Home Historical Novel Raja Muthirai Part 1 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

72
0
Raja Muthirai Part 1 Ch24 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch24 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch24 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 24 எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்

Raja Muthirai Part 1 Ch24 |Raja Muthirai Part1|TamilNovel.in

பொதியமலைக் கூட்டத்தின் பெரியமலைச் சரிவொன்தில் அமைக்கப்பட்டிருந்ததும், காடு சுற்றிலும் அடர்த்தியாயிருந்ததன் விளைவாகத் தூரப்பார்வைக்குத் தெரிந்தும் தெரியாமல் இருந்ததும், நெடுநாட்களாக யாரும் உபயோகப்படுத்தாததால் ஓரளவு பாழடைந்து காணப்பட்டதுமான அந்தக் கோட்டையின் நடுவிடுதியின் முகப்புக் கூடத்தில், தங்கள் எதிரே எழுந்து நின்றவளைக் கண்டதும் மங்கையர் இருவரும் பெருவியப்புற்று ஒருவர் கையை இன்னொருவர் பற்றிப் பிரமித்து நின்றார்களென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. சிறிது பிரமிப்புக்குப் பிறகு இளநங்கையை உதறிவிட்டு எதிரே நின்றவனை தெளிந்த பின்னும் தின்ற இடத்திலேயே நின்று விட்டாளென்றால் எத்தனை எதிர்பாராத மனிதனை அவர்கள் சந்தித்திருக்க வேண்டும்! அவர்கள் அந்தக் கோட்டையில் சந்தித்தது மிகவும் எதிர்பாராத அற்புத மனிதன்தான். பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் அவர்கள் முன்பு முறுவல் தவழும் முகத்துடன் தின்றுகொண்டிருந்தான்.

பாண்டிய மரபுக்குள்ளேயே மிகச் சிறந்த வீரன் என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டவனும், அரசாள ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே பாண்டிய அரசைப் பேரரசாக்கி, அதன் சிறப்பை உச்சிக்குக் கொண்டு சென்றவனும், சதா போர்த் தினவுள்ளவனும், அந்தப் போர்த் தினவின் விளைவாக முடுகூரிலிருந்து சிங்களத்தின் வட எல்லை வரையில் பல பேரரசர்களைப் புறமுதுகு கண்டவனும், அப்படி அடைந்த பெரு வெற்றிகளின் காரணமாக எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்’ என்று தமிழிலும் ஸமஸ்த ஜகதாதார சோமகுல திலக’ என்று வடமொழியிலும் சிறப்பு விருதுகளைப் படைத்தவனும், திருவரங்கனுக்கும், தில்லைப் பெருமானுக்கும் விமானப் பொன் வேய்ந்ததால், பொன் வேய்ந்த பெருமான்’ என்று பிரசித்தி பெற்றவனுமான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், அன்று அந்தக் காட்டுக் கோட்டையில் சர்வசாதாரணப் படைத்தலைவனாக, அந்த மங்கையர் முன்பு நின்றான். பிற்காலத்தில் பல அரசுகளை வெற்றிகொண்டு வீழ்த்திய ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அன்று அந்தக் காட்டுக் கோட்டையில், தனது அரசின் ஆரம்ப காலத்தில் பலரும் பிடித்து அடக்க முயன்ற ஒரு சிங்கம் போல் காட்சி அளித்தானேயன்றி, எம்மண்டலமுங் கொள்ளப்போகின்ற பெருமாளாகக் காட்சி அளிக்கவில்லை. ஆனால், அந்தச் சமயத்திலும் பெரும் சிங்கத்தின் கம்பீரப் பார்வை, அச்சமற்ற தன்மை இரண்டும் அவன் முகத்தில் சுடர்விட்டன.

