Home Historical Novel Raja Muthirai Part 1 Ch56 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch56 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

59
0
Raja Muthirai Part 1 Ch56 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch56 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch56 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 56 குறுக்கு வழி

Raja Muthirai Part 1 Ch56 | Raja Muthirai | TamilNovel.in

இளவரசன் உதடுகளிலிருந்து திடமாக உதிர்ந்த சொற்களைக் கேட்ட இளநங்கைக்கு, தான் கொற்கைப் புலவரிடம் பாடம் கேட்ட கம்பகாவியத்தின் முக்கிய கட்ட மொன்று நினைவுக்கு வந்தது. ‘இராமனைத் தா’ என்று விசுவாமித்திரன் கேட்டதை, ‘உயிர் இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்’ என்று கம்பர் பெருமான் வர்ணித்ததைப் புலவர் எத்தனை உருக்கமாகத் தனக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தாள் இளநங்கை. அதைவிட எமவேதனையை அளிக்கும் சொற்களை இளவரசன் உதடுகள் வெளியிட்டதை நினைத்த இளநங்கையின் இதயம் வெடித்துவிடும் நிலையிலிருந்தது. ஆனால் அதைச் சிறிதும் கவனிக்காமலோ அல்லது கவனித்தும் லட்சியம் செய்யாமனே வீரபாண்டியன் கடிதத்திற்கான வாசகத்தைச் சொல்லிக் கொண்டே போனான், அந்த வாசகத்தை அவன் சொன்னதைவிட அவன் தற்கொலை செய்துகொள்வது கூட சாலச் சிறந்தது என்று எண்ணினாள் இளநங்க கடிதத்தின் வாசகம் ஆரம்பத்திலிருந்தே சுறுசுறுப்புடன் தொடங்கி மெள்ள மெள்ள உச்சஸ்தாயியை அடைந்து கொண்டிருந்தது. ஒரு நிலையில் வீரபாண்டியன் வாசகத்தைச் சொல்வதை நிறுத்த, “இளநங்கை, எழுதி வரையில் படி,” என்று நியமித்தான்.

அவள் படித்தாள், “சந்திரகுலத் தோன்றலான சுந்தர பாண்டியத் தேவர் பெருமான் கழல் பணிந்து வீரபாண்டியன் வரையும் ஓலை. மன்னர் கட்டளைப்படி கோட்டாற்றுக் கரையைப் பிடித்து விட்டேன். ஆனால் பெரும்படை என்னை எதிர்த்ததால் எனது வீரர்களில் பெரும்பாலோர் மாண்டு விட்டனர். மீதியுள்ளோரைக் கொண்டு கோட்டையைப் பாதுகாக்க நான் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில், சிங்கணன் பெரும்படையுடன் கோட்டையை வளைத்து முற்றுகையிட்டிருக்கிறான். தவிர, நான் நேற்றுக் கோட்டையைவிட்டு எதிரியைப் பற்றிப் புலனறிய வெளியேறியபோது, பலமான கோடரியால் தாக்கப்பட்டுப் பிழைத்ததே பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது. கை காலை அசைக்கவும் முடியாமல் படுத்துக் கிடக்கிறேன். இந்த நிலையில் நான் எப்படிப் படைகளை நடத்த முடியும்? கோட்டையைத்தான் எப்படிப் பாதுகாக்க முடியும்? உபதளபதியோ பெண்! போர்க்களத்தை முதன் முதலாக இங்குதான் பார்த்திருக்கிறாள். அவளால் படைகளை நடத்த முடியாது. பிராணனுக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் எனக்கு, சிங்கணனைப்போன்ற ஒரு பலத்த எதிரியுடன் போராட உடல் சக்தியுமில்லை , படை பலமும் இல்லை …”

