Home Kalki Ponniyin Selvan Part 2 Ch 19

Ponniyin Selvan Part 2 Ch 19

95
0
Ponniyin Selvan Part 2 Ch 19 -Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 2, Ponniyin Selvan part 2 Ch 19, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: சுழற்காற்று அத்தியாயம் 19: ஒற்றன் பிடிபட்டான்!

Ponniyin Selvan Part 2 Ch 19

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: சுழற்காற்று

அத்தியாயம் 19: ஒற்றன் பிடிபட்டான்!

Ponniyin Selvan Part 2 Ch 19

அன்று நடந்த சம்பவங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு மிக்க எரிச்சலை உண்டுபண்ணியிருந்தன. சக்கரவர்த்தியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் மக்கள் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கல்லவா அது ஒரு சந்தர்ப்பமாகப் போய்விட்டது? “ஜனங்களாம் ஜனங்கள்! அறிவற்ற ஆடுமாடுகள்! நாலு பேர் எந்த வழி போகிறார்களோ அதே வழியில் நாலாயிரம் பேரும் போவார்கள்! சுய அறிவைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனை பேருக்குத் தெரிகிறது?” என்று தமக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டு பொருமினார். “சக்கரவர்த்தி சொர்க்கத்துக்குப் போவதற்குள்ளே சாம்ராஜ்யத்தைப் பாழாக்கி விட்டுத்தான் போவார் போலிருக்கிறது! ‘இந்த ஊருக்கு வரியைத் தள்ளிவிடு!’, ‘அந்தக் கிராமத்தை இறையிலிக் கிராமமாகச் செய்துவிடு!’ என்று கட்டளையிட்டுக் கொண்டே போகிறார்! கொஞ்ச காலத்துக்கெல்லாம் வரி கொடுக்கும் கிராமமே இல்லாமற் போய்விடும். ஆனால் போர்க்களத்துக்கு மட்டும் செலவுக்குப் பணமும் உணவுக்குத் தானியமும் அனுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும். எங்கிருந்து அனுப்புவது?” என்று அவர் இரைந்து கத்தியதைக் கேட்டு அவருடைய பணியாட்களே சிறிது பயப்பட்டார்கள்.

“அண்ணா! இப்படியெல்லாம் சத்தம் போடுவதில் என்ன பயன்? காலம் வரும் வரையில் காத்திருந்து காரியத்தில் காட்ட வேண்டும்!” என்று சின்னப் பழுவேட்டரையர் அவருக்குப் பொறுமை போதிக்க வேண்டியிருந்தது.

குந்தவை தம் அரண்மனைக்கு வரப் போகிறாள் என்று தெரிந்ததும் பெரியவரின் எரிச்சல் அளவு கடந்துவிட்டது. நந்தினியிடம் சென்று, “இது என்ன நான் கேள்விப்படுவது? அந்த அரக்கி இங்கு எதற்காக வரவேண்டும்? அவளை நீ அழைத்திருக்கிறாயாமே? அவள் உன்னை அவமானப்படுத்தியதையெல்லாம் மறந்துவிட்டாயா?” என்று கேட்டார்.

“ஒருவர் எனக்குச் செய்த நன்மையையும் நான் மறக்க மாட்டேன்; இன்னொருவர் எனக்குச் செய்த தீமையையும் மறக்க மாட்டேன். இன்னமும் இந்த என் சுபாவம் தங்களுக்குத் தெரியவில்லையா?” என்றாள் நந்தினி.

“அப்படியானால் அவள் இங்கு எதற்காக வருகிறாள்?”

“அவள் இஷ்டம், வருகிறாள்! சக்கரவர்த்தியின் குமாரி என்ற இறுமாப்பினால் வருகிறாள்!”

“நீ எதற்காக அழைத்தாயாம்?”

“நான் அழைக்கவில்லை; அவளே அழைத்துக் கொண்டாள். ‘சம்புவரையர் மகன் உங்கள் வீட்டில் இருக்கிறானாமே? அவனைப் பார்க்க வேண்டும்!’ என்றாள், ‘நீ வராதே!’ என்று நான் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லக் கூடிய காலம் வரும். அது வரையில் எல்லா அவமானங்களையும் நான் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.”

“என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அவள் வரும் சமயம் நான் இந்த அரண்மனையில் இருக்க முடியாது. இந்த நகரிலேயே என்னால் இருக்க முடியாது. மழபாடியில் கொஞ்சம் அலுவல் இருக்கிறது. போய் வருகிறேன்.”

