Home Kalki Ponniyin Selvan Part 2 Ch 14

Ponniyin Selvan Part 2 Ch 14

110
0
Ponniyin Selvan Part 2 Ch 14 -Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 2, Ponniyin Selvan part 2 Ch 14, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: சுழற்காற்று அத்தியாயம் 14: இரண்டு பூரண சந்திரர்கள்

Ponniyin Selvan Part 2 Ch 14

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: சுழற்காற்று

அத்தியாயம் 14: இரண்டு பூரண சந்திரர்கள்

Ponniyin Selvan Part 2 Ch 14

அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன்? சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு, அறிவு, தயாளம் முதலிய குணங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டுப் பேசாதவர்களும் இல்லை. இந்த வருஷம் நவராத்திரி வைபவத்துக்கு இளவரசி தஞ்சை அரண்மனையில் வந்து இருப்பார் என்ற வதந்தி முன்னமே பரவி மக்களின் ஆவலை வளர்த்திருந்தது. எனவே, இன்றைக்கு வருகிறார் என்று தெரிந்ததும் தஞ்சைக் கோட்டை வாசலில் ஒரு ஜன சமுத்திரமே காத்துக்கொண்டிருந்தது. பூரண சந்திரனுடைய உதயத்தை எதிர்பார்த்து ஆஹ்லாத ஆரவாரம் செய்யும் ஜலசமுத்திரத்தைப் போல் இந்த ஜனசமுத்திரமும் ஆர்வம் மிகுந்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தது.

கடைசியில், பூரணசந்திரனும் உதயமாயிற்று. ஏன்? இரண்டு நிலாமதியங்கள் ஒரே சமயத்தில் உதயமாயின. தஞ்சைக் கோட்டை வாசலண்டை குந்தவை தேவி தன் பரிவாரத்துடன் வந்து சேர்ந்தபோது, கோட்டைக் கதவுகள் தடால் என்று திறந்தன. உள்ளேயிருந்து தேவியை வரவேற்று அழைத்துப் போவதற்காக அரண்மனைப் பரிவாரங்கள் வெளிவந்தன. அந்தப் பரிவாரங்களின் முன்னிலையில் இரு பழுவேட்டரையர்களும் இருந்தார்கள். அது மட்டுமல்ல; அவர்களுக்குப் பின்னால், முத்துப்பதித்த தந்தப் பல்லக்கு ஒன்றும் வந்தது. அதன் பட்டுத் திரைகள் விலகியதும் உள்ளே பழுவூர் இளைய ராணி நந்தினிதேவியின் சுந்தர மதிவதனம் தெரிந்தது.

குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள்.

சோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.

இப்படியெல்லாம் அந்த இரு வனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள். நந்தினியின் பேரில் அதுவரையில் நகர மாந்தர்களுக்கு ஓரளவு அதிருப்தியும் அசூயையும் இருந்து வந்தன. குந்தவைப் பிராட்டியை ஒவ்வொருவரும் தங்கள் குல தெய்வமெனப் பக்தியுடன் பாராட்டினார்கள். ஆனால், இப்போது பழுவூர் இளைய ராணி கோட்டை வாசலுக்கு வந்து இளைய பிராட்டியை வரவேற்றது மக்களுக்கு மிகுந்த குதூகலத்தை விளைவித்தது.

மக்கள் இவ்விதம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கையில் நந்தினிக்கும், குந்தவைக்கும் நடந்த சம்பாஷணை, மின்னலை மின்னல் வெட்டும் தோரணையில் அமைந்தது.

“தேவி! வருக! வருக! எங்களை அடியோடு மறந்துவிட்டீர்களோ, என்று நினைத்தோம். இளைய பிராட்டியின் கருணை எல்லையற்றது என்பதை இன்று அறிந்தோம்” என்றாள் நந்தினி.

“அது எப்படி ராணி! தூரத்திலிருந்தால் மறந்து விட்டதாக அர்த்தமா? நீங்கள் பழையாறைக்கு வராதபடியால் என்னை மறந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாமா?” என்றாள் குந்தவை.

“தேன் மலரை நோக்கி வண்டுகள் தாமே வரும்; அழைப்பு வேண்டியதில்லை. அழகிய பழையாறைக்கு யாரும் வருவார்கள். இந்த அவலட்சணமான தஞ்சைக் கோட்டைக்குத் தாங்கள் வந்தது தங்கள் கருணையின் பெருமையல்லவா?”

