Home Historical Novel Raja Muthirai Part 1 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

57
0
Raja Muthirai Part 1 Ch14 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch14 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch14 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 அபாயப் பணியின் முதல் படி

Raja Muthirai Part 1 Ch14 |Raja Muthirai Part1|TamilNovel.in

முந்திய நாளிரவு தான் சந்தித்த முத்தங்காடிப் பெண் இளவரசனது மகளாக ஒருகாலுமிருக்க முடியாதென்ற எண்ணத்தால், பொய்! பொய்!” என்று இளநங்கை கூவியதும் இளவரசன் ஓரளவு அனுதாபத்துடன் அவளை உற்று நோக்கினான். உள்ள நிலையை அவள் உணராதது அவனுக்கு எந்த விதத்திலும் வியப்பில்லாததால் அவன் அவளையும் நோக்கி முத்தங்காடிப் பெண்ணையும் நோக்கினான். அவன் பார்வையின் பொருளை அந்த முத்தங்காடி பெண் புரிந்து கொண்டிருக்கவேண்டும். “இன்னும் முத்தங்காடியில் ஜன நடமாட்டம் இருக்கிறது. நான் அதிக நேரம் உட்புறமிருப்பதில் அபாயமிருக்கிறது. நான் வெளியே சென்று கடையைக் கவனிக்கிறேன். நீங்கள் இந்தப் பெண்ணுக்கு விஷயத்தை எடுத்துச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு, கடையின் முன்புறத்துக்கும் பின்புறத்துக்கும் இடையேயிருந்த திரையை விலக்கிக் கொண்டு வெளியே சென்றாள்.

தனித்து விடப்பட்ட இருவரும் சில விநாடிகன் மௌனம் சாதித்தார்கள். வெளியே அப்பொழுது மிகுந்த ஜனநடமாட்டம், வியாபாரக் கூச்சல், காவலரின் எச்சரிக்கை ஒலிகள் ஆகியவற்றில் எதுவுமே அந்தச் சில விநாடிகளில் அவ்விருவர் காதிலும் விழவில்லை. இருவரில் இளநங்கையின் மனம் பெரும் பிரமிப்பிலும், குழப்பத்திலும் இருந்தது. சற்று முன்பு தானும் இளவரசனும் எதிரிகளுக்குத் தப்பிப் படித்துறையிலிருந்து ஓடி வந்ததையும் அவர்கள் தங்கனை ஆற்றுக்குக் குறுக்கேயும் துரத்தியதையும் கூட அவள் மறந்தான். அந்த வீரர்கள் ஏன் முத்தங்காடிக்குள் வரக்கூடாது. இதே தட்டியைப் பிய்த்துக்கொண்டு, ஏன் உள்ளே நுழையக்கூடாது என்ற நினைப்புக்கூட இல்லை அவளுக்கு. அந்தச் சமயத்தில் அவள் நினைப்பில் நிலைத்த தெல்லாம், முத்தங்காடிப் பெண்ணுடன் இளவரசன் பழகிய விதமும், அந்தக் கடை உள்ளேயிருந்த தட்டியறையின் அமைப்பும் பொருள்களும், கடைசிய அங்காடிப் பெண்ணைத் தன் பெண் என்று இளவரசன் அறிவித்ததும் தான், அந்தப் பல விஷயங்களால் ஏற்பட்ட குழப்பத்தையும் பிரமிப்பையும் அகற்ற முடியாத கோட்டைக் காவலன் மகள் இளவரசனை ஏறெடுத்து நோக்கவும் சக்தியற்று நிலத்தை நோக்கினாள்.

எத்தனை நேரம் அவள் நிலத்தை நோக்கி நின்றிருந் தாளோ அவளுக்கே தெரியாது, உள்ளே குமுறிகொண்டிருந்த பல எண்ணங்களின் விளைவாக. ஆனால் தனது மோவாய்க் கட்டையில் இளவரசனின் கை படிந்து முகத்தை நிமிர்த்தியதும் சிறிது சுரணை வரப்பெற்றாள் அவள். நிமிர்ந்த அவள் முகத்தில் ஒளியிட்ட கண்களை இளவரசன் கண்கள் சந்தித்ததும், பூரணமாக உணர்வு வந்து விடவே அவள் இதழ்கள் ஏதோ கேள்வி கேட்க அசைந்தன.

