Home Kalki Ponniyin Selvan Part 3 Ch 4

Ponniyin Selvan Part 3 Ch 4

87
0
Ponniyin Selvan Part 3 Ch 4 -Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 3, Ponniyin Selvan part 3 Ch 4, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்: கொலை வாள் அத்தியாயம் 4: தாழைப் புதர்

Ponniyin Selvan Part 3 Ch 4

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்: கொலை வாள்

அத்தியாயம் 4: தாழைப் புதர்

Ponniyin Selvan Part 3 Ch 4

நடுக்கடலில் படகு தொட்டில் ஆடுவது போல் உல்லாசமாக ஆடிக்கொண்டு சென்றது. இரண்டு நாளைக்கு முன்னால் அங்கே தென்னைமர உயரம் அலைகள் எழும்பி விழுந்தன என்று கற்பனை செய்வதே கடினமான காரியம். படகில் இளவரசர் பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும், பூங்குழலியும் இருந்தனர். பூங்குழலியின் கையில் துடுப்பு இருந்தது. ஆனால் அதை அவள் விசையாகப் போடவில்லை. வந்தியத்தேவனுக்கும் இளவரசருக்கும் நடந்த சம்பாஷணையை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர்களும் பேச்சில் கவனமாக இருந்தார்கள். படகு விரைவாகப் போக வேண்டுமென்று ஆவல் கொண்டவர்களாகத் தோன்றவில்லை.

படகு, கோடிக்கரை சேர்ந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்பது பற்றித்தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இளவரசர் தஞ்சாவூருக்குப் போகக்கூடாது என்றும், பழையாறைக்கு வரவேண்டும் என்றும் வந்தியத்தேவன் வாதிட்டுக் கொண்டிருந்தான். அதற்குப் பல காரணங்களை அவன் எடுத்துச் சொன்னான்.

“தங்கள் சகோதரி தங்களை மிக அவசர காரியமாகப் பார்க்க விரும்புகிறார். தங்களைக் கையோடு அழைத்துக் கொண்டு வருவதாக வாக்களித்து வந்திருக்கிறேன். அதை நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்று மன்றாடினான்.

“உன் வாக்கை நிறைவேற்றுவதற்காக என் தந்தையின் கட்டளையை மீறச் சொல்கிறாயா?” என்று இளவரசர் கோபமாகக் கேட்டார்.

“அது தங்கள் தந்தையின் கட்டளையில்லை; பழுவேட்டரையரின் கட்டளையல்லவா?” என்றான் வந்தியத்தேவன்.

அதோடு இன்னொன்றும் சொன்னான். “சக்கரவர்த்தியைத் தாங்கள் பார்க்கப் போவதாயிருந்தாலும் சுதந்திரமாகப் பார்க்கப் போவது நல்லதா, பழுவேட்டரையர்களின் சிறையாளியாகப் பார்க்கப் போவது நல்லதா? நான் சொல்கிறேன், கேளுங்கள். தங்களைப் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி பரவ வேண்டியதுதான். சோழ நாட்டு மக்கள் எல்லோரும் திரண்டு எழுந்து வந்துவிடுவார்கள். தங்களுடைய அருமைத் தாய்நாடு ஒரு பயங்கர ரணகளமாகி விடும். அது நல்லதா என்று எண்ணிப் பாருங்கள்! அப்படிப்பட்ட கேடு சோழ நாட்டுக்கு ஏற்படக் கூடாது என்று தான் கடவுளே அந்தச் சுழற்காற்றை ஏவி விட்டிருக்க வேண்டும். கடவுளின் விருப்பத்துக்கு விரோதமாகத் தாங்கள் சோழ நாட்டில் கலவரத்தை உண்டாக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.

அவ்வளவு நேரமும் அவன் சொல்லி வந்த வாதங்களுக்குள் இது இளவரசரின் மனத்தை ஓரளவு மாற்றியது. தம்மைப் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தால், சோழநாட்டில் கலவரம் உண்டாவது சாத்தியந்தான். மக்களுக்குத் தம்மிடம் உள்ள அபிமானம் எவ்வளவு மகத்தானது என்பது அவருக்கு ஒருவாறு தெரிந்துதானிருந்தது. ஆகையால் இளவரசர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, “அப்படியே உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் முடிவு செய்தாலும் அது எப்படிச் சாத்தியம்? கோடிக்கரையில் பழுவேட்டரையர்களின் ஆட்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?” என்று கேட்டார்.

