Home Kalki Ponniyin Selvan Part 1 Ch 57

Ponniyin Selvan Part 1 Ch 57

171
0
Ponniyin Selvan Part 1 Ch 57 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi. Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 57, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம் அத்தியாயம் 57: மாய மோகினி

Ponniyin Selvan Part 1 Ch 57

பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்

அத்தியாயம் 57: மாய மோகினி

Ponniyin Selvan Part 1 Ch 57 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 57, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 57: மாய மோகினி

Ponniyin Selvan Part 1 Ch 57

ஆரம்பத்திலிருந்து அவ்வளவாக அனுதாபம் இல்லாமலே கரிகாலன் கதையைக் கேட்டுக் கொண்டு வந்த பார்த்திபனுக்கும் இப்போது நெஞ்சு உருகி விட்டது. தன்னுடைய கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“அரசே! ஒரு பெண்ணின் பேரில் ஏற்பட்ட காதலினால் இப்படிப்பட்ட துன்பம் உண்டாகக் கூடும் என்று நான் கனவிலும் கருதியதில்லை! இளவரசுப் பட்டாபிஷேகம் நடந்த அன்று இப்படி ஓர் அனுபவம் தங்களுக்கு நேர்ந்தது என்று எங்களுக்கெல்லாம் தெரியாது. ஆகையால், தாங்கள் மனச்சோர்வுடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். என்னவெல்லாமோ பரிகாசப் பேச்சுகள் பேசித் தங்களைச் சந்தோஷப்படுத்தப் பார்த்தோம். அதெல்லாம் இப்போது எனக்கு நினைவு வருகிறது!” என்றான்.

“ஆம்; நீங்கள் பரிகாசப் பேச்சுப் பேசினீர்கள். என்னை உற்சாகப்படுத்தப் பார்த்தீர்கள். என்னுடைய ஆட்சிக் காலத்தில் நான் செய்யப் போகும் மகத்தான காரியங்களைப் பற்றி பேசினீர்கள். இலங்கையிலிருந்து இமயம் வரையில் சோழ சாம்ராஜ்யத்தை அன்றைய தினமே விஸ்தரித்து விட்டீர்கள்! இன்னும், கடல் கடந்து சென்றும் இராஜ்யங்களைக் கைப்பற்றினீர்கள். அந்தப் பேச்செல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவ்வளவும் எனக்கு எவ்வளவு துன்பமளித்தது என்பதும் நினைவிருக்கிறது.

பிறகு ஒரு நாள் என்னை நந்தினி பழுவூர் அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்பினாள். போகலாமா, வேண்டாமா என்று என் மனத்தில் ஒரு போராட்டம் எழுந்தது. கடைசியில், போவதென்று முடிவு செய்தேன். பல விஷயங்களில் எனக்குத் தோன்றியிருந்த ஐயங்களை அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அவளுடைய பிறப்பின் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அந்தப்புரத்தில் என் தந்தை அன்று மூர்ச்சை அடைந்து விழுந்ததற்கும் அங்கே நந்தினியை அவர் அகஸ்மாத்தாகக் கண்டதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகங்கூட என் மனத்தில் தோன்றியிருந்தது. அன்றைய தினம் சக்கரவர்த்திக்கு விரைவில் மூர்ச்சை வெளிந்து விட்டதாயினும் மறுபடி அவர் பழைய ஆரோக்கியத்தை அடையவேயில்லை என்பது உனக்கு நினைவிருக்கும்.

நந்தினியுடன் பேசுவதிலிருந்து எனக்கு அதுவரை விளங்காத மர்மம் ஏதேனும் வெளியாகலாம் என்று எண்ணினேன். இதையெல்லாம் ஒரு வியாஜமாக வைத்துக் கொண்டேனே தவிர, உண்மையில் நான் சென்ற காரணம், அவளிடமிருந்த காந்த சக்திதான். வேறு காரணங்களைக் கற்பித்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டு சென்றேன். பழுவேட்டரையர் ஊரில் இல்லை. அவருடைய அரண்மனையில் என்னைத் தடுப்பாரும் இல்லை; எனக்கும் நந்தினிக்கும் ஏற்பட்டிருந்த பழைய சிநேகிதத்தைப் பற்றி அங்கே அறிந்தவர்களும் இல்லை. இளவரசுப் பட்டம் கட்டிக் கொண்ட ராஜகுமாரன் பழுவூர் அரண்மனை ராணிமார்களிடம் ஆசி பெறுவதற்காக வருவதாகவே நினைத்தார்கள்.