அவளை எந்தக் கேள்வியும் கேட்க இளவரசன் அனுமதிக்கவில்லை. அவன் வலது கை அவள் மோவாய்க் கட்டையை நிமிர்த்திய நேரத்தில் இடக்கை அவள் இடையில் அழுத்திக் கிடந்தது. அவன் தேகம் அவன் பின்புறத்தில் நெருங்கியிருந்தது. அந்த நிலையில்கூட அவளுக்கு அதில் சந்துஷ்டியில்லை. தன்னைச் சுற்றிய மாயவலையை அறுத்து உண்மையை அறியத் துடித்தது அவள் மனம். அதை உணர்ந்த இளவரசன் அவள் கேட்குமுன்பே புன்முறுவல் காட்டி, “இனநங்கை! பாண்டி நாட்டு இனவரசனைப் பொய்யன் என்று துணிவுடன் முதல் முதலாக அழைத்தது நீ ஒருத்திதான்” என்று கூறினான்.

பின்னால் நின்று தன்னை நோக்கிக் குனிந்த இளவரசன் கண்களைச் சந்தித்த இளநங்கை ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொன்னாள், “பொய்யைப் பொய்யென்று சொல்வதற்குத் துணிவு எதற்கு? பொய் சொல்வது பாராளும் மன்னனாயிருந்தா வென்ன, பரதேசியாயிருந்தாலென்ன?” என்று.

“நான் சொன்னது பொய்யென்று உனக்கெப்படித் தெரியும்?” என்று வினவினான் இளவரசன்.

“உங்கள் வயதையும் அவள் வயதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நீங்கள் சொல்வது பொய்யென்பதைக் குருடன் கூடச் சொல்லுவானே?” என்றாள் இளநங்கை குரலில் இகழ்ச்சியைக் காட்டி.

“அந்த வயதில் எனக்குப் பெண்ணிருக்க முடியாதா?”

“முடியும் உங்களுக்கு ஐந்து அல்லது ஏழு வயதில் குழந்தை பிறந்திருக்குமானால்.”

“அதில்லாவிட்டால்?

“இத்தனை பெரிய பெண் இருக்க முடியாது.”

“நிச்சயமாக?”

“ஆம், நிச்சயமாக”

இதைக் கேட்ட இளவரசன் லேசாக நகைத்தான். “எனக்குப் பிறந்தால்தான் எனக்கு மகளாக இருக்க முடியுமா?” என்று தகைப்பினூடே கேட்கவும் செய்தான்.

இளநங்கை அவனைச் சந்தேகத்துடன் ஏறிட்டு நோக்கினாள். விஷயத்தை விளக்க அவன் இத்தனை கேள்விகளைக் கேட்டிருக்கவேண்டிய அவசியமில்லை. சட்டென்று இரண்டொரு வார்த்தையில் விளக்கக்கூடிய விஷயம்தான் அது. இருப்பினும் அவன் காலதாமதம் செய்து குறுக்கும் நெடுக்குமாகக் கேள்விகளைக் கேட்டான். அந்த அனாவசியக் கால தாமதத்தின் காரணம் இளநங்கைக்கும் புரிந்திருந்தது. புரிந்திருந்தது மட்டுமல்ல, வேண்டியுமிருந்தது. அல்லிருவரும் நின்ற நெருக்கமான நிலையில் எத்தனை நேரத்தை ஓட்ட முடியுமோ அத்தனை நேரத்தை ஓட்ட இருவருமே இஷ்டப்பட்டதால் அவர்கள் நெருக்கமும் நீண்டது. காலமும் நீண்டது. பேச்சும் நீண்டது.

ஆகவே மேலும் பேச்சைத் தொடர்ந்த இளநங்கை கேட்டாள், “வேறு யாருக்குப் பிறந்தால் உங்களுக்கு மகளாக முடியும்!” என்று.

இளவரசன் இந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சற்றுநிதானித்தான். பிறகு அவளைத் தன் இரு கைகளாலும் திருப்பித் தனக்கு எதிரில் நிறுத்திக் கொண்டான். அந்த நிலை அவள் சங்கடத்தை அதிகப் படுத்தியது. இளவரசன் மெல்லக் கேட்டான், “மூத்தவனுக்குப் பெண்ணானால் இளையவனுக்கும் அவன் பெண்ணல்லவா?” என்று.

