Home Kalki Ponniyin Selvan Part 2 Ch 21

Ponniyin Selvan Part 2 Ch 21

85
0
Ponniyin Selvan Part 2 Ch 21 -Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 2, Ponniyin Selvan part 2 Ch 21, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: சுழற்காற்று அத்தியாயம் 21: பாதாளச் சிறை

Ponniyin Selvan Part 2 Ch 21

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்: சுழற்காற்று

அத்தியாயம் 21: பாதாளச் சிறை

Ponniyin Selvan Part 2 Ch 21

உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. சுகம் எப்படி வருகிறது, துக்கம் எப்படி வருகிறது என்று யாரால் சொல்ல முடியும்? வானம் நெடுங்காலம் களங்கமற்று விளங்கி வருகிறது. திடீரென்று கருமேகங்கள் திரண்டு வந்து எட்டுத் திசைகளும் இருள் சூழ்ந்து இடி இடித்து மின்னல் மின்னி ‘கொட்டுகொட்டு’ என்று கொட்டுகிறது. உலகிலிருந்து காற்று என்பதே அற்றுப் போய்விட்டதாகச் சில சமயம் தோன்றுகிறது. மரங்களின் இலைகளும் அசையாமலிருக்கின்றன. திடீரென்று எங்கிருந்தோ ஒரு சூறைக்காற்று வந்து சுழன்று அடிக்கிறது. அதன் வேகத்தில் பெரிய பெரிய மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுகின்றன. சற்று முன்னால் நேத்ரானந்தமாக வானளாவி நின்று காட்சியளித்த பசுமரச் சோலைகள் இப்போது அனுமார் அழித்த அசோகவனமாக மாறி விடுகின்றன.

குந்தவையின் வாழ்க்கையில் அத்தகைய சூறைக் காற்று இப்போது சுழன்று அடித்துக்கொண்டிருந்தது. சில காலத்துக்கு முன்பு வரையில் அவள் கவலை என்பதை அறியாதவளாயிருந்தாள். வாழ்க்கை என்பது இடைவிடாத ஓர் ஆனந்த உற்சவமாக இருந்து வந்தது. அன்பும் ஆதரவும், ஆடலும் பாடலும், காவியமும் ஓவியமும், அணிமணியும் அலங்காரமும், உத்தியானவனமும் ஒய்யார ஓடமுமே வாழ்க்கை என்று எண்ணும் படியாக நாட்கள் சென்று கொண்டிருந்தன. தந்தையும் தாய்மார்களும், அண்ணனும், தம்பியும், அமைச்சர்களும், ஆசிரியர்களும், தாதிமார்களும், தோழிமார்களும் இளைய பிராட்டியைத் தங்கள் கண்ணின் கருமணியாகப் பாவித்து நடத்திவந்தார்கள். துயரம் இன்னது என்பது காவியத்திலும் நாடகத்திலும் உள்ள கற்பனை மூலமாகவே அவளுக்குத் தெரிந்திருந்தது.

அத்தகைய பாக்கியசாலிக்குத் துன்பம் வரத் தொடங்கிய போது ஒன்றன் மேலொன்றாகத் தொடர்ந்து வந்து மோதியது. தந்தையின் நிலை கவலைக்கிடமாயிருந்தது. இராஜ்யத்துக்குப் பெரிய சோதனை ஏற்பட்டிருந்தது. தமையனும் தம்பியும் தூர தேசங்களில் இருந்தார்கள். இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பெரும் விபத்து சோழர் குலத்துக்கு ஏற்படப் போவதாக சோதிடர்களும் நிமித்தக்காரர்களும் மர்மமாகச் சொல்லி வந்தார்கள். நாட்டில் இரகசியச் சதிக்கூட்டங்கள் நடந்து வந்தன. நாட்டின் மக்கள் இனந்தெரியாத பீதியில் ஆழ்ந்திருந்தார்கள்.

வைர நெஞ்சு படைத்த வீரர்கள் வழி வழியாக வந்த குலத்தில் பிறந்த குந்தவை இவ்வளவையும் வீரத்துடன் சமாளிக்கக் கூடிய மனோதைரியம் பெற்றிருந்தாள். குலத்துக்கும் இராஜ்யத்துக்கும் ஏற்பட்டிருந்த எல்லா அபாயங்களையும் தன் கூரிய மதியின் துணையினால் போக்கிவிடலாம் என்ற திடமான நம்பிக்கை அவளுக்கு இருந்தது. ஆனால் அவளுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய சம்பவம். எதிர்பாராத ஒரு சந்திப்பு – அவளுடைய வைர இதயம் இளகவும் மனோதைரியம் குலையவும் காரணமாகி விட்டது. வந்தியத்தேவனை குந்தவை சந்தித்தபோது, – அது வரையில் மொட்டாக இருந்த அவளுடைய இருதய தாமரை, மடலவிழ்ந்து மலர்ந்தது.

