Home Kalki Ponniyin Selvan Part 3 Ch 45

Ponniyin Selvan Part 3 Ch 45

87
0
Ponniyin Selvan Part 3 Ch 45 -Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 3, Ponniyin Selvan part 3 Ch 45, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
Ponniyin Selvan Part 3 Ch 45 பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்: கொலை வாள் அத்தியாயம் 45: வானதிக்கு அபாயம்

Ponniyin Selvan Part 3 Ch 45

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்: கொலை வாள்

அத்தியாயம் 45: வானதிக்கு அபாயம்

Ponniyin Selvan Part 3 Ch 45

“அக்கா! ஐந்து வயதில் நான் காவேரி வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கிறதா? காவேரித் தாய் என்னை எடுத்துக் காப்பாற்றிப் படகிலே விட்டு விட்டு மறைந்தது நினைவிருக்கிறதா?” என்று அருள்மொழிவர்மன் கேட்டான்.

“இது என்ன கேள்வி, தம்பி! எப்படி அதை நான் மறந்து விடமுடியும்? ‘பொன்னியின் செல்வன்’ என்று உன்னை அழைத்து வருவதே அந்தச் சம்பவத்தின் காரணமாகத் தானே?” என்றாள் குந்தவை.

“என்னைக் காப்பாற்றிய காவேரித் தாயை இலங்கையில் நான் கண்டேன், அக்கா!.. என்ன, பேசாதிருக்கிறாயே? உனக்கு ஆச்சரியமாயில்லை?”

“ஆச்சரியமில்லை, தம்பி. ஆனால் ஆர்வம் நிறைய இருக்கிறது. அவளைப் பற்றி எல்லா விவரங்களையும் சொல்!”

“ஒரு நாளில், ஒரு தடவையில், சொல்ல முடியாது. முக்கியமானதை மட்டும் சொல்லுகிறேன். காவேரி வெள்ளத்திலிருந்து என்னை அவள் காப்பாற்றியது மட்டுமல்ல; இலங்கையில் பல தடவை என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள். உயிரைக் காப்பாற்றியது பெரிதல்ல, அக்கா! எத்தனையோ பேர் தற்செயலாகப் பிறர் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். அவள் என்னிடத்தில் வைத்துள்ள அன்பு இருக்கிறதே, அதற்கு இந்த ஈரேழு பதினாலு உலகங்களும் இணையாகாது… ஏன்? நீ என்னிடம் வைத்துள்ள அன்பைக் கூட, அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்!”

“அதைச் சொல்வதற்கு நீ தயங்க வேண்டாம். உன்னிடம் என் அன்பு அவ்வளவு ஒன்றும் உயர்ந்தது அல்ல; சுயநலம் கலந்தது. உண்மையைச் சொல்கிறேன், தம்பி! எனக்கு இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் மேன்மைதான் முதன்மையானது. அதற்கு நீ பயன்படுவாய் என்றுதான் உன்பேரில் அன்பு வைத்திருக்கிறேன். அந்த நோக்கத்துக்கு நீ தடையாயிருப்பாய் என்று தெரிந்தால், என் அன்பு வெறுப்பாக மாறினாலும் மாறிவிடும். ஆனால் அந்த ஊமைச் செவிட்டு ஸ்திரீயின் அன்பு அத்தகையதல்ல. நம்முடைய தந்தையிடம் இருபது வருஷங்களுக்கு மேலாக அவள் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அத்தனை அன்பையும் உன் பேரிலே சொரிந்திருக்கிறாள். அதற்குப் பதினாலு உலகமும் இணையில்லைதான்!”

“உனக்கு அது எப்படி தெரிந்தது, அக்கா?”

“எதைச் சொல்கிறாய், தம்பி!”

“அவள் நம்முடைய பெரிய தாயார் என்பது?”

“தந்தை சொன்னதிலிருந்தும், வந்தியத்தேவர் சொன்னதிலிருந்து ஊகித்துக் கொண்டேன், தம்பி! அவள் உன்னைத் தன் சொந்த மகன் என்று எண்ணியிருக்கிறாளா? அல்லது சக்களத்தியின் மகன் என்று எண்ணியிருக்கிறாளா?”

“அந்த மாதிரி வேற்றுமையான எண்ணம் என் மனத்திலும் உதிக்கவில்லை; அவள் மனதில் எள்ளளவும் இருப்பதாகத் தெரியவில்லை. நீ ஏன் அம்மாதிரி வேற்றுமைப்படுத்திப் பேசுகிறாய்?”

“தம்பீ, அந்த ஊமை ஸ்திரீ வீற்றிருக்க வேண்டிய சிங்காசனத்தில் நம் தாயார் வீற்றிருக்கிறாள். அது தெரிந்திருந்தும் அவள் உன்னிடம் அத்தனை அன்பு வைத்திருந்தால், அது மிக்க விசேஷமல்லவா?”

