Home Historical Novel Raja Muthirai Part 1 Ch55 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch55 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

61
0
Raja Muthirai Part 1 Ch55 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch55 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch55 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 55 கூற்றினும் கொடிய சொற்கள்

Raja Muthirai Part 1 Ch55 | Raja Muthirai | TamilNovel.in

பாண்டிய இளவல்போட்ட கணக்குப்படியே சிங்கணன் படை மறுநாளே கோட்டாற்றுக்கரையை முற்றுகையிட்டு விட்டதைக் கண்ட இளநங்கை ஓரளவு தைரியத்தைக் கைவிட்டாளென்றால், அவளது அதைரியத்தை மட்டுமின்றிக் கோட்டைவாசிகள் கிலியையும் பன்மடங்கு கிளறிவிடும் அலுவல்களில் தொடர்ச்சியாக இறங்கினான் வீரபாண்டியன். அவன் உத்தரவுப்படி மறுநாள் காலை கோட்டைச் சுவர் மீதிருந்த விற்கூடங்களில் நின்று எதிரி வரவைக் கண்ட இளநங்கை, சுமார் பத்தாயிரம் பேர்களுக்குக் மேற்கொண்ட பெரும் படை சாரிசாரியாக மலைச்சரிவின் மூன்று பக்கங்களில் இறங்கி வந்ததையும், அவை கோட்டையின் மூன்று பக்கங் களையும் உச்சி வேளைக்குள் வளைத்துக்கொண்டு விட்டதையும் கவனித்தாள். அது மட்டுமின்றி, சிங்கணன் எப்பேர்ப்பட்ட சிறந்த படைத்தலைவன் என்பதையும் உணர்ந்து கொண்டாள் கொற்கைக் கோட்டைத் தலைவன் மகள். மூன்று பிரிவாக மலைச்சரிவில் இறங்கிய படை சீராக மூன்று பக்கங்களில் பிரிந்து, அணி வகுப்புச் சிறிதும் கலையாமலே கோட்டையின் மூன்று வாயில்களுக்கு முன்பு பரவியதையும், இருப்பினும், வாயில்களுக்கு அருகில் வராமல் எட்டவே நின்று விட்டதையும் கண்ட இளநங்கை, எதிரியின் அணிவகுப்புச் சிறப்பை மட்டுமின்றி அவன் காட்டிய எச்சரிக்கையையும் சிலாகித்தாள். கோட்டைச் சுவர்களிலிருந்து கையால் எறியப்படும் வேல்களின் வீச்சு எல்லையிலிருந்து தள்ளியே எதிரிப் படை நிற்பதைக் கண்ட இளநங்கை, சுழல் யந்திரங்களிலிருந்து வீசப்படும் வேல்கள் மட்டுமே அந்தப் படைவீரர்களை அணுக முடியுமென்பதையும், கையின் குறியளவுக்குச் சுழல் யந்திரங்களிலிருந்து வேல்களை எறிவது கஷ்டமாகையால், எதிரிப் படையை நிறுத்தியிருக்கும் நிலையில் யந்திரவீச்சு வேல்கள் பயனளிக்காதென்பதையும் புரிந்து கொண்ட இளநங்கை, சிங்கணனை வெற்றி கொள்வது அத்தனை சுலபமல்ல வென்பதையும் புரிந்து கொண்டாள். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் பெரிதும் சங்கடப்பட்ட சித்தத்துடன் உச்சி வேளைக்குப் பிறகு மீண்டும் வீரபாண்டியனைச் சந்தித்த அவள் உள்ள நிலையை மெள்ள விளக்க முயன்றாளானாலும் தனது முயற்சியில் பெரிதும் தோல்வியே அடைந்தாள்.