சுந்தரபாண்டியன் நல்ல உயரத்துடன் அந்த விடுதியின் கூரையே தலையில் இடித்துவிடும் போல் நின்றிருந்தான். காட்டுக் கோட்டை விடுதிக்குள்ளே தனித்திருந்த அந்த சமயத்திலும் மார்பை மட்டும் மறைத்த சின்னஞ்சிறு இருப்புவலைப் போர் அங்கியை அணிந்துகொண்டு, எந்தச் சமயத்திலும் போருக்குத் தயாராய் இருப்பவன்போல் காட்சி அளித்தான், பாண்டிய மன்னன். அந்த அங்கியைத் தவிர, இடையிலிருந்த உடை, சர்வசாதாரணமாகப் புரவி ஏறும்போது மன்னர்கள் உடுக்கும் சல்லடம். அந்த சல்லடக் கச்சையில் செருகப்பட்டிருந்த குறுவாளின் பரிமாணத்தை அதன் உறையின் அகலத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடித்ததால், அத்தனை பெரிய வாளை எடுத்து வீசக் கடியவன் சாதாரண வீரனாய் இருக்க முடியாதென்று தென்ளெனத் தெரிந்தது. அவன் அமர்ந்திருந்த மஞ்சத்தில் பஞ்சணையில்லை, வெறும் காட்டு மரத்தால் செய்யப்பட்டிருந்த அந்த மஞ்சத்தில் ஒரு கோடியிலிருந்த இரண்டு தலையணைகளும் பாமர மக்கள் தலையணை கனைப்போல் முரட்டுத் துணிகளால் தைக்கப்பட்டிருந் தமையால், அலை பாண்டிய மன்னனுக்கும் சுகபோகங்களுக்கும் அதிக சம்பந்தமில்லை என்பதை திரூபித்தன. சுகபோகங்களுக்கும் மன்னனுக்கும் அதிக சம்பந்தமில்லா விட்டாலும் போருக்கும் அவனுக்கும் தொடர்பு மிக நெருங்கிய தென்பதை விளக்க, அந்த முகப்பு மண்டபம் பூராவும் பல்வகைப் போர்க்கலங்கள் திரம்பிக் கிடந்தன.

சுகபோகாதிகள் எதுவுமே காணாத இடத்தில், போர்க் கருவிகள் சுற்றிலும் இருந்ததால், பார்ப்பதற்குச் சுகத்திற்குப் பதில் அச்சத்தையே தந்த சூழ்திலையில் எழுந்து, நெடுமாலென நின்ற சுந்தரபாண்டியன் கண்கள் அந்த இரு மங்கையரையும் பார்த்து ஒரு வினாடி நகைத்தன. நகைத்த கண்களைப் பார்த்த நங்கையர் இருவரும் இருவகை உணர்ச்சிகளுக்கு இலக்காயினர். தந்தையைத் திடீரென்று பார்த்ததால் முத்துக்குமரிக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட வியப்பு மேலும் விரிந்ததன்றி அவன் வேறெவ்வித உணர்ச்சிக்கும் ஆளாகவில்லை. ஆனால் பெரு விழாக்களில் ஓரிரு முறையே மன்னனைப் பார்த்திருந்த இளநங்கையின் இதயத்தில் மட்டும் பற்பல எண்ணங்கள் எழுந்து உலாவின, அதிக உயரமென்று தான் கருதிய வீர பாண்டியனைவிட அதிக உயரமாக மன்னன் நிற்பதைப் பார்த்த இளநங்கை, ‘அப்பா என்ன உயரம்!’ என்று பிரமித்தாள். வீரபாண்டியனைப் போல் மன்னன் உயரமாய் இருந்தானே யொழிய மற்ற விஷயங்களில் சகோதரா இருவருக்கும் பல வேற்றுமைகள் இருந்ததையும் அவள் கவனித்தாள். சுந்தரபாண்டியன் முகமும் வீரபாண்டியன் முகத்தைப் போலவே விசாலமாய் இருந்தாலும், வீரபாண்டியன் முகத்தில் சதா காணப்பட்ட ஓர் அலட்சியம், சுந்தரபாண்டியன் முகத்தில் இல்லை என்பதையும், அதில் ஓர் ஆழ்ந்த சிந்தனை படர்ந்து கிடந்ததையும் கண்டாள். அந்த முகத்தின் வளைந்த பெரும் புருவங்களும் தீர்க்கமான தாசியும், அகன்று நின்ற பெரும் உதடுகளும் மன்னனின் மாபெரும் உறுதிக்கு அத்தாட்சியாய் இருந்ததையும், அவன் கண்கள் வீரபாண்டியன் கண்களைப் போலவே விஷமச் சிரிப்பை உதிர்த்தாலும், அதில் ஒரு சிங்கத்தின் சீறிய பார்வை, வேகம் இரண்டும் மண்டிக் கிடந்ததால், நகைத்த பார்வையும் சற்று அச்சுறுத்தும்படியாய் அமைந்திருப்பதையும் பார்த்தாள் இளநங்கை, அவன் கைகளிலும், தோள்களிலும் கால்களிலும் தெரிந்த பல காயங்கள் மன்னன் சதா போர்த் தினவுள்ளவன் என்பதைப் பறை சாற்றுகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள் அவள்.

