Home Historical Novel Raja Muthirai Part 1 Ch52 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch52 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

58
0
Raja Muthirai Part 1 Ch52 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch52 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch52 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 52 மரண வாயில்

Raja Muthirai Part 1 Ch52 | Raja Muthirai | TamilNovel.in

மருத்துவர் சொற்களைக் கேட்ட இளநங்கையின் இதயம் வெடித்துவிடும் நிலைக்கு வந்ததன்றி அவள் கண்களிலிருந்தும் நீர் பொல பொலவென்று உதிர்ந்தது. அவள் அழகிய மார்பகமும் விம்மி விம்மித் தாழ்ந்தது. வீரர்கள் வம்சத்தில் உதித்த காரணத்தால் அவள் வாய் விட்டு அழவில்லையே தவிர, அந்த அழுகையைப்போல் ஆயிரம் மடங்கு அழுகை உள்ளத்தே எழுந்து உடலை உலுக்கிக் கொண்டிருந்தது. கண்ணீர் வடித்த நிலையில், கட்டிலில் கிடந்த அந்தக் கட்டழகனைக் கண்ட அந்தக் காரிகை, அவன் உடலில் அசைவு சிறிதுமில்லாததையும் முகத்தில் கூட வேதனை சிறிதும் புலப்படாததையும் பார்த்து, மரணத்துக்குத் தினையளவும் அஞ்சாத மகா புருஷன் முன்னிலையில் தானிருப்பதை உணர்ந்தாள். அவன் தனக்குச் சொந்தமானவன் என்ற உணர்ச்சி, அப்பொழுது கூட, அத்தனை மரணாபத்தில் அவன் படுத்திருந்த நிலையில் கூட, அவளுக்குத் துன்பமலையுடன் சிறிது இன்பத்தையும் இணைத்துவிட்டது. பாரதத்தின் வீரப்பெண்களின் பட்டியலில் அவன் காரணமாகத் தானும் சேர்ந்துவிட்டதை அவள் எண்ணினாள். அந்த எண்ணம் என்னதான் பெருமிதத்தை அவளுக்களித்தாலும், அவன் படுத்திருந்த நிலை, அடைந்து கொண்டிருந்த வேதனை அவள் தைரியத்தைச் சுக்கல்சுக்கலாக உடைத்தெறிந்து விடவே, மேலும் கண்ணீரே பீறிட்டுக்கொண்டு உதிர்ந்தது. அந்த நீர்த்திரையினூடே அவனைக் கவனித்த இளநங்கை, அவன் தலைக் காயத்துக்கு மருத்துவர்கள் போட்டிருந்த கட்டு பலமாயிருந்ததையும் முந்திய இரவில் தான் பார்த்த குருதிக் கசிவு அதிலில்லாததையும் கவனித்தாள். அவன் மூச்சுக்கூட ஒரே சீராக வந்துகொண்டிருந்ததையும் கண்ட அவள் அவனுக்குப் பிராணபத்து ஏதுமில்லையென்பதை உணர்ந்தாளாகையால், மருத்துவரைத் திருப்பி நோக்கி, “மருத்துவரே! மூச்சு சாதாரணமாகத்தானே இருக்கிறது?” என்று மெல்ல வினவினாள்.

மருத்துவர் பதில் சொல்லாவிட்டாலும் ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தார்.

“அப்படியானால், பிராண பயம்?” என்று வார்த்தையை முடிக்காமலே ஒரு கேள்வியையும் தொடுத்தாள்.

“இது வீரர்கள் மரணம்” என்றார் மருத்துவர் மரியாதைக் குரல் தொனிக்க.

“வீரர்கள் மரணமா?” ஏதும் புரியாமல் வினவினா இளநங்கை .