“நான் அவள் வயிற்றில் பிறந்த மகனல்ல என்பது அவளுக்குத் தெரிந்து தானிருக்க வேண்டும். வயது வித்தியாசம் தெரியாமலா போகும்? அவளால் பேச முடியாது; மனதில் உள்ளதைச் சொல்ல முடியாது. ஏதோ சித்திரங்கள் எழுதிக் காட்டியதைக் கொண்டு எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ, அவ்வளவு தெரிந்து கொண்டேன். என்னிடம் அவளுடைய அன்பு இருக்கட்டும்; நம் தந்தையிடம் அவள் எத்தகைய அன்பு வைத்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் என் நெஞ்சு உடனே உருகிவிடுகிறது. அக்கா! என்னுடைய பிராயத்தில் அப்பா என்னைப் போல இருப்பாரா?”

“இல்லை, தம்பி, இல்லை! உன்னுடைய பிராயத்தில் நம் தந்தை மன்மதனைத் தோற்கடிக்கும் அழகுடன் விளங்கினார். நம்முடைய சோழ குலம் வீரத்துக்குப் பெயர் போனதே தவிர அழகுக்குப் பெயர் போனதல்ல. நம் பாட்டனார் அரிஞ்சய தேவர் அழகில் நிகரற்ற வைதும்பராயன் குலத்தில் பிறந்த கல்யாணியை மணந்தார். கல்யாணியை அரிஞ்சயர் மணந்த போது அவள் பத்தரை மாற்றுப் பசும் பொன்னொத்த மேனியும், பூரண சந்திரனை யொத்த முகமும் கொண்ட புவன மோஹினியாக விளங்கினாள். தற்சமயம் இத்தனை வயதான பிறகும் கல்யாணிப்பாட்டி எவ்வளவு அழகாயிருக்கிறாள் என்பதை நீயே பார்த்திருக்கிறாய். அதனால் நமது தந்தையும் அவ்வளவு அழகுடன் இருந்தார். ‘சுந்தரசோழர்’ என்ற பட்டப் பெயரும் பெற்றார். நாம் நம்முடைய தாயாரைக் கொண்டு பிறந்திருக்கிறோம். திருக்கோவலூர் மலையமான் வம்சத்தில் பிறந்தவர்கள் அழகை வெறுப்பவர்கள்; அழகு வீரத்துக்குச் சத்துரு என்று நினைப்பவர்கள்…”

“அழகுக்கும், வீரத்துக்கும் என்ன சம்பந்தம் உண்டோ என்னமோ, எனக்குத் தெரியாது. ஆனால் அழகுக்கும், அன்புக்கும் சம்பந்தமில்லை என்பதை அறிவேன். இல்லாவிடில்…”

“இல்லாவிடில் இந்தப் பெண் வானதி எதற்காக உன்னைத் தூண் மறைவிலிருந்து கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்? அதோ அந்தப் படகில் சேந்தன்அமுதன் பூங்குழலியை ஏன் கண் கொட்டாமல் பார்த்துப் பரவசமடைந்து கொண்டிருக்கிறான்?”

இளவரசன் புன்னகை புரிந்து, “அக்கா! நீ எதிலிருந்தோ எதற்கோ போய்விட்டாய்! என் பெரியன்னை என்னிடம் வைத்துள்ள அன்பைக் குறித்துச் சொன்னேன். அது போனால் போகட்டும்; இவ்வுலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் தத்ரூபமாக இருப்பதென்பது சாத்தியமா, அக்கா?”

“ஏன் சாத்தியமில்லை? இரட்டைப் பிள்ளைகளாயிருந்தால் அது சாத்தியம், அல்லது தாயும் மகளும் ஒரு பிராயத்தில் ஒரே மாதிரி இருப்பது சாத்தியம்தான். இதைத் தவிர பிரம்ம சிருஷ்டியில் ஒருவருக்கொருவர் சம்பந்தமேயில்லாதவர்கள், அபூர்வமாகச் சில சமயம் ஒரே மாதிரி இருப்பதும் உண்டு.”

“பழுவூர் இளையராணியும், இலங்கையில் நான் பார்த்த நம் பெரியன்னையும் ஒரே மாதிரி இருப்பதாக வந்தியத்தேவர் சொல்வது உண்மையாயிருக்க முடியுமா? நந்தினி சிறு பெண்ணாயிருந்த போதுதான் நான் பார்த்திருக்கிறேன். பழுவூர் இளையராணியான பிறகு நன்றாய்ப் பார்த்ததில்லை. உனக்கு என்ன தோன்றுகிறது?”

