Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 55

Ponniyin Selvan Part 1 Ch 55

115
0
Ponniyin Selvan Part 1 Ch 55 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi. Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 55, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 55: நந்தினியின் காதலன்

Ponniyin Selvan Part 1 Ch 55

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 55: நந்தினியின் காதலன்

Ponniyin Selvan Part 1 Ch 55 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 55, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 55: நந்தினியின் காதலன்

Ponniyin Selvan Part 1 Ch 55

“முதன் முதலாக என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் நந்தினியை நான் சந்தித்தேன். ஒருநாள் பழையாறையில் எங்கள் அரண்மனையின் பின்புறத்திலுள்ள நீர் ஓடையில் நானும் என் தங்கையும் தம்பியும் ஓடம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாட்டு முடிந்து ஓடத்திலிருந்து இறங்கிப் பூஞ்சோலை வழியாக அரண்மனைக்குச் சென்றோம். வழியில் எங்கள் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியின் குரல் கேட்டது. நாங்கள் மூன்று பேரும் பாட்டியிடம் செல்லமாக வளர்ந்தவர்கள். பாட்டியிடம் நாங்கள் ஓடம் விட்டதைப் பற்றிச் சொல்வதற்காக அவருடைய குரல் கேட்ட கொடி வீட்டுக்குள் புகுந்தோம். அங்கே பாட்டியைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். மூன்று பேரில் ஒருத்தி எங்களையொத்த பிராயத்துச் சிறு பெண். மற்ற இருவரும் அவளுடைய பெற்றோர்கள் என்று தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பற்றி அவர்கள் ஏதோ மாதேவடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் கொடி வீட்டுக்குள் புகுந்ததும் அங்கிருந்த எல்லாரும் எங்களைப் பார்த்தார்கள். ஆனால் அந்தச் சிறு பெண்ணின் வியப்பினால் விரிந்த நெடிய கண்கள் எங்களைப் பார்த்தது மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தது. அந்தக் காட்சி இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் என் மனக்கண் முன்னால் நிற்கிறது…”

இவ்விதம் கூறிக் கரிகாலன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தான். வானத்தில் அச்சமயம் உலாவிய மெல்லிய மேகத் திரைகளுக்குள்ளே அந்தச் சிறு பெண்ணின் முகத்தை அவன் பார்த்தானோ என்னமோ தெரியாது.

“ஐயா! அப்புறம் சொல்லுங்கள்!” என்று பார்த்திபேந்திரன் கேட்டதும், கரிகாலன் இந்த உலகத்துக்கு வந்து கதையைத் தொடர்ந்தான்:

“பாட்டியிடம் ஓடம் விட்டு விளையாடியதைப் பற்றி என் தங்கை குந்தவை தான் சொன்னாள். அதைக் கேட்ட பிறகு, மாதேவடிகள், “என் கண்ணே! இந்தப் பெண்ணைப் பார்த்தாயா? எவ்வளவு சூடிகையாயிருக்கிறாள்? இவர்கள் பாண்டிய தேசத்திலிருந்து நம்முடைய ஈசான சிவபட்டர் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு இங்கே இருப்பார்கள். இந்தப் பெண்ணின் பெயர் நந்தினி, இவளையும் சில சமயம் உங்கள் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவள் உனக்கு நல்ல தோழியாயிருப்பாள்!” என்றார். ஆனால் என் தங்கைக்கு இது பிடிக்கவில்லையென்பதை நான் அறிந்து கொண்டேன். நாங்கள் மூவரும் அங்கிருந்து அரண்மனைக்குச் சென்ற போது குந்தவை, ‘அண்ணா! அங்கே ஒரு பெண் நின்றாளே? எவ்வளவு அவலட்சணமாயிருந்தாள் பார்த்தாயா? அவளுடைய முகம் ஏன் அப்படிக் கோட்டான் முகம் மாதிரி இருக்கிறது? அவளுடன் நான் விளையாட வேண்டும் என்கிறாரே, பாட்டி? அவள் முகத்தைப் பார்த்தால் என்னால் சிரிக்காமலிருக்கவே முடியாதே! என்ன செய்வது?” என்றாள். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு முக்கியமான உண்மை தெரிய வந்தது. அதாவது பெண்கள் பிறக்கும்போதே பொறாமையுடன் பிறக்கிறார்கள் என்பதுதான். ஒரு பெண் எவ்வளவு அழகுடையவளாயிருந்தாலும் இன்னொரு பெண் அழகாயிருப்பதைக் காணச் சகிப்பதில்லை.