இதுவரை படித்த இளநங்கை மௌனம் சாதித்தாள். “சரி மேலே எழுது.” என்று வீரபாண்டியன், மேலும் சொன்னான். “ஆகவே நான் சிங்கணனிடம் சரணடையத் தீர்மானித்துவிட்டேன். அதற்குத் தங்கள் அனுமதி தேவை. என் உயிர் என்ன ஆகுமோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். காட்டுக் கோட்டையில் சிங்கணன் உயிரை நான் காப்பாற்றியதால் சமயம் வரும்போது என் உயிரைக் காப்பாற்றுவதாகச் சிங்கணன் உறுதி கூறியிருக்கிறான். சிங்கணன் வார்த்தை தவறாதவன். தங்கள் அபாக்கிய சகோதரன், வீரபாண்டியன்.”
இப்படிக் கடிதத்தைச் சொல்லிமுடித்த வீரபாண்டியன் “சரியாகப் போய்விட்டது. போதுமல்லவா?” என்று இளநங்கையைக் கேட்கவும் செய்தான்.

இளநங்கை பதில் சொல்லும் நிலையில் இல்லை. விவரிக்க இயலாத வேதனை அவள் உள்ளத்தைச் சுக்கு நூறாக வெடிக்கச் செய்துகொண்டிருந்தது. இப்படிப் பகிரங்கமாகத் தனது கோழைத்தனத்தை எடுத்துச் சொல்லும் யாரைப்பற்றியும் அவள் கேள்விப்பட்டதுகூட இல்லை. இக்கடிதத்தைப் பார்த்தால் பாண்டிய மன்னர் எத்தனை கொதிப்படைவார் என்று எண்ணிப் பார்த்து நெஞ்சுருகிப் போனாள் அவள். இத்தனைக்கும்! வீரபாண்டியன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவள் மௌனத்தைப்பற்றியும் சிறிதும் லட்சியம் செய்தானில்லை. “இப்படிக் கொண்டுவா அதை” என்று ஓலையை வாங்கி, தனது முத்திரை மோதிரத்தை ஓலையில் நன்றாக அழுத்தி இலச்சினை வைத்தான். “இதை மன்னருக்கு அனுப்பும் குழலில் போட்டுவிடு”, என்று உத்தரவிட்டுப் பஞ்சணையில் சற்று அசைந்து படுத்துக் கொண்டான்.

இளநங்கை மௌனமே சாதித்தாள். ஏதோ சிலையைப்போல் எழுந்து நடந்து மன்னருக்குச் செய்தி அனுப்பும் சிறு வெள்ளிக் குழலில் ஓலையைத் திணித்துக் கொணர்ந்து வீரபாண்டியனிடம் நீட்டினாள். அதை வாங்கிக் கையில் உருட்டிப் பார்த்த வீரபாண்டியன் “இதிலும் எனது வீரச் சின்னம் இருக்கிறது பார்த்தாயா?” என்று, அதன் மேலிருந்த யானை, கோடரி, மீன் இவையிணைந்த முத்திரைக் கீற்றுகளைக் காட்டினான்.

“பார்த்தேன்” என்று வெறுப்புடன் கூறினாள் இளநங்கை.
“இதிலிருந்து என்ன தெரிகிறது?” என்று வினவினான் வீரபாண்டியன்.

“அபக்கியாதி தெரிகிறது” என்று குரலில் வெறுப்பு அதிகமாக ஒலிக்கச் சொன்னாள் இளநங்கை.

வீரபாண்டியன் முகத்தில் முறுவல் கோட்டினான். “இளநங்கை! இதில் என்ன அபக்கியாதி இருக்கிறது. என்றும் வினவினான்.

“சரணடைவது பிரக்கியாதியோ?” என்று வினவினாள் உஷ்ணத்துடன் இளநங்கை.

“சில சமயங்களில் பிரக்கியாதிதான். விபீஷணன் சரணடைந்தது காவியத்தில் எத்தனை சிறப்பான இடம் பெற்றிருக்கிறது?” என்று கேட்டான் வீரபாண்டியன்.

