Home Historical Novel Raja Muthirai Part 1 Ch51 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch51 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

64
0
Raja Muthirai Part 1 Ch51 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch51 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch51 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 51 இன்பத்தைத் தொடர்ந்த துன்பம்

Raja Muthirai Part 1 Ch51 | Raja Muthirai | TamilNovel.in

இரவின் அந்தகாரத்தை,அந்த அறை சம்பந்தப்பட்ட மட்டில் அங்கிருந்த குத்துவிளக்கின் சுடரொளி மெல்லக் கிழித்ததுபோலவே, வீரபாண்டியன் இதயத்தில் பொங்கி யெழுந்த துன்பத்தின் கடின இருட்டை இளநங்கையின் மையிட்ட விழிகள் வெளியிட்ட காதல் மின்னொளியும் லேசாகக் கிழித்துவிடவே, பாண்டியர் படைத்தலைவனிடமிருந்து ஆசுவாசப் பெருமூச்சொன்று பல வினாடிகள் கழித்து வெளிவந்தது. அத்தகைய ஆசுவாசத்திற்குப் பின்புகூட அவன் துன்பச்சுமை முழுதும் விலகாததால் அவன் கண்கள் அவளை வெறித்துப் பார்த்த வண்ணமே இருந்ததன்றி, இடையைத் தழுவி நின்ற இடது கையும் மரத்து நின்றுவிட்டது போல் உணர்ச்சியற்றே கிடந்தது.

அவன் வெறித்த கண்களுடன் தன் அழகிய கண்களை நீண்ட நேரம் கலக்கவிட்ட இளநங்கை, அவன் வலது கையையும் தன் கையால் சிறிது பற்றிக்கொண்டாள். அப்படிப் பற்றிக் கிடந்த கையில் அவள் விரல்கள் புரண்டதாலோ, விரலோடு விரல் பின்னி நெறித்ததாலோ, அவன் கையும் சிறிது சுரணை பெற்றதாகத் தெரிந்தது. அவளுடைய கண்கள் மூலமாக அவளது உயிரின் ஒரு பகுதியே தன் உடலுக்குள் பாய்வதுபோன்ற பிரமை வீரபாண்டியனுக்கு ஏற்படவே, அவன் கண்கள் மெல்ல மெல்லச் சுரனை பெற்று அவள் முகத்தில் பாய்ந்ததைக் கண்ட இளநங்கை உள்ளூரப் பெரு மகிழ்ச்சி கொண்டாள். உணர்ச்சி மிகுதியால் சற்றே நெளிந்தாள்.

வீரபாண்டியன் துன்ப நெருக்கடியைப் போக்க, அந்தக் கட்டழகி கையாண்ட காமக்கணைகள் அவனை மட்டுமின்றி அவளையும் இன்ப நெருக்கடிக்கு இழுக்கவே, ‘எய்தவர்கள் மீதே திருப்பும் பாணங்கள் உண்டு எனப் புராணங்கள் கூறுவதில் ஓரளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது,’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் இளநங்கை.

அவன் மல்லாந்து கிடந்த தோரணையில் மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த தனது சரீரத்தின் மீது அவன் கால் கிடந்தது கூட எத்தனை வேதனையையும் மன எழுச்சியையும் தனக்கு அளிக்கிறது என்று எண்ணிய இளநங்கை ஓரளவு கலங்கவும் செய்தாள். ஆனால் அச்சத்தால் கலங்கினாளா அல்லது இச்சையால் கலங்கினாளா என்று அவளுக்கே திட்டமாகத் தெரியவில்லை. ஏதும் புரியாத நிலை அது. எவரையும் குழப்பும் நிலை அது. அந்தக் காதல் நிலையில் துன்பமும் இன்பமும் சமபாகம் கொள்கின்றன. இன்பம் கிட்டும்வரை துன்பம் தான் அந்த நிலையில் உண்டு. உணர்ச்சிகளின் வேகம், எதிர்பார்த்தது பூர்த்தியாகாததால் ஏற்படும் வேட்கைஇவை உடலைத் துடிக்கச் செய்கின்றன. இதயத்தைக் கலக்கவும் செய்கின்றன. ஆனால் இந்தத் துன்பப் பூர்வ நடிகை இல்லையேல், இன்ப நுகர்ச்சியிலும் பூர்த்தி இருப்பதில்லை. ஒரு நாள் பூர்த்தியாவதற்கு இரவு பாதி பகல் பாதி எப்படித் தேவையாக இருக்கிறதோ, அப்படி மனப்பூர்த்திக்கும் துன்பமும் இன்பமும் சரிபாதி தேவையாகத்தானிருக்கிறது. அந்தத் தேவையின் ஆரம்ப நிஸ்திதியிலிருந்த அந்த இரு காதலரும் பேச்சிழந்து கிடந்தார்கள். செயலைக்கூட ஓரளவு இழந்தே கிடந்தார்கள். ஆனால் உணர்ச்சிகள் அலை அலையாக ஓடிக் கொண்டிருந்தன அவ்விருவர் உடலிலும்.
உணர்ச்சிப் பெருக்கால் மெல்ல மெல்ல உந்தப்பட்ட வீரபாண்டியன் கைகள் மெல்ல அவள் இடையைச் சுற்றிக் கொண்டன.