“அதற்கு உதவி செய்ய இந்த ஓடக்காரப் பெண் இருக்கிறாள். கரையில் எத்தனை பேர் காத்திருந்தாலும் அவர்கள் கண்களில் படாமல் கோடிக்கரைக் காட்டுக்குள் நம்மைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவாள். பூங்குழலி! நான் கூறியது காதில் விழுந்ததா? அவ்விதம் செய்ய முடியுமா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

பூங்குழலி அப்போது ஏழாவது சொர்க்கலோகத்தில் இருந்தாள். இளவரசரைக் கடலிலிருந்து காப்பாற்றிப் படகிலேற்றி அழைத்துக்கொண்டு வந்தது அவளுக்கு எல்லையில்லாத உள்ளக் களிப்பை அளித்திருந்தது. கோடிக்கரை சேர்ந்ததும் அவரைப் பிரியவேண்டுமே என்ற எண்ணம் இடையிடையே வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தது. மேலும் அவருக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமானால் அதைக் காட்டிலும் அவள் பெறக்கூடிய பேறு வேறு என்ன இருக்க முடியும்?

“கோடிக்கரைக்குக் கொஞ்சம் மேற்கே தள்ளிப் படகைக் கொண்டுபோனால் இருபுறமும் காடு அடர்ந்த கால்வாய் ஒன்று இருக்கிறது. அதன் வழியாகப் படகைவிட்டுக் கொண்டு போகலாம். இருபுறமும் அங்கே சதுப்புநிலம். சுலபமாக யாரும் வரமுடியாது!” என்று பூங்குழலி சொன்னாள்.

“எங்களை அங்கே விட்டுவிட்டு நீ கோடிக்கரை போய்த் தகவல் விசாரித்துக் கொண்டு வர முடியும் அல்லவா?”

“முடியும்; படகை ஒருவரும் பார்க்கமுடியாதபடி நிறுத்துவதற்கு எத்தனையோ இடம் இருக்கிறது.”

“இளவரசே! கேட்டீர்களா!” என்றான் வந்தியத்தேவன்.

“கேட்டேன், அப்பா! என்னுடைய தாய் நாட்டில் என்னைத் திருடனைப் போல் பிரவேசிக்கச் சொல்லுகிறாய். திருடனைப்போல் ஒளிந்திருக்கச் சொல்லுகிறாய்.” என்றார்.

படகில் சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு இளவரசர், “சமுத்திரகுமாரி! ஏன் படகை அடியோடு நிறுத்தி விட்டாய்?” என்று கேட்டார்.

பூங்குழலி வந்தியத்தேவனைப் பார்த்து விட்டுத் துடுப்பை வலிக்க ஆரம்பித்தாள்.

“பாவம்! இந்தப் பெண் எத்தனை நேரம் தனியாகத் துடுப்பு வலிப்பாள்? நான் கொஞ்சம் தள்ளிப் பார்க்கிறேன். இங்கே கொடு, அம்மா, துடுப்பை!” என்றான் வந்தியத்தேவன்.

அவனுடைய எண்ணத்தை அறிந்த இளவரசர் புன்னகை புரிந்தார்.

“நண்பனே! உன்னுடைய சூழ்ச்சிகள் எல்லாம் வீண்தான். நான் பழையாறைக்கும் போகப் போகிறதில்லை. தஞ்சாவூரையும் பார்க்கப் போகிறதில்லை. கடவுள் என்னைக் கைலாசத்துக்கே அழைத்துக் கொண்டு போய் விடுவார் போலிருக்கிறது!” என்றார்.

வந்தியத்தேவனும் பூங்குழலியும் பீதியடைந்து இளவரசரை உற்றுப் பார்த்தார்கள். அவர் உடம்பு நடுங்கத் தொடங்கியிருப்பதைக் கண்டார்கள்.

வந்தியத்தேவன் அவர் அருகில் சென்று, “ஐயா! இது என்ன? தங்கள் உடம்பு ஏன் நடுங்குகிறது?” என்று கேட்டான்.

“இது குளிர் காய்ச்சல், அப்பனே! இலங்கையில் இந்தக் காய்ச்சல் அதிகம் பரவியிருக்கிறது என்று சொன்னேனே, ஞாபகம் இல்லையா? இந்தச் சுரம் வந்தவர்கள் பிழைப்பது அரிது!” என்று சொன்னார் இளவரசர்.

கடல் நடுவில் கப்பலின் பாய்மரம் இடிவிழுந்து பற்றிக் கொண்ட போதுகூட, வந்தியத்தேவன் அவ்வளவு கலக்கம் அடையவில்லை. இளவரசரின் வார்த்தைகள் அவ்வளவாக அவனை இப்போது கதிகலங்கச் செய்துவிட்டன.

பூங்குழலியின் கையிலிருந்து துடுப்புத் தானாக நழுவிட்டது. உடம்பில் ஜீவசக்தி அடியோடு மங்கிவிட்டது. கண்களில் மட்டுமே உயிரின் ஒளி தோன்றியது. அந்தக் கண்களினால் இளவரசரை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

இளவரசரின் உடல் நடுக்கம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கித் தூக்கிப்போட ஆரம்பித்தது.

