Home Historical Novel Raja Muthirai Part 1 Ch54 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch54 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

53
0
Raja Muthirai Part 1 Ch54 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch54 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch54 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 54 பாரி, பேகன், வீரபாண்டியன்

Raja Muthirai Part 1 Ch54 | Raja Muthirai | TamilNovel.in

மரணத்தின் பிடியிலிருந்து மீண்டும் கண் விழித்ததும் விழிக்காததுமாகத் தான் சிங்கணனுடன் போரிடப் போவ தில்லையென்று வீரபாண்டியன் சொன்னதுமே பிரமித்த இளநங்கை, அவன் செய்யப்போவதென்ன என்பனதை விளக்கியதும் திகைப்பின் எல்லையை அடைந்தாள். மண்டையில் அப்பொழுதுமிருந்த காயத்தின் கட்டை உற்று நோக்கி, ஒரு வேளை அந்தக் காயம் படைத்தலைவன் சித்தத்தைக் குழப்பியிருக்குமோ என்றுகூட எண்ணினாள். அல்லது மருத்துவர் கொடுத்துப்போன மூலிகையான ஸ்ர்ப்பகந்தி அவனுடைய மதியை மயக்கியதன்றிச் சிறது மந்தப்படுத்தியுமிருக்குமோ என்றும் நினைத்தாள் இளநங்கை.

அவள் முகத்திலோடிய எண்ணங்களைப் படைத் தலைவன் புரிந்துகொண்டிருக்க வேண்டுமென்பது அவன் இதழ்களில் தோன்றிய புன்முறுவலிலிருந்தும், “இப்படி வா, பக்கத்தில் நெருங்கி உட்கார்” என்று அவன் அழைத்த தோரணையிலிருந்தும் தெளிவுற விளங்கியது.

இளநங்கை அந்த அடையாளங்கள் எதையும் கவனிக்காதது போலவே படைத்தலைவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். “இப்பொழுது சௌகரியமாய் இருக்கிறது,” என்று அவர்கள் அருகாமையைச் சிலாகித்த படைத் தலைவன் தன் கையொன்றை அவள் மடிக்குக் குறுக்கே போட்டுக் கொண்டு, “இளநங்கை! எனக்கு மதி மயக்கமென்று நினைக்கிறாய் போலிருக்கிறது. ஒரு விஷயத்தில் அதுவும் உண்மைதான்,” என்றான்.
இளநங்கை அவன் மீது குத்தலான பார்வையை ஓட்டிவிட்டுக் கேட்டாள், “எந்த விஷயத்தில்?” என்று.

“ஒரே ஒரு விஷயத்தில்,” என்று கூறிய படைத் தலைவன் நகைத்தான்.

எது என்பதைப் புரிந்துகொண்ட இளநங்கை பொய்க் கோபம் துளிர்த்த விழிகளை அவன்மீது திருப்பினாள். “ஆமாம்!, ஆமாம்,” என்றாள்.

“என்ன ஆமாம்?” இதைக் கேட்ட இளவரசன் கை அவள் சிங்கார இடையைச் சுற்றிச் சென்றது.

“என்ன விஷயத்தில் என்பது புரிகிறது.” இளநங்கையின் குரல் உஷ்ணமாக ஒலித்ததா? இன்பமாக ஒலித்ததா? விவரிக்க இயலாதிருந்தது.

“புரிகிறதல்லவா?”

“புரிகிறது. கையை எடுங்கள்.”

“எந்தக் கையை?”

“இரண்டு கையையும்தான்.”

இளநங்கை அவனைப் புன்முறுவல் கோட்டிப் பார்த்தாள். “எதற்கும் கால தேச வர்த்தமானம் உண்டு,” என்று கூறினாள்.

“இப்பொழுது காலத்திற்கென்ன?”

“பகற்காலம்.”

“தேசத்திற்கென்ன?”

“எதிரி தேசம்?”

“வர்த்தமானம்?”

“எதிரியின் போர் முரசு ஒலிக்கிறது எல்லையில். நாளை இந்தக் கோட்டையின் முன்பும் ஒலிக்கும்.”

“இளநங்கை!”

“உம்.”

“இதற்கெல்லாம் அப்பாற்பட்டது அது?”

“எது?”

