Home Historical Novel Raja Muthirai Part 1 Ch48 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch48 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

61
0
Raja Muthirai Part 1 Ch48 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch48 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch48 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 48 பஞ்சும் நெருப்பும்

Raja Muthirai Part 1 Ch48 | Raja Muthirai | TamilNovel.in

மஞ்சள் பூசி அப்பொழுதுதான் நீராடியிருந்ததால் மிக மங்கலமாகத் தங்க மெருகு ஏறி ஒளிவிட்ட மதிவதனத்தில் நிஜ நாணமும், பொய்க் கோபமும் துலங்கக் காட்சியளித்த அந்தப் பேரழகியின் அழகிய உடலைக் கையால் பலவந்தமாகச் சாய்த்து மஞ்சத்தில் படுக்க வைத்த பாண்டிய இளவரசன், அவளை ஒருக்கணிக்கும் வண்ணம் திருப்பி இடைச்சேலையையும் சிறிதே நெகிழ்த்தினான். அதனால் பெரிதும் சங்கடப்பட்டு நெளிந்த இளநங்கை, “உம்! உம்! இது எதற்கு?” என்று வினவினாள் சங்கடம் குரலிலும் ஒலிக்க.

“காயத்துக்கு மருந்து போட” என்று கூறிய வீர பாண்டியன் அவள் இடைச் சருமத்தில் கை வைத்துப் பரிசோதித்தான்.

ஒருக்கணித்துத் திரும்பிய இளநங்கை வேறு பக்கம் பார்த்து உள்ளூர நகைத்துக் கொண்டாள். அந்த இடத்தில் காயமேதுமில்லையென்பதையும், ஏற்கெனவே கொற்கைத் தோப்பு முகப்பில் கயவர்கள் எறிந்த குறுவாட் காயத்தின் வடு மட்டுமே அங்கிருந்ததையும் அவள் உணர்ந்திருந்த போதிலும், அதைப்பற்றி ஏதும் சொல்லவில்லை. வீரபாண்டியன் கை தனது சேலை பிரிந்த இடத்தில் இடையின்மீது அழுந்துவதையும், அவன் விரல்கள் பழைய வடுவை வருடுவதையும் உணர்ந்ததால் மேலும் உள்ளூர நகைத்துக் கொண்டு வெளிப்படையாகச் சொன்னாள்: “அது வடு; காயமல்ல” என்று.

வீரபாண்டியன் கண்கள் அந்த வடுவை ஆசையுடன் பார்த்தன. முதன்முதலாக அவள் அழகிய மேனியைத்தொடத் தனக்கு வாய்ப்பளித்த காயத்தின் வடு என்றதால் அவனுக்கு அதனிடத்தில் தனிப்பாசமும் இருந்தது. தவிர, அந்த வழவழத்த சருமத்தில் காய்ந்து போயிருந்த வடுகூட வழவழத்துத் திருவிளக்கொளியில் பார்ப்பதற்கு மிக அழகாயிருந்தது. அதைத் தன் விரல்களால் வருடிய வீரபாண்டியன் நினைப்புக் கோட்டாற்று கரையிலிருந்து பொருநை நதிக் கரைக்கும், தோப்பு விளிம்புக்கும் ஓடியது.

அன்று விண்மதியின் தண்ணொளியில் மண்ணில் கிடந்த அந்த மாமலர் இன்று பஞ்சணையில் விழுந்து கிடந்தாலும், அந்த மோகன அமைப்பில் மட்டும் எந்தவித வேறுபாடுமில்லையென்பதை அவன் இதயம் உணர்ந்தது. கண்கள் அவள் அழகிய உருவம் பூராவிலும் சஞ்சரித்தன. கோடாலி முடிச்சிட்ட குழலும், அதன் கீழே எழுந்த ஒருபுறத்துத் தோளும், தோளிலிருந்து பக்கவாட்டில் நீண்டு கிடந்த மலரினும் மென்மையான கையும், அந்தக் கையின் முடிவில் கணுக்கையையொட்டிக் கீழே குறுகியிறங்கிய இடையும் அவனைப் பெரும் சஞ்சலத்துக்கு ஆளாக்கின. கழுத்தின் சிறு பகுதியும், இடையின் ஒரு பகுதியும் கணுக்காலும் அதற்குக் கீழுள்ள பகுதியுமே சேலை மறைக்காத இடங்களென்றாலும், அவற்றைவிட சேலை மறைத்த இடங்களைப் பற்றிய ஊகம் அவனுக்குப் பெரும் இன்பக் கற்பனைகளையும் வேட்கையையும் தூண்டி விட்டது. இத்தகைய நினைப்புகளுடன் கையை இலை பக்கத்து வடுவில் வைத்துப் பிரமித்து உட்கார்ந்து விட்ட வீரபாண்டியனை, இளநங்கையின் குரல் சற்று எழுப்பி “அந்த இடத்தில் காயம் இல்லை, வடு” என்று மீண்டும் வலியுறுத்தினாள் அவள்.
“ஆமாம், ஆமாம், மறந்து விட்டேன்” என்று கூறிய அவன் அவளை மல்லாந்து படுக்கும்படி கையால் திருப்பினான்.