Ponniyin Selvan Part 1 Ch 57 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the Epic novel in tamil history. It was written by Kalki Krishnamoorthi.

Ponniyin Selvan Part 1, Ponniyin Selvan part 1 Ch 57, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,
பொன்னியின் செல்வன் முதல் பாகம்: புது வெள்ளம்
அத்தியாயம் 57: மாய மோகினி

அரண்மனைத் தோட்டத்தில் உள்ள லதா மண்டபத்தில் நந்தினியை நான் சந்தித்தேன். பார்த்திபா! கடற்பிரயாணம் செய்வோரின் அனுபவங்களை நீ கேட்டிருக்கிறாய் அல்லவா? சமுத்திரத்தில் சில இடங்களில் அளவில்லாத சக்தியுடனும் வேகத்துடனும் கூடிய நீரோட்டங்கள் இருக்குமாம். அந்த நீரோட்டங்களில் கப்பல்கள் அகப்பட்டுக் கொண்டால் சிறிது நேரத்தில் சுக்குச் சுக்காகப் போய்விடுமாம். நந்தினியின் முன்னிலையில் நான் இருந்தபோது, கடல் நீரோட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட கப்பலின் கதியை அடைந்தேன். என் உடல், உள்ளம், இருதயம் எல்லாம் ஆயிரம் சுக்கல்களாகி விட்டன. என்னுடைய நாவிலே வந்த வார்த்தைகள் எனக்கே வியப்பை அளித்தன! ‘ஐயோ! இது என்ன இப்படிப் பேசுகிறோம்?’ என்று நெஞ்சில் ஒரு பக்கம் தோன்றிக் கொண்டிருந்தபோது, வாய் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தது. எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதைப் பற்றி நந்தினி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

‘எனக்கு அதில் ஒன்றும் மகிழ்ச்சி இல்லை!’ என்றேன்.

‘ஏன்?’ என்று கேட்டாள்.

‘இது என்ன கேள்வி கேட்கிறாய்? எனக்கு எவ்வாறு மகிழ்ச்சி இருக்கும்? நீதான் இப்படி அநியாயம் செய்து விட்டாயே?’ என்றேன். நான் சொல்வது அவளுக்கு விளங்காதது போல நடித்தாள். இவ்விதம் பேச்சு வளர்ந்து கொண்டே போயிற்று. என் அன்பை நிராகரித்தது பற்றியும், வீரபாண்டியனைக் காதலித்தது பற்றியும் அவள் மீது நான் குற்றம் சாட்டினேன். கிழவர் பழுவேட்டரையரை மணந்தது பற்றியும் குத்தலாகப் பேசினேன்.

‘இளவரசே! முதலில் தாங்கள் என் காதலைக் கொன்றீர்கள்; பிறகு என்னைக் காதலித்தவனை என் கண் முன்னால் கொன்றீர்கள்; என்னையும் கொன்றாலொழியத் தங்கள் மனம் திருப்தியடையாது போலிருக்கிறது. நான் உயிரோடிருப்பதே தங்களுக்குப் பிடிக்கவில்லை. நல்லது; என்னையும் கொன்று தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்!’ என்று சொல்லித் தன்னுடைய இடுப்பில் செருகியிருந்த சிறிய கத்தியை எடுத்து நீட்டினாள்.

‘நான் ஏன் உன்னைக் கொல்கிறேன்? நீயல்லவா என்னை உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறாய்!’ என்றேன்.

கடைசியில், இப்போது நினைத்துப் பார்த்தாலும் வெட்கம் தருகிற வார்த்தைகளை என் வாய் சொல்லிற்று. ‘இன்னமுங்கூட மோசம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஒரு வார்த்தை சொல்லு! இந்த கிழவனை விட்டு விட்டு வந்துவிடுவதாகச் சொல்லு! உனக்காக நான் இந்த ராஜ்யத்தை விட்டு வந்துவிடுகிறேன். இருவரும் கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தேசத்துக்குப் போய் விடுவோம்!’ என்றேன்.

நந்தினி அதைக் கேட்டுப் பயங்கரமாகச் சிரித்தாள். அதை நினைத்தால் இப்போது கூட எனக்கு ரோமம் சிலிர்க்கிறது. ‘கடல் கடந்து தூர தேசத்துக்குப் போய் நாம் என்ன செய்வது என்கிறீர்கள்? விறகு வெட்டிப் பிழைக்கவா? அல்லது வாழைத் தோட்டம் போட்டுப் பிழைக்கவா?’ என்றாள். ‘அதெல்லாம் உனக்குப் பிடிக்காதுதான்! அர்ச்சகர் வீட்டில் வளர்ந்தவள் பழுவூர் ராணி ஆகிவிட்டாய் அல்லவா?’ என்றேன்.