“ஆம், சாதாரண வியாதிகளால் பீடிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு அந்திமக் காலத்தில் சுவாசம் வாங்கும். குடும்ப நினைப்புகளுக்கு ஏற்ப முகவிகாரங்களும் வலிப்பும் ஏற்படும். வீரர்கள், ஞானிகள், இவர்கள் மரணம் அப்படி பட்டதல்ல. ஞான நிஷ்டையில் ஒரே நிலையில் சுவாசத்தை விட்டுச் சமாதியடைகிறான். ஒரே நோக்கமுள்ள வீரர்கள் மரணத்தை நாடிச் சென்று அதனால் மரண காயமேற்பட்டு அலட்சியமாக மரணத்தை ஏற்பதால், ரத்தம் வடிய உயிரும் வடிந்துவிடுகிறது சாவதானமாக. இறப்புக்குப் பிறகுகூட வீரர்கள் வதனத்தில் மரணக் களை வருவதில்லை” என்று சுட்டிக்காட்டினார் மருத்துவர் துன்பம் நிறைந்த குரலில் அது மட்டுமின்றி, “அத்தகைய வீரமரணத்தை நீங்கள் இன்று மாலைக்குள் கண்ணால் காணப் போகிறீர்கள். இப்பொழுது அதன் பூர்வாங்கத்தைக் காணுகிறீர்கள்.” என்று கூறினார்.

இளநங்கை மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்கவில்லை. சேலைத் தலைப்பால் கண்களைக்கூட நன்றாகத் துடைத்துக் கொண்டாள். மரணத்தை எதிர் நோக்கும் மகாவீரனுடன் காந்தருவமுறையில் கலந்து விட்ட தனக்கும் அந்த வீரநினைப்பும், தைரியமுமிருக்க வேண்டுமென்று தீர்மானித்தாள். பிறகு மருத்துவரை நோக்கி, “மருத்துவரே! இனி படைத் தலைவருக்கு நீர் செய்யக்கூடிய சிகிச்சை ஏதாவதிருக்கிறதா?” என்று வினவினாள்.

“ஏதுமில்லை. காயத்துக்குச் சேரநாட்டின் சிறந்த மூலிகைகளை வைத்துக் கட்டியிருக்கிறேன். உதடுகள் வரண்டால் மெல்லப் புகட்ட இதோ ரசாயனம் வைத்திருக்கிறேன். ஒரு முறையில் ஓர் உத்திரணி ரசாயனம் புகட்டலாம்.” என்று கூறி, பக்கத்து ஆசனமொன்றில் மூடி வைக்கப்பட்டிருந்த தங்க வட்டிலையும் ஆசன மீதிருந்த உத்திரணியையும் கையால் சுட்டிக் காட்டினார்.

“இவற்றைத் தவிர…” என்று வினவினாள் இளநங்கை.

“உயிர் நீத்தபின்…?” என்று துவங்கிய மருத்துவரை இடைமறித்த இளநங்கை, “அதைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். செல்லுங்கள்” என்று கூறினாள்.

கூறினாளா, உத்தரவிட்டாளா என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வெளிவந்த அவள் சொற்களின் விளைவாக வெளியே செல்ல முற்பட்ட மருத்துவரை நோக்கிய இளநங்கை, “மருத்துவரே.! பக்கத்தறையில் என் பணிப்பெண் இருக்கிறாள். இங்கு வரச் சொல்லுங்கள்,” என்றும் கூறி, அவர் செல்லலாமென்பதற்கு அறிகுறியாக கையையும் கம்பீரமாக அசைத்தாள். அவள் சொற்கள், தோரணை எல்லாமே விசித்திரமாயிருந்தன மருத்துவருக்கு. மரணமடைந்து கொண்டிருந்த ஒரு மனிதனுடன் தனித்து உட்கார்ந்து, மருத்துவனையும் அகற்றி விடத் துணிவுள்ள யாரையும் அவர் அதுவரை கண்டதில்லை. ஆகவே, அவளை வியப்புடன் நோக்கி விட்டே வெளியே சென்றார்.

அவர் சென்ற அடுத்த வினாடி அறைக்குள் நுழைந்த குறிஞ்சியை நோக்கிய இளநங்கை, “குறிஞ்சி! இந்த உப்பரிகைப் படியில் நிற்கும் காவலரிடம் என் உத்தரவின்றி யாரையும் இங்கு அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விடு. நீ மட்டும் இந்த அறைக்கு வெளியில் காத்திரு,” என்று உத்தரவிட்டாள்.

“சரி அம்மா,” என்று போகத் திரும்பினாள் குறிஞ்சி.

“குறிஞ்சி!” இளநங்கையின் குரல் குறிஞ்சியைத் தடை செய்தது.

