Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 19 – Kalki | TamilNovel.in

Ponniyin Selvan Part 1 Ch 19 – Kalki | TamilNovel.in

119
0
Ponniyin Selvan Part 1 Ch 19 பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 19: ரணகள அரண்யம்
Ponniyin Selvan Part 1 Ch 19 பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 19: ரணகள அரண்யம்

Ponniyin Selvan Part 1 Ch 19

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 19: ரணகள அரண்யம்

Ponniyin Selvan Part 1 Ch 19

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 19: ரணகள அரண்யம்
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 19: ரணகள அரண்யம்

Ponniyin Selvan Part 1 Ch 19

பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர் துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும்.

குடந்தை நகருக்கு அரைக்காதம் வடமேற்கில் மண்ணியாற்றுக்கு வடகரையில் திருப்புறம்பயம் என்னும் கிராமத்துக்கருகில் ஒரு பள்ளிப்படைக் கோயில் இருந்தது. இது அந்தப் பிரதேசத்தில் நடந்த ஒரு மாபெரும் போரில் உயிர் நீத்த கங்க மன்னன் பிரிதிவீபதியின் ஞாபகமாக எடுத்தது. உலக சரித்திரம் அறிந்தவர்கள் வாடர்லூ சண்டை, பானிபெத் சண்டை, பிளாசிச் சண்டை போன்ற சில சண்டைகளின் மூலம் சரித்திரத்தின் போக்கே மாறியது என்பதை அறிவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திருப்புறம்பயம் சண்டை அத்தகைய முக்கியம் வாய்ந்தது. நமது கதை நடந்த காலத்துக்குச் சுமார் நூறு ஆண்டு காலத்துக்கு முன்னால் அச்சண்டை நடந்தது. அதன் வரலாறு தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

‘கரிகால் வளவன்’ பெருநற்கிள்ளி, இளஞ்சேட் சென்னி, தொடித்தோட் செம்பியன் முதலிய சோழகுல மன்னர்கள் சீரும் சிறப்புமாக சோழ நாட்டை ஆண்டிருந்த காலத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஐந்நூறு அறுநூறு வருஷ காலம் சோழர் குலத்தின் கீர்த்தியை நீடித்த கிரகணம் பிடித்திருந்தது. தெற்கே பாண்டியர்களும், வடக்கே பல்லவர்களும் வலிமை மிக்கவர்களாகிச் சோழர்களை நெருக்கி வந்தார்கள். கடைசியாக, சோழ குலத்தார் பாண்டியர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர்களுடைய நெடுங்காலத் தலைநகரமான உறையூரை விட்டு நகர வேண்டி வந்தது. அப்படி நகர்ந்தவர்கள் குடந்தைக்கு அருகில் இருந்த பழையாறை என்னும் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். ஆயினும் உறையூர் தங்கள் தலைநகரம் என்னும் உரிமையை விட்டு விடவில்லை. ‘கோழி வேந்தர்’ என்னும் பட்டத்தையும் விட்டுவிடவில்லை.

பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்த களங்களில் முன்னணியில் நின்று போர் செய்து உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை அடைந்தவர். ‘எண்கொண்ட தொண்ணூற்றின் மேலுமிரு மூன்று புண்கொண்ட வெற்றிப் புரவலன்’ என்றும், ‘புண்ணூறு தன்றிருமேனியிற் பூணாகத் தொண்ணூறும் ஆறுஞ் சுமந்தோனும்’ என்றெல்லாம் பிற்கால ஆஸ்தானப் புலவர்களால் பாடப் பெற்றவர். இவருடைய மகன் ஆதித்த சோழன் தந்தைக்கு இணையான பெரு வீரனாக விளங்கினான். இவனும் பல போர்களில் கலந்து கொண்டு புகழ்பெற்றான்.

விஜயாலய சோழர் முதுமைப் பிராயத்தை அடைந்து மகனுக்குப் பட்டங்கட்டி விட்டு ஓய்ந்திருந்தார். அச்சமயத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பகைமை முற்றி அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்துப் பாண்டிய மன்னனுக்கு வரகுணவர்மன் என்று பெயர்; பல்லவ அரசனுக்கு அபராஜிதவர்மன் என்று பெயர். இந்த இரண்டு பேரரசர்களுக்குள் நடந்த சண்டைகள் பெரும்பாலும் சோழ நாட்டில் நடைபெற்றன. யானையும் யானையும் மோதிச் சண்டையிடும்போது நடுவில் அகப்பட்டுக் கொள்ளும் சேவல் கோழியைப் போல் சோழ நாடு அவதிப்பட்டது. சோழ நாட்டு மக்கள் துன்புற்றார்கள். எனினும் இப்போர்களை விஜயாலய சோழர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு போரிலும் ஏதாவது ஒரு கட்சியில் தம்முடைய சிறிய படையுடன் போய்க் கலந்து கொண்டார். வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும் சோழ நாட்டில் போர்க்குணம் மிகுந்து வந்தது.