ஆனால், என்ன துரதிருஷ்டம் – அதே சமயத்தில் ஒரு கருவண்டு அந்த மலருக்குள் குடிபுகுந்து, தன் விஷக் கொடுக்கினால் அதன் மெல்லிய இதழ்களைக் கொட்டத் தொடங்கியது! அம்மம்மா! என்ன வேதனை! அந்த வாணர்குல வீரன் ஒரு வேளை சிறைப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எவ்வளவு வேதனையை அளித்தது? அவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கொடிய வார்த்தை எப்படி அவள் நெஞ்சைப் பிளந்தது? அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க அவள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது? பெற்றவர்கள், உற்றார்கள், உடன் பிறந்தவர்கள், உயிருக்குயிரான தோழிகள் எவ்வளவோ பேர் இருக்க, – எவனோ வழியோடு போகிறவனைப் பற்றி, – அகஸ்மாத்தாக இரண்டு மூன்று தடவை சந்தித்தவனைப் பற்றி – ஏன் இந்த இருதயம் இப்படித் துடிதுடிக்க வேண்டும்? இதையெல்லாவற்றையும் யோசிப்பதற்கும், காரண காரியங்களை ஆராய்ந்து முடிவு கட்டுவதற்கும், இப்போது நேரமில்லை. மீனமேஷம் பாராமல், சகுனமும் சகுனத்தடையும் பாராமல் விசாரிக்க வேண்டியதை உடனே விசாரித்து, செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும்…

ஆகவே அன்று பிற்பகலிலேயே இளைய பிராட்டி சின்னப் பழுவேட்டரையரின் மாளிகைக்கு வருவதாகச் சொல்லி அனுப்பிவிட்டுச் சென்றாள். அந்த மாளிகையின் அந்தப்புர மாதர்கள் இளைய பிராட்டியை ஆர்வத்தோடு வரவேற்றார்கள், அன்பைச் சொரிந்து உபசரித்தார்கள். இளவரசி அவர்களுடன் அளவளாவிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு சித்திர மண்டபத்துக்குச் சென்றாள். அங்கே சின்னப் பழுவேட்டரையர் காத்திருந்து இளைய பிராட்டியை வரவேற்று, மண்டபத்தில் தீட்டியிருந்த சித்திரங்களை விளக்கிக் கூற முற்பட்டார். குந்தவையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்தாள்.

கடைசிச் சித்திரத்தண்டை வந்து நின்றதும், குந்தவை காலாந்தககண்டரை ஏறிட்டுப் பார்த்து, “ஐயா! பழுவேட்டரையர்கள் பரம்பரையாகச் சோழ குலத்துக்கு ஒப்பற்ற சேவை புரிந்து வந்திருக்கிறார்கள்!” என்றாள்.

“அம்மையே! அது எங்கள் பாக்கியம்” என்றார் காலாந்தக கண்டர்.

“அந்தச் சேவைக்கெல்லாம் ஈடாகக் கூடியது இந்தச் சோழ சாம்ராஜ்யந்தான் என்பதில் சந்தேகமில்லை…”

“தாயே! இது என்ன வார்த்தை?”

“ஆனாலும் சக்கரவர்த்தியின் ஆயுட்காலம் முடிந்து கைலாஸ பதவியை அடையும் வரையில் தாங்கள் காத்திருக்கலாம் அல்லவா? சாம்ராஜ்ய அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு இவ்வளவு அவசரப்பட வேண்டுமா?”

இந்த வார்த்தைகள் காலாந்தக கண்டரின் இருதயத்தில் கூரிய அம்புகளைப் போல் பாய்ந்தன என்பதை அவருடைய முகம் காட்டியது. அவரது நெற்றியில் வியர்வைத் துளிகள் துளித்து நின்றன. மீசை துடிதுடித்தது; கை கால்கள் வெடவெடத்து ஆடின.