சரேலென எழுந்து அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்தாள். ஆனால் அவன் இரும்புக் கைகள் அவளை நகர விடவில்லை. குத்துவிளக்குச் சுடரொளியில் அந்த ஆடவன் முகத்தில் பெரு வெறி ஒளிவிட்டதைக் கண்டாள் அவள். அந்த வெறியில் அவன் உதடுகள் அசைந்தன. “ஏ எழுந்திருக்கிறாய்?” என்று அவன் உதடுகளிலிருந்து உக்கிரமாகச் சொற்களும் வெளிவந்தன.

அவள் அவனைப் பார்க்கச் சக்தியற்றவளானாள். முந்திய நாளிரவின் நினைவு அவள் அச்சத்தை அதிகப் படுத்தியது. “கதவு” என்று மட்டும் முணுமுணுத்தாள்.

“கதவுக்கென்ன?” மிகக் கடினமாக வெளிவந்தது கேள்வி.

“தாழிடவில்லை,” என்று முணுமுணுத்து, பஞ்சணை மீது பார்வையைத் திருப்பினாள் இளநங்கை.

“தாழிடாவிட்டாலென்ன?” என்று மீண்டும் முரட்டுத் தனமாகக் கேட்டான் வீரபாண்டியன்.

“குறிஞ்சி!”

“குறிஞ்சியா?”

“அவள்தான் பணிப்பெண்,”

“ஆமாம். அவளுக்கென்ன?”

“என்னறையில் இருக்கிறாள்.”

இதைச் சொன்ன இளநங்கை, மேற்கொண்டு ஏதும் சொல்ல வேண்டாமென்ற காரணத்தாலோ என்னவோ மௌனம் சாதித்தாள்.

“சரி போய்த் தாழிட்டுவிட்டு வா” என்று உத்தரவைப் போல வெளிவந்தன வீரபாண்டியன் சொற்கள்.

அவளுக்கு அனுமதியளிப்பது போல் இடையிலிருந்து அவன் கைகளும் ஒரு முறை இடையை நெருங்கப் பிடித்து அகன்று பஞ்சணையில் விழுந்தன.

பதிலேதும் சொல்லும் நிலையிலோ அவன் சொற்களை மீறி நடக்கும் துணிவிலோ இல்லை இளநங்கை. இடையைப் பிடித்துவிட்ட மூர்க்கத்தனத்தில் தாழிட்டுத் திரும்பி வரக் கட்டளையிருப்பதைக் கவனித்தாள் அவள். அந்தக் கட்டளையை மறுத்தாலென்ன என்று அவள் மனம் ஒரு வினாடிதான் சிந்தித்தது. மெல்ல எழுந்து கதவை நோக்கி நடந்து கதவை நெருங்கி தாழைத் தொட்ட போது கூட அந்தச் சிந்தனை இருந்தது அவள் சித்தத்தில். ‘இப்படியே கதவைத் திறந்து கொண்டு நான் வெளியே போய் விடுவதை யார் தடுக்க முடியும்?’ என்று நினைத்தாள் அவள்.

