Home Historical Novel Raja Muthirai Part 1 Ch49 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch49 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

53
0
Raja Muthirai Part 1 Ch49 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch49 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch49 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 49 விரும்பத்தகாத விசேஷம்

Raja Muthirai Part 1 Ch49 | Raja Muthirai | TamilNovel.in

மறுநாள் கதிரவனின் எழுச்சியைக் குறிக்கும் காலைத் தாரைகள் ஊதப்பட்ட பின்னரே கண் விழித்துக்கொண்ட இளநங்கை, உதயகால சங்கங்களின் ஒலி தன் காதில் விழாததைக் குறித்துப் பெரும் வியப்படைந்தாள். கருக்கலிலேயே துடிப்புடன் எழுந்திருக்கும் பழக்கமுள்ள இளநங்கைக்கு அன்று தான் அடித்துப்போட்ட மாதிரி உறங்கி விட்டதை நினைக்க நினைக்க வியப்பு மட்டுமல்ல அவள் நெஞ்சத்தில் விளைந்தது, இன்பங்கலந்த வெட்க வேதனைகளும் விளைந்து கொண்டிருந்தன. முந்திய இரவின் நெகிழ்ச்சியையும் பின் விளைந்த நிகழ்ச்சியையும் எண்ணிப் பார்த்ததால் சிறிது பயங்கூட உள்ளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது அவளுக்கு. இத்தனைக்கும் முறைக்கு மீறிய எதையும் செய்யவில்லை அவள். க்ஷத்திரியர்களுக்கு அளிக்கப்பட்ட அறமுறை எதையும் மீறவில்லை அவள். குடும்பத்தின் கண்ணிலும், உலகத்தின் கண்ணிலும், தமிழ்ப் பெருஞ் சமுதாயத்தின் கண்ணிலும் கண்ணியமெனக் கருதப்படாத எதையும் செய்யவில்லை அவள். காந்தருவம் அனுமதிக்கப்பட்ட விதி; அதை அனுஷ்டிப்பதில் களங்கமேதுமில்லை அவளுக்கு. இத்தனை சமூக, சரித்திர, இலக்கிய அறவழிச் சான்றுகள் அவள் நடத்தைக்கு அனுகூலமாயிருந்துங்கூட, தான் செய்யத்தகாத எதையோ செய்துவிட்டது போன்ற அச்சமொன்று அவள் இதயத்தை ஊடுருவி நின்றது!

அந்த அச்சத்தின் காரணமாகவோ என்னவோ அவள் மீண்டும் பஞ்சணையில் புரண்டு படுத்துத் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அப்படிப் புதைத்த முகத்தை மீண்டும் ஒரு புறம் திருப்பி, சற்று எட்ட இருந்த மற்றொரு மஞ்சத்தைக் கவனித்தாள். அதன் மீது வீரபாண்டியன் சரிகைத் தகடி அலங்கோலமாக விழுந்து கிடந்ததைக் கண்டதும் மீண்டும் நாணம் அவளுக்கு இதயத்தைக் கவ்விக் கொண்டது. ‘சரினை தகடியைக் கண்டு நான் எதற்கு அஞ்சவேண்டும்? அது உயிரற்ற உடைதானே?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். ஆனால் தான் சம்பந்தப்பட்டவரையில் அந்த உடை உயிரற்றதல்லவென்பதும், வீரபாண்டியன் உடல் சம்பந்தத்தினாலேயே அது தனக்கு நாணமூட்டும் திறனைப் பெற்றிருக்கிறதென்பதும் உள்ளூரத் தெரிந்தது அவளுக்கு. காதல் என்பது பித்து என அகத்தியர் அருவிக்கருகில் தான் முத்துக்குமரிக்குச் சொன்னது எத்தனை சரியென்பதை மஞ்சத்தில் படுத்திருந்த அந்தச் சமயத்தில் அவள் நன்றாகப் புரிந்துகொண்டாள். “அது பித்து இல்லையானால் சடப் பொருள்களிடம் எனக்கு ஏன் அச்சமேற்படுகிறது?” என்று தன்னைக் கேட்டுக்கொண்டு அந்தச் சரிகைத் தகடியை நோக்கினாள்.

