Home Historical Novel Raja Muthirai Part 1 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

66
0
Raja Muthirai Part 1 Ch13 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch13 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 முத்து வலை

Raja Muthirai Part 1 Ch13 |Raja Muthirai Part1|TamilNovel.in

பொருநையாற்றின் குறுக்கே பரபரப்புடன் இழுத்து வரப்பட்டதால் இளநங்கையின் பக்குவமலர் உடல்பெரிதும் களைத்து, பெரு மூச்சும் துரிதமாக வந்துகொண்டிருந்த அந்த நேரத்திலும் எதிரே நின்ற உருவத்தைக் கண்டதும் அவள் உள்ளம் பெரும் பிரமிப்பை அடைந்ததன்றி அவள் பெருமூச்சைக்கூட ஓரளவு நிறுத்திவிட்டது. தோப்பிலிருந்த எதிர்க் கரையிலிருந்து பொருதையின் மற்றொரு கரைக்கு இளவரசன் தன்னை இழுத்துக்கொண்டு ஓடிவந்தபோது அந்த மற்றொரு கரையில் அவன் முத்தங்காடியில் குடையொன்றின் பின் தட்டியைப் பிரித்து உள்ளே நுழைவானென்பதையோ, அந்தத் தட்டியடைத்த கடையும் தனக்குத் தெரிந்த கடையாயிருக்குமென்பதையோ அவள் சிறிதும் சிந்திக்கச் சந்தர்ப்பமில்லாதபடியால் எதிரே நின்ற அந்தப்பெண்ணை வெறித்துப் பார்த்தாள். முதல் நாளிரவு தனக்கு முழு முத்து மாலையை எடுத்துக்காட்டி, “இதை அரசகுலத்தாரால்தான் வாங்க முடியும். வேண்டுமானால் பார்த்துவிட்டுப் போ!” என்று அலட்சியமாகச் சொன்ன அதே முத்தங்காடிப் பெண் தன் எதிரே புன்முறுவலுட நின்றதன்றி, உள்ளே நுழைந்த இளவரசனுக்குக்கூடத் தலை வணங்காததையும் கண்டதும், அவள் இதயத்தில் அந்தப் பெண்ணைப்பற்றிச் சிறிது சந்தேகமும் எழுந்தது.

கேவலம் முத்துக் கடை வைத்திருக்கும் ஒரு பெண் பாண்டிய நாட்டு இளவரசனும் கொற்கையின் அதிபதியுமான வீரபாண்டியனைச் சர்வ சகஜமாகத் தலையசைத்து வரவேற்றது பெரும் வியப்பாக இருந்ததால், இளநங்கை அப்பெண்ணையும் பார்த்து வீரபாண்டியனையும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் போக்கும் அங்கு வந்த காரணத்துக்கும் வீரபாண்டியன் ஏதாவது விளக்கம் தருவானென்று நினைத்த இளநங்கையை நோக்கி அவன் புன்முறுவல் செய்தானே பொழிய ஏதும் பேசவில்லை. ஆகவே இளநங்கையின் கண்கள் அந்தப் பெண்மீதே நிலைத்தன.

அந்தப் பெண்ணுக்கும் கிட்டத்தட்ட தன் வயதே இருக்குமென்பதையும், அவள் அழகும் அபரிமிதமாயிருந்த தையும் கவனித்த இளநங்கை, அவள் காதிலிருந்த இரண்டு மாணிக்க அணிகளையும் மூக்கிலிருந்த ஒற்றை முத்தையும் தவிர, வேறு ஆபரணங்களேதும் அவள் உடலில் இல்லாத தையும் பார்த்தாள். அப்படி அதிக ஆபரணங்களில்லாதது அவள் அழகை இம்மியத்தனைகூடக் குறைக்கவில்லை யென்பதைக் கவனித்த இளநங்கை, அந்த முத்துக் கடைக்காரி என்னதான் அழகியாயிருந்தாலும், இளவரசனைக் கண்டதும் தலைகூட வணங்காத அளவுக்கு அவளுக்கு ஆணவம் இருக்கக் கூடாதென்ற நினைப்பால், முகத்தில் சிறிது வெறுப்பையும் படரவிட்டுக் கொண்டாள்.

