Home Kalki Ponniyin Selvan Part 3 Ch 5

Ponniyin Selvan Part 3 Ch 5

99
0
Ponniyin Selvan Part 3 Ch 5 -Kalki -TamilNovel.in Ponniyin Selvan is one of the historical fiction novel in tamil history. Read Download Ponniyin Selvan Free Ponniyin Selvan Part 3, Ponniyin Selvan part 3 Ch 5, Ponniyin Selvan Kalki, Ponniyin Selvan,ps1,ps2, Read Ponniyin Selvan book, Download Ponniyin Selvan pdf
பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்: கொலை வாள் அத்தியாயம் 5: ராக்கம்மாள்

Ponniyin Selvan Part 3 Ch 5

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்: கொலை வாள்

அத்தியாயம் 5: ராக்கம்மாள்

Ponniyin Selvan Part 3 Ch 5

பழுவேட்டரையரும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து கடற்கரையோரமாக உலாவச் சென்ற பிறகு, நந்தினி சிறிது நேரம் தனியாக இருந்தாள். கடல் அலைகளைப் பார்த்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

“ராணி அம்மா!” என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

கலங்கரை விளக்கின் காவலர் தியாக விடங்கரின் மருமகள் அங்கே நின்றாள்.

“நீ யார்?” என்று நந்தினி கேட்டாள்.

“என் பெயர் ராக்கம்மாள்!”

“எங்கே வந்தாய்?”

இதற்கு மறுமொழி சொல்லாமல் ராக்கம்மாள் நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என்னடி பார்க்கிறாய்? என் முகத்தில் அப்படி என்ன இருக்கிறது?”

ராக்கம்மாள் திடுக்கிட்டு, “மன்னிக்க வேண்டும், அம்மா தங்களை பார்த்ததும் இன்னொரு முகம் எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால், அப்படி ஒரு நாளும் இருக்க முடியாது” என்றாள்.

“என்னடி உளறுகிறாய்? எது எப்படி இருக்க முடியாது?”

“அந்த ஊமை வெறியளுக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாது.”

“அவள் யார் ஊமை?”

“ஈழத்தில் ஒருத்தி இருக்கிறாள்! என் மாமனாருக்குப் பெரியப்பன் மகள். சில சமயம் இங்கேயும் வருவாள்.”

“அவளுக்கும் எனக்கும் என்ன?”

“அதுதான் சொன்னேனே, உறவு ஒன்றும் இருக்க முடியாது என்று.”

“பின் ஏன் என்னைப் பார்த்ததும் அவளுடைய ஞாபகம் வந்தது?”

“என் கண்களின் கோளாறுதான். தங்கள் முகம்…”

“அவள் முகம் மாதிரி இருந்ததா?”

“முதலில் அப்படித் தோன்றியது.”

“ராக்கம்மா! இப்போது அந்த ஊமை இங்கே இருக்கிறாளா?”

“இல்லை, அம்மா! அபூர்வமாக எப்போதாவது வருவாள்.”

“மறுபடியும் வரும்போது என்னிடம் அழைத்து வருகிறாயா?”

“எதற்காக, ராணி அம்மா?”

“என் முகம் மாதிரி முகமுடையவளைப் பார்க்க விரும்புகிறேன்.”

“அதுதான் என் கண்களின் பிரமை என்று சொன்னேனே?”

“எதனால் அப்படி நிச்சயமாகச் சொல்கிறாய்?”

“ராணி! தாங்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்தானே?”

“ஆமாம்; நீ?”

“நானும் பாண்டிய நாட்டாள். சற்று முன் நான் சொன்ன ஊமை, சோழ நாட்டவள். ஆகையால்..”

“இருந்தாலும் பாதகமில்லை; உன்னைப் போல் இன்னும் சிலரும் அவளைப் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவளை என்னிடம் அழைத்து வருகிறாயா? அழைத்து வந்தால் உனக்கு வேண்டிய பொருள் தருவேன்.”

“ராணி! அவளை அழைத்து வருவது சுழற்காற்றை அழைத்து வருவது போலத்தான். இருந்த இடத்தில் அவள் இருக்கமாட்டாள். பிறர் சொல்லுவதையும் கேட்கமாட்டாள். வெறிபிடித்தவள் என்று சொன்னேனே?”