“எங்கள் குலத்தில் பிறந்த பெண்களுக்குள்ளே என் சகோதரி சௌந்தரியம் மிக்கவள் என்பது பிரசித்தமானது. அவளுக்கும் இன்னொரு பெண் அழகாயிருப்பதைக் கண்டு பொறுக்கவில்லை. இல்லாவிட்டால் அந்தப் பெண்ணைக் குறித்து ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? நான் என் சகோதரியை இலேசில் விடவில்லை. அவளுக்குக் கோபம் உண்டாக்குவதற்காகவே அந்த இன்னொரு பெண் அழகாய்த்தான் இருக்கிறாள் என்று வற்புறுத்திச் சொன்னேன். இருவரும் அடிக்கடி இதைப் பற்றி விவாதம் செய்து சண்டை பிடித்தோம். எங்கள் சகோதரன் அருள்மொழியோ இந்தச் சண்டையின் காரணத்தை அறியாமல் திகைத்தான். பிறகு சில நாளைக்கெல்லாம் பாண்டிய நாட்டு யுத்தத்துக்குச் சென்ற என் தந்தையோடு நானும் புறப்பட்டுச் சென்றேன். பாண்டிய சைன்யத்தையும் பாண்டியர்களுக்கு உதவியாக இலங்கை அரசன் அனுப்பிய சைன்யத்தையும் பல இடங்களில் முறியடித்தோம். கடைசியில், வீரபாண்டியன் ஓடி ஒளிந்து கொண்டானா அல்லது போர்க்களத்தில் மடிந்தானா என்பது அச்சமயம் தெரியவில்லை. வீரபாண்டியன் மறைந்ததும் பாண்டிய சைன்யத்துக்கு உதவியாக வந்த இலங்கை வீரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களைத் துரத்திக் கொண்டு நாங்கள் சேதுக்கரை வரையில் சென்றோம். இறந்தவர்கள் போக மற்றவர்கள் கப்பலேறித் தப்பித்துச் சென்றார்கள். அடிக்கடி பாண்டியர்களுக்கு உதவியாகப் படைகள் அனுப்பித் தொல்லைப்படுத்தும் இலங்கை மன்னர்களுக்கு என் தந்தை புத்தி கற்பிக்க விரும்பினார். கொடும்பாளூர்ச் சிறிய வேளாரின் தலைமையில் ஒரு பெரிய படையை இலங்கைக்கு அனுப்புவதென்று தீர்மானித்தார். இதற்கு வேண்டிய கப்பல்களையும் தளவாடங்களையும் சேகரிக்கச் சிறிது காலமாயிற்று. ஆயினும் நாங்கள் அங்கேயே தாமதித்து, கப்பல்களில் படைகளை ஏற்றி அனுப்பினோம். மாதோட்டத்தில் நம் வீரர்கள் பத்திரமாய்ச் சென்று இறங்கினார்கள் என்று தெரிந்த பிறகே அங்கிருந்து சோழ நாட்டுக்குத் திரும்பினோம்.