“ஐயா! நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்! ஒன்றும் புரியவில்லையே? படகை எங்கே கொண்டு போகட்டும்? பூங்குழலி! கோடிக்கரையில் வைத்தியர் இருக்கிறார் அல்லவா?” என்று வந்தியத்தேவன் பதறினான்.

பூங்குழலியோ பேசாமடந்தை ஆகியிருந்தாள். இளவரசர் திடீரென்று குதித்து எழுந்தார். நடுங்கிக் கொண்டிருந்த அவர் உடம்பு இப்பொழுது நிற்க முடியாமல் தள்ளாடியது.

“என்னை என் தமக்கையிடம் கொண்டு போங்கள்! என்னை உடனே இளைய பிராட்டியிடம் கொண்டு போங்கள்!” என்ற வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து குளறலாக வெளிவந்தன.

இதைக்கேட்ட வந்தியத்தேவன் குதூகலம் அடைந்தான். அந்தக் குதூகலத்தில் இன்னது செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.

நடுக்கத்துடன் ஆடிக்கொண்டு நின்ற இளவரசர் அடுத்த கணத்தில், “அக்கா! இதோ வருகிறேன்! உன்னைப் பார்க்க இதோ வருகிறேன்! யார் தடுத்தாலும் இனிமேல் கேட்கமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே படகிலிருந்து கடலில் பாயப் போனார்.

நல்லவேளையாக வந்தியத்தேவன் அப்போது நிலைமை இன்னதென்பதை உணர்ந்தான். இளவரசர் சுரத்தின் வேகத்தினால் சுய உணர்வு இழந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டான். கடலில் பாயப் போனவரைச் சட்டென்று பிடித்து நிறுத்தினான்.

ஏற்கெனவே மிக்க பலசாலியான இளவரசர், இப்போது சுரத்தின் வேகத்தினால் பன்மடங்கு அதிக பலம் பெற்றிருந்தார். வந்தியத்தேவனுடைய பிடியிலிருந்து திமிறிக் கொள்ள முயன்றார். தன்னால் மட்டும் அவரைத் தடுக்க முடியாது என்பதை வந்தியத்தேவன் கண்டு, “பூங்குழலி! பூங்குழலி! சீக்கிரம் ஓடி வா!” என்று அலறினான்.

செயலற்று நின்ற பூங்குழலி உயிர் பெற்றாள். ஒரு பாய்ச்சல் பாய்ந்து இளவரசர் அருகில் வந்து அவரைக் கடலில் விழாமல் தடுப்பதற்காக ஒரு கரத்தைப் பற்றினாள். சுர வேகத்தினால் இளவரசர் பெற்றிருந்த மதயானையின் பலம் உடனே மாயமாய்ப் போய்விட்டது. சின்னஞ்சிறு குழந்தையைப் போல் ஆனார்.

“அக்கா! நீ சொல்கிறபடியே பேசாமல் படுத்திருக்கிறேன். என் பேரில் வருத்தப்படாதே அக்கா! நீ ஒருத்தி இல்லாவிடில் என்னுடைய கதி என்ன?” என்று இளவரசர் கூறிவிட்டு விம்மினார்.

வந்தியத்தேவனும், பூங்குழலியும் இளவரசரை மெதுவாகப் படகில் படுக்க வைத்தார்கள்.

அதன் பிறகு பொன்னியின் செல்வர் சும்மா படுத்திருந்தார். அவருடைய கண்கள் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவருடைய வாயிலிருந்து ஏதேதோ வார்த்தைகள் குழறிக் குழறி வந்து கொண்டிருந்தன. சிலவற்றுக்குப் பொருள் விளங்கின. பெரும்பாலும் சம்பந்தமற்ற வார்த்தைகளாகத் தோன்றின.

இளவரசரிடம் ஆலோசனை கேட்பதில் பயனில்லை என்பதை வந்தியத்தேவன் உணர்ந்தான். இந்த மிகப் பயங்கரமான ஆபத்திலிருந்து பொன்னியின் செல்வரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புத் தன் தலையில் சுமந்திருக்கிறது என்பதையும் அறிந்தான். ஆனால் புத்திசாலியான இந்தப் பெண் ஒருத்தி இருக்கிறாள். இளவரசரைப் பாதுகாப்பதில் தன்னைப் போலவே இவளும் கவலை கொண்டவள்தான். பின்னர், எத்தனையோ அபாயங்களிலிருந்து தன்னைத் தப்புவித்த கடவுளின் கருணையும் இருக்கவே இருக்கிறது.