மஞ்சத்தில் மல்லாந்து படுத்ததால் அவள் கண்கள் அவன் கண்களுடன் கலந்தன. அவள் இதழ்களில் லேசான புன்முறுவலொன்று விரிந்து கிடந்தது. ஒரு கணமே அவனை நோக்க முடிந்தது அவளால். பிறகு பக்கவாட்டில் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

வீரனான வீரபாண்டியன் இதயத்திலும் அந்தச் சமயத்தில் ஒருவித அச்சம் சூழ்ந்துகொண்டது. அவள் மனம் தன்னிடம் லயித்திருப்பதை உணர்ந்திருந்தாலும், அவள் தனிமை தனக்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பை அளித்திருந்தாலும், கிட்டக்கிடந்த அந்த மலர் தொட்டவுடன் நன்றாக மலர்ந்துவிடக் காத்திருந்தாலும், ஏதோ விவரிக்க இயலாத பயம் அவனைக் கவ்விக் கொண்டதால், அவனும் அவள் கண்களிலிருந்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் சில விநாடிகள். இத்தனை பயத்துக்கும் காரணம் இணையற்ற இந்து சமுதாயம் வளர்த்த பெரும் பண்பாடு என்பதை அவன் மனம் எடுத்துரைத்தது. கைக்கெட்டிய கனியானாலும் கட்டுத் திட்டங்களுக்கு அடங்கியே அதைப் பறிக்க வேண்டுமென்ற நியதியை இந்து சமுதாயமும் அறக் கோட்பாடுகளும் ஏற்படுத்தியது, பெண்களுக்கும் ஆண்களுக்கும் எத்தனை சிறந்த பாதுகாப்பு என்று வீரபாண்டியன் அந்த சில வினாடிகளில் நினைத்துப் பார்த்தான். பயமற்ற தன் மனத்திலும் தன் கைப்படுவதை எதிர்பார்க்கும் அந்த ஏந்திழையின் இதயத்திலும், சமுதாயக் கட்டுப்பாடு என்ற அரண் சுற்றி நிற்பதால் விளைந்த அச்சத்தை எண்ணிப் பார்த்த வீரபாண்டியன் அந்த வேளையில் தமிழர் பண்பாட்டையும், இந்து மதச் சிறப்பையும், அது வகுத்த கட்டுப்பாடுகளில் நிலை பெற்றுள்ள கற்பின் திடத்தையும் நினைத்துப் பூரித்தான்.

அவனுடைய இத்தனை நினைப்பையும் அச்சத்தையும், மஞ்சத்தில் மல்லாந்து கிடந்த அந்த எழில் மங்கையின் எழுச்சிகளும், சுழற்சிகளும் வினாடிக்கு வினாடி சுக்குநூறாக உடைக்க முயன்று கொண்டிருந்தன. அவன் கண் முன்பே விக்கித்துக் கிடந்த அவள் பரந்த முகம், செவ்விய உதடுகள், பக்கத்தில் சாய்ந்து நாணப்பார்வை பார்த்த கண்கள், வெண் கழுத்து முதலியவை அவன் உணர்ச்சிகளை உளைத்ததால் வீரபாண்டியன் பெருமூச்சு விட்டான் பிறகு அந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட, கிண்ணத்திலிருந்த பச்சிலை எண்ணெயைச் செம்பஞ்சில் தோய்த்துப் பிழிந்தெடுத்து, அவள் கன்னத்தில் வாள் லேசாகக் கீறியிருந்த காயத்தில் தடவினான். பச்சிலைச் சாறு காயத்தில் பட்டதும் சிறிது எரியவே, “உம்…” என்று முகம் சுளித்தாள் இளநங்கை.

“இரு, இரு, அசங்காதே. கொஞ்சம் எரியத்தான் செய்யும். இருப்பினும் காயம் நாளைக்குள் ஆறிவிடும்,” என்ற வீரபாண்டியன், பஞ்சை வைத்துவிட்டுத் தன் விரலாலும் அழுத்தித் தடவிக் காயத்துக்குள்ளே எண்ணெயை ஊட்டினான்.

அப்பொழுது சற்று அதிகமாகவே எரிச்சலெடுத்தாலும் அவன் விரல் பட்டது ஏதோ பெரும் ஆறுதலாயிருந்ததால் இளநங்கை வலியைப் பொறுத்துக் கொண்டாள். பழைய மந்தகாசம் முகத்தில் மீண்டும் விரிந்தது.