தகடியில் ஓடியிருந்த சரிகை காலை வெளிச்சத்தில் மின்னி அவளை நோக்கி நகைத்துக் கொண்டிருந்தது. சற்று அப்பாலிருந்த குத்துவிளக்கு அணைந்து கிடந்தது. அதன் விளிம்பிலிருந்த செம்பஞ்சு கருகிக் கிடந்தது. சென்ற இரவில் பஞ்சையும் நெருப்பையும் அக்கம் பக்கத்தில் வைப்பதைப் பற்றித் தான் சொன்னது நினைவுக்கு வந்தது அவளுக்கு. பழமொழி சரியென்றாலும் அந்த உவமை தனக்குப் பொருந்தாது என்பதை உணர்ந்த இளநங்கை இளநகை பூத்தாள். “செம்பஞ்சு அந்தச் சுடர்பட்டுக் கருகி விட்டது; ஆனல் நான் கருகவில்லை . ஏதோ புத்துணர்வு ஒன்று என்னை ஊடுருவிச் செல்கிறது. ஒரு மன நிறைவு இருக்கிறதே?” என்று தன் உணர்ச்சிகளை அலசி இன்பமும் அடைந்தாள். பிறகு எழுந்திருக்க முயன்று ஒருக்கணித்துக் கையை மடித்துக் கன்னத்தில் ஊன்றிக்கொண்டு தன் உடல் நிலையைக் கவனித்தாள். உடல் துவண்டு தனக்கு அசதி இருந்தாலும் அந்த அசதியே இன்பமாயிருப்பதை நினைத்துப் பார்த்தாள். கலைந்து தாறுமாறாகக் கிடந்த ஆடைகூட அழகாயிருப்பதாகத் தோன்றியது அவள் கண்களுக்கு. ஆணின் ஸ்பரிசத்தில் எத்தனை பிரமிப்புகள் இருக்கின்றன என்று எண்ணி வியந்தாள் அவள்.

எத்தனை நேரம் வேண்டுமானாலும் இப்படியே தன்னை அலசிக்கொள்ளும் மனோபாவம்தான் அன்றைய காலையில் இருந்தது அவளுக்கு. பஞ்சணையைவிட்டு எழுந்திராமலே புரளும் புத்திதான் இருந்தது கொற்கைக் கோட்டைக்காவலன் மகளுக்கு. ஆனால் அதற்கு இடங் கொடாத குரலொன்று வெளியிலிருந்து கேட்டது. மூடியிருந்த கதவுக்கு வெளியிலிருந்து, “தேவி! தேவி!” என்று இருமுறை வந்த பெண் குரலைக் கேட்டு, “யாரது?” என்று வினவினாள் இளநங்கை படுத்தபடியே.

“தங்கள் பணிமகள்,” என்று வந்தது பதில்.

“சரி, உள்ளே வா” என்ற இளநங்கை உள்ளே வந்த பெண்ணைப் பார்த்து வியந்தாள். வந்தவள் மலைநாட்டுப் பெண் மட்டுமல்ல, மலைச்சாதி பெண்ணுங்கூட என்பதை உணர்ந்தாள். அதுமட்டுமல்ல. அவள் அழகும் கண்ணைப் பறிப்பதாயிருந்தது. அந்தப் பெண்ணின் கண்களில் இருந்த ஒளிவீச்சு அதுவரை தான் யார் கண்ணிலும் பாராத ஒளி வீச்சாயிருந்ததைக் கண்டாள் இளநங்கை. அவள் உருண்ட முகத்திலும் குவிந்த இதழ்களிலும் எந்நேரமும் ஒரு புன்முறுவல் விளையாடிக் கொண்டிருந்ததால், அவள் சற்று விஷமக்காரியாயிருப்பாளென்பதையும் புரிந்து கொண்ட இளநங்கை கேட்டாள், “யார் உன்னை அனுப்பியது ?” என்று .

