Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 53

Ponniyin Selvan Part 1 Ch 53

93
0
Ponniyin Selvan Part 1 Ch 53 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi. Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 53, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 53: மலையமான் ஆவேசம்

Ponniyin Selvan Part 1 Ch 53

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 53: மலையமான் ஆவேசம்

Ponniyin Selvan Part 1 Ch 53 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 53, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 53: மலையமான் ஆவேசம்

Ponniyin Selvan Part 1 Ch 53

அறிவைப் போலவே ஆற்றலும் ஆற்றலைப் போல அனுபவமும் பெற்று முதிர்ச்சி அடைந்திருந்த திருக்கோவலூர் மலையமான் அரசர் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, ஆதித்த கரிகாலன் மூர்ச்சையடைந்து விழுந்து விடவில்லைதான்! ஆயினும் சிறிது நேரம் செயல் இழந்து ஸ்தம்பித்து நின்று விட்டான். பார்த்திபேந்திரனும் வாயடைத்துப் போய் மௌனமாகி நின்றான். கடலும் ஓசை அடங்கி விட்டதாகத் தோன்றியது. தூரத்தில் படகிலிருந்து பண்டங்களை இறக்கி மரக்கலங்களில் ஏற்றுவோரின் ‘ஏலேலோ’ சத்தங்கூட அச்சமயம் அடங்கி நின்று போயிருந்தது.

வியப்புக்கு இடங்கொடுத்து விட்டதற்காக வெட்கப்பட்ட ஆதித்த கரிகாலன், சட்டென்று பாட்டனார் முகத்தை நிமிர்ந்து நோக்கி, “தாத்தா! இப்படியெல்லாம் நாடு நகரங்களில் சிலர் பேசி வருவதாக என் காதிலும் விழுந்தது. அது வெறும் பொய் வதந்தி என்று எண்ணியிருந்தேன். நீங்கள் இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்களே? தெரிந்து கொண்டுதான் சொல்கிறீர்களா? இப்படியும் நடக்கக்கூடுமா!” என்றான்.

“ஏன் நடக்க முடியாது? உன் பாட்டனாருக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் கண்டராதித்த தேவர்தானே சோழ நாட்டை ஆண்டார்! அவருடைய குமாரனுக்கு உங்களைக் காட்டிலும் அதிக உரிமை இந்த ராஜ்யத்தில் உண்டல்லவா?” என்றார் மலையமான் மிலாடுடையார்.

“இல்லவே இல்லை! அந்த முழு அசடன், நாலு வார்த்தை பேசத் தெரியாதவன், கையில் வாள் எடுத்து அறியாதவன், பெண்ணாய்ப் பிறக்கத் தவறி ஆணாகப் பிறந்தவன் – அவனுக்கு இந்த இராஜ்யம் உரிமையா? பால் மணம் மாறாத பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்தவர், வீர பாண்டியன் தலை கொண்ட சிங்கம், தோல்வி என்பதையே அறியாத வீராதி வீரர், ஆதித்த கரிகாலருக்கு உரிமையா? ஐயா! மிலாடுடையாரே! வயதாகி விட்டபடியால், தங்களுடைய அறிவு கூட மழுங்கி விட்டதா?” என்று சீறினான் பார்த்திபேந்திரன்.

அவனைக் கரிகாலன் அதட்டி அடக்கி விட்டு, “தாத்தா! எனக்கு இந்த இராஜ்யம் ஒரு பொருட்டு அல்ல. வேண்டுமானால் என் கை வாளின் உதவி கொண்டு இதைப் போன்ற பத்து இராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொள்வேன். ஆனால் இதில் நியாயம் எப்படி? முதலிலேயே மதுராந்தகனுக்குத்தான் இராஜ்யம் என்று சொல்லியிருந்தால் நான் குறுக்கே நின்றிருக்க மாட்டேன். நாடு அறிய, நகரம் அறிய மக்கள் எல்லாரும் அறிய எனக்குத் தான் அரசுரிமை என்று இளவரசப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, இப்போது எப்படி மாறலாம்? உங்களுக்கு இது சம்மதமாயிருக்கிறதா?” என்று கேட்டான்.

