Home Historical Novel Raja Muthirai Part 1 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

55
0
Raja Muthirai Part 1 Ch57 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch57 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 57 வஞ்சகனா இவன்?

Raja Muthirai Part 1 Ch57 | Raja Muthirai | TamilNovel.in

கோட்டாற்றுக் கரைக் கோட்டையைச் சிங்கணனுக்குத் தானம் செய்து பாரியையும் பேகனையும்போல் வள்ளல்கள் பட்டியலில் தானும் சேரப் போவதாக முதலிலும், எதிரியிடம் சரணடைந்துவிடப் போவதாக இரண்டாம் முறையும், தோல்வியடையப் போவதாக இறுதியாகவும், இப்படி அடுத்தடுத்துச் சொன்ன வீரபாண்டியன் மனத்தில் என்னென்ன எண்ணங்கள்தான் ஓடுகின்றன என்பதை நிச்சயமாக நிர்ணயிக்க முடியாத இளநங்கை, ஒருவேளை தலையில் பட்ட அடி சித்தப்பிரமையை உண்டாக்கியிருக்குமோ என்றுகூட நினைத்தாள். அந்த நினைப்பின் விளைவாக அவனைக் கூர்ந்து பரிதாபத்துடன் பல விநாடிகள் நோக்கவும் செய்தாள். பிறகு பெரும் வேதனைக்கான பெரு மூச்சொன்றும் அவளிடமிருந்து வெளிவந்தது.

அந்தப் பெருமூச்சைக் கண்ட படைத்தலைவன் புன்முறுவல் செய்து, “இளநங்கை! நமது தொல்லைகள் தீரும் சமயத்தில் வேதனை எதற்கு? சற்றுச் சிரி, பார்ப்போம்,” என்று தனது வலக்கையால், அவள் முகவாய்க் கட்டையைப் பிடித்து முகத்தைச் சற்று நிமிர்த்தினான்.

இளநங்கையின் வேதனை நிரம்பிய விழிகள் அவன் மீது நன்றாக நிலைத்தன. “எந்தத் தொல்லையைக் குறிக்கிறீர்கள்?” என்று வினவினாள் துக்கம் தொண்டையை லேசாக அடைக்க!

“இந்தப் போர்த் தொல்லை. நாமிருவரும் சேர்ந்து நிம்மதியாக வாழவிடாமல் அடிக்கும் சேரநாட்டுப் படையெடுப்பு இடையூறுகள். இவற்றைத்தான் சொல்லுகிறேன்.”

அவன் பதில் அவள் மனப்புண்ணை ஆற்றுவதற்குப் பதில் அதிகமாகக் கிளறவே செய்தது. “இவை தொல்லையல்ல, கடமை,” என்று குறிப்பிட்டாள் அவள்.

“அப்படியே வைத்துக் கொள். கடமையைத்தானே நிறைவேற்றுகிறோம் இப்பொழுது?” என்றான் வீரபாண்டியன்.

“என்ன கடமை? எதிரியிடம் சரணடைவது பெரும் கடமையா? அல்லது தோல்வியடைவதுதான் கடமையா?” என்று கேட்டாள் இளநங்கை.

“அவசியமானபோது சரணடைவதும் கடமை. தோல்வியடைவதும் கடமை. இந்த இரண்டு சாதனங்களால் நம்மை நம்பியிருக்கும் படை வீரர்களைக் காப்பாற்றுகிறோம் என்பது நினைவிருக்கட்டும். அவர்களிடமும் நமக்குக் கடமையிருக்கிறதல்லவா?” என்று விளக்கிய வீரபாண்டியன், அவள் கைகளிலொன்றை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு அழுத்திப் பிடித்தான்.

அவன் கையில் அவள் கை வழக்கம்போல் சுழல வில்லை. வெறும் மரக்கட்டைபோல் உணர்வற்றுக் கிடந்தது. அவன் சுட்டிக் காட்டிய கடமை, வீரர்கள் ஒப்புக்கொள்ள முடியாத பெரும் விபரீதமான கடமையாயிருந்ததால், ‘மனிதர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சப்பைக் கட்டுக் கட்ட எத்தனை விதமான கடமைகளைச் சிருஷ்டித்துக் கொள்கிறார்கள்! எத்தனை விபரீதமான வாதங்களைக் கிளப்புகிறார்கள்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் இளநங்கை. ‘இவர் ஏதோ தோல்வியில் ஒரு குறுக்குவழி இருப்பதாகச் சொன்னாரே அது என்னவாயிருக்கும்?’ என்றும் தன்னைத் தானே கேட்டுக்கொண்டு விடை காணாததால் தவித்தாள்.

