Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 44

Ponniyin Selvan Part 1 Ch 44

79
0
Ponniyin Selvan Part 1 Ch 44 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi. Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 44, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 44: எல்லாம் அவள் வேலை!

Ponniyin Selvan Part 1 Ch 44

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 44: எல்லாம் அவள் வேலை!

Ponniyin Selvan Part 1 Ch 44 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 44, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 44: எல்லாம் அவள் வேலை!

Ponniyin Selvan Part 1 Ch 44

மாமல்லபுரத்து மகா சிற்பிகளின் பரம்பரையில் தோன்றிய சிற்பக் கலைஞர் ஒருவர் இப்போது முன் வந்தார். புதிய முறையில் கருங்கற்றளி அமைப்பதற்கு அவருடைய மனோதர்ம கற்பனைப்படி சிறிய பொம்மைக் கோயில் ஒன்று அவர் செய்து கொண்டு வந்திருந்தார். அதை இப்போது மகாராணியிடம் காட்டினார்.

அதைப் பார்த்து மகாராணி மிகவும் வியந்தார். ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நின்றவரைப் பார்த்து, “பட்டரே! இந்த ஆலய அமைப்பு எவ்வளவு சிறப்பாயிருக்கிறது, பார்த்தீர்களா? தமிழகத்திலுள்ள முக்கியமான சிவஸ்தலங்களிலெல்லாம் இம்மாதிரி புது முறையில் ஆலயம் எடுப்பிக்க வேண்டும் என்று என்னுடைய உள்ளத்தில் ஆவல் பொங்குகிறது!? என்று சொன்னார்.

“தாயே! தங்கள் விருப்பம் நிறைவேறுவதில் தடை என்ன இருக்கிறது? தேவாரப் பதிகப் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் இம்மாதிரி கற்றளிகள் எடுப்பிக்கலாம். இந்த ஆலய அமைப்பைப் பார்த்தவுடனே இது ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ என்பதை ஜனங்கள் உணர்ந்து கொள்வார்கள்!” என்று சொன்னார் ஈசான சிவபட்டர்.

“ஆம், ஆம்! அப்பர் பெருமானும் ஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தியும் பாடிய பதிகங்களையெல்லாம் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய பாதங்கள் பட்டுப் புனிதமாகி, அவர்களுடைய பாடல்களினால் தெய்வீகமடைந்த ஸ்தலங்களில் எல்லாம் இம்மாதிரி வானளாவிய விமான கோபுரங்களுடன் கற்றளிகளை எடுக்க வேண்டும். இந்த இரண்டுந்தான் என் மனோரதங்கள். இவை நிறைவேறுமா என்று அடிக்கடி ஐயம் உண்டாகிறது. என்னுடைய நாயகர் மட்டும் மேற்குத் திசை சென்று அகாலத்தில் இறைவன் திருவடிகளைச் சேராதிருந்தால்,– இன்னும் சில காலம் ஜீவித்திருந்தால், — என் மனோரதங்கள் எல்லாம் நிறைவேறியிருக்கும்…..”

“இப்போது மட்டும் என்ன குறைவு, தாயே! தாங்கள் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றித் தர வேண்டும் என்று சக்கரவர்த்தி கட்டளை பிறப்பித்திருக்கிறார் அல்லவா? அவருடைய புதல்வர்கள் இருவரும் தங்கள் மனத்தில் நினைப்பதற்கு முன்னாலேயே தங்களுக்கு இது விருப்பமாயிருக்கும் என்று ஊகித்தறிந்து, அதை நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது…”

“இருந்தாலும் என் மனத்தில் இப்போது அவ்வளவு உற்சாகம் இல்லை. ஏதேதோ கேள்விப்படுகிறேன். நான் செய்யும் கோவில் திருப்பணியினால் அரசாங்கப் பொக்கிஷம் காலியாகி விடுகிறதென்று சிலர் குறைபடுகிறார்களாம். ‘சிவனுக்கு இவ்வளவு ஆலயங்கள் என்னத்திற்கு?” என்று கேட்கிறார்களாம். மற்றவர்கள் கேட்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. காஞ்சியில் உள்ள இளவரசர் கூட…..”

