Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 49

Ponniyin Selvan Part 1 Ch 49

106
0
Ponniyin Selvan Part 1 Ch 49 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi. Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 48, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 49: விந்தையிலும் விந்தை!

Ponniyin Selvan Part 1 Ch 49

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 49: விந்தையிலும் விந்தை!

Ponniyin Selvan Part 1 Ch 49 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 48, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 49: விந்தையிலும் விந்தை!

Ponniyin Selvan Part 1 Ch 49

குந்தவைப் பிராட்டி வந்தியத்தேவன் நீட்டிய ஓலையைப் பெற்றுக் கொண்டு படித்தாள். அதுவரையில் நெரிந்த புருவங்களுடன் சுருங்கியிருந்த அவள் முகம் இப்போது மலர்ந்து பிரகாசித்தது.

வல்லவரையனை நிமிர்ந்து நோக்கி, “ஓலையைக் கொடுத்து விட்டீர். இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டாள் குந்தவை தேவி.

“தங்களிடம் ஓலையைக் கொடுத்ததுடன் என் வேலையும் முடிந்து விட்டது. இனி, நான் ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்.”

“உமது வேலை முடியவில்லை; இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது!”

“தாங்கள் சொல்லுவது ஒன்றும் விளங்கவில்லை, தேவி!”

“உம்மிடம் அந்தரங்கமான வேலை எதையும் நம்பி ஒப்புவிக்கலாம் என்று இதில் இளவரசர் எழுதியிருக்கிறாரே? அதன்படி நீர் நடந்து கொள்ளப் போவதில்லையா?”

“இளவரசரிடம் அவ்விதம் ஒப்புக் கொண்டுதான் வந்தேன். ஆனால் என்னை நம்பி முக்கியமான வேலை எதுவும் ஒப்புவிக்க வேண்டாம். தங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்.”

“உமது கோரிக்கை எனக்கு விளங்கவில்லை. ஒன்றை ஒப்புக் கொண்ட பிறகு பின்வாங்குவதுதான் வாணர் குலத்தின் மரபா?”

“பழம் பெருமை பேசுவது வாணர் குலத்தின் மரபு அன்று; ஒப்புக் கொண்டு பின்வாங்குவதும் வாணர் குலத்து மரபு அன்று.”

“பின்னர், ஏன் தயக்கம்? பெண் குலத்தின் பேரில் கொண்ட வெறுப்பா? அல்லது என்னைக் கண்டால் பிடிக்கவில்லையா?” என்று இளவரசி கூறி இளநகை புரிந்தாள்.

ஆகா! இது என்ன கேள்வி? கடலுக்குச் சந்திரனைப் பிடிக்காமல் போகுமா? பிடிக்கவில்லையென்றால் ஆயிரம் அலைக் கைகளையும் நீட்டிப் பூரண சந்திரனை ஏன் தாவிப் பிடிக்க முயல்கிறது? நீல வானத்துக்குப் பூமாதேவியைப் பிடிக்கவில்லையென்று யார் சொல்லுவார்கள்? பிடிக்காது போனால், இரவெல்லாம் ஆயிரமாயிரம் நட்சத்திரக் கண்களினால் இந்தப் பூமியை உற்று உற்றுப் பார்த்து ஏன் பூரித்துக் கொண்டிருக்கிறது? மேகத்துக்கு மின்னலைப் பிடிக்காதிருக்குமா? பிடிக்கவில்லையென்றால், தன்னைப் பிளந்து கொண்டு பாய்ந்தோடும் மின்னலை அப்படி ஏன் இறுகத் தழுவி மார்போடு அணைத்துக் கொள்கிறது? வண்டுக்கு மலர் பிடிப்பதில்லையென்பது உண்டா? அங்ஙனமானால் ஏன் ஓயாமல் மலரைச் சுற்றி வட்டமிட்டு மதிமயங்கி விழுகிறது? விட்டில் பூச்சிக்கு விளக்கைப் பிடிக்கவில்லையென்றால் யாரேனும் நம்புவார்களா? அவ்வாறெனில், ஏன் அந்த விளக்கின் ஒளியில் விழுந்து உயிரை விடுகிறது? தேவி! நல்ல கேள்வி கேட்டீர்! தங்களை எனக்குப் பிடிக்கவில்லையென்றால், தங்களது கடைக்கண் பார்வை என்னை ஏன் இப்படித் திகைக்க வைக்கிறது? தங்களது இதழ்களின் ஓரத்தில் விளையாடும் இளநகை என்னை ஏன் இவ்விதம் சித்தப்பிரமை கொள்ளச் செய்கிறது?…. இவ்வளவு எண்ணங்களும் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் தோன்றின. ஆனால் நாவினால் சொல்லக்கூடவில்லை.

