Home Historical Novel Raja Muthirai Part 1 Ch53 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch53 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 1 Ch53 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch53 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch53 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 53 புத்துயிரும் புதுச் செயலும்

Raja Muthirai Part 1 Ch53 | Raja Muthirai | TamilNovel.in

அவள் கண் விழித்தபோது யவனர் மணிவிளக் கொன்று சற்றுத் தூரத்தில் எரிந்து கொண்டிருப்பது மிக மங்கலாகக் கண்ணுக்குத் தெரியவே தலையை லேசாகப் பஞ்சணையின் மீது செலுத்த முயன்றாள். பஞ்சணையும் தெரியவில்லை அவளுக்கு; படைத்தலைவனும் தெரியவில்லை. மருத்துவரின் கூர்விழிகள் அவளை ஆராய்ந்து கொண்டிருந்தன. அவள் கையின் தாதுவை அவர் கை விரல்கள் பிடித்துச் சோதித்துக் கொண்டிருந்தன. அவர் உதடுகளிலே லேசான புன்முறுவலிருந்தாலும், முகத்தில் குழப்பம் மிதமிஞ்சிக் கிடந்தது. பெரிய தலைப்பாகையுடன் காட்சியளித்த மருத்துவரை மீண்டும் மீண்டும் நோக்கி மிரண்டு விழித்த இளநங்கை, “நான் எங்கேயிருக்கிறேன்?” என்று முணுமுணுத்தாள்.

“படைத்தலைவர் அறையில்,” என்று அன்புடன் கூறினார், மருத்துவர்.

“அவர்?” என்று அச்சம் பரவி நின்ற அஞ்சன விழிகளை மருத்துவர்மீது நாட்டினாள் இளநங்கை.

மருத்துவர் சற்று அகன்று, “அதோ” என்று பக்கத்தி லிருந்த கட்டிலைக் காட்டினார்.

இளநங்கை கட்டை போலக் கிடந்த படைத் தலைவனைப் பார்த்தாள். பிறகு தானிருந்த இடத்தையும் கைகளால் அழுத்திப் பார்த்து அதுவும் ஒரு பஞ்சணை யென்பதைப் புரிந்துகொண்டு, அது ஏது என்பதறியாமல் குழம்பினாள். அந்தக் குழப்பத்தைப் போக்க மருத்துவர் விவரித்தார் “இது உங்களறையிலிருந்த கட்டில், அதையும் இங்கு கொண்டு வந்து போடச் செய்தேன்,” என்று.

இளநங்கை, கேள்வியொன்று தொக்கி நின்ற பார்வையை எழுப்பினாள். அந்தப் பார்வையில் எழுந்த கேள்வியைப் புரிந்துகொண்ட மருத்துவர், “அம்மா! நான் மறுபடியும் நோயாளியைப் பார்க்க வந்தபோது நீங்கள் படைத்தலைவர்மீது கிடந்தீர்கள். ஆகையால் உங்கள் பஞ்சணையையும் இங்குக் கொண்டுவரச் சொல்லிப் பக்கத்தில் போட வைத்தேன்,” என்றார்.

அதைச் சொன்ன அவர் முகத்தில் ஏளனம் ஏதுமில்லையாதலாலும், சர்வ சகஜமாகத் தன்னிடம் பேசியதாலும் படைத்தலைவனுக்கு விபரீதம் எதுவும் ஏற்படவில்லையென்பதை உணர்ந்த இளநங்கை சற்றுத் தெளிவடைந்து, “அவர் நிலை…” என்று வினவினாள் தட்டுத்தடுமாறி.

மருத்துவர் முகத்தில் மீண்டும் குழப்பம் தெரிந்தது அவர் சற்று யோசித்துவிட்டுச் சொன்னார், “விசித்திரமாயிருக்கிறது,” என்று.

“விசித்திரமா?” கவலை தோய்ந்த குரலில் கேட்டாள் இளநங்கை.