“நான் பழுவூர் ராணியைப் பார்த்திருக்கிறேனே தவிர, நம் பெரியம்மாவைப் பார்த்ததில்லை. ஆனால் வந்தியத்தேவர் கூறியது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். என் தந்தை கூறிய வரலாற்றிலிருந்து அதைத் தெரிந்து கொண்டேன், தம்பி!”

“தந்தையே கூறினாரா, உன்னிடம்? என்ன கூறினார்? எப்போது கூறினார்?”

“சில நாளுக்கு முன்பு நானும் வானதியும் தஞ்சைக்குப் போயிருந்தோம். அப்போது தம் இளம் பிராயத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினார். இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு தீவில் தாம் தனியாக ஒதுக்கப்பட்டதையும், அத்தீவில் ஒரு ஊமைப் பெண் தம்மிடம் காட்டிய அன்பைப் பற்றியும் கூறினார். பராந்தகர் அனுப்பிய ஆட்கள் தம்மை அத்தீவில் கண்டுபிடித்து அழைத்து வந்ததைப் பற்றிச் சொன்னார். தமக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய அன்று அரண்மனையின் வாசலில் நின்ற கூட்டத்தில் அவளைப் பார்த்தாராம். அடுத்த கணம் அவள் மறைந்து விட்டாளாம். அவளைத் தேடி அழைத்துவர முதன் மந்திரி அநிருத்தரையே அனுப்பினாராம். ஆனால் அந்தப் பெண் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து கடலில் குதித்து இறந்து விட்டாள் என்று அநிருத்தர் வந்து கூறினாராம். இந்தச் சம்பவம் நம் தந்தையின் உள்ளத்தில் இருபத்து நாலு வருஷங்களாக இருந்து அல்லும் பகலும் வேதனை அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேன். அவள் இறந்துவிட்டதாகவே தந்தை நினைத்துக் கொண்டிருக்கிறார். தம்மால், தமது குற்றத்தால், அவள் மனம் புண்பட்டு உயிரை விட்டுவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார். தம்பி! சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி நம் மனக்கோட்டையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நீயும், நானுமாக முயன்று நம் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. நீ எப்படியாவது இலங்கையிலிருந்து அந்த மாதரசியைத் தஞ்சைக்கு அழைத்து வர வேண்டும். தந்தையிடம் அவள் இறந்துவிடவில்லை; உயிரோடிருக்கிறாள் என்பதை நேரில் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம் தந்தைக்கு இந்த ஜன்மத்திலும் மனச்சாந்தி இல்லை, மறு ஜன்மத்திலும் அவருக்கு நிம்மதியிருக்க முடியாது!”

“அக்கா! சமீபத்தில் நான் இரண்டு மூன்று தடவை மரணத்தின் வாசல் வரையில் சென்று திரும்பினேன். அப்போதெல்லாம் என் மனத்தில் தோன்றிய எண்ணம் என்ன தெரியுமா? பெரியம்மாவைத் தந்தையிடம் அழைத்துப் போய் விடாமல் செத்துப் போகிறோமே என்ற ஏக்கந்தான். அக்கா! அந்த மாதரசியை நினைத்தாலும் என் உள்ளம் குமுறுகிறது. வாயிருந்தால் மனதிலுள்ள குறைகளையும் வேதனைகளையும் வெளியிட்டுச் சொல்லி ஆறுதல் அடையலாம். காது இருந்தால் பிறர் கூறும் ஆறுதல் மொழிகளை கேட்டுத் துக்கம் தீரலாம். வாயும் செவியும் இல்லாத ஒருத்தியினுடைய நிலையை எண்ணிப் பார்! உள்ளத்தில் குமுறும் அன்பையும், ஆர்வத்தையும், துன்பத்தையும், வேதனையையும், கோபத்தையும், தாபத்தையும் எல்லாவற்றையும் மனத்திற்குள்ளே அடக்கி வைத்திருக்கவேண்டும். அதிலும் நம் பெரியன்னையைப்போல் ஆசாபங்கம் அடைந்தவளின் மனோ நிலையைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? அவள் பைத்தியக்காரியைப் போல் இலங்கைத் தீவின் காடுகளில் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதில் வியப்பென்ன? அதையெல்லாம் நினைக்க நினைக்க, என் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. அவளை எப்படியாவது அழைத்து வந்து தந்தையிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. ஆனால் நம் தந்தை அதை விரும்புவார் என்று நினைக்கிறாயா, அக்கா?”

“தந்தை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நம்முடைய கடமை அது, தம்பி! இறந்து போனவளின் ஆவி வந்து அவரைத் துன்புறுத்துவதாக எண்ணி இரவு நேரங்களில் நம் தந்தை அலறுகிறார். இதனாலேயே அவர் உடம்பும் குணமடைவதில்லை.”