இளநங்கையின் இதயத்தில் ஓடிய எண்ணங்களை அந்த முத்தங்காடிப் பெண் எளிதில் உணர்ந்து கொண்டதை அவள் உதடுகளில் தவழ்ந்த இளநகை நிரூபித்தது. அந்தப் பெண் ஒருமுறை இளநங்கையை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் பார்த்தாள். பிறகு லேசாகச் சிரித்து விட்டு, “ஆண்களுக்கு எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் அவசரம், இல்லையா இளநங்கை?” என்று வினவவும் செய்தான்.

கொற்கையின் பிரமுகர்கள் கூடத் துணிவுடன் உச்சரிக்க அஞ்சும் தன் பெயரை அத்தனை அலட்சியமாக அந்த முத்தங்காடிப் பெண் உச்சரித்ததன்றி, தன்னைப் பார்த்துச் சிரித்துக் கேள்வி கேட்கவும் முற்பட்டதைக் கண்டு வெகுண்ட இளநங்கை, சீற்றம் மிகுந்த கண்களை அந்தப் பெண்மீது நிலைநாட்டவும் செய்தான். அந்தச் சீற்றத்தை லவலேசமும் லட்சியம் செய்யாத அந்தப் பெண். “உன் பெயர் எனக்கு எப்படித் தெரியும் என்று நினைக்கிறாயா?” என்று வினவினாள் சர்வசாதாரணமாக.

மற்றும் மரியாதையின்றி ‘உன்’ என்று துவங்கிய அந்தப் பெண்ணின் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்டும் கூட என்ன பதில் சொல்வதென்பதை அறியாத இளநங்கை, “ஆம்” என்று உஷ்ணமான ஒற்றைச் சொல்லை உதிர்த்தாள் தனது உதடுகளிலிருந்து.

“உன் பெயரை அறிந்துகொள்ள நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால்..” என்று பேச்சை வெகு லாகவமாக இழுத்துவிட்ட அந்தப் பெண் மீண்டும் லேசாக நகைத்தாள்.

இளநங்கை தகைக்கும் நிலையில் இல்லை. ஆனால் என்ன ஆனால்?” என்று சீறினாள்.

“பத்து நாட்களாக ஒருவர் “இளநங்கை இளநங்கை” என்று ஜபம் செய்துகொண்டிருந்தால் எப்படி, அந்தப் பெயர் எனக்குத் தெரியாதிருக்க முடியும்?” என்று கேட்டாள் அந்தப் பெண்.
“பத்து நாட்களாக ஜபம் செய்கிறார்களா? யார் செய்கிறார்கள்? எதற்காக ஜபம் செய்கிறார்கள்?” எனற சொற்கள் விதரணையின்றி வேகத்துடன் வந்தன இளநங்கையிடமிருந்து.

“யார் ஜபம் செய்கிறாரென்று தெரியும். எதற்காக என்று நீதான் சொல்லவேண்டும்,” என்றாள் அந்தப் பெண்.

இனநங்கைக்கு அந்த ஜபம் செய்தவர் யாராயிருக்கு மென்று தெரிந்துவிட்டது. இருப்பினும் கேட்டாள் ஆத்திரத்தோடு சங்கடமும் குரலில் ஒலிக்க, “யாரது என்று.

“இதோ நிற்கிறாரே ஆந்தைபோல் விழித்துக் கொண்டு.” என்று இளவரசனைக் காட்டினாள் அந்த பெண்.

“இவரா! இவரா!” இந்தச் சொற்கள் இளநங்கையி மிருந்து தடுமாறித் தடுமாறி வந்தன. அவன் கண்கள் இளவரசனைப் பார்க்கவும் பார்த்தன.

இளவரசன் முகத்தில் சங்கடமும் குழப்பமும் மிதமிஞ்சித் தாண்டவமாடின. அதில் சற்று முன்பிருந்த வெகம், உறுதி எல்லாமே மறைந்துவிட்டன. அவள் கண்களைச் சந்திக்கக்கூட அவன் கண்களுக்குத் திராணியில்லாததால், கண்களைப் பக்கவாட்டில் செலுத்தினான் இளவரசன். அந்த இருவர் நிலையையும் கண்ட முத்தங்காடிப் பெண் தகைத்தான். ஒரு மாபெரும் வீரன் மங்கை பொருத்தியின் வலையில் விழுந்துவிட்டால் அவன் மரமெல்லாம் எத்தனை துரிதத்தில் பறந்துவிடுகிறதென்பதை எண்ணியதால் அவன் முகத்தில் வியப்பும் குடி கொண்டது. இப்படி வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த உணர்ச்சிகளை அடைந்த அந்த முத்தங்காடிப் பெண், என்ன! பாண்டிய நாட்டு இளஞ்சிங்கம்கூட விழிக்கிறது. தான்தான் பத்து நாட்களாக இளநங்கை என்ற பெயரைத் திரும்பத் திரும்பப் பாடம் படித்தேனென்று சொல்கிறது நானே! வாயில் ஏதாவது அடைத்திருக்கிறதா?” என்று வினவினாள்.