“என் மதிமயக்கம். ஏன், உன் மதிமயக்கம் கூடத்தான்.”

“எனக்கு மதிமயக்கம் ஒன்றுமில்லை!”

“எல்லாம் மருத்துவர் சொன்னார்.”

“என்ன சொன்னார்?”
“நீ எனக்கு உயிரளித்த முறையை…” என்று கூறிய வீரபாண்டியன், தன் வலது கையைத் தூக்கி அவள் இதழ்களில் தன் இரண்டு விரல்களை வைத்தான். “இந்த இதழ்கள் எனக்கு உயிரூட்டின என்று சொன்னார். இளநங்கை பார்த்தாயா, நமது பரஸ்பர மதிமயக்கத்தால் உயிர் உண்டாகிறதே தவிர, போவதில்லை,” என்ற வீரபாண்டியன் அவள் முகத்தை ஆசையுடன் நோக்கினான்.

அவள் முகத்தில் ஒரு புத்தொளி தோன்றியது. ஆசைக் கனலையும் கண்கள் அள்ளித் தெளித்தன. தவிர வெட்கமும் அவற்றில் விரிந்து கிடந்தது. இதழோடு இதழ் வைத்ததை மருத்துவரிடம் மறைக்கக் கூடாதென்பதற்காக, வீரபாண்டியன் உயிரை மீட்க அவருக்குச் சூசகம் தேவைப்பட்டதன் விளைவாக, அவர் மிகவும் மன்றாடியதன் காரணமாக, அவள் எடுத்துச் சொல்லியிருந்தாள். ஆனால் ரகசியமாக இருக்கவேண்டிய அந்த விஷயத்தை மருத்துவர் வீரபாண்டியனிடம் எதற்காகச் சொன்னார் என்று நினைத்துச் சற்று ஆத்திரமும் வெட்கமும் ஒருங்கே அடைந்த இளநங்கை, “இதையெல்லாம் மருத்துவர் உங்களிடம் எதற்காகச் சொன்னார்?” என்று மெள்ள அலுப்புடன் சொற்களை உதிர்த்தாள்.

வீரபாண்டியன் மெல்ல நகைத்தான். “எனக்கு மயக்க முண்டாக்க,” என்று கூறினான் நகைப்புக்கிடையில்.

“மயக்கத்தைப் போக்க என்று சொல்லுங்கள்” என்று திருத்தினாள் இளநங்கை.

“மயக்கத்தைப் போக்கத்தான் அதைச் சொன்னார். மருந்தும் கொடுத்தார் மருத்துவர். ஆனால் அதுவே மயக்கத்தையும் கொடுத்தது” என்றான் படைத்தலைவன்

“நீங்கள் பேசுவது புதிராயிருக்கிறது.”

“நமக்குள் புதிர்கள் பல. அவற்றை அவிழ்ப்பதே வாழ்க்கை. இந்தப் புதிரைத்தான் பார். காயத்தினால் ஏற்பட்ட மயக்கத்ததைப் போக்க எனக்கு மருந்தும் உன் உறுதிக்குக் காரணத்தையும் கூறி, ‘அவள் உறுதியும் சிகிச்சையும் உங்களைப் பிழைக்கவைத்தது. உங்கள் உறுதியும் பணிவும் இனி உங்களை வியாதியின் உக்கிரத்திலிருந்து மீட்கவேண்டும்’ என்றார். அவர் அளித்த மருந்தின் மயக்கம் தீர்ந்தது. ஆனால் வேறொரு மயக்கம் வந்தது. அப்பா! கண்மூடியிருந்த போதிருந்த மயக்கத்துக்கும், கண்திறந்த பின்னேற்பட்ட மயக்கத்துக்கும் எத்தனை வித்தியாசம்!” என்ற படைத்தலைவன், அந்தக் கட்டழகியைத் தன் கிட்டே இழுத்து, “இளநங்கை! உன் சிகிச்சையில்தான் நான் பிழைக்கவேண்டும். சிகிச்சையை மட்டும் நிறுத்தி விடாதே,” என்றும் கூறினான்.

“என்ன சிகிச்சை?” உதடுகளை மடித்துக் கண்களில் சிரிப்பை உதிர்த்துக் கேட்டாள் அந்தச் சித்தினி.