“இது எப்படி உனக்குத் தெரிந்தது, அக்கா! இதுவும் தந்தை சொன்னாரா?”

“தந்தையும் சொன்னார்; என் தோழி வானதியும் சொன்னாள்.”

“வானதி சொன்னாளா? அவளுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் அக்கா! நீ அவளிடம் சொன்னாயா, என்ன?”

“இல்லை, இல்லை! தஞ்சை அரண்மனையில் ஒருநாள் நிகழ்ந்ததை அவள் வாய் மொழியாகவே சொல்லச் சொல்கிறேன். இருந்தாலும், நீ ரொம்பப் பொல்லாதவன், தம்பி! சோழர்குலத்தின் பண்பாட்டையே மறந்துவிட்டாய்! கொடும்பாளூர் இளவரசியிடம் ஒரு வார்த்தை பேசவும் இல்லை! சௌக்கியமாக இருக்கிறாயா என்று கேட்கக்கூட இல்லையே? மகாவீரரான சிறிய வேளாரின் புதல்விக்கு நீ செய்யும் மரியாதை இதுதானா? அழகாயிருக்கிறது!”

“அக்கா! வானதியைக் கவனித்துக் கொள்ள நீ இருக்கும் போது கவலை என்ன? சௌக்கியமா என்று நான் விசாரிப்பது தான் என்ன?”

“ரொம்ப சரி, சற்று வாயை மூடிக்கொண்டிரு! வானதி! இங்கே வா! உன்னை இளவரசன் நன்றாய்ப் பார்க்க வேண்டுமாம்!” என்றாள் குந்தவை.

வானதி அருகில் வந்தாள். இளவரசனைப் பார்த்தும் பாராமலும் நின்றுகொண்டு, “அக்கா! எதற்காகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள்! தங்கள் தம்பி என்னைப் பார்க்க விரும்பவில்லை. அவர் பார்வையெல்லாம் அதோ ஓடையில் இருக்கும் ஓடத்தின் மேலேயே இருக்கிறது. அவசரமாகத் திரும்பிப் போக வேண்டும் போலிருக்கிறதே!” என்று பட்டுப் போன்ற மிருதுவான குரலில் கூறினாள். ஓடத்தில் இருந்த பூங்குழலியை நினைத்துக்கொண்டு ஓடத்தைக் குறிப்பிட்டாள் போலும்!

இளவரசன் நகைத்துக் கொண்டே, “அக்கா! உன் தோழிக்குப் பேசத் தெரிகிறதே; நம் குடும்பத்தைச் சேர்ந்த ஊமைகளுடன் இவளும் ஒரு ஊமையோ என்று பயந்து போனேன்!” என்றான்.

“அக்கா! இவரைப் பார்த்தால் எனக்குப் பேச வருகிறதில்லை. எனக்கே நான் ஊமையாய்ப் போய்விட்டேனோ என்று பயம் உண்டாகிறது” என்றாள் வானதி.

“அது ரொம்ப நல்லது. கோடிக்கரையில் ஒருவன் இருக்கிறான்; பூங்குழலியின் தமையன். அவன் மற்றவர்களிடம் ஒருவாறு தெத்தித் தெத்திப் பேசுகிறான். ஆனால் அவன் மனைவியைக் கண்டால் ஊமையாகி விடுகிறான். அதனால் அவனை அவன் வீட்டார் ஊமை என்றே வைத்து விட்டார்கள்” என்றான் இளவரசன்.

“இந்தக் கொடும்பாளூர்ப் பெண் கொஞ்சம் அந்த மாதிரி தான். முன்னேயெல்லாம் இவளைச் சற்று நேரம் பேசாமல் சும்மா இருக்கச் சொன்னால் இவளால் முடியவே முடியாது. பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாள். நீ முதன் முதலில் இலங்கைக்குப் போனாயே, அது முதல் இவளுடைய பேச்சுக் குறைந்துவிட்டது. தனியாகத் தனியாகப் போய் உட்கார்ந்து கொண்டு எதையோ எண்ணிக் கொண்டிருக்கிறாள். அது போனால் போகட்டும், வானதி! அன்று இரவு தஞ்சை அரண்மனையில் நடந்ததையெல்லாம் இளவரசனுக்கு விவரமாகச் சொல்லு” என்றாள் குந்தவை.

“கொடும்பாளூர் இளவரசி உட்கார்ந்து கொண்டு சொல்லட்டும் அக்கா! இவள் இத்தனை நேரம் நிற்பதைப் பார்த்தால் இவளுடைய பெரிய தந்தை உருகிப் போய் விடுவார். தென்திசைச் சேனாதிபதி என்னைப் பார்க்கும் போதெல்லாம் இவளைப் பற்றி விசாரிப்பார். நீயோ இவளைப் பற்றி ஒன்றுமே சொல்லி அனுப்புவதில்லை. ஆகையால், நான் அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுவேன்” என்றான் இளவரசன்.