அந்த மந்தகாசத்தைக் கண்ட வீரபாண்டியன் கவலை சற்றுத் தளர்ந்தது. “இப்பொழுது எரிச்சலில்லையா?” என்று வினவினான்.

“இல்லை” சங்கடத்துடன் சொன்னாள் இளநங்கை.

“அப்பொழுது எரிந்ததா?” எரிச்சலெடுக்குமென்று தெரிந்தும், வேறு உணர்ச்சிகளை அகற்றக் கேள்வி கேட்டான் வீரபாண்டியன்.

“இல்லை.”

“ஏன்?”

“பஞ்சு பட்டதால் எரிந்ததோ என்னவோ?”

“விரலால் தடவினால்…?”

“அத்தனை எரிச்சலில்லை.”

“சரி, அப்படியானால் பஞ்சு வேண்டாம்,” என்று கூறிய வீரபாண்டியன் செம்பஞ்சை எடுத்துச் சென்று சற்றுத் தூரத்தில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கின் விளிம்பில் வைத்துவிட்டுத் திரும்பியதும் மஞ்சத்துக்கு வந்து உட்கார்ந்து கொண்டு கழுத்துக் காயத்துக்கும் எண்ணெயை விரலிலேயே தோய்த்துத் தடவினான்.

அவன், தலையை நன்கு குனிந்து கழுத்தின் இரு காயங்களையும் பரிசோதித்ததால், அவன் தலை முடிக் குழல்கள் சில அவள் கண்கள் மேலும் கன்னத்திலும் விழுந்து கிடந்தன. எண்ணெயை விரல்களில் தோய்த்து எடுத்துக் கொண்டுவர அவன் தலையைத் தூக்கி மீண்டும் தாழ்த்தித் தடவ முயன்றபோது, அவன் கன்னமொன்றும் அவள் மோவாய்க் கட்டையின் மீது உராய்ந்ததால் பெருஉணர்ச்சிகள் அவளை ஊடுருவி உலுக்கிக் கொண்டிருந்தன. அவன் கழுத்துக்குள் நன்றாகக் குனிந்து எண்ணெய் தடவி எரிச்சலை ஆற்ற ஊதிய பொழுது அவன் உதடுகளே காயத்தில் படிந்து விடுமோ என்று நினைத்த அவள் இதயம் வெகு வேகமாக அடித்துக் கொண்டது.

அந்த வெண்மையில் செவேலென்று தெரிந்த கத்திக் காயங்கள் அனைத்தும் அவனுக்குப் புது சொர்க்கத்தைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தன. அவள் சற்று முன்பு தேய்த்திருந்த நீராட்டப் பொடியின் நறுமணம் வேறு கழுத்திலிருந்து கிளம்பி அவன் நாசியில் புகுந்து அவனைச் சித்திரவதை செய்தது. அந்த நிலையில் அவள் மெல்ல நெளிந்ததால் கழுத்தில் எண்ணெய் தடவிய அவன் வலக்கையின் விரலொன்று அவள் மார்பிலும் பட்டு விட்டதால் இருவர் நிலையும் உறுதியும் அடியோடு குலைந்து போகும் கதியை அடைந்தன.

அவன் உணர்ச்சிகள் பலவகையில் சிதறிக் கிடந்ததால் கழுத்துப் புண்ணுக்குப் பச்சிலை எண்ணெய் தடவிய சமயத்தில் அவன் சரிகைத் தகடி நழுவி அவள் மார்புமீது விழுந்து விட்டதைக்கூட அவன் கவனிக்கா விட்டாலும், அவள் கவனிக்கவே செய்தாள். தகடி சரிந்து விழுந்துவிட்டதால் அவன் விசாலமான மார்பும், பெரும் தோள்களும் நன்றாக வெளிப்போந்து அவன் எத்தனை பெரிய மகாவீரன் என்பதை அவளுக்கு எடுத்துக் காட்டவே, புன்முறுவல் கோட்டினாள்.
அதைக் கவனித்த வீரபாண்டியன் சட்டென்று தகடியை எடுத்துத் தனது மடியில் போட்டுக்கொண்டு, “சரி சரி, அடுத்த காயத்தை பார்ப்போம்” என்று அவள் மேலாடையை நீக்கப் போனான்.

அவள் மேலாடையை நன்றாகப் போர்த்துக் கொண்டு, “வேண்டாம், அதற்கு நானே சிகிச்சை செய்து கொள்கிறேன்,” என்றாள்.

“உன்னால் முடியாது,”

“ஏன்?”

“மார்புக் காயம் அபாயமானது.”

“எனக்கே சரியாகச் சிகிச்சை செய்யத் தெரியும்.”

“உனக்குத் தெரியாது. அதற்கு அனுபவம் வேண்டும்.”