“உள்ளுக்கு…”

“என்ன உள்ளுக்கு?”

“புகட்ட வேண்டும்.”

“ரசாயனந்தானே?”

“ஆமாம்.”

“ஆகட்டும்.”

“மருத்துவர் கொடுக்கும் ரசாயனமல்ல.”

“வேறு எதாம்?”

“எதனால் நான் பிழைத்தேன்?”

இதைக் கேட்ட இளநங்கை, “சரி சரி. இந்தப் பைத்தியத்தை விடுங்கள், எதிரியின் முரசொலியைக் கவனியுங்கள். இப்பொழுது எதிரியைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று வினவினாள் இளநங்கை.

“எதுவும் செய்யப் போவதில்லை.” திட்டமாக வந்தது வீரபாண்டியன் பதில்.

“எதுவும் செய்யப் போவதில்லையா?” என்று சீறினாள் இளநங்கை.

“இல்லை.” மீண்டும் உறுதியுடன் கூறினான் வீர பாண்டியன்.
“சிங்கணனுடன்…” என்று துவங்கிய இளநங்கையை இடைமறித்த இளவரசன் திட்டவட்டமாகக் கூறினால் “மீண்டும், போரிடப் போவதில்லை,” என்று.

“ஏன்?”

“போரிட்டுப் பயனில்லை.”

“பயனை எதிர்பார்த்தா வீரர்கள் போரில் இறங்குவார்கள்?”

“சில சமயங்களில் அதுவும் அவசியமகிறது. சிங்கணனும் பெரும்படையுடன் கிழக்குப் புறத்தில் இந்தக்கோட்டையின் மீது இறங்கப் போகிறான். மேற்குப்பக்கத்தில் கடல் வாயிலாக வருகிறது இன்னொரு பெரும்படை. இந்த இரண்டு படைகளையும் நமது சிறுபடை சமாளிக்க இயலாது. தவிர கோட்டையும் அத்தனை பலமான கோட்டையல்ல,” என்று சுட்டிக்காட்டினான் இளவரசன்.

“அப்படியானால், சரணடையப் போகிறீர்களா சிங்கணனிடம்?” என்று வினவினாள் இளநங்கை ஆத்திரத் துடன்.

“இல்லை. அதுவுமில்லை,” என்றான் இளவரசன் சர்வ சாதாரணமாக.

“பிறகு, என்னதான் செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் இளநங்கை. அவள் குரலில் குழப்பமும் ஆத்திரமும் மிதமிஞ்சிக் கிடந்தன.

வீரபாண்டியன் விழிகள் அவளை உற்று நோக்கின “இளநங்கை !” என்ற அவன் குரலிலும் திடமிருந்தது.

“என்ன?” என்று இளநங்கை வினவினாள்.

“நான் படுகாயமுற்றுச் செயலிழந்து படுத்திருப்பது சிங்கணனுக்குத் தெரியாது…” என்று இழுத்தான் படைத் தலைவன்.

“தெரியாது” என்றாள் இளநங்கை அவன் என்ன சொல்ல முற்படுகிறான் என்பதை அறியாமல்.

“அதை அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்றான் வீரபாண்டியன்.

“இளநங்கை முகத்தில் அதிர்ச்சி நிலவியது. “என்ன?” என்ற கேள்வியும் அதிர்ச்சியுடன் ஒலித்தது.

“என் நிலையை அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.”

“இந்தக் கோட்டையின் படைத்தலைவன் பயனற்றுப் படுத்துக் கிடப்பதையா?”

“ஆம்.”

“எதிரி இதனால் பெரும் மகிழ்ச்சியடைவானென்பது தெரியும். அவனை மகிழ்விப்பதுதான் என் நோக்கம்.”

“நமது பலவீனத்தை எதிரிக்குத் தெரியப்படுத்தி மகிழ்விப்பதா?”

“ஆம், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது தமிழன் மரபு.”

“அதைவிட ஒன்று செய்யலாமே?”

“என்ன?”

“சிங்கணனை உள்ளே அழைத்து அவனிடம் கோட் டையை ஒப்படைத்து விடலாமே!”

“நாமாக ஒப்படைப்பது தவறு.”

“அவனாகப் பிடுங்கிக்கொள்ளவேண்டுமா?”