இத்தனையிலும் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு. மன்னனது பார்வை எத்தனை அச்சுறுத்தும் பார்வையாயிருந்தாலும் சில வேளைகளில் வீரபாண்டியன் பார்வையில் விளையும் பயங்கரமும் கொடுமையும் அதில் விளையாதென்ற உண்மைதான் அது. சுந்தரபாண்டியன் காட்டில் நடுவே இருந்த அந்தப் பழைய கோட்டையில் நின்றபோதும் மாமணி மண்டபத்தில் அடிபணிய வரும் குறுநில மன்னர்களை எதிர்கொள்ள நிற்கும் மண்டலாதிபதி போலவே நின்றான். பிற்காலத்தில் பெரும் வல்லரசுகளைக் கவிழ்க்கும் தோரணை, யாரையும் கவிழ்க்காத அந்தச் சமயத்திலும் இருந்தது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியனிடம், அவன் நின்ற தோரணையில் ஆட்சி இருந்தது. அவன் எளிமையில், உடையில் எதையும் தாங்கவல்ல உறுதி இருந்தது. சூழ்நிலையில் போர் இருந்தது. பார்வையில் வேகம், அதிகாரம், பிற்காலத்தைப்பற்றிய ஏதோ ஓர் எதிர்ப்பார்ப்பு, மூன்றும் இருந்தன.

அத்தகைய எண்ணங்கள் ஓட, வியந்து நின்ற இளநங்கையையும் நோக்கித் தன் மகளையும் நோக்கிய பாண்டிய மன்னன், “முத்துக்குமரி! இளநங்கை வியக்கத் தான் காரணம் இருக்கிறது. உனக்கென்ன, நீ ஏன் அங்கேயே தின்றுவிட்டாய்?” என்று சர்வ சாதாரணமாக வினவினான்.

மன்னரின் அந்த இரண்டு மூன்று சொற்கள், இரு மங்கையரையும் ஆரம்ப அதிசயத்திலிருந்து அன்றைய உண்மை நிலைக்கு இழுக்கவே, இளநங்கையின் கையிலிருந்து தனது கையை விடுவித்துக் கொண்ட முத்துச் குமரி மெல்லத் தன் தந்தையை அணுகினாள். மகளை இருப்புவலை அங்கிமறைத்த மார்பில் அணைத்துத் தலையைத் தடவிக் கொடுத்த சுந்தர பாண்டியன், இளநங்கையை நோக்கிப் புன்முறுவல் செய்து, “வா இனநங்கை! இதோ இந்த மஞ்சத்தில் உட்கார். சீக்கிரம் உங்கள் இருவரையும் உங்கள் விடுதிக்கு அனுப்பி வைக்கிறேன்.” என்று கூறினான்.