அவள் சொல்ல முற்பட்ட விவரங்களைக் காதில்கூட வாங்கிக்கொள்ள மறுத்த வீரபாண்டியன், அவளை ஆரம்பத்திலேயே தடுத்து, “இளநங்கை! நீ இன்று முழுவதும் உணவருந்தவில்லையே. பணிப்பெண்ணை அழைத்து உணவு கொண்டுவரச் சொல். முதலில் உன் கவசங்களைக் கழற்றி விடு. பார்ப்பதற்கும் பெரும் சங்கடமாயிருக்கிறது.” என்றான்.

முற்றுகையைப் பற்றித் தான் விவரிக்க முயன்ற விஷயங்களைக் காதில் வாங்காதது மட்டுமின்றி, தனது கவசமும் பார்ப்பதற்குச் சங்கடமாய் இருப்பதாக அவன் சொன்னது அவள் மன எரிச்சலை அதிகமாக்கிவிடவே, “எனக்குப் பசிக்கவில்லை. கவசத்தைக் கழற்றும் உத்தேசமு மில்லை,” என்று உஷ்ணம் ஒலித்த குரலில் கூறினாள்.

இளவரசன் இதழ்களில் லேசான இளநகை விரிந்தது. “கவசத்திடம் அத்தனை பிரியமா உனக்கு?” என்ற கேள்வியும் கேலிக் குரலில் பிறந்தது.
“ஆம்,” என்றாள் இளநங்கை உஷ்ணம் சிறிதும் தணியாத குரலில்.

“ஏனப்படி?” சிரத்தையின்றிக் கேட்டான் இளவரசன்.

“யாராவது கவசம் தரிக்கவேண்டும்,” என்றாள் இள நங்கை இகழ்ச்சியுடன்.

“யாராவது என்றால்?” வீரபாண்டியன் சர்வ சகஜமாக சம்பாஷணையில் இறங்கினான்.

“ஒன்று ஆண்மகன் தரிக்க வேண்டும்…” என்ற சொற் களை, “தவறு.” என்று இடைபுகுந்து வெட்டினான் வீர பாண்டியன்.

“எது தவறு?”

“ஆண்மகன் தரிக்க வேண்டுமென்பது.”

“யார் சொன்னது?”

“மன்னர்?”

“எந்த மன்னர்?”

“என் அண்ணன் பாண்டிய மன்னர்.”

“எப்பொழுது சொன்னார்?”
வீரபாண்டியன் உடனடியாகப் பதில் சொல்ல வில்லை. ஒரு விநாடி புன்முறுவல் செய்துவிட்டுச் சொன்னான்: “அதற்குள் மறந்துவிட்டாயா இளநங்கை? காட்டுக் கோட்டையில் மன்னர் சொல்லவில்லை? ‘மதுரையை எரித்த கண்ணகிபோல் சேரநாட்டை நீ அழித்துவிடு. பத்தினி ஆட்சி அங்கும் ஏற்படட்டும்’ என்று. அப்பா! அதைச் சொன்னபோது மன்னர் என்ன உற்சாகம் காட்டினார்! என்னைப் பற்றி இந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்லியிருப்பாரா? உன் சித்திரத்துக்குக் கவசம் போட்டதைக் கண்டே மன்னர் மயங்கிப் போனார். நான் கவசம் தரித்ததைப் பற்றியோ, போரிடுவதைப்பற்றியோ ஒரு வார்த்தை சொல்லியிருப்பாரா? இல்லை இளநங்கை, அவருக்கு ஆண்கள் கவசம் தரிப்பதில் இஷ்டமில்லை. பெண்களிடம், நம்பிக்கை வைத்திருக்கிறார்.”

இதைக் கேட்ட இளநங்கையின் கோபம் எல்லை மீறியது. “என்னுடன் விளையாடுகிறீர்களா?” என்று வினவினாள் ஆவேசத்துடன்.

கனல் கக்கிய அவள் கண்களைப் பார்த்துவிட்டுச் சொன்னான் வீரபாண்டியன், “விளையாட்டுக்கு அழைக்கும் பார்வையா இது?” என்று.

“எதற்கும் சமயமுண்டு,” என்று கண்டிப்புடன் சொன்னாள் இளநங்கை.