“ஐயா! என்னுடைய கேள்விக்கு மறுமொழி சொல்லவில்லையே? வாணர் குலத்தில் பிறந்த வீர புருஷன் கேவலம் ஒரு பெண்ணின் ஏவலைச் செய்வதா என்று தயக்கமா? இளவரசர் உங்களிடம் இந்த ஓலையைக் கொடுத்தபோது இதில் எழுதியிருப்பதைப் பற்றிச் சொல்லவில்லையா?” என்று இளவரசி மீண்டும் வினவினாள்.

“தேவி! இளவரசர் விருப்பத்தை நன்கு தெரிந்து கொண்டுதான் புறப்பட்டு வந்தேன். ஆனால் நல்லவேளையில் என் யாத்திரையைத் தொடங்கவில்லையெனத் தோன்றுகிறது. ஆகையால் வழியெல்லாம் விரோதிகளைச் சம்பாதித்துக் கொண்டு வந்தேன். உற்ற நண்பனையும் பகைவன் ஆக்கிக் கொண்டேன். நாலாபுறத்திலும் பகைவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் தாங்கள் இடும் பணியை நான் நிறைவேற்றுவதாக எப்படி உறுதி சொல்ல முடியும்? இதனால்தான் தயங்குகிறேன். என்னால் தங்கள் காரியம் கெட்டுப் போகக் கூடாதல்லவா?” என்று சொன்னான் வல்லவரையன்.

“யார் யார் அந்தப் பகைவர்கள்? எனக்குத் தெரிவிக்கலாமா?” என்று குந்தவை கவலை தொனித்த குரலில் கேட்டாள்.

“பழுவேட்டரையர்கள் என்னை வேட்டையாடிப் பிடிக்க நாலாபுறமும் ஆட்களை ஏவியிருக்கிறார்கள். என் உயிர் நண்பனாயிருந்த கந்தமாறன் நான் அவனை முதுகில் குத்திக் கொல்ல முயன்றதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். ஆழ்வார்க்கடியான் என்னும் வீர வைஷ்ணவ வேஷதாரி ஒருவன் என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். பழவூர் இளையராணி நந்தினிதேவி என் மீது ஒரு மந்திரவாதியை ஏவி விட்டிருக்கிறாள். எந்த நிமிஷத்தில் யாரிடம் நான் அகப்பட்டுக் கொள்வேனோ, தெரியாது….”

வெள்ளத்திலிருந்து கரையேறித் தப்பிய அன்றிரவு மந்திரவாதியுடன் நேர்ந்த அனுபவம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. பகலில் பிரயாணம் செய்வதன் அபாயத்தை எண்ணி மூங்கில் காடுகளிலும் வாழைத் தோப்புகளிலும் அவன் பொழுது போக்கினான். இரவில் நதிக் கரையோடு நடந்து சென்றான். வெகுதூரம் நடந்து களைத்து இரவு மூன்றாம் ஜாமத்தில் ஒரு பாழடைந்த பழைய மண்டபத்தை அடைந்தான். வெளியில் நிலா மதியம் பட்டப் பகல் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மண்டபத்துக்குள்ளேயும் சிறிது தூரம் நிலா வெளிச்சம் புகுந்து பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது. வெளிச்சமாயிருந்த பகுதியைக் கடந்து இருளடைந்த பகுதிக்குச் சென்று வந்தியத்தேவன் படுத்துக் கொண்டான். கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்த சமயத்தில் வெகு சமீபத்திலிருந்து ஆந்தையின் அகோரமான குரல் வந்தது. பழுவூர் இளையராணியுடன் லதா மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அதே மாதிரி ஆந்தைக் குரல் கேட்டது அவனுக்கு நினைவு வந்து திடுக்கிட்டு எழுந்தான். உள்ளே இருட்டின பகுதியிலிருந்து இரு சிறிய ஒளிப் பொட்டுகள் அவனை உற்று நோக்கின.