காலாந்தக கண்டர் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு குந்தவையைப் பார்த்து, “அம்மையே! இது என்ன இவ்வளவு உக்கிரம்? சொல்லம்பினாலேயே என்னை யமலோகத்துக்கு அனுப்பிவிடுவதென்று உத்தேசமா…?” என்றார்.

“ஐயா! அத்தகைய சக்தி என்னிடம் இல்லை என்பது தங்களுக்கே தெரியும். காலாந்தகரிடம் அணுக யமனே பயப்படுவானே? என் போன்ற பேதைப் பெண்ணால் அது முடியுமா?”

“அம்மணி! இத்தகைய கொடிய வார்த்தைகளைச் சொல்வதைக்காட்டிலும் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை என் காதில் தாங்கள் ஊற்றலாம்! தேவி இவ்வளவு மறக்கருணை காட்டும்படி அடியேன் என்ன தவறு செய்தேன்?”

“தங்கள் தவறைப் பற்றிச் சொல்ல நான் யார்? என்னுடைய தவறு இன்னது என்பதைத்தான் தாங்கள் சொல்ல வேண்டும். என் தந்தையின் நோயைத் தீர்ப்பதற்கு மூலிகை கொண்டு வருவதற்காக ஆள் அனுப்பியது என் பேரில் தவறா?”

“இல்லை, அம்மணி, அது ஒரு நாளும் தவறாகாது.”

“பழையாறை வைத்தியர் மகனைக் கோடிக்கரைக்கு மூலிகை கொண்டு வருவதற்காக நான் அனுப்பினேன் என்பது தங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும், அம்மணி!”

“இன்றைய தினம் அந்த வைத்தியர் மகனைக் கயிற்றால் கட்டி வீதியில் உம் குதிரை வீரர்கள் இழுத்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். கட்டளையிட்டது தாங்கள்தானே? அவனை அனுப்பியவள் நான் என்று தெரிந்துதானே இந்த ஏற்பாடு செய்தீர்?”

“ஆம், பிராட்டி! ஆனால் அவன் ஒற்றன் என்பது தெரியாமல் தாங்கள் அனுப்பியிருக்கலாம் அல்லவா?”

“பழையாறை வைத்தியர் மகனாவது? ஒற்றனாவது? அந்தக் கதையை என்னை நம்பச் சொல்கிறீரா?”

“தாயே! அவனே ஒப்புக்கொண்டிருந்தால் நம்ப வேண்டியதுதானே?”

இளவரசி சிறிது திடுக்கிட்டு, “அவனே ஒப்புக்கொண்டானா? அது எப்படி? என்னத்தை ஒப்புக்கொண்டான்?” என்று கேட்டாள்.

“தன்னோடு வந்த இன்னொருவன் ஒற்றன் என்று இவன் ஒப்புக்கொண்டான். அந்த இன்னொருவன் மூலிகைக்காக உண்மையில் பிரயாணம் புறப்படவில்லையென்றும், இலங்கையில் யாருக்கோ கடிதம் கொண்டு சென்றதாகவும் இவன் ஒப்புக் கொண்டான்.”

“இவன் பெரிய மூடன்; ஏதாவது உளறியிருப்பான். இவனுடன் சென்ற இன்னொரு ஆளையும் அனுப்பியவள் நான்தான். அது தங்களுக்குத் தெரியும் அல்லவா?”

“தெரியும், தாயே! ஆனால் தங்களை அந்த மனிதன் ஏமாற்றிவிட்டான் என்பதும் தெரியும். வந்தியத்தேவன் என்னும் பெயருடைய அவ்வாலிபன் உண்மையில் ஓர் ஒற்றன்தான்.”

“இல்லவே இல்லை, அவன் காஞ்சிபுரத்திலிருந்து என் தமையன் எழுதிய ஓலையைக் கொண்டு வந்தவன்.”

“இளவரசி! அவன் சக்கரவர்த்திக்கும், இளவரசரிடமிருந்து ஓலை கொண்டு வந்தான் அதனால் என்ன? ஒற்றர்கள் இப்படி ஏதாவது ஓர் உபாயத்தைக் கடைப்பிடித்துத் தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும்?”

“ஐயா! வந்தியத்தேவன் ஒற்றன் என்பதற்கு என்ன ருசு?”