“எனக்கு நீராட்டத்துக்கு ஏற்பாடு செய்,” என்ற இளநங்கையை வியப்பு நிரம்பிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தாள் பணிப்பெண்.

“ஏனப்படிப் பார்க்கிறாய், குறிஞ்சி?” என்று வினவினாள் இளநங்கை.
“ஒன்றுமில்லை. நீராடப் போகிறீர்களா அம்மா? என்றாள் பணிப்பெண்.

“ஆம்.”

“சரி அம்மா.”

“அதுமட்டுமல்ல குறிஞ்சி.”

“அம்மா!” வியப்பு நன்றாக ஒலித்தது குறிஞ்சியில் குரலில்.

“நன்றாக அலங்காரமும் செய்துகொள்ளப் போகிறேன். நல்ல பட்டாடையாக எடுத்து வை. திலகத்திற்கும், அந்த வாசனைக் கூட்டு மை இருக்கட்டும்” என்றும் சொற்களைத் தொடுத்தாள் இளநங்கை.

குறிஞ்சி இளநங்கையை நன்றாக உற்று நோக்கினாள். அவளுக்குப் பைத்தியமேதுமில்லையென்பதை உறுதி செய்து கொண்டதால் கேட்டாள். “அம்மா! இவர் இருக்கும் நிலையில்…” என்று வாசகத்தை அவள் முடிக்க வில்லை. முடிக்கும் துணிவும் அவளுக்கில்லை.

இளநங்கையின் இதழ்களில் சோகப் புன்முறுவல் படர்ந்தது. மெல்லச் சென்று படைத் தலைவன் பஞ்சணையில் அவனுக்கருகில் உட்கார்ந்து கொண்டாள். முந்தானைத் தலைப்பால் அவன் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வைத் திவலைகளைத் துடைத்தாள். பிறகு பக்கத்து ஆசனத்திலிருந்த ரசாயனத்தை உத்திரணியில் எடுத்து அவன் இதழ்களைத் தனது விரல்களால் நீக்கி வலது கையால் ரசாயனத்தைப் புகட்டினாள். அவன் இதழ்கள் அசைந்தன. ரசாயனம் மெல்ல இறங்கியது. பிறகு குறிஞ்சியை அருகில் வரும்படி அழைத்து, “குறிஞ்சி! ஒரு ரகசியம் சொல்லட்டுமா உனக்கு?” என்று வினவினாள்.

குறிஞ்சியின் குவளை விழிகள் இளநங்கையை உற்று நோக்கின. “சொல்லுங்கள்” என்றாள்.

“நான் நீராடிப் பட்டாடை உடுக்கப் போகிறேன்.”

“ஆம் அம்மா! சொன்னீர்களே இப்பொழுது.”

“ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“வீரன் மரணமடையும்போது, வீரன் மனைவி எப்படி யிருக்க வேண்டும்?”

“அம்மா!” குறிஞ்சியின் குரலில் அச்சம் தொனித்தது.

“அச்சத்திற்கு இதில் ஏதுமில்லை குறிஞ்சி,” என்ற இளநங்கையின் குரல் வருத்தத்தால் குழைந்தது.

“இருப்பினும்…” அச்சம் குறையவில்லை பணிப்பெண் குரலில்.

“இருப்பினும் என்பது இதில் ஏதுமில்லை குறிஞ்சி. திருமணம் நடந்து விட்டது…” என்ற இளநங்கையின் குரலில் ஆனந்தம் இருந்தது.

“எப்பொழுது?”

“இரண்டு நாட்களாக.”

“இரண்டு நாட்களாகவா?”

“ஆம். நான் அவர் மனைவியாகிவிட்டேன்.”

“சம்பிரதாயம், சாட்சிகள், உற்றார், உறவினர் இல்லாமலா?”

“காந்தருவ சம்பிரதாயம். சாட்சிகள் பன்னிரண்டு என்று இவரே சொன்னார் குறிஞ்சி. ரணகளத்தில் உற்றார் உறவினர் ஏது? நீ சொல்வது சாதாரண மக்கள் சம்பிர தாயம், வீரர்களுக்கானதல்ல. அவற்றுக்குத் தனி சம்பிர தாயம், தனி விதிகள்,” என்ற இளநங்கை , “நீ போய் நீராட்டத்துக்கு ஏற்பாடு செய்,” என்றாள் குறிஞ்சியிடம்.

