Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 26

Ponniyin Selvan Part 1 Ch 26

217
0
Ponniyin Selvan Part 1 Ch 26 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 26: அபாயம்! அபாயம்!

Ponniyin Selvan Part 1 Ch 26

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 26: அபாயம்! அபாயம்!

Ponniyin Selvan Part 1 Ch 26 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 26: அபாயம்! அபாயம்!

Ponniyin Selvan Part 1 Ch 26

ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களுக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். அன்று வந்த ஓலைகள் பலவற்றை வைத்துக் கொண்டு ஒருவர் நின்றார். கணக்காயர் கணக்குச் சொல்வதற்குக் காத்திருந்தார். காவல்படைத் தலைவர்கள் சின்னப் பழுவேட்டரையருடைய அன்றாடக் கட்டளைகளை எதிர்பார்த்து நின்றார்கள். ஏவிய வேலைகளைச் செய்வதற்குப் பணியாளர்கள் காத்திருந்தார்கள். சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று சில ஏவலாளர் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். கையில் வெற்றிலைப் பெட்டியுடன் ஒருவன் ஆயத்தமாயிருந்தான்.

மிடுக்கிலும் பெருமிதத்திலும் யாருக்கும் பின்வாங்காதவனான வந்தியத்தேவன் கூடச் சிறிது அடக்க ஒடுக்கத்துடனேதான் சின்னப் பழுவேட்டரையரிடம் அணுகினான்.

பெரியவரைக் காட்டிலும் சின்னவர் வீரகம்பீரத்தில் இன்னும் ஒருபடி உயர்ந்தவராகவே காணப்பட்டார். நமது வீரனைப் பார்த்ததும் அவர் முகமலர்ச்சியுடன், “யார், தம்பி, நீ! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்.

வீர வாலிபர்களைக் கண்டால் சின்னப் பழுவேட்டரையரின் கடுகடுத்த முகம் மலர்ந்து விடும். நாடெங்கும் உள்ள வாலிப வீரர்களைத் தம்முடைய காவல் படையில் சேர்த்துக்கொள்வதில் அவருக்கு மிக்க ஆர்வம்.

“தளபதி! நான் காஞ்சீபுரத்திலிருந்து வந்தேன்! இளவரசர் ஓலை கொடுத்து அனுப்பினார்!” என்று பணிவான குரலில் வந்தியத்தேவன் மறுமொழி சொன்னான்.

காஞ்சீபுரம் என்றதும் சின்னப் பழுவேட்டரையரின் முகம் கடுத்தது.

“என்ன? என்ன சொன்னாய்?” என்று மீண்டும் கேட்டார்.

“காஞ்சீபுரத்திலிருந்து இளவரசர் கொடுத்த ஓலையுடன் வந்தேன்!”

“எங்கே? இப்படிக் கொடு!” என்று அலட்சியமாய்க் கேட்டபோதிலும் அவருடைய குரலில் சிறிது பரபரப்புத் தொனித்தது.

வல்லவரையன் அடக்க ஒடுக்கத்துடன் ஓலைச் சுருளை எடுத்துக் கொண்டே, “தளபதி! ஓலை சக்கரவர்த்திக்கு!” என்றான்.

அதைப் பொருட்படுத்தாமல் சின்னப் பழுவேட்டரையர் ஓலையை வாங்கி ஆவலுடன் பார்த்தார். பக்கத்தில் நின்றவனிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னார். கேட்டுவிட்டு, “புதிய விஷயம் ஒன்றுமில்லை!” என்று தமக்குத் தாமே முணுமுணுத்துக் கொண்டார்.

“தளபதி! நான் கொண்டு வந்த ஓலை …” என்றான் வந்தியத்தேவன்.

“ஓலைக்கு என்ன? நான் கொடுத்து விடுகிறேன் சக்கரவர்த்தியிடம்!”

“இல்லை; என்னையே நேரில் சக்கரவர்த்தியின் கையில் கொடுக்கும்படி …”

“ஓகோ! என்னிடம் நம்பிக்கை இல்லையா? இளவரசர் ஆதித்தர் அப்படி உன்னிடம் சொல்லி அனுப்பினாரோ?” என்ற போது, தஞ்சைக் கோட்டைத் தளபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

“இளவரசர் அவ்வாறு சொல்லவில்லை; தங்கள் தமையனார்தான் அவ்விதம் கட்டளையிட்டார்!”

“என்ன? என்ன? பெரியவரை நீ எங்கே பார்த்தாய்?”