“எனக்குச் சம்மதமாயில்லை, ஒரு நாளும் நான் சம்மதிக்கப் போவதுமில்லை. நீ சம்மதித்து இராஜ்யத்தை மதுராந்தகனுக்குக் கொடுப்பதாகச் சொன்னால், முதலில் உன்னை இந்த வாளால் கண்டதுண்டமாய் வெட்டிப் போடுவேன். பிறகு உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற உன் தாயை வெட்டிப் போடுவேன். பிறகு உன் தாயைப் பெற்றவனாகிய நானும் என் கையினாலேயே வெட்டிக் கொண்டு சாவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்தச் சோழ ராஜ்யம் உன்னை விட்டுப் போக விடேன்!” என்று அந்த வயோதிகர் கர்ஜித்தபோது, அவருடைய மங்கிய கண்களில் மின்னொளி வீசியது. உணர்ச்சி ஆவேசத்தில் தளர்ந்து போயிருந்த அவர் உடம்பெல்லாம் நடுங்கியது.

பார்த்திபேந்திரன், “அப்படிச் சொல்லுங்கள், தாத்தா! அப்படிச் சொல்லுங்கள்!” என்று கூவிக் கொண்டே ஓடிவந்து மலையமானைத் தழுவி கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீர் பெருகிற்று.

கரிகாலனும் சற்று நேரம் ஆழ்கடலை நோக்கியவாறு இருந்தான். பிறகு பாட்டனாரைப் பார்த்து, “தாத்தா! தங்களுடைய எண்ணம் அதுவானால் தயக்கம் ஏன்? உடனே படை திரட்டிக் கொண்டு தஞ்சைக்குப் புறப்படுவோம். பழுவேட்டரையர்களையும் மற்றும் அவர்களைச் சேர்ந்த மழுவரையர், சம்புவரையர், முத்தரையர், முனையரையர் எல்லோரையும் ஒரேயடியாக ஒழித்து விட்டுத் தஞ்சைக் கோட்டையைப் பிடிப்போம். மதுராந்தகனைச் சிறையில் அடைப்போம். சக்கரவர்த்தியை விடுதலை செய்வோம். தங்களுடைய ஆசி எங்களுக்கு இருந்தால் போதும், நானும் பார்த்திபேந்திரனும் சேர்ந்தால், எங்களை வெல்லக்கூடியவர்கள் இந்தப் பூவுலகில் யார்?” என்று பெருமிதத்துடன் கூறினான்.

“உங்களை போரில் வெல்ல முடியாது; உண்மைதான். ஆனால் சூழ்ச்சியும் சதியும் சேர்ந்து எதிர்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? படையுடன் நீங்கள் தஞ்சையை நெருங்கும் போதே, பெற்ற தகப்பனுடன் மகன் யுத்தம் செய்ய வருவதாகக் கதை கட்டி விடுவார்கள்! அந்த அவமானத்தைத் தாங்காமல் சக்கரவர்த்தி உயிரை விட்டு விட்டார் என்றும் சொல்லி விடுவார்கள். அதை நம்புகிற ஜனங்களும் இருக்கக்கூடும் அல்லவா? அந்த நிலைமையில், நீதான் என்ன செய்வாய், குழந்தாய்! உன் மனமும் தளர்ச்சி அடைந்து விடும்! பெற்ற தகப்பனோடு யுத்தம் செய்ய வந்தவன் என்ற பழிச் சொல்லை உன்னால் தாங்க முடியுமா?”

ஆதித்த கரிகாலன் தன் செவிகளைப் பொத்திக் கொண்டு, “சிவ சிவா! கேட்கச் சகிக்கவில்லை!” என்றான்.

“அதனால்தான் முதலிலேயே நான் சொன்னேன்;– பெரிய அபாயம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்று!”

“உபாயம் என்ன, தாத்தா! உபாயம் என்ன?”

Ponniyin Selvan Part 1 Ch 53 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 53, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 53: மலையமான் ஆவேசம்

“முதலில் இலங்கைக்கு நம்பிக்கையான ஆள் ஒருவனை அனுப்ப வேண்டும். அனுப்பி, அருள்மொழியை அழைத்து வரச் செய்ய வேண்டும். அவன் போர்க்களத்தை விட்டு, தன் கீழுள்ள போர் வீரர்களை விட்டு, இலேசில் வரமாட்டான். அவன் மனத்தைத் திருப்பி அழைத்து வரக்கூடிய ஆற்றல் உள்ளவன் ஒருவனை அனுப்ப வேண்டும்……”

பார்த்திபேந்திரன் முன் வந்து, “ஐயா! நீங்கள் சம்மதம் கொடுத்தால் நானே போய் அழைத்து வருகிறேன்!” என்றான்.