இளநங்கையின் ஆத்திரம் அதிகமாகவே, “உங்கள் அண்ணன் என்ன இராவணனா, அல்லது வந்திருக்கும் சிங்கணன் இராமனா?” என்று பதிலுக்குக் கேட்டாள்.

அவள் ஆத்திரத்தை அதிகமாக்கும் வகையில் விரிந்தது வீரபாண்டியன் புன்முறுவல். “போகப் போகப் புரியும் உனக்கு,” என்று மட்டும் கூறினான் அவன். அந்த ஓலையை அனுப்ப யாராவது ஒரு தூதனை அழைத்து வரும்படியும் உத்தரவிட்டான் அவளுக்கு. அதை நிறை வேற்ற அறையை விட்டு வெளிக்கிளம்பிய அவளை, “இளநங்கை?” என்று தடுத்து, அழைத்து, “தூதன் வீரனாக இருக்கவேண்டாம். எழுதப் படிக்கத் தெரியாத சாதாரணப் பணிமகன் போதும். குறிஞ்சியிடம் சொல்லி யாராவது மலைச் சாதியானைப் பிடித்து அழைத்துவா,” என்றும் கூறினான்.

இளவரசனின் போக்குப் பெரும் புதிராகவும் வேதனையாகவும் இருந்ததாலும், தான் ஏதும் தனிப்படச் செய்யும் நிலையில் இல்லாததாலும் அவன் சொற்படியே செய்ய முற்பட்டாள் இளநங்கை. அவன் விருப்பப்படி அன்றிரவே மலைச்சாதி வாலிபன் ஒருவனைக் குறிஞ்சி அவனறைக்கு அழைத்து வந்துவிட்டுப் போனாள். அவனை நோக்கிய வீரபாண்டியன், “தம்பி! உனக்கு மலைவழிகள் நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டான்.

படைத் தலைவனுக்குத் தலை வணங்கிய வாலிபன் சொன்னான், “தெரியும்,” என்று.

“எழுதப் படிக்கத் தெரியுமா?” என்று மீண்டும் வினவினான் வீரபாண்டியன்.

“தெரியாது” என்றான் அந்த வாலிபன்.

“நல்லது, நல்லது,” என்று உற்சாகப்பட்ட வீர பாண்டியன் ஓலைக்குழலை எடுத்து அவனிடம் நீட்டி, “இதைக் கொண்டு போய் நீ சேரநாட்டுத் தென்புலத்தில் இருக்கும் பாண்டிய மன்னனிடம் சேர்க்கவேண்டும். இரவு நன்றாகச் சூழ்ந்ததும் கிளம்பி, மேற்கு வாயில் வழியாக ரகசியமாகக் கிளம்பிப் போ. மேற்கு வாயிலில்தான் எதிரிகள் இல்லை. மெல்லக் கடற்கரைப் பக்கம் சென்று கடற்கரையோரமே ஓடிவிடு. சற்று தூரத்திற்குப் பின் மீண்டும் மலைப்பாறைக்கு வந்து தெற்கே செல், புரிகிறதா?” என்று வினவினான்.
“புரிகிறது,” என்றான் வாலிபன்.

“என்ன புரிகிறது?’ என்று வீரபாண்டியன் கேட்டான்.

“மற்ற மூன்று வாயில்களில் எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்களில் படாமல் செல்ல மேற்கு வாயில்தான் நல்லது,” என்றான் வாலிபன்.

“சரி சரி. சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். போய் வா. உன் பயணத்துக்கு வேண்டிய பொற்காசுகளை உபதளபதி அளிப்பார். ஓலை கிடைத்ததும் மன்னரும் உன்னைச் சன்மானிப்பார்.” என்ற வீரபாண்டியன் அவனை வெளியே செல்லும்படி சைகை செய்து அவனுக்குத் தேவையான பொற்காசுகளைக் கொடுக்கும் படி இளநங்கைக்கும் உத்தரவிட்டான். “ஐந்நூறு பொற்கழஞ்சுகள் கொடுத்தனுப்பு,” என்றும் கூறினாள் இளநங்கையிடம்.