“பிடுங்கிக் கொள்வானேன்? அவனாக வந்து கேட்கட்டுமே?”

“கேட்டால்?”

“இது வள்ளல்கள் மிகுந்த நாடு.”

“கோட்டையைத் தானம் செய்துவிடுவீர்களாக்கும்?”

“கிட்டதட்ட அப்படித்தான்,”

“நல்ல தானம் இது?”

“முல்லைக்குத் தேரளித்த பாரியும், மயிலுக்குப் போர்வையளித்த பேகனும் வாழ்ந்த இந்த நாட்டில் பிறந்த நான் சிங்கணனுக்கு ஒரு கோட்டையளிப்பது தவறா?” என்று பெருமிதத்துடன் வினவினான் படைத்தலைவன்.
“இல்லை. தவறில்லை. உங்கள் பெயர்…” என்றாள் இளநங்கை.

“இலக்கியத்தில் நிலைக்கும். சரித்திரத்தில் நிலைக்கும்” என்று குதூகலித்தான் பாண்டிய இளவரசன்.

“கண்டிப்பாய் நிலைக்கும்,” என்றாள் இளநங்கை.

“மக்கள்…” என்று துவங்கினான் வீரபாண்டியன்.

“மண்ணை வாரி இறைப்பார்கள்.”

“எந்த மண்ணை ?”

“எந்த மண்ணாயிருந்தாலென்ன?”

“பாண்டிய நாட்டு மண்ணாயிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். அந்த மண்ணில் நான் பிறந்தேன். அந்த மண்ணை நேசிக்கிறேன். அதற்காக எதுவும் செய்வேன். சரித்திரத்தில் துர்ப்பெயர் வாங்கவும் தயங்க மாட்டேன். இளநங்கை! நாளை முதல் நான் மரணப் படுக்கையில் இருப்பதாக எங்கும் செய்தியைப் பரப்பு. யாராவது ஒரு தூதனைப் பிடித்துப் பாண்டிய மன்னருக்கே ஓர் ஓலையும், கொடுத்தனுப்பு,” இந்தச் சொற்களை உணர்ச்சி வேகத்துடன் கூறினான் படைத்தலைவன்.

“பாண்டிய மன்னருக்கா?”

“ஆம். என் சகோதரருக்கு.”

“அதெப்படி முடியும்?”

“ஏன் முடியாது?”

“நாளைக் காலையே எதிரிப் படைகள் இந்தக் கோட்டையை வளைத்துக்கொள்ளுமென்று சொன்னீர்களே !”

“ஆம்.”

“எதிரிகள் கையில் தூதன் சிக்கிக்கொள்ள மாட்டானா?”

“சிக்கிக்கொள்ளட்டும். சிங்கணனுக்கும் செய்தி தெரியும்.”

“சிங்கணன் நம்புவானா?”

“கண்டிப்பாய் நம்புவான்?”

“இது தந்திரமென்றும் அவன் ஊகித்தால்?”

“ஊகிக்கமாட்டான்.”

“ஏன்?”

இளவரசன் இளநங்கையை உற்று நோக்கினான். “இளநங்கை! நீ பல விஷயங்களைப்பற்றிக் கேள்வி கேட்டாய். ஆனால் ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றிக் கேட்கவில்லையே” என்றும் சொன்னான்.

“எதைப்பற்றி?” என்று வினவினாள் இளநங்கை.

“இந்தத் தலைக்காயம் எனக்கு எப்படி ஏற்பட்டது என்பதைப்பற்றி” என்ற இளவரசன், தலைக்கட்டைத் தொட்டுக் காட்டினான்.

இளநங்கை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டாள். அவன் உயிருக்கு ஊசலாடிய வேதனையில் அதனால் ஏற்பட்ட மனச்சிதைவில், அதை அடியோடு தான் மறந்து விட்டதை எண்ணிய இளநங்கை, பல வினாடிகள் பிரமை பிடித்து உட்கார்ந்துவிட்டாள். “ஆம். அதைக் கேட்க மறந்துவிட்டேன். எத்தனை மௌடீகத்தனம் எனக்கு?” என்றும் அலுத்துக்கொண்டாள்.