“மீண்டும் நான் பழையாறைக்கு வந்து சேர்வதற்குள் இரண்டு வருஷத்துக்கு மேலாகிவிட்டது. மதுரைப் பக்கத்திலிருந்து வந்திருந்த அர்ச்சகர் பெண்ணை நான் அடியோடு மறந்து விட்டேன். பழையாறைக்கு வந்து பார்த்தபோது என் சகோதரியும் அப்பெண்ணும் அடையாளம் அறிய முடியாதபடி வளர்ந்திருக்கக் கண்டேன். அவர்களிருவரும் மிக்க சிநேகத்துடன் பழகுவதையும் கண்டேன். நந்தினி வளர்ந்திருந்தது மட்டுமல்ல, ஆடை ஆபரணங்களினாலும் ஜொலித்துக் கொண்டிருந்தாள். இது என் சகோதரியின் காரியம் என்று அறிந்தேன். முன் போலில்லாமல் நந்தினி இப்போது என்னைப் பார்க்கவும் பேசவும் கூச்சப்பட்டாள். அதை நான் போக்குவதற்குப் பாடுபட்டேன். வேறு எதிலும் காணாத இன்பம் அவளுடன் பேசிப் பழகுவதில் அடைந்தேன். இது எனக்கு அந்தச் சிறிய பிராயத்தில் எவ்வளவு வியப்பை அளித்தது என்பதைச் சொல்ல முடியாது. காவேரியில் பெருகி வரும் புது வெள்ளத்தைப் போல் என் உள்ளத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி பொங்கி, வெள்ளமாய்ப் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் இது என்னைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லையென்பதை விரைவிலேயே கண்டு கொண்டேன். நான் வந்ததிலிருந்து குந்தவை அப்பெண்ணிடம் வெறுப்பைக் காட்டத் தொடங்கினாள். ஒருநாள் எங்கள் பாட்டியார் மாதேவடிகள் என்னை அழைத்து, ‘நந்தினி அர்ச்சகர் வீட்டுப் பெண்; நீயோ சக்கரவர்த்தி குமாரன்; உங்கள் இரண்டு பேருக்கும் இப்போது பிராயமும் ஆகிவிட்டது. ஆகையால் நந்தினியிடம் நீ பழகுவது உசிதமல்ல’ என்று புத்திமதி கூறினார். அதுவரை பாட்டியைத் தெய்வமென மதித்து வந்த நான் அப்போது அவரிடம் கோபமும் அவருடைய வார்த்தையில் அவமதிப்பும் கொண்டேன். அவருடைய புத்திமதியை மீறி நந்தினியைத் தேடிப் பிடித்துப் பேசிப் பழகினேன். இது நெடுங்காலம் நிலைத்திருக்கவில்லை. திடீரென்று ஒருநாள் நந்தினியும், அவளுடைய பெற்றோர்களும் பாண்டிய நாட்டில் அவர்களுடைய ஊருக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள் என்று தெரிந்தது. அப்போது எனக்குத் துக்கம் பொங்கி வந்தது; கோபம் என்னை மீறி வந்தது. துக்கத்தை என் மனதிற்குள் வைத்துக் கொண்டு கோபத்தை என் சகோதரியின் பேரில் காட்டினேன். நல்லவேளையாகச் சில நாளைக்கெல்லாம் நான் வடக்கே பிரயாணப்பட நேர்ந்தது. திருமுனைப்பாடியையும் தொண்டை மண்டலத்தையும் ஆக்கிரமித்திருந்த இராஷ்டிரகூடப் படைகளை விரட்டுவதற்காகப் புறப்பட்ட சோழ சைன்யத்துடன் நானும் புறப்பட்டு வந்தேன். அப்போதுதான் நீயும் நானும் சந்தித்தோம்; இணைபிரியா சிநேகிதர்களானோம்.

“மலையமான் அரசருடைய உதவியுடன் நீயும் நானும் இராஷ்டிரகூடப் படைகளுடன் போரிட்டோம். பாலாற்றுக்கு வடக்கே அவர்களைத் துரத்தி அடித்துக் காஞ்சி நகரையும் கைப்பற்றினோம். அச்சமயத்தில் இலங்கையிலிருந்து கெட்ட செய்தி வந்தது. நமது படை அங்கே முறியடிக்கப்பட்டதென்றும் கொடும்பாளூர் சிறிய வேளார் இறந்து விட்டார் என்றும் தெரிந்தன. இதைக் கேட்டுவிட்டு, அது வரையில் பாலைவனத்தின் மத்தியில் பாறைக் குகையில் ஒளிந்திருந்த வீரபாண்டியன், புற்றிலிருந்து பாம்பு புறப்படுவது போல் வெளிப்பட்டு வந்தான். மறுபடியும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு மதுரையைக் கைப்பற்றி மீனக் கொடியை ஏற்றினான். இதையெல்லாம் கேட்ட போது உனக்கும் எனக்கும் எப்படிப்பட்ட வீராவேசம் உண்டாயிற்று என்பது ஞாபகம் இருக்கிறதல்லவா? நாம் இருவரும் உடனே புறப்பட்டுப் பழையாறைக்குச் சென்றோம். என் தந்தை சக்கரவர்த்திக்கு அப்போதே உடல் நலம் கெடத் தொடங்கியிருந்தது. கால்களின் சுவாதீனம் குறைந்திருந்தது. ஆயினும் சக்கரவர்த்தி பாண்டிய நாட்டுப் போர்க்களம் புறப்படச் சித்தமாயிருந்தார். வேண்டாம் என்று நான் அவரைத் தடுத்தேன். பாண்டிய சைன்யத்தை முறியடித்து மதுரையை மீண்டும் கைப்பற்றி வீரபாண்டியனுடைய தலையையும் கொணராமல் சோழ நாட்டுக்குத் திரும்புவதில்லை என்று என் தந்தை முன்னால் பிரதிக்ஞை செய்தேன். அப்போது நீயும் என்னுடன் இருந்தாய். என் பிரதிக்ஞையை ஒப்புக் கொண்டு என் தந்தை நம்மைப் பாண்டிய நாட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பினார். ஏற்கெனவே படைத் தலைமை வகித்துச் சென்றிருந்த கொடும்பாளூர் பூதிவிக்கிரம கேசரியின் தலைமையில் நாம் போர் செய்ய வேண்டும் என்று பணித்தார். அதற்குச் சம்மதித்து நாம் சென்றோம். வழியில் பெரிய பழுவேட்டரையரைச் சந்தித்தோம். அவரைப் படைத் தலைவராக்காமல் கொடும்பாளூர் வேந்தரை நியமித்ததில் பழுவேட்டரையருக்கு அதிருப்தி உண்டாகியிருந்தது என்பதை அறிந்தோம்.

