Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 14 – Kalki | TamilNovel.in

Ponniyin Selvan Part 1 Ch 14 – Kalki | TamilNovel.in

167
0
Ponniyin Selvan Part 1 Ch 14 பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 14: ஆற்றங்கரை முதலை

Ponniyin Selvan Part 1 Ch 14

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 14: ஆற்றங்கரை முதலை

Ponniyin Selvan Part 1 Ch 14

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 14: ஆற்றங்கரை முதலை
Ponniyin Selvan Part 1 Ch 14
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 14: ஆற்றங்கரை முதலை

Ponniyin Selvan Part 1 Ch 14

குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங் கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன.

குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான். வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல் முறை பார்க்கும்போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா? பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும் ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமிய பாடல்களைப் பாடினார்கள். கரும்புத் தோட்டங்களின் பக்கத்தில் கரும்பு ஆலைகள் அமைத்திருந்தார்கள். சென்ற ஆண்டில் பயிரிட்ட முற்றிய கருப்பங்கழிகளை வெட்டி அந்தக் கரும்பு ஆலைகளில் கொடுத்துச் சாறு பிழிந்தார்கள். கரும்புச் சாற்றின் மணமும், வெல்லம் காய்ச்சும் மணமும் சேர்ந்து கலந்து வந்து மூக்கைத் துளைத்தன.

தென்னந்தோப்புகளின் மத்தியில் கீற்று ஓலைகள் வேயப்பட்ட குடிசைகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. கிராமங்களில் வீட்டு வாசலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல் வைத்திருந்தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக் கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, “கொக்கரக்கோ!” என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. “கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?” என்று அலட்சியத்துடன் அக்குழந்தைகள் சோழியும் பல்லாங்குழியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப் புகை மேலே வந்து கொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிசபட்சணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான்; எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன.

ஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக்களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல் தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் ‘டணார், டணார்’ என்று கேட்டது. அந்த உலைக் களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கொழு, மண்வெட்டி, கடப்பாரை முதலியவற்றுடன், கத்திகள், கேடயங்கள், வேல்கள், ஈட்டிகள் முதலியன கும்பல் கும்பலாகக் கிடந்தன. அவற்றை வாங்கிக் கொண்டு போகக் குடியானவர்களும் போர் வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள்.

சிறிய கிராமங்களிலும் சின்னஞ்சிறு கோவில்கள் காட்சி அளித்தன. கோவிலுக்குள்ளே சேமக்கலம் அடிக்கும் சத்தமும், நகரா முழங்கும் சத்தமும், மந்திர கோஷமும், தேவாரப் பண்பாடலும் எழுந்தன. மாரியம்மன் முதலிய கிராம தேவதைகளை மஞ்சத்தில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பூசாரிகள் கரகம் எடுத்து ஆடிக் கொண்டும் உடுக்கு அடித்துக் கொண்டும் வந்து நெல் காணிக்கை தண்டினார்கள். கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் மேய்ப்பதற்கு ஓட்டிப் போனார்கள். அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள்!

குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத் தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். அப்போது செம்மறியாடுகளைச் சண்டைக்கு ஏவிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். வீட்டுக் கூரைகளின் மேல் பெண் மயில்கள் உட்கார்ந்து கூவ, அதைக் கேட்டு ஆண் மயில்கள் தோகையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஜிவ்வென்று பறந்துபோய் அப்பெண் மயில்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தன. புறாக்கள் அழகிய கழுத்தை அசைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றின. பாவம்! கூண்டுகளில் அடைபட்ட கிளிகளும் மைனாக்களும் சோக கீதங்கள் இசைத்தன. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையை மெல்ல செலுத்திக் கொண்டு சென்றான்.