“ஐந்நூறா, புலவர்களுக்குத்தான் இப்படிப் பொன்னை வாரி இறைப்பது வழக்கம்” என்றாள் இளநங்கை.

“ஐநூறுக்குக் குறைந்து இவன் கையிலிருந்தால் சிங்கணன் நம்பமாட்டான்” என்றான் படைத் தலைவன்.
“எதை நம்பமாட்டான்?” இளநங்கையின் குரலில் வியப்பு ஒலித்தது.

“நாம் சரணடையப் போவதை,” என்று சுட்டிக் காட்டினான் வீரபாண்டியன்.

இளநங்கையின் விழிகளில் வியப்பு மீண்டும் மண்டியது. இருப்பினும் தூதன் எதிரில் ஏதும் கேட்க இஷ்டப்படாமல் அவனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள். அவனை அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்த பிறகு ஒரு. நாழிகை கழித்து மீண்டும் வீர பாண்டியன் அறைக்குள் வந்த இளநங்கை, “எனக்குச் சில விஷயங்கள் புரியவில்லை,” என்று துவங்கினாள் பேச்சை.

“எந்த விஷயங்கள்?” என்று வினவினான் வீர பாண்டியன் சர்வ சாதாரணமாக.

“சரணடையப் போவதாக மன்னருக்கு ஓலை எழுதி யிருக்கிறீர்கள்…”

“ஆம்.”

“சாதாரணமாக வீரர்களிடம் அனுப்பும் ஓலையை ஒரு காட்டாளிடம் கொடுத்திருக்கிறீர்கள்.”

“ஆம்.”

“இவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாததைக் கேட்டு மகிழ்ந்தீர்கள்.”

“ஆம்.”

பிறகு மேற்கு வாயிலில் எதிரிகள் இல்லாத பக்கமாகப் போகச் சொன்னீர்கள்.”

“மிகவும் சரி.”

“பிறகு சிங்கணனுக்கு நம்பிக்கை வர ஐந்நூறு பொற் காசுகளை இவனிடம் கொடுக்கச் சொன்னீர்கள்.”

“ஆம்.”

“அப்படியானால் இவன்…” என்ற இளநங்கையின் வாசகத்தை இடையில் வெட்டிய இளவரசன், “சிங்கணனிடம் இன்று நள்ளிரவில் நிச்சயம் சிக்கிக்கொள்வான்,” என்று பூர்த்தி செய்தான்.

இளநங்கைக்கு ஏதும் புரியவில்லை. “நீங்கள் எதற்காக ரகசிய ஓலை எழுதவேண்டும்? பிறகு எதற்காகத் தூதனை எதிரியிடம் சிக்க வைக்கவேண்டும்?” என்று வினவினாள் குழப்பத்துடன்.

வீரபாண்டியன் அவளைத் தன்னருகில் வந்து உட்காரும் படி கூறினான். வேண்டா வெறுப்பாக உட்கார்ந்த அவளை நோக்கி, “இதில் என் மதிப்பும், உன்மதிப்பும் சம்பந்தப்பட்டிருக்கிறது இளநங்கை” என்றான் பரிதாபக் குரலில்.

“மதிப்பா! உங்களுக்கும் எனக்குமா? இந்த ஓலைக்கு பின்பா ?”

“ஆமாம்.”

