Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 34

Ponniyin Selvan Part 1 Ch 34

182
0
Ponniyin Selvan Part 1 Ch 34 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 34: லதா மண்டபம்

Ponniyin Selvan Part 1 Ch 34

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 34: லதா மண்டபம்

Ponniyin Selvan Part 1 Ch 34 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 34: லதா மண்டபம்

Ponniyin Selvan Part 1 Ch 34

அடர்ந்த மாந்தோப்புக்கிடையே சென்ற ஒற்றையடிப் பாதையின் வழியாக அம்மங்கை விடுவிடுவென்று நடந்து செல்ல, வந்தியத்தேவனும் விரைவாகத் தொடர்ந்து சென்றான். மரஞ் செடிகளின் மீது மோதிக் கொள்ளாமல், அந்த இருளில் நடந்து செல்லுவது கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு சமயம் இவன் மரத்தில் மோதிக் கொள்ளப் பார்த்துத் தயங்கி நின்றபோது, அந்த மங்கை திரும்பிப் பார்த்து, “ஏன் நிற்கிறாய்? வழி மறந்து போய் விட்டதா? நீதான் இருட்டில் கண் தெரிகிற மனிதன் ஆயிற்றே!” என்றாள். அதற்குப் பதிலாக வந்தியத்தேவன் உதட்டில் விரலை வைத்து முன்னால் அவள் சொன்னது போல் “உஷ்!” என்றான். அதே நேரத்தில் மதில் சுவருக்கு வெளியே ஏதோ சப்தம் கேட்டது. மனித நடமாட்டம் போலத் தொனித்தது. பிறகு இருவரும் மறுபடி நடந்தார்கள். கொஞ்ச தூரம் போனதும் வல்லவரையன் இலேசாகச் சிரித்தான். அந்த மங்கை திரும்பிப் பார்த்து, “என்னத்தைக் கண்டு சிரிக்கிறாய்?” என்றாள்.

“கண்டு சிரிக்கவில்லை; கேட்டுச் சிரிக்கிறேன்!”

“அப்படியென்றால்?…”

“என்னைத் தேடி வந்தவர்களின் காலடிச் சத்தத்தைச் சற்று முன் நீ கேட்கவில்லையா? அவர்கள் ஏமாந்து போனதை எண்ணிச் சிரிக்கிறேன்!”

அவள் சிறிது பயத்துடன், “உன்னை யாராவது தேடி வருகிறார்களா என்ன? எதற்காக?” என்றாள். “இல்லாவிட்டால் எதற்காக இந்தக் குருட்டு இருட்டில் மதில் சுவரில் வந்து மோதிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?” அச்சமயம் காற்றின் அசைவில் மரக்கிளைகள் விலகி நிலாக் கதிர் ஒன்று வந்தியத்தேவனுடைய முகத்தின் மீது விழுந்தது.

Ponniyin Selvan Part 1 Ch 34 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 34: லதா மண்டபம்

அந்தப் பெண் சற்று வியப்புடனும் திகைப்புடனும் அவனைப் பார்த்தாள்.

“என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டான்.

“நீ, நீதானா என்று பார்த்தேன்!”

“நான், நான் இல்லாவிட்டால் வேறு யாராயிருப்பேன்?”

“போன தடவை நீ வந்திருந்த போது பெரிய மீசை வைத்திருந்தாயே!”

“நல்ல கேள்வி கேட்கிறாய்! என்னைப் போல் சுவர் ஏறி குதித்து வருகிறவன் அடிக்கடி வேஷத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் எப்படி?”

“முன்னைக்கு இப்போது இளமையாய்த் தோன்றுகிறாயே?”

“உற்சாகம் இருக்கும்போது இளமைதானே வருகிறது!”

“அப்படி உனக்கு என்ன உற்சாகம் வந்தது?”

“உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு?”

“பரிகாசம் செய்ய வேண்டாம். இன்றைக்கு எங்கள் எஜமானி இளைய ராணிதான். ஒருநாள் நிச்சயமாக மகாராணி ஆவார்கள்!”

“அதைத்தான் நானும் சொல்லுகிறேன்.”

