Home Historical Novel Raja Muthirai Part 1 Ch50 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch50 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

56
0
Raja Muthirai Part 1 Ch50 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch50 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch50 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 50 நெருக்கடி

Raja Muthirai Part 1 Ch50 | Raja Muthirai | TamilNovel.in

முந்திய நாளிரவில் தனது மஞ்சத்தின் பஞ்சணையில் பட்டாடையுடன் மணமகனாகத் துலங்கிக் கள்ளத்தனம் செய்த துள்ளுமுகம் நீங்கி, துன்ப முகம் கொண்ட படைத் தலைவனாக அடுத்த இரவிலேயே விளங்கிய வீர பாண்டியனைக் கண்டதுமே ஏதோ பெருங்கவலை, அவன் உள்ளத்தைப் பீடித்திருக்கிறதென்பதைப் புரிந்துகொண்ட இளநங்கையும் கவலையின் வலையில் சிக்கினாள். சென்ற இரவில் உலகை மறந்து தன்னைப் பஞ்சணையில் அணைத்த அந்த மகாவீரன் அன்று தானிருந்த அறைமீது கண்ணைக் கூடத் திருப்பாமல் பக்கத்து அறைக்குச் சென்று விட்டதைப் பார்த்ததுமே, விரும்பத்தகாதது ஏதோ நடந்திருக்க வேண்டுமென்று அவள் தீர்மானித்துக் கொணடாளாகையால், தன்னறை விட்டு அவனறைக்கு வந்ததும் அவனிருந்த நிலை அவளுக்கு வியப்பைச் சிறிதளவும் விளைவிக்கவில்லை. பட்டாடை அணிந்து மஞ்சத்தில் மல்லாந்து கைகளை வளைவு சிறிதுமின்றி நீட்டிக்கொண்டிருந்த நிலையும், அவன் தலையின் சுருண்ட குழலிலொரு கொத்து முகத்தின் குறுக்கே விழுந்திருந்த மாதிரியும், புருவங்கள் சற்றே குறுகியிருந்த கோரணையும் பெரும் துன்பம் அவன் இதயத்தைச் சூழ்ந்திருக்கிறதென் பதற்குச் சான்று கூறின. சற்று எட்டத் தொங்கிய சேரநாட்டுச் சரவிளக்குச் சுடரொளி வேறு அவன் முகத்தில் நன்றாக விழுந்து அவன் கவலையை நன்றாகப் பளிச்சிடச் செய்ததன்றி, அவன் பெரும் உருவத்தை மஞ்சத்துடன் இன்னும் பெரிதாகச் சுவரில் படும்படி எழுப்பியிருந்ததால், அந்த அறையே பெரும் கோரசொரூப மெடுத்து விட்டதுபோல் தோன்றியது கொற்கைக் கோட்டைத் தலைவன் மகளுக்கு. அத்தகைய சூழ்நிலையில் அவள் கேட்ட கேள்விக்கு, “உண்டு, விரும்பத்தகாத விசேஷம் உண்டு,” என்று அவன் பதிலிறுத்ததும், தன் ஊகம் எத்தனை சரியென்பதை நினைத்த அவள் அவனை மேற்கொண்டு போர் சம்பந்தமான கேள்வி ஏதும் கேட்காமல், “உணவருந்தி விட்டீர்களா?” என்று மட்டும் வினவினாள்.

“இல்லை,” ஒற்றைச் சொல்லில் வரண்ட குரலில் வந்தது அவன் பதில்.

அடுத்து அவள் கேள்வி ஏதும் கேட்காமல் வெளியே சென்று தனது பணிமகளை அழைத்துக் கனிவர்க்கமும் சிறிது தேனும் பாலும் கொண்டுவரப் பணித்து, அவை வரும்வரையில் வெளியிலேயே காத்திருந்து, பணிமகள் கொண்டுவந்த வெள்ளித் தட்டையும், பாலுடனிருந்த தங்கக் குவளையையும் ஏந்திக்கொண்டு மீண்டும் அவனறைக்குள் வந்தாள். சற்று எட்ட இருந்த சிறு மஞ்சமொன்றில் தட்டையும் குவளையையும் வைத்து அறைக் கதவைச் சாத்தவும் செய்தாள். தட்டுடன் சற்று அவனருகில் வந்து கனியொன்றைத் தேனில் தோய்த்து அவனிடம் நீட்டினாள். அப்பொழுதும் அவன் அவளை வெறித்துப் பார்த்தானேயொழிய கையை நீட்டவில்லை.

“கனி” என்றாள் அவள். அவன் அதை அறியாதது போல.

“தெரிகிறது,” என்றான் அவன்.