வெளியிலே போய் விடலாம் என்று எண்ணி இரண்டு அடி நடந்தான். வெளியிலிருந்து யாரோ உள்ளே வரும் காலடிச் சத்தம் கேட்டது. இடிந்து விழுந்து கரடு முரடாயிருந்த தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு அதன் மறைவில் நின்றான். வெளியிலிருந்து வந்தவன் முகம் நிலா வெளிச்சத்தில் கொஞ்சம் தெரிந்தது.

பழுவூர் ராணியைப் பார்க்க வந்த மந்திரவாதிதான் அவன் என்பதைத் தெரிந்து கொண்டான். மந்திரவாதி அந்தத் தூணை நோக்கியே வந்தான். தான் அவ்விடம் மறைந்திருப்பது அவனுக்குத் தெரியாது என்றும், தன்னைக் கவனியாமல் மண்டபத்துக்குள்ளே போய் விடுவான் என்றும் வந்தியத்தேவன் நினைத்தான். ஆனால் தூணின் அருகில் வரும் வரையில் மெள்ள மெள்ளப் பூனை போல நடந்து வந்த மந்திரவாதி திடீரென்று கோரமான குரலில் ஒரு கூச்சல் போட்டுக் கொண்டு வந்தியத்தேவனுடைய கழுத்தை ஒரு கையினால் பிடித்து நெறித்தான். “எடு! அந்தப் பனை இலச்சினை மோதிரத்தைக் கொடு! கொடுக்காவிட்டால் உன் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன்!” என்று கத்தினான்.

வந்தியத்தேவனுடைய கழுத்து முறிந்து விடும் போலிருந்தது; அவனுடைய விழிகள் பிதுங்கி வெளி வந்து விடும் போலிருந்தன. மூச்சுத் திணறியது. எனினும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். அந்தப் பழைய தூணை ஒரு கையினால் அழுத்திக் கொண்டு ஒரு காலைத் தூக்கிப் பூரண பலத்தையும் பிரயோகித்து ஓர் உதை விட்டான். மந்திரவாதி ஓலமிட்டுக் கொண்டு கீழே விழுந்தான். அதே சமயத்தில் அந்தப் பழைய தூண் சரிந்து விழுந்தது. மேலே கூரையிலிருந்து பொல பொலவென்று கற்கள் விழுந்தன. வௌவால் ஒன்று படபடவென்று சிறகை அடித்துக் கொண்டு வெளியே சென்றது. அதைத் தொடர்ந்து வந்தியத்தேவனும் வெளியேறினான். ஓட்டம் பிடித்தவன் சிறிது தூரம் வரையில் திரும்பிப் பார்க்கவேயில்லை. பின்னால் யாரும் தொடர்ந்து வரவில்லையென்று நிச்சயமான பிறகுதான் நின்றான். அந்த இரவு அனுபவத்தை நினைத்ததும் வந்தியத்தேவனுடைய உடம்பெல்லாம் இப்போதுகூட கிடுகிடுவென்று நடுங்கியது.

அந்தப் பயங்கர நினைவுகளுக்கிடையில், “ஐயா! காஞ்சியிலிருந்து தாங்கள் புறப்பட்டு எத்தனை காலமாயிற்று?” என்று குந்தவை கேட்டது அவனுடைய காதில் விழுந்து அவனுக்கு மனத்தெளிவை அளித்தது.

“ஒரு வாரமும் ஒரு நாளும் ஆயிற்று, தேவி!” என்றான்.

“இதற்குள் இவ்வளவு பகைவர்களை நீர் சம்பாதித்துக் கொண்டது விந்தையிலும் விந்தைதான். இவ்வளவு அதிசயமான காரியத்தை எப்படிச் சாதித்தீர்?”

“அது பெரிய கதை, தேவி!”

“இருந்தால் பாதகமில்லை. சொல்லலாம். அந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட பிறகுதான் தங்களுக்கு நான் இட வேண்டிய பணியை இடக் கூடும்.”