“ஆம்.” என்றார் மருத்துவர்.
“அப்படியானால் அவர்…” என்று இழுத்தாள் இளநங்கை. அந்த இழுப்பில் கவலையும் இருந்தது, நல்ல பதில் தேவையென்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

“இறக்கவில்லை.” மருத்துவர் குரலில் குழப்ப அதிகரித்திருந்தது.

அவர் அளித்த பதிலில் கிடைத்த சாந்தியில் “அப்பாடி!” என்று ஆசுவாசப் பெருமூச்சுவிட்டாள் அவள்.

ஆனால் மருத்துவர் அந்த ஆசுவாசத்திலோ சாந்தியிலோ பங்கு கொண்டவராகத் தெரியவில்லை. “இறக்கவில்லையம்மா. ஆனால் ஏன் இறக்கவில்லை?” என்றொரு கேள்வியையும் அவளை நோக்கி வீசினார்.

அத்தனை சோகத்திலும் கோபமும் துளிர்த்தது இளநங்கையின் விழிகளில். இளவரசன் இறக்காதது பெரிய தவறு போல் மருத்துவர் சொன்னதைக் கேட்டதால் சற்று வியப்பும் கொண்ட அவள், “இறக்காதது கஷ்டமாயிருக்கிறதா உங்களுக்கு?” என்று கூறிக்கொண்டு, மெள்ள எழுந்திருக்க முயன்று தலையில் கனம் அதிகமாயிருந்ததால் முடியாமல் மீண்டும் தலையணையில் விழுந்தாள்.

“நீங்கள் இன்னும் ஒரு நாழிகையாவது படுக்கையில் இருக்க வேண்டும். லேசாக மருந்து புகட்டியிருக்கிறேன் உங்களுக்கு,” என்று கடிந்துகொண்ட மருத்துவர் அவள் கேள்விக்குப் பதிலும் சொன்னார், “படைத்தலைவர் இறக்காதது கஷ்டமாயில்லை, காரணம் சொல்ல முடியாம லிருக்கிறது,” என்று.
“காரணம் சொல்ல முடியவில்லையா?”

“ஆம்”

“என்ன காரணம் தெரிய வேண்டும் உங்களுக்கு?”

“சென்ற ஒரு நாழிகைக்குள் இறந்திருக்க வேண்டியவர் ஏன் இறக்கவில்லை? நான் சென்றபோது அவர் நாடி அடங்கிக் கொண்டிருந்தது. வாதநாடி மட்டும் லேசாகத் துடித்துக் கொண்டிருந்தது. பித்த, சிலேஷ்மங்கள் அடங்கி விட்டன. வாதமும் அழுந்திக் கொண்டுதானிருந்தது. மருத்துவ ரீதிப்படி அது மரணத்தின் முதல்படி” என்று மருத்துவர் விளக்கினார்.

“அப்படியானால் ரசாயனம் கொடுக்கச் சொன்னீர்களே எதற்காக?” என்று கேட்டாள் இளநங்கை.

“உங்கள் நிம்மதிக்காக.”

“என் நிம்மதிக்காகவா?”

“ஆம் மருத்துவன் தன் மருந்தில் பயனில்லை என்ற நிலையிலும், மருந்து கொடுக்க வேண்டுமென்பது சாத்திரம். அப்படிக் கொடுத்தால் அது மரணமடைபவனுக்கு பயனில்லையென்றாலும், இருப்பவர்களுக்கு மனச்சாந்தி யளிக்கும். அந்த மருந்தினால் ஏதோ நடக்கப் போகிறதென்ற எதிர்பார்ப்பில் பக்கத்திலிருப்பவர்கள் திருப்தியடைகிறார்கள். ஆனால் மரணத்தின் பெரும் பயம் சிறிது காலம் தள்ளப்படுகிறது.”

“அப்படியானால் உங்கள் ரசாயனம்…?”

“எந்தப் பயனையும் அளிக்கவில்லை.”