இளநங்கை கனவில் நடப்பதுபோல் மன்னனை நோக்கி நடந்தாள். எதற்கும் அஞ்சாமல் சஞ்சரிக்கும் அவள் மனமும் கால்களும் அன்று அந்த மகாவீரன் முன்பு சஞ்சரிக்க முடியாமல் பெரிதும் திண்டாடின. உதடுகளும் பேசச் சக்தி பற்றுவிட்டன. இந்த நிலையில் மெல்ல நடந்து அரசனுக்குப் பக்கத்திலிருந்த மஞ்சத்துக்குச் சென்று, அதில் தொப்பென்று உட்கார்ந்தாள் கோட்டைக் காவலன் மகள். தான் அமர்ந்திருந்த பெருமஞ்சத்தில் மகளுடன் உட்கார்த்திருந்த சுந்தரபாண்டியன், இளநங்கையை நோக்கிச் சிரித்துக்கொண்டே கேட்டான். “நாம் மூவரும் இப்படி அக்கம் பக்கத்தில் அமர்ந்திருப்பது ஒரு தனிக் குடும்பம் அமர்ந்திருப்பது போல் இல்லையா இளநங்கை?” என்று.

இளநங்கை மன்னனின் கண்களை ஒரு வினாடிதான் சந்தித்தாள். பிறகு தலையைக் கீழே குனிந்து கொண்டாள். மன்னன் சொற்கள் மேலுக்குச் சாதாரணமாய் இருந்தாலும் அவன் பற்பல பொருள்களைப் பொதித்துப் பேசுவது போல் தோன்றியது, அவளுக்கு. ஒருவேளை வீரபாண்டியனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள உறவு, மன்னனுக்கும் தெரிந்திருக்குமோ என்று உள்ளூர சந்தேகப்பட்டாள் அவள். ‘சே சே! இருக்காது! சில நாட்களில் ஏற்பட்ட நிகழ்ச்சி, அதுவும் இரண்டே நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நெருக்கம், இதற்குள் எப்படி மன்னனுக்குத் தெரிய முடியும்?” என்று தனக்குள் கேள்வி எழுப்பிச் சமாதானமும் செய்து கொண்டாலும், மன்னனின் சிங்கக் கண்கள் சிரித்த முறை, சதா அவற்றில் துளிர் விட்டு மின்னிய ஒளி, அவளுக்குச் சமாதானத்தை அளிக்கவில்லை. மன்னன் மேற்கொண்டு கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று அறியாததால், அவள் குனிந்த தலையை திமிரவும் சக்தியற்றவளானாள்.

சக்தி மட்டும் இருந்திருந்தால், அவள் பல கேள்வி களைக் கேட்டிருப்பாள். நாங்கள் சேரநாட்டுக்குப் பயணப் பட்டது உங்களுக்கு எப்படித் தெரியும்? எப்படி எங்களை இவ்விடம் கொண்டுவந்தீர்கள்? இளவரசரின் சாம்பல் நிறப் புரவி இங்கு எப்படி வந்தது? நீங்கள் இங்கு எப்பொழுது வத்தீர்கள்? நேற்று இரவு முத்திரை மோதிரம் காட்டி என்னிடமிருந்து ஓலையைப் பெற்றது யார்? இந்திர பானு நல்லவனா, அயோக்கியனா?” என்று இப்படிப் பல கேள்விகள் அவள் உதடுகளிலிருந்து உதிர்ந்திருக்கும், ஆனால் மன்னனின் முன்னிலையில் அவள் ஏதும் பேசச் சக்தியற்ற வளானாள். அவன் இருந்த இடத்தின் சூழ்நிலையே ஓர் அச்சத்தையும், எச்சரிக்கையையும் விளைவித்தது.

