Home Historical Novel Raja Muthirai Part 1 Ch45 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch45 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

72
0
Raja Muthirai Part 1 Ch45 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch45 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch45 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 45 முதல் மோதல்

Raja Muthirai Part 1 Ch45 |Raja Muthirai Part1|TamilNovel.in

காட்டுக் கோட்டையிலிருந்து சேரநாட்டை நோக்கி நடந்த பாண்டியப் படையின் பிரிவொன்றின் முகப்பில் வீரபாண்டியனருகில் புரவி மீதமர்ந்து சென்ற இளநங்கையின் இதயத்தில் பிரமிப்பு, கவலை, அச்சம் ஆகிய மூன்று உணர்ச்சிகளும் எழுந்து தாண்டவமாடிக் கொண்டிருந்ததால், அவ்வப்பொழுது திரும்பி நோக்கிய வீரபாண்டியனின் ஆசைக் கண்களைக்கூட அவள் கண்கள் சந்திக்க மறுத்தன.

உபதளபதியாகிய மூன்றாம் நாளே தான் பெரும் படையை நடத்திச் செல்லவேண்டிய அவசியம் நேரிட்டதை நினைத்து நினைத்து அவள் பிரமித்துக் கொண்டிருந்ததால், பக்கத்தில் கேட்ட வீரபாண்டியனின் சாம்பல் நிறப் புரவியின் ஒரே சீரான குளம்பொலியோ பின்னே அணிவகுத்துத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வீரர்களின் புரவிகள் திட்டமாக எழுப்பிய குளம்படிச் சத்தமோ அவள் காதில் விழவில்லை. சுமார் இரண்டாயிரம் வீரர்கள், அவர்களில் பாதிப்பேர் புரவிப் படையினர், மலைப் பாதையில் தன்னையும் வீரபாண்டிய னையும் வரிசையாகத் தொடர்ந்து வருவதும், அந்த வரிசை பெரும் மலைப்பாம்பு போல் பாதை வளைவுகளில் வளைந்து வளைந்து திரும்புவதும் கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்தது அவளுக்கு. ஒருமுறை அந்தப் பெரு வளைவைத் திரும்பிப் பார்க்கவும் செய்தாள் அவள் ஆனால் அந்தக் காட்சி அவளுக்கு ஆனந்தத்தை அளித்ததா, கவலையையும் அச்சத்தையும் அளித்ததா என்பது அவளுக்கே புரியவில்லை.

இந்தப் பெரும்படை வளைவு அவளுடைய மூன்று நாள் உழைப்பால் ஏற்பட்டதென்பதை அவள் உணர்ந்தே இருந்தான். ஓலைகளில் தான் பதித்த வைர மோதிர ராஜ முத்திரையின் அடையாளமும் உத்தரவுகளுமே, அந்த வீரர்களை இரண்டே நாட்களில் காட்டுக் கோட்டையில் கூட்டிவிட்டதென்பதை அவள் அறிந்திருந்தாலும், அந்த வீரர்களுக்குத் தலைமை தாங்கி வந்த படைத்தலைவர் களெல்லாம் தனக்குத் தலை வணங்கியதை அந்தச் சமயத்தில் அவள் நினைத்துப் பார்த்தாலும், அத்தனை வணக்கத்துக்குத் தான் உரியவளா என்ற சந்தேகம் மட்டும் அந்தச் சமயத்திலும் இருந்தது இளநங்கைக்கு.

உபதளபதியான அன்றிலிருந்தே, வீரபாண்டியன் உத்தரவுப்படி அவன் ஓலைகளில் உத்தரவுகளைத் தீட்டினாள். போர்ப் பயிற்சியை இடைவிடாது பெற்றாள். படைகள் அணிவகுப்பையும் அன்றாடம் பார்த்து அவற்றைத் திருப்பும் முறைகளையும், படைகளை மோத வைக்கும் வகைகளையும் அறிந்தாள் அதுமட்டுமல்ல. அந்த ஒவ்வோர் அலுவலிலும் பெரும் தேர்ச்சியையும் அறிவையும் கூடக் காட்டினாள்.

