Home Kalki Ponniyin Selvan Part 2 Ch 2

Ponniyin Selvan Part 2 Ch 2

180
0
Ponniyin Selvan Part 2 Ch 2 - Kalki | TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 2, Ponniyin Selvan part 2 Ch 2, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: சுழற்காற்று அத்தியாயம் 2: சேற்றுப் பள்ளம்

Ponniyin Selvan Part 2 Ch 2

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: சுழற்காற்று

அத்தியாயம் 2: சேற்றுப் பள்ளம்

Ponniyin Selvan Part 2 Ch 2

காட்டிலும் மேட்டிலும், கல்லிலும் முள்ளிலும் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து வந்தியத்தேவன் ஓடினான். ஒருசமயம் அவள் கண்ணுக்குத் தெரிந்தாள். மறு கணத்தில் மறைந்தாள். இனி அவளைப் பிடிக்க முடியாது என்று தோன்றியபோது மறுபடியும் கண்ணுக்குப் புலப்பட்டாள். மாய மாரீசனைத் தொடர்ந்து இராமர் சென்ற கதை வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. ஆனால் இவள் மாயமும் அல்ல; மாரீசனும் அல்ல இவளுடைய கால்களிலே மானின் வேகம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அம்மம்மா! என்ன விரைவாக ஓடுகிறாள்? ‘எதற்காக இவளைத் தொடர்ந்து ஓடுகிறோம், இது என்ன பைத்தியக்காரத்தனம்?’ என்று எண்ணினான். உடனே அதற்கு ஒரு காரணமும் கற்பித்துக் கொண்டான். கோடிக்கரை நெருங்க நெருங்க, சேந்தன் அமுதன் வர்ணித்த மங்கையின் நினைவு அவனுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. இவள் அந்தப் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். இவளுடன் சிநேகம் செய்து கொண்டால் வந்த காரியம் நிறைவேறுவதற்கு அநுகூலமாயிருக்கும். அத்துடன் கலங்கரை விளக்கத்துக்குப் போக வழி கேட்டும் தெரிந்து கொள்ளலாம். தொலைதூரத்தில் வரும்போதே அவர்களுக்குக் கலங்கரை விளக்கின் உச்சி தெரிந்தது. ஆனால் அதை நெருங்குவது எளிதாயில்லை. காட்டுக்குள் புகுந்ததும் கலங்கரை விளக்கு தெரியவேயில்லை. காட்டுக்குள்ளே சுற்றிச் சுற்றி வருவதாக தென்பட்டதே தவிர வழி அகப்படவில்லை. இந்தச் சமயத்திலே தான் குழகர் கோயிலின் மதில் சுவரின் மேல் பூங்குழலியை வந்தியத்தேவன் கண்டான். அவளைப் பிடித்து வழி கேட்கலாம் என்று பார்த்தால், அவள் இப்படி மாய மானைப் போல் பிடிபடாமல் ஒடுகிறாளே? இவளை இப்படியே விட்டு விட்டுத் திரும்ப வேண்டியதுதான்? ஆனால் ஓட்டப் பந்தயத்தில் கூட ஒரு பெண்ணுக்குத் தோற்பது என்றால், அதுவும் மனத்துக்கு உகந்ததாயில்லை!

ஆ! அதோ திறந்தவெளி வந்துவிட்டது. சற்றுத் தூரத்தில் நீலக்கடல் தெரிகிறது. விரிந்து பரந்து அமைதி குடிகொண்ட அந்தக் கடலின் தோற்றம் என்ன அழகாயிருக்கிறது! அதோ கலங்கரை விளக்கமும் தெரிகிறது. அதன் உச்சியில் இப்போது ஜோதி கொழுந்துவிட்டு எரிகிறது. அதன் செந்நிறக் கதிர்கள் நாலா பக்கமும் பரவி விழுந்து விசித்திர ஜால வித்தைகள் புரிகின்றன.

இந்த இடத்தில் இந்தப் பெண்ணைப் பின்தொடர்வதை விட்டுவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிப் போகலாமா? கூடாது!கூடாது! இந்தத் திறந்த வெளியில் இவளை ஓடிப் பிடிப்பது சுலபம். இங்கே அவ்வளவு மணலாகக் கூட இல்லை. கால் மணலில் புதையவில்லை. பூமியில் புல் முளைத்துக் கெட்டிப் பட்டிருக்கிறது. சில இடங்களில் சேறு காய்ந்து பொறுக்குப் படர்ந்திருக்கிறது. இங்கேயெல்லாம் தடங்கலின்றி ஓடலாம். அந்தப் பெண்ணை இலகுவாய்ப் பிடித்துவிடலாம்! மேலும் அவள் கடலை நோக்கியல்லவா ஓடுகிறாள்? எவ்வளவு ஓடினாலும் முடிவில் கடலோரத்தில் சென்று அவள் நின்று தானே ஆக வேண்டும்! ஒருவேளை இந்த விந்தையான பெண் கடலிலேயே முழுகி மறைந்து விடுவாளோ! அடடா! குதிரையிலேயே ஏறி வராமற் போனோமே? அப்படி வந்திருந்தால் இந்தத் திறந்த வெளியில் ஒரு நொடியில் இவளைப் பிடித்து விடலாமே?