“நம்முடைய போர் ஆவேசத்தைக் கண்டு சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி யுத்தம் நடத்தும் பொறுப்பை நம்மிடமே ஒப்புவித்துவிட்டார். நண்பா! அந்த யுத்தத்தில் நீயும் நானும் நம்ப முடியாத வீரச் செயல்களைப் புரிந்தோம் என்று பெருமை கொள்வதில் யாதொரு தவறும் இல்லை. பாண்டிய சைன்யத்தை முறியடித்து மதுரையைக் கைப்பற்றினோம். அத்துடன் நாம் திருப்தி அடைந்துவிடவில்லை. மறுபடியும் பாண்டிய சைன்யம் தலையெடுக்க முடியாதபடி அதை நிர்மூலம் செய்துவிட விரும்பினோம். சிதறி ஓடிய வீரர்களை நாலா பக்கத்திலும் துரத்திச் சென்று ஒருவர் மிச்சமில்லாமல் துவம்ஸம் செய்துவிடும்படி நம் படை வீரர்களுக்குக் கட்டளையிட்டோம். நாம் மட்டும் ஒரு வலிமையான படையுடன் பாண்டியனைத் துரத்திக் கொண்டு போனோம். உயரமாகப் பறந்த மீனக் கொடி பாண்டியன் எந்தத் திசையை நோக்கி ஓடுகிறான் என்பதை நமக்குக் காட்டியது. அந்தத் திசையை நோக்கி நாமும் சென்று அவனைப் பிடித்தோம். வீரபாண்டியனைச் சுற்றிலும் ஆபத்துதவிகள் மதில் சுவரைப் போல் பாதுகாத்து நின்றார்கள். சோழ நாட்டு வேளக்காரப் படையைக் காட்டிலும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ஒருபடி மேலான வீரர்கள். பின்வாங்கி ஓடுவதில்லையென்றும் தங்கள் உயிரை அளித்தாவது பாண்டிய மன்னனைக் காப்பாற்றுவோம் என்றும் சபதம் செய்தார்கள். அது சாத்தியப்படாமற் போய், பாண்டிய மன்னனுக்கு ஆபத்து வந்து விட்டால், தங்கள் தலையைத் தாங்களே வெட்டிக் கொண்டு பலி கொடுப்போம் என்று சபதம் பூண்டவர்கள். அப்படிப்பட்ட வீரர்கள் தங்கள் கடனை நிறைவேற்றினார்கள். ஒருவர் மிச்சமின்றி அவர்களைக் கொன்று தீர்த்தோம். இறந்தவர்களின் சவங்கள் மலை மலையாய்க் குவிந்தன. ஆனால் அவர்களுக்கு நடுவில் வீரபாண்டியனை நாம் காணவில்லை. மீனக் கொடியைப் பார்த்து நாம் ஏமாந்து போனோம். மீனக் கொடியைத் தாங்கிக் கொண்டு யானை ஒன்று நின்றது. ஆனால் அதன் பேரிலோ, பக்கத்திலோ பாண்டிய மன்னனைக் காணவில்லை! வீரபாண்டியன் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிந்து கொள்ளுவதில் சமர்த்தன் அல்லவா? இப்போதும் அவன் ஓடியிருக்கலாம் என்று சந்தேகித்து, படைகளைப் பிரித்து நாலாபுறமும் அனுப்பினோம்.