“அருந்துங்கள்.”

“வேண்டாம்.”

“தேனில் தோய்த்திருக்கிறேன். மலைத்தேன்.”

“அதைவிடச் சிறந்த தேனைக்கூட ரசிக்கும் நிலையில் நான் இல்லை.”

“மலைத்தேனைவிடச் சிறந்த தேனிருக்கிறதா?”

“இருக்கிறது.”

“எங்கே?”

“இதோ,” அவன் அவளைத் தன்னருகில் முரட்டுத் தனமாக இழுத்தான். அந்த வேகத்தில் தட்டிலிருந்த பால் குவளை நடுங்கியது, அவள் உணர்ச்சியால் நடுங்கியது போல்.

அத்தனை வேதனையிலும் ஆண்மகன் குணம் போகாததைக் கண்ட அவள் புன்முறுவல் கொண்டாள். “பால் சிந்திவிடும்,” என்று எச்சரிக்கவும் செய்தாள்.

அவன் அதை லட்சியம் செய்யவில்லை. தட்டை அவள் கையிலிருந்து பிடுங்கப் போனான். “முடியாது, இதை அருந்தினால்தான்…” என்று இழுத்தாள். தன் கையிலிருந்தேன் தோய்த்தக் கனியைக் காட்டி.

“அருந்தினால்தான்…?” என்று கேட்டான் அவன் விஷமத்துடன் அவள் உடல் ஸ்பரிசத்தால் சிறிது கவலை நீங்கியதால்.
“மேற்கொண்டு….” அவளும் வாசகத்தைப் பூர்த்தி செய்யாமல் விட்டாள்.

அவன் மனக்கவலை பெரிதும் அகன்றதை முகம் காட்டியது. அதில் ஆவலும், வெறியும் நிரம்பி நின்றன. “மேற்கொண்டு…மேற்கொண்டு…என்ன?” என்று வினவினான் வீரபாண்டியன் துடிப்புடன்.

“பேசலாம்,” என்று கூறி அவள் புன்முறுவல் பூத்தாள். போர்க்களத்தில் வீரபாண்டியனுக்கு எத்தனை வலுவுண்டோ அதைவிட அந்த அந்தரங்கக் களத்தில் தனது வலு அதிகமென்பதை அந்த யுவதி நன்றாக அறிந்திருந்தாள். அவன் கவலையை என்ன, நிதானத்தை கூடத் தன்னால் அடியோடு தகர்த்துவிட முடியுமென்பதை உணர்ந்திருந்தாளாதலால் பேச்சில் முதலில் சூசகம் காட்டிப் பின்பு ஏமாற்றி விளையாடினாள் அவள்.

அவளுடைய ஈரொரு சொற்களாலும், கண்ணில் வெளிப்போந்த ஒளியாலும், உதடுகளில் துலங்கிய நாணப் புன்முறுவலாலும், மனக்கவலை போய் இன்பக் கிளர்ச்சி எய்திய அந்த மகாவீரன், ‘மகா’வையும் இழந்து ‘வீரத்தையும் இழந்து குழந்தை போலானான். ஆகவே அவள் கையினால் ஊட்டிய கனியை மென்று விழுங்கினான். தங்கக் குவளையை அவன் வாயில் வைத்த போது பாலையும் அரைகுறையாகப் பருகினான். பிறகு அவள் தட்டையும், குவளையையும் அறையோரத்தில் வைத்துவிட்டு வந்ததும் மஞ்சத்திலிருந்து எழுந்து அவள் இடையைத் தன்னிரு கைகளாலும் சுற்றிப் பிடித்துப் பஞ்சணைக்கு இழுத்துச் சென்றான். அவள் பஞ்சணை முகப்பிலேயே உட்கார்ந்து கொண்டு, “நீங்கள் தான் களைத்திருக்கிறீர்களே! படுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, அவனை மெல்லப் படுக்கவும் செய்தாள்.

அவள் கையின் மென்மைப் பிடிப்பின் உத்தரவை மீற முடியாது அந்த இளங்காளை பஞ்சணையில் மல்லாந்து படுத்தான். அவன் கையொன்று அப்பொழுதும் அவள் மடியில் விழுந்து கிடந்தது. அதை அதிகமாக சஞ்சரிக்க வொட்டாமல் தன் கையொன்றால் பற்றிக்கொண்ட இளநங்கை மற்றொரு கையால் அவன் முகக் குழல்களைப் பின்புறம் தள்ளிவிட்டாள். “நீங்கள் இத்தனை களைப் படைந்து நான் பார்த்ததில்லை.” என்றாள் இளநங்கை.