“என்ன மதிப்போ ?”
இதற்குப் பதில் சொல்லு முன்பு சற்று நிதானித்தான் வீரபாண்டியன், பிறகு மெள்ளச் சொன்னான், “இளநங்கை! சிங்கணன் நிலையில் நீ இருந்து விஷயத்தைத் தொகுத்துப் பார். ஒரு காட்டாள் ரகசியமாக வீரர் சூழாத மேற்கு வாயில் பக்கம் வெளிவருகிறான். அந்த வாயில் சூழப்படாவிட்டாலும் ஒற்றர் கண்காணிப்பு அதற்கு இருக்கும். அந்த ஒற்றர்கள் அந்தக் காட்டாளைப் பிடித்துச் சிங்கணனிடம் அழைத்துச் செல்கிறார்கள். அவனிடம் ஐந்நூறு பொற்காசுகள் இருப்பதைப் பார்க்கிறான் சிங்கணன். பிறகு ஓலையைப் படிக்கிறான். பிறகு என்னைச் சிலாகிக்கிறான். ‘வீரபாண்டியன் அறிவில் சிறந்தவன். ஆகையால்தான் ஓலை இன்னதென்று அறியாத ஒரு மலைவாசியிடம் ரகசிய ஓலை கொடுத்து, எனது வீரரில்லாத மேற்கு வாயில்மூலம் அனுப்பியிருக்கிறான். மலைவாசியை அபாயப் பணிக்குத் தூண்டவே அளவுக்கு மீறிப் பொன்னும் கொடுத்திருகிறான்,’ என்று மெச்சுகிறான். இந்த நிலையில் இந் ஓலையை அவன் நம்புவான், புரிகிறதா?”

இளநங்கைக்கு நன்றாகப் புரிந்தது. ஆகவே கேட்டாள், “நம்பி என்ன செய்வான்?” என்று.

“அவனாக என்னைச் சந்திப்பான்,” என்றான் வீர பாண்டியன்.

“சந்தித்து.”

“சரணடையக் கூறுவான்.”

“கூறினால்?”

“நான் ஒப்புக் கொள்வேன்.”

“அதிலென்ன பயன்?”

“பெரும் பயன் இருக்கிறது. நானாக அவனிடம் சரணடைவதாகச் சொல்லவில்லை. அதுவே நமக்கு மதிப்பு. அவனாக வந்து கேட்கும்போது நான் நேரிடையாகச் சரணடைய மறுப்பேன்…” என்ற வீரபாண்டியனை இடை மறித்த இளநங்கை, “இதில் குறுக்குவழி இருக்கிறதா?” என்று வினவினாள்.

“இருக்கிறது. நமது மதிப்புச் சிறிதும் குறையாத வகையில் சரணடைந்து விடலாம்,” என்றான் வீரபாண்டியன் குதூகலத்துடன்.

அந்த மதிப்பை நினைக்க நினைக்க இளநங்கைக்குப் பிராணன் போய்விடும் போலிருந்தது. “சரணாகதியில் மதிப்பு வேறா?” என்று சீறினாள்.

அவள் இதயம் கொதித்துக் கொண்டிருந்தது!

“இளநங்கை! உண்மையைச் சொல்லட்டுமா?” என்று குழைந்தான் வீரபாண்டியன்.

“என்ன உண்மை?” என்று கேட்டாள் அவள் கொதிப்புடன்.

“உண்மையில் நான் சிங்கணனிடம் சரணடையப் போவதில்லை,” என்றான் வீரபாண்டியன்.

இளநங்கையின் முகத்தில் புத்தொளி பிறந்தது.“அப்படியா?” என்றாள் ஆவலுடன்.

“ஆம்,” என்றான் வீரபாண்டியன்.

“வேறு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று வினவினாள் அவள்.

பதில், இடியென அவள் தலையில் இறங்கியது. “தோல்வியடையப் போகிறேன்,” என்ற சொற்களை உற்சாகத்துடன் உதிர்த்த இளவரசன், “இதில்தானிருக்கிறது ஒரு குறுக்குவழி” என்றும் கூறினான்.

அந்தக் குறுக்கு வழி அடுத்த நாளே விளங்கியது அவளுக்கு. விளக்கம் மிகவும் பயங்கரமாயிருந்தது.

Previous articleRaja Muthirai Part 1 Ch55 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here