“அது என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? தஞ்சை புரியை அவலட்சண நகரமென்று சொல்லலாமா? இங்கே சௌந்தரியத்தையே சிறைப்படுத்தி வைத்திருக்கும்போது?.” என்றாள் இளைய பிராட்டி.

“நானும் அப்படித்தான் கேள்வியுற்றேன், சக்கரவர்த்தியை இங்கே சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று. இனிமேல் கவலையில்லை; அவரை விடுவித்துச் செல்லத் தாங்கள் வந்து விட்டீர்கள் அல்லவா?” என்று நந்தினி கூறிய போது அவளுடைய கண்களில் மின்வெட்டுத் தோன்றி மறைந்தது.

“அழகாயிருக்கிறது! சுந்தரசோழ சக்ரவர்த்தியைச் சிறை வைக்க இந்திராதி தேவர்களாலும் முடியாது. சிறிய மனிதர்களால் எப்படி முடியும்? நான் அதைப்பற்றிச் சொல்லவில்லை. சௌந்தர்ய தேவதையான நந்தினி தேவியைப் பற்றிச் சொன்னேன்.”

“நன்றாகச் சொல்லுங்கள், தேவி! அவர் காது பட இதைச் சொல்லுங்கள். என்னைச் சிறையில் வைத்திருப்பது போலத்தான் பழுவூர் அரசர் வைத்திருக்கிறார். தாங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்து …”

“என் சிபாரிசு என்னத்துக்கு ஆகும்? தங்களை வைத்திருப்பது சாதாரணச் சிறையல்லவே? காதல் என்னும் சிறையல்லவா! அதிலும் …”

“ஆம், தேவி! அதிலும் கிழவருடைய காதல் சிறையாயிருந்துவிட்டால் விமோசனமே இல்லை! ஏதோ பாதாளச் சிறை என்கிறார்களே? அதில் அடைக்கப்பட்டவர்களாவது வெளிவரக்கூடும்! ஆனால் …”

“ஆமாம்! ராணி! அதிலும் நாமாகப் போட்டுக்கொண்ட விலங்காயிருந்தால், நாமாகத் தேடிச் சென்ற சிறையாயிருந்தால் விடுதலை கஷ்டமானதுதான்!… சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி வழியில் வந்தவர்கள் விடுதலை தேடவும் மாட்டார்கள்!… அதோ, அங்கே என்ன அவ்வளவு கூச்சல்?” என்றாள் குந்தவைப் பிராட்டி.

உண்மையாகவே, கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் திரளாக நின்று கொண்டிருந்த பெண்களின் நடுவிலிருந்து அந்தப் பெருங்கூச்சல் எழுந்து கொண்டிருந்தது. குந்தவையும், நந்தினியும் அவ்விடத்தை நெருங்கிப் போனார்கள். பெண்கள் பலர் ஏக காலத்தில் கூச்சலிட்டபடியால் முதலில் இன்னதென்று புரியவில்லை. பிறகு கொஞ்சம் விளங்கியது. இளைய பிராட்டியை அடிக்கடி அரண்மனைக்கு வந்து பார்க்க அவர்கள் விரும்புவதாகவும், ஆகையால் நவராத்திரி ஒன்பது நாளும் கோட்டைக்குள் பிரவேசிப்பதில் உள்ள கட்டுக் காவல்களை நீக்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் கோருவதாகத் தெரிந்தது.

“ராணி! தங்கள் கணவரிடமாவது, மைத்துனரிடமாவது சொல்லி, இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லுங்கள். கேவலம் இந்த ஸ்திரீகளைக் கண்டு பயப்படுவானேன்? இவர்களால் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்ன ஆபத்து வந்து விடும்? பழுவூர் சகோதரர்களின் ஆணை நாலா திசையிலும், கடற்கரை வரையில் நீண்டு பரந்திருக்கிறது அல்லவா?” என்றாள் குந்தவை.

“அது என்ன, கடற்கரையோடு நிறுத்திவிட்டீர்கள்? கடல் கடந்து அப்பாலும் அவர்களுடைய ஆணையும் அதிகாரமும் போகின்றன. இதற்கு அடையாளம் சீக்கிரம் கிடைக்கும்!” என்று சொல்லி நந்தினி செய்த புன்னகை குந்தவையின் இருதயத்தைப் பிளந்தது. ‘இந்தப் பாதகி வார்த்தையின் உட்கருத்து யாதாயிருக்கலாம்?’ என்று சிந்தித்தாள்.