“அப்படியே செய்யுங்கள், நாதா! நானே சொல்லலாம் என்று இருந்தேன். அந்த விஷப் பாம்பை என்னிடமே விட்டு விடுங்கள். அவளுடைய விஷத்தை இறக்குவது எப்படி என்று எனக்குத் தெரியும். தாங்கள் திரும்பி வரும்போது ஏதேனும் சில அதிசயமான செய்திகளைக் கேள்விப்பட்டால் அதற்காகத் தாங்கள் வியப்படைய வேண்டாம்.”

“என்ன மாதிரி அதிசயமான செய்திகள்?”

“குந்தவைப் பிராட்டி கந்தன் மாறனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவோ, ஆதிக்க கரிகாலன் கந்தன் மாறனுடைய தங்கையை மணக்கப் போவதாகவோ கேள்விப்படலாம்.”

“ஐயையோ! இது என்ன சொல்கிறாய்? அப்படியெல்லாம் நடந்து விட்டால் நம்முடைய யோசனைகள் என்ன ஆகும்?”

“பேச்சு நடந்தால், காரியமே நடந்துவிடுமா, என்ன? மதுராந்தகத் தேவருக்கு அடுத்த பட்டம் என்று உங்கள் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வருகிறீர்களே? உண்மையில் அப்படி நடக்கப் போகிறதா? பெண்ணைப்போல் நாணிக்கோணி நடக்கும் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்காகவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம்?” என்று கூறி நந்தினி தன் கரிய கண்களினால் பெரிய பழுவேட்டரையரை உற்று நோக்கினாள். அந்தப் பார்வையின் சக்தியைத் தாங்க முடியாத அக்கிழவர் தலை குனிந்து அவளுடைய கரத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, “என் கண்ணே! இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நீ சக்கரவர்த்தினியாக வீற்றிருக்கும் நாள் சீக்கிரத்திலேயே வரும்!” என்றார்.

கந்தன்மாறன் தன்னைப் பார்க்கக் குந்தவை தேவி வரப்போகிறாள் என்று அறிந்தது முதல் பரபரப்பு அடைந்து தத்தளித்துக் கொண்டிருந்தான். குந்தவையின் அறிவும், அழகும் மற்ற உயர்வுகளும் நாடு அறிந்தவை அல்லவா? அப்படிப்பட்ட இளைய பிராட்டி தன்னைப் பார்ப்பதற்காக வருகிறாள் என்பது எவ்வளவு பெருமையான விஷயம்? இதற்காக உடம்பில் இன்னும் பல குத்துக்கள் பட்டு நோயாளியாகவும் படுத்திருக்கலாமே? அடாடா! இந்த மாதிரி காயம் போர்க்களத்தில் தன்னுடைய மார்பிலே பட்டுத் தான் படுத்திருக்கக் கூடாதா? அச்சமயம் குந்தவை தேவி வந்து தன்னைப் பார்த்தால் எவ்வளவு கௌரவமாயிருக்கும்? அப்படிக்கின்றி, இப்போது ஒரு சிநேகிதன் செய்த துரோகத்தைப் பற்றிப் பலரிடம் படித்த பாடத்தையே யல்லவா அவளிடமும் படித்தாக வேண்டும்?

இடையிடையே அந்தப் பெண்ணரசியின் குடும்பத்தினருக்கு விரோதமாக அவன் ஈடுபட்டிருக்கும் இரகசிய முயற்சியைக் குறித்து நினைவு வந்து கொஞ்சம் அவனை வருத்தியது. கந்தன்மாறன் யோக்கியமான பிள்ளை. தந்திர மந்திரங்களும், சூதுவாதுகளும் அறியாதவன். நந்தினியின் மோகன சௌந்தரியம் அவனைப் போதைக் குள்ளாக்கிய போதிலும் அவள் இன்னொருவரின் மனைவி என்ற நினைவினால் தன் மனத்துக்கு அரண் போட்டு வந்தான். ஆனால் குந்தவைப் பிராட்டியோ கலியாணம் ஆகாதவள். அவளிடம் எப்படி நடந்து கொள்வது? எவ்வாறு பேசுவது? மனத்தில் வஞ்சம் வைத்துக் கொண்டு இனிமையாகப் பேச முடியுமா? அல்லது அவளுடைய அழகிலே மயங்கித் தன்னுடைய சபதத்தைக் கைவிடும்படியான மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுமோ? அப்படி நேருவதற்கு ஒரு நாளும் இடங் கொடுக்கக் கூடாது. ஆ! இளவரசி எதற்காக இங்கே நம்மைப் பார்க்க வரவேண்டும்? வரட்டும்; வரட்டும்! ஏதாவது மூர்க்கத்தனமாகப் பேசி மறுபடியும் வராதபடி அனுப்பிவிடலாம்.