“உங்களுக்கு அனுபவம் அதிகம் போலிருக்கிறது.”

“ஆமாம்.”

“எத்தனை பெண்களுக்கு அந்த இடத்திள் காயத்துக்குச் சிகிச்சை செய்திருக்கிறீர்கள்?” அவள் கேள்வியில் கோபமிருந்தது, கேலியும் இருந்தது.

அப்பொழுதுதான் அவள் சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்ட வீரபாண்டியன் ஒருகணம் விழித்தான். பிறகு கூறினான்: “பெண்களுக்குத்தான் சிகிச்சை செய்ய வேண்டுமென்பதில்லை.”

“பிறகு யாருக்குச் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவள்.

“பல வீரர்களுக்குச் செய்திருக்கிறேன். ஏன் சற்று முன்பு…”

“சொல்லுங்கள், உம்…?”

“என் புரவிக்கு.”

“சாம்பல் நிறப் புரவிக்கா!” இளநங்கையின் குரலில் வியப்பு ஒலித்தது.

“ஆம்.”

“அதைக் கவனிக்க வீரர்கள் இல்லையா?”

“வீரர்களிடம் அந்தப் பணியை விடுவதில்லை, நான்.”

“அப்படியானால்….. புரவியும் நானும் ஒன்றா ?”

“புரவி, மனைவி, வாள் மூன்றும் ஒன்றுதான். இந்த மூன்றையும் பிறர் தொட ராஜபுத்திரர் அனுமதிப்பதில்லை. நானும் அனுமதிக்க விரும்பவில்லை.”

“நான் இன்னும் உங்கள் மனைவியாகவில்லையே?”
“அதற்குத் தடங்கல் ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று கூறிய வீரபாண்டியன், மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல் அவள் மேலாடையை நீக்கி மார்புக் காயத்தைக் கவனித்தான். இரு விரல்களால் காயத்தை நன்றாகப் பிரித்து அதன் ஆழத்தையும் கவனித்தான். கவசத்தின் இடைவெளியில் பாய்ந்துவிட்ட வேலின் ஆழம் சற்று அதிகமாகவே இருந்தாலும், அது எலும்பு எதையும் முறிக்கவில்லை யென்பதை அறிந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்ட வீரபாண்டியன் பச்சிலை எண்ணெயை எடுத்து அதில் சொட்டவிட்டு மெல்ல மெல்ல உள்ளே இறக்கினான்.

எண்ணெய் படப்பட எரிச்சல் அதிகமாகியதால் அவள் இருமுறை, “உம்…உம்” என்று முனகினாள். எரிச்சலை அடக்க அவன் வாயால் மெல்ல மெல்ல ஊதினான். காயத்தைப் பிறகு இரு விரல்களால் இறுக்கி நிறுத்தி, கிண்ணத்தின் அடியிலிருந்த ஒரு பச்சிலைத் துண்டையும் அதன்மீது வைத்து, “இன்னும் இரண்டு வினாடிகளுக்குள் காயத்தில் இது இரும்பாகப் பிடித்துக் கொள்ளும். பிறகு எரிச்சல் பறந்து விடும்,” என்று அவளுக்கு அறுதல் வார்த்தையும் கூறினான். எரிச்சல் மெல்ல மெல்ல அடங்கியது. எரிச்சலடங்கிய பிறகு அவன் தன் கைகளைப் பஞ்சில் துடைத்துக் கொண்டான்.

திரும்பி அவளருகில் அமர்ந்த அவன் அவளை இன்பத்துடன் பார்த்தான். அவள் கண்கள் அவன் கண்களுடன் கலந்தன. “போதும்,” என்று அவள் வாய் கூறியது மெல்ல.

“எது போதும்?” என்று அவன் அவளை நோக்கி குனிந்தான்.
சற்று முன்பு அவன் குத்துவிளக்கு விளிம்பில் வைத்து விட்டு வந்த செம்பஞ்சு பக்கத்திலிருந்த தீச்சுடரில் பிடித்துக் கொண்டது. அதைக் கவனித்த அவள் உதடுகள், “பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்கக் கூடாதென்று பெரியவர்கள் தெரியாமல் சொல்லவில்லை என்றாள்.

ஆனால் மூதுரையைப் பற்றி அந்த மூர்க்கன் அந்தச் சமயத்தில் கவனிக்கவில்லை. அவனுக்கு எதுவுமே அந்தச் சமயத்தில் காதில் விழவில்லை. “கதவு திறந்திருக்கிறது” என்ற அவள் எச்சரிக்கை முணுமுணுப்பைக்கூடக் காதுகள் கேட்கத் திரணியற்றுக் கிடந்தன. காதல் செயல்படும் போது காதுகள் எப்படிச் செயல்படும்?

Previous articleRaja Muthirai Part 1 Ch47 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch49 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here