அதற்குப் பிறகும் வாளாவிருப்பது தவறென்ற காரணத்தாலோ என்னவோ சொன்னான் இளவரசன், “ஆம். நான்தான் உங்கள் பெயரை இவளுக்குச் சொன்னேன்,” என்று.

அந்த அறு சொற்களை மிகத் – தட்டுத்தடுமாறி இளவரசன் சொன்னதும் அந்தப் பெண் மேலும் விடாமல், பெயரை மாத்திரமா சொன்னீர்கள்? அவள் கருவிழிகள், கருங்குழல், சிறு மருங்கு ” என்று சொல்ல முயன்றதும்.”சரி சரி, நிறுத்து” என்று அவளை அதட்டிய இளவரசன், கோபத்துடன் அவள் காதைப் பிடித்து இழுத்து அவள் வாயையும் பொத்தினான். -இவள் பெரும் வாயாடியாகி விட்டாள். எல்லாம் நான் கொடுத்த இடம். மன்னித்துக் கொள்ளுங்கள்,” என்று இளநங்கையிடம் மன்னிப்புக் கேட்டான்.

இளநங்கையின் தெயம் எரிமலையாயிருந்தது தன்னெதிரிலேயே கேவலம் அந்தக் கடைக்காரியைத் தொட்டு அவள் வாயையும் தன் கையால் பொத்திய வீரபாண்டியன் நடத்தையில் பெரிதும் சந்தேகம் கொண்டாள் அவள். அந்தப் பெண் வீரபாண்டியனைத் துரும்பென நடத்தியதையும், அவ்விருவர் சம்பாஷனையும் அரசன் குடிமகன் என்ற உறவில்லாமல் நிதானமிழந்திருந்ததையும் கவனித்த அவள், “உங்களுக்கு இடைஞ்சலாக இங்கிருக்க விரும்பவில்லை. யாராவது துணை இருந்தால் கோட்டைக்குச் சென்று விடுகிறேன்,” என்றாள்.
அந்த முத்தங்காடிப் பெண் மேலும் நகைத்தான், நீ இப்படியே எப்படிக் கோட்டைக்குப் போக முடியும்? என்றும் கேட்டாள்.

“ஏன் போக முடியாது?” என்று வினவினாள் இளநங்கை.

“ஆண்கள் அவசரக்காரர்கள் இல்லையா என நான் கேட்கவில்லை, முதலில்?”

“ஆம்.” எரிச்சலுடன் வந்தது பதில்.

“உன்னை இளவரசர் அவசர அவசரமாகப் பொருதையின் தண்ணீரில் இழுத்து வந்திருக்கிறாரே?”

“ஆம்.”

“புடவை பாதி நனைந்திருக்கிறதே!”

“ஆம், ஆம்.”

“இந்த நனைந்த புடவையுடன் முத்தங்காடியில் நடந்து போனால்…”

அப்பொழுதுதான் தன் நிலையை உணர்ந்தாள் இளநங்கை. பொருநையின் தீராட்டப் படித்துறையை அணைந்த நீர்க்கால் சில இடங்களில் முழுங்காலளவும் சில இடங்களில் இடுப்பளவும்கூட இருந்ததால் அதைத் தாண்டிய நேரத்தில் தன் புடவை பெரிதும் நனைந்திருந்ததையும், கால்களிலும் அவற்றுக்கு மேலுங்கூட பல இடங்களில் ஒட்டிக்கொண்டிருந்ததையும் நினைத்துப் பார்த்து, “ஆம் ஆம், போக முடியாது,” போக முடியாது. என்று கூறி அந்தப் பெண்ணைப் பரிதாபத்துடன் நோக்கினாள்.