‘இதோடு திருப்தியடைவதாக எண்ணம் இல்லை. சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் சக்கரவர்த்தினியாக வீற்றிருப்பதாக உத்தேசம். தங்களுக்கு இஷ்டமிருந்தால் சொல்லுங்கள், பழுவேட்டரையர் இருவரையும் கொன்றுவிட்டு, சுந்தர சோழரைச் சிறையில் அடைத்து விட்டு, சக்கரவர்த்தியாகி என்னைத் தங்கள் பட்டமகிஷியாக்கிக் கொள்கிறதாயிருந்தால் சொல்லுங்கள்!’ என்றாள். ‘ஐயோ! என்ன பயங்கரமான வார்த்தைகளைச் சொல்கிறாய்?’ என்றேன். ‘காயமடைந்து படுத்துக் கிடந்த பாண்டியனை என் கண் முன்னால் கொன்றது பயங்கரமான காரியமில்லையா?’ என்று நந்தினி கேட்டாள். இதனால் என் குரோதம் கொழுந்து விடத் தொடங்கியது. ஏதேதோ வெறி கொண்ட வார்த்தைகளை உளறி அவளை நிந்தித்துவிட்டுக் கிளம்பினேன். அப்போதும் அவள் என்னை விடவில்லை. ‘இளவரசே! எப்போதாவது தங்களுடைய மனத்தை மாற்றிக் கொண்டால் என்னிடம் திரும்பி வாருங்கள். என்னைச் சக்கரவர்த்தினியாக்கிக் கொள்ளத் தங்கள் மனம் இடம் கொடுக்கும் போது வாருங்கள்!’ என்றாள். அன்று அவளை விட்டுப் பிரிந்தவன் பிறகு அவளைப் பார்க்கவே இல்லை!’ என்றான் ஆதித்த கரிகாலன்.

இதையெல்லாம் கேட்டுப் பயங்கரமும் திகைப்பும் அடைந்த பார்த்திபேந்திரன், “அரசே! இப்படியும் ஒரு ராட்சஷி உலகில் இருக்க முடியுமா? அவளைத் தாங்கள் மறுபடி சந்திக்காததே நல்லதாய்ப் போயிற்று!” என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.

“அவளை நான் போய்ப் பார்க்கவில்லை என்பது சரிதான்! ஆனால் அவள் என்னை விட்டபாடில்லை. பல்லவா! இரவும் பகலும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து என்னை வதைக்கிறாள். பகலில் நினைவிலே வருகிறாள். இரவில் கனவிலே வருகிறாள். ஒரு சமயம் முகத்தில் மோகனப் புன்னகையுடன் என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வருகிறாள். இன்னொரு சமயம் கையில் கூரிய கத்தியுடன் என்னைக் குத்திக் கொல்ல வருகிறாள். ஒரு சமயம் கண்களில் கண்ணீர் பெருக்கி விம்மிக் கொண்டு வருகிறாள். வேறொரு சமயம் தலைவிரி கோலமாய்க் கன்னங்களைக் கை விரல்களினால் பிறாண்டிக் கொண்டும் அலறி அழுது கொண்டும் வருகிறாள். ஒரு சமயம் பைத்தியம் பிடித்தவளைப் போல் பயங்கரமாய்ச் சிரித்துக் கொண்டும் வருகிறாள். இன்னொரு சமயம் அமைதியான முகத்துடன் ஆறுதல் சொல்ல வருகிறாள். கடவுளே! அந்தப் பாதகி என்னை எப்படித்தான் வதைக்கிறாள் என்று சொல்லி முடியாது. இன்று மாலை பாட்டன் கூறியது நினைவிருக்கிறதா! நான் ஏன் தஞ்சை போகக் கூடாது என்பதற்கு ஏதேதோ காரணம் கூறினார். உண்மையில் நான் தஞ்சை போகாமலிருப்பதற்கும் என் தந்தையைக் காஞ்சிக்கு வரவழைக்க விரும்புவதற்கும் காரணம் நந்தினிதான்…”

“அரசே! கேவலம் ஒரு பெண்ணுக்குப் பயந்து கொண்டா தஞ்சைக்குப் போகாமலிருக்கிறீர்கள்? அப்படி அவள் என்ன தான் செய்து விடுவாள்? வஞ்சனையாக விஷம் வைத்துத் தங்களைக் கொன்று விடுவாள் என்று அஞ்சுகிறீர்களா?…….”