“அது கரிகாலன் இஷ்டம்; உன் இஷ்டம். ஆனால் போகிறவன் வந்தியத்தேவனைப் போல் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடக் கூடாது…..”

“பார்த்தீர்களா? நான் சொன்னேனே?” என்றான் பார்த்திபேந்திரன்.

“வந்தியத்தேவனைப் பற்றித் தங்களுக்கு ஏதாவது தகவல் வந்திருக்கிறதா, தாத்தா?” என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.

“அவனைப் பற்றி முதலில் எனக்குச் சந்தேகமாகக் கூட இருந்தது, அவனும் நம் எதிரிகளுடன் சேர்ந்து விட்டானோ என்று. அப்புறம் அந்தச் சந்தேகம் தௌிந்தது.”

“பார்த்தாயா, பார்த்திபேந்திரா!” என்றான் கரிகாலன்.

“அவர் முழுவதும் சொல்லட்டும். அதற்குள் அவசரப்படுகிறீர்களே? ஐயா! வந்தியத்தேவன் பேரில் தங்களுக்கு என்ன சந்தேகம் வந்தது?”

“சம்புவரையர் மாளிகையில் கூட்டம் நடந்த அன்று அவனும் அங்கிருந்தான் என்று அறிந்தேன். ஆனால் சதியில் அவனுக்குச் சம்பந்தமில்லையென்று பிறகு தெரிந்து கொண்டேன்.”

“தாத்தா! இதெல்லாம் எப்படித் தங்களுக்குத் தெரிந்தது?”

“கடம்பூர் மாளிகை விருந்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதிலேயே கொஞ்சம் சந்தேகம் உண்டாயிற்று. பிறகு, அங்கு வந்துவிட்டுத் திரும்பி ஊருக்குச் சென்ற குன்றத்தூர்க் கிழாரை வழியில் சிறைப்படுத்தி என் மலைக் கோட்டைச் சிறைக்குக் கொண்டு போனேன். அவரிடமிருந்து அங்கு நடந்தவைகளையெல்லாம் தெரிந்து கொண்டேன். வந்தியத்தேவன் சம்புவரையர் மகன் கந்தமாறனின் சிநேகிதனாம்…..”

“ஆமாம்; நம்முடைய சைன்யத்திலே இருவரும் இருந்தவர்கள் தானே? வடபெண்ணைக் கரையில் இருவரும் காவல் புரிந்தார்கள். அதிலிருந்து அவர்களுக்குச் சிநேகிதம் ஏற்பட்டிருந்தது எனக்குத் தெரியும்…”

“எப்படியோ, வந்தியத்தேவன் அன்றைக்கு அம்மாளிகையில் இருந்தான். அவன் சதியில் சம்பந்தப்பட்டானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. பிறகு அதற்கு ஒரு வழி கிடைத்தது. தஞ்சைக் கோட்டைக்குள் கந்தமாறனுடைய முதுகில் வந்தியத்தேவன் குத்திவிட்டுத் தப்பித்துச் சென்று விட்டான் என்று தெரிந்ததும்…”

“தாத்தா! இதை ஒரு நாளும் நான் நம்பமாட்டேன். வந்தியத்தேவன் வேறு எது செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒருவனுடைய முதுகில் குத்தக் கூடியவன் அல்ல. அதிலும் சிநேகிதனுடைய முதுகில் குத்தக் கூடிய சண்டாளன் அல்ல…..”

“அந்தச் சிநேகிதன் தன் எஜமானுக்கு விரோதமான சதியில் ஈடுபட்டவன் என்று தெரிய வந்தால்? இவனையும் அந்தச் சதியில் சேர்ப்பதற்கு அந்தச் சிநேகிதன் ஒருவேளை முயற்சி செய்திருந்தால்?…..”

“எப்படியிருந்தாலும் முகத்துக்கு முகம் நின்று சண்டையிட்டிருப்பானே தவிர ஒரு நாளும் முதுகில் குத்தியிருக்க மாட்டான்!”