இவ்வாறு இளவரசி கூறிவிட்டு, ஈசான சிவபட்டரை அருகில் அழைத்து, “படகோட்டி எப்படிப்பட்டவன்?” என்று கேட்டாள்.

“இரண்டு காதும் நல்ல செவிடு; இடி இடித்தாலும் கேளாது, தாயே!”

“ரொம்ப நல்லது. படகிலேறிக் கொஞ்ச தூரம் ஓடையில் போய்விட்டு வரலாம், வாருங்கள்! இவருடைய கதையை முழுதும் நான் கேட்க வேண்டும்!” என்றாள்.

வல்லவரையன் புளகாங்கிதம் அடைந்தான். சோழர் குலத் திருமகளோடு ஒரே படகில் செல்லும் பாக்கியம் எளிதில் கிட்டுவதா? அதைப் பெறுவதற்கு ஏழு ஜன்மங்களில் தான் தவம் செய்திருக்க வேண்டாமா? படகில் ஏறிய பிறகு எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் கதையை நீட்டி வளர்த்திச் சொல்ல வேண்டும்! சுருக்கமாக முடித்து விடக் கூடாது! அவசரம் என்ன? அரிதில் பெற்ற பாக்கியத்தை எளிதில் கை நழுவ விட்டு விடலாமா?

வந்தியத்தேவனுக்கு அவசரமில்லை தான். ஆனால் படகு ஓடையில் நகர்ந்து, அவன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்ததைச் சொல்லத் தொடங்கியது முதலாவது குந்தவைக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் அவசரமும் பரபரப்பும் அதிகமாகி வந்தன. “மேலே என்ன?” “அப்புறம் என்ன?” என்று கேட்டுக் துரிதப்படுத்தி வந்தாள். வந்தியத்தேவன் அவனுடைய தீர்மானத்தின்படி கூடிய வரையில் கதையை வளத்தினான். எவ்வளவு நீண்ட கதையாயினும் முடிவு ஒன்று வந்துதானே ஆக வேண்டும்? கதை முடிந்தபோது படகும் திரும்ப ஓடைப் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.

படகிலிருந்து அவர்கள் இறங்கிப் பூங்காவுக்குள் வந்தபோது, அரண்மனையில் இன்னும் குரவைக் கூத்து நடந்து வந்ததற்கு அறிகுறியாக இசைக்கருவிகளும் தண்டைச் சிலம்புகளும் ஒலித்தன. பின்வரும் சிலப்பதிகார வரிப் பாடலும் கேட்டது:-

“பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே!

 மடந் தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
 கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
 படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
 நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே!
 நாராயணா வென்னா நாவென்ன நாவே!"

இதைக் கேட்ட வல்லவரையன் “கஞ்சனார் மிக்க வஞ்சனாராயிருக்கலாம்! ஆனால் எனக்கு நேற்றுப் பேருதவி செய்தார்!” என்றான்.

“அது என்ன? கம்ஸன் உமக்கு என்ன உதவி செய்திருக்க முடியும்?” என்று இளையபிராட்டி கேட்டாள்.

“நான் இந்த நகரத்துக்குள் புகுவதற்குக் கம்ஸன் தான் உதவி செய்தான்!” என்றான் வந்தியத்தேவன். பிறகு, அந்த உதவியின் வரலாற்றையும் கூறினான்.

Ponniyin Selvan Part 1 Ch 50 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 50, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 50: பராந்தகர் ஆதுரசாலை