அந்தப் பரிதாபப் போக்கு அந்தப் பெண்ணின் உள்ளத்தையும் கரைத்திருக்க வேண்டும். “அதோ அந்தத் தட்டிக்குப் பின்னால் என் அறை இருக்கிறது. அதில் போய் என் சேலைகள் இருக்கும். இதைக் களைத்து வேறு உடுத்திக் கொண்டு வா,” என்று அருகிலிருந்த தட்டியைச் சுட்டிக் காட்டினாள் அந்தப் பெண்.

அதுவரை அந்தத் தட்டி, அடுத்த கடையின் அடைப்பென்று. நினைத்துக்கொண்டிருந்த இளநங்கை, அதை எப்படித் திறப்பதென்றறியாமல் அதைப் பிடித்து அசக்கிப் பார்த்தாள். “இரு இரு. இப்படித் திறக்க வேண்டும்,” என்று தட்டியின் ஒரு மூலையிலிருந்த சிறு கம்பியை அழுத்தி இழுத்து அந்தப் பெண் தட்டியைத் இறந்துவிட, உள்ளே சென்றாள் இளநங்கை.

அந்தத் தட்டியின் உட்புறத்தை அடைந்ததும் பெரும் பிரமிப்புக்குள்ளானாள் கோட்டைக் காவலன் மகள், அங்கிருந்த இரண்டு சிறு கூடைகளில் ஓர் அரசையே விலைக்கு வாங்கிவிடக்கூடிய பெருமுத்துக்கள் கிடந்தன. கொடிகளில் சில சேலைகளும் இருந்தன. ஆண்கள் அணியும் உடைகளுமிருந்தன. அந்த ஆணுடைகள் வீர பாண்டியனுக்குத்தான் சொந்தமாயிருக்கும் என்று நினைத்த இளநங்கை, சாதாரண சமயமாயிருந்தால் வெறுப்புற்றிருப்பாள், அல்லது கோபத்தின் வசப்பட்டிருப்பாள். ஆனால் அந்த கடைக்குள் நுழைந்த வினாடியிலிருந்து ஏற்பட்ட பலவித உணர்ச்சிகள் அலைக்கழித்ததால் எதையும் நினைக்கச் சக்தியற்றவளாய், தனது நனைந்த சேலையை அவிழ்த்து அந்தப் பெண்ணின் சேலையொன்றை அணிந்தாள். அப்படிச் சேலை அணியும் போதே இளவரசனை அலட்சியமாக நடத்தும் அவள் யாராயிருக்குமென்பதை எண்ணிப் பார்த்து விடை காணாமல் தவித்தாள். அவளென்ன வேவுகாரியா, ஆசை நாயகியா, இரண்டுமா என்று எண்ணிப் பார்த்து, எப்படி யிருந்தாலும் எதற்கும் ஓர் ஒளிவு மறைவு வேண்டு மென்பதை நினைத்ததால் பெரும் வெறுப்பே நிலவியது அவள் இதயத்தில், அந்த வெறுப்புடனேயே அப்பெண்ணின் சேலையை அணிந்து வெளிவந்த இளநங்கையை அந்தப் பெண் மிகுந்த ஆச்சரியத்துட பார்த்தாள்.

“எப்படி? என்று கேட்டாள் அவள், வீரபாண்டி யனை நோக்கி.

“பிரமாதம்!” என்றான் வீரபாண்டியன் பிரமிப்பால் குரல் சற்று நெகிழ.

“ஒன்று குறைகிறதல்லவா?” என்று மீண்டு கேட்டாள் அந்தப் பெண்.

“ஆம்” என்றான் வீரபாண்டின்.

“சற்றுப் பொறுங்கள், கொண்டுவருகிறேன்,” என்ற அந்தப் பெண் பக்கத்துத் தட்டியறைக்குள் ஓடி கையிலொரு முத்துமாலையைக் கொண்டுவந்தாள்.

அதைக் கண்ட இளநங்கை சொல்லாவொண்ண வியப்படைந்தாள். முதல் நாளிரவு அவள் பார்த்த அந்த முழு முத்துக்களின் மாலை அது; விலை மதிக்க முடியாதது, அதை அந்தப் பெண் ஆசையுடன் இனதங்கையின் கழுத்தில் அணிவித்துச் சற்று நகர்ந்து நின்று இளநங்கையை அழகு பார்த்து இளவரசனை நோக்கி, “இப்பொழுது எப்படியிருக்கிறது?” என்று வினவினாள்.