“இப்பொழுது எதற்குச் சமயம்?”

“போரைப்பற்றி விவாதிக்க.”

“ஏது போர்?”

“பார்த்தீர்களா? மறுபடியும் விளையாடாதீர்கள். என் கோபத்தைக் கிளறாதீர்கள்.”

“இல்லை, இல்லை.”

“சரி. இதைக் கேளுங்கள்,” என்று துவங்கினாள் இள நங்கை.

அவளை நிறுத்தும்படி கையைத் தூக்கி எச்சரித்த வீர பாண்டியன், “இளநங்கை, நீ இந்தக் கவசங்களைக் கழற்றி விட்டு நீராடி வா. இங்கு இருவரும் சிறிது உணவருந்து வோம், பிறகு பேசுவோம்,” என்றான்.

அவன் குரலிலிருந்த கண்டிப்பைக் கவனித்த இள நங்கை அவனுடன் மேற்கொண்டு தர்க்கிப்பதில் பயனில்லையென்பதை உணர்ந்து கொண்டதால், அவன் சொற்படி செய்யத் தனது அறைக்குச் சென்றாள். அறைக்குள் நுழைந்தவள் வெகு துரிதமாகக் கவசங்களைக் கழற்றிவிட்டு நீராட்ட அறைக்குச் சென்று மலைமகள் குறிஞ்சி நிரப்பியிருந்த நீரில் மஞ்சனமாடி, புத்தாடை அணிந்து, மலைப் புஷ்பம் ஒன்றையும் அள்ளி முடித்த குழலில் செருகிக் கொண்டு மீண்டும் வீரபாண்டியன் அறைக்கு வந்தாள். மண்டைக் காயமளித்த பெரு வேதனையிலும், அவள் நீராடி வந்த அழகையும் அந்த ஒற்றை மலரையும் பெரிதும் ரசித்தான் பாண்டிய இளவல். மெல்ல சிரமப்பட்டு நகர்ந்து தனது பஞ்சணையில் உட்காரவும் இடமளித்தான் இளநங்கைக்கு.
அவன் விருப்பப்படி பஞ்சணையில் அவனருகில் உட்கார்ந்து கொண்ட இளநங்கை, “சரி, இப்பொழுது என்ன செய்யவேண்டும்?” என்று வினவினாள்.

“நீயே போய் உனக்கும் எனக்கும் உணவு கொண்டுவா,” என்றான் வீரபாண்டியன்.

புருஷன் மூர்க்கத்தனத்தை அகற்ற வேண்டுமானால் விட்டுத்தான் பிடிக்க வேண்டுமென்று தீர்மானித்த இளநங்கை அவன் சொற்படியெல்லாம் ஆடினாள். தானே சென்று உணவுத் தட்டை எடுத்து வந்தாள். தன் கையாலேயே அவனுக்குப் பாலைப் புகட்டவும் செய்தாள். வேறு உணவு பிடிக்காததால் தானும் சிறிது பாலை மட்டும் பருகினாள். பிறகு தட்டை எட்ட வைத்துவிட்டுப் பஞ்சணையில் அவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். இளவரசன் கையொன்று அவள் மடிக்குக் குறுக்கே விழுந்தது. அந்தச் சமயத்தில் மெள்ளப் பேச்சைத் துவங்கிய இளநங்கை, “இப்பொழுது கேட்பீர்களா” என்று வினவினாள் அன்பொழுகிய குரலில்.

வீரபாண்டியன் மற்றொரு கை அவள் பின்பக்கத்தைச் சுற்றிச் சென்றது. “உம்” என்ற ஒற்றைச் சொல் மட்டும் அவனிடமிருந்தது வெளி வந்தது.

“சேரர் படைபலம் என்ன இருக்குமென்று நிலைக் கிறீர்கள்?” என்று வினவினாள் இளநங்கை.