காவேரி நதியிலிருந்து பல கிளை நதிகள் பிரிந்து சோழ நாட்டை வளப்படுத்துவதை யாவரும் அறிவார்கள். அக்கிளை நதிகள் யாவும் காவிரிக்குத் தெற்கே பிரிகின்றன. கொள்ளிடத்திலிருந்து பிரிந்து காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் பாயும் நதி ஒன்றே ஒன்றுதான்; அதற்கு மண்ணியாறு என்று பெயர். இந்த மண்ணியாற்றின் வடகரையில், திருப்புறம்பயம் கிராமத்துக்கு அருகில், பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இறுதியான பலப்பரீட்சை நடந்தது. இரு தரப்பிலும் படைபலம் ஏறக்குறைய சமமாக இருந்தது. பல்லவ அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு பிரிதிவீபதி வந்திருந்தான். ஆதித்த சோழனும் அபராஜிதவர்மனுடைய கட்சியில் சேர்ந்திருந்தான்.

பாண்டிய சைன்யத்துடனும் பல்லவ சைன்யத்துடனும் ஒப்பிட்டால், சோழ சைன்யம் மிகச் சிறியதாகவே இருந்தது.எனினும், இம்முறை பாண்டியன் வெற்றி பெற்றால், சோழ வம்சம் அடியோடு நாசமாக நேரும் என்று ஆதித்தன் அறிந்திருந்தான். ஆகையால், பெரிய சமுத்திரத்தில் கலக்கும் காவேரி நதியைப் போல் பல்லவரின் மகா சைன்யத்தில் தன்னுடைய சிறு படையையும் சேர்த்திருந்தான்.

காத தூரத்துக்குக் காத தூரம் ரணகளம் பரவியிருந்தது. ரத, கஜ, துரக, பதாதிகள் என்னும் நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டிருந்தன. மலையோடு மலை முட்டுவது போல் யானைகள் ஒன்றையொன்று தாக்கிய போது நாலா திசைகளும் அதிர்ந்தன. புயலோடு புயல் மோதுவது போல் குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்த போது குதிரை வீரர்களின் கையிலிருந்த வேல்கள் மின்வெட்டுகளைப் போல் பிரகாசித்தன. ரதத்தோடு ரதம் மோதிச் சுக்குநூறாகித் திசையெல்லாம் பறந்தன. காலாள் வீரர்களின் வாள்களோடு வாள்களும், வேல்களோடு வேல்களும் உராய்ந்த போது எழுந்த ஜங்கார ஒலிகளினால் திக்குத் திகாந்தங்கள் எல்லாம் நடுநடுங்கின. மூன்று நாள் இடைவிடாமல் சண்டை நடந்த பிறகு, ரணகளம் முழுவதும் ரத்தக் கடலாகக் காட்சியளித்தது. அந்தக் கடலில் செத்த யானைகளும் குதிரைகளும் திட்டுத் திட்டாகக் கிடந்தன. உடைந்த ரதங்களின் பகுதிகள் கடலில் கவிழ்ந்த கப்பலின் பலகைகளைப் போல் மிதந்தன. இரு தரப்பிலும் ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் உயிரிழந்து கிடந்தார்கள்.

மூன்று நாள் இவ்விதம் கோர யுத்தம் நடந்த பிறகு பல்லவர் சைன்யத்தில் ஒரு பகுதிதான் மிஞ்சியிருந்தது. மிஞ்சியவர்களும் மிகக் களைத்திருந்தார்கள். பாண்டிய நாட்டு வீர மறவர்களோ, களைப்பையே அறியாத வரம் வாங்கி வந்தவர்களைப் போல், மேலும் மேலும் வந்து தாக்கினார்கள். அபராஜிதவர்மனுடைய கூடாரத்தில் மந்திராலோசனை நடந்தது. அபராஜிதன், பிரதிவீபதி, ஆதித்தன் ஆகிய மூன்று மன்னர்களுடன் படைத்தலைவர்களும் கலந்து ஆலோசித்தார்கள். இனி எதிர்த்து நிற்க முடியாது என்றும், பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரைக்குச் சென்று விடுவதே உசிதம் என்றும் முடிவு செய்தார்கள்.