“உன் சிநேகிதனிடம் உன்னுடைய நம்பிக்கையை வியக்கிறேன், தம்பி! உண்மை எப்படியோ இருக்கட்டும். கந்தமாறனுடைய முதுகில் குத்தியதாக வந்தியத்தேவன் பேரில் பழுவேட்டரையர்கள் குற்றம் சுமத்தி அவனை வேட்டையாடி வருகிறார்கள். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஆகையால், வந்தியத்தேவனுக்கும் கந்தமாறனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் சண்டை வந்திருக்க வேண்டும். இதிலிருந்து அவன் உனக்கு எதிரான சதியில் சேர்ந்திருக்கவில்லை என்று நிச்சயமாகிறதல்லவா?”

“அதற்கு இவ்வளவு தூரம் சாட்சியம் வேண்டியதில்லை. வந்தியத்தேவன் நம் விரோதிகளுடன் சேர்வது என்றால், அப்போது இந்தப் பூமியே தலைகீழாகி விடும். அலை கடல் வறண்டு விடும். வானம் இடிந்து விழும். சூரியன் இராத்திரியில் உதிப்பான். சோழர் குலம் சர்வ நாசத்தை அடையும்…..” என்று ஆதித்த கரிகாலன் பரபரப்போடு கூறினான்.

“இளவரசர் சொல்லுவதை நானும் ஒத்துக் கொள்வேன். வந்தியத்தேவன் ஒருநாளும் நமக்குத் துரோகம் செய்து எதிரிகளுடன் சேர மாட்டான். அவனிடம் நான் சொல்லும் குற்றம் ஒன்றே ஒன்றுதான். அழகான பெண் முகத்தைக் கண்டால் வந்தியத்தேவன் தலை கிறுகிறுத்து விடுவான். அவனுடைய மதி மயங்கிவிடும்!”

இதைக் கேட்ட ஆதித்த கரிகாலன் புன்னகை புரிந்தான். “அது தெரிந்திருந்தபடியால்தான் சக்கரவர்த்தியிடம் ஓலையைக் கொடுத்துவிட்டு, இளையபிராட்டியிடம் போகும்படி அவனை அனுப்பினேன். இளவரசியை ஒரு தடவை அவன் பார்த்து விட்டால், அப்புறம் தப்புவது ஏது? அவளுக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதானே?” என்றான்.

உடனே மலையமான் மிலாடுடையார், “ஓகோ! அப்படியா வந்தியத்தேவனுக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறாய்? எனக்கு தெரியாமல் போயிற்றே? தஞ்சாவூரை விட்டுக் கிளம்பிய பிறகு வந்தியத்தேவனிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா? அல்லது இளையபிராட்டியிடமிருந்தாவது செய்தி வந்ததா?” என்றார்.

“ஒவ்வொரு நிமிஷமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒன்றும் செய்தி வரவில்லை…”

“அருள்மொழி இவ்விடம் வந்த பிறகு உன் சகோதரியையும் இங்கே தருவித்து விட வேண்டியதுதான். அப்புறம் நமக்கு ஒரு கவலையும் இல்லை. இளையபிராட்டியிடம் எல்லா யோசனையையும் விட்டுவிட்டு அவள் சொல்கிறபடி நாம் கேட்டு நடந்து வந்தால் போதும்!…”

“தாத்தா! இது விஷயத்தில் வந்தியத்தேவனைக் காட்டிலும் தாங்கள் மோசமாயிருக்கிறீர்களே?”

“ஆம் கரிகாலா! உன் சகோதரி இரண்டு வயதுக் குழந்தையாயிருந்த போதே கொடுங்கோலைக் கையில் பிடித்து விட்டாள். என்னையும் உன் பாட்டியையும் தாய் தகப்பனையும் தன் இஷ்டப்படி ஆட்டி வந்தாள். இப்போதும் என் வரையில் அப்படித்தான். அவள் வைத்ததே எனக்குச் சட்டம். கரிகாலா! உன் சகோதரியைப் பற்றிச் சொன்னால் உனக்கு அது குறைவு என்று நினைக்காதே! உனக்கு அது பெருமையே தவிர வேறில்லை. இளையபிராட்டி குந்தவையைப் போன்ற அறிவுச் செல்வத்தைப் படைத்தவர் ஆண்களிலோ, பெண்களிலோ இது வரையில் பிறந்ததில்லை. நமது முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் எப்படிப்பட்டவர் என்பது உனக்குத் தெரியுமில்லையா? அவரே இளையபிராட்டியிடம் யோசனை கேட்பார் என்றால், வேறு என்ன சொல்ல வேண்டும்?” என்று மிலாடுடையார் ஒரே பரவசமாகப் பேசினார்.