அதோ அவள் சற்றுத் தயங்கி நிற்கிறாள். நேரே கடலே நோக்கி ஓடாமல் வலதுபக்கமாகத் திரும்பி ஓடுகிறாள்! தன்னிடம் பிடிபடாமல் இருப்பதற்காக வலதுபுறத்தில் சற்றுத் தூரத்தில் தென்பட்ட காட்டை நோக்கி ஓடுகிறாள். காட்டுக்குள் அவள் புகுந்துவிட்டால் நிச்சயமாகப் பிடிக்க முடியாதுதான்! இத்தனை நேரம் ஓடியதும் வீண்! வந்தியத்தேவனுடைய கால்களும் அச்சமயம் கெஞ்ச ஆரம்பித்து விட்டன!

மீண்டும் அவளுடைய மனத்தை மாற்றிக் கொண்டு விட்டாள் போலும்! காட்டுக்குள் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள் போலும்! பம்பரத்தைப் போல் ஒரு சுற்றுச்சுற்றித் திரும்பி ஓடி வருகிறாள். கலங்கரை விளக்கின் அடிக்குப் போக நினைத்தாள் போலும். ஒரு நாலு பாய்ச்சல் பாய்ந்தால் அவளைப் பிடித்து விடலாம். கைப்பிடியாக அவளைப் பிடித்து “பெண்ணே! ஏன் இப்படி என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறாய்? உனக்கு உன் காதலனிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!” என்று சொன்னால், எத்தனை அதிசயம் அடைவாள்! சேந்தன் அமுதன் அவனிடம் ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை என்பது உண்மைதான். அதனால் என்ன? ஏதாவது சொந்தமாகக் கற்பனை செய்து சொன்னால் போகிறது!…

வந்தியத்தேவன் மனத்திற்குள் தீர்மானித்தபடி தன் தேகத்தில் மிச்சமிருந்த வலிமையையெல்லாம் உபயோகித்துப் பாய்ந்து ஓடினான். திரும்பி ஓடிவந்து கொண்டிருந்த அவளை நாலே பாய்ச்சலில் பிடித்துவிடலாம் என்பதுதான் அவனுடைய உத்தேசம். திடீரென்று “ஐயோ!” என்றான். தனக்கு என்ன நேர்ந்து விட்டது என்பது முதலில் அவனுக்கே தெரியவில்லை. பிறகு புலப்படத் தொடங்கியது. அவனுடைய கால்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டிருந்தன. முதலில் பாதங்கள் மட்டும் புதைந்தன. பிறகு கணுக்கால் புதைந்தது, முழங்கால் வரையில் சேறு மேலேறி விட்டது!

அடாடா! இந்த இடம் நம்மை எப்படி ஏமாற்றி விட்டது? மேலே பார்த்தால் நன்றாய்க் காய்ந்து பொறுக்குத் தட்டியிருக்கிறது. உள்ளே சேறு இன்னும் காயவில்லை. என்றுமே முழுமையும் காயமுடியாத புதை சேற்றுக் குழிகளைப் பற்றி வந்தியத்தேவன் கேள்விப்பட்டதுண்டு. ஆடுமாடுகள், குதிரைகள், யானைகள் கூட அப்பள்ளங்களில் அகப்பட்டுக் கொண்டால் சிறிது சிறிதாக உள்ளே அமுங்கிக் கொண்டே போய்க் கடைசியில் முழுதுமே முழுகி மறைந்து விடுமாம்! அத்தகைய புதைகுழிதானோ இது? அப்படித் தான் தோன்றுகிறது. முழங்காலும் மறைந்து விட்டதே! மேலும் உள்ளே இறங்கிக் கொண்டேயிருப்போமோ? விரைவில் தொடை வரைக்கும் புதைந்து விடும் போலிருக்கிறதே! யானைகளையும் குதிரைகளையும் விழுங்கி ஏப்பம் விடும் புதை சேறு நம்மைச் சும்மா விட்டு விடுமா! ஐயோ! இதுவா நமது முடிவு? நாம் கண்ட எத்தனை எத்தனையோ பகற் கனவுகள் எல்லாம் இதிலேயே புதைந்து விட வேண்டியதுதானா? இந்த அபாய வேளையில் அந்த விசித்திரமான பெண் வந்து கை கொடுத்துக் காப்பாற்றினால்தான் உண்டு. தப்புதவதற்கு வேறு வழியில்லை. ஒரு பெருங்கூச்சல் போட்டுப் பார்க்கலாம். இவ்விதம் எண்ணிய வந்தியதேவன், “ஐயோ! நான் செத்தேன்! சேற்றில் முழுகிச் சாகிறேன். எனக்குக் கைகொடுத்து உதவி செய்து காப்பாற்றுவார் யாரும் இல்லையா?” என்று கத்தினான்.