இளநங்கைக்குத்தான் இந்த அச்சம் என்பது இல்லை, பெண் என்ற முறையில் தந்தையுடனே நெருங்கி உட்கார்ந் திருந்த முத்துக்குமரிக்குக்கூட அவனிடம் இருந்த தந்தை என்ற பாசத்தைவிட அரசன் என்ற பயம் அதிகமாயிருந்தது. அத்தனை வருடங்களில் எத்தனையோ முறை அவள் தந்தையுடன் ஒரே மஞ்சத்தில் அமர்ந்திருக்கிறாள். எத்தனையோ முறை கொஞ்சியிருக்கிறாள். கெஞ்சியிருக் கிறாள். வாதித்தும் இருக்கிறாள். ஆனால் அத்தனை உரை யாடலிலும் அவள் பேச்செல்லாம் முக்கால் வாசி தந்தை என்ற முறையில் அமைந்தது கிடையாது. முக்கால்வாசி, பாண்டியநாடு, மக்கள், செல்வம், சிறப்பு இவைபற்றியும், சிற்சில வார்த்தைகள் மட்டும் சுற்றத்தைப் பற்றியுமே இருந்துவந்தது அவள் அனுபவம். ஆகவே, அவனுடன் அமர்ந்தபோதெல்லாம் அரசனுடன் அமர்ந்த சுரணை அவளுக்கு இருந்ததேயொழிய, தந்தையுடன் அமர்ந்த சிந்தனை இருந்ததில்லை. அந்தக் காட்டுக் கோட்டை விடுதியிலும் அந்த நிலையே உருவாயிற்று.

அவர்கள் பயணத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளே பேசி விசாரித்த சுந்தரபாண்டியன், நாட்டு விவகாரத்துக்கு வந்தான். “முத்துக்குமரி! எப்படியும் நீங்கள் சௌக்கியமாக இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். இளநங்கையை அழைத்துக் கொண்டு வெளியே போ. அங்குள்ள காவலர் உங்கள் இருப்பிடத்தைக் காட்டுவார்கள். உணவு அருந்தி இளைப்பாறுங்கள்,” என்று கூறித் தானும் மஞ்சத்தைவிட்டு எழுந்திருந்தான்.

முத்துக்குமரி பதில் ஏதும் சொல்லாமல் எழுந்திருத்தான். பிறகு நிதானித்தான். அவள் நிதானித்ததைக் கண்ட சுந்தரபாண்டியன், “ஏன் குமரி! ஏன் தயங்குகிறாய்?” என்று வினவினான். அந்த வார்த்தைகளைச் சொன்னதும் அவன் கண்கள் பளபளத்ததைச் சற்றுத் தள்ளி நின்ற இளநங்கை கண்டாள். பெண்ணிடம் அவனுக்குப் பெரும் பாசம் என நினைத்தாள். பாசமல்ல அது என்பதைப் பிறகே உணர்த்தாள்.

முத்துக்குமரிக்கும் மன்னனுக்கும் நடந்த உரையாடலில் கடைசிப் பகுதி அவளைத் தூக்கிவாரிப் போட்டது.

“நல்லவேளை பயணம் முடிந்தது.” என்றாள் முத்து குமரி பெருமூச்சு விட்டு,

“முடியவில்லை. ஆரம்பம்,” என்றான் பாண்டிய மன்னன்.

“ஆரம்பமா!”

“ஆம்!” திட்டவட்டமாக வந்தது மன்னன் பதில்.

“அடுத்த பயணம்…?”

“சேரநாட்டுக்கு,” என்றான் பாண்டிய மன்னன்.
முத்துக்குமரி, இளநங்கை இருவருமே மன்னனை வியப்புடன் நோக்கினார்கள்.

சுந்தரபாண்டியன் கம்பீரமாக நிமிர்ந்து நின்றான் “அடுத்த வாரம் என் படைகள் சேர நாட்டை நோக்கி நகரும். சேரநாடு அழிக்கப்படும்,” என்ற அவன் சொற்கள், அந்த முகப்பு மண்டபத்தில் பெரிதாக எதிரொலி செய்தன: அவன் சிங்கக் கண்கள் பேரொளி வீசின. அவன் அன்றே எம்மண்டலமும் கொண்டருளிய பெருமானாகி விட்ட தோரணை, அவன் நின்ற நிலையில், பார்த்த பார்வையில், சொற்களின் வேகத்தில், கனவில், தெரிந்தது.

Previous articleRaja Muthirai Part 1 Ch23 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here