இவ்விதம் பெரிய பிராட்டியார் சொல்லியபோது, ஆழ்வார்க்கடியான் ஓர் அடி முன்னால் வந்து நின்று, “தாயே! அந்த மாதிரி கேட்பவர்களில் அடியேனும் ஒருவன்!” என்றான்.

மகாராணி அவனைச் சற்று வியப்புடன் பார்த்தார். மற்றவர்கள், ‘இது என்ன விபரீதம்?’ என்ற முகபாவத்துடன் ஆழ்வார்க்கடியானை உற்று நோக்கினார்கள்.

ஆழ்வார்க்கடியான் மேலும் தொடர்ந்து ஆத்திரம் ததும்பிய குரலில், “அன்னையே! என் வயிறு கொதிக்கிறதே! இந்த மாதிரி அநியாயம் உண்டா? தர்ம தேவதையின் அவதாரமாக விளங்கும் தாங்கள் இந்த அநீதிக்கு இடம் கொடுக்கலாமா?” என்று அலறினான்.

திருமலையப்பனுக்குப் பக்கத்தில் நின்ற ஈசான சிவபட்டர், “மகாராணி! என் சகோதரன் இப்படித்தான் ஏதாவது உளறுவான். திடீரென்று அவனுக்கு வெறி வந்துவிடும். தயவு செய்து மன்னித்து அருள வேண்டும்!” என்றார்.

அக்காலத்தில் சைவர்களும் வைஷ்ணவர்களும் தனித் தனி சாதியாகப் பிரிந்திருக்கவில்லை. ஒரே குடும்பத்தில் சைவப் பற்றுள்ளவர்களும் வீர வைஷ்ணவர்களும் இருப்பார்கள். ஒரே பட்டர் சிவன் கோவிலிலும் திருமால் கோவிலிலும் பூஜா கைங்கரியம் செய்வார். ஈசான சிவ பட்டர் அத்தகைய பரந்த நோக்கம் கொண்டவர். திருமலையப்பன் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரன். இருவரும் பரஸ்பரம் மிக்க அன்பு கொண்டவர்கள். ஆகவே தம்பியின் பதற்றமான பேச்சுக்காக ஈசான சிவபட்டர் மகாராணியிடம் மன்னிப்புக் கோரினார்.

தேவி புன்னகை புரிந்து, “திருமலை! சற்று அமைதியாகப் பேசு! இப்போது என்ன அநியாயம் நடந்து விட்டது?” என்று கேட்டார்.

“அம்மா! பேயாண்டியும் கையில் கபாலம் ஏந்திப் பிக்ஷை எடுத்துப் பிழைப்பவனுமாகிய சிவனுக்கு எத்தனை ஆலயங்கள்? எத்தனை மாடக் கோயில்கள்? எத்தனை கற்றளிகள்? உலகத்தையெல்லாம் காத்து ரக்ஷிக்கும் விஷ்ணு மூர்த்திக்கு ஒரு திருக்கோயில் கூடக் கிடையாதா? ஒரு பழைய கோயிலைத் திருப்பணியாவது செய்யக் கூடாதா?” என்று திருமலையப்பன் ஓலமிட்டான்.

“அம்மா! அகில புவனமும் உய்ய ஆனந்த நடனமாடும் பெருமானுக்கு அரங்கமும் அம்பலமும் சிற்சபையும் பொற்சபையும் மாடக் கோயிலும் மதில் சூழ்ந்த மாளிகையும் வேண்டும். ஓயாமல் தூங்குகிற திருமாலுக்கு ஒரு சிறிய இடம் போதாதா? தீபம் இல்லாத இருட்டறைதானே அவருக்கு வேண்டும்? மாடக் கோயில்களும் கற்றளிகளும் என்னத்திற்கு?” என்றார் ஈசான சிவபட்டர்.