இப்படிப்பட்ட நிலைமையில் போர்க்களத்தில் ஓர் அதிசயம் நடந்தது. முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்று காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான விஜயாலய சோழன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான். பல்லவ சைன்யம் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழ நாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

Ponniyin Selvan Part 1 Ch 19

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 19: ரணகள அரண்யம்
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 19: ரணகள அரண்யம்

“ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!” என்றான்.

“நமது யானைப் படை முழுவதும் அதமாகி விட்டது; ஒன்று கூடத் தப்பவில்லை” என்றார்கள்.

“ஒரு குதிரை, ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!” என்றான்.

“உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை” என்று சொன்னார்கள்.

“சோழ நாட்டுச் சுத்த வீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!” என்று விஜயாலயன் அலறினான். இருவருக்கு பதிலாக இருநூறு பேர் முன்னால் வந்தார்கள்.

“இரண்டு பேர் தோளில் வலியும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் என்னைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச் சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கி கொள்ளுங்கள்!” என்றான் அந்த வீராதி வீரன். அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து விஜயாலயனைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள்.

“போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!” என்று கர்ஜித்தான்.

போர்க்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தி மறவர்கள் கீழைநாட்டாரைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள். இருவருடைய தோள்களில் அமர்ந்த விஜயாலயன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக் கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக் கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன.

ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். விஜயாலயனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு தாங்களும் போர்முனையில் புகுந்தார்கள். அவ்வளவுதான்; தேவி ஜயலக்ஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பி விட்டது.

பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள். மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர்முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு, தன் புகழுடம்பை அப்போர்க்களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான். அத்தகைய வீரனுடைய ஞாபகார்த்தமாக அப்போர்க்களத்தில் வீரக் கல் நாட்டினார்கள். பிறகு பள்ளிப்படைக் கோயிலும் எடுத்தார்கள்.

அத்தகைய கொடூரமான பயங்கர யுத்தம் நடந்த ரணகளம் சில காலம் புல் பூண்டுகள் முளையாமல் கிடந்தது. அந்தப் பக்கம் மக்கள் போவதேயில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு அங்கே காடு மண்ட ஆரம்பித்தது. பள்ளிப்படைக் கோவிலைச் சுற்றிக் காடு அடர்ந்தது, புதர்களில் நரிகள் குடிபுகுந்தன. இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன. நாளடைவில் அப்பள்ளிப்படைக் கோயிலுக்கு யாரும் போவதை நிறுத்தி விட்டார்கள். எனவே, கோயிலும் நாளுக்கு நாள் தகர்ந்து போய் வந்தது. நமது கதை நடக்கும் காலத்தில் பாழடைந்து கிடந்தது.

இத்தகைய பாழடைந்த பள்ளிப்படைக் கோயிலுக்கு இருட்டுகிற நேரத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்தான். அக்கோயிலின் மேல் மண்டப விளிம்பில் அமைந்த காவல் பூதகணங்கள் அவனைப் பயமுறுத்தப் பார்த்தன. ஆனால் அந்த வீர வைஷ்ணவ சிகாமணியா பயப்படுகிறவன்? பள்ளிப்படைக் கோயில் மண்டபத்தின் மீது தாவி ஏறினான். மண்டபத்தின் மீது கவிந்திருந்த மரக்கிளையின் மறைவில் உட்கார்ந்து கொண்டான். நாலாபுறமும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் அடர்த்தியான இருளைக் கிழித்துக் கொண்டு பார்க்கும் சக்தியைப் பெற்றிருந்தன. அவனுடைய செவிகளும் அவ்வாறே மிக மெல்லிய இசையையும் கேட்கக்கூடிய கூர்மை பெற்றிருந்தன.