“அவன் ஒற்றன் இல்லாவிட்டால் இராஜபாட்டையில் நடப்பதை விட்டுக் குறுக்கு வழியில் நடப்பானேன்? குடந்தைச் சோதிடரிடம் போய்ச் சக்கரவர்த்தியின் ஜாதகப் பலனைப் பற்றிக் கேட்பானேன்?”

“சக்கரவர்த்தியின் ஜாதகத்தைப் பற்றி நான்கூடக் குடந்தை சோதிடரிடம் கேட்டேன். அதனால் என்ன?”

“சக்கரவர்த்தியின் செல்வப் புதல்வியாகிய தாங்கள் கேட்பது வேறு. சம்பந்தமில்லாத யாரோ வழிப்போக்கன் கேட்பது வேறு. பகையரசரின் ஒற்றனாயிருந்தால்தான் அப்படி விசாரிக்கத் தோன்றும்.”

“இது தங்கள் ஊகம், வேறு காரணம் உண்டா?”

“பகிரங்கமாக என்னுடைய அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டு தஞ்சை கோட்டைக்குள் வந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் பழுவூர் முத்திரை மோதிரத்தைக் காட்டிவிட்டு ஏன் நுழைய வேண்டும்? பெரிய பழுவேட்டரையர் கொடுத்தார் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்?”

“முத்திரை மோதிரம் பின்னே யார் கொடுத்தார்களாம்!”

“அது இன்னும் தெரியவில்லை. கண்டுபிடிக்க வேண்டும்.”

“அதைக் கண்டுபிடிக்க முடியாமல் உங்கள் ஆட்கள் என்ன செய்தார்கள்?”

“அம்மணி, என்னுடைய ஆட்கள் மந்திரவாதிகள் அல்ல. ஒற்றனைக் கண்டுபிடித்துக் கேட்டுத்தானே முத்திரை மோதிரம் எப்படி அவனிடம் வந்தது என்று தெரிந்து கொள்ள முடியும்?”

“அவன் உண்மையைச் சொல்லுவான் என்பது என்ன நிச்சயம்?”

“உண்மையைச் சொல்லும்படி செய்வதற்கு வழிகள் இருக்கின்றன. தாயே! பாதாளச் சிறை இருக்கவே இருக்கிறது. ஒற்றனுக்கு இதுவும் தெரிந்திருக்கிறது. அதனால்தான் மறுபடியும் தலைமறைவாகி இரவுக்கிரவே கோட்டையிலிருந்து தப்பி ஓடிவிட்டான். சம்புவரையர் மகனையும் முதுகில் குத்தி விட்டு ஓடிவிட்டான்!”

“அவன் தான் குத்தியவன் என்பதற்கு என்ன அத்தாட்சி?”

“கந்தன்மாறன் கூறியதுதான்.”

“அது போதாது! அவன் கந்தன்மாறனைக் குத்தவில்லையென்று நான் சொல்லுகிறேன்!”

“தாயே! தாங்கள் அருகில் இருந்து பார்த்தீர்களா?”

“பார்க்கவில்லை. ஆனால் ஒருவன் முகத்தைப் பார்த்து அவன் குற்றவாளியா, இல்லையா என்பதை என்னால் நிர்ணயிக்க முடியும்.”

“அந்தப் பொல்லாத ஒற்றன் பாக்கியசாலி. தங்களுடைய நல்ல அபிப்பிராயத்தை எப்படியோ கவர்ந்துவிட்டான். அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே?”

“ஐயா! அவனை மறுபடியும் ஒற்றன் என்று ஏன் சொல்கிறீர்?”

“தாயே! அவன் ஒற்றன் இல்லாவிட்டால் கூத்தாடிகளுடன் சேர்ந்து முகமூடி போட்டுக் கொண்டு ஏன் பழையாறையில் நுழைகிறான்? மாறுவேடம் போட்டுக்கொண்டு ஏன் கோடிக்கரை துறைமுகத்துக்குப் பிரயாணமாகிறான்? அவன் ஒற்றன் இல்லாவிட்டால் என் ஆட்களைக் கண்டதும் ஒருநாள் முழுதும் கோடிக்கரையில் ஒளிந்து திரிவானேன்? இரவானதும் படகில் ஏறி இலங்கைத் தீவுக்குப் போவானேன்?”

“ஓகோ! அவன் படகில் ஏறித் தப்பித்தும் போய் விட்டானா? உங்கள் ஆட்களால் அவனைப் பிடிக்க முடியவில்லையா?”