“பூங்குழலி! படகை இனிமேல் வேகமாகச் செலுத்திக் கொண்டு போக வேண்டியதுதானே?” என்றான் வந்தியத்தேவன். பூங்குழலியின் கரங்கள் இழந்திருந்த வலிமையை மீண்டும் பெற்றன. படகு துரிதமாகச் சென்றது.

வந்தியத்தேவன் இளவரசரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். மறுபடியும் அவர் சுர வேகத்தில் கடலில் குதித்து விட்டால் என்ன செய்வது என்பதனை நினைத்தபோதே அவன் கதி கலங்கியது. ஆகையால் சர்வ ஜாக்கிரதையாக அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அதே சமயத்தில் மேலே செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் உள்ளம் தீவிரமாகச் சிந்தனை செய்தது.

“பெண்ணே! உனக்கு என்ன தோன்றுகிறது! நாம் துணிந்து கோடிக்கரைக்கே போய் விடலாமா? இளவரசரைப் பாதுகாப்பதற்கு உன் குடும்பத்தார் உதவி செய்வார்கள் அல்லவா?” என்று கேட்டான்.

“ஐயா! இந்தக் காலத்தில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? என் தமையன் மனைவி ஒருத்தி இருக்கிறாள். அவள் பணத்தாசை பிடித்தவள். என் தந்தைக்குப் படி அளப்பவர்கள் பழுவேட்டரையர்கள்!” என்றாள் பூங்குழலி.

“மேலும், தங்களைப் பிடிக்க வந்த பழுவூர் ஆட்கள் இன்னும் கோடிக்கரையில் தங்கியிருக்கலாம். இளவரசரின் வரவை எதிர்பார்த்து மேலும் புதிய ஆட்களும் வந்திருக்கலாம்!” என்று தொடர்ந்து கூறினாள்.

அவளுடைய முன் யோசனையைக் குறித்து வந்தியத்தேவன் வியப்படைந்தான். இந்த இக்கட்டான சமயத்தில் தனக்கு அவளுடைய உதவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.

“அப்படியானால், நேரே கோடிக்கரைக்குப் போவது அபாயம் என்று நீயும் எண்ணுகிறாயா?” என்றான்.

“அதோ பாருங்கள்!” என்று சுட்டிக் காட்டினாள் பூங்குழலி.

அவள் சுட்டிக்காட்டிய திசையில் கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது அதற்கு அப்பால் கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் உச்சியும் தெரிந்தது.

“ஆகா! பெரிய மரக்கலம் ஒன்று நிற்கிறதே! அது யாருடைய கப்பலோ என்னமோ! ஒரு வேளை பார்த்திபேந்திரனுடைய கப்பலாயிருக்கலாம். அப்படியிருக்குமானால், இந்த நிலையில் இளவரசரைக் காஞ்சிக்கு அழைத்துப் போவதே நல்லதல்லவா?”

“பழுவேட்டரையரின் கப்பலாகவும் இருக்கலாம், ஐயா! கப்பலுக்குப் பின்னால் ஏதாவது தெரிகிறதா!”

“கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் உச்சி தெரிகிறது!”

“அதில் ஏதாவது வித்தியாசமாய்க் காணப்படுகிறதா?”

“எனக்கு ஒன்றும் வித்தியாசமாய்த் தெரியவில்லையே.”

“எனக்குத் தெரிகிறது; அதன் உச்சியில் கூட்டமாக மனிதர்கள் நின்று கடலை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.”

“அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இந்தப் படகு தெரியுமா?”

“தெரியாது. இன்னும் கொஞ்சம் கரையை நெருங்கினால் தெரியும்.”

“எல்லாவற்றுக்கும் நாம் முன் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது. நீ முன்னம் சொன்னாயே, கோடிக்கரைக்கு மேற்கே கால்வாய் ஒன்று இருக்கிறதென்று? அங்கேயே படகை விடலாமா?”

“அப்படித்தான் செய்ய வேண்டும். இருட்டுகிற சமயத்துக்கு அங்கே போய்ச் சேரலாம். ஐயா! நீங்கள் ஒரு நாள் இருண்ட மண்டபத்தில் ஒளிந்திருந்தீர்களே? அதற்கு வெகு சமீபம் வரையில் அந்தக் கால்வாய் வருகிறது. இளவரசருடன் தாங்கள் சற்று நேரம் அங்கே தாமதித்தால் நான் போய் எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு விரைவில் வந்து சேருகிறேன்.”

“கால்வாய் அங்கேயே நின்று விடுகிறதா, பூங்குழலி! மேலும் எங்கேயாவது போகிறதா?”

“கோடிக்கரையிலிருந்து நாகைப்பட்டினம் வரையில் அந்தக் கால்வாய் போகிறது” என்றாள் பூங்குழலி.