வீரபாண்டியன் அலட்சியமாகச் சொன்ன பதில் அவளைத் தூக்கிவாரிப் போட்டது. “பத்தாயிரத்துக்குக் குறையாது,” என்றான் வீரபாண்டியன்.
“என்ன சொன்னீர்கள்?” திகைப்பளித்த வியப்புடன் கேட்டாள் இளநங்கை.

“பத்தாயிரத்துக்கு குறையாது என்று சொன்னேன்,” என்ற வீரபாண்டியன், அதைப் பற்றி ஏதும் பேசாமல் அவள் அழகை ஆராய்வதில் முனைந்தான்.

சமயம் வேறாயிருந்தால் மடியில் கிடந்த வீரபாண்டியன் கை அவளுக்கு எத்தனையோ இன்ப வேதனையை அளித்திருக்கும். ஆனால் எதிரி கோட்டைக்கெதிரே இருந்த அபாய நிலையில் அதைப் பற்றி எண்ணும் திறனையும் இழந்திருந்தாள் அவள். ஆகவே, “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் அவனை நோக்கி.

“ஊகம்தான்.”

“எப்படி ஊகித்தீர்கள்?”

“நாம் இக்கோட்டையைக் கைப்பற்றியது சிங்கணனுக்குத் தெரியும்.”

“ஆம்.”

“இந்தக் கோட்டையின் ஆதிபலமும் அவனுக்குத் தெரிந்திருக்கும்.”

“இருக்கலாம்.”
“நாலாயிரம் வீரர் காத்து நின்ற கோட்டையை நாலாயிரம் வீரர்கள்கூட இல்லாமல் பிடிக்க முடியா தென்பதை எந்தப் படைத்தலைவனும் அறிவான்.”

“சரி”

“ஆகவே நாம் குறைந்த பட்சம் நாலாயிரம் வீரர்களுடன் வந்திருப்போம் என்று சிங்கணன் நினைத்திருப்பான். அந்த நாலாயிரம் படை பலத்தில் ஆயிரம் சேதப்பட்டிருந்தாலும், மீதி மூவாயிரம் பேர் கோட்டைக்குள் இருப்பார்களென்று யாரும் ஊகிப்பார்கள்.”

“அதுவும் சரி.”

“கோட்டையைப் பிடிக்கும் எதிரி கோட்டைவாசிகளை அச்சுறுத்தி அவர்களிலொரு பகுதியையும் தன் படையுடன் இணைத்துக்கொள்வது வழக்கம். ஆக என்ன குறைந்தாலும் நம்மிடம் ஐயாயிரம் வீரர்களுக்குக் குறையாமல் இருப்பார்களென்பது சிங்கணனின் ஊகம். தவிர அவன்…” என்று திடீரெனப் பேச்சை நிறுத்தினான் வீரபாண்டியன்.

“சொல்லுங்கள்,” என்று வற்புறுத்தினாள் இளநங்கை.

“தவிர, வீரபாண்டியனை வெற்றி கொள்வது சுலப மல்ல வென்றும் நினைத்திருக்கிறான்…” என்று தட்டுத் தடுமாறிச் சொன்ன இளவரசன், சட்டென்று, சமாளித்துக் கொண்டு, “ஆகவே வெற்றிகொள்ள இரண்டத்தனை படையாவது அவசியம் என்று பத்தாயிரம் வீரர்களுடன் வந்திருக்கிறான். தவிர கோட்டையைச் சுற்றிக்கொள்ளாமல் மூன்று வாயில்களுக்கு முன்பு மட்டுமே படைகளை நிறுத்தியிருப்பான்” என்று மற்றொரு வெடியையும் எடுத்து போட்டான்.

இளநங்கையின் கண்கள் பிரமிப்பால் மலர்ந்தன. “அதுவும் தெரியுமா உங்களுக்கு?” என்று வினவினாள் பிரமிப்பு குரலிலும் ஒலிக்க.

“ஏன் தெரியாமலென்ன?” என்று கேட்டான் வீர பாண்டியன்.

“எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் இளநங்கை.