இருப்பினும், அந்த மூன்று நாளும் அவள் பிரமிப்பிலும் அச்சத்திலுமே ஆழ்ந்திருந்தாள். காதலனாய் இருந்த வீரபாண்டியன் போர் என்ற நினைப்பு ஏற்பட்ட வினாடி முதல் வெறும் யந்திரமாக மாறிவிட்டதையும், தானொரு பெண் என்பதைக்கூட மறந்து தன்னை நடத்தியதையும் நினைத்தாள். காட்டுக் கோட்டை வெளிப் பரப்பில் படைகளைத் திருப்பும் முறைகளைப் போதித்த போதும், அணிவகுப்பின் போதும் அவன் பலமுறை தன்னைப் பலர் முன்னிலையில் அதட்டியது. கையைப் பிடித்து முரட்டுத்தனமாக இழுத்து, “இப்படிச் செய்” என்று சீறியது முதலானதை நினைத்துப் பார்த்த அவள் போர் வந்தால் அவன் மனிதனல்லவென்று முடிவு செய்தாள்.

இத்தனையிலும் அவன் போர் அலுவல்களில் காட்டிய வேகம் அவளுக்குப் பெரும் பிரமிப்பாயிருந்தது. இரவில் உச்சி வேளைக்குத் தன்னை விடுதிக்குச் செல் அனுமதித்த பின்பும் அவன் படை வீரர் இருக்குமில்லங்களுக்குச் சென்றதையும், சதா கோட்டையில் மூலை முடுக்குகளில் உலாவியதையும் பார்த்திருந்தாளாகையால், அவனுக்குப் போர் என்றால் உறக்கம் அவசியமா என்ற சந்தேகம் கூட அவளுக்கு ஏற்பட்டிருந்தது. தவிர தன் ஓலை உத்திரவுகளுக்குப் பணிந்து, கொட்டுந்தளத்திலிருந்தும், கொற்கையிலிருந்தும் மதுரையிலிருந்தும் படைகள் கால தாமதமில்லாமல் வந்து கொண்டிருந்தாலும், அத்தனை சமயங்களிலும் வீரபாண்டியன் முன்னின்று வரவேற்றதும், தன்னைக் கூப்பிட்டனுப்பி அந்தப் படைகளுக்கு இருக்க இடமளிக்க உத்தரவிட்டதும் பெருவியப்பாயிருந்தது. அவளுக்கு.

இப்படிப் படைகளை வரவேற்று, இருக்க இடமளித்து, பிறகு அணிவகுத்துப் பயிற்சி பார்த்த நேரம் போக, மீதி தாங்களிருவரும் தனித்திருந்த நேரங்களிலும் வீர பாண்டியன் படைகளைப் பிரிக்க வேண்டிய முறைகளைப் பற்றியும், தாக்க வேண்டிய இடங்களைப் பற்றியும் ஓலைகளில் படம் வரைந்து தனக்கு விளக்கிக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பார்த்த அவள் அத்தனை வீராவேசமுள்ளவனுக்கு வீரபாண்டியன் என்று பெயர் வைத்தது எததனை பொருத்தம் என்றும் எண்ணினாள்.

புதிதாக ஏற்பட்ட உபதளபதிப் பதவியால் இப்படிப் பிரமிப்பு ஏற்பட்டதன்றி, தினசரி அதிகரித்துக்கொண்டு வந்த பொறுப்பின் காரணமாக கவலையும் அச்சமும் அதிகமாகிக் கொண்டு வந்தது அவளுக்கு. அவள் கவலையையும் அச்சத்தையும் வீரபாண்டியனும் கவனித்திருந்தானாகையால் இரண்டாம் நாளில் இருவரும் தனித்து அரசு விடுதியிலிருந்த சமயத்தில் கேட்டான், “இளநங்கை! கவலை உன் மனத்தை வாட்டுகிறதாகத் தெரிகிறதே!” என்று அச்சம் என்ற சொல்லை அவன் உபயோகப்படுத்த வில்லை. அவள் மனம் புண்படும் என்ற காரணத்தால்,