இந்தச் சமயத்தில் பொன்னியின் செல்வர் சுரவேகத்தில் தனக்குத்தானே பேசிக்கொண்டது கொஞ்சம் உரத்த சப்தத்துடன் கேட்டது.

“ஆமாம். அக்கா, ஆமாம்! நாகைப்பட்டினத்துப் புத்த பிக்ஷுக்கள் சொன்னதாகக் கூறினாயே? அதன்படியே நடந்தது. அநுராதபுரத்தில் புத்த பிக்ஷுக்களின் மகா சங்கத்தார் எனக்கு இலங்கைச் சிங்காதனத்தையும், கிரீடத்தையும் அளிக்க முன் வந்தார்கள். நான்தான் மறுத்து விட்டேன், அக்கா! இராஜ்யத்தில் எனக்கு ஆசையில்லாதபடியால்தான் மறுதளித்தேன். நீ வேறு எது சொன்னாலும் கேட்கிறேன். இராஜ்யம் ஆளும் தொல்லை மட்டும் எனக்கு வேண்டாம்! அதைக் காட்டிலும் கடலில் படகு விட்டுக்கொண்டு எவ்வளவோ ஆனந்தமாயிருக்கலாம். கேள், அக்கா! கோடிக்கரையில் ஓடக்காரப் பெண் ஒருத்தி இருக்கிறாள்…”

இதைக் கேட்ட பூங்குழலியின் உடம்பெல்லாம் புளங்காங்கிதமடைந்தது. வந்தியத்தேவனுக்கோ ஆத்திரம் வந்தது. மேலே என்ன சொல்லப் போகிறாரோ என்று கேட்க இருவரும் அடங்கா ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென்று இந்த இடத்தில் இளவரசருக்குச் சுய உணர்வு கொஞ்சம் வந்ததாகத் தோன்றியது.

சுற்று முற்றும் விழித்துப் பார்த்துவிட்டு, “இன்னும் கோடிக்கரை வரவில்லையா?” என்று ஈன சுரத்தில் கேட்டார் இளவரசர்.

வந்தியத்தேவன், “அதோ கரை தெரிகிறது!” என்றான். இளவரசரிடம் யோசனை கேட்கலாமா, வேண்டாமா என்று அவன் யோசிப்பதற்குள் மீண்டும் இளவரசர் நினைவை இழந்து சுரப்பிராந்தி உலகத்துக்குப் போய்விட்டார்.

இளவரசர், கடைசியாக ‘ஓடக்காரப்பெண்’ணைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் பூங்குழலியின் மனத்தில் எண்ண அலைகளை எழுப்பி விட்டிருந்தன. வந்தியத்தேவனையும், இளவரசரையும் பார்ப்பதற்கே அவளுக்குச் கூச்சமாயிருந்தது. ஆகையால் படகு சென்ற திசையையே பார்த்த வண்ணம் துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்தாள். அதுகாறும் கப்பல் நின்ற இடத்தை நோக்கிச் சென்ற படகு இப்போது திசை திரும்பித் தென் மேற்குப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தது.

இருட்டுகிற நேரத்தில் கடலிலிருந்து பூமிக்குள் குடைந்து சென்ற கால்வாயின் உள்ளே பிரவேசித்தது. பூங்குழலி கூறியது போலவே அங்கே இருபுறமும் கரைகள் உயர்ந்த மேடாக இருந்தன. அந்த மேட்டுக் கரைகளில் மரங்கள் அடர்த்தியாகவும், உயரமாகவும் வளர்ந்திருந்தன.

படகைக் கரையோரமாக நிறுத்திவிட்டுப் பூங்குழலி மெல்லிய குரலில், “ஐயா சற்றுப் படகைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கரையில் இறங்கினாள். கரையில் வளர்ந்திருந்த உயரமான ஒரு மரத்தின் மேல் ஏறிச் சுற்றுமுற்றும் பார்த்தாள். பிறகு அவசரமாக இறங்கி வந்தாள். “நல்லவேளை! இங்கே வந்தோம். கடற்கரையோரமாகச் சுமார் ஒரு காத தூரத்துக்கு ஆட்கள் நின்று காவல் புரிகிறார்கள். கலங்கரை விளக்கின் அருகில் ஒரே கூட்டமும் கோஷமுமாக இருக்கிறது!” என்றாள்.

“யாராயிருக்கும் என்று ஏதாவது தெரிகிறதா?” என்று வந்தியத்தேவன் ஆவலுடன் கேட்டான்.