“ஏன் இறக்கவில்லை படைத் தலைவர்? நான் சென்ற பின்பு என்ன நடந்தது? நீங்கள் என்ன புகட்டினீர்கள்? ஏதோ புகட்டியிருக்கிறீர்கள். இல்லையேல் மீண்டும் தாது வலுவடைந்திருக்காது,” என்ற மருத்துவர் அவள்மீது தனது கண்களை நாட்டினார்.

அவள், அவர் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. “அப்படியானால் அவருக்கு ஏதும் ஆபத்தில்லையே” என்று வினவினாள்.

“ஆபத்தில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் மரணத்தின் முதல்படி அகன்றுவிட்டது. நாடி சற்று பலத்திருக்கிறது. ஒருமுறை கண்களைக்கூடத் திறந்தார் படைத் தலைவர்…” என்ற மருத்துவரை இடையில் வெட்டிய இளநங்கை, “என்ன! கண்ணைத் திறந்தார!” என்று ஆவலும், வியப்பும் நிரம்பிய குரலில் கூறினாள்.

“திறந்தார். ஆனால் அதைப்பற்றி மகிழவேண்டாம் பார்வையில் தெளிவில்லை. சுரம் மீண்டும் அடிக்கிறது படைத்தலைவருக்கு,” என்றார் மருத்துவர்.

“சுரமா!” மீண்டும் பயம் சூழ்ந்தது, இளநங்கையின் இதயத்தில்.

“அதைப்பற்றிக் கவலை வேண்டாம். சுரம் நல்ல அடையாளம். மனித ரத்தம் வியாதியுடன் போராடுவதைக் குறிக்கிறது அது. படைத்தலைவருக்கு ஜீவிக்க வேண்டும் என்ற உறுதி பலமாக ஏற்பட்டிருக்கிறது” என்று விளக்கினார் மருத்துவர்.

“அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” என் வினவினாள் இளநங்கை.

“சுரப் பார்வையிலும் அந்த உறுதியிருந்தது. தவிர அந்தப் பார்வையில் படைத்தலைவர் எதையோ எதிர் பார்க்கும் அறிகுறியும் இருந்தது. என் ஊகம் தவறில்லையானால், உங்களைத்தான் அவர் எதிர்பார்த்தார்” என்ற மருத்துவர்.

இளநங்கை அந்த வேதனையிலும் இன்பநகை கூட்டினாள் இதழ்களில். “அம்மா! இதில் நாணத்துக்கு இடமேதுமில்லை. படைத்தலைவர் உங்களைத்தான் எதிர் பார்க்கிறார்” என்றார் மருத்துவர் திட்டமாக.

“உங்களுக்கு எப்படித் தெரியும் அது?” என்று கேட்டாள் இளநங்கை.

“மருத்துவ சாத்திரம் சொல்லுகிறதம்மா. நன்றாகக் கேளுங்கள். நான் சென்றபோது படைத் தலைவர் மரணமடைந்து கொண்டிருந்தார். நாடி அடங்கிக் கொண்டிருந்தது. வீரனானபடியால் மற்ற மனிதர்களுக்கு பாங்கும் சுவாசம் பெரியதாக வாங்காவிட்டாலும் மூச்சு மந்தகதியில் அடங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று பணிப்பெண் ஓடி வந்து என்னை அழைக்கிறாள். நான் வந்து பார்க்கிறேன். நீங்கள் படைத்தலைவர் உடல்மீது மயக்கமாய்க் கிடக்கிறீர்கள். படைத்தலைவர் நாடியைப் பார்க்கிறேன். சற்று பலமாயிருக்கிறது. சில்லிட்டிருக்க வேண்டிய உடலில் மீண்டும் நல்ல சூடு காண்கிறது. உங்கள் உடல் சம்பந்தத்திலோ, உணர்ச்சி சம்பந்தத்திலோ நாடியின் தெம்பும் உடற்சூடும் படைத்தலைவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது என் முடிவு. ஆகவே உங்கள் பஞ்சணையை இந்த அறையில் கொண்டு வந்து போடச் செய்து, உங்கள் கையையும், அவர் கையையும் இணைக்கிறேன். அவர் உதடு அசைகிறது. கண் விழித்து வறிக்கிறது. ஆகையால் உங்கள் ஸ்பரிசம், உங்கள் எனைப்பு இரண்டும் படைத்தலைவர் அசக்தியை டுசெய்கிறது. ஏதோ விவரிக்க முடியாத உறுதி அவர் மத்தியில் எழுந்து உந்துகிறது என்று முடிவு செய்கிறேன். பங்களுக்கு மயக்க மருந்தைப் புகட்டி இங்கேயே படுக்க திடுகிறேன். என் முடிவு சரியென்று நிரூபணமாகிறது…” இப்படி விவரித்த மருத்துவர் சட்டென்று பேச்சை நிறுத்தி, அம்மா நடந்ததை விபரமாக எதையும் விடாமல் சொல்லுங்கள். ஒருவேளை அதிலிருந்து படைத் லைவரைப் பிழைக்க வைக்க மருந்து கிடைத்தாலும் படைக்கும்,” என்று கேட்டார்.