அந்த கேள்வியைக் காதில் வாங்கியதும் அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். “அப்படியானால் இவன்.” என்று சொற்கள் பயத்துடன் உதிர்ந்தன அவள் இதழ்களிலிருந்து.

“என் அண்ணன் மகள்! பாண்டிய மன்னர் சுந்தர பாண்டியத் தேவரின் மகள்!” இந்தச் சொற்களை மிக நிதானமாகவும், மிகுந்த மரியாதையுடனும் உதிர்த்தான் வீர பாண்டியன்.

இளநங்கையின் இதயத்தில் மெள்ள மெள்ள விரிந்தது உண்மை ஒளி, அதன் விளைவாக அவள் பேசும் சக்தியைச் கூட இழந்தாள் சில விதாடிகள். பிறகு சமாளித்துக் கொண்டு, “இளவரசி…பாண்டிய நாட்டு இளவரசி..” என்று கூறி மென்று விழுங்கினாள்.

“ஆம் இளநங்கை! பாண்டிய நாட்டின் இரண்டு இளவரசிகளில் இவள் இரண்டாமவன்,” என்று விளக்கினான் வீரபாண்டியன்.

இளநங்கையின் கண்கள் அகல விரிந்தன. “பாண்டிய நாட்டு இளவரசி.. முத்தங்காடியில்… ஒரு..” மேலே, சொல்ல முடியாமல் திகைத்தாள் வியப்பால்.

“வாணிபப் பெண்ணாக இருக்கிறாள்,” என்று முடித்தான் வீரபாண்டியன், அவள் துவங்கிய வாசகத்தை.
“என்னால் இதை நம்ப முடியவில்லை,” என்றாள் இளநங்கை.

“யாராலும் நம்பமுடியாததைச் செய்வதில்தான் பாண்டிய மன்னருக்குப் பிரியம்,” என்று சுட்டிக் காட்டினான் இளவரசன்.

“இளவரசியைக் கட்டுக் காவலேதும் இன்றி வாணிபம் நடத்த அனுமதிப்பது முறையா?” இளநங்கையின் கேள்வியில் கோபமுமிருந்தது, வெறுப்பு மிருந்தது.

இளவரசன் கண்கள் அவளை நோக்கி நகைத்தன. “இளவரசனைத் துணையேதுமின்றி வேவு பார்க்கவும், முத்துத் திருட்டைக் கண்டுபிடிக்கவும் அனுப்புவது மட்டும் முறையா?” என்று வினவினான் இளவரசன்.

இளநங்கை அவனைக் கோபத்துடன் பார்த்தாள். “நீங்கள் ஆண்பிள்ளை” என்றாள் சீற்றத்துடன்.

இளவரசன் கண்களில் கனவு விரிந்தது, பாண்டிய மன்னர் நாட்டுப் பணியில் இன வேற்றுமை, பால்வேற்றுமை, பதவி வேற்றுமை எதுவும் பார்ப்பது கிடையாது இளநங்கை, நீ தெரிவித்த இதே ஆட்சேபத்தை நானும் தெரிவித்தேன் அவரிடம், அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘தம்பி! நீ செல்வது பாண்டிய நாட்டுப் பணி. உனக்குத் துணைசெய்ய இவளும் வருகிறாள். பெரும் முத்து, அதாவது பெரும் தனம், பாண்டிய நாட்டைவிட்டுப் போய்விட்டது. அதைக் கண்டுபிடிக்க முத்தங்காடியிலும் கண் வேண்டும். கொற்கையின் பிற இடங்களிலும் கண் வேண்டும். ஒரு கண் இவள், ஒரு கண் நீ. இந்தப் பணியில் நீ போனாலும் சரி, இவள் போனாலும் சரி பாதமில்லை. நாட்டு நன்மைக்குச் சாதாரண மக்கள் தான் சாகவேண்டு மென்பதில்லை. அரச குலத்தாரும் அழியலாம் தவறில்லை.’ என்றார் பாண்டியத் தேவர். அது மட்டும் சொல்ல வில்லை அவர். பாண்டிய நாடு இப்பொழுது தன்னைக் காத்துக் கொள்ளவில்லையென்றால் அது அழிந்துவிடும். அந்த அழிவைத் தடுக்க நமது குலத்தையே பலி கொடுக்கலாம் தம்பி. ஆகையால் நீயும் இவளும் செல்லுங்கள். உயிரை பற்றிக் கவலைப்படாதீர்கள். அது என்றாவது ஒருநாள் காரணமின்றிப் போய்விடும். அதற்கு முன்பு காரணத்தோடு நல்ல பணிக்குப் போவது தவறல்ல; என்றும் சொன்னார். இதற்கு நான் என்ன பதில் சொட முடியும்! இல்லை நீ அவர் முன்னிருந்தால் என்ன படி சொல்லியிருப்பாய்?” என்று வினவினான் வீரபாண்டியன்.