இவ்விதம் கந்தன் மாறன் செய்திருந்த முடிவு குந்தவைப் பிராட்டியைக் கண்டதும் அடியோடு கரைந்து, மறைந்துவிட்டது. அவளுடைய மோகன வடிவும், முகப்பொலிவும், பெருந்தன்மையும், அடக்கமும், இனிமை ததும்பிய அனுதாப வார்த்தைகளும் கந்தன் மாறனைத் தன் வயம் இழக்கச் செய்துவிட்டன. அவனுடைய கற்பனா சக்தி பொங்கிப் பெருகியது. தன்னுடைய பெருமையைச் சொல்லிக்கொள்ள விரும்பாதவனைப் போல் நடித்து அதே சமயத்தில் அவளுடைய கட்டாயத்துக்காகச் சொல்கிறவனைப் போலத் தான் புரிந்த வீரச் செயல்களைச் சொல்லிக் கொண்டான். தோள்களிலும், மார்பிலும் இன்னும் தன் உடம்பெல்லாம் போர்க்களத்தில் தான் அடைந்த காயங்களைக் காட்ட விரும்பாதவனைப் போல் காட்டினான். “அந்த சிநேகத் துரோகி வந்தியத்தேவன் என்னை மார்பிலே குத்திக் கொன்றிருந்தால்கூடக் கவலையில்லை. முதுகிலே குத்திவிட்டுப் போய் விட்டானே என்றுதான் வருத்தமாயிருக்கிறது. ஆகையினாலேதான் அவனுடைய துரோகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இல்லாவிடில், போரில் புறமுதுகிட்ட அபகீர்த்தியல்லவா ஏற்பட்டு விடும்? தோளிலோ, மார்பிலோ குத்திக் காயப்படுத்தியிருந்தால், அவனை மன்னித்து விட்டே இருப்பேன்!” என்று கந்தன் மாறன் உணர்ச்சி பொங்கக் கூறியது குந்தவைக்கு உண்மையாகவே தோன்றியது. வந்தியத்தேவன் இப்படிச் செய்திருப்பானோ, அவன் விஷயத்தில் நாம் ஏமாந்து போய் விட்டோமோ என்ற ஐயமும் உண்டாகி விட்டது. நடந்ததை விவரமாகச் சொல்லும்படி கேட்கவே, கந்தன்மாறன் கூறினான். அவனுடைய கற்பனா சக்தி அன்று உச்சத்தை அடைந்தது நந்தினிக்கே வியப்பை உண்டாக்கிவிட்டது.

“பாருங்கள், தேவி! கடம்பூரில் தங்கிய அன்றே அவன் என்னை ஏமாற்றிவிட்டான். தஞ்சாவூருக்குப் புறப்பட்ட காரியம் இன்னதென்று சொல்லவில்லை. இங்கு வந்து ஏதோ பொய் அடையாளத்தைக் காட்டி உள்ளே நுழைந்திருக்கிறான். சக்கரவர்த்தியையும் போய்ப் பார்த்திருக்கிறான். ஆதித்த கரிகாலரிடமிருந்து ஓலை கொண்டு வந்ததாகப் புளுகியிருக்கிறான். அத்துடன் விட்டானா? தங்கள் பெயரையும் சம்பந்தப்படுத்தி, தங்களுக்கும் ஓலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லவே கோட்டைத் தலைவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவன் ஒற்றனாயிருக்கலாம் என்று ஐயுற்று அவனைக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறார். எப்படியோ தப்பித்துப் போய்விட்டான். அது விஷயத்தில் அவனுடைய சமர்த்தை மெச்சத்தான் வேண்டும். நான் இந்தச் செய்திகளைக் கேட்ட போது என் சிநேகிதன் பகையாளியின் ஒற்றன் என்பதை மட்டும் நம்பவே இல்லை. அவனுடைய சுபாவத்திலேயே சில கோணல்கள் உண்டு. அப்படி ஏதோ அசட்டுத்தனம் செய்திருக்கிறான் என்று உறுதியாக நம்பினேன். ‘எப்படியாவது அவனை நான் கண்டுபிடித்துத் திரும்ப அழைத்து வருகிறேன். அவனை மன்னித்து விடவேண்டும்’ என்று கோட்டைத் தலைவரிடம் நிபந்தனை பேசிக்கொண்டு புறப்பட்டேன். கோட்டையைச் சுற்றியுள்ள வடவாற்றங்கரையோடு அந்த நள்ளிரவில் சென்றேன். யாரையும் பின்னோடு அழைத்துப் போய் என் நண்பனை அவமானப்படுத்த விரும்பவில்லை. கோட்டையிலிருந்து, தப்பியவன் எப்படியும் மதில் வழியாகத் தான் வெளியில் வரவேண்டுமல்லவா? முன்னமே வெளியே வந்திருந்தாலும் பக்கத்துக் காடுகளிலேதான் மறைந்திருக்க வேண்டும். ஆகையால் வடவாற்றங்கரையோடு போனேன். ஒருவன் செங்குத்தான கோட்டை மதில் சுவர் வழியாக இறங்கி வருவது மங்கிய நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. உடனே அங்கே போய் நின்றேன். அவன் இறங்கியதும், ‘நண்பா! இது என்ன வேலை?’ என்றேன். அந்தச் சண்டாளன் உடனே என் மார்பில் ஒரு குத்து விட்டான். யானைகள் இடித்தும் நலுங்காத என் மார்பை இவனுடைய குத்து என்ன செய்யும்? ஆயினும் நல்ல எண்ணத்துடன் அவனைத் தேடிப்போன என்னை அவன் குத்தியது பொறுக்கவில்லை. நானும் குத்திவிட்டேன். இருவரும் துவந்த யுத்தம் செய்தோம். அரை நாழிகையில் அவன் சக்தி இழந்து அடங்கிப் போனான். என்னிடம் ‘நீ வந்த காரணத்தை உண்மையாகச் சொல்லிவிடு! நான் உன்னை மன்னித்து உனக்கு வேண்டிய உதவி செய்கிறேன்!’ என்றேன்.