ஆனால் அந்த விடை அடுத்த நாள் மாலையில் கிடைத்தது. கிடைத்தபோது வேதனையின் எல்லைக்கு அவளை இழுத்துச் சென்றது. வீரபாண்டியன் தனது வாழ்க்கையை அடியோடு நாசம் செய்து கொண்டு விட்டான் என்ற எண்ணத்தால் அவள் இதயம் வெடித்து விடும் நிலைக்கு வந்தது.

ஆனால், பாண்டிய மன்னனுக்கு ஓலையுடன் தூதனை அனுப்பிய முதல் நாளிரவு பெரும் குழப்பத்திலேயே இருந்தாள் இளநங்கை, மறுநாள் வரக் காத்திருந்த விபரீதத்தின் கடுமையை உணராமல். அன்றிரவு அவள் சரியாக உணவருந்தவில்லை. வீரபாண்டியனிடம் வரும் போது செய்துகொள்ளும் அலங்காரத்தைக்கூடச் சரியாகச் செய்து கொள்ளவில்லை. எல்லாவற்றிலும் ஓர் அசட்டையும் கசப்பும் இருந்தது அவளுக்கு. அன்றிரவில் படுக்க வந்த போதும், அவள் பஞ்சணைக்குச் சென்ற போதும், தனது பஞ்சணைக்கு வரும்படி வீரபாண்டியன் அழைத்தபோதும், சலிப்புடனேயே அவன் பஞ்சணையில் சென்று உட்கார்ந்தாள் அவள். அவன் அவளை காதலுடன் தழுவியபோது கூட உணர்ச்சியேதுமற்ற கட்டை யாகவே கிடந்தாள் அவள். பிறகு மெல்ல விடுவித்துக் கொண்டு தனது பஞ்சணைக்கு வந்து படுத்துக் கண்களை மூடினாள்.

புறக்கண்கள் மூட அகக்கண்கள் திறந்து பெரும் விபரீதக் காட்சிகளை அவள் சிந்தையில் உலாவவிட்டன சிங்கணனுடைய வெற்றிப் புன்முறுவலும், பாண்டியர் படை தலை குனிந்து நடந்து கோட்டையிலிருந்து வெளியேறும் காட்சியும் விரிந்தது அவள் மனக்கண்கள் முன்பாக தோல்வியடைந்து காவலில் இருந்த விஜயவர்மன்கூட அவனை நோக்கி வெற்றி நகை நகைத்தான். இவற்றை யெல்லாம் காணக் காண உள்ளம் கொதித்ததால் நிம்மதியோ உறக்கமோ இன்றி இரவைக் கழித்த இளநங்கை விடியற்காலையிலேயே எழுந்து அறையைவிட்டு வெளியே சென்றாள்.

இரவு முழுவதும் வேதனைப்பட்டுத் தலையணையில் புரண்டு புரண்டு படுத்ததால் அவள் கருங்குழல் பெரிதும் கலைந்து சிதறியிருந்ததன்றி, புடவையும் நெகிழ்ந்து கிடந்தது. அத்தகைய கோலத்துடன் வெளியே வந்த இளநங்கையை நோக்கிய குறிஞ்சி இளநகை கொண்டாள். அந்த இளநகைக்குக் காரணம் என்னவென்பதை நொடிப் பொழுதில் உணர்ந்த இளநங்கை பதிலுக்கு வேதனைப் புன்முறுவல் ஒன்று செய்து, “என்ன சிரிக்கிறாய் குறிஞ்சி?” என்று வினவினாள்.

நேரடியாகப் பதில் சொல்லவில்லை பணிமகள். “இரவு முழுதும் தூக்கமில்லையா தேவி?” என்று வினவினாள்.

அக்கேள்வியிலிருந்த கள்ளத்தனத்தைப் புரிந்து கொண்ட இளநங்கை, “ஆம் குறிஞ்சி,” என்று மட்டும் சொன்னாள்.
“படைத்தலைவர்கூட உறங்கவில்லையா?”

“உறங்கினார். குறிஞ்சி.”

“அப்படியானால்…..!”

“பஞ்சணையில் புரண்டேன் குறிஞ்சி.”