எதைச் சொல்லுவாள் கோட்டைக் காவலன் மகள்? அவன் இதழ்களுடன் தன் இதழ்களைப் பொருத்தியதைச் சொல்லுவாளா? இதய பிரலாபத்தைச் சொல்லுவாளா? மார்புடன் மார்பழுத்தி இழைந்த கதையைச் சொல்லுவாளா? அவன் உடல் முறித்துத் துடித்த வேதனையைச் சொல்லுவாளா? சிலதைச் சொல்ல நாணம் அனுமதிக்காது. சிலதைச் சொல்ல அச்சம் அனுமதிக்காது. ஆகவே மௌனம் சாதித்தாள்.

மருத்துவர் மீண்டும் அவளை ஊக்கினார். “அம்மா! இப்பொழுது படைத்தலைவர் நாடி மீண்டாலும், வெகு வேகத்துடன் ஓடுகிறது. அணையும் சுடரின் படபடப்பை அதில் பார்க்கிறேன். நீங்கள் விவரம் சொன்னால் எனக்குப் புலன் கிடைக்கும். இல்லையேல்…” உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர்.

இளநங்கை சில விநாடிகள் மௌனம் சாதித்தாள். பிறகு மெள்ளச் சொல்லத் துவங்கினாள் கதையை “மருத்துவரே ஆபத்து பல விஷயங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. சாவை நோக்கும் சமயத்தில், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தனிமனிதர் உணர்ச்சிகள், வாழ்க்கை ரகசியங்கள் உடைபடுகின்றன. ஆகவே சொல்லத் தகாததை யெல்லாம் சொல்ல என்னால் முடியாததையெல்லாம் சொல்லுகிறேன் கேளுங்கள். மருத்துவரிடம் எதையும் ஒளிக்கக் கூடாதென்ற நியதியை முன்னிட்டுச் சொல்லுகிறேன் கேளுங்கள்,” என்று துவங்கி நடந்ததை ஒன்று விடாமல் சொன்னாள். நிதானமாக, குரலில் உணர்ச்சி ஏதுமின்றி, கர்மயோகியைப் போல் கூறினாள் நடந்த கதையை.

அந்தக் கதையைக் கேட்கக் கேட்க வியப்பின் வசப் பட்டார் மருத்துவர். கதை முடிந்ததும் தீவிர சிந்தனையில் இறங்கினார். நீண்ட நேரம் பேசாமலே இருந்தவர் கடைசியாகச் சொன்னார், “அம்மா! தெய்வபலம் உங்களிடம் இருக்கிறது,” என்று.

“அப்படி ஏதுமில்ல, மருத்துவரே!” என்றாள் இளநங்கை .