பழையாறைக்குத் தான் வந்து சேர்வதற்குள்ளாகவே பழுவேட்டரையரின் ஆட்கள் வந்திருப்பார்கள் என்று வந்தியத்தேவன் ஊகித்திருந்தான். நகரத்தின் நுழை வாசல்கள் தோறும் அவர்கள் காத்திருப்பார்கள். சந்தேகம் ஏதேனும் தோன்றினால் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அவர்களிடம் சிக்காமல் பழையாறை நகருக்குள் பிரவேசிப்பது எப்படி? — இந்தக் கவலையுடன் அந்த மாநகரின் பிரதான வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் அரிசிலாற்றங்கரையில் வந்தியத்தேவன் நின்றிருந்தபோது நாடக கோஷ்டி ஒன்று வந்தது. கண்ணன், பலதேவன், கம்ஸன் முதலிய வேஷக்காரர்கள் வந்தார்கள். அவர்களில் கம்ஸன் மட்டும் மரத்தினாலான முகத்தைத் தரித்திருந்தான். வந்தியத்தேவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. நாடக கோஷ்டியுடன் பேச்சுக் கொடுத்தான். கம்ஸன் வேஷம் போட்டவனுக்கு ஆட்டத் திறமை அவ்வளவு போதாது என்றான். கம்ஸ வேஷக்காரன் இவனுடன் சண்டைக்கு வந்தான். வந்த சண்டையை இலகுவில் வல்லவரையன் விடுவானா? “உன்னைவிட நான் நன்றாக ஆடுவேன். பார்க்கிறாயா?” என்று சொல்லி முகமூடியைப் பலவந்தமாகப் பிடுங்கி வைத்துக் கொண்டு ஆடினான். அச்சமயம் அவனுடைய ஆரவாரத் தடபுடலைப் பார்த்தவர்கள் அவனை மெச்சினார்கள். அவன் ஆடியது தான் அதிகப் பொருத்தமாயிருந்தது என்றும் சொன்னார்கள். கம்ஸ வேஷக்காரன் கோபித்துக் கொண்டு போய் விட்டான். “அவன் போனால் போகட்டும்; நானே உங்களுடன் நகரத்துக்குள் வந்து ஆடுகிறேன்” என்று வந்தியத்தேவன் ஒப்புக் கொண்டான். நாடக கோஷ்டியார் மகிழ்ச்சியுடன் அவனைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டு சென்றார்கள்.

பழையாறை வீதிகளில் ஆட்டம் பாட்டமெல்லாம் முடிந்த பிறகு வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் சொல்லி அனுப்பியபடி வடமேற்றளி ஆலயத்துக்குச் சென்று ஈசான பட்டரைச் சந்தித்துப் பேசினான். அவர் அவனைக் கோயிலைச் சுற்றியிருந்த சமணர் முழையில் இருக்கச் செய்து, இளவரசி குந்தவைப் பிராட்டியிடம் முன்னால் தெரிவித்து விட்டு ஓடை வழியாக அழைத்து வந்தார்.

இந்த விவரங்களைக் கேட்ட இளவரசி வந்தியத்தேவனை வியப்பினால் மலர்ந்த கண்களைக் கொண்டு பார்த்து, “வெற்றித் தெய்வமாகிய கொற்றவையின் கருணை இந்தச் சோழர் குலத்துக்குப் பரிபூரணமாக இருக்கிறது. ஆகையினாலேதான் இந்தச் சங்கடமான நிலைமையில் தங்களை எனக்கு உதவியாகத் தேவி அனுப்பி வைத்திருக்கிறாள்!” என்றாள்.

“அரசி! இன்னும் தாங்கள் எந்த விதப் பணியும் எனக்கு இடவில்லையே? என் பூரண ஆற்றலைக் காட்டக் கூடிய சமயம் இன்னும் கிட்டவில்லையே!” என்றான் வல்லவரையன்.

“அதைப் பற்றிக் கவலை வேண்டாம். இது காறும் தமக்கு நேர்ந்திருக்கும் அபாயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடிய அளவு அபாயம் நிறைந்த வேலையைத் தரப் போகிறேன்!” என்றாள்.

வந்தியத்தேவன் உள்ளம் பொங்கி உடல் பூரித்து நின்றான். அந்தப் பெண்ணரசி இடும் பணியை நிறைவேற்றுவதற்காக ஏழு கடல்களைக் கடந்து செல்லவும், ஆயிரம் சிங்கங்களுடன் ஆயுதம் இன்றிப் போர் செய்யவும், மேரு பர்வதத்தின் உச்சியில் ஏறி விண்மீன்களைக் கையினால் பறித்து எடுத்துக் கொண்டு வரவும் அவன் சித்தமானான்.

அரண்மனை நந்தவனத்தின் மத்தியில் பளிங்கினால் ஆன வஸந்த மண்டபம் ஒன்று இருந்தது. அதை நோக்கிக் குந்தவை நடந்தாள். பட்டரும் வந்தியத்தேவனும் இளவரசியைத் தொடர்ந்து சென்றார்கள்.