“ஆம்,” என்றான் அவன். அவன் நினைப்பெல்லாம் அப்பொழுது கவலையைப் பற்றியதாயில்லை. அவள் விரித்த மோகன வலையைப் பற்றியதாயிருந்தது.

“போருக்குப் பின்புகூட இத்தனை களைப்படைந்து பார்க்கவில்லை.” என்று அவள் மேலும் கூறினாள்.

“போரில் ஏற்பட்டது வெற்றி. வெற்றி அளிப்பது மகிழ்ச்சி. மகிழ்ச்சி சோர்வை உண்டாக்குவதில்லை.” என்றான் வீரபாண்டியன்.

“உண்மை.” என்றாள் இளநங்கை.

“கவலை மகிழ்ச்சியைப் போன்றதல்ல. நேர் விரோத மானது. கவலை மனிதனை வாட்டுகிறது. உடல் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே களைப்பைத் தருகிறது.”
“நீங்கள் சாதாரணமாகக் கவலைப்படுகிற வழக்க மில்லையே?”

“இல்லை.”

“பெரிய பெரிய ஆபத்தான சமயங்களில்கூட உங்களிடம் கவலையை நான் கண்டதில்லையே கொற்கையில் சேரன் மாளிகையில் அத்தனை வீரர் எதிர்த்த போதுகூட…” என்ற அவள் பேச்சை இடையில் வெட்டிய வீரபாண்டியன் “அப்பொழுது எனக்கு மட்டுந்தான் ஆபத்து. அதற்கு நான் எப்பொழுதும் அஞ்சியதில்லை என்று கூறினான்.

“வேறு எதற்கு அஞ்சுகிறீர்கள்?” என்று வினவினான் இளநங்கை வியப்புடன்.

“நான் உலகத்தில் அஞ்சுவது ஒன்றே ஒன்றுக்கு…” என்று சற்று பேச்சை நிறுத்தினான்.

“அது?” இடை புகுந்தாள் இளநங்கை.

“தோல்வி” என்றான் வீரபாண்டியன்.

“தோல்வியா?” இளநங்கையின் குரலில் வியப்பு இருந்தது.

“ஆம், இளநங்கை, அது ஒன்றுக்குத்தான் பயப்படு கிறேன், இதுவரை நான் தோல்வியைக் கண்டதில் வெற்றியே அடைந்திருக்கிறேன். இப்பொழுது தோல்வி என் கணமுன் தோன்றுகிறது” என்று துன்பத்துடன் கூறின! அவன்.
இளநங்கை சில விநாடிகள் மௌனம் சாதித்தாள். “தோல்வி கண்முன் தோன்றுகிறதா? உங்கள் போர்த் திட்டத்தில் ஏதாவது பலவீனம்….?” என்று இழுத்தாள் அவள்.

“ஏதுமில்லை,” என்றான், வீரபாண்டியன் திட்டமாக.

“அப்படியானால் தோல்வி தோன்றக் காரணம்?” என்று வினவினாள் இளநங்கை.

“வீரபாண்டியன் அவளை உற்று நோக்கிவிட்டுக் கேட்டான், “இளநங்கை! காட்டுக் கோட்டையில் நான் வகுத்த போர்த்திட்டம் நினைவிருக்கிறதா உனக்கு?” என்று.

“இருக்கிறது.” என்றாள் இளநங்கை.

“அதன்படி சேரநாட்டில் வடஎல்லையில் நானும் தென் எல்லையில் மன்னரும் இருப்போம்…”

“ஆம்.”

“அதுவரை சரியாக நடந்திருக்கிறது. நாம் இங்கே கோட்டாற்றுக் கரையில் இருக்கிறோம். மன்னன் பொதிய மலை தாண்டி சேர நாட்டு முகப்பில் மலைக்காட்டில் இருக்கிறார்.”

“சரி,”

“சேரன் படைகளைக் கோட்டாற்றுக் கரைக்கு அழைத்து வரும்படி சிங்கணனுக்குக் கூறியிருக்கிறோம்.”

“ஆம்.”

“அதன்படி அவனும் நடந்து கொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு நாட்களில் சேரன் படை நம்மை முற்றுகையிடும்.”

“இரண்டு நாட்களுக்குள்ளா?” இளநங்கையின் கேள்வியில் கவலை துளிர்த்தது.