“நன்றாய்த் தெரியவில்லை, ஆனால் பழுவேட்டரையரின் ஆட்களாய்த்தான் இருக்கவேண்டும். வேறு யாராயிருக்க முடியும்? எப்படியிருந்தாலும், நான் சொன்ன இடத்துக்கு முதலில் போய்ச் சேருவோம். இரவு இரண்டாம் ஜாமத்துக்குள் நான் என் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் நிச்சயமாய்த் தெரிந்து கொண்டு வருகிறேன்” என்றாள்.

“பெண்ணே! உன்னை யாராவது பார்த்து விட்டால், என்ன செய்கிறது? உனக்கு ஏதேனும் இச்சமயம் நேர்ந்துவிட்டால், எங்கள் கதி அதோகதி தான்!” என்றான் வந்தியத்தேவன்.

“ஐயா! என் உயிரைப் பற்றி இத்தனை நாளும் நான் இலட்சியம் செய்ததில்லை. இன்றைக்குத்தான் கவலை பிறந்திருக்கிறது. இளவரசருக்கு அபாயம் நீங்கும் வரையில் என் உயிருக்கு ஒன்றும் வராது!” என்றாள் பூங்குழலி.

படகு கால்வாய்க்குள் மெள்ள மெள்ளச் சென்றது. சப்தம் சிறிதும் வெளியில் கேளாதபடி மிக மெதுவாகப் பூங்குழலி துடுப்பு வலித்தாள். கால்வாயின் இருபுறமும் இருள் சூழ்ந்திருந்தது கரை ஓரமாக உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் கரிய நிழல்கள் கால்வாயில் விழுந்து அதன் கரிய நீரை மேலும் கரியதாக்கின.

வானத்திலிருந்து விண்மீன்கள் எட்டிப் பார்த்தன. வந்தியத்தேவனைப் போலவே நட்சத்திரங்களும் மிகுந்த கவலையுடன் அப்படகின் போக்கைக் கவனித்ததாகத் தோன்றியது. நீரில் பிரதிபலித்த நட்சத்திரங்கள், கரையிலிருந்த மரங்கள் காற்றில் ஆடிய போது அவற்றின் நிழலும் ஆடியபடியால், அடிக்கடி சலனமடைந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவனுடைய உள்ளத்தின் சஞ்சலத்தை அவை சரியாகவே பிரதிபலித்தன.

ஒரு யுகம்போலத் தோன்றிய ஒரு நாழிகை நேரம் படகு கால்வாயில் சென்ற பிறகு, பூங்குழலி படகைக் கரையோரமாக நிறுத்தினாள்.

பூங்குழலி கால்வாயின் கரைமீதேறிக் காட்டு வழியில் புகுந்து சென்றாள். அதாவது அவளுடைய உடம்பு சென்று கொண்டிருந்தது; அவளுடைய உயிர் கால்வாயில் விட்டிருந்த படகிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அந்த முன்னிருட்டு நேரத்தில் முட்செடிகள், மேடு பள்ளங்கள், காட்டு ஜந்துக்கள் ஒன்றையும் இலட்சியம் செய்யாமல் அதிவிரைவாக நடந்து சென்றாள். தடைகள் இல்லாத இடங்களில் ஓடவும் செய்தாள். நேரே கோடிக்கரைக் குழகர் கோயிலைக் குறி வைத்துக்கொண்டு போனாள். அவள் கோயில் வாசலை அடைந்ததற்கும், குருக்கள் சுவாமி சந்நிதியின் கதவைப் பூட்டுவதற்கும் சரியாக இருந்தது.

அக்கம் பக்கம் பார்த்து, வேறு யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டாள். கதவைப் பூட்டிவிட்டுத் திரும்பிய குருக்கள் எதிரில் போய் நின்றாள்.

குருக்கள் அவளை அந்த நேரத்தில் பார்த்துச் சிறிது வியப்படைந்தார். அவளுடைய சுபாவத்தை நன்கு அறிந்தவராயிருந்தும் கூடக் கொஞ்சம் திடுக்கிட்டுத் திகைத்துப் போய் விட்டார்.

“நீயா, பூங்குழலி! வேறு யாரோ என்று பார்த்தேன். கோடிக்கரை முழுதும்தான் ஒரே அமர்க்களப்படுகிறதே; எங்கே அம்மா, உன்னைக் கொஞ்ச நாளாகக் காணோம்? இவ்வளவு தடபுடலிலும் உன்னைப்பற்றித் தகவல் இல்லையே என்று இன்று சாயங்காலம் கூட யோசித்தேன்” என்றார்.

“வெளியூருக்குப் போயிருந்தேன். சுவாமி! ஏதோ அமர்க்களமாயிருக்கிறதே யென்றுதான் உங்களிடம் விசாரிக்கலாம் என்று வந்தேன். கடற்கரையெல்லாம் நிற்பவர்கள் யார்?” என்று பூங்குழலி கேட்டாள்.