அந்தக் கூக்குரல் பூங்குழலியின் காதில் விழுந்தது. அவனுக்கு நேர் எதிரே சற்றுத் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பூங்குழலி நின்றாள். ஒரு கணம் தயங்கினாள். வந்தியத்தேவனுடைய அபாயமான நிலையைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள்.

மறுகணம் அங்கே பாதி மணலிலும் பாதி சேற்றுக் குழியிலும் கிடந்த படகு ஒன்று அவள் கவனத்தைக் கவர்ந்தது. அக்குழியில் தண்ணீர் நிறைந்து ஆழமான நீரோடையாக இருந்த காலத்தில் அப்படகு உபயோகப்பட்டிருக்க வேண்டும். அதில் இப்போது லாகவமாகக் குதித்து ஏறினாள். துடுப்பை எடுத்து இரண்டு தடவை வலித்தாள். அடாடா! இது என்ன அதிசயம்? அந்தப் படகு நீரில் அன்னப்பறவை செல்வது போல் அல்லவா சேற்றின் மேலே விரைவாக மிதந்து செல்கிறது? மிதந்து சென்று புதை சேற்றுக் குழியின் அக்கரையையும் அடைந்துவிட்டது. பூங்குழலி கெட்டித்தரையில் குதித்தாள். கரையில் கால்களை நன்றாய் ஊன்றிக் கொண்டு வந்தியத் தேவனுடைய கைகளைப் பற்றிக் கரையில் இழுத்து விட்டாள். அம்மம்மா! அந்த மெல்லியலாளின் கைகளிலே தான் எவ்வளவு வலிமை! தஞ்சைபுரிக்கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையருடைய இரும்புக் கைகளைவிட இவளுடைய கரங்கள் அதிக உறுதியாயிருக்கின்றனவே!

கரை ஏறியதும் வந்தியத் தேவன் கலகலவென்று சிரித்தான். அவனுடைய கால்கள் மட்டும் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தன.

“என்னைக் காப்பாற்றிக் கரைசேர்த்து விட்டதாக உனக்கு எண்ணம் போலிருக்கிறது! நீ வந்திராவிட்டால் நான் கரையேறி இருக்க மாட்டேன் என்று நினைத்தாயோ?” என்றான்.

“பின் எதற்காக அப்படி ‘ஐயோ! ஐயோ!’ என்று கத்தினாய்?” என்று பூங்குழலி கேட்டாள்.

“உன்னை ஓடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தான்!”

“அப்படியானால் மறுபடியும் உன்னைக் குழியிலேயே தள்ளி விடுகிறேன். உன் சாமர்த்தியத்தினால் நீயே கரை ஏறிக்கொள்!” என்று பூங்குழலி சொல்லித் தள்ள யத்தனித்தாள்.

“ஐயையோ!” என்று வந்தியத்தேவன் விலகி நின்று கொண்டான்.

“எதற்காக அலறுகிறாய்?”

“உயிருக்காகப் பயப்படவில்லை; சேற்றுக்குத்தான் பயப்படுகிறேன்! ஏற்கெனவே தொடை வரைக்கும் சேறாகிவிட்டது!”

பூங்குழலியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

“அதோ கடல் இருக்கிறது! போய் சேற்றை அலம்பிச் சுத்தம் செய்துகொள்!” என்றாள்.

“நீ கொஞ்சம் முன்னால் சென்று வழிகாட்ட வேண்டும்!” என்றான் வந்தியத்தேவன். இருவரும் கடற்கரையை நோக்கி நடந்தார்கள். சேற்றுப் பள்ளத்தைச் சுற்றிக் கொண்டு சென்றார்கள்.

“என்னைக் கண்டதும் எதற்காக அப்படி விழுந்தடித்து ஓடினாய்? என்னைப் பயங்கரப் பேய் பிசாசு என்று எண்ணி விட்டாயா?” என்று வல்லவரையன் கேட்டான்.

“இல்லை; பேய்பிசாசு என்று எண்ணவில்லை. ஆந்தை என்று எண்ணினேன். உன் மூஞ்சி ஆந்தை மூஞ்சி மாதிரியே இருக்கிறது!” என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.