“எந்தப்…”

“சி, சீ, அதெல்லாமொன்றுமில்லை, குறிஞ்சி. என் பஞ்சணையில்தான். நீ போய் நீராட்டத்துக்கு ஏற்பாடு செய்,” என்று இளநங்கை சொல்லவே, பணிமகள் குழப்பம் நிரம்பிய பார்வையொன்றை அவள் மீது வீசிவிட்டுச் சென்றாள்.

குறிஞ்சி நீராட்ட ஏற்பாடுகளைச் செய்ததும், நீராடிப் புத்தாடை புனைந்து, சல்லடமும் கவசமும் தரித்து வீர பாண்டியன் அறைக்குள் சென்ற இளநங்கை, வீரபாண்டியனை நோக்கி, “கோட்டையைப் பார்வையிடச் செல்கிறேன். உத்தரவு ஏதாவது உண்டா ?” என்று வினவினாள்.

“உண்டு.” சகஜமாக வந்தது படைத்தலைவன் பதில்.

அவன் இருந்த நிம்மதியைக் கண்டு வியந்தேபோனாள் வாணாதித்தன் மகள். “என்ன உத்தரவு?” என்று அந்த வியப்பினூடே கேட்கவும் செய்தாள்.

“இங்கிருந்து நேராகக் கோட்டையின் கிழக்கு வாயிலுக்குச் சென்று கோட்டைச் சுவரில் ஏறிப் பார். அங்குள்ள எதிரியின் படைப் பிரிவில் பரபரப்பு இருக்கும் நீ அதைக் கவனிக்காததுபோல் கோட்டைப் பாதுகாப்க்களைக் கவனித்துக் கொண்டிரு. விற்கூடங்களைச் சரி பார்த்து வீரர்களை எச்சரிக்கை செய்து, எதிரி முற்றுகையை முறியடிப்பதுபோல் மும்முரம் காட்டு. எதிரியின் தாரைகள் சப்தித்து, எதிரி உன்னிடம் பேச இஷ்டப்பட்டால் கோட்டைத் தளத்திலிருந்தே பேசு. என்னைப் பார்க்க சிங்கணன் இஷ்டப்பட்டால், என்னைக் கேட்டுத் தெரிவிப்பதாகக் கூறு, பிறகு இங்கே வா,” என்று கூறி அவள் செய்ய வேண்டியதை எடுத்துக் கூறினான், வீரபாண்டியன்.

எதிரியிடம் கோட்டையை ஒப்படைக்கத்தான் இந்த ஏற்பாடுகளெல்லாம் என்பதை உணர்ந்திருந்த இளநங்கை அவனிருந்த அறையிலிருந்து வேதனையால் கனத்த இதயத் துடன் வெளியேறினாள். அவன் திட்டப்படி கோட்டையின் கிழக்கு வாசற்படிக்குச் சென்றாள். அங்கு வீரபாண்டியன் எதிர்பார்த்தபடியே சகலமும் நடந்ததைக் கண்டு பெரும் வியப்பும் எய்தினாள். கோட்டைச் சுவர்மீது அவள் ஏறிப் பார்த்தபோது எதிரிப்படைகளிடையே பெரும் சுறுசுறுப்புக் காணப்பட்டது. புரவி வீரர்கள் அங்குமிங்கும் வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். சிலர் அணிவகுப்பிலிருந்தும் பிரிந்து கூட்டம் கூடி எதையோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டிருக்கிற தென்பதை ஊகிக்கவோ, அந்த நிகழ்ச்சி என்னவென்பதை அறியவோ வினாடி நேரம் கூடப் பிடிக்கவில்லை இளநங்கைக்கு. வீரபாண்டியன் திட்டப்படி தூதன் ஓலையுடன் சிங்கணனிடம் சிக்கிவிட்டான் என்பதையும் அதனால்தான் அத்தனை சுறுசுறுப்பும், அணி வகுப்பைக் கலைக்கும் அளவுக்கு அசிரத்தையும் எதிரிக்கு ஏற்பட்டிருக்கிற தென்பதையும் புரிந்து கொண்டாள் இளநங்கை. அடுத்த ஒரு நாழிகைக்குள் வீரபாண்டியன் சுட்டிய அடுத்த நிகழ்ச்சி ஏற்பட்டது. எதிரியின் முரசுகள் திடீரென விட்டு விட்டு ஒலித்தன. தூரத்திலிருந்த பாசறையிலிருந்து புரவி வீரனொருவன் வெகுவேகமாகக் கோட்டைச் சுவருக்குச் சற்று எட்டவே நின்று கொம்பொன்றை எடுத்து ஊதினான்.