“வாணர் குலத்து வீரரிடம் இவளைப்பற்றி விவரமாய்ச் சொல்லி அனுப்பினேனே, அவர் ஒன்றும் உன்னிடம் சொல்லவில்லையா?”

“அவர் சொல்லித்தான் இருப்பார், அக்கா! இவர் காதில் ஒன்றும் விழுந்திராது. இவருக்கு எத்தனையோ ஞாபகம்!” என்றாள் வானதி.

“அதுவும் உண்மைதான், உன்னுடைய ஓலையைப் பார்த்த பிறகு வேறு ஒன்றிலும் என் மனது செல்லவில்லை. இந்தச் சுரத்திற்குப் பிறகு என் காது கூடக் கொஞ்சம் மந்தமாயிருக்கிறது. உன் தோழியை உரக்கப் பேசச் சொல்லு!” என்றான் அருள்வர்மன்.

பிறகு, வானதி தஞ்சை அரண்மனையில் குந்தவை துர்க்கை கோயிலுக்குப் போன பிறகு தான் தனியே மேன் மாடத்தில் உலாவச் சென்றதையும், சக்கரவர்த்தியின் அபயக்குரல் கேட்டதையும், அந்த இடத்துக்குத் தான் சென்று கீழே எட்டிப் பார்த்ததையும், அங்கே தான் கண்ட காட்சியையும் கூறினாள். இடையிடையே வானதி இளவரசனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் மெய்மறந்து நின்று விட்டாள். இளையபிராட்டி அவளை ஒவ்வொரு தடவையும் தூண்டிப் பேசும்படி செய்வது அவசியமாயிருந்தது.

எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த இளவரசன், கடைசியாகத் தமக்கையை நோக்கி, “அக்கா! உன் தோழி முக்கியமான ஒரு சம்பவத்தை விட்டுவிட்டாள் போலிருக்கிறதே! இவ்வளவையும் பார்த்துக்கேட்ட பிறகு இவள் மூர்ச்சை அடைந்து விழுந்திருக்க வேண்டுமே?” என்றான்.

குந்தவை சிரித்தாள்; வானதி நாணத்துடன் தலை குனிந்து நின்றாள்.

குந்தவை அவளை அன்பு ததும்பிய கண்களினால் பார்த்து “வானதி! சற்று நேரம் ஓடைக் கரையோடு உலாவிவிட்டு வா, இல்லாவிட்டாலும் நம் பரிவாரங்கள் இருக்குமிடத்துக்குப் போயிரு. அருள்வர்மன் இன்னும் சில நாள் இங்கேயே தான் இருப்பான்; மறுபடியும் சந்திக்கலாம்!” என்றாள்.

“ஆகட்டும் அக்கா! உலாவிவிட்டு வருகிறேன்!” என்று சொல்லிக் கொண்டு வானதி துள்ளிக் குதித்துச் சென்றாள். திடீரென்று அவ்வளவு குதூகலம் அவளுக்கு எப்படி ஏற்பட்டதோ, தெரியாது.

மலர்ந்த முகத்தோடும், விரிந்த கண்களோடும் அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த அருள்வர்மன், அவள் மறைந்ததும், தமக்கையை நோக்கினான்.

“அக்கா! தந்தையின் புலம்பலின் காரணம் எனக்குத் தெரிகிறது. ஆனால் அவர் கண்ட காட்சியைப் பற்றி உன் கருத்து என்ன? அவர் முன்னால் காணப்பட்ட தோற்றம் என்னவாயிருக்கக்கூடும்? தந்தையின் மனப் பிரமையை? அப்படியானால் உன் தோழிக்கும் பிரமை எப்படி ஏற்பட்டிருக்கும்?”

“தந்தை கண்டதும் பிரமை அல்ல; வானதி கண்டதும் மாயத்தோற்றம் அல்ல; தந்தை முன் நடந்தது நள்ளிரவு நாடகம். அதில் முக்கிய பாத்திரமாக நடித்தவள் பழுவூர் இளையராணி நந்தினி. இதை அப்போதே நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். வந்தியத்தேவரும் நீயும் சொன்ன விவரங்களுக்குப் பிறகு அது உறுதியாயிற்று….!”

“அந்த நாடகத்திற்குக் காரணம் என்ன? பழுவூர் ராணி எதற்காக அப்படிச் செய்ய வேணும், அக்கா?”