குறிஞ்சி பிரமை மிகுந்த மனத்துடன் அவ்வறையை விட்டு வெளியே சென்றாள். அன்று முழுதுமே அவள் பிரமிப்பில் ஆழும் நிலையில் இருந்தாள். அந்த அறையிலிருந்து, தான் வெளிவந்தது முதல் இளநங்கை அடியோடு மாறிவிட்டதை அவள் உணர்ந்தாள். சிறிது நேரத்துக் கெல்லாம் தான் சென்று நீராட அழைத்தபோது தன்னைப் படைத்தலைவனுக்குக் காவல் வைத்துவிட்டு இளநங்கை உறுதியுடன் நீராடச் சென்றதையும், சிறிது நேரத்தில் நீராடிப் பட்டாடை அணிந்து, தலைவாரி முடித்துத் திலகமும் மையுமிட்டுப் பரிமள கந்தம் உடலில் தவழ வந்ததையும் கவனித்த குறிஞ்சி வியப்பின் எல்லையை அடைந்தாள். அந்தக் கோலத்தில் அவள் வந்து படைத் தலைவன் பக்கத்தில் அமர்ந்து, “நீ போ குறிஞ்சி! இனி மாலை வரையில் நீ வரவேண்டாம். தேவையானால் நானே அழைக்கிறேன்” என்று கூறியபோது அவள் பழைய இளநங்கையாக மாறிவிட்டதையும் கண்ட குறிஞ்சி, வியப்பு உச்சநிலைக்குச் செல்ல வெளியே சென்றாள்.

அவள் சென்றபின் கதவை மெள்ளச் சாத்திய இளநங்கை மீண்டும் வந்து பஞ்சணையில் அமர்ந்து அந்த மகா வீரனை நோக்கினாள். அவன் உடையெங்கும் தெரிந்த ரத்தக் கறையிலிருந்து, எங்கோ பெரும் சண்டை நடந்திருக்கிறதென்பதை அவள் உணர்ந்துகொண்டாள். அவன் நெற்றிக் காயத்தின் குருதி கால் பகுதிகளில் தெளிக்க அவசியமில்லையென்பதை உணர்ந்ததால் அவன் எங்கு போனான், எதற்காகப் போனான், யாரிடம் சிக்கிக் கொண்டான் என்றெல்லாம் எண்ணிப் பார்த்து விடையேதும் கிடைக்காமல் திணறினாள் அவள். தவிர அவன் தலையில் பட்டிருந்த காயத்திலிருந்து அக்காயம் நேர் எதிரான போரில் ஏற்படவில்லை யென்பதையும் எங்கிருந்தோ எறியப்பட்ட ஆயுதத்தால் விளைந்திருக்கிற தென்பதையும் புரிந்துகொண்டாள் இளநங்கை. இதன் விளைவாக அவள் மனத்திலிருந்த ஆயிரம் சந்தேகங்களுக்கு விடை சொல்லக் கூடியவன் படைத்தலைவன் ஒருவனேயென்பதை உணர்ந்த இளநங்கை அவனிடமிருந்து தான் ஏதும் அறியமுடியாதென்பதை நினைத்து ஏக்கப் பெருமூச் சொன்றும் விட்டாள்.

அவள் கரங்கள் மெள்ள அவன் கன்னங்களைத் தடவின. கைகளையும் கால்களையும் லேசாக வருடின. அவன் கைகளை வருடியபோது, “எனக்குச் சிகிச்சை செய்வதற்கு முந்தா நாளன்றுதானே முனைந்தீர்கள். இப்பொழுது ஏன் இப்படி செயலற்றுக் கிடக்கிறீர்கள்?” என்று வினவினாள் மெள்ளப் பைத்தியம் போல், அவன் பதில் சொல்ல முடியாதென்பதை அறிந்திருந்தும். சற்று நேரம் கழித்து அவன் இதழ்கள் உலர்ந்து போனதைக் கண்டு அவன் நெற்றியில் கையை வைத்தாள். நெற்றியில் சுரம் நெருப்புப் பொறியெனப் பறந்து கொண்டிருந்தது. சிறிது ரசாயனத்தை உத்திரணியில் எடுத்து இதழ்களில் புகட்டினாள். இதழ்கள் இலேசாக அசைந்தனவே தவிர ரசாயனத்தை இழுக்கத் திராணியற்று இருந்தன. ஆகவே மீண்டும் உத்திரணியில் ரசாயனத்தை எடுத்துத் தன் மென்மை விரல்களால் வாயை லேசாக நீக்கி ரசாயனத்தை ஊற்றினாள். மெள்ள ரசாயனம் இறங்கியது.