‘களைப்பாயிருக்கிறது, எங்கேயாவது உட்கார்ந்து சொல்கிறேன்’ என்றான். ‘சரி’ என்று சொல்லி அழைத்துச் சென்றேன். முன்னால் வழிகாட்டிக் கொண்டு போனேன். திடீரென்று அந்தப் பாவி முதுகில் கத்தியினால் குத்தி விட்டான். அரைச் சாண் நீளம் கத்தி உள்ளே போய்விட்டது. தலை சுற்றியது; கீழே விழுந்துவிட்டேன். அந்தச் சிநேகத்துரோகி தப்பி ஓடிவிட்டான்! மறுபடி நான் கண் விழித்து உணர்வு வந்து பார்த்தபோது ஓர் ஊமை ஸ்திரீயின் வீட்டில் இருந்ததைக் கண்டேன்.”

கந்தன்மாறனின் கற்பனைக் கதையைக் கேட்டு நந்தினி தன் மனத்திற்குள்ளே சிரித்தாள். குந்தவை தேவிக்கு அதை எவ்வளவு தூரம் நம்புவது என்று தீர்மானிக்க முடியவில்லை.

“ஊமை ஸ்திரீயின் வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? யார் கொண்டு சேர்த்தது?” என்றாள்.

“அதுதான் எனக்கும் விளங்காத மர்மமாக இருக்கிறது. அந்த ஊமைக்கு ஒன்றுமே தெரியவில்லை. தெரிந்தாலும் சொல்ல முடியவில்லை. அவளுக்கு ஒரு புதல்வன் உண்டாம். அவனையும் அன்றிலிருந்து காணவே காணோம். எப்படி மாயமாய் மறைந்தான் என்று தெரியாது. அவன் திரும்பி வந்தால் ஒரு வேளை கேட்கலாம். இல்லாவிடில் பழுவூர் வீரர்கள் என் நண்பனைப் பிடிக்கும் வரையில் காத்திருக்க வேண்டியதுதான்.”

“அவன் அகப்பட்டு விடுவான் என்று நினைக்கிறீர்களா?”

“அகப்படாமல் எப்படித் தப்ப முடியும்? சப்பட்டை கட்டிக் கொண்டு பறந்து விட முடியாதல்லவா? அதற்காகவே, அவனைப் பார்ப்பதற்காகவே, இங்கே காத்திருக்கிறேன். இல்லாவிடில் ஊர் சென்றிருப்பேன். இன்னமும் அவனுக்காகப் பழுவூர் அரசர்களிடம் மன்னிப்புப் பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

“ஐயா! தங்களுடைய பெருந்தன்மையே பெருந்தன்மை!” என்றாள் இளைய பிராட்டி. அவளுடைய மனம் ‘வந்தியத்தேவன் அகப்படக்கூடாது அவன் துரோகியாயிருந்தாலும் சரிதான்!’ என்று எண்ணமிட்டது.

அச்சமயத்தில் அரண்மனைத் தாதி ஒருத்தி ஓடிவந்து, “அம்மா! ஒற்றன் அகப்பட்டுவிட்டான்! பிடித்து வருகிறார்கள்!” என்று கத்தினாள்.

நந்தினி, குந்தவை இருவருடைய முகத்திலும் துன்ப வேதனை காணப்பட்டது; நந்தினி விரைவில் அதை மாற்றிக் கொண்டாள். குந்தவையினால் அது முடியவில்லை.

Source

Previous articlePonniyin Selvan Part 2 Ch 18
Next articlePonniyin Selvan Part 2 Ch 20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here