அவன் கேள்விக்கு இளநங்கை உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தனது மடியில் அவன் விசிறியிருந்த இரண்டு ஓலைகளிலிருந்த கோடுகளைப் பார்த்தாள். சில விநாடிகள். பிறகு பதிலுக்குக் கேட்டாள். “குருவியின் தலையில் பனங்காயை வைத்தால் குருவி மகிழ்ச்சியுடனா இருக்கும்?” என்று.

வீரபாண்டியன் விழிகள் அவளைக் கூர்ந்து நோக்கின. “குருவிமீது யாரும் பனங்காயை வைக்க மாட்டார்கள். பனம்பழத்தையும் அதைவிடக் கனமான வஸ்துக்களையும் அனாயசமாகத் தூக்கிச் செல்லக் கூடிய ராஜாளியிடம் தான் பெரும் பொறுப்புகள் ஒப்படைக்கப் படும்” என்று அவன் உதடுகள் சொற்களை உதிர்த்தன.

அவன் சொற்களின் பொருளைப் புரிந்து கொண்ட அவள் சொன்னாள், “என் சக்தி எனக்குத் தெரியும்?” என்று .

“அவரவர் சக்தி அவரவர்க்குத் தெரிவது துர்லபம். தங்கள் சக்தியை அதிகமாக மதிப்பிடுபவர்கள் உண்டு. குறைவாக மதிப்பிடுபவர்களும் உண்டு. சரியாக மதிப்பிடுபவர்கள் மிகச் சொற்பம். பெரிய மகான்கனே இதில் தவறியிருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினான் வீர பாண்டியன்.

“மகான்கள் தவறுகிறார்களா? சுய மதிப்பீட்டிலா? இளநங்கையின் கேள்வியில் வியப்பிருந்தது.

“ஆம் இளநங்கை” என்று வீரபாண்டியன் திட்டமாகக் கூறினாள்.

“நீங்கள் சொல்வது விசித்திரமாக இருக்கிறது” என்றாள் வாணாதித்தர் மகள்.

“இலங்கைக்கு நெருப்பு வைத்த மாவீரனான அநுமானுக்கே சுயசக்திதெரியவில்லை. அதை இன்னொருவர் சொல்லித்தான் தெரிய வேண்டியிருந்தது” என்று புராண உவமை காட்டிய வீரபாண்டியன் மேலும் சொன்னான்: “இளநங்கை! படைகளை நடத்துவதற்குத் தேவையான திறமை உனக்கில்லையென்றால் நான் அந்தப் பணிக்கு உன்னைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன். போர் விஷயத்தில் என் காதல்கூட குறுக்கே நிற்காது. அதன் இன்ப ஒலிகள் கூட என் மதியை மயக்காது. ஏனென்றால் போர் ஒருநாட்டின் சக்தியை நிர்ணயிக்கிறது. அதில் தனி மனிதர் -ஆசாபாசங்களுக்கு இடமில்லையென்பதை நானறிவேன் ஆகவே போர் உடையில் இல்லாதபோதும், இருக்கும் போதும் நீ என் உபதனபதியென்பதை நினைவில் வைத்துக் கொள்” இதை மிகக் கண்டிப்புடன் சொன்னான் வீர பாண்டியன். அதே கண்டிப்புடன் நடந்து கொள்ளவும் செய்தான்.

படைகள் புறப்படும் அன்று காலை சந்தித்த போது கூட அவன் படைகளைப் பிரிக்கும் முறை பிரிந்து செல்ல வேண்டிய முறை முதலியவற்றைப் பற்றியே அவளிடம் பேசினான். அப்பொழுது சுந்தரபாண்டியனும் இருந்தான், “இளநங்கை, படையை முழுவதும் கணக்கிட்டதில் நாலாயிரம் வீரர்கள் தான் தேறுகிறார்கள். இவர்களில் இரண்டாயிரம் வீரர்களுடன் மன்னர் செல்வார்” என்றான் வீரபாண்டியன்.