“கடல் வழியில் படை வருவது எனக்குத் தெரியும் என்பதை சிங்கணன் ஊகிக்க நியாயமில்லை. அந்த இடம் பலவீனமாயிருப்பதை நினைத்து நான் அவ்வழி தப்ப யத்தனித்தால் முன் மூன்று வாயில்களிலிருக்கும் பெரும் படை இரு பிரிவாகக் கோட்டையைத் துரிதத்தில் சுற்றி, பின் வாயிலில் வெளிப்படும் நம்மை இரு புறத்திலும் தாக்கும். அப்படித் தாக்கினால் நாம் கடலை நோக்க விரைவோம். அங்கு காத்திருக்கும் கடற்படை. கடலுக்கும் கோட்டைக்குமிடையில் நாம் சிக்கிக்கொண்டால் நாம் நிர் மூலமாகி விடுவோம்,” என்று விளக்கினான் வீரபாண்டியன்.

சிங்கணனின் பயங்கரத் திட்டம் மெள்ள மெள்ளப் புரிந்ததால், இளநங்கையின் இதயத்தில் பயம் விரிந்தது. “மிகப் பயங்கர நிலை” என்றாள் இளநங்கை கவலை விரிந்த முகத்துடன்.

“ஆம்” என்றான் வீரபாண்டியன்.
“கடற்படை என்று வரும்?” என்று வினவினாள் இளநங்கை.

“இன்னும் நான்கு நாட்களாவது பிடிக்கும்” என்ற வீரபாண்டியன், “தரைப்படை வேகத்தில் கடற்படை வர முடியாது,” என்றும் கூறினான்.

“ஏன்?”

“காற்று தெற்கு நோக்கி அடிக்கவில்லையா?”

“ஆம்.”

“எதிர் காற்றில் மரக்கலங்கள் அதிகமாகப் பாய் விரித்து ஓடமுடியாது. துடுப்புக்களால் துழாவவேண்டும்!” என்று சுட்டிக்காட்டினான் வீரபாண்டியன்.

வியப்பு மிக அதிகமாக விரிந்தது, இளநங்கை முகத்தில். காற்று வடக்கிலிருந்து அடிப்பதை அவளும் அனுபவித்திருந்தாலும், அதற்கும் கடற்படை வேகத்துக்கும் தொடர்பிருப்பதைப்பற்றி அவள் எண்ணிக்கூடப் பார்க்க வில்லை. ஆகவே எதையும் கவனிக்கும். வீரபாண்டியன் நுண்ணிய அறிவை வியந்த அவள், “அப்படியானால்?” என்று ஏதோ கேட்டாள்.

“போர் இரண்டு நாட்களுக்கு நடக்காது,” என்றான் வீரபாண்டியன்.
“அப்படியானால் இரண்டு நாளும் நாம் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதானா?” என்று வினவினாள் இளநங்கை.

“இல்லை, கைக்கு அதிக வேலை இருக்கிறது,” என்று சொன்ன வீரபாண்டியன், “இளநங்கை, நீ போய் ஓலையும் எழுத்தாணியும் எடுத்து வா,” என்றான். அவன் குரல் கட்டளைபோல் ஒலிக்கவே, அவன் சொற்படி எழுது கருவிகளைக் கொண்டு வந்தாள் இளநங்கை. உட்கார்ந்து, எழுதும்படி அவளைப் பணித்த இளவரசன் மிகப் பயங்கரமான லிகிதமொன்றை வரையக் கூற்றினும் கொடிய சொற்களை மெள்ள மெள்ள உதிர்க்கலானான். எழுத எழுத இளநங்கை கை நடுங்கியது. விவரிக்க இயலாத வேதனை அவள் உள்ளத்தை ஆட்கொண்டது. எழுத்தாணியை விசிறி எறிந்துவிடலாமா என்றுகூட ஒரு கட்டத்தில் நினைத்தாள்.

Previous articleRaja Muthirai Part 1 Ch54 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch56 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here