“இதுதானா சொல்வாய்? உன்னுடைய மந்திர சக்தியினால்தான் மகாராணி ஆனார்கள் என்று கூடச் சொல்வாய்! பாதி ராஜ்யத்தைக் கொடு என்று கேட்டாலும் கேட்பாய்!”

வந்தியத்தேவன் அறிய விரும்பியதை ஒருவாறு அறிந்து கொண்டான். பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. தீவிரமாக யோசித்துக் கொண்டே நடந்தான்.

தான் சந்திக்கப் போகிறது யாரை? பழுவூர் இளையராணியாயிருக்கலாம். அல்லது மதுராந்தகத் தேவரை மணந்து கொண்ட சின்னப் பழுவேட்டரையரின் மகளாயிருக்கலாம். தன்னை மந்திரவாதியென்று எண்ணி அந்தப் பெண் அழைத்துக் கொண்டு போகிறாள். போய், அந்த ‘இளையராணி’ யாராயிருந்தாலும் அவளைச் சந்திக்கும்போது எப்படி நடந்து கொள்வது? நெஞ்சே! தைரியத்தைக் கைவிடாதே! தைரியம் உள்ள வரையில் ஜயமும் உண்டு! சமயத்தில் ஏதேனும் யுக்தி தோன்றாமல் போகாது! இதுவரையில் எந்த நெருக்கடியிலும் நாம் தோல்வியுற்று வந்ததில்லை. அதிலும் பெண்பிள்ளை ஒருத்தியிடமா தோல்வியடையப் போகிறோம்?

ஒரு பெரிய மாளிகையை அவர்கள் நெருங்கிச் சென்றார்கள். ஆனால் மாளிகையின் முன் வாசலை நோக்கிச் செல்லவில்லை. பின்புற வாசலையும் நெருங்கவில்லை. மாளிகையின் ஒரு பக்கத்தில் தோட்டத்துக்குள் நீட்டி விட்டிருந்த சிருங்கார லதா மண்டபத்தை நெருங்கினார்கள். இன்னும் அருகில் நெருங்கிய போது, அந்த லதா மண்டபம் இரண்டு பெரிய பிரம்மாண்டமான மாளிகைகளை ஒன்று சேர்க்கும் பாதையைப் போல் அமைந்திருப்பது தெரிந்தது. அப்படிச் சேர்க்கப்பட்ட இரு கட்டடங்களும் ஒருவிதத்தில் மாறுபட்டிருந்தன. வலதுபுறத்து மாளிகை அதன் உள்ளே சுடர் விட்டு எரிந்த பல தீபங்களினால் ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளிருந்து பலவித கலகலப்பான தொனிகள் வந்து கொண்டிருந்தன. இடதுபுறத்துக் கட்டடத்திலோ, ஒரு சின்னஞ் சிறு தீபம் கூட எரியவில்லை. நிலா வெளிச்சத்தில் அதன் வெளிச்சுவர்கள் நெடிதுயர்ந்து தெரிந்தன. ஆனால் அந்த மாளிகையின் உள்ளே நிசப்தமும் இருளும் குடிகொண்டிருந்தன.

வந்தியத்தேவனை அழைத்துக் கொண்டு வந்த பெண், லதா மண்டபத்தை அணுகியதும் அவனைப் பார்த்துச் சமிக்ஞையினால் அங்கேயே நிற்கும்படி சொன்னாள். அவனும் அப்படியே நின்றான். அவ்விதம் நின்றபோது தான் அந்த இடத்தில் நிறைந்திருந்த மலர்களின் நறுமணத்தை அவன் உணர்ந்தான்.அப்பப்பா! என்ன வாசம்! என்ன வாசம்! மூக்கில் நெடி போல ஏறித் தலையைக் கிறுகிறுக்க அடிக்கிறதே!