என்ன காரணமோ அவள் வெளியே போகவில்லை. கதவைச் சிறிது திறக்கவும் இல்லை. தாழைக் கையில் தொட்டுக்கொண்டு திரும்பிப் பஞ்சணையை நோக்கினாள். வெறியும் ஆவலும் நிரம்பிய கழுகுக்கண்கள் குத்துவிளக்குச் சுடரொளியில் பஞ்சணையிலிருந்து பளிச்சிட்டன. சாதாரணமாக எதிரிகளுக்கு அச்சமளித்த அந்தப் பார்வை அவளுக்கும் அச்சத்தை அளித்தது. ஆனால் அது எதிரிகள் அச்சத்தைப் போன்றதல்லவென்பதையும் நேர்மாறான விவரிக்க இயலாத தேவையான அச்சம் என்பதையும் மட்டும் அவள் உணர்ந்தாள். அத்தனை வெறி பிடித்த பார்வையிலும் ஏதோ ஓர் ஏக்கமும். எதிர்பார்ப்பும், இருந்ததை அவள் உணர்ந்தாள். ஆகவே, மெல்லக் கதவைத் தாழிட்டுத் திரும்பிப் பஞ்சணையை நோக்கிச் சென்றாள். பஞ்சணை முகப்பில் உட்கார்ந்து கொண்டு விளக்கின் திரியை உள்ளே இழுப்பதற்காகத் தனது இடது கையை குத்துவிளக்கை நோக்கிக் கொண்டு சென்றாள்.

அவன் அவள் கையைப் பிடித்திழுத்து, “வேண்டாம்” என்றான்.

“ஏன்?” மெல்லக் கேட்டாள் அவள்.

“விளக்கு எரியட்டும்,” என்றான் வீரபாண்டியன்.

“எதற்காம்?” சொல்லவொண்ணா நாணம் மனத்தை சூழ்ந்து கொண்டதால் கேட்டாள் அவள்.

“உன்னை நான் பார்க்கவேண்டும்,” என்று முணுமுணுத்தான் அவன்.

“நான் என்ன புதிதா?” என்று அவள் கேள் குழைந்து வந்தது.

“ஆம்,”

“நேற்றுதான்…”

“ஆம்.”

“அப்படியானால்…”

“இளநங்கை, நீ நேற்றும் புதிது, இன்றும் புதிது. நாளைக்கும் புதிது. நானிருக்கும் வரை தினம் தினம் நீ புதிதுதான்; எனக்கு. உன்னை என்றும் முழுதும் நான் புரிந்துகொள்ள முடியாது. நித்தம் நித்தம் நீ புத்தம் புதிய கோலம் எடுக்கிறாய்.” என்றான் வீரபாண்டியன்.

அந்தக் கோலம் மெல்ல மெல்ல மங்கியது. அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்ட அவள் இடது கை அவன் உத்தரவையும் மீறித் திரியை இழுத்தது. விளக்கைத் தான் அவள் அணைக்க முடிந்தது. அவன் ஆசையை அணைக்க முடியவில்லை. ஆசை தேடிய விளக்கத்தையும் அணைக்க முடியவில்லை.

சாளரத்தின் வெளியே தூரத்தே கவிந்த வானத்திலிருந்த விண்மீன்கள் அந்தக் காதலர்களின். கருத்துப் பூர்த்திக்குச் சான்று கூறின. கண் சிமிட்டி நகைக்கவும் செய்தன. நீண்ட நேரத்திற்குப் பிற சாளரத்தின் மூலம் கண்ணை ஓட்டிய அந்த இளங்காளை பக்கத்தில் கிடந்த இளநங்கையின் கையைப் பற்றிக் கொண்டு சொன்னான்: “இளநங்கை, பயப்படாதே” என்று.

“எதற்கு?” என்று முணுமுணுத்தாள் அவள்.

“எதற்கும் தான்,” என்று உறுதி கூறினான்.

“எதற்கும் தானென்றால்!” மீண்டும் முணுமுணுத்தாள் அவள்.

“உலகத்தில் எதுவும் ரகசியமில்லை, இளநங்கை,”

“உம்?”

அப்படித்தான் சாத்திரங்கள் சொல்லுகின்றன.”

“எந்தச் சாத்திரமோ?”

“எல்லாச் சாத்திரங்களும்தான். மனிதன் ரகசியமாக எதையும் செய்யமுடியாது. எல்லாவற்றுக்கும் சாட்சிய மிருக்கிறது.”