“நிச்சயமாயிருக்கிறது அம்மா. இல்லையேல் இத்தனை நேரம் படைத்தலைவர் உடல் இருக்க வேண்டிய இடம் வேறு. அவர் உடல் ஒருமுறை அசைந்ததாகச் சொன்னீர்களே அது உயிரின் இறுதி அசைவு. அதிலிருந்து சாமான்யமாக யாரும் மீளுவதில்லை. மீளவைத்தது உங்கள் உறுதி, உங்கள் அன்பு, உங்கள் இதழ்கள், ரசாயனம் இறங்காதபோது உங்கள் இதழ்கள் பதிந்ததால் ஏற்பட்ட உணர்ச்சி மீண்டும் படைத்தலைவன் புத்தியை இயக்கியிருக்கிறது. மரணத்துடன் மனம் போராடியிருக்கிறது. உங்கள் உடல் ஸ்பரிசம் அவன் உடலின் நரம்புகளை மீண்டும் லேசாகத் துடிக்க வைக்கிறது. மனிதன் ஜீவிக்க மூன்று விஷயங்கள் தேவை சாத்திரப்படி. ஜீவிக்க வேண்டும் என்று உறுதி, அந்த உறுதிக்கு ஆக்கமளிக்கும் இன்னொருவர் அன்பு, தெய்வ பலம். இந்த மூன்றின் விளைவினால்தான் படைத்தலைவர் ஜீவிக்கிறார். இப்பொழுது புலன் கிடைத்துவிட்டது எனக்கு. மருந்தும் கிடைத்துவிட்டது,” என்றார் மருத்துவர்.

“என்ன மருந்து?”

“மருந்துகள் இரண்டு.”

“இரண்டா !”

“ஆம். ஒன்று ஆதார மருந்து. அது நீங்கள். இரண்டாவது மருந்து சாத்திரத்தின் மருந்து. அது என் மருந்துப் பையிலிருக்கிறது,” என்று கூறி எழுந்து சென்று தனது பையிலிருந்த ஒரு பச்சிலைக் குப்பியை எடுத்தார். அதிலிருந்த இரண்டு மூன்று இலைகளை எடுத்து, சற்று தூரத்திலிருந்த சிறு மஞ்சத்தின் மீதிருந்த கிண்ணத்திலிருந்த நீரில் நனைத்தார். பிறகு பச்சிலையைத் தனது உள்ளங்கையில் வைத்து நசுக்கிச் சாறு உண்டாக்கி அதைத் தன் இடது கையைக் குழித்துப் பிடித்துத் தேக்கிக் கொண்டார்.. பிறகு “அம்மா, மெள்ள எழுந்திருங்கள்,” என்று இளநங்கையைத் தானே பிடித்துத் தூக்கி, அவளைப் பஞ்சணையில் உட்கார வைத்துப் பிடித்துக்கொண்டு, தனது இடது கையைக் காட்டி, “இதிலிருக்கும் சாற்றை உங்கள் ஆள்காட்டி விரலால் எடுத்துப் படைத் தலைவர் வாயில் பலவந்தமாகச் செலுத்துங்கள்” என்றார்.

இளநங்கையின் தலை மிகவும் கனத்தது. உட்கார முடியாமல் உட்கார்ந்து பச்சிலைச் சாற்றை எடுத்து அவன் வாயில் ஊட்டினாள். சாறும் மெள்ள மெள்ள இறங்கியது. மருத்துவர் மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தார். பிற அவளைப் பஞ்சணையில் படுக்க வைத்துவிட்டு வெளியே சென்று பணிமகளை அழைத்து வந்து இளநங்கையின் பஞ்சணையை இழுத்துப் படைத்தலைவர் பஞ்சணையுடன் ஜோடியாகப் போட்டார். பிறகு, இளநங்கையை நோக்கி “அம்மா, படைத் தலைவர்மீது உங்கள் ஒரு கை பட்டுக் கொண்டு இருக்கட்டும். உங்கள் மயக்கம் இன்னும் ஒரு நாழிகையில் தீர்ந்துவிடும். தலைக்கனமும் நீங்கும். பிறகு நீங்கள் எழுந்திருந்துகூடப் படைத்தலைவரைக் கவனிக்லாம். அதுவரை ஜாக்கிரதை. படைத்தலைவரை யாரும் அசைக்க வேண்டாம். நாளை பகலில் அவர் கண் விழிக்கலாம். ஆண்டவன் அருளால் விழிக்கட்டும். ஸ்ர்ப்ப கந்தி இப்பொழுதுள்ள நிலையில் வேலை செய்யும் என்று நினைக்கிறேன்,” என்றார்.