“வைகை நதியின் இரு கரைகளோடு நீங்கள் எல்லோரும் விரைந்து சென்றீர்கள். நானும் சும்மா இருக்கவில்லை. வைகை நதியில் இறங்கி மணலில் நடந்து தெற்கே சென்றேன். ஒரு தனிக் குதிரையின் குளம்படி மணலில் சில இடங்களில் பதிந்திருந்தது. குதிரை போன வழியில் மணலில் இரத்தக் கறையும் காணப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு நான் போனேன். வைகையாற்றின் மத்தியில் ஒரு தீவு போல் அமைந்திருந்த சோலையை அடைந்தேன். அந்தச் சோலைக்குள்ளே திருமாலின் கோவில் ஒன்றிருந்தது. அதையொட்டி இரண்டொரு அர்ச்சகர் வீடுகள் இருந்தன. பெருமாள் பூஜைக்குரிய பூ மரங்கள் அச்சோலையில் ஏராளமாக இருந்தன. ஒரு சிறிய தாமரைக் குளம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. நண்பா! உனக்கு ஒருவேளை ஞாபகம் இருக்கலாம். அந்தச் சோலையைச் சுட்டிக்காட்டி அதில் நம் வீரர்கள் யாரும் தப்பித் தவறிக் கூடப் பிரவேசிக்கக் கூடாது என்று நான் கண்டிப்பான கட்டளையிட்டிருந்தேன். இதற்குக் காரணம், அந்தப் பெருமாள் கோவிலின் பூஜைக்குப் பங்கம் எதுவும் வரக் கூடாது என்று நான் எண்ணியது மாத்திரம் அல்ல. அங்கே இருந்த பட்டரின் வீட்டில் என் உள்ளத்தைக் கவர்ந்து என் நெஞ்சில் கோவில் கொண்ட பெண்ணரசி இருந்ததுதான்.”

“ஒருநாள் அந்தச் சோலைக்குள் நான் புகுந்தபோது நந்தினியைப் பார்த்து விட்டேன். அவளுடைய கோலம் இப்போது சிறிது மாறிப் போயிருந்தது. தலைக் கூந்தலை ஆண்டாள் விக்கிரகத்தைப் போல் முன்னால் மகுடமாகக் கட்டி அதில் பூமாலை சுற்றியிருந்தாள். கழுத்திலும் பூமாலை தரித்திருந்தாள். ‘இது என்ன கோலம்?’ என்று நான் கேட்டேன். அவள் என்னைப் பிரிந்து வந்த பிறகு மானிடர் யாரையும் மணப்பதில்லை என்றும் ஆண்டாளைப் போல் கண்ணனையே மணப்பது என்றும் சங்கல்பம் செய்து கொண்டதாகக் கூறினாள். இது வெறும் பைத்தியக்காரத்தனமாக எனக்குத் தோன்றியது. மானிடப் பெண்ணாவது, கடவுளை மணப்பதாவது? – ஆயினும் அதைப் பற்றி அச்சமயம் விவகாரம் செய்ய நான் விரும்பவில்லை. ‘யுத்தம் முடியட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று எண்ணினேன். அவளுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டேன். ‘உங்கள் போர் வீரர்கள் யாரும் இங்கு வராதபடி செய்யுங்கள். இங்கே என் வயதான தாய் தந்தையர் மட்டுந்தான் இருக்கிறார்கள். அவர்கள் கண் தெரியாதவர்கள். திடகாத்திரனான என் தமையன் ஒருவன் உண்டு. அவன் இப்போது திருப்பதி யாத்திரை போயிருக்கிறான்!’ என்றாள். அவள் கேட்டபடி அங்கே நம் வீரர் யாரும் வராமல் பார்த்துக் கொள்வதாக நான் வாக்குறுதி கொடுத்துவிட்டுத் திரும்பினேன். அப்புறம் இரண்டு மூன்று தடவை அவளைப் போய்ப் பார்த்தேன். அவளிடத்தில் நான் கொண்ட பழைய மோகம் ஒன்றுக்குப் பத்து மடங்கு பெருகிக் கொழுந்துவிட்டெரிந்தது. எனினும் பொறுமையைக் கடைப்பிடித்தேன். வந்த காரியத்தை முதலில் முடிக்க வேண்டும். வீரபாண்டியனுடைய தலையுடன் பழையாறைக்குப் போக வேண்டும்; அதற்குப் பிரதியாக நந்தினியை மணந்து கொள்ளத் தந்தையிடம் அனுமதி கேட்பது என்று முடிவு செய்தேன்.