இளநங்கை தலையை அசைக்க வேண்டுமென்பதற்காக அசைத்தாள். சுந்தரபாண்டியன் பதிலேதும் சொல்ல வில்லை. வீரபாண்டியன் கையிலிருந்த கோடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். அதைப்பற்றியும் இளநங்கையிடம் விளக்கினான் வீரபாண்டியன், “இந்தக் கோட்டையிலிருந்து கால்காத தூரத்தில் பாதை இரண்டாகப் பிரிகிறது. ஒன்று சேரநாட்டுத் தென்பகுதிக்குச் செல்கிறது. இன்னொன்று வடமேற்கில் சென்று கோட்டாற்றில் கலந்து சேரநாட்டு வடபகுதியில் இறங்குகிறது. இந்தப் பாதையில் நாம் செல்லுகிறோம். நமது படை முதலில் செல்லும் இரண்டு நாள் கழித்து மன்னர் கிளம்புவார்.”

“இரண்டு நாள் கழித்தா?” என்று வினவினாள் இளநங்கை.

“ஆம், நாம் கோட்டாற்றின் உற்பத்தி நிலையைப் பிடிக்க இரண்டு நாட்கள் ஆகும். அங்கிருந்து கோட்டாற்றுக் கரை ஓரமாகச் சென்று கோட்டாற்றுக் கரைக் கோட்டையை அடைய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்.” என்று சுட்டிக் காட்டினான் வீரபாண்டியன்.

“அதனால்?” ஏதும் விளங்காமல் கேட்டாள் இளநங்கை .

“நாம் கோட்டாற்றுக் கரைக்குச் செல்வதைச் சேர நாடு அறிய இரண்டு நாட்கள் பிடிக்கும். அதை நோக்கிச் சேரன் படை நகர்ந்த பிறகு இங்கிருந்து மன்னர் கிளம்பினால் மன்னர் சேரநாட்டுத் தென் எல்லைக்குள் இறங்கும் போது சேரனின் பெரும்படை கோட்டாற்றுக் கரையில், அதாவது சேரதாட்டு வடஎல்லையில் இருக்கும். மன்னர் படை தனது எல்லையில் மலைச்சரிவுக் காட்டில் காத்திருப்பது சேரனுக்குத் தெரியாது. சேரன் அங்கு படை இருப்பது தெரியாமல் வடக்கே தம்மை நோக்கி வருவான். அவன் தாமிருக்கும் இடம் வந்ததும் முதன் முதலாக அவனுடன் நாம் கை கலப்போம். இதற்கிடையில் மன்னர் சேரநாட்டின் விளிம்பைச் சூறையாடுவார்…” என்ற வீர பாண்டியன் கோரப் புன்முறுவல் கோட்டினான்.

அவன் திட்டம் இளநங்கைக்குப் புரிந்தது. முதலில் கோட்டாற்றுக் கரைக்குச் சேரனை இழுத்துப் பின்னர், அவன் நாட்டை மன்னர் சூறையாடினால், கோட்டாற்றுக் கரையில் அவனை முறியடித்த பின்னர், தலைநகர் தோக்கி மீளுவான். அப்பொழுது அவனை மன்னர் இடைமறித்துத் தாக்குவார். திட்டமெல்லாம் சரிதான். ஆனால் இந்தச் சிறு படையைக் கொண்டு கோட்டாற்றுக் கரைக் கோட்டையைப் பிடிப்பதெப்படி என்று நினைத்தாள். அவள் நினைப்பைக் கவனித்த வீரபாண்டியனின் கோர நகை அதிகமாக விரிந்தது. எப்படியென்பதை நீயே பார்க்கப் போகிறாய்” என்று அவன் அந்த நகைப்புக்கிடையே கூறினான். அத்துடன் “சரி இளநங்கை! இன்று மாலை நீ புறப்படத் தயாராயிரு” என்று கூறி அவளை அனுப்பி விட்டான். பிறகு மன்னனுடன் போர்த் திட்டத்தைப் பற்றி விவாதித்தான். இனநங்கைக்கு ஏற்பட்ட சந்தேகம் மன்னனுக்கும் ஏற்பட்டதால் அதையும் தீர்க்க வேண்டியதாயிற்று வீரபாண்டியனுக்கு. “இளநங்கை கேட்டதில் அர்த்தமிருக்கிறது தம்பி!” என்றான் மன்னன்.