“வழியில் கடம்பூர் சம்புவரையர் வீட்டில் ஒருநாள் இரவு தங்கியிருந்தேன். அங்கேதான் பார்க்க நேர்ந்தது. இந்த மோதிரத்தையும் அவர்தான் கொடுத்தனுப்பினார்.”

“ஆகா! இதை நீ ஏன் முன்னமே சொல்லவில்லை? கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா? இன்னும் யார் யார் வந்திருந்தார்கள்?”

“மழநாடு, நடுநாடு, திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.”

“இரு, இரு! பிறகு சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் நீயே இந்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு வா! அப்புறம் தமிழ்ப் புலவர்கள் வந்து விடுவார்கள். வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இந்தப் பிள்ளையைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போ!” என்று அருகில் நின்ற வீரன் ஒருவனுக்குச் சின்னப் பழுவேட்டரையர் கட்டளையிட்டார்.

அந்த வீரனைத் தொடர்ந்து வந்தியத்தேவன் மேலும் அரண்மனையின் உட்புறத்தை நோக்கிச் சென்றான்.

மூன்று பக்கங்களில் அலைகடல் முழக்கம் கேட்கும்படியாகப் பரந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காசனம் சில காலமாக நோய்ப் படுக்கையாக மாறியிருந்தது. அந்தச் சிம்மாசனத்தில் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி சாய்ந்து படுத்திருந்தார். இராஜ்யாதிகாரங்களையெல்லாம் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருந்தாராயினும் சிற்சில முக்கியமான சந்தர்ப்பங்களில் முக்கியமான மனிதர்களுக்கு அவர் தரிசனம் அளித்தே தீரவேண்டியிருந்தது. அமைச்சர்களும் தளபதிகளும் வேளக்காரப் படை வீரர்களும் அவரைத் தினந்தோறும் வந்து தரிசித்து விட்டுப் போவது இராஜ்யத்தின் நன்மைக்கு அவசியமாயிருந்தது.

எத்தனையோ போர் முனைகளில் செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்து அசகாய சூரர் என்று பெயர் பெற்றவரும், நாடு நகரமெல்லாம் ‘சுந்தர சோழர்’ என்று அழைக்கப்பட்டவரும், அழகில் மன்மதனுக்கு ஒப்பானவர் என்று புகழ் பெற்றவருமான சக்கரவர்த்தியின் நோய்ப்பட்டு மெலிந்த தோற்றத்தைக் கண்டதும் வந்தியத்தேவனால் பேசவே முடியாமற் போய் விட்டது. அவனுடைய கண்களில் நீர் ததும்பியது. அருகில் சென்று அடிபணிந்து வணங்கிப் பயபக்தியுடன் ஓலையை நீட்டினான்.

சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக் கொண்டே, “எங்கிருந்து வந்தாய்? யாருடைய ஓலை?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டார்.

“பிரபு! காஞ்சியிலிருந்து வந்தேன். இளவரசர் ஆதித்தர் தந்த ஓலை!” என்று வந்தியத்தேவன் நாத் தழுதழுக்கக் கூறினான்.

சக்கரவர்த்தியின் முகம் உடனே பிரகாசம் அடைந்தது. அவர் அருகில் திருக்கோவலூர் மலையமான் புதல்வியான சக்கரவர்த்தினி வானமாதேவி வீற்றிருந்தாள். அவளைப் பார்த்து, “தேவி! உன் புதல்வனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் படித்தார்.

“ஆகா! இளவரசன் காஞ்சியில் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். நீயும் நானும் அங்கு வந்து சில நாள் தங்கியிருக்க வேண்டுமாம்!” என்று சொல்லிய போதே, சக்கரவர்த்தியின் முகம் முன்னைவிடச் சுருங்கியது.

“தேவி! உன் புதல்வன் செய்கையைப் பார்த்தாயா? என் பாட்டனார், உலகமெல்லாம் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, அரண்மனையில் சேர்ந்திருந்த தங்கத்தையெல்லாம் அளித்துத் தில்லை அம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து, பொன்னம்பலம் ஆக்கினார். நம்முடைய குலத்தில் தோன்றிய பெரியவர்கள் யாரும் தாங்கள் வசிக்கும் அரண்மனையைப் பொன்னால் கட்டியதில்லை. அரண்மனை கட்டுவதைக் காட்டிலும் ஆலயம் எடுப்பதையே முக்கியமாகக் கருதினார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் இப்படிச் செய்திருக்கிறான்! ஆகா! இந்தத் தெய்வ நிந்தனைக்கு என்ன பரிகாரம் செய்வது?” என்றார். மகனிடமிருந்து ஓலை வந்தது என்பதை கேட்டுச் சிறிது மலர்ச்சியடைந்த தேவியின் முகம் மறுபடி முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது; மறுமொழி ஒன்றும் அவளால் சொல்ல முடியவில்லை.