“ஆம், தாயே! அந்த மாயாவி ஒற்றன் என் ஆட்களை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான். இந்த முட்டாள்கள் அவனை விட்டுவிட்டு வைத்தியர் மகனைப் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.”

“ஐயா! ஒற்றன் எப்படியாவது போகட்டும். வைத்தியர் மகனை நான் அனுப்பிவைத்தேன். அவன் குற்றமற்றவன் என்பது நிச்சயம். அவனை உடனே விடுவித்தே ஆக வேண்டும்.”

“அம்மணி! இவன் ஒற்றனில்லாவிட்டாலும் ஒற்றனுக்கு உடந்தையாயிருந்திருக்கிறான். ஏதேதோ கட்டுக் கதைகளைச் சொல்லி என் ஆட்களை ஏமாற்றியிருக்கிறான். ஒற்றன் ஒளிந்திருப்பதற்கும், தப்பிப் படகிலேறிச் செல்வதற்கும் இவன் உதவி செய்திருக்கிறான்.”

“அதெல்லாம் எப்படியிருந்தாலும், வைத்தியர் மகனை விடுதலை செய்தேயாக வேண்டும்.”

“அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயில்லை. நாட்டின் நாலு புறமும் அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன. பகைவர்கள் படையெடுக்கக் காத்திருக்கிறார்கள். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிச் சேவகர்கள் சோழ குலத்தைக் கருவறுக்கச் சபதம் செய்திருக்கிறார்கள். நாடெங்கும் சதிகள் நடந்து வருகின்றன.”

“ஐயா! சதி செய்பவர்கள் எல்லோரையும் சிறையில் போடுவதாயிருந்தால் சிறையில் இடமே இராது!”

“இடம் இருக்கும் வரையில் போடலாம் அல்லவா?”

“உண்மைச் சதியாளரைப் போடுவதற்குக் கொஞ்சம் இடம் மிஞ்சட்டும். ஐயா! வைத்தியர் மகனை உடனே விடுதலை செய்யுங்கள்!”

“அந்தப் பொறுப்பை நான் ஏற்க முடியாது, தாயே!”

“சக்கரவர்த்தியின் கட்டளை வந்தால் செய்வீரா! அதையும் புறக்கணிப்பீரா?”

“அம்மணி, இதற்குச் சக்கரவர்த்தியின் கட்டளை தேவையில்லை. இளைய பிராட்டியின் விருப்பம் எதுவோ அதுவே சக்கரவர்த்திக்கு வேதக் கட்டளை என்பது உலகமறிந்த செய்தி. இதோ பாதாளச் சிறையின் சாவியைத் தங்கள் கையில் ஒப்புவித்து விடுகிறேன். தாங்களே சென்று கதவைத் திறந்து விடுதலை செய்யுங்கள். இன்னும் யாரையாவது விடுதலை செய்வதாயிருந்தாலும் தாராளமாய்ச் செய்யுங்கள். அதனால் வரும் லாப நஷ்டங்களுக்குப் பொறுப்புத் தங்களது!”

இவ்வாறு சொல்லிக் காலாந்தககண்டர் ஒரு பெரிய சாவியை எடுத்துக் கொடுத்தார். குந்தவை பொங்கி வந்த தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “ஆகட்டும், ஐயா! லாப நஷ்டங்களுக்குப் பொறுப்பு நானே ஏற்றுக் கொள்கிறேன்!” என்று சாவியைப் பெற்றுக் கொண்டாள்.

“இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதாவது பெருந்தீங்கு நேர்ந்தால், அது இரண்டு பெண்களினால்தான் வந்ததாகும்” என்றார் தஞ்சைக் கோட்டைத் தலைவர்.

“நான் ஒருத்தி; அந்த இன்னொரு பெண்யாரோ?”

“பழுவூர் இளைய ராணி நந்தினி தேவிதான்!”

குந்தவை புன்னகை புரிந்து “சோழ சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியுடன் என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறீர்களே? இது காதில் விழுந்தால் பெரிய பழுவேட்டரையர் தங்களைத் தேசப் பிரஷ்டம் செய்துவிடுவார்!” என்று சொன்னாள்.

“ரொம்ப நல்லதாய்ப் போய்விடும்! அதற்கு நான் காத்திருக்கிறேன்” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

Source

Previous articlePonniyin Selvan Part 2 Ch 20
Next articlePonniyin Selvan Part 2 Ch 22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here