அந்தப் பெண் லதா மண்டபத்துக்குள் நுழைந்ததும், அவளுடைய குரலும் இன்னொரு இனிய பெண் குரலும் கேட்டன. “வரச் சொல் உடனே! கேட்பானேன்? நான்தான் இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறேன் என்று தெரியுமே?” என்ற சொற்கள் அவனுக்கு மயக்கத்தை உண்டாக்கின. அந்தக் குரல் பழுவூர் இளையராணியின் குரல்தான்! சந்தேகமில்லை! அடுத்த கணம் அவள் முன்னால் போய் நிற்கப் போகிறோம். அந்த நிலைமையை எவ்விதம் சமாளிக்கப் போகிறோம்? எதிர்பார்த்த மந்திரவாதிக்குப் பதிலாகப் பல்லக்கில் வந்து மோதிய மனிதன் வந்து நிற்பதைக் கண்டு அவள் என்ன நினைப்பாள்? ஆச்சரியப்படுவாளா? கோபம் கொள்வாளா? ஒருவேளை மகிழ்ச்சி அடைவாளா?… அல்லது எவ்வித உணர்ச்சியையும் வௌியில் காட்டாமல் நடந்து கொள்வாளா?

அவனை அழைத்து வந்த மங்கை லதா மண்டபத்து வாசலில் நின்றபடி சமிக்ஞையால் அழைத்தாள்.

வந்தியத்தேவன் அவள் நின்ற இடத்தை அடைந்து மண்டபத்தின் உட்புறம் நோக்கினான். ஒரு நொடிப் பொழுதில் அங்கே தோன்றிய காட்சி அவன் கண் வழியாக மனத்தில் பதிந்தது. தங்க விளக்கு ஸ்தம்பத்தில் ஒளிர்ந்த தீபச் சுடர் பொன் ஒளியைப் பரப்பியது. ஏதோ ஓர் அபூர்வமான வாசனைத் தைலத்தை அந்த விளக்கில் விட்டிருக்க வேண்டும். ஆதலின் தீபச் சுடரின் புகை கமகமவென்று மணம் வீசிற்று. பல வர்ண நறுமண மலர்களைப் பரப்பிய சப்ரகூட மஞ்சத்தில் ஒரு பெண் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு வீற்றிருந்தாள்.

அவள் பழுவூர் இளையராணிதான். பகலில் பல்லக்கில் பார்த்தபோது அவள் அழகியாகத் தோன்றினாள். இரவில் தங்கக் குத்துவிளக்கின் வெளிச்சத்தில் அழகென்னும் தெய்வமே உருவெடுத்தது போலக் காணப்பட்டாள். மலரின் மணமும் விளக்கின் புகை மணமும் பழுவூர் இளையராணியின் மோகன உருவமும் சேர்ந்து வந்தியத்தேவனைப் போதை கொள்ளச் செய்தன.

வந்தியத்தேவா! ஜாக்கிரதை! ஒரே ஒரு தடவை நீ மதுபானம் செய்தாய்! உன் அறிவு கலங்குவதை அறிந்தாய்! பிறகு மதுவைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தாய்! இப்போது அதை ஞாபகப்படுத்திக்கொள்! மதுவின் போதையைக் காட்டிலும் சக்தி வாய்ந்த இந்த மயக்கத்தில் உன் அறிவைப் பறிகொடுத்துவிடாதே!

வந்தியத்தேவனைப் பார்த்த பழுவூர் இளையராணி நந்தினி, அவளுடைய பவழ இதழ்கள் சிறிது விரிந்து முத்துப் பற்களை வெளிக்காட்டும்படி வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள். பேச முடியாத நிலையை அவள் அச்சமயம் அடைந்திருந்தது வந்தியத்தேவனுக்கு அனுகூலமாகப் போயிற்று.

இலேசாக அவன் ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு, “அம்மணி! தங்கள் தாதிப் பெண்ணுக்குத் திடீரென்று சந்தேகம் வந்து விட்டது;– நான் மந்திரவாதியா இல்லையா என்று! அதை எப்படிக் கேட்டாள் என்று நினைக்கிறீர்கள்? ‘நீ நீதானா?’ என்று கேட்டாள்!” என்று சொல்லி மறுபடியும் சிரித்தான்.

நந்தினி புன்னகை புரிந்தாள். வந்தியத்தேவனுடைய கண் முன்னால் ஒரு மின்னல் மின்னியது! அது தேனைச் சொரிந்தது.

