தைப் நா. பார்த்தசாரதி 5.99

பார்த்தான் குழல்வாய்மொழி கூத்தனின் முகத்தைப் பார்த்தாள்; கூத்தன் கடலைப் பார்த்தான். இந்த மெளனம் கேள்வி கேட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.

“இந்தா ஐயா! முன்குடுமிக்காரரே! உம்மைத்தான் கேட்கிறோம். பதில் சொல்லும்” என்று கடுமையான குரலில் மீண்டும் கேட்டார்கள் அவர்கள். சேந்தன் பதில் சொன்னான், “கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறது!”

“என்ன காரியமாக வருகிறதோ?” “சொந்தக் காரியமாக” “எங்களிடம் எதையும் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும், இல்லாவிட்டால் வருத்தப்பட நேரிடும்.” “மறைப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை.” “அப்படியானால் நீங்கள் எல்லோரும் யார்? என்ன காரியமாக ஈழநாட்டுக்குப் புறப்பட்டீர்கள் என்பதையெல்லாம் உடனே கூறுங்கள்.” ‘. . . .

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மறுபடியும் குழல்வாய்மொழியின் முகத்தைப் பார்த்தான் சேந்தன். குழல்வாய்மொழி அந்த வீரர்களை நோக்கித் துணிவோடு கேட்டாள்; “நீங்கள் எங்களுடைய கப்பலைத் தடுத்து நிறுத்திக்கொண்டு எங்களை இவ்வாறு மிரட்டுவது அநாகரிமாக அல்லவா இருக்கிறது? நாங்கள் யாராயிருந்தால் என்ன? நாங்கள் என்ன காரியமாக ஈழநாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பதை உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை!”

அவள் சினத்தோடு படபடப்பாக எதிர்வாதம் புரிந்ததைக் கேட்டதும் வீரர்கள் இன்னும் ஆத்திரம் அடைந்தனர்.

“எங்கள்மேல் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அம்மா! ஈழ மண்டலத்து மகாசேனாபதியின் உத்தரவுப்படி நாங்கள் இந்தக் கப்பலை இப்போது கைப்பற்றுகிறோம். எங்கள் கண்காணிப்பில் அப்படியே இந்தக் கப்பலைச் செலுத்திக்கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நங்கூரம்பாய்ச்சி நிறுத்தி விடுவோம். எங்கள் மகாசேனாபதி வந்து பரிசோதித்து விசாரணை செய்கிறவரை யாரும் இந்தக் கப்பலிலிருந்து கீழே இறங்க விடமாட்டோம்” . “கப்பலிலேயே சிறை வைத்துப் பார்ப்பதற்கு நாங்கள் கொள்ளையடித்துவிட்டோ, கொலைக் குற்றம் செய்துவிட்டோ இங்கு ஓடிவரவில்லையே?’ என்று அமைதியாக நின்று கொண்டிருந்த கூத்தனும் கொதிப்படைந்து கேட்டான். அவர்கள் அந்தக் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. படகுகளையும் கப்பலையும் தங்கள் பொறுப்பில் செலுத்திக்கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நிறுத்தினார்கள். கப்பலைச் சுற்றிலும் யாரும் வெளியேற முடியாமல் வீரர்கள் காவல் நின்று கொண்டனர். கப்பல் பிடித்துக்கொண்டு வரப்பட்ட செய்தி உடனே ஈழநாட்டுப் படைத்தலைவருக்கு அனுப்பப்பட்டது. குழல்வாய்மொழியும் சேந்தனும் மேல்தளத்தில் நின்று கூத்தனைத் திட்டிக்கொண்டிருந்தார்கள்.

Previous articlePandima Devi Part 3 Ch3 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in
Next articlePandima Devi Part 3 Ch5 | Pandima Devi Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here