“படைத் தலைவர்” என்றாள் அப்பெண் பணிவுடன்.

“படைத் தலைவரை உனக்கெப்படித் தெரியும்?”

“அறிமுகம் செய்து வைத்தார்கள்.”

“யார்?”

“இந்தக் கோட்டைத் தலைவராக இருந்தவர். விஜய வர்மன் வீட்டுப் பணிப்பெண் நான். வெள்ளி முளைத்தவுடனேயே விஜயவர்மன் என்னை எழுப்பி வந்து இப்பொழுதுள்ள கோட்டைத்தலைவரிடம் ஒப்படைத்தார்.”

“அவராக ஒப்படைத்தாரா? இவர்…உம்…படைத் தலைவராகக் கேட்டாரா?”

“படைத் தலைவர்தான் கேட்டாராம், அவசரமாகப் பணிப்பெண் வேண்டுமென்று.”

இளநங்கை சிறிதுநேரம் பதிலேதும் சொல்லவில்லை. ‘பணிப்பெண்ணை எனக்கு நியமிக்க இவருக்கென்ன அவசரம்?” என்று தன்னைக் கேட்டுக்கொண்டாள். “இரவு நிகழ்ச்சி… அதனால்….பயம் போலிருக்கிறது…” என்று மனத் துக்குள் சொல்லிச் சிரித்தும் கொண்டாள்.

இப்படிச் சுயநினைவில் திளைத்த இளநங்கையை அந்தப் பெண்ணே விளித்தாள், “அம்மா!” என்று.

“என்ன?” கனவிலிருந்து கேட்பது போல் கேட்ட இளநங்கை மறுபடியும் மஞ்சத்தில் சுருண்டு படுத்தாள்.

“நீராட ஏற்பாடு செய்துவிட்டேன்” என்று கூறினாள் அந்தப் பெண்.

“ஏற்பாடு செய்ய நான் சொன்னேனா?” என்று அர்த்தமில்லாமல் வெகுண்டு கேட்டாள் இளநங்கை.

அவள் வெகுண்டதற்கு அந்தப் பெண் மசியவில்லை. “நீங்கள் சொல்லவில்லை. படைத்தலைவர் சொன்னார்” என்று கூறித் தைரியமாக இளநங்கையை உற்றும் நோக்கினாள் அந்தப் பெண்.

“நான் நீராட மறுத்தால்?” என்று கூறினாள் இளநங்கை.

“மறுப்பதற்கில்லை” பணிப்பெண்ணின் பதில் உறுதியுடன் வந்தது.

“ஏன் மறுப்பதற்கில்லை? யார் என்னைக் கட்டாயப் படுத்த முடியும்?” என்றாள் மீண்டும் இளநங்கை பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து.
“படைத் தலைவர்” திட்டவட்டமாக வந்தது பணிப்பெண்ணின் குரல்.

“நீராட முடியாது என்று படைத்தலைவரிடம் போய்ச் சொல். போ.”

“நீங்கள் நீராடிச் சல்லடம் தரித்து, இன்னும் இரண்டு நாழிகைக்குள் படைத்தலைவரைக் கோட்டையின் மேற்கு வாசலில் சந்திக்கவேண்டும். இது அவர் உத்தரவு.”

“படைத்தலைவர் என்ற முறையில் உத்தரவிட்டிருக் கிறாரா?”

“ஆம். தவறக்கூடாது என்றும் சொல்லிப் போனார்.”