“உனக்கு ஒன்றுமே தெரியாதா? வீட்டுப் பக்கம் போக வில்லையா?”

“வீட்டுப் பக்கம் போனேன். அங்கே யார் யாரோ கூட்டமாயிருக்கவே திரும்பி விட்டேன். புது மனிதர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது என்றுதான் உங்களுக்குத் தெரியுமே? வந்திருப்பவர்கள் யார்?”

“பெரிய பழுவேட்டரையர் வந்திருக்கிறார். அவருடைய இளையராணி வந்திருக்கிறாள். அவர்களுடைய பரிவாரங்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் காஞ்சிபுரத்துப் பார்த்திபேந்திர பல்லவனாம்! அவனும் வந்திருக்கிறான். வெறுமனே வரவில்லை, பயங்கரமான செய்தியுடன் வந்திருக்கிறான். உனக்கு அதுகூடத் தெரியாதா, பூங்குழலி?”

“அது என்ன பயங்கரமான செய்தி? எனக்கு ஒன்றுமே தெரியாதே?”

“அந்தப் பாவியினுடைய கப்பலில் இளவரசர் பொன்னியின் செல்வரும் வந்தாராம். வழியில் சுழற்காற்று அடித்ததாம். யாரையோ காப்பாற்றுவதற்காக இளவரசர் கடலில் குதித்து விட்டாராம்! பிறகு அகப்படவேயில்லையாம்! ஒருவேளை இந்தக் கடற்கரையில் வந்து ஒதுங்குவாரோ என்று பார்ப்பதற்காகத்தான் பழுவேட்டரையரின் ஆட்கள் கோடிக்கரையெங்கும் அலைகிறார்கள். ஏன் அவருடைய இளையராணி கூட அலைகிறாள். சற்று முன்னால் இங்கேகூட அந்த அம்மாள் வந்திருந்தாள். பூங்குழலி! பழுவூர் இளையராணியைப் பற்றி ஜனங்கள் என்னவெல்லாமோ பேசிக்கொள்கிறார்கள். அதெல்லாம் சுத்தத் தவறு! நம் இளவரசருக்கு நேர்ந்த கதியைக் குறித்து அந்த அம்மாள் எப்படித் துடிதுடிக்கிறாள் தெரியுமா?”

“அப்படியா குருக்களய்யா? பழுவூர் ராணியின் நல்ல குணத்தைப் பற்றித் தாங்கள் சொல்வது எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் இங்கே எதற்காக அந்த ராணி வந்தாளாம்?”

“இளவரசர் எப்படியாவது உயிரோடு அகப்படவேண்டும் என்று குழகரைப் பிரார்த்தித்துக் கொள்வதற்காக வந்தாளாம். உன்னைப் போல் எல்லோரும் கல்நெஞ்சு படைத்தவர்களாயிருக்கிறார்களா? இளவரசரைப் பற்றிய பயங்கரச் செய்தி கேட்டுக்கூட நீ துளிக்கூடக் கலங்கவில்லையே?”

“நாம் கலங்கி என்ன பயன் சுவாமி? எல்லாம் விதியின்படி நடக்கும் என்று நீங்களே எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறீர்களே. அது போனால் போகட்டும். அவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருக்கும்போது நான் என் வீட்டுக்குப் போக விரும்பவில்லை. கையிலே வைத்திருக்கும் பிரஸாதத்தை என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள். நான் இங்கேயே சாப்பிட்டுவிட்டுக் கோவிலிலேயே இருந்து விடுகிறேன்.”

“நீ ஒரு தனிப்பிறவிதான், பூங்குழலி! பெரிய மனிதர்கள் வந்தால் எல்லோரும் அவர்களைப் போய்ப் பார்க்கவும், பழக்கம் செய்து கொள்ளவும் விரும்புவார்கள். உனக்கு வேற்று மனிதர்களையே பிடிப்பதில்லை. அதிலும் பெரிய மனிதர்கள் என்றால் ஒரே பயம். பெரிய மனிதர்கள் என்றால் உன்னைக் கடித்து விழுங்கி விடுவார்களா? எதற்காக இந்தக் காட்டில் தனியாக இருக்க வேண்டும்?”

“குருக்களய்யா! பிரஸாதத்தைக் கொடுக்க உங்களுக்கு இஷ்டமில்லாவிடில் வேண்டாம். என்னை வீணில் திட்டாதீர்கள்!”

“சிவ சிவா! உன்னை ஏன் நான் திட்டுகிறேன்? இந்தப் பிரஸாதம் உன் பசிக்குப் போதாதே என்று பார்த்தேன். தாராளமாய் வாங்கிக்கொள்!” என்று அர்ச்சகர் துணியில் கட்டிவைத்திருந்த சுவாமிப் பிரஸாதத்தைக் கொடுத்தார்.