வந்தியத்தேவனிடம் அசூயை கொண்ட பார்த்திபேந்திரன், “அதெல்லாம் சரிதான்; யார் இல்லை என்றார்கள்? ஆனால் ஒருவேளை வந்தியத்தேவன் இளையபிராட்டியைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு ஒரு பெண் முகத்தைப் பார்த்து மயங்கியிருந்தால் என்ன செய்வது? உதாரணமாக, அந்தப் பழுவூர் இளையராணி என்கிற மோகினியைப் பார்த்திருந்தால்?…” என்றான். கடைசி வார்த்தைகளை அவன் சற்றுத் தாழ்ந்த குரலில் கூறியபடியால், கிழவரின் காதில் அது விழவில்லை. ஆனால் ஆதித்த கரிகாலன் காதில் விழுந்தது. அவன் சட்டென்று திரும்பிக் கண்களில் தீப்பொறி பறக்கப் பார்த்திபேந்திரனைப் பார்த்தான். அந்தப் பார்வை பல்லவ வீரனைக் கதிகலங்கச் செய்து விட்டது.

மலையமான் பாறையிலிருந்து எழுந்து நின்று, “பார்த்திபேந்திரா! நீ நாளைக்கே இலங்கைக்குப் புறப்படுகிறாய் அல்லவா? வாலிபர்களாகிய உங்களுக்குப் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கும். நான் கிழவன், மெள்ள மெள்ள அரண்மனைக்குப் போய்ச் சேர்கிறேன். நீங்கள் பேச வேண்டியதைப் பேசிவிட்டுச் சாவகாசமாக வந்து சேருங்கள்!” என்றார்.

அவர் சற்றுத் தூரம் சென்ற பிறகு பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனைப் பார்த்து, “அரசே! என் தலைவா! தங்கள் மனத்தில் ஏதோ ஒரு சங்கடம் குடிகொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வேதனை தங்கள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கிறது. அது பழுவூர் இளையராணி சம்பந்தமானது என்பதை நான் அறிவேன். பெரிய பழுவேட்டரையரின் கலியாணத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் தங்கள் தோற்றமே மாறிவிடுகிறது. தங்கள் கண்கள் சிவந்து அனலைக் கக்குகின்றன. எத்தனை காலம் இந்த வேதனையைத் தங்கள் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு புழுங்கப் போகிறீர்கள்? என்னைத் தங்கள் ‘உயிருக்கு உயிரான சிநேகிதன்’ என்று ஆயிரந்தடவை கூறியிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட சிநேகிதனிடம் தங்கள் உள்ளத்தைத் திறந்து காட்டக் கூடாதா? வேதனை இன்னதென்பதை எனக்குச் சொல்லக் கூடாதா? பரிகாரம் ஏதாவது கண்டுபிடித்துச் சொல்ல எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாதா? தாங்கள் மனத்திற்குள்ளே வேதனைப்பட்டுப் புழுங்குவதைப் பார்த்துக் கொண்டு எத்தனை நாள்தான் நான் சும்மா இருக்க முடியும்?” என்று அடங்கா ஆர்வத்தோடு கூறினான்.

ஆதித்த கரிகாலன் ஒரு நெடிய பெருமூச்சு விட்டு, “நண்பா! என் மன வேதனை என்றும் தீராத வேதனை.என் உயிரோடு மடிய வேண்டிய வேதனை. அதற்குப் பரிகாரமே கிடையாது. ஆயினும் உன்னிடம் சொல்லக் கூடாது என்பதில்லை. இன்றிரவு சொல்லுகிறேன். இப்போது கிழவருடன் அரண்மனைக்குப் போய்ச் சேர்வோம். அவரைத் தனியாக அனுப்புவது உசிதமில்லை!” என்று கூறிப் பாறையிலிருந்து எழுந்தான்.

Source

Previous articlePonniyin Selvan Part 1 Ch 52
Next articlePonniyin Selvan Part 1 Ch 54

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here