இளநங்கை அந்தப் பெண்ணை மீண்டும் உற்று நோக்கினாள். அவள் இதழ்களில் விளையாடிய புன்சிரிப்பைக் கண்டு தான் கொண்டது அச்சமா, கோபமா என்பது அவளுக்கே விளங்கவில்லை. மலைச்சாதியின் செழுமையும், அலட்சியமும் அந்தப் பெண் உடல் பூராவும் இருந்ததைக் கவனித்த இளநங்கை, “சரி, உன் பெயர் என்ன?” என்று வினவினாள்.

“குறிஞ்சி.”

“என்ன?”

“குறிஞ்சி.”

“பெயர் விசித்திரமாயிருக்கிறதே?”

“எங்கள் சாதியில் இது சாதாரணப் பெயர்.”

“நீ மலைச்சாதியா?”

“ஆம்.”

“இந்த மலைப்பகுதி பூராவும் உனக்குத் தெரியுமா?”

“ஒவ்வோர் அணுவும் தெரியும்.”

அந்தப் பெண்ணின் அந்த அறிவிப்புப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது இளநங்கைக்கு, அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு மலைப்பகுதியைப் பார்வையிடலாம் என்ற எண்ணம் அவளுக்குப் பெரும் குதூகலத்தை அளித்தது. “சரி, குறிஞ்சி! நீராட வருகிறேன்.” என்று சொல்லி எழுந்து அவளைப் பின்பற்றிச் சென்றாள் வாணாதித்தன் மகள்.

நீராட்ட அறையைப் பார்த்ததுமே அந்த்ப் பெண்ணின் நுண்ணிய அறிவைப் புரிந்து கொண்டாள் இளநங்கை. முந்திய இரவில் வீரன் செய்து வைத்த ஏற்பாட்டைப் பார்த்தே பிரமித்த இளநங்கை குறிஞ்சி செய்திருந்த ஏற்பாட்டைப் பார்த்ததும் பிரமிப்பு ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று. அறை வெகு சுத்தமாயிருந்தது. அவள் உடுத்தி நீராடச் சிற்றாடையொன்று கதவில் தொங்கிக்கொண்டிருந்தது. வாசனைத் திரவியங்கள் பல அளவுடன் எடுத்துத் தந்தக் கிண்ணங்களில் வைக்கப் பட்டிருந்தன. இரண்டு அண்டாக்களிலிருந்த நீரும் லேசாக நறுமணம் வீசிக் கொண்டிருந்ததால், அந்த அண்டாக்களில் ஏற்கெனவே வாசனை தெளிக்கப்பட்டிருந்ததை உணர்ந்தாள் இளநங்கை. இவற்றைத் தவிர மஞ்சளும் தகளியும் குங்குமமும் கூடத் தனிப்பட வைக்கப்பட்டு இருந்தன. இவற்றையெல்லாம் கண்ட இளநங்கை இன்பப் புன்முறுவலொன்றைப் பணிப்பெண்ணை நோக்கி வீசினாள். பிறகு கதவை மூடிக் கொண்டு நீராட முனைந்தாள்.

அவள் நீராடி முடிவதற்குள் படுக்கையறையில் பஞ்சணையைச் சரி செய்து, சரிகைத் தகடியைச் சரிவர மடித்து வைத்து, இளநங்கை அணிய வேண்டிய போர்ச் சல்லடத்தையும் எடுத்து வைத்திருந்தாள் பணிப்பெண். போருடை அணிந்து முடித்ததும் தட்டில் பால், பழம் ஏந்தி வந்த குறிஞ்சி அவளுக்குக் காலை உணவளித்து, “இனி நீங்கள் புறப்படலாம், வாயிலில் உங்கள் புரவி தயாராயிருக்கிறது,” என்று கூறினாள்.