மூட்டையை வாங்கிப் பூங்குழலி பிரித்துப் பார்த்துவிட்டு, “என் பசிக்கு இது போதாதுதான்! அவ்வளவு பெரிய சுவாமிக்கு இவ்வளவு குறைவாக நைவேத்தியம் வைக்கிறீர்களே! இது நியாயமா, சுவாமி! போனால் போகட்டும்; அந்தக் கெண்டியில் என்ன இருக்கிறது? குடிக்கிற ஜலமா?”

“இல்லை, சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால்! குழந்தைக்காக எடுத்துக்கொண்டு போகிறேன்.”

“இன்றைக்கு நானே உங்கள் குழந்தையாயிருக்கிறேன். அதையும் கொடுத்துவிட்டுப் போங்கள் உங்களுக்குப் புண்ணியம் உண்டு.”

“நல்ல பெண் அம்மா, நீ! போகட்டும், கெண்டியையாவது பத்திரமாய் வைத்திரு!”

இவ்விதம் சொல்லிக் குருக்கள் கெண்டியையும் பூங்குழலியிடம் கொடுத்தார்.

அச்சமயம் தூரத்தில் எங்கிருந்தோ ஆந்தையின் குரல் கேட்டது.

பூங்குழலி சிறிது திகைத்து, “ஐயா! அது என்ன சப்தம்?” என்று கேட்டாள்.

“தெரியவில்லையா, அம்மா! கோட்டான் கூவுகிறது. இந்தக் கோடிக்கரைக் காட்டில் கோட்டானுக்கா பஞ்சம்!” என்று சொன்னார் குருக்கள். மறுபடியும் அந்தக் குரல் கேட்டது.

“ஆமாம்; கோட்டான் குரல் மாதிரிதான் இருக்கிறது!” என்றாள் பூங்குழலி.

“உன்னை ஒரு கோட்டானும் ஒன்றும் செய்யாது. கோயில் பிரகாரக் கதவைத் தாளிட்டுக் கொண்டு படுத்துக்கொள், அம்மா!” என்று சொல்லிவிட்டுக் குருக்கள் நடையைக் கட்டினார்.

குருக்கள் மறைந்ததும், பூங்குழலியும் புறப்பட்டாள். பிரஸாதத்தை மடியில் கட்டிக்கொண்டு, கெண்டியைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

கோட்டானின் குரல் கேட்ட திசையை நோக்கிச் சென்றாள். கொஞ்ச தூரம் போனதும், ஒரு குறுகிய வாய்க்கால் குறுக்கிட்டது. அதன் இருபுறமும் தாழம்பூப் புதர்கள் காடாக மண்டி வளர்ந்திருந்தன.

அந்த வாய்க்காலின் கரையைப் பிடித்துக்கொண்டே பூங்குழலி நடந்தாள். தாழம்பூச் செடிகளின் முட்கள் சில சமயம் குத்தின. அதை அவள் பொருட்படுத்தவில்லை. தாழம்பூக்கள் வெடித்து மலர்ந்து நறுமணத்தைப் பரப்பின. அந்த மணம் மற்றவர்களைப் போதை கொள்ளச் செய்திருக்கும். ஆனால் பூங்குழலிக்கு அந்த ஞாபகம் கூட வரவில்லை.

கரையோடு காலடிச் சப்தம் கேளாதபடி மெள்ளமெள்ள நடந்து போனாள். அவள் செவிகள் வெகு கவனமாக உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தன. காட்டுப் பிரதேசத்தில் இரவில் எத்தனையோ விதவிதமான சப்தங்கள் கேட்கும் அல்லவா? அவையெல்லாம் அவளுடைய கவனத்தைக் கவரவில்லை.

பின்னர், அவள் என்ன சப்தத்தைத்தான் எதிர் பார்த்தாள். இதோ!…

இருவர் மெல்லிய குரலில் பேசும் சப்தம் கேட்டது. ஒன்று ஆண்குரல், இன்னொன்று பெண்ணின் குரல்.

பூங்குழலி நன்றாக மறைந்து நின்று கொண்டாள். அவர்கள் பேசுவது இன்னதென்பதைக் கவனமாக உற்றுக் காதுகொடுத்துக் கேட்டாள்.

“மந்திரவாதி! இளவரசர் கடலில் விழுந்து இறந்து விட்டதாகத்தான் உன்னைப்போல் எல்லாரும் நம்புகிறார்கள். பழுவேட்டரையரும் உருகி மாய்கிறார். ஆனால் நான் நம்பவில்லை!” என்று அந்தப் பெண் குரல் கூறியது.

Source

Previous articlePonniyin Selvan Part 3 Ch 3
Next articlePonniyin Selvan Part 3 Ch 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here