“இல்லை, பார்த்திபா, இல்லை! இன்னமும் என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. அவள் என்னைக் கொன்று விடுவாள் என்பதற்காக நான் அஞ்சவில்லை. அவளுடைய இஷ்டப்படி என்னைச் செய்ய வைத்து விடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன். ‘உன் தந்தையைச் சிறையில் போடு!’ ‘உன் தங்கையை நாட்டை விட்டுத் துரத்து!’ ‘இந்தக் கிழவனைக் கொன்று என்னைச் சிம்மாசனத்தில் ஏற்று!’ என்று அந்த மாயமோகினி மறுமுறை சொன்னால், எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தோன்றிவிடுமோ என்று பயப்படுகிறேன். நண்பா! ஒன்று நந்தினி சாக வேண்டும்; அல்லது நான் சாக வேண்டும்; அல்லது இரண்டு பேரும் சாக வேண்டும். இல்லாவிடில் இந்த ஜன்மத்தில் எனக்கு மன அமைதி கிடையாது!” என்றான் கரிகாலன்.

“அரசே! இது என்ன பேச்சு? தாங்கள் ஏன் சாக வேண்டும்? எனக்கு அனுமதி கொடுங்கள்! இலங்கைக்கு அப்புறம் போகிறேன். உடனே தஞ்சாவூர் சென்று அவளைக் கொன்றுவிட்டு வருகிறேன். ஸ்திரீ ஹத்தி தோஷம் எனக்கு வந்தால் வரட்டும்..”

“அப்படி ஏதாவது செய்தால் உன்னை என் பரம வைரியாகக் கருதுவேன். நந்தினியைக் கொல்லத் தான் வேண்டுமென்றால், என்னுடைய இந்தக் கையினாலேயே அவளைக் கொல்லுவேன். கொன்றுவிட்டு என்னையும் கொன்று கொண்டு மாளுவேன்! வேறொருவர் அவளுடைய சுண்டு விரலின் நகத்துக்குக் கேடு செய்வதையும் என்னால் பொறுக்க முடியாது! நண்பா! நீ நந்தினியை மறந்துவிடு! அவளைப் பற்றி நான் சொன்னதெல்லாவற்றையும் மறந்துவிடு! பாட்டன் சொன்னபடி நீ நாளைக்கே புறப்பட்டு இலங்கைக்குப் போ! என் சகோதரன் அருள்மொழியை எப்படியாவது வற்புறுத்தி இங்கே அழைத்து வா! அவனை இங்கே இருக்கச் செய்வோம். பாட்டனும் பேரனும் யோசித்து என்ன வேணுமோ செய்து கொள்ளட்டும். நாம் இலங்கைக்குச் செல்வோம், மீண்டும் கப்பல் ஏறிப் பெரும்படையுடன் கீழைக் கடல்களில் செல்வோம். சாவகம், புஷ்பகம், கடாரம் முதலிய தேசங்களுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டுவோம். பிறகு மேற்கே திரும்புவோம். அரபு, பாரஸீகம், மிசிரம் முதலிய நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் தமிழர் வீரத்தையும் புலிக் கொடியையும் நிலைநாட்டுவோம். பார்த்திபா! அந்த நாடுகளில் எல்லாம் கற்பு என்னும் கட்டுப்பாடு இந்த நாட்டில் உள்ளது போல் கிடையாது என்பது உனக்குத் தெரியுமா? அரசர்கள் தங்கள் இஷ்டம்போல் அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள எந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்று அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்வார்களாம்!…..” என்றான் கரிகாலன்.

பார்த்திபன் இதற்கு மறு மொழி சொல்லுவதற்குள் திருக்கோவலூர் மலையமான் அங்கு வந்து சேர்ந்தார். “அரவான் கதையைப் போல் அற்புதமான கதை இந்த உலகத்திலேயே கிடையாது. நீ இப்போது சொல்லிக் கொண்டிருந்த எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் இன்னுமா நீங்கள் தூங்காமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? பார்த்திபேந்திரா! நாளைக்கு இலங்கைக்குப் புறப்பட வேண்டும் என்பது உனக்கு நினைவிருக்கிறதல்லவா?” என்றார்.

“அதைப் பற்றித்தான் தூங்காமல் பேசிக் கொண்டிருக்கிறோம்!” என்றான் பார்த்திபேந்திரன்.

Previous articlePonniyin Selvan Part 1 Ch 56
Next articlePonniyin Selvan Part 2 Ch 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here