இதற்குள் நந்தினி பெரிய பழுவேட்டரையரைச் சமிக்ஞையால் அருகில் அழைத்து அப்பெண்களின் கோரிக்கையையும், இளையபிராட்டியின் விருப்பத்தையும் தெரிவித்தாள்.

“இளைய பிராட்டியின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை ஏது?” என்றார் பழுவேட்டரையர்.

பின்னர், ஜனத்திரளின் கோலாகல ஆரவாரத்தினிடையே அவர்கள் கோட்டைக்குள் பிரவேசித்தார்கள்.

அன்று முதல் சில தினங்கள் தஞ்சை நகரும், சுற்றுப்புறங்களும் அளவில்லாக் குதூகல ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தன. குந்தவை தேவி தஞ்சைக்கு வந்த சமயத்தில் நவராத்திரி உற்சவம் சேர்ந்து கொண்டது. பழுவேட்டரையரும் தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். தங்கு தடையில்லாமல் அந்தப் பத்து நாட்களிலும் ஜனங்கள் கோட்டைக்குள் புகவும் வெளிவரவும் அனுமதித்தார். கோட்டை வாசற் கதவுகள் சதா காலமும் அகலத் திறந்திருந்தன. கோட்டைக்குள்ளே அரண்மனைகளிலும், வெளியில் ஊர்ப் புறங்களிலும் பல கோலாகல நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அவற்றைக் கண்டுகளிக்கப் பெருந்திரளாக மக்கள் குழுமிக் கொண்டிருந்தார்கள். அக்கூட்டங்களின் நடுவே அடிக்கடி இரண்டு பூரணசந்திரர்கள் சேர்ந்தாற்போல் உதயமாகிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டு ஜனசமுத்திரம் பொங்கிப் பூரித்து ஆரவாரித்தது. ஆனால் வெளியில் இவ்வாறு ஒரே உற்சவ உற்சாகக் குதூகலமாயிருந்தபோது, அந்த இரண்டு பூரண சந்திரர்களுடைய இதயப் பிரதேசங்களிலும் எரிமலைகள் பொங்கி அக்கினிக் குழம்பைக் கக்கிக் கொண்டிருந்தன. பழுவூர் இளையராணிக்கும், பழையாறை இளையபிராட்டிக்கும் ஓயாமல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சொல்லம்புகளைக் கொண்டும் விழிகளாகிற வேல்களைக் கொண்டும், அவ்விரு அழகிகளும் துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் இரு பக்கமும் கூருள்ள வாள்கள் ஒன்றோடொன்று உராய்ந்தபோது தீப்பொறிகள் பறந்தன. தீட்டிச் சாணை பிடித்த ஈட்டிகள் ஒன்றையொன்று தாக்கி ஜுவாலை வீசின. இருண்ட வானவெளியில் இரண்டு மின்னல்கள் ஒன்றையொன்று வெட்ட, இரண்டும் சேர்ந்து துடி துடித்தன. கொடிய அழகு வாய்ந்த இரண்டு பெண் புலிகள் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கால் நகங்களினால் பிறாண்டி இரத்தம் கசியச் செய்தன. பயங்கரச் சௌந்தரியம் பொருந்திய இரண்டு நாகசர்ப்பங்கள் படம் எடுத்து ஆடி அவற்றின் கூரிய மெல்லிய சிவந்த நாக்குகளை நீட்டி ஒன்றையொன்று விழுங்கிவிடப் பார்த்தன.

இந்த அதிசயமான போராட்டத்தில் அவர்கள் உற்சாக வெறியும் அடைந்தார்கள்; வேதனைப்பட்டு உள்ளம் புழுங்கியும் துடித்தார்கள்.

நகர மாந்தர்களின் உற்சாகத்திலும் கலந்து கொள்ளாமல், இந்த இரு சந்திரமதிகளின் போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல், ஒரே ஓர் ஆத்மா தவித்துக் கொண்டிருந்தது. கொடும்பாளூர் இளவரசி வானதிக்கு இப்போதெல்லாம் இளைய பிராட்டியுடன் பேசுவதற்கே அவகாசம் கிடைக்கவில்லை. அக்காளுடன் கூடக் கூடப் போனாளே தவிர வெளியில் நடப்பது ஒன்றிலும் அவள் மனம் ஈடுபடவில்லை. தனக்குள்ளே ஒரு தனிமை உலகைச் சிருஷ்டித்துக் கொண்டு அதிலேயே சஞ்சரித்து வந்தாள்.

Source

Previous articlePonniyin Selvan Part 2 Ch 13
Next articlePonniyin Selvan Part 2 Ch 15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here