இருட்டி ஒரு நாழிகை; இரண்டு நாழிகை; மூன்று நாழிகையும் ஆயிற்று. சுற்றிலும் சூழ்ந்திருந்த அந்தகாரம் அவனை அடியோடு அமுக்கி, மூச்சுத் திணறச் செய்தது. அவ்வப்போது காட்டு மரங்களினிடையே சலசலவென்று ஏதோ சத்தம் கேட்டது. அதோ ஒரு மரநாய் மரத்தின் மேல் ஏறுகிறது! அதோ ஒரு ஆந்தை உறுமுகிறது! இந்தப் பக்கம் ஒரு கோட்டான் கூவுகிறது! மரநாய்க்குப் பயந்து ஒரு பறவை சடசடவென்று சிறகை அடித்துக் கொண்டு மேல் கிளைக்குப் பாய்கிறது. அதோ, நரிகள் ஊளையிடத் தொடங்கி விட்டன. தலைக்கு மேலே ஏதோ சத்தம் கேட்டது. அண்ணாந்து பார்த்தான்; அணிலோ, ஓணானோ, அல்லது அத்தகைய வேறொரு சிறிய பிராணியோ மரக்கிளைகளின் மீது தாவி ஏறிற்று.

மரக்கிளைகளின் இடுக்குகளின் வழியாக வானத்தில் ஒரு சிறு பகுதி தெரிந்தது. விண்மீன்கள் ‘முணுக்’, ‘முணுக்’கென்று மின்னிக் கொண்டு கீழே எட்டிப் பார்த்தன. அந்தத் தனிமை மிகுந்த கனாந்தகாரத்தினிடையே வானத்து நட்சத்திரங்கள் அவனுடன் நட்புரிமை கொண்டாடுவதுபோல் தோன்றின. எனவே, ஆழ்வார்க்கடியான் மரக்கிளைகளின் வழியாக எட்டிப் பார்த்த நட்சத்திரங்களைப் பார்த்து மெல்லிய குரலில் பேசினான்;

“ஓ! நட்சத்திரங்களே! உங்களை இன்றைக்குப் பார்த்தால் பூவுலக மக்களின் அறிவீனத்தைப் பார்த்துக் கேலி செய்து கண்சிமிட்டிச் சிரிப்பவர்களைப் போலத் தோன்றுகிறது. சிரிப்பதற்கு உங்களுக்கு வேண்டிய காரணம் உண்டு. நூறு வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் நடந்த பெரும் போரையும், போர் நடந்த பிறகு இங்கே வெகு நாள் வரை இரத்த வெள்ளம் பெருகிக் கிடந்ததையும் பார்த்திருக்கிறீர்கள். மனிதர்கள் எதற்காக இப்படி ஒருவரையொருவர் பகைக்க வேண்டும் என்று அதிசயிக்கிறீர்கள். எதற்காக இப்படி மனித இரத்தத்தைச் சிந்தி வெள்ளமாக ஓடச் செய்ய வேண்டும் என்றும் வியக்கிறீர்கள். இதற்குப் பெயர் வீரமாம். “

“ஒரு மனிதன் இறந்து நூறு வருஷம் ஆகியும் அவனிடம் பகைமை பாராட்டுகிறார்கள்! இந்தப் பள்ளிப்படை பகைவனுடைய பள்ளிப்படையாம்! பகைவன் பள்ளிப்படைக்கு அருகில் கூடி யோசிக்கப் போகிறார்களாம். செத்துப் போனவர்களின் பெயரால் உயிரோடிருப்பவர்களை இம்சிப்பதற்கு! வானத்து விண்மீன்களே! நீங்கள் ஏன் சிரிக்க மாட்டீர்கள்? நன்றாய்ச் சிரியுங்கள்!

“கடவுளே! இங்கு வந்தது வீண்தானா? இன்றிரவெல்லாம் இப்படியே கழியப் போகிறதா? எதிர்பார்த்த ஆட்கள் இங்கே வரப்போவதில்லையா? என் காதில் விழுந்தது தவறா? நான் சரியாகக் கவனிக்கவில்லையா? அல்லது அந்த மச்சஹஸ்த சமிக்ஞையாளர்கள் தங்கள் யோசனையை மாற்றிக் கொண்டு வேறிடத்துக்குப் போய் விட்டார்களா! என்ன ஏமாற்றம்? இன்றைக்கு மட்டும் நான் ஏமாந்து போனால் என்னை நான் ஒரு நாளும் மன்னித்துக் கொள்ள முடியாது!… ஆ! அதோ சிறிது வெளிச்சம் தெரிகிறது! அது என்ன? வெளிச்சம் மறைகிறது; மறுபடி தெரிகிறது சந்தேகமில்லை. அதோ, சுளுந்து கொளுத்திப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் வருகிறான்! இல்லை இரண்டு பேர் வருகிறார்கள். காத்திருந்தது வீண் போகவில்லை!…”

வந்தவர்கள் இருவரும் பள்ளிப்படையைத் தாண்டிக் கொண்டு சிறிது அப்பால் போனார்கள். அடர்ந்த காட்டுக்கு மத்தியில் சிறிது இடைவெளி இருந்த இடத்தில் நின்றார்கள். ஒருவன் உட்கார்ந்து கொண்டான்; கையில் சுளுந்து வைத்திருந்தவன் சுற்றுமுற்றும் பார்த்து கொண்டிருந்தான். யாருடைய வரவையோ அவன் எதிர்பார்த்தான் என்பதில் சந்தேகமில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இதற்கு முன் இந்த இடத்துக்கு வந்தவர்களாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இந்த இருளில், அடர்ந்த காட்டில், வழி கண்டுபிடித்துக் கொண்டு வர முடியுமா?