“அண்ணா! ஓயாமல் தூங்கும் பெருமாள்தான் உலகளந்த பெருமாள்! மகாபலியைப் பாதாளத்தில் அழுத்திய பெருமாள்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“அப்படிப்பட்ட உலகளந்த பெருமாள் எங்கள் சிவபெருமானுடைய பாதார விந்தங்களைத் தரிசிப்பதற்குத் தோண்டித் தோண்டிப் பாதாளம் வரையில் சென்றும் எம்பெருமான் பாதங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை!” என்றார் ஈசான சிவபட்டர்.

“உங்கள் சிவன் அவ்வளவு பெரியவராயிருந்தால், அவருக்குக் கோயில் எதற்கு என்றுதான் கேட்கிறேன். கோயிலுக்குள் வரும்போது அவர் தலை இடித்துக் கோயில் இடிந்து விழுந்து விடுமே!” என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான்.

மழவரையர் திருமகள் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே, “உங்கள் சண்டையைக் கொஞ்சம் நிறுத்துங்கள். திருமலை! நீ சொல்வது என்ன? பெருமாளுக்குக் கோயில் கட்டக் கூடாது என்று யார் சொன்னது? எந்த ஊர் விண்ணகரத்தைப் புதுபிக்க வேண்டும் என்கிறாய்? அதை நல்ல முறையில் சொல்லுவதுதானே?” என்றார்.

“அம்மணி! தங்களுடைய மாமனார், மூன்று உலகும் கீர்த்தி பெற்ற பராந்தக சக்கரவர்த்தி. அவருடைய பட்டப் பெயரால் விளங்கும் வீரநாராயணபுரத்துக்குப் போயிருந்தேன். அங்கே வீரநாராயணப் பெருமாள் அல்லும் பகலும் தூங்காமல், கண் மூடாமல், மாகடல் போன்ற வீரநாராயண ஏரியைக் காத்து அருள் புரிந்து வருகிறார். அத்தகைய பெருமானுடைய கோயிலில் செங்கல் சுவர்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கோயில் இடிந்தால் ஏரிக் கரையும் இடிந்து நூறு நூறு ஊர்கள் பாழாகிவிடும். வீரநாராயணப் பெருமாளின் கோயிலைக் கற்றளியாக்கித் திருப்பணி செய்ய வேண்டும்!” என்றான்.

“ஆகட்டும், செய்வோம்! அதைப் பற்றி விவரமாக என்னிடம் சொல்! இவர்கள் எல்லாரும் இப்போது போகட்டும்!” என்று சோழகுல மூதாட்டி கூறினார்.

அந்தக் குறிப்பை உணர்ந்து ஈசான சிவபட்டர் உள்பட அனைவரும் வெளியேறிச் சென்றார்கள்.

உடனே, செம்பியன் மாதேவி குரலைத் தாழ்த்திக் கொண்டு, “திருமலை! யாத்திரையில் எங்கெங்கே போயிருந்தாய்? என்னென்ன பார்த்தாய்? என்னென்ன கேள்விப்பட்டாய்? விவரமாய்ச் சொல்லு! ஏதோ முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கிறாய். அதனால் தான் அப்படிக் குறுக்கிட்டுப் பேசினாய், இல்லையா?” என்று சொன்னார்.

“ஆம், தாயே! முக்கியமான விஷயம் பல கொண்டு வந்திருக்கிறேன். ஆயினும் தங்கள் திருவுள்ளத்தை நோக்கிக் காத்திருப்பேன். ஆனால் காஞ்சியில் உள்ள இளவரசரைப் பற்றி ஏதோ சொல்லத் தொடங்கினீர்கள். அதற்காகவே தடை செய்தேன். சற்று முன் இங்கே இருந்தவர்களில் உண்மையானவர் யார், ஒற்றர் யார் என்று யாருக்குத் தெரியும்? நாட்டில் எத்தனையோ விபரீதங்கள் நிகழ்ந்து வருகின்றன. எப்போது யாரால் என்ன துரோகம் நடக்கும் என்று சொல்வதற்கில்லை!” என்றான் திருமலையப்பன்.