“சரி! நீ எதற்காக இப்போது வந்தாய்? அதையாவது சொல்!”

“ராணி! சில நாளைக்கு முன்பு இரண்டு பேர் இங்கே வந்தார்கள். தங்கள் பெயரைச் சொன்னார்கள்.”

“என் பெயரை ஏன் சொன்னார்கள்?”

“தங்கள் காரியத்துக்காக அவசரமாக இலங்கைக்குப் போக வேண்டும் என்றார்கள். என் புருஷனை அவர்களுக்குப் படகோட்ட அனுப்பி வைத்தேன்.”

“திரும்பி வந்து விட்டானா?”

“வரவில்லை. அதுதான் கவலையாயிருக்கிறது, அவருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால்…”

“ஒன்றும் நேராது கவலைப்படாதே! அப்படி ஏதாவது நேரிட்டிருந்தால் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன். படகிலே போன மனிதர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?”

“அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். சற்றுமுன் ஆந்தையின் குரல் கேட்டதே! அதைக் கவனிக்கவில்லையா?”

“கவனித்தேன். அதனால் என்ன?”

“அது மந்திரவாதியின் குரல் என்று தெரிந்து கொள்ளவில்லையா?”

“உனக்கு எப்படி அது தெரியும், நீ மந்திரவாதியைச் சேர்ந்தவளா?”

“ஆமாம், ராணி!” என்று சொல்லிவிட்டு, ராக்கம்மாள் கையினால் கோலம் போட்டுக் காட்டினாள்.

நந்தினி அவளை வியப்புடன் உற்றுப் பார்த்துவிட்டு “இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

“மந்திரவாதி தங்களைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார்.”

“என்னை வந்து பார்ப்பதுதானே? எதற்காக காத்திருக்க வேண்டும்?”

“இப்போது இங்கு வந்த பல்லவனை மந்திரவாதி சந்திக்க விரும்பவில்லை. ஈழத்தில் அவனை பார்த்தாராம். தங்கள் கணவரைப் பார்க்கவும் விரும்பவில்லை.”

“மந்திரவாதியை நீ பார்த்தாயா?”

“சற்றுமுன் ஆந்தைக் குரல் கேட்டுப் போயிருந்தேன். தங்களை அழைத்து வரும்படி சொன்னார். குழகர் கோயிலுக்கருகில் ஓடைக் கரையில் ஒளிந்திருப்பதாகச் சொன்னார். வருகிறீர்களா ராணி?”

“அது எப்படி நான் போக முடியும்?”

“குழகர் கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போகலாம்.”

“நல்ல யோசனைதான்; வேறு துணை வேண்டாமா?”

“அவசியமில்லை! வேண்டுமானால் சேந்தன் அமுதனைத் துணைக்கு அழைத்துப் போகலாம்.”

“அவன் யார்?”

“தஞ்சவூர் ஊமையின் மகன்!”

“சிவ சிவா! எத்தனை ஊமைகள்?”

“இந்த குடும்பம் சாபக்கேடு அடைந்த குடும்பம். சிலர் பிறவி ஊமைகள். சிலர் வாயிருந்தும் ஊமைகள். என் புருஷன் அப்படி அருமையாகத்தான் பேசுவார். நான்தான் பேசவேண்டாம் என்று திட்டம் செய்திருக்கிறேன்.”

“இலங்கை ஊமைக்கு மக்கள் உண்டா? உனக்குத் தெரியுமா?”

“ஒரு தடவை இரட்டைக் குழந்தைகள் பெற்றாளாம். குழந்தைகள் என்ன ஆயின என்று ஒருவருக்கும் தெரியவில்லை. நானும் அந்த இரகசியத்தைத் தெரிந்துகொள்ள எத்தனையோ நாளாக முயன்று வருகிறேன். இதுவரை பலிக்கவில்லை.”

“தஞ்சாவூர்க்காரன் இங்கே எதற்காக வந்திருக்கிறான்?”

“அவனுடைய மாமன் மகள் பூங்குழலியைத் தேடிக் கொண்டு வந்தான். அவள் இல்லை, அதனால் காத்திருக்கிறான்.”