முதலில் வந்தவர்களும் பின்னால் வந்தவர்களும் ஏதோ பேசிக் கொண்டார்கள். ஆனால் ஆழ்வார்க்கடியான் காதில் அது ஒன்றும் விழவில்லை. ‘அடடா, இத்தனை கஷ்டப்பட்டு வந்தும் பிரயோஜனம் ஒண்ணும் இராது போலிருக்கிறதே! ஆட்களின் அடையாளம் கூடத் தெரியாது போலிருக்கிறதே!’

பிறகு இன்னும் இரண்டு பேர் வந்தார்கள்; முன்னால் வந்தவர்களும் கடைசியில் வந்தவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். கடைசியாக வந்தவர்களில் ஒருவன் கையில் ஒரு பை கொண்டு வந்திருந்தான். அதை அவன் அவிழ்த்து அதனுள் இருந்தவற்றைக் கொட்டினான். சுளுந்து வெளிச்சத்தில் தங்க நாணயங்கள் பளபளவென்று ஒளிர்ந்தன.

கொட்டிய மனிதன் பைத்தியம் பிடித்தவனைப் போல் சிரித்து, “நண்பர்களே! சோழ நாட்டுப் பொக்கிஷத்தைக் கொண்டே சோழ ராஜ்யத்துக்கு உலைவைக்கப் போகிறோம்! இது பெரிய வேடிக்கையல்லவா?” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கலகலவென்று சிரித்தான்.

“ரவிதாஸரே! இரைச்சல் போட வேண்டாம்; கொஞ்சம் மெதுவாகப் பேசலாம்” என்றான் ஒருவன்.

“ஆகா! இங்கு இப்படிப் பேசினால் என்ன? நரிகளும், மரநாய்களும், கூகைகளும் கோட்டான்களுந்தான் நம் பேச்சைக் கேட்கும்! நல்லவேளையாக அவை யாரிடமும் போய்ச் சொல்லாது! என்றான் ரவிதாஸன்.

“இருந்தாலும் கொஞ்சம் மெதுவாகப் பேசுவதே நல்லது அல்லவா?”

பிறகு அவர்கள் மெல்லப் பேசத் தொடங்கினார்கள். ஆழ்வார்க்கடியானுக்கு அவர்களுடைய பேச்சைக் கேட்டறியாமல் மண்டபத்தின் பேரில் உட்கார்ந்து இருப்பது வீண் என்று தோன்றியது. மண்டபத்திலிருந்து இறங்கிக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் நின்று ஒட்டுக் கேட்டே தீர வேண்டும். அதனால் விளையும் அபாயத்தையும் சமாளித்துக் கொள்ள வேண்டும் – இவ்விதம் எண்ணி ஆழ்வார்க்கடியான் மண்டபத்திலிருந்து இறங்க முயன்றபோது மரக்கிளைகளில் அவன் உடம்பு உராய்ந்ததால் சலசலப்புச் சத்தம் உண்டாயிற்று.

பேசிக் கொண்டிருந்த மனிதர்களில் இருவர் சட்டென்று குதித்து எழுந்து “யார் அங்கே”” என்று கர்ஜித்தார்கள்.

ஆழ்வார்க்கடியானுடைய இதயத் துடிப்பு சிறிது நேரம் நின்று போயிற்று. அவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஓடினாலும் காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்கத்தானே செய்யும்! அவர்கள் வந்து தன்னைப் பிடித்து விடலாம் அல்லவா? அச்சமயத்தில், கோட்டான் ஒன்று சப்பட்டையை விரித்து உயர்த்தி அடித்துக் கொண்டதுடன் “ஊம் ஊம்” என்று உறுமியது.

Source

Previous articlePonniyin Selvan Part 1 Ch 18 – Kalki | TamilNovel.in
Next articlePonniyin Selvan Part 1 Ch 20 – Kalki | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here