பெரிய பிராட்டி பெருமூச்சு எறிந்தார். “ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இரத்த பாசம் உள்ளவர்கள், ஒருவரையொருவர் சந்தேகிக்கும்படி ஆகிவிட்டது. ஆதித்த கரிகாலன் ஒரு காலத்தில் என்னிடம் எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தான்? சொந்தத் தாயைக் காட்டிலும் நூறு மடங்கு அன்பும் மரியாதையும் கொண்டிருந்தானே? அவன் கூடவல்லவா என் பேரில் ஐயுறும்படி ஆகிவிட்டது! திருமலை! என் நாயகருடன் நானும் இந்த மண்ணுலகை விட்டுப் போயிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! என்னை வரக் கூடாதென்று தடுத்து விட்டாரே? இங்கே செய்ய வேண்டிய பணிகளையும் கொடுத்து விட்டல்லவா போய் விட்டார்? என்ன துர்ப்பாக்கியசாலி நான்?” என்றார்.

“அம்மா! தங்கள் பதி முக்காலமும் உணர்ந்த மகான். கலியுகத்தில் ஜனக மகாராஜாவைப் போல் இந்தச் சோழ சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். தங்களை இருக்கும்படி அவர் சொல்லிப் போனது இந்த நாடு செய்த பாக்கியம். நூறு ஆண்டாகப் பல்கிப் பெருகிவரும் இந்தச் சோழப் பேரரசு சகோதரச் சண்டையினால் நசித்து நாசமாகாமல் காப்பாற்றும் பொறுப்பு தங்களைச் சார்ந்தது. தங்களாலே தான் அது முடியக் கூடியது!”

“எனக்குத் தோன்றவில்லை. என் சொந்த மகன் நான் சொல்வதைக் கேட்கவில்லை என்று ஏற்பட்ட பிறகு மற்றவர்களை நான் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? இருக்கட்டும்; ஒற்றர்களைப் பற்றிச் சொன்னாயே? இங்கே யார் ஒற்றர்களை அனுப்பியிருக்க முடியும்? இளவரசன் ஆதித்த கரிகாலன் அனுப்பியிருப்பான் என்று நினைக்கிறாயா? என் பேரில் அவனுக்கு அவ்வளவு அவநம்பிக்கை வந்து விட்டதா?” என்றார் சிவ பக்த சிரோமணியான மாதரசி.

“என்னுடைய இரு காதினாலும் கேட்டேன், தாயே! இல்லாவிட்டால் இளவரசர் கரிகாலர் தங்கள் பேரில் ஐயப்படுவார் என்பதை நான் ஒரு நாளும் நம்பியிருக்க மாட்டேன்……..”

“என்ன கேட்டாய், திருமலை! உன் காதினால் என்ன கேட்டாய்?”

“மாமல்லபுரத்துக் கற்கோயில் ஒன்றின் அருகில் உட்கார்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்…”

“அவர்கள் என்றால் யார்?”