“இவளுக்கு அப்படித்தான் ஏதாவது சந்தேகம் திடீர் திடீர் என்று வந்துவிடும்! வாசுகி! ஏன் இங்கேயே மரம்போல் நிற்கிறாய்? உன் இடத்துக்குப் போ! யாராவது வரும் காலடிச் சத்தம் கேட்டால் கதவைப் படீரென்று சாத்து! என்றாள் நந்தினி.

“இதோ, அம்மா!” என்று சொல்லிவிட்டு, வாசுகி லதா மண்டபத்தின் உள் வழியாகப் பிரகாச மாளிகைக்குச் சென்ற நடைபாதையில் நடந்து போய்ச் சற்றுத் தூரத்தில் மங்கலாகத் தெரிந்த வாசற்படியாண்டை உட்கார்ந்து கொண்டாள்.

நந்தினி சிறிது குரலைத் தாழ்த்திக் கொண்டு, “உன்னை மந்திரவாதியில்லையென்றா இவள் சந்தேகிக்கிறாள்? அசட்டுப் பெண்! மந்திரவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர் வெறும் பொய்யர்கள். நீதான் உண்மை மந்திரவாதி! என்ன மாய மந்திரம் செய்து இந்தச் சமயத்தில் இங்கே வந்தாய்?” என்று கேட்டாள்.

“அம்மணி! மாயமந்திரம் செய்து நான் இங்கு வரவில்லை. சுவர் மீது சாத்தியிருந்த ஏணி மேல் ஏறித்தான் வந்தேன்!” என்றான் வந்தியத்தேவன்.

“அதுதான் தெரிகிறதே! இந்தப் பெண்ணை என்ன மாயமந்திரம் செய்து ஏமாற்றினாய் என்று கேட்டேன்.”

“நிலா வெளிச்சத்தில் ஒரு புன்னகை புரிந்தேன். அவ்வளவுதான்! அதற்குச் சரிப்பட்டு வராவிட்டால் தாங்கள் கொடுத்த மந்திர மோதிரத்தைக் காட்ட எண்ணியிருந்தேன்.”

“அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? அந்த மோதிரம் இருக்கும்போது பட்டப் பகலில் பகிரங்கமாக இங்கே வந்திருக்கலாமே? எதற்காக இந்தக் குருட்டு வழியில் திருட்டுத்தனமாக வந்தாய்?”

“அம்மணி! தங்கள் மைத்துனர் இருக்கிறாரே, சின்னப் பழுவேட்டரையர், அவருடைய ஆட்கள் சுத்தத் திருடர்கள். முதலில் என்னுடைய உடைகளையும் உடைமைகளையும் திருடப் பார்த்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து ஒரு கணம் கூடப் பிரியாமல் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து பிரிய பட்டபாடு பெரும் பாடாகப் போயிற்று. பிரிந்த பிறகு சந்து பொந்துகளில் புகுந்து தங்களுடைய மாளிகை மதில் சுவரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் சுவர் மேல் வைத்த ஏணியைப் பார்த்ததும் தாங்கள் தான் இந்த ஏழையை நினைவுகூர்ந்து இந்த ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன். அது தவறு என்று தெரிந்து கொண்டேன். மன்னிக்க வேண்டும்.”

“மன்னிப்பதற்கு அவசியம் ஒன்றும் ஏற்படவில்லையே!”

“அது எப்படி, அம்மணி ?”

“நீ நினைத்தது அவ்வளவாகத் தவறும் இல்லை. மந்திரவாதியை எதற்காக நான் தருவிக்க நினைத்தேன், தெரியுமா?”

“தெரியவில்லை அம்மணி! எனக்கு மந்திரமும் தெரியாது; ஜோசியமும் தெரியாது!”

“உன்னை நேற்றுக் காலையில் பார்த்தது முதலாவது உன்னுடைய ஞாபகமாகவே இருந்தது. நீ ஏன் இன்னும் என்னைப் பார்க்க வரவில்லையென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அதற்காகவே தான் நான் மந்திரவாதியைக் கூப்பிட்டனுப்பினேன்.”