“சேரப்படையை இரண்டாயிரம் வீரர்களைக் கொண்டு பிடிப்பது எப்படி என்றுதானே?” என்று வினவினான் வீரபாண்டியன்.

“ஆம் தம்பி” என்றான் மன்னன்.

“இப்பொழுது அந்தக் கோட்டையில் அதிகப் படை இருக்காது.” என்று கூறினான் வீரபாண்டியன்.

“எப்படி அத்தனை நிச்சயமாகச் சொல்கிறாய்?” என்று வினவினான் மன்னன்.

பதிலுக்கு கச்சையிலிருந்து ஓர் ஓலையை எடுத்து மன்னனிடம் நீட்டிய வீரபாண்டியன், “இப்படிப் பல ஓலைகளை வேவுக்காரர்களிடம் கொடுத்துச் சேர நாட்டில் உலாவவிட்டிருக்கிறேன்” என்றான்.

ஓலையைப் பார்த்த மன்னன் விழிகள் வியப்பால் மலர்ந்தன. “என்ன தம்பி! நான் சேரநாட்டை நோக்கிப் படையெடுக்கப் போவதைத் திட்டமாகக் குறிப்பிட்டிருக் கிறாயே?” என்றான் வியப்புக் குரல் பலமாக ஒலிக்க.
“ஆம், அண்ணா! நீங்கள் சேரநாட்டுத் தலைநகருக்குக் கிளம்பிவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே அங்கு உங்களைச் சேரன் முதலில் எதிர்பார்ப்பான். கோட்டாற்றுக் கரையில் அதிகப் படைகளை அனுப்ப மாட்டான். இரண்டு நாள் கழித்து நான் கோட்டாற்றுக் கரையை நோக்கிச் செல்லுவதை அறிந்ததும் படைகளை அங்கு அனுப்புவான். அந்தப் படைகள் வருவதற்குள் கோட்டை என் வசமிருக்கும். கோட்டையைச் சேரன் படைகள் முற்றுகையிட்டு நிற்கும். அந்தச் சமயத்தில், பலவீனப்பட்ட சேர நாட்டு முகப்பை நீங்கள் எதிர்ப்பீர்கள். எங்கு திரும்புவதென்று சேரன் படை திணறும்” என்றான் வீரபாண்டியன்.

சுந்தர பாண்டியனுக்குப் போர்த் திட்டம் புரிந்தது. “இருப்பினும் முற்றுகையிட்டிருக்கும் சேரர் பெரும் படையை எப்படிச் சமாளிப்பாய்?” என்று வினவினான்.

“அதற்கும் திட்டமிருக்கிறது அண்ணா” என்ற வீர பாண்டியன் மன்னனுக்கு அந்தத் திட்டத்தையும் விவரித்தான். அதைக் கேட்ட சுந்தரபாண்டியன் தலையை அசைத்து அதை ஆமோதித்தான். “மிகத் துணிகரமான திட்டம் தம்பி, தேவி மீனாட்சியின் அருளால் வெற்றி படைய வேண்டும்,” என்றான்.