“இளவரசர் அதித்த கரிகாலர் ஒன்று, திருக்கோவலூர் மலையமான் இரண்டு, பல்லவப் பார்த்திபேந்திரன் மூன்று, – இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருளடைந்த கற்கோயிலுக்குள் நான் மறைந்திருந்து கேட்டேன். மலையமானும் பார்த்திபேந்திரனும் வெகு ஆத்திரமாகப் பேசினார்கள். இரண்டு பழுவேட்டரையர்களும் தங்கள் குமாரர் மதுராந்தகத் தேவரும் சேர்ந்து சதி செய்து சக்கரவர்த்தியைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். அதில் தங்களுக்கும் சம்பந்தம் இருக்கத்தான் வேண்டும் என்று மலையமான் கூறினான். அதை மற்றவர்கள் ஆமோதித்தார்கள். தஞ்சாவூர் மீது படையெடுத்துச் சென்று சக்கரவர்த்தியை விடுவித்துக் கொண்டு வர வேண்டும் என்று பார்த்திபேந்திரன் சொன்னான். அதையும் மற்ற இருவரும் ஆமோதித்தார்கள். ஆனால் சக்கரவர்த்தியைச் சண்டையின்றிக் காஞ்சீபுரத்துக்குக் கொண்டு வர இன்னும் ஒரு முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று இளவரசர் கூறினார். அதன் பேரில் சக்கரவர்த்திக்கு ஓலை எழுதி ஒரு தூதனிடம் கொடுத்து அனுப்பத் தீர்மானித்தார்கள். அந்தத் தூதன் யார் என்பதையும் நான் கண்டு கொண்டேன். அவன் சாதாரணத் தூதன் அல்ல. மகா சாமர்த்தியசாலி; வீர பராக்கிரமசாலி. தூதன் வேலையோடு ஒற்றன் வேலையையும் செய்யக்கூடியவன். அவனுடன் நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். நான் தட்டியில் நுழைந்தால் அவன் கோலத்துக்குள் நுழையப் பார்த்தான். அவன் ஒன்றுமே தெரியப்படுத்தாமல் என்னிடமிருந்து பல விஷயங்களைக் கிரஹிக்கப் பார்த்தான். குடந்தை ஜோதிடர் அவனிடம் தமது கைவரிசையைக் காட்டினார். அதுவும் பலிக்கவில்லை. பிறகு அவன் தஞ்சாவூருக்குச் சென்று சக்கரவர்த்தியிடம் ஓலையைக் கொடுத்துவிட்டான் என்று கேள்விப்படுகிறேன்……….”

“அப்புறம் என்ன நடந்தது? அதற்குச் சக்கரவர்த்தி என்ன மறுமொழி சொன்னாராம்?”

“மறு நாளைக்கு விடை எழுதித் தருவதாகச் சொன்னாராம். அதற்குள் அவன் பேரில் பழுவேட்டரையர்களுக்கு ஏதோ சந்தேகம் வந்து விட்டது. அவர்களுடைய கட்டுக் காவல்களையெல்லாம் மீறிக் கொண்டு அவன் எப்படியோ தப்பித்துச் சென்று விட்டானாம்!”

“அப்படியானால் அவன் மிகச் சாமர்த்தியசாலிதான்; சந்தேகமில்லை. அப்புறம் நீ என்ன செய்தாய்? காஞ்சீபுரத்திலிருந்து கிளம்பிய பின்?”

Ponniyin Selvan Part 1 Ch 44 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 44, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 44: எல்லாம் அவள் வேலை!

“நேரே இங்கு வருவதற்காகவே புறப்பட்டேன். வழியில் வீரநாராயணபுரத்தில் பெருமாளைத் தரிசிக்கத் தங்கினேன். தங்கிய இடத்தில் பெருமாள் அருளினால் ஒரு பெரிய இரகசியத்தை அறியும்படி நேர்ந்தது….”

“அது என்ன? இன்னும் ஒரு இரகசியமா?”

“ஆம், தாயே! கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அன்று இரவு ஒரு பெரிய விருந்து என்று தெரிந்தது. அந்த விருந்துக்குப் பெரிய பழுவேட்டரையர் வந்தார். அவருடன் இளையராணியின் பல்லக்கும் வந்தது!”

“திருமலை! எல்லாம் அவளுடைய செயல்தான்! இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது நேர்ந்திருக்கும் ஆபத்து அந்தப் பெண்ணால் ஏற்பட்டதுதான்! அவளை நீ சந்தித்துப் பேச முடிந்ததா?”