“யார் சாட்சியோ?”

“பன்னிரண்டு சாட்சிகள். ‘ஆதித்ய சந்த்ரா வனிலோ னலச்ச’ என்றொரு வடமொழி சுலோகம் இருக்கிறது.”

“அது என்ன சொல்கிறது.”
“மனிதன் எந்தக் காரியத்தையும் ரகசியமாகச் செய்ய முடியாது. சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, ஆகாயம், பூமி, நீர், இருதயம், யமன், இரவு, பகல், உதயாஸ்தமன மாகிய சந்தியா காலங்கள், தர்மம் ஆகிய பன்னிரண்டு சாட்சிகள் சதா மனிதன் நடத்தையைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகிறது அந்தச் சுலோகம்.”

அவள் சிறிது நேரம் மௌனமாயிருந்தாள். “மனிதன் இந்தச் சாட்சிகளுக்குப் பயப்படுவதாகத் தெரியவில்லை .”

“ஏன் அப்படிச் சொல்கிறாய் இளநங்கை?”

“பயப்பட்டால் பல காரியங்களில் காலா கால மில்லாமல் ஈடுபடமாட்டான்,” இதைச் சொன்ன அவள் குரலில் ஏளனமிருந்தது.

வீரபாண்டியன் சிறிது நேரம் மௌனம் சாதித்தான். “காலா காலம் என்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்தது.”

“இப்பொழுது என்ன சந்தர்ப்பம் வந்துவிட்டது நமக்கு?”

“போர்.”

“போரா?”

“ஆம். அதுவும் நெருக்கடியான நிலை, நீயோ நானோ என்றும் உயிர் நீத்துவிடக் கூடிய நிலை.”

இதற்குமேல் அவள் பதிலேதும் சொல்லவில்லை. இருப்பினும் அவள் நெஞ்சத்தில் மட்டும் விவரிக்க இயலாத பயம் ஒன்று இருந்து கொண்டிருந்தது. அசதியால் கண்ணை முடிய பின்பும் உறக்கத்தில்கூட ஏதோ ஒரு பயம் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

அந்தப் பயம் மறுநாள் காலை எழுந்து அவள் மங்கள ஸ்நானம், செய்த பின்புகூடத் தெளியவில்லை. அவளை அணைத்து வீரபாண்டியன் விடைபெற்ற சமயத்தில் கூட விவரிக்க இயலாத அந்தப் பயம் இருந்துகொண்டிருந்தது அவள் இதயததில்.

இன்பப் பூர்த்திக்குப் பின்பு ஏனிந்தப் பயம் என்று அவள் பலமுறை தன்னைக் கேட்டுக் கொண்டாள். அன்று முழுதும் அவளுக்கு அக்கேள்விக்குப் பதில் கிடைக்க வில்லை. அன்றிரவில்தான் கிடைத்தது. கிடைத்தபோது பதில் மிக விபரீதமாயிருந்தது. அன்றிரவு இரண்டாம் ஜாம ஆரம்பத்தில்தான் அவள் மீண்டும் வீரபாண்டியனைக் கண்டாள். கண்ட கண்கள் கலங்கின. இதயம் கனத்தது. அவனை நாங்கு வீரர்கள் தூக்கி வந்தார்கள். உடல் பூராவும் ரத்தத்தால் நனைந்திருந்தது. தலையில் போட்டிருந்த கட்டிலிருந்து அப்பொழுதும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

பூர்ண மூர்ச்சையிலிருந்தான் வீரபாண்டியன். அந்தக் கோலத்தைப் பார்த்த இளநங்கை திக்பிரமை பிடித்துச் சில வினாடிகள் நின்றாள். முந்திய நாளிரவின் இன்பத்தைப் பெரும் துன்பம் பிந்திய நாளிரவில் தொடருமென்பதை அவள் சொப்பனத்தில் கூட நினைக்காததால், அவள் இதயம் வெடித்துவிடும் நிலையை அடைந்தது. உணர்ச்சிகள் கொந்தளித்தெழுந்து சுழன்று அவள் புத்தியைக் குழப்பின. பேரதிர்ச்சி அவளை ஆட் கொள்ளவே நின்ற இடத்தில் ஆடினாள். பிறகு இரண்டடி நடந்து சென்று இரு வீரர்களால் தாங்கப்பட்டிருந்த பாண்டிய இளவரசனை உற்று நோக்கினாள். மெல்ல மெல்ல அவன் உருவம் அவள் கண்களிலிருந்து மறைவதாகத் தோன்றியது அவளுக்கு. அடுத்த வினாடி அவள் சுரணையிழந்து அவன் உடலின்மீது தொப்பென விழுந்தாள்.