“சாட்சாத்.” என்ற இளவரசனை இடைமறித்த அந்த முத்தங்காடிப் பெண், “முழுத் தகுதி இருக்கிறதல்லவா?” என்று வினவினாள்.

“இருக்கிறது, இருக்கிறது,” என்றான் வீரபாண்டியன்.

இளநங்கைக்கு ஏதும் புரியவில்லை. அதுவரை இருந்த மயக்கத்தை உதறி அந்தப் பெண்ணைக் கோபத்துடன் நோக்கினாள். “யார் நீ? உனக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?” என்று சீறவும் சீறினாள்.

அந்தச் சீற்றத்தை அந்தப் பெண் சிறிதளவும் லட்சியம் செய்யவில்லை. “அதை அவரையே கேட்பது தானே?” என்றாள் அலட்சியமாக.

“யாரிவள்? என்று சீற்றத்துடன் வினவினான் இளநங்கை இளவரசனை நோக்கி.

இளவரசன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஒரு முறை அந்த முத்தங்காடிப் பெண்ணை நோக்கினான். பிறகு இளநங்கையின்மீது அவன் கண்கள் நிலைத்தன. அந்தப் பழைய நிதானம் அவன் முகத்தில் திரும்பி விட்டதைக் கவனித்தாள் இளநங்கை “இவளை உனக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டிய அவசியமும், நேரமும் வந்துவிட்டது இளநங்கை, உங்களிருவர் கைகளிலும் பாண்டிய நாட்டின் முக்கியப் பணியை ஒப்படைக்க வேண்டிய காலமும் வந்துவிட்டது. ஆகவே, நீங்களிருவரும் ஒருவரையொருவர் தன்றாக அறிந்துகொள்வது நல்லது. உன்னை இவள் அறிவாள் இளநங்கை. ஆனால் இவளை நீ அறிய மாட்டாய்,” என்று ஏதோ பெரும் மந்திரங்களை ஒதுபவனைப்போல் பேசிய வீரபாண்டியன், “இவள்…” என்று கூறி, சொல்லை முடிக்காமல் விட்டான்.

“இவள்?” இளநங்சையின் கேள்வி துரிதமாக வந்தது.

வீரபாண்டியன் பதில் சொன்னான். பதிலைக் கேட்ட இளநங்கை கற்சிலையென தின்றாள்.

“என்ன! என்ன!” இளநங்கை மீண்டும் இருமுறை கேட்டாள், நம்பமுடியாமல்.

“என் மகள்!” உறுதியுடனும் சந்தேகத்துக்குச் சிறிதும் இடமின்றியும் வந்தது வீரபாண்டியன் பதில் இரண்டாம் முறையாக.

யாரும் தம்புவதற்கு முடியாத பொய் அது. இருபத்தைந்து வயதுக்கு மேலே இருக்கமுடியாத இளவரசனுக்குத் தன் வயதையொத்து ஒரு பெண் இருக்க முடியாதென்று திண்ணமாகத் தெரிந்ததால், பொய்! பொய்!” என்று கூவினாள் இனநங்கை.

இளவரசன் மெள்ள மெள்ன விளக்கம் தந்தான். அந்தப் பெண், பாண்டிய நாடு, முத்து மூன்றும் எத்தனை இணைந்து கிடந்தன என்ற விளக்கம் அது. அதைக்கேட்ட இளநங்கையின் திகைப்பு எல்லை கடந்தது. அந்தச்சமயத்தில் தான் சிக்கியிருந்தது முத்துக்கடைத் தட்டிகளுக் கிடையில் மட்டுமல்லவென்பதையும், அந்தத் தட்டிகளுக் கிடையே பின்னப்பட்ட பெரும் ராஜீய வலையில் தான் மீளமுடியாமல் சிக்கிவிட்டதையும் உணர்ந்தாள் கோட்டைக் காவலன் மகள், பாண்டியநாடு இப்படியெரு முத்துவலையைத் தன்னைச் சுற்றி அத்தனை துரிதமாகப் பின்னிவிடும் என்பதை அறியாததால், அவள் பெரும் பிரமை பிடித்துப் பல வினாடிகள் நின்றுவிட்டாள்.

Previous articleRaja Muthirai Part 1 Ch12 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here