“நந்தினிக்குத் தன் பிறப்பைக் குறித்துச் சந்தேகம் உண்டு. சக்கரவர்த்தி தன்னைப் பார்த்து, முன்னொரு தடவை நினைவிழந்ததை அவள் அறிவாள். அதற்குப் பிறகு அவள் தந்தை முன்னால் வருவதே இல்லை. இப்படி ஒரு நாடகம் நடத்தினால் ஏதாவது உண்மை கண்டறியலாம் என்று செய்திருக்கிறாள்….”

“தெரிந்திருக்குமா, அக்கா?”

“அதை நான் அறியேன்! நந்தினியின் உள்ளத்தை அவளைப் படைத்த பிரம்மதேவனாலும் கண்டறிய முடியாது. பழுவேட்டரையர் அவளிடம் படும்பாட்டை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது; தம்பி! சற்று முன் அழகைப் பற்றிப் பேசினோம் அல்லவா? பெண்களில் அழகி என்றால் நந்தினி தான் அழகி. நாங்கள் எல்லாரும் அவள் கால் தூசி பெற மாட்டோ ம். நந்தினி முன்னால் எதிர்ப்பட்ட புருஷர்களும் அவளுக்கு அக்கணமே அடிமையாகி விடுகிறார்கள். பழுவேட்டரையர், மதுராந்தகர், திருமலையப்பன், கந்தன்மாறன், கடைசியாக பார்த்திபேந்திரன்! அவளுடைய அழகுக்குப் பயந்து கொண்டு முதன் மந்திரி அநிருத்தர் அவள் பக்கத்திலேயே போவதில்லை. ஆதித்த கரிகாலன் அதனாலேயே தஞ்சைக்கு வருவதில்லை. தம்பி! நந்தினியின் சௌந்திரயத்துக்கு அஞ்சாமல், அவளிடம் தோற்றுப் போகாமல் மிஞ்சி வந்தவர், ஒரே ஒருவர் தான்…”

“வாணர் குலத்து வீரரைத்தானே சொல்லுகிறாய்?”

“ஆம்! அவர்தான்! அதனாலேயே அவரைக் காஞ்சிக்கு ஆதித்த கரிகாலனிடம் அனுப்பியிருக்கிறேன்.”

“எதற்காக?”

“பழுவூர் ராணி கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி நம் தமையனுக்குச் சொல்லியனுப்பியிருக்கிறாள். அவர்களுடைய சந்திப்பைத் தடுப்பதற்காக அனுப்பியிருக்கிறேன். அப்படிச் சந்தித்தாலும், விபரீதம் எதுவும் நேராமல் பாதுகாப்பதற்கு அனுப்பியிருக்கிறேன். கரிகாலனுக்கு நந்தினி தம் தமக்கை என்று தெரியாது. நந்தினி நம் உறவைக் கண்டு கொண்டாளா என்பதையும் நான் அறியேன்.”

“அவள் நம் தமக்கை என்பது நிச்சயந்தானா, அக்கா?”

“அதில் என்ன சந்தேகம்? தம்பி! அதை நான் அறிந்ததிலிருந்து என்னுடைய மனத்தை அடியோடு மாற்றிக் கொண்டு விட்டேன். நாம் குழந்தைகளாயிருந்த போது நந்தினியை நான் வெறுத்தேன், அவமதித்தேன். அவள் அழகைக் கண்டு பொறாமைப்பட்டேன். நீயும், கரிகாலனும் அவளோடு பேசவுங் கூடாது என்று திட்டம் செய்தேன். அவள் பாண்டியநாட்டுக்குப் போன பிறகும் அவளிடம் நான் கொண்டிருந்த அசூயையும் வெறுப்பும் அப்படியே இருந்தன. பழுவூர்க் கிழாரை மணம் செய்து கொண்டு திரும்பி வந்த பிறகு எத்தனையோ தடவை அவளைப் பரிகசித்து அவமானப்படுத்தினேன். அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன்…”

“எப்படி, அக்கா! என்ன மாதிரிப் பிராயச்சித்தம்?”

“அடுத்த தடவை அவளைச் சந்திக்கும்போது அவள் காலில் விழுந்து என்னுடைய குற்றங்களை யெல்லாம் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்வேன். அதற்காக என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்வேன்…”

“அதை நான் தடுப்பேன். நீ ஒரு குற்றமும் செய்யவில்லை நீ யாரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இந்த ஈரேழு பதினாலு உலகத்தில் உனக்குத் தண்டனை கொடுக்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. நீ பழுவூர் இளைய ராணி நந்தினியைப் பார்த்து அசூயைப்படவில்லை. அவள்தான் உன்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டாள். அவள்தான் உன்னை வெறுத்தாள்…”

“தம்பி! இலங்கையில் பைத்தியக்காரியைப்போல் திரியும் நம் பெரியம்மாவை நினைத்து நீ நெஞ்சம் குமுறுவதாகச் சொன்னாய். அரண்மனையில் சகல சுக போகங்களுடன் வாழ்ந்திருக்க வேண்டிய நந்தினி எப்படியெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாள் என்பதை நினைக்கும்போது என் இதயம் பிளந்து போகும் போலிருக்கிறது. யாரோ, எப்பொழுதோ செய்த தவறுகளின் காரணமாக, எனக்கு முன் பிறந்த தமக்கை இந்தக் கிழவர் பழுவேட்டரையரை மணக்க நேர்ந்துவிட்டது….”