எத்தனை நேரம் அவள் அந்த நிலையில் இருந்திருந்தாளோ அவளுக்கே தெரியாது. ஆனால், கண் விழித்த போது அவள் மீண்டும் தன்னறைப் பஞ்சணையில் கிடப்பதை உணர்ந்தாள். தன்னை நோக்கிப் பணிப்பெண் குறிஞ்சி கவலை தோய்ந்த முகத்துடன் குனிந்து நிற்பதையும் கண்ட இளநங்கை மெல்லப் பேச முற்பட்டாலும், குரலில் சிறிதும் வலுவில்லாதிருப்பதை அறிந்து அத்தனை பலவீனம் தனக்கு ஏற்பட்டதை எண்ணி வியக்கவும் செய்தாள். ஆனால் வீரபாண்டியனைப்பற்றிய கவலை அவளுக்கு அதிகமாகவே “குறிஞ்சி” என்று மெல்ல அழைத்தாள்.

“அம்மா!” குறிஞ்சியின் பதில் மிக மெல்லிய குரலில் அன்புடன் வெளிவந்தது.

“அவர்….” என்று ஏதோ சொல்ல முயன்று தயங்கினாள்.

“ஆமம்மா,” என்றாள் குறிஞ்சி அவள் உள்ள எண்ணத்தைப் புரிந்து கொண்டதால் திட்டமாக ஏதும் சொல்லாமல்.

“கண் விழித்துவிட்டாரா?” இளநங்கையின் கேள்வி இதயத் துன்பத்தில் தோய்ந்து வந்தது.

“இல்லையம்மா.”

“விடிந்து விட்டதல்லவா குறிஞ்சி?”

“விடிந்து ஒரு நாழிகைக்கு மேலாகிறது?”

“இன்னுமா கண் விழிக்கவில்லை அவர்?”

“ஆமம்மா.”

“காயம் ரொம்பப் பலமா குறிஞ்சி?”

“பலமென்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.”

தன்னைப் பஞ்சணையில் அழுத்திவைத்திருந்த அசதியை உதறிக்கொண்டு எழுந்திருந்தாள் இளநங்கை. பஞ்சணையை விட்டு இறங்கி நடக்கவும் முற்பட்டாள்.

“அம்மா!” என்று குறிஞ்சியின் குரல் அவளைத் தடுத்தது.

“ஏன் குறிஞ்சி?” என்று வினவினாள் கொற்கைக் கோட்டைக் காவலன் மகள்.

“அவரை நீங்கள் பார்க்கமுடியாது.” என்றாள் பணிபெண்.

“ஏன்?”
“மருத்துவர்கள் உத்தரவு.”

“அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை,” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தறைக்குச் சென்றாள் இளநங்கை.

அங்கு தன்னைத் தடுக்க முற்பட்ட காவலவை எரித்து விடுபவள்போல் பார்த்து ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள். பஞ்சணையில் சுரணையின்றிக் கிடந்த இளவரசனைக் கண்டதும் அவள் கண்களில் நீர் திரண்டது மெல்லப் பஞ்சணை அருகில் சென்றதும் படைத் தலைவன் பக்கத்திலிருந்த மருத்துவர் கையைக் காட்டி அவளைத் தேக்கினார்.

மருத்துவர் மீது உஷ்ணம் மிகுந்த பார்வைனை வீசினாள் இளநங்கை. மருத்துவர் அதை லட்சியம் செய்ய வில்லை. வெறுப்புடன் அவளை நோக்கினார். “பிராணன் போகும் போதாவது மனிதன் அமைதியுடன் விடப்பட வேண்டும்.” என்ற அவர் குரலிலும் வெறுப்பு மண்டி கிடந்தது.

Previous articleRaja Muthirai Part 1 Ch50 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch52 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here