இளநங்கை கோட்டைச் சுவரின் முகப்புக்கு வந்து, “யார் நீ? என்ன வேண்டும்?” என்று உரத்த உரலில் கேட்டாள்.

“வீரபாண்டியரைப் பார்க்க போசளத் தண்டநாயகர் சேரர் பெருமான் துணைவர் சிங்கணர் விரும்புகிறார்.” என்று அவனும் பதிலுக்குக் கூறினான்.

“எதற்காகப் பார்க்க விரும்புகிறார்?”

“அதை வீரபாண்டியரிடம் சொல்லுவார் தண்ட நாயகர்.”

“நான் உபதளபதி என்னிடமும் சொல்லலாம்.”

“சொல்லிப் பயனில்லையென்பது தண்டநாயகர் கருத்து.” வீரன் பதில் திட்டமாகவும் அதிகாரத் தோரணையிலும் அமைந்திருந்தது.

அதனால் உள்ளூர வெகுண்ட இளநங்கை அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “அப்படியானால் நடுப் பகலில் மீண்டும் வா. நான் சென்று படைத் தலைவர் அனுமதி பெற்று வருகிறேன்.” என்று கூறவே, வீரன் புரவியைத் திருப்பிக் கொண்டு பாசறையை நோக்கி மலைச் சரிவில் சென்றான்.
சுமார் நாலைந்து நாழிகைக்குப் பிறகு, மீண்டும் படைத் தலைவனைச் சந்தித்த இளநங்கை நடந்ததைக் கூறிப் பதில் என்னவென்று வினவினாள்.

“உனக்குத் தெரிந்த பதில்தானே இளநங்கை?” என்றான் வீரபாண்டியன் முறுவல் செய்து.

“ஆம் தெரிந்ததுதான்” என்றாள் இளநங்கை.

“சிங்கணனை வரச் சொல்.”

“எப்பொழுது?”

“மாலையில்.”

“மாலைவரை எதற்கு அவகாசம்?”

“உடனடியாகத் தோல்வியடையத் துடிக்கிறாயா இளநங்கை?”

“இல்லை இல்லை. நீங்கள்தான் துடிக்கிறீர்கள். என்றாள் வெறுப்புடன் வாணாதித்தன் மகள்.

“ஆமாம்” என்றான் வீரபாண்டியன்.

“என்ன ஆமாம்?”

“துடிக்கிறேன்.”
“தோல்விக்கா?”

“ஆம். அதில்தானே குறுக்குவழி இருக்கிறது?”

இதைக் கேட்ட இளநங்கை, “என்ன குறுக்கு வழியோ?” என்று அலுத்துக் கொண்டாள்.

“சிங்கணன் வரட்டும். உனக்கே புரியும்,” என்றான் இளவரசன்.

என்ன புரியப் போகிறதோ என்ற திகிலுடன் மீண்டும் கோட்டைச் சுவருக்குச் சென்ற இளநங்கை, தனது முரசுகளை ஒலித்து எதிரி வீரனை வரவழைத்துச் சிங்கணனைப் படைத்தலைவர் மாலையில் பார்க்க இசைந்துள்ளதாக தெரிவித்தாள். தவிர, தானாகவும் சில நிபந்தனைகள் விதித்தாள். “தண்டநாயகர் இரண்டே மெய்க்காவலருடன் வரவேண்டும், கோட்டைக் கதவுகள் திறக்கப்படும்போது முற்றுகை வீரர்கள் யாரும் ஓர் அடிகூட முன்னேற முயலக் கூடாது. முயன்றால் கோட்டைச் சுவர் மீதுள்ள பெரு விற்கள் இயங்கும்,” என்று எச்சரிக்கவும் செய்தாள்.

அவள் நிபந்தனைப்படியே அன்று மாலையில் பெரும் புரவியொன்றில் சிங்கணன் அலட்சியமாகக் கோட்டையின் கிழக்குக் கதவுகளை நோக்கி வந்தான் அவனுக்கு இரு புறமும் மெய்க் காவலர் புரவிகளில் வந்தனர். அந்த இருவரிடமும் ஆயுதமேதும் இல்லை. சிங்கணன் மட்டும் பெருவாளொன்றை இடைக் கச்சையில் கட்டியிருந்தான். அவன் கதவுகளை அணுகியதும் கதவுகளைத் திறந்து அவன் உள்ளே வர அனுமதித்தாள் இளநங்கை. பிறகு, கதவுகளை அடைத்துத் தாழிடச் சொல்லிக்காவலரை எச்சரித்துச் சுவரிலிருந்து கீழிறங்கி சிங்கணன் முன்பு வந்தாள்.