அன்று மாலை, வீரபாண்டியன் உத்தரவுப்படி காட்டுக் கோட்டையில் இரண்டாயிரம் வீரர்கள் அணி வகுத்து நின்றார்கள். கதிரவன் சாயும் வேளையில் பூர்ண கவசமணிந்து வீரபாண்டியனும், இளநங்கையும் புரவிகளில் ஆரோகணித்துப் படை நடுவுக்குச் சென்றனர். தாரைகள் முழங்கின; முரசுகள் சப்தித்தன. தனது விடுதித் தாழ்வரையிலிருந்த ஜடாவர்மன் கையை உயர்த்தி ஆசி கூறினான். வீரபாண்டியன் புரவியும், இளநங்கையின் புரவியும் அக்கம் பக்கத்தில் நகர்ந்தன கோட்டை வாயிலை நோக்கி, அவர்களுக்கு இரண்டாகப் பிரிந்து வழிவிட்ட புரவிப்படை அவர்களுக்குப் பின்னால் மெல்லமெல்ல ஒன்று சேர்ந்தது. பிறகு ஒரே கூறாகத் தொடர்ந்தது. புரவித் தொடருக்குப் பின்னால் காலாட்படை தொடர்ந்தது.

அப்படிப் படைகளை அழைத்துச் சென்ற வீர பாண்டியன் அடுத்த இரண்டு நாட்கள் இடைவிடாது பயணம் செய்து மூன்றாம் நாள் காலையில் கோட்டாற்றின் உற்பத்தி நிலைக்கு வந்து படைகளைத் தங்க அனுமதித்தான். அன்று சற்று இளைப்பாறிக் காலைக் கடன்களை முடித்துக்கொண்டதும், “இளநங்கை! இன்று முதல் நாம் கோட்டாற்றின்“ இக்கரையோரமே சென்று கோட்டாற்றுக் கரைக் கோட்டையை அடைவோம். எனது திட்டங்கள் சரியானால், நாம் இன்னும் இரண்டு நாட்களில் சேரநாட்டுக் கோட்டையில் இருப்போம்” என்றான்.

இளநங்கை அதைச் சிறிதும் நம்பவில்லை. இரண்டாயிரம் வீரர்களைக் கொண்டு ஒரு பெரும் கோட்டையைப் பிடிப்பது சாத்தியமில்லையென்றே எண்ணினாள். தவிர, அன்று முதல் வீரபாண்டியன் பிறப்பித்த உத்தரவுகளும் பெரு விபரீதமாயிருந்தன. தான் கோட்டாற்றுக் கரைக் கோட்டையை நோக்கி வருவதைப் பகிரங்கப்படுத்த ஒற்றர்களையும் கோட்டாற்றும் பிராந்தியம் பூராவுக்கும் அனுப்பினான். இதனால் வெகுண்ட இளநங்கை, “திடீரென்று ரகசியமாகத் தாக்காமல் எதிரியை எச்சரிப்பது விவேகமா?” என்றும் கேட்டாள்.
“எதிரியைப் பொறுத்தது” என்று பதில் கூறினான் வீரபாண்டியன்.

“எதிரி….” என்று ஏதோ கேட்க முற்பட்டாள் இளநங்கை .

“கோட்டையிலிருந்து வெளியே வந்து நம்மை நதி இறங்கும் மலைச்சரிவில் சந்திப்பான்…” என்றான் வீரபாண்டியன்.

“கோட்டைக் காவலை விட்டு வெளிவர அவனுக்குப் பைத்தியமா?” என்று வினவினாள் இளநங்கை கோபத்துடன்.

வீரபாண்டியன் அவளை நோக்கிப் புன்முறுவல் செய்தான். “பொறுத்துப் பார்” என்றும் கூறினான்.

அவன் எதிர்பார்த்தது தான் சரியாயிருந்தது நான்காவது நாள் அவர்கள் கூட கோட்டாற்றுக்கரை நகரின் முகப்பை அணுகுமுன்பாகவே மலைச்சரிவில் சேரன் படை காத்திருந்தது. முதல் மோதல் அங்கேயே ஏற்பட்டது. ஆனால் எத்தனை பயங்கர மோதல் அது!

Previous articleRaja Muthirai Part 1 Ch44 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch46 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here