“இப்படி நான் தீர்மானித்திருந்த நிலையில், ஒற்றைக் குதிரையின் குளம்படி அந்தச் சோலைக்குள்ளே போயிருப்பதைக் கண்டதும் அளவிலாத வியப்பும் ஆத்திரமும் கொண்டேன். மேலும் சென்று பார்த்தபோது, அடர்ந்த மரங்களின் மறைவில் குதிரை கட்டியிருப்பதைக் கண்டேன். எனவே தப்பி வந்தவன் அந்தக் குடிசை வீடுகளில் ஒன்றில்தான் இருக்க வேண்டும்.நந்தினியின் வீட்டுக்குச் சென்று பலகணி வழியாகப் பார்த்தேன். நண்பா! அங்கே நான் கண்ட காட்சி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் என் நெஞ்சில் தீட்டியது போலப் பதிந்திருக்கிறது. ஒரு பழைய கயிற்றுக் கட்டிலில் வீரபாண்டியன் படுத்துக் கிடந்தான். நந்தினி அவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவள் முகம் முன் எப்போதுமில்லாத காந்தியுடன் ஜொலித்தது. அவள் கண்களில் இரண்டு துளி கண்ணீர் ததும்பி நின்றது. என்னை மீறி வந்த ஆத்திரத்துடன் கதவைப் படார் என்று உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனேன். காயங்களைக் கட்டிக் கொண்டிருந்த நந்தினி என்னைக் கண்டதும் அதை நிறுத்தி விட்டு முன்னால் வந்தாள். சாஷ்டாங்கமாக என்னை நமஸ்கரித்து எழுந்தாள். கை கூப்பிய வண்ணம், ‘ஐயா! நீங்கள் என் பேரில் ஒருநாள் வைத்திருந்த அன்பின் பேரில் ஆணையிட்டு வேண்டுகிறேன். இவரை ஒன்றும் செய்யாதீர்கள்! படுகாயப்பட்டுக் கிடக்கும் இவரை உங்கள் கையால் கொல்ல வேண்டாம்!’ என்றாள்.

Ponniyin Selvan Part 1 Ch 55 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 55: நந்தினியின் காதலன்

நான் தட்டுத் தடுமாறி, ‘உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்?’ என்றேன்.

‘இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!’ என்றாள் நந்தினி.

“காயம் பட்டிருந்த வீரபாண்டியனைப் பார்த்துக் கொஞ்சம் உண்டாகியிருந்த இரக்கமும் என்னிடமிருந்து அகன்று விட்டது. இந்தப் பாதகன் சண்டாளன், – எப்படி என்னைப் பழி வாங்கி விட்டான்! என் இராஜ்யத்தையே கைப்பற்றியிருந்தாலும் பாதகம் இல்லை; என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெண்ணரசியையல்லவா அபகரித்து விட்டான்? இவனிடம் எப்படி இரக்கம் காட்ட முடியும்? முடியவே முடியாது!

“நந்தினியை உதைத்துத் தள்ளி விட்டு அவளைத் தாண்டிக் கொண்டு சென்று வாளின் ஒரே வீச்சில் வீரபாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்தினேன். அந்த மூர்க்க பயங்கர செயலை இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. ஆனால் அச்சமயம் யுத்த வெறியோடு கூடக் குரோத வெறியும் என்னைப் பீடித்திருந்தது. அந்த ஆவேசத்தில் வீரபாண்டியனைக் கொன்றுவிட்டு அந்த வீட்டின் வாசற்படியைத் தாண்டும் போது நந்தினியை ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். அவளும் என்னைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அதைப் போன்ற பார்வை இந்தப் பூவுலகில் நான் கண்டதில்லை. அதில் காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் என்னும் ஆறு வித உணச்சிகளும் அத்தனை நெருப்பு ஜூவாலைகளாகக் கொழுந்து விட்டு எரிந்தன. அதன் பொருள் என்னவென்று எத்தனையோ தடவை எண்ணி எண்ணிப் பார்த்தும் எனக்கு இன்று வரை தெரியவில்லை!

“அதற்குள் என்னைத் தேடிக் கொண்டு நீயும் இன்னும் பலரும் வந்து விட்டீர்கள். வீரபாண்டியனுடைய தலையற்ற உடலையும் இரத்தம் சிந்திய தலையையும் பார்த்துவிட்டு எல்லோரும் ஜயகோஷம் செய்தீர்கள். ஆனால் என்னுடைய நெஞ்சில் விந்திய பர்வதத்தை வைத்ததுபோல் ஒரு பெரும் பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது!…”

Source

Previous articlePonniyin Selvan Part 1 Ch 54
Next articlePonniyin Selvan Part 1 Ch 56

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here