ஒவ்வொரு காரியத்தையும் தான் சொல்லாமலேயே முன்கூட்டியே ஊகித்துச் செய்யும் குறிஞ்சிமீது வியப்பு விழிகளை நாட்டிவிட்டு, பாலை மட்டும் அருந்தி வெளியே சென்ற இளநங்கை புரவியிலேறியதும் இரு வீரர். தாரைகளை ஊதினார்கள். மற்றும் இருவர் அவள் புரவி நகர்ந்ததும் கூடத் தொடர்ந்தார்கள்.

புரவியில் ஆரோகணித்து வீதிகளில் சென்ற இளநங்கை மிதமிஞ்சிய பிரமிப்புடன் நகரத்தைப் பார்த்துக் கொண்டு சென்றாள். நகரெங்கணும் வீரர்கள் காவல் பலமாயிருந்ததே தவிர மற்றபடி சாதாரண வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மக்கள் பொதுவாக இல்லங்களுக்குள் இருந்தாலும் அவசியமான அலுவல்களுக்குச் சென்று கொண்டு தான் இருந்தார்கள். ஒரே இரவில் அந்தக் கோட்டையை அத்தனை தூரம் எப்படி அடிமைப்படுத்த வீரபாண்டியனால் முடிந்ததென்பதைச் சிந்தித்துப் பார்த்துப் பிரமித்தாள். கோட்டையைப் பிடித்த பிறகு ஒரு ஜாமமும், காலையில் சுமார் ஒரு ஜாமமுமே இருந்திருந்தும் அதற்குள் ஒரு பெருங் கோட்டையை அடக்கிக் கட்டுத் திட்டம் செய்துவிட்ட வீரபாண்டியன், தமிழகத்தின் விடிவெள்ளியென்றே நினைத்தாள் இளநங்கை.

இப்படிச் சிந்தனையிலாழ்ந்த வண்ணம் மேலை வாசலுக்குச் சென்ற இளநங்கையைச் சந்தித்த வீரபாண்டியன், “உபதளபதி! வாயில்கள் நான்கிலும் காவல் வைத்தாகிவிட்டது. புரவிப் படையை நான்கு கூறுகளாகப் பிரித்து மூன்று பிரிவுகளைக் கிழக்கு, மேற்கு, தெற்கு வாயில்களுக்குப் பங்கிட்டு நிறுத்தியிருக்கிறேன், நான்காவது பிரிவு வீதிகளைக் காவல் செய்யவும் நமது உத்தரவுகளுக்குக் காத்து நிற்கவும் ஏற்பாடு செய்திருக்கிறேன். காலாட் படையில் ஒரு பகுதி கோட்டையின் கிழக்கு வாயில் மதில்களிலும், தெற்கு வாயில் மதில்களிலும் நிற்க வைக்கப்பட்டிருக்கிறது. கோட்டை வெளிப்புறத்தைக் கண்காணிக்க. சில வீரர்களை மலைமேடுகளிலும் நிற்க வைத்திருக்கிறேன், நீ பகலில் ஜாமத்துக்கொரு முறையும் இரவில் முதல் ஜாம முடிவிலும் காவல் சோதனை செய்,” என்று கூறினான்.