அச்சமயத்தில் வந்தியத்தேவன் தைரியமும், துணிவும் வரவழைத்துக் கொண்டு, “பிரபு! தங்கள் திருக்குமாரர் செய்தது அப்படியொன்றும் தவறில்லையே? உசிதமான காரியத்தையே செய்திருக்கிறார். மகனுக்குத் தாயும் தந்தையுமே முதன்மையான தெய்வங்கள் அல்லவா? ஆகையால் தாங்களும், தேவியும் வசிப்பதற்காகத் தங்கள் புதல்வர் பொன் மாளிகை கட்டியது முறைதானே? என்றான்.

சுந்தர சோழர் புன்னகை பூத்து, “தம்பி! நீ யாரோ தெரியவில்லை. மிக்க அறிவாளியாயிருக்கிறாய்; சாதுர்யமாகப் பேசுகிறாய். ஆனால் மகனுக்குத் தாய் தந்தை தெய்வமே என்றாலும், மற்றவர்களுக்கு இல்லைதானே? எல்லாரும் வழிபடும் தெய்வத்துக்கு அல்லவா பொன் கோயில் எடுக்க வேண்டும்!” என்றார்.

“பிரபு! மகனுக்குத் தந்தை தெய்வம்; மக்களுக்கெல்லாம் அரசர் தெய்வம். அரசர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள் என்று வேத புராணங்கள் சொல்லுகின்றன. ஆகையால் அந்த வகையிலும் தங்களுக்குப் பொன்மாளிகை எடுத்தது பொருத்தமானதே!” என்றான் நம் வீரன்.

சுந்தர சோழர் மறுபடியும் மலையமான் திருமகளை நோக்கி, “தேவி! இந்தப் பிள்ளை எவ்வளவு புத்திசாலி, பார்த்தாயா? நம்முடைய ஆதித்தனுக்கு இவனையொத்தவர்களின் உதவியிருந்தால், அவனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவனுடைய அஜாக்கிரதை சுபாவத்தைப் பற்றியும் விசாரப்பட வேண்டியதில்லை!” என்றார்.

பிறகு, வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி! பொன் மாளிகை கட்டியது உசிதமானாலும் உசிதமில்லாவிட்டாலும் நான் காஞ்சிக்கு வருவது சாத்தியமில்லை. நீதான் பார்க்கிறாயே! எப்போதும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறேன். நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். ஆதித்தன் தான் என்னைப் பார்ப்பதற்கு இங்கே வந்தாக வேண்டும். அவனைக் காண்பதற்கு எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. நாளைக்கு மீண்டும் வா! மறு ஓலை எழுதி வைக்கும்படி சொல்லுகிறேன்!” என்றார்.

இச்சமயத்தில், கூட்டமாகப் பலர் தரிசன மண்டபத்தை நெருங்கி வருவதை வந்தியத்தேவன் அறிந்தான். ஆகா! அந்தப் புலவர் கூட்டம் வருகிறது போலும்! அவர்களுடன் ஒருவேளை சின்னப் பழுவேட்டரையரும் வருவார். அப்புறம் தான் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாமலே போய் விடலாம்! நாலு வார்த்தையில் சுருக்கமாக இப்போதே சொல்லிவிட வேண்டியதுதான்! –இவ்விதம் சில விநாடிப் பொழுதில் சிந்தித்து முடிவு செய்து, “சக்கரவர்த்தி! தயவு செய்யுங்கள்! கருணைகூர்ந்து என் விண்ணப்பத்தைக் கேளுங்கள். தாங்கள் அவசியம் இந்தத் தஞ்சையிலிருந்து கிளம்பிவிட வேண்டும். இங்கே தங்களை அபாயம் சூழ்ந்திருக்கிறது! அபாயம்! அபாயம்!…” என்றான்.

அவன் இவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சின்னப் பழுவேட்டரையர் தரிசன மண்டபத்துக்குள் பிரவேசித்தார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் வந்தார்கள்.

வந்தியத்தேவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் கோட்டைத் தளபதியின் காதில் விழுந்தன. அவருடைய முகத்தில் கோபக் கனல் ஜ்வாலை விட்டது!

source

Previous articlePonniyin Selvan Part 1 Ch 25
Next articlePonniyin Selvan Part 1 Ch 27

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here