சிங்கணனின் கூரிய கண்கள் அவளை ஒரு வினாடி ஆராய்ந்தன. “உபதளபதிக்கு வணக்கம்,” என்ற சொற்களும் உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

அந்தச் சொற்களில் ஏளனம் பெரிதுமிருந்ததை உணர்ந்தாள் இளநங்கை. இருப்பினும் அதைக் கவனியாதது போல் தானும் சம்பிரதாயமாகத் தலை வணங்கி விட்டுத் தனது புரவியில் ஏறிக்கொண்டு அவனைத் தன்னைத் தொடரும்படி சைகை செய்தாள். இப்படி அவனை அழைத்துக்கொண்டு படைத் தலைவன் மாளிகைக்கு வந்த இளநங்கை, சிங்கணன் மெய்க்காவலரை வாயிலிலேயே இருக்கச் செய்து, சிங்கணனுடன் உப்பரிகைப் படிகளில் ஏறி, படைத்தலைவன் அறை வாயிலுக்கு வந்து சேர்ந்தாள். அங்கிருந்த பணிமகளிடம், “குறிஞ்சி! படைத்தலைவரிடம் தண்டநாயகர் வந்திருப்பதை அறிவி,” என்று உத்தர விட்டாள்.

சிங்கணனை அதுவரை பார்த்திராத பணிமகள் வாயைப் பிளந்து அதிர்ச்சியுற்றுச் சில வினாடிகள் நின்று விட்டாள். பிறகு ஓடிச் சென்று படைத் தலைவரிடம் சிங்கணன் வரவை அறிவித்தாள். அடுத்த வினாடிகளில் சிங்கணனுடன் படைத் தலைவன் அறைக்குள் நுழைந்த இளநங்கை அறையிலிருந்த நிலையைக் கண்டு அடியோடு பிரமித்து நின்றாள். அறையின் தோற்றம் பூரணமாக மாறியிருந்தது. படைத் தலைவன் பஞ்சணையில் இரண்டு மூன்று தலையணைகளை அடுக்கி, சற்று ஏறி, அரைவாசி உட்கார்ந்த பாவனையில் இருந்தான். சிங்கணன் உட்கார ஒரு சிங்காதனமே போடப் பட்டிருந்தது. அந்த ஆசனத்தின் பக்கத்தில் உருவிய வாளுடன் இரு வீரர்களும், சற்று அப்பால் கோட்டையின் பழைய தலைவன் விஜயவர்மனும் நின்று கொண்டிருந்தார்கள்.

சிங்கணன் அந்த இரு வீரர்களையும் நோக்கி வீரபாண்டியனையும் நோக்கினான். அவன் முகத்தில் சந்தேகத்தின் சாயை பூர்ணமாகப் படர்ந்தது. ‘ஒரு வேளை இது தன்னைப் பிடிப்பதற்காகச் செய்யப்பட்ட வஞ்சக ஏற்பாடோ’ என்று ஒரு வினாடி எண்ணினான் சிங்கணன். தன்னைச் சிறைப்படுத்துவதானால் வீரபாண்டியன் தன்னை அப்பொழுதே சிறைப்படுத்த முடியுமென்பதையும், தான் சிறைப்பட்டதை அறிந்தால் தலைவனில்லாத தனது பெரும் படை சிதறி விடுமென்பதையும் உணர்ந்து கொண்டான் சிங்கணன். ‘இத்தகைய வஞ்சகனா வீரபாண்டியன்? பேச அழைத்து எதிரியைப் பிடிக்கும் கயவனா இவன்?” தனக்குள் கேட்டும் கொண்டான்.

அந்த எண்ணமும் கேள்விகளும் இளநங்கையின் சிந்தையிலும் எழுந்தன. இதுதான் இவர் சொன்ன குறுக்கு வழியா?” என்றும் பிரமித்தாள் அவள். இருப்பினும் வேடர்களால் சூழப்பட்ட சிங்கம் போலச் சிங்கணன் தனது அச்சமற்ற பார்வையை அங்கிருந்த அனைவர்மீதும் ஒரு முறை வீசினான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch56 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here