இளநங்கையின் கண்களில் வியப்புப் பெரிதும் விரிந்தது. அன்றுவரை சேர வீரரவியோ, கோசள சோமேசுவரனோ, சோழ ராஜேந்திரனோ உணராத பெரும் உண்மையொன்றை அவன் உணர்ந்துகொண்டாள் வீரபுத்தியும் தியாக புத்தியும் கொண்ட ஒரு மகா புருஷன் பாண்டிய நாட்டில் உதயமாகிவிட்டான் என்ற உண்மை தான் அது. அத்தகைய ஒரு பெரு வீரனின் சில குணங்கள் அவனுக்கு இளையவனிடமிருப்பது அவளுக்குச் சிறிதும் விந்தையாயில்லை. பட்சிகளின் சப்தஜாலத்தை கொண்டே தோப்பில் வீரர் நடமாடுவதை உணர்ந்து கொள்ளக்கூடிய அசகாய சூரனைத் தம்பியாகவும், பொது ஸ்தலத்தில் சாதாரணக் கடைக்காரி போல் வாணிபம் செய்யும் துணிவுள்ள மகளையும் பெற்ற சுந்தர பாண்டியர் உண்மையில் இணையற்ற மகாபுருஷனாகத்தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்தாள். மென்ள மெள்ள வேறு பல விஷயங்களும் அவளுக்கு விளங்கலாயின. உள் தட்டியறைக் கொடியில் தான் பார்த்த விலை உயர்ந்த சேலைகளுக்கும், கூடைகளில் கண்ட விலையற்ற முத்துக்களுக்கும் காரணமும் புரிந்தது, கோட்டைக் காவலன் மகளுக்கு முந்திய நாள் முழு முத்துக்கள் உள்ள மாலையை இளவரசி தனக்குக் காட்டியதற்கும் காரணம் தெரித்தது அவளுக்கு அரசர்கள் கூட வாங்க முடியாத அந்த முழு முத்துமாலை பாண்டிய மன்னரின் பொக்கிஷப் பெட்டியில் இருந்துதான் வந்திருக்க முடியுமென்பதை ஊகித்துக் கொண்ட இளநங்கை, சகலமும் விளங்க விட்டதைப் பிரதிபலித்த கண்களுடன் வீரபாண்டியனை நோக்கினாள்.

அந்தச் சமயத்தில் வீரபாண்டியன் அவளை நோக்கிக் கூறினான்: “இளதங்கை! இதுவரை பெரும் சிக்கலில் உன்னைச் சிக்கவைத்துவிட்டேன். உன்னை நான் பல நாட்களாகக் கவனித்து வருவது உனக்குத் தெரியும், காரணத்தை வீரரவியின் முன்பு தெளிவாகச் சொன்னேன். நான் உன்னைக் கண்காணித்து வந்ததையும் வீரரவியின் இருப்பிடத்தை அறிய உன்னை ஓர் ஆயுதமாக நான் உபயோகப்படுத்தியதையும் நீயும் அறிவாய். உன்னை நான் கண்காணித்தது இளவரசிக்கும் தெரியுமென்பதை அவள் பேசியதிலிருந்தே நீ புரிந்துகொண்டிருக்கலாம். ஆகவே நீதான் ஒரு முடிவு செய்ய வேண்டும்.”