“அவள் எங்கே போய் விட்டாள்?”

“நானே சொல்ல வேண்டும் என்றிருந்தேன். மந்திரவாதியை என் புருஷன் படகில் ஏற்றிக்கொண்டு போனதற்கு மறுநாள் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்களைப் பிடிப்பதற்காகப் பழுவூர் ஆட்களும் தொடர்ந்து வந்தார்கள். அவர்களில் ஒருவனை என் நாத்தி படகில் ஏற்றிக்கொண்டு இரவுக்கிரவே இலங்கைக்குப் போனாள்.”

“அவளுக்குப் படகுவிடத் தெரியுமா?”

“படகு விடுவதே அவளுக்கு வேலை. படகு விடாத நேரங்களில் கோடிக்கரைக் காடுகளில் சுற்றி அலைவாள். இந்தக் காட்டில் அவளுக்குத் தெரியாத மூலைமுடுக்கு ஒன்றும் கிடையாது.”

“அவள் இன்னும் திரும்பி வரவில்லையென்றால், அதைக் கொண்டு நீ என்ன ஊகிக்கிறாய்?”

“யாரோ கடலில் முழுகிப் போய் விட்டதாக இவர்கள் அலறி அடித்துக் கொள்கிறார்களே, அது நிச்சயமல்லவென்று சொல்கிறேன். பூங்குழலி வந்த பிறகு அது நிச்சயமாகும்.”

“அந்தப் பெண்ணும் முழுகியிருக்கலாம் அல்லவா?”

“அவள் முழுகமாட்டாள். கடல் அவளுக்குத் தொட்டில். மேலும்…”

“மேலும், என்ன?”

“சற்று முன்னால் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெகு தூரத்தில் ஒரு படகு வருவதுபோல் தோன்றியது…”

“அப்புறம்?”

“அப்புறம் அது கரைக்கு வரவில்லை.”

“என்ன ஆகியிருக்கும்?”

“இங்கே கடற்கரை ஓரத்தில் கூட்டமாயிருப்பதைப் பார்த்து விட்டு வேறு சதுப்பு நிலக் கால்வாயில் படகு விட்டுக் கொண்டு போயிருக்கக் கூடும்.”

“அது கூடச் சாத்தியமா?”

“பூங்குழலிக்குச் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. தஞ்சாவூர்க்காரனும் என்னுடன் உச்சிக்கு வந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் அப்படியே தோன்றியதாம்.”

“சரி; எப்படியாவது இருக்கட்டும்; நாம் இப்போது குழகர் கோவிலுக்குப் போகலாம், வா!”

“துணைக்குச் சேந்தன் அமுதனைக் கூப்பிடட்டுமா?”

“வேண்டாம்! அவன் அவனுடைய மாமன் மகளைத் தேடட்டும். நாம் அதற்குக் குறுக்கே நிற்க வேண்டாம்.”

இருவரும் குழகர் கோவிலை நோக்கிப் புறப்பட்டார்கள். பூங்குழலியைப் போலவே ராக்கம்மாளுக்கும் கோடிக்கரையின் புதைசேற்றுக் குழிகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. நந்தினிக்கு ஜாக்கிரதையாக வழிகாட்டி அழைத்துக் கொண்டு போனாள்.

இருவரும் குழகர் ஆலயத்தை அடைந்தார்கள். கோவில் பட்டர் அவர்களைக் கண்டு வியப்படைந்தார்.

“ராணி! இது என்ன, இந்த நேரத்தில் தனியாக வந்தீர்கள்? பரிவாரங்கள் இல்லாமல்? முன்னாலேயே எனக்குச் சொல்லியனுப்பி இருக்கக்கூடாதா? தங்களை வரவேற்க ஆயத்தமாக இருந்திருப்பேன்?” என்றார்.

“அதற்கெல்லாம் இதுதானா சமயம்? பட்டரே! சோழ நாட்டுக்குப் பெரும் விபத்து நேர்ந்திருக்கிறதே! சோழ நாட்டு மக்களின் கண்ணின் மணியான இளவரசரைக் கடல் கொண்டு விட்டதாகச் சொல்கிறார்களே? இளவரசரைக் காப்பாற்றி அருளும்படி குழகரிடம் முறையிட்டுக் கொள்வதற்காக வந்தேன்.” என்றாள் நந்தினி.