“முடியவில்லை, அம்மா! முடியவில்லை! தங்கள் கட்டளையின் பேரில் அந்தப் பெண் பாம்பை என் சகோதரியாகப் பாவித்து எத்தனை வருஷம் வளர்த்தேன்! எங்கெல்லாம் தேடி அலைந்து பிரபந்த பாசுரங்களைக் கற்றுக் கொண்டு வந்து அவளுக்குக் கற்பித்தேன்! அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது! பெரிய பழுவேட்டரையரின் ராணியான பிறகு அவள் என்னைப் பார்க்கக் கூட மறுக்கிறாள்…!”

“அதற்காக வருத்தப்பட்டு என்ன பயன்? இந்த உலகத்து மனிதர்களின் காரியங்கள் இப்படித்தான். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக முடிகிறது…… அப்புறம் கடம்பூரில் நடந்தது என்ன?”

“பல்லக்கிலே வந்தவள் நந்தினிதான் என்று எண்ணிக் கொண்டு எப்படியாவது அவளைச் சந்திப்பது அல்லது ஓலை எழுதி அனுப்பியாவது எச்சரிக்கை செய்வது என்ற உத்தேசத்துடன் கடம்பூருக்குச் சென்றேன். பெரும் அபாயத்துக்குத் துணிந்து கடம்பூர் மாளிகையின் வௌிச் சுவர் ஏறி குதித்தேன்; அப்போது தான் அந்த அதிசயமான மர்ம இரகசியம் தெரிய வந்தது………”

“திருமலை! உன் வழக்கமே இப்படித்தான். மேலும் மேலும் ஆவலைக் கிளப்புவாயே தவிர, செய்தியைச் சொல்ல மாட்டாய். அது என்ன அப்படிப்பட்ட அதிசயமான மர்ம இரகசியம்…..?”

“மன்னிக்க வேண்டும், தாயே! அதைச் சொல்லுவதற்கே தயக்கமாயிருக்கிறது. மூடு பல்லக்கில் இருந்தது பழுவூர் இளையராணி அல்ல. பழுவேட்டரையர் தாம் போகுமிடமெல்லாம் இளையராணியை அழைத்துக் கொண்டு போகிறார் என்று நாம் எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தோமே, அது பெரிய தவறு…..”

“பழுவேட்டரையர் பின் யாரை மூடுபல்லக்கில் வைத்து அழைத்துப் போகிறார்? அந்தக் கிழவரின் பெண் சபலத்துக்கு அளவேயில்லையா?”

“மூடு பல்லக்கில் இருந்தது ஸ்திரீ அல்ல, தாயே!”

“ஸ்திரீ இல்லை என்றால்? எந்த ஆண்மகன் அப்படி மூடுபல்லக்கில் மறைந்து கொண்டு வருவான்?”

“மன்னிக்க வேண்டும், அம்மா! மூடுபல்லக்கில் மறைந்து வந்தது தங்களுடைய திருக்குமாரர் மதுராந்தகத் தேவர்தான்!”

செம்பியன் மாதேவி சிறிது நேரம் திகைத்து நின்று விட்டார்.

“கடவுளே! நான் செய்த குற்றத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று தமது வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பிறகு, ஆழ்வார்க்கடியான் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரியில் நடந்த சதிக் கூட்டத்தைப் பற்றிச் சொன்னான். அதைக் கேட்டு அம்மாதரசி அடைந்த மனத்துயரைச் சொல்லி முடியாது. “ஐயோ! என் மகனே! உன்னைச் சிவ ஞானச் செல்வனாக வளர்க்க முயன்றேனே? அதன் பயனா இது? சோழர் பெருங்குலத்துக்கு உன்னால் இத்தகைய அபகீர்த்தியா நேர வேண்டும்? சோழப் பேரரசுக்கு இத்தகைய பெருந் தீங்கு உன்னாலேயா ஏற்பட வேண்டும்?” என்று புலம்பினார்.