சுரவேகம் அன்று மாலை வரையில் இருந்து கொண்டிருந்தது. அன்று முழுவதும் படைத்தலைவன் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தான். மாலையில் விளக்கு வைத்ததும் மீண்டுமொரு முறை ரசாயனத்தை உதடுகளில் இறக்க முயன்றாள் இளநங்கை. ரசாயனம் இறங்காது போகவே, அதுவரை அவளுக்கிருந்த தைரியம் சுக்கு நூறாக உடைந்து விட்டது. “என்னைக் கடைசியில் மோசம்தான் செய்வீர்களா? இதற்கா என்னைக் கொற்கையில் பத்துநாள் துரத்தினீர்கள்?” என்று கேட்டு விம்மினாள். திடீரென்று அவன் உடலில் ஓர் அசைவு ஏற்பட்டது. இதழ்களிலும் அந்த அசைவு எதிரொலித்தது. விவரிக்க இயலாத பயங்கர நிலையை அடைந்தாள் இளநங்கை. மரணவாயிலில், கணவன் காலெடுத்து வைப்பதை உணர்ந்தாள்.

அந்த உணர்வு அவளுடைய மற்ற உணர்ச்சிகளை யெல்லாம் பறக்கடித்து அவள் உடலையும் வெறும் கட்டை போலாக்கிவிட்டது. திடீரென நெளிந்த இளவரசன் உடலை இரு கைகளாலும் அழுத்திக்கொண்டு நிமிர்ந்த இளநங்கையின் கண்கள் வெறித்து அவன் முகத்தைப் பல விநாடிகள் பார்த்த வண்ணமாயிருந்தன. அவன் முகத்தில் ஏற்பட்ட அசைவுகூட நின்றுவிட்டது. பெரிது பெரிதாக எழுந்து வந்த மூச்சும் மெள்ள மெள்ள மந்த கதியை அடைந்து கொண்டிருந்தது. இளநங்கைக்கு ஓவென்று கதறிவிட வேண்டும் போலிருந்தாலும், அதற்கும் சக்தியோ திராணியோ அவள் உடலில் இல்லை. மெள்ளத் தன் கையை அவன் கையில் வைத்துக்கொண்டு, கண்களை மூடி, தேவி மீனாட்சியை மனத்தில் நினைத்தாள் பலவிநாடிகள். ‘இரண்டு நாள் வாழ்வுக்காகவே இவரை என்னிடம் அனுப்பினாயா தாயே?’ என்று மனத்துள் கேட்டுக் கொண்டாள். பதிலேதும் கிடைக்காததால் அவள் இதயம் வெடித்துக் கொண்டிருந்தது. இரண்டாம் முறையும் அவன் உடல் ஒரு முறை அசைந்தது, நின்றது. இளநங்கை இதயமே நின்று விடும் நிலையை அடைந்தாள். முகத்தைக் குனிந்தாள் அவன் முகத்தை நோக்கி. தன் இதழ்களை அவன் இதழ்களுடன் இணைத்துக் கொண்டாள் ஒரு விநாடி. பிறகு நிமிர்ந்து நோக்கினாள் அவன் முகத்தை மீண்டும் அவள் கண்களில் திரண்ட நீர்த்துளிகள் இரண்டு அவன் உதடுகளிலும் விழுந்தன. ஆனாலும் அவை உள்ளே செல்லவில்லை. அங்கேயே இரண்டு முத்துக்களைப் போல் நின்று விட்டன, அதைக் கண்ட அவள் தலை மீண்டும் சுழன்றது. உடல் துவண்டு உணர்விழந்து அவன் மார்புமீது அவளும் சாய்ந்துவிட்டாள்.

Previous articleRaja Muthirai Part 1 Ch51 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch53 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here