“அக்கா! இதெல்லாம் எப்படி நேர்ந்திருக்கும் என்று உனக்கு ஏதாவது தெரிகிறதா? நம் பெரியம்மா இறந்து விட்டதாகத் தந்தை எண்ணுவதற்குக் காரணம் என்ன? நந்தினி அநாதையைப் போல எங்கேயோ, யார் வீட்டிலோ வளர்ந்து, இந்த நிலைமைக்கு வருவதற்குக் காரணம் என்ன….?”

“அதைப்பற்றியெல்லாம் நான் இரவும், பகலும் யோசித்து வருகிறேன். ஆனால் இன்னமும் நிச்சயமாய்க் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இரகசியங்களை அறிந்தவர்கள் இப்போது இரண்டு பேர் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பாட்டி செம்பியன்மாதேவிக்கு ஏதோ விஷயமும் தெரிந்திருக்கிறது. முதல் மந்திரி அநிருத்தருக்கு எல்லா விஷயம் தெரிந்திருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் இரண்டு பேரிடமிருந்தும் நாம் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. அநிருத்தருடைய சீடன் ஆழ்வார்க்கடியானுக்கும் ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். அவன் குருவை மிஞ்சியவன்! வாயை திறக்கமாட்டான். தம்பி! அதையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு இப்போது அவசரமும் இல்லை. நந்தினியினால் நம் குலத்துக்கு விபரீதமான அபாயமும், அபகீர்த்தியும் ஏற்படாமல் தடுப்பதுதான் இப்போது முக்கியம். வந்தியத்தேவர் சொன்னார், ‘பழுவூர் ராணி மீன் சின்னம் பொறித்த, மின்னலைப்போல் ஒளிரும் வாள் ஒன்றை வைத்துப் பூஜை செய்து கொண்டிருக்கிறாள்’ என்று. அதைக் கேட்டதிலிருந்து என் நெஞ்சு பதைத்துக் கொண்டேயிருக்கிறது. தான் பிறந்த குலம் சோழ குலம் என்பதை அறியாமல் பழுவூர் ராணி ஏதாவது செய்துவிடப் போகிறாளோ என்று கவலையாயிருக்கிறது.”

“பழுவூர் ராணியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் என்ன?”

“சொன்னாலும் என்ன பயன் ஏற்படுமோ, தெரியாது. நம்மிடமெல்லாம் அவளுடைய கோபம் அதிகமானாலும் ஆகும். ஆனால் நமது கடமையை நாம் செய்துவிட வேண்டியது தான்!”

“அதற்காக வந்தியத்தேவரை நீ அனுப்பியிருப்பது சரிதான். ஆனால் தந்தையிடமும் தெரிவிக்க வேண்டாமா? அவர் எதற்காக உடல் வேதனை போதாதென்று, மனவேதனையும் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாம் உடனே, தஞ்சைக்குப் புறப்படலாம் அல்லவா?”

“கூடவே கூடாது, தம்பி! இரண்டு நாளில் தஞ்சைக்கு நான் புறப்படுகிறேன். ஆனால் இந்தச் சூடாமணி விஹாரத்தில்தான் நீ இன்னும் சில காலம் இருக்கவேண்டும்.”

“ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? தந்தையின் கட்டளையை மீறி என்னை இங்கே இன்னமும் ஒளிந்து, மறைந்து வாழச் சொல்கிறாயா?”