அவனுடைய கண்களுக்கு நிறைய வேலை இருந்தது. மனமும் இந்தப் பல்வேறு காட்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது. ஆயினும் அவன் உள்மனத்திலே இலேசாகப் பனியினால் மூடுண்டது போல், ஒரு பெண்ணின் முகம் தெரிந்து கொண்டேயிருந்தது. ஆகா! அந்தப் பெண் அவளுடைய செவ்விதழ்களைத் திறந்து தன்னுடன் சில வார்த்தை பேசியிருக்கக் கூடாதா? பேசியிருந்தால் அவளுக்கு என்ன நஷ்டமாகியிருக்கும்? அந்தப் பெண் யாராயிருக்கும்? யாராயிருந்தாலும் கொஞ்சம் மரியாதை என்பது வேண்டாமா? என்னைப் பார்த்தால் அவ்வளவு அலட்சியம் செய்வதற்குரியவனாகவா தோன்றுகிறது? அந்தப் பெண் யார் என்பதைச் சொல்லாமலே அந்தச் சோதிடக் கிழவன் ஏமாற்றிவிட்டார் அல்லவா! அவர் கெட்டிக்காரர்; அசாத்தியக் கெட்டிக்காரர். பிறருடைய மனத்தை எப்படி ஆழம் பார்த்துக் கொள்கிறார்? எவ்வளவு உலக அனுபவத்துடன் வார்த்தை சொல்லுகிறார்? முக்கியமான விஷயம் ஒன்றும் அவர் சொல்லவில்லைதான்! இராஜாங்க சம்பந்தமான பேச்சுக்களில் அவர் மிகவும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்லாமல் தப்பித்துக் கொண்டார். அல்லது எல்லோருக்கும் தெரிந்ததையே விகசித சாதுரியத்துடனே சொல்லிச் சமாளித்துக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய அதிர்ஷ்ட கிரகங்கள் உச்சத்துக்கு வந்திருப்பதாக நல்ல வார்த்தை சொன்னார் அல்லவா? குடந்தை ஜோதிடர் நன்றாயிருக்கட்டும்.

இவ்வாறெல்லாம் சிந்தித்துக் கொண்டு வந்தியத்தேவன் சென்றான். அவ்வப்போது எதிர்ப்பட்ட காட்சிகள் இடையிடையே அவனைச் சிந்தனை உலகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு இழுத்தன. கடைசியில் அரிசிலாற்றங் கரையை அடைந்தான். சிறிது தூரம் ஆற்றங் கரையோடு சென்றதும், பெண்களின் கைவளை குலுங்கும் சத்தமும், கலகலவென்று சிரிக்கும் ஒலியும் கேட்டன. அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அரிசிலாற்றங் கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. எங்கிருந்து அப்பெண்களின் குரல் ஒலி வருகிறது என்று கண்டுபிடிக்க வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றான்.

திடீரென்று, “ஐயோ! ஐயோ! முதலை! முதலை! பயமாயிருக்கிறதே!” என்ற அபயக் குரலையும் கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குதிரையைத் தட்டி விட்டான். அந்தப் பெண்கள் இருந்த இடம் இரு மரங்களின் இடைவெளி வழியாக அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் பலருடைய முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அதிசயம்! அதிசயம்! அவர்களிலே இருவர் ஜோதிடர் வீட்டிற்குள்ளே வந்தியத்தேவன் பிரவேசித்ததும் புறப்பட்டுச் சென்றவர்கள்தான். இதையெல்லாம் நொடி நேரத்தில் வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொண்டான். அதை மட்டுமா பார்த்தான்? ஓர் அடர்ந்த நிழல் தரும் பெரிய மரத்தின் அடியில், வேரோடு வேராக, பாதி தரையிலும் பாதி தண்ணீரிலுமாக ஒரு பயங்கரமான முதலை வாயைப் பிளந்து கொண்டிருந்தது. சமீபத்திலேதான் கொள்ளிட நதியில் ஒரு கொடூரமான முதலை வாயைப் பிளந்து கொண்டு வந்ததை வந்தியத்தேவன் பார்த்திருந்தான். முதலை எவ்வளவு பயங்கரமான பிராணி என்பதையும் கேட்டிருந்தான். ஆகவே இந்த முதலையைப் பார்த்ததும் அவன் உள்ளம் கலங்கி, உடல் பதறிப் போனான். ஏனெனில், அந்த முதலை சற்றுமுன் கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வெகு சமீபத்தில் இருந்தது. வாயைப் பிளந்து கொண்டு, கோரமான பற்களைக் காட்டிக் கொண்டு, பயங்கர வடிவத்துடன் இருந்தது. முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான். அந்தப் பெண்களின் கதி அதோகதியாகி விடும்! அந்தப் பெண்களோ, பின்னால் அடர்த்தியாயிருந்த மரங்களினால் தப்பி ஓடுவதற்கும் முடியாத நிலையில் இருந்தார்கள்.