பின்னர், “திருமலை! மறுபடியும் என்னைப் பார்த்துவிட்டுப் போ! அதற்குள் குந்தவையிடம் பேசி இந்தப் பெரும் விபத்தை எப்படித் தடுக்கலாம் என்று யோசித்துச் சொல்லுகிறேன்!” என்றார்.

“தாயே! இளவரசியிடம் கூடத் தாங்கள் இதைப் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது.”

“ஏன்? அவளைப் பற்றிக் கூட ஐயப்படுகிறாயா என்ன?”

“அது இயற்கைதானே அம்மா? ஆதித்த கரிகாலரின் அருமைச் சகோதரிதானே அவர்?”

“அதனால் என்ன…? திருமலை! சூரியன் மேற்கில் உதயமாகிக் கிழக்கே அஸ்தமித்தது என்று நீ சொன்னாலும் நம்புவேன். சிவபெருமானைக் காட்டிலும் திருமால் பெரிய தெய்வம் என்று நீ சாதிப்பதை நம்பினாலும் நம்புவேன். ஆனால் குந்தவையின் பேரில் குற்றம் சொன்னால் நம்ப மாட்டேன். அவள் பிறந்த அன்றைக்கு அரண்மனை மருத்துவச்சி எடுத்து வந்து குழந்தையை என் இரு கரங்களிலும் கொடுத்தாள். அன்று முதலாவது நானே அவளை வளர்த்து வந்தேன். என் வயிற்றில் பிறந்த மகனைக் காட்டிலும் அருமையாக வளர்த்து வந்தேன். அவளும் என்னையே பெற்ற தாயாகவும், தகப்பனாகவும் எண்ணி இன்று வரை அன்பும் மரியாதையும் செலுத்தி வருகிறாள்……”

“அம்மா! ஒன்று கேட்கிறேன். குந்தவை தேவி குடந்தை சோதிடரிடம் சென்று வந்ததைப் பற்றித் தங்களிடம் சொன்னாரா?”

“இல்லை; அதனால் என்ன?”

“ஜோசியர் வீட்டில் வாணர்குலத்து வாலிபன் ஒருவனைப் பார்த்தது பற்றியும் மறுபடி அவனை அரிசிலாற்றங்கரையில் சந்தித்தது பற்றியும் சொன்னாரா?”

“இல்லை; இதெல்லாம் என்ன கேள்வி? இப்படிக் கேட்பதில் உன் கருத்து என்ன?”

“தங்களிடம் சொல்லக் கூடாத இரகசியம் ஒன்று இளவரசி வைத்திருக்கிறார் என்பதுதான். நான் குறிப்பிட்ட அந்த வாலிபன்தான் ஆதித்த கரிகாலரின் தூதன்; ஒற்றன் என்று சொன்னாலும் தவறாகாது.”

“திருமலை! அதெல்லாம் எப்படியாவது இருக்கட்டும். என்னிடம் குந்தவை ஏதேனும் ஒன்றைச் சொல்லவில்லையென்றால், அதற்குத் தக்க காரணம் இருக்கும். அவளிடம் சந்தேகப்படுவதைக் காட்டிலும் என் பிராணனையே விட்டு விடுவேன்!” என்றார் சிவஞான கண்டராதித்தரின் பட்டமகிஷி.

“ஐயையோ! அப்படி ஒன்றும் நேர வேண்டாம். தங்களுடைய நம்பிக்கையே மெய்யாகட்டும். இளவரசி என்னிடம் ஏதோ கேட்பதற்காக வரச் சொல்லியிருக்கிறார். தாங்கள் பார்க்க விரும்புவதாக நானே தெரிவித்து விடுகிறேன்” என்றான்.

Source

Previous articlePonniyin Selvan Part 1 Ch 43
Next articlePonniyin Selvan Part 1 Ch 45

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here