“ஆம்! நீ இப்போது தஞ்சைக்கு வந்தால் நாடெங்கும் ஒரே குழப்பமாகிவிடும். மக்கள் மதுராந்தகர் மீதும், பழுவேட்டரையர்கள் மீதும் ஒரே கோபமாயிருக்கிறார்கள். உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னதற்காகச் சக்கரவர்த்தி மீதுகூட ஜனங்கள் கோபமாயிருக்கிறார்கள். உன்னை இப்போது கண்டால் மக்களின் உணர்ச்சி வெள்ளம் பொங்கிப் பெருகும். அதன் விளைவுகள் என்ன ஆகுமோ தெரியாது. உடனே உனக்குப் பட்டம் கட்டவேண்டும் என்று ஜனங்கள் கூச்சல் போட்டாலும் போடுவார்கள். தஞ்சைக் கோட்டையையும், அரண்மனையையும் முற்றுகை போடுவார்கள். ஏற்கெனவே மனம் புண்பட்டிருக்கும் தந்தையின் உள்ளம் மேலும் புண்ணாகும். தம்பி! இராஜ்யத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது என்று உன்னை நான் வரச்சொல்லி ஓலை எழுதினேன். அதே காரணத்துக்காக இப்போது நீ திரும்பி இலங்கைக்குப் போய்விட்டால் நல்லது என்று நினைக்கிறேன்…”

“அக்கா! அது ஒருநாளும் இயலாத காரியம். நம் தந்தையைப் பார்க்காமல் நான் திரும்பிப் போகமாட்டேன். தஞ்சைக்கு நான் இரகசியமாக வருவது நல்லது என்று நினைத்தால் அப்படியே செய்கிறேன். ஆனால் சக்கரவர்த்தியை நான் பார்த்தேயாக வேண்டும். அவரிடம் என்னைக் காப்பாற்றிய காவேரி அம்மன் யார் என்பதைச் சொல்லவேண்டும்.”

“அதையெல்லாம் நானே சமயம் பார்த்துச் சொல்லி விடுகிறேன். நீ வந்துதான் தீரவேண்டுமா?”

“நேரில் பார்த்த நானே சொன்னால், தந்தைக்குப் பூரண நம்பிக்கை ஏற்படும்! என் மனமும் ஆறுதல் அடையும். பெரியம்மாவை அழைத்துக்கொண்டு வருவதற்கு அவருடைய அநுமதியையும் பெற்றுக் கொள்வேன்….”

“அருள்வர்மா! உன் இஷ்டத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் இன்னும் ஒரு வாரகாலம் சூடாமணி விஹாரத்தில் இரு. நான் முன்னதாகத் தஞ்சைக்குப் போகிறேன். நீ வந்திருப்பதாகத் தந்தையிடம் அறிவித்துவிட்டுச் செய்தி அனுப்புகிறேன். தம்பி! நான் இங்கே உன்னைத் தேடி வந்தது உன்னைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல; உன்னிடம் ஒரு வரம் கோரிப் பெறுவதற்காக வந்தேன். அதை நிறைவேற்றி வைத்து விட்டால், பின்னர் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன். ஆண்பிள்ளைகள் அபாயத்துக்கு உட்படவேண்டியவர்கள்தான். வீர சௌரிய பராக்கிரமங்களின் இணையில்லாதவன் என நீ புகழ் பெற வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் மறுபடி நீ உன்னை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்வதற்கு முன்னால் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்…”

“இவ்வளவு பெரிய பீடிகை எதற்கு, அக்கா! நீ சொல்லுவதை என்றைக்காவது நான் மறுத்ததுண்டா?”

“மறுத்ததில்லை; அந்த நம்பிக்கையோடுதான் இப்போதும் கேட்கிறேன். ஆதித்த கரிகாலன் கலியாணம் செய்து கொள்ளவில்லை; கலியாணம் செய்து கொள்வான் என்றும் தோன்றவில்லை; சுந்தர சோழரின் குலம் உன்னால்தான் விளங்க வேண்டும். என் விருப்பத்தை இந்த விஷயத்தில் நீ நிறைவேற்றி வைக்க வேண்டும்…”

“உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் சம்மதித்தால், எனக்குப் பிரியமான பெண்ணை மணந்துகொள்ள நீ சம்மதம் கொடுப்பாய் அல்லவா?”

“இது என்ன இப்படிக் கேட்கிறாய்? இருபது ஆண்டுகளாக நம் விருப்பங்கள் மாறுபட்டதில்லை. இதிலே மட்டும் தனியாக எதற்குச் சம்மதம் கேட்கிறாய்?”

“அக்கா அதற்குக் காரணம் இருக்கிறது. நான் மணந்து கொள்ளும் பெண், நான் காணும் பகற் கனவுகளை நிறைவேற்றுவதற்கு ஒத்தாசையாயிருக்கவேண்டும் அல்லவா?”

“தம்பி! உன் பகற் கனவுகளை ஒரு பெண்ணின் ஒத்தாசை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளவா ஆசைப்படுகிறாய்?” என்றாள் குந்தவை.

அச்சமயத்தில், “ஐயோ! ஐயோ! அக்கா! அக்கா!” என்ற அபயக்குரல் கேட்டது. குரல் வானதியின் குரல் தான்.

Source

Previous articlePonniyin Selvan Part 3 Ch 44
Next articlePonniyin Selvan Part 3 Ch 46

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here