“அதனால் பாதமில்லை. சொல்லுகிறேன் கேள். அன்று மாலை நான் கோட்டையை விட்டு வெளியே சென்றேன், நமது வேவுகாரர்கள் மலைத் திட்டுக்களைச் சரியாகக் காவல் புரிகிறார்களா என்று சோதனை செய்ய. கடைசிக் காவல் வீரனைப் பார்த்தபின்பு திரும்ப யத்தனித்தேன். அப்பொழுது செங்கால் நாரைகளின் கூட்ட மொன்று வானில் பறந்து வந்தது. அதுமட்டுமல்ல, இரண்டு வல்லூறுகளும் தூரத்தே வானில் பறந்து கொண்டிருந்தன. நாரைகள் தூதுப் பறவைகள். அவை எப்பொழுதுமே மனிதக் கூட்டமுள்ள ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பறக்கும். இறைச்சியோ வேறு மாமிசத் தீனியயோ சடலங்களோ இருக்குமிடத்திற்கு மேலே வல்லூறுகள் பறக்கும். ஆகவே தீர்மானித்தேன், ஏதோ கூட்டம் சற்றுத் தூரத்திலிருக்கிறதென்று. ஆகவே அந்தத் திசையில் நாடிச் சென்றேன். சுமார் கால் காதத்திற்குப் பிறகு, இறைச்சி வாசனை காற்றில் மிதந்து வந்தது. பட்சிகளும் கண்டபடி பறக்கலாயின. ஆகவே, மேலும் காட்டில் சென்றேன். சிங்கணன் படையின் முன்னோடிகள் பதின்மரிடம் சிக்கிக்கொண்டேன். சண்டை நடந்தது. சிலரை மாய்த்து விட்டுப் புரவியைத் தட்டி விட்டேன். போரிலொரு கோடரி என்மீது வீசப்பட்டது. தலையில் பலமாகத் தாக்கி என் மடியில் வீழ்ந்தது. அந்தக் கோடரியைப் பிடித்து இடையில் செருகிக் கொண்டேன். அத்துடன் தலையில் குருதி பீறிடக் கோட்டைக்கு விரைந்தேன். கோட்டைக்கருகே வரும்பொழுதே நினைவு தப்பிவிட்டது எனக்கு. பிறகு எதுவும் எனக்குத் தெரியாது,” என்று விளக்கிய வீரபாண்டியன், தொடர்ந்து, “ஆகவே, சிங்கணனுக்கு நான் காயம்பட்டிருப்பது அறிவிக்கப்பட்டிருக்கும். காயம் பலமானதென்பதை மட்டும் நாம் சொன்னால் போதும் நாளையே நான் சொன்னபடி செய்,” என்று உத்தரவிட்ட வீரபாண்டியன் தலையணையில் சற்றுப் புரண்டான்.

“இதனால் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?” என்று வினவினாள் இளநங்கை.

“போகப் போகப் புரிந்து கொள்வாய்” என்றான் வீர பாண்டியன்.

போகப்போகப் புரிந்துகொண்டாள் அவள். ஆனால் அவள் புரிந்துகொண்டது பெரும் விபரீதமாயிருந்தது. தோல்வி கண்ணுக்கு முன்பு தெரிந்தது, இளநங்கைக்கும் கோட்டையிலிருந்த மற்றோருக்கும். உண்மையின் கோட்டை சிங்கணனுக்குத் தானம் செய்யப்பட்டது. போலத்தானென்றும், வள்ளல்கள் பட்டியலில் வீரபாண்டியன் சேர்ந்துவிட்டானென்பதும் புரியவே அவனைப் பெரிதும் வெறுக்கவும் செய்தாள் அவள். ஆனால் அதைப்பற்றி வீரபாண்டியன் சிறிதும் கவலைப்படவில்லை. எல்லோரும் வெறுத்த பல காரியங்களைத் தொடர்ந்து செய்தான். தோல்வியைக் காண்பதில் அவன் மிக மும்முரமாயிருப்பதைக் கவனித்த கோட்டை வாசிகள் அனைவரும், சிங்கணன் படை உட்புகும் நாளைத் திகிலடைந்த சித்தத்துடன் எதிர்பார்த்துக் கொண்டி ருந்தனர். அந்த நாளும் வந்தது.

Previous articleRaja Muthirai Part 1 Ch53 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch55 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here