இனதங்கைக்கு அவன் எதை முடிவு செய்யச் சொல் கிறான் என்பது புரியாததால், அவனைக் கேள்வி கேட்கும் பாவனையில் தனது விற்புருவங்களைச் சற்றே உயர்த்தினாள். அந்தப் புருவங்களின் எழுச்சிகூட மிக அழகாயிருந்தது அவள் முகத்துக்கு. அந்த அழகைப் பருகிய படியே வினவினான் வீரபாண்டியன், “எங்கள் பணியில் நீயும் பங்கு கொள்ள இஷ்டமா?” என்று.
இளநங்கையின் விழிகள் மகிழ்ச்சியுடன் மலர்ந்தன. இந்தப் பணியில் இன்றும், நேற்றும் என்னைக் கேட்டுத் தான் ஈடுபடுத்தினீர்களா?” என்று வினவினாள் அவள்.

“இல்லை. தேவைவிருந்ததால் உன்னைக் கேளாமலே உன்னைச் சிக்கவைத்தேன். இனியும் உன்னைச் சிக்க வைத்தால் நீ கடைசிவரை அரசியல் வலையில், இந்த முத்துக்களவு ஆராய்ச்சியில், அதனால் ஏற்படும் போர்களில் சிக்கிவிட நேரிடும். உன்னை அப்படிச் சிக்க வைக்க எனக்கு உரிமையில்லை. ஆகையால்தான் கேட்கிறேன். சொல் கோட்டைக் காவலன் மகளே! இந்த முத்து வேட்டையில், பெரும் அரசுகளுடன் மோதும் பணியில், என்னையும் பாண்டிய மன்னன் மகளையும் போல் நீயும் சிக்க இஷ்டமா! தீர யோசித்துச் சொல், இஷ்டமில்லை போல் இப்பொழுதும் கூட நீ விலகலாம்” என்றாள் வீரபாண்டியன்.

இளநங்கை ஒரு விநாடிகூட யோசிக்கவில்லை. இளவரசர், அரசர் மகள் இவர்கள் உயிரைவிடக் கோட்டைக் காவலன் மகள் உயிர் அப்படியொன்றுப் பிரமாதமல்ல” என்றாள்.

“சரி, அப்படியானால் தயாராயிரு” என்றான் வீர பாண்டியன்.

“எதற்கு?” இளநங்கை கேட்டாள்.

“நீண்டதூரப் பயணத்துக்கு; மிக்க அபாயமான பயணத்துக்கு,” என்றான் வீரபாண்டியன். அடுத்த விநாடி அவளை அணைத்து நின்ற கைகள் விலகின. இளவரன் குரல் “முத்துக்குமரி, உள்ளே வா,” என்று மெள்ள அழைக்கவும் செய்தது.

மீண்டும் திரை விலகியது. பாண்டிய மன்னன் மகள் உள்ளே நுழைந்தாள். அவள் வந்ததும் அரசகுமாரி என்றதால் தரையில் மண்டியிட்டு வணங்க முற்பட்ட இளதங்கையை அவள் மண்டியிட விடாமல் தடுத்தான் பிறகு அவளை அணைத்துக்கொண்டு இளவரசன் முன்பு நின்றாள்.

“இளநங்கைக்கும் சம்மதம்” என்றான், இளவரசன் தனது அண்ணன் மகளை நோக்கி.

பாண்டியன் மகள் இளநங்கையை மகிழ்ச்சிக் கண்களுடன் நோக்கினாள். பிறகு அவனை அணைத்த வண்ணம் தட்டியறைக்குள் அழைத்துச் சென்றாள் வினாடிகள் பல ஓடின, இருவரும் வெளியே வரவில்லை “இத்தனை நேரம் என்ன செய்கிறார்கள்?” என்று சங்கடப்பட்ட இளவரசனின் காதுகளில் உள்ளிருந்த இரு மங்கைகளும் சிரிக்கும் ஒலி விழுந்தது.

‘அபாயம் தலைக்குமேல் இருக்கும் சமயத்தில் சிரிப்பென்ன வேண்டியிருக்கிறது?” என்று எரிச்சல்பட்டுக் கொண்ட இளவரசன், அந்தப் பெண்களை அனுப்ப வேண்டிய அபாயப் பணியின் முதற்படியை உள்ளூர் வகுக்கவும் தொடங்கினான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch13 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch15 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here