மண்டபத்துக்குள்ளிருந்த மணி மாடம் ஒன்றிலிருந்து குந்தவை ஒரு சிறிய பனை ஓலைத் துணுக்கையும் தங்கப் பிடி அமைத்த எழுத்தாணியையும் எடுத்தாள். ஓலைத் துணுக்கில் பின் வருமாறு எழுதினாள்:

“பொன்னியின் செல்வா! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்.”

இவ்விதம் எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சிறிய சித்திரம் ஒன்று வரைந்தாள். ஓலையை வந்தியத்தேவன் கையில் கொடுப்பதற்காக நீட்டியவாறு, “சிறிதும் தாமதியாமல் இந்த ஓலையை எடுத்துக் கொண்டு ஈழ நாட்டுக்குச் செல்ல வேண்டும். இளவரசர் அருள்மொழிவர்மரிடம் கொடுத்து அவரைக் கையோடு அழைத்து வர வேண்டும்!” என்றாள்.

வந்தியத்தேவன் ஆனந்தத்தின் அலைகளினால் மோதப்பட்டுத் தத்தளித்தான். நெடு நாளாக அவன் கொண்டிருந்த மனோரதங்கள் இரண்டில் ஒன்று நிறைவேறி விட்டது. சோழர் குல விளக்கான இளைய பிராட்டியைச் சந்தித்தாகி விட்டது. அவர் மூலமாகவே இரண்டாவது மனோரதமும் நிறைவேறப் போகிறது. இளவரசர் அருள்மொழிவர்மரைச் சந்திக்கும் பேறு கிடைக்கப் போகிறது.

“தேவி! என் மனத்துக்குகந்த பணியையே தருகிறீர்கள். ஓலையை எடுத்துக் கொண்டு இப்போதே புறப்படுகிறேன்!” என்று சொல்லி ஓலையைப் பெற்றுக் கொள்வதற்காக வலக் கரத்தை நீட்டினான்.

குந்தவை ஓலையை அவனிடம் கொடுத்த போது காந்தள் மலரையொத்த அவளுடைய விரல்கள் வந்தியத்தேவனுடைய அதிர்ஷ்டக் கையைத் தொட்டன. அவனுடைய மெய் சிலிர்த்தது; நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. ஆயிரம் பதினாயிரம் பட்டுப் பூச்சிகள் அவன் முன்னால் இறகுகளை அடித்துக் கொண்டு பறந்தன. ஆயிரம் பதினாயிரம் குயில்கள் ஒன்று சேர்ந்து இன்னிசை பாடின. மலை, மலையான வண்ண மலர்க் குவியல்கள் அவன் மீது விழுந்து நாலா பக்கமும் சிதறின.

இந்த நிலையில் வந்தியத்தேவன் தலை நிமிர்ந்து குந்தவை தேவியைப் பார்த்தான். என்னவெல்லாமோ சொல்ல வேணும் என்று அவனுடைய உள்ளம் பொங்கியது. ஆனால் அதைச் சொல்லும் சக்தி உயிரற்ற வெறும் வார்த்தைகளுக்கு ஏது?

சொல்ல வேண்டியதையெல்லாம் அவனுடைய கண்களே சொல்லின. அச்சமயம் வந்தியத்தேவனுடைய கண்கள் புனைந்துரைத்த கவிதைகளுக்கிணையான காதற் கவிதைகளைக் காளிதாஸனும் புனைந்ததில்லை, ‘முத்தொள்ளாயிரம்’ இயற்றிய பழந்தமிழ்க் கவிஞர்களும் இயற்றியதில்லையென்றால் வேறு என்ன சொல்ல வேண்டும்?

வஸந்த மண்டபத்துக்கு வெளியில் எங்கேயோ சற்று தூரத்தில் காய்ந்த இலைச் சருகுகள் சலசலவென்று சப்தித்தன. ஈசான சிவபட்டர் தம் குரலைக் கனைத்துக் கொண்டார்.

வந்தியத்தேவன் இந்த உலகத்துக்கு வந்து சேர்ந்தான்!

Source

Previous articlePonniyin Selvan Part 1 Ch 48
Next articlePonniyin Selvan Part 1 Ch 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here