“ஸர்ப்பகந்தியா!” என்றாள் இளநங்கை.
“ஆம். மூளை வியாதிகளுக்குக் கொடுக்கும் பச்சிலை. சாதாரணமாகக் குழந்தைகளை உறங்க வைக்கக் கொடுக்கிறோம். குழந்தையின் சக்திக்குமேல் சக்தியில்லை படைத் தலைவர் உடலிலும்,” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அன்றிரவு பூராவும் கண் விழித்தாள் இளநங்கை. மறு நாள் பகலில் மருத்துவர் சொன்னபடி கண்விழித்தான் படைத்தலைவன். கண்ணில் அன்று பார்வை தெளிவாயிருந்தது. வந்து பார்த்த மருத்துவரும், “இனி பயமில்லை,” என்று சொல்லிப்போனார். அன்று முதல் படைத் தலைவன் குணமடையலானான். ஆனால் மிகுந்த பலவீனமிருந்தது அவன் உடலில், அத்துடன் எப்படிப் போரை நடத்தப் போகிறோமென்ற பயமும் ஏற்பட்டது அவனுக்கு. அதைப் பற்றி இளநங்கையிடம் பிரஸ் தாபித்தான் படைத்தலைவன், நான்கு நாள் கழித்து இளநங்கை! என்னால் எழுந்துநிற்கவும் முடியவில்லை. நான் எப்படி எதிரிகளைச் சமாளிப்பேன்?” என்று கேட்டான்.

“எதிரி வரட்டும் பார்ப்போம்,” என்று தைரியம் சொன்னாள் இளநங்கை.

“எதிரி இனி எந்த நேரமும் வரலாம்,” என்றான் வீர பாண்டியன்.

அவன் சொன்னதை ஊர்ஜிதம் செய்வதுபோல் தூரத்தே எங்கோ ஒரு முரசு ஒலித்தது. அதை ஊன்றிக் கேட்டான் படைத்தலைவன். அது சற்று விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“அது சிங்கணன் முரசு” என்றான் வீரபாண்டியன். அது ஒலிக்கும் தூரத்தைக் கவனித்தால் நாளைக் காலைக்குள் சிங்கணன் படைகள் இந்த நகரத்தைச் சூழ்ந்து கொள்ளும்” என்று அறிவித்தான் சர்வசாதாரணமாக.

“சரி,” என்று கூறி எழுந்தாள் இளநங்கை.

“எங்கு போகிறாய் இளநங்கை?”

“பணியை மேற்கொள்ள.”

“என்ன பணியை?”

“போர்ப் பணியை. உபதளபதியின் பணியை.”

“பொறு.”

“ஏன் பொறுக்கவேண்டும்?”

“நான் சிங்கணனுடன் போரிடப் போவதில்லை,” என்றான் படைத்தலைவன் நிதானமாக.

இளநங்கையின் இதயம் அதிர்ச்சியால் பதை பதைத்தது. “வேறு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று வினவினாள் அவள் அச்சத்துடன்.

செய்யப் போவதைச் சொன்னான் வீரபாண்டியன். இளநங்கை பிரமை பிடித்து நின்றாள். தலையில்பட்ட அடி படைத்தலைவன் புத்தியைக் குழப்பிவிட்டதோ என்று கூட நினைத்தாள். ஆனால் படைத்தலைவன் பிடிவாதமாகத் தனது செயலில் இறங்கினான். அந்தச் செயல் அந்தக் கோட்டாற்றுக் கரைக் கோட்டையில் இருந்தவர்களை மட்டுமல்ல, தொலைவிலிருந்த சுந்தரபாண்டியனையும் திடுக்கிட வைத்தது.

Previous articleRaja Muthirai Part 1 Ch52 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch54 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here