அவன் குரலில் கண்டிப்பு இருந்தது. இரவிலிருந்த கனிவு முகத்தில் சிறிதும் இல்லை. இரவை அவன் அடியோடு மறந்து விட்டானோ என்றுகூட அவள் அதிசயித்தாள். கேவலம் உபதளபதியாக மட்டும் அவன் அன்று காலை தன்னை நடத்தியது பெரும் எரிச்சலையும் கோபத்தையும் அவளுக்களித்தாலும் அதை வெளிக்குக் காட்டாமல், “படைத் தலைவர் உத்தரவு” என்று மட்டும் கூறித் தலை வணங்கினாள்.
அதற்குமேல் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காத வீரபாண்டியன் இரு வீரர்களைத் தன்னுடன் வரும்படி சைகை செய்து தெற்கு வாயிலை நோக்கிச் சென்றான், இளநங்கை அவன் செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றாள். எப்பொழுதும் அவள் காதுகளுக்கு இன்பந்தரும் சாம்பல் நிறப் புரவியின் சீரான குளம்பொலிகூட அந்த நிமிடத்தில் அவளுக்கு நாராசமாயிருந்தது. வீரபாண்டியனின் கண்டிப்பாலும், பாராமுகத்தாலும் சீறி எழுந்த உள்ளத்தால், நெருப்பு வீசும் கண்களுடன் அவளும் நகரத்தையும் மற்ற வாயில்களையும் சுற்றி வந்தாள். வீரபாண்டியனின் வீரர்கள் மதிலைச் சுற்றி எங்குமிருந்ததைக் கண்டு அந்தக் கோட்டை வீரபாண்டியனின் இரும்பு வளையத்தில் சிக்கி விட்டதை உணர்ந்து கொண்டாள். அந்தக் கோட்டையை யார் பிடிப்பதானாலும் மிகுந்த நாசத்துக்குப் பிறகே பிடிக்க முடியுமென்பதைச் சந்தேகமற அறிந்து கொண்டதால் உச்சி வேளைக்கு ஓரளவு திருப்தியுடனேயே தான் தங்கியிருந்த மாளிகைக்கு திரும்பினாள் இளநங்கை.

அப்பொழுதும் வீரபாண்டியன் வரவில்லை. படைத் தலைவர் வரவுக்குக் காத்திருக்க வேண்டாமென்று செய்தி வந்திருப்பதாகவும் அவள் உணவருந்தலாமென்றும் பணிப்பெண் குறிஞ்சி அவளுக்குத் தெரிவித்தாள்.

இளநங்கை அதற்குப் பதிலேதும் சொல்லாமல் போர்ச் சல்லடத்தைக் கழற்றிவிட்டு உணவருந்த உட்கார்ந்தாள். அன்று காலை பூராவும் கோட்டையைச் சுற்றியதால் அகோரப் பசி அவளுக்கு எடுத்தாலும் சிறிதளவே உணவருந்தினாள் அவள். பிறகு பஞ்சணையில் படுத்து ஏதேதோ யோசனையில் ஆழ்ந்தாள் இளநங்கை.
அன்று பகல் பூராவும் மாளிகை திரும்பாத வி பாண்டியன், இரவு ஏறிய பிறகே திரும்பினால் நேராகத் தனது அறைக்குச் சென்று போருடை களைந்து சாதாரணப் பட்டாடை அணிந்து மஞ்சத்தில் மல்லாந்துவிட்டான். அவன் மாளிகைக்குள் நுழைந்து உப்பரிகைப்படி ஏறிவந்ததை, திறந்திருந்த தனது அறைக் கதவு மூலமே பார்த்த இளநங்கை, அவன் நேராகப் பக்கத்தறைக்குச் சென்று விட்டதைக் கண்டாள். எப்படியும் வேறு உடை அணிந்து வருவானென்று நீண்ட நேரம் எதிர் பார்த்தும் பயனில்லாது போகவே பஞ்சணையைவிட்டு எழுந்திருந்த இளநங்கை, அவனது அறையை நாடிச் சென்றாள்.

அங்கு மஞ்சத்தில் மல்லாந்து சிந்தனையில் திளைத்திருந்த அந்த வீரனைக் கண்டதும் ஏதோ எதிர்பாராச் செய்தி வந்திருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தாள் அவள். ஆகவே கேட்டாள், “ஏதாவது விசேஷமுண்டா!” என்று.

வீரபாண்டியன் அவளை ஏறெடுத்து நோக்கினான். பிறகு சொன்னான். “உண்டு. ஆனால் விரும்பத்தகாத விசேஷம்” என்று.

அதை எடுத்துச் சொன்ன வீரபாண்டியன் குரலில் கவலை மிதமிஞ்சிக் கிடந்தது.

Previous articleRaja Muthirai Part 1 Ch48 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch50 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here