“அதனால் பாதகமில்லை. இந்தக் கோட்டை அந்த முற்றுகையைத் தாங்கும். தவிர நமது ஆரம்பத் திட்டமும் அதுதான். இங்கு சேரன்படை முற்றுகையிடும்போது அதிகப் பாதுகாப்பற்ற சேரநாட்டுத் தென்பகுதிகளை முன்னர் சூறையாடுவார். இங்கு நம்மால் முறியடிக்கப் பட்டுப் பின்வாங்கும் சேரர் படையை நோக்கி அவர் திரும்புவார். நமது படைகளுக்கிடையில் அகப்பட்டுக் கொள்ளும் சேரர் படையை நாம் முறியடிப்போம். இது நான் நமது திட்டம்” என்ற வீரபாண்டியன் இளநங்கையை நோக்கிப் புரிகிறதா என்று கேட்பதுபோல் புருவங்களை உயர்த்தினர்ன்.

“ஆம். அதுதான் நமது திட்டம்” என்றாள் இளநங்கை.

வீரபாண்டியன் மேலும் கூறினான். “திட்டத்தில் எந்தப் பலவீனமுமில்லை, ஆனால் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க மறந்துவிட்டேன். அதைச் சிங்கணன் கவனித்து விட்டான்” என்று, இதைச் சொன்ன அவன் குரலில் கவலை மீண்டும் ஒலித்தது.
“எதை நீங்கள் மறந்து விட்டீர்கள்? எதை அவன் கவனித்து விட்டான்?” என்று வினவினாள் இளநங்கை ஆவலும், கவலையும் கலந்து குரலில் ஒலிக்க.

“கடலொன்றிருப்பதை” இதைச் சொன்ன வீர பாண்டியன் குரலில் சற்றுக் கோபமும் இருந்தது.

“கடலா?”

“ஆம், கோட்டாற்றுக் கரையிலிருந்து கடல் அதில் தூரமில்லை.”

“அதனாலென்ன?”

“அதனாலென்னவா?” என்று வீரபாண்டியன் அவளை நோக்கினான். அவளுக்கு மெல்ல உண்பை புரிந்தது. இருப்பினும் அவன் வாயால் வரட்டுமென்று “ஆம், அதனாலென்ன?” என்று வினவினாள் இரண்டாம் முறை.

வீரபாண்டியனின் முகம் சிந்தனையில் சில விநாடிகள் ஆழ்ந்தன. பிறகு அவன் சொற்கள் திட்டமாக வெளிவந்தன. “நான் பாண்டியப் படையை இரண்டாகப் பிரித்து வடக்கிலும் தெற்கிலும் இருத்தி இடையே சேரப் படையைப் புகவிட்டு இறுக்கி நொறுக்கிவிடத் திட்டமிட்டேன். ஆனால் சிங்கணன் தனது படைடை மூன்றாகப் பிரித்துவிட்டான். கோட்டாற்றுக்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் அவனது தரைப்படை பாதி தூரத்தில் இரண்டாகப் பிரிந்து ஒரு பாதி தெற்கு நோக்கி வருகிறது. நானும் மன்னரும் கிட்டத்தட்ட ஏககாலத்தில் சேரர் பெரும் படையால் எதிர்க்கப்படுவோம். அது மட்டுமல்ல; சேரர் படையின் மற்றொரு பிரிவு கடல் வழியாக வந்து கொண்டு இருக்கிறது. அது கடற்கரையில் இறங்கி இங்கு வந்து கிழக்குப் புறத்தில் இக்கோட்டையைத் தாக்கும். மேற்குப்புறத்தில் மற்றொரு படை தாக்கும் சிங்கணத் தண்டநாயகன் மகா வீரன். சிறந்த அறிவாளி.” என்று கூறிய வீரபாண்டியன் குரலில் பாராட்டுதல் நிரம்பிக் கிடந்தது.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று வினவினாள் இளநங்கை.

“நான் இரு வேல்களுக்கிடையில் சேரன் படையை நிறுத்தத் திட்டமிட்டேன். அவன் மூன்று வேல்களுக்கிடையில் என்னை நிறுத்திவிட்டான். இந்த நிலையில் இந்தக் கோட்டையும், நாமும் தப்புவது கடினம்,” என்று கூறிய வீரபாண்டியன் வதனத்தை மீண்டும் துன்பரேகை ஆக்ரமித்துக் கொண்டது.

இளநங்கைக்கும் நிலைமை புரிந்தது. மிக இக்கட்டான கட்டத்தில் வீரபாண்டியன் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த இளநங்கை பரிதாபக் கண்களுடன் அவனை நோக்கினாள். அவள் கை அவன் கையுடன் இணைந்து விரல்கள் பின்னி விளையாடின. அவள் கை ஏதோ பெரும் ஆறுதலைத் தருவதாகத் தோன்றியது அவனுக்கு. போரின் துன்ப நெருக்கடி மறைந்து மற்றோர் இன்ப நெருக்கடி உருவெடுத்தது.

Previous articleRaja Muthirai Part 1 Ch49 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch51 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here