“மிக்க ஆச்சரியமாயிருக்கிறது.”

“எது?”

“இப்போது நீங்கள் சொன்னதுதான். நேற்று உங்களைப் பார்த்தது முதலாவது எனக்கும் உங்கள் ஞாபகமாகவேயிருந்தது!”

“பூர்வ ஜன்ம வாசனையில் உனக்கு நம்பிக்கை உண்டா?”

“அப்படியென்றால்?”

“பூர்வ ஜன்மத்தில் இரண்டு பேருக்கு நட்போ, உறவோ இருந்தால், இந்த ஜன்மத்திலும் அத்தகைய சொந்தம் ஏற்படும் என்கிறார்களே, அதைத்தான் சொல்லுகிறேன்.”

“நேற்று வரையில் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நேற்றுத் தான் அதில் நம்பிக்கை பிறந்தது.”

இவ்விதம் வந்தியத்தேவன் கூறிய போது வெளிப்படையாகப் பொய் சொன்னான் என்றாலும், மனத்திற்குள் குடந்தை ஜோதிடர் வீட்டில் பார்த்த பெண்ணை நினைத்துக் கொண்டுதான் சொன்னான். ஆனால் நந்தினிக்கு அதைப் பற்றிய விவரமே தெரிய இடமில்லையல்லவா? தன்னைப் பற்றிச் சொல்வதாகவே நினைத்துக் கொண்டாள்.

“ஆனால் அதற்காக நீ என்னைப் பார்க்க வரவில்லையே? ஏதோ ஆழ்வார்க்கடியார்நம்பி என்பவர் செய்தி சொல்லி அனுப்பியதாக…”

“ஆம், அம்மணி, அவர் சொல்லி அனுப்பிய செய்தியைத் தங்களிடம் சொல்வதற்காகவே முதலில் தங்களைப் பார்க்க விரும்பினேன். தங்களை ஒருமுறை பார்த்த பிறகு, பழைய காரணமெல்லாம் மறந்து போய்விட்டது.”

“ஆழ்வார்க்கடியாரை நீ எங்கே பார்த்தாய்? என்ன செய்தி சொல்லியனுப்பினார்?”

“வீர நாராயணபுரத்துக்கு அருகில் ஆழ்வார்க்கடியார்நம்பியைச் சந்தித்தேன். அவர் தம் கைத்தடியின் சக்தியைக் கொண்டு விஷ்ணுதான் பெரிய தெய்வம் என்று மெய்ப்பிக்க முயன்றார். அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையரின் பரிவாரங்கள் வந்தன. அவரைத் தொடர்ந்து தங்கள் பல்லக்கும் வந்தது. அங்கே என்ன ரகளை என்று பார்ப்பதற்காகவோ என்னவோ, தங்களுடைய ஒரு பொற்கரம் பல்லக்கின் திரையை விலக்கிற்று. அப்போதுதான் தாங்கள் என்று தெரிந்து கொண்டு ஆழ்வார்க்கடியார் தங்களுக்கு ஒரு செய்தி அனுப்ப விரும்பினார். நானும் அன்றிரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கியபடியால் என்னிடம் செய்தி சொல்லி அனுப்பினார். ஆனால் கடம்பூரில் தங்களை நான் பார்க்க முடியவில்லை. தஞ்சாவூர்க் கோட்டைக்கருகில் சாலையில்தான் சந்திக்க முடிந்தது. அதுவும் தங்கள் பல்லக்கு என் குதிரை மேல் மோதியதினால்தான்!”

இவ்விதம் வந்தியத்தேவன் சொல்லி வந்தபோது நந்தினி மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் அவளுடைய முகபாவத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் வந்தியத்தேவன் சொன்னதைக் கேட்டதும், அவனைத் திரும்பிப் பார்த்து ஒரு மோகனப் புன்னகை புரிந்தாள். “ஆமாம்; நான் ஏறும் பல்லக்கு வெகு பொல்லாத பல்லக்குதான்!” என்றாள்.

Source

Previous articlePonniyin Selvan Part 1 Ch 33
Next articlePonniyin Selvan Part 1 Ch 35

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here