“அப்படியெல்லாம் ஒன்றும் நேராது. தாயே! தாங்கள் கவலைப்பட வேண்டாம். நம் பொன்னியின் செல்வருக்குச் சமுத்திர ராஜனால் ஆபத்து ஒன்றும் நேராது!” என்றார் குருக்கள்.

“எதனால் அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறீர்கள், பட்டரே?”

“இளவரசர் பிறந்த நட்சத்திரமும், லக்கினமும் அப்படி, அம்மா! உலகமாளப் பிறந்தவரைக் கடல் கொண்டு விடுமா? தாங்கள் வருத்தப்படாதீர்கள்! குழகரைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். அவசியம் இளவரசரைக் காப்பாற்றுவார்” என்றார் பட்டர்.

இவ்வாறு கூறிவிட்டு சுவாமிக்குத் தீபாராதனை செய்து, திருநீறும் கொடுத்தார். “அம்மணி! தாங்கள் இவ்வளவு மேலான நிலைமையில் இருப்பது குறித்து மிக்க சந்தோஷம்!” என்றார்.

“என்னை உங்களுக்கு முன்னமே தெரியுமா, பட்டரே?”

“தெரியும் ராணி! பழையாறையில் பார்த்திருக்கிறேன். வைகைக் கரைக்கோவிலிலும் பார்த்திருக்கிறேன். தங்கள் தமையன், திருமலை, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?”

“ஆழ்வார்களின் பிரபந்தங்களைப் பாடிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து கொண்டிருக்கிறான். அவனை நான் பார்த்து வெகு காலமாயிற்று.”

“அவனுக்குக்கூட அதைப்பற்றிக் குறைதான், அம்மா! தாங்கள் பழுவூர் ராணியான பிறகு அவனைப் பார்க்கவேயில்லையென்று வருத்தப்பட்டான்.”

“அதற்கென்ன செய்யலாம், ஐயா! நான் புகுந்த இடத்தில் எல்லாம் பரம சைவர்கள். அவனோ வீர வைஷ்ணவன். ‘ஆழ்வார்க்கடியான்’ என்று பட்டப் பெயர் வைத்துக்கொண்டு, சைவர்களோடு சண்டை போட்டுக்கொண்டு திரிகிறான். அவனை எப்படி நான் சேர்ப்பது? புகுந்த வீட்டாரின் மனங்கோணாமல் நான் நடந்து கொள்ள வேண்டாமா?”

“உண்மை தாயே, உண்மை! தங்கள் பதியின் மனங்கோணாமல் நடப்பதுதான் முக்கியமானது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும்!”

பட்டரிடம் விடைபெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

“தனியாகப் போகிறீர்களே? சற்றுப் பொறுத்தால் நானும் வந்துவிடுவேன்.”

“வேண்டாம் ஐயா! எங்களுக்காக அவசரப்பட வேண்டாம். இந்தப் பெண்ணுக்கு இந்தப் பக்கமெல்லாம் நன்றாய்த் தெரிகிறது. அதோடு இன்றைக்குத்தான் கோடிக்கரை முழுதும் அமளிதுமளிப்படுகிறதே! பயம் ஒன்றுமில்லை. நாங்கள் போகிறோம்” என்றாள் நந்தினி.

இரு பெண்களும் ஆலயத்துக்கு வெளியில் வந்தார்கள். பட்டர் கண் பார்வையிலிருந்து மறைந்ததும், ராக்கம்மாள் நந்தியின் கையைப் பிடித்து ஆலயத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்றாள். சிறிது நேரத்துக்கெல்லாம் தாழைப் புதர்கள் செறிந்த ஓடைக்கரையை அடைந்தார்கள். நட்சத்திர ஒளியின் உதவியைக் கொண்டு ஓடைக் கரையோடு நடந்தார்கள்.

Source

Previous articlePonniyin Selvan Part 3 Ch 4
Next articlePonniyin Selvan Part 3 Ch 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here