வந்தியத்தேவனுக்குத் தன் தோற்றத்தைக் குறித்துக் கர்வம் அதிகம். ஆகையால் அவனை ஆந்தை மூஞ்சி என்று சொன்னது அவனுக்கு மிக்க கோபத்தை உண்டாக்கிற்று.

“உன்னுடைய குரங்கு முகத்துக்கு என்னுடைய ஆந்தை முகம் குறைந்து போய்விட்டதாக்கும்!” என்று முணு முணுத்தான்.

“என்ன சொன்னாய்?”

“ஒன்றுமில்லை. என்னைக் கண்டு எதற்காக அப்படி ஓடினாய் என்று கேட்டேன்.”

“நீ எதற்காக அப்படி என்னைத் துரத்தித் கொண்டு வந்தாய்?”

“கலங்கரை விளக்கத்துக்கு வழி கேட்பதற்காக உன்னைத் துரத்திக் கொண்டு வந்தேன்…”

“அதோ தெரிகிறதே விளக்கு! என்னை வழி கேட்பானேன்?”

“காட்டுக்குள் புகுந்த பிறகு தெரியவில்லை. அதனாலே தான்! நீ எதற்காக என்னைக் கண்டதும் அப்படி ஓட்டம் எடுத்தாய்?”

“ஆண் பிள்ளைகள் மிகப் பொல்லாதவர்கள். ஆண் பிள்ளைகளைக் கண்டாலே எனக்குப் பிடிப்பத்திலை!”

“சேந்தன் அமுதனைக்கூடவா?” என்றான் வல்லவரையன் கொஞ்சம் மெல்லிய குரலில்.

“யாரைச் சொன்னாய்?”

“தஞ்சாவூர் சேந்தன் அமுதனைச் சொன்னேன்.”

“அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”

“அவன் உன் அருமைக் காதலன் என்று தெரியும்.”

“என்ன? என்ன?”

“உன் பெயர் பூங்குழலி தானே?”

“என் பெயர் பூங்குழலிதான். சேந்தன் அமுதனைப் பற்றி என்ன சொன்னாய்? அவன் என் …”

“அவன் உன் காதலன் என்றேன்.”

பூங்குழலி கலீர் என்று நகைத்தாள். “அப்படி யார் உனக்குச் சொன்னது?” என்றாள்.

“வேறு யார் சொல்வார்கள்? சேந்தன் அமுதன் தான் சொன்னான்”.

“தஞ்சாவூர் வெகு தூரத்தில் இருக்கிறது. அதனாலே தான் அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டான்!”

“இல்லாவிட்டால் …?”

“இங்கே என் முன்னால் சொல்லியிருந்தால் அந்தச் சேற்றுக் குழியில் தூக்கிப் போட்டிருப்பேன்.”

“அதனால் என்ன? சேற்றை அலம்பிக்கொள்ளக் கடலில் ஏராளமாய்த் தண்ணீர் இருக்கிறதே!”

“நீ விழுந்த புதை சேற்றுக்குழியில் மாடு, குதிரை எல்லாம் முழுகிச் செத்திருக்கின்றன. யானையைக் கூட அது விழுங்கி விடும்!”

வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. அவனை அந்தப் படுகுழி கொஞ்சமாகக் கீழே இழுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உணர்ச்சியை நினைத்துக் கொண்டான். இவள் மட்டும் வந்து கரையேற்றியிராவிட்டால், இத்தனை நேரம்… அதை நினைத்தபோது அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.

“சேந்தன் அமுதன் என்னைப்பற்றி இன்னும் என்ன சொன்னான்?” என்று பூங்குழலி கேட்டாள்.

“நீ அவனுடைய மாமன் மகள் என்று சொன்னான். உன்னைப் போன்ற அழகி தேவலோகத்திலே கூடக் கிடையாது என்று சொன்னான்…”

“தேவலோகத்துக்கு அவன் நேரிலே போய்ப் பார்த்திருப்பான் போலிருக்கிறது. இன்னும்?…”

“நீ நன்றாகப் பாடுவாய் என்று சொன்னான். நீ பாடினால் கடலுங்கூட இரைச்சல் போடுவதை நிறுத்திவிட்டுப் பாட்டைக் கேட்குமாம்! அது உண்மைதானா?”

“நீயே அதைத் தெரிந்துகொள்! இதோ! கடலும் வந்து விட்டது!…”

இருவரும் கடற்கரை யோரமாக வந்து நின்றார்கள்.

Source

Previous articlePonniyin Selvan Part 2 Ch 1
Next articlePonniyin Selvan Part 2 Ch 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here