வந்தியத்தேவனுடைய உள்ளம் எவ்வளவு குழம்பியிருந்தாலும் அவன் உறுதி அணுவளவும் குன்றவில்லை. தான் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் ஒரு கணத்துக்கு மேல் சிந்திக்கவில்லை. கையிலிருந்த வேலைக் குறி பார்த்து ஒரே வீச்சாக வீசி எறிந்தான். வேல் முதலையின் கெட்டியான முதுகில் பாய்ந்து சிறிது உள்ளேயும் சென்று செங்குத்தாக நின்றது. உடனே நமது வீரன் உடைவாளை உருவிக் கொண்டு முதலையை ஒரேயடியாக வேலை தீர்த்துவிடுவது என்ற உறுதியுடன் பாய்ந்து ஓடி வந்தான்.

Ponniyin Selvan Part 1 Ch 14

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 14: ஆற்றங்கரை முதலை
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 14: ஆற்றங்கரை முதலை

முன்போலவே, அந்தச் சமயத்தில் அப்பெண்கள் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் காதுக்கு அது நாராசமாயிருந்தது. இத்தகைய அபாயகரமான வேளையில் எதற்காக அவர்கள் சிரிக்கிறார்கள்? பாய்ந்து ஓடி வந்தவன் ஒரு கணம் திகைத்து நின்றான். அப்பெண்களின் முகங்களைப் பார்த்தான். பயமோ பீதியோ அம்முகங்களில் அவன் காணவில்லை. அதற்கு மாறாகப் பரிகாசச் சிரிப்பின் அறிகுறிகளையே கண்டான்.

சற்றுமுன், “ஐயோ ஐயோ!” என்று கத்தியவர்கள் அவர்கள்தான் என்றே நம்ப முடியவில்லை.

அவர்களில் ஒருத்தி… ஜோதிடர் வீட்டில் தான் பார்த்த பெண் – கம்பீரமான இனிய குரலில், “பெண்களே! சும்மா இருங்கள், எதற்காகச் சிரிக்கிறீர்கள்?” என்று அதட்டும் குரலில் கூறியது கனவில் கேட்பது போல அவன் காதில் விழுந்தது.

முதலையண்டை பாய்ந்து சென்றவன் வாளை ஓங்கியவண்ணம் தயங்கி நின்றான். முதலையை உற்றுப் பார்த்தான்; அந்தப் பெண்களின் முகங்களையும் இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். அவன் உள்ளத்தை வெட்கி மருகச் செய்த, உடலைக் குன்றச் செய்த, ஒரு சந்தேகம் உதித்தது. இதற்குள்ளாக அந்தப் பெண்மணி மற்றவர்களைப் பிரிந்து முன்னால் வந்தாள். முதலைக்கு எதிர்ப்புறத்தில் அதைக் காப்பாற்றுகிறவளைப் போல் நின்றாள்.

“ஐயா! தங்களுக்கு மிக்க வந்தனம் தாங்கள் வீணில் சிரமப்பட வேண்டாம்!” என்றாள்.

Source

Previous articlePonniyin Selvan Part 1 Ch 13 – Kalki | TamilNovel.in
Next articlePonniyin Selvan Part 1 Ch 15 – Kalki | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here