Home Historical Novel Raja Muthirai Part 1 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

58
0
Raja Muthirai Part 1 Ch58 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch58 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 58 பிழைக்கும் வழி

Raja Muthirai Part 1 Ch58 | Raja Muthirai | TamilNovel.in

போசளத் தண்டநாயகனான சிங்கணன் தன்னிடம் தன்னந்தனியே சிக்கிக்கொண்ட அந்தச் சமயத்திலும் லவலேசமும் அச்சமற்ற பார்வையை அறையைச் சுற்றி வீசியதைக் கண்ட வீரபாண்டியன் அவன் நெஞ்சுறுதியை உள்ளூர எண்ணிப் பெரிதும் வியந்தான். இத்தகைய ஒரு தண்ட நாயகன் மட்டும் எதிரிகள் பக்கத்திலிராமல் பாண்டியர் பக்கத்திலிருந்தால் பாண்டியர் நாடும் அதன் மூலம் தமிழகமும் எத்தனை பலப்படும் என்றும் நினைத் தான். தவிர சிங்கணன் வீரப்பார்வையிலிருந்த சந்தேகமும் அவனுக்கு விளங்கவே, “சிங்கணரே! தனிப்பட, நம்பி வரும் எதிரிகளைச் சிறைப்பிடிக்கும் அத்தனை கேவல நிலைக்குப் பாண்டியர் குலம் இன்னும் வரவில்லை,” என்றும், கூறினான் புன்முறுவலுடன்.

இதைக் கேட்டதால் சந்தேகம் விலகியதன்றி, வீர பாண்டியனை அற்பமாக எடை போட்டதற்காகச் சிறிது வெட்கமும் அடைந்த தண்டநாயகன் சொன்னான், “படைத்தலைவர்களின் தனியறைகளில் உருவிய வாட் களுடன் மெய்க் காவலர் நிற்பதை நான் இதுவரை பார்த்த தில்லை ,” என்று .

“இது புதுமைதான் சிங்கணரே! ஆனால் என் உடல் நிலையால் ஏற்பட்ட சந்தர்ப்பம் இத்தகைய புதுமைக்கு இடங் கொடுத்தது,” என்று வீரபாண்டியன் அறிவித்த தன்றிப் பக்கத்திலிருந்த கோட்டைத் தலைவனான விஜயவர்மனை நோக்கி, “இல்லையா விஜயவர்மரே!” என்றும் வினவினான்.
விஜயவர்மன் முகம் பல புதிர்களால் புத்தி இயக்கப் படுவதை அறிவித்தது. குழப்பத்தின் சிகரமாக விளங்கிய விஜயவர்மன் வீரபாண்டியன் வாக்கியத்தை ஆமோதிக்கும் வகையில் தலையை ஆட்டினான்.

அறையிலிருந்த நிலை சிங்கணனுக்குக்கூடப் பொரும் புதிராயிருந்தது. தன்னுடன் பேச ஒப்புக்கொண்ட வீர பாண்டியன் தனிமையில் பேசாமல் சேரர் கோட்டைத் தலைவன் விஜயவர்மனை எதற்காக அறைக்கு வரவழைத்ததன்றித் தன் கூற்றுக்குத் தலையாட்டவும் வைத்துக் கொண்டான் என்பது விளங்கவில்லை, போசளத் தண்ட நாயகனுக்கு. “சமாதானத்தைப் பற்றியோ அல்லது சரணா கதியைப் பற்றியோ பேச வீரபாண்டியனுக்கு விஜயவர்மன் போன்ற எதிரியின் துணை எதற்கு? தவிர வீரர்கள் நிற்பதில் புதுமைதான் என்ன இருக்கிறது? என்ன சூதுக்காக இத்தகைய நிலையைத் தன் படுக்கையறையில் சிருஷ்டித்திருக்கிறான் பாண்டிய இளவரசன்?” என்று தன்னுள் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டான் சிங்கணன்.

அவன் உள்ளத்திலோடும் எண்ணங்களை விநாடி நேரத்தில் எடை போட்ட வீரபாண்டியன், “இந்த ஆசனத்தில் அமருங்கள் சிங்கணரே! அனைத்துக்கு விளக்கம் கூறுகிறேன்,” என்று கூறிப் பஞ்சணைக்குப் பக்கத்திலிருந்த சிங்காதனத்தைச் சுட்டிக் காட்டினான். அந்தச் சிங்காதனத்தில் அமர்ந்தான் சிங்கணன்.

வீரபாண்டியன் இதழ்களில் வருத்தப் புன்முறுவ லொன்று படர்ந்தது. அதையொட்டி உதிர்ந்த சொற்களிலும் வருத்தம் சற்றே கலந்திருந்தது. “சிங்கணரே! ஒரு படை தலைவன் இன்னொரு படைத்தலைவனைச் சந்திக்கு இடம் படுக்கையறையல்ல. ஆனால் என் தலையிலிருக்கு காயத்தால் என் ரத்தம் மிகவும் சேதப்பட்டிருக்கிற அசையவும் சக்தியில்லாமல் இருக்கிறேன். ஆகையால்தான் உங்களை இங்கே சந்திக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் போசளத் தண்டநாயகரைச் சந்திக்கும் போது முறையுடன் சந்திக்க வேண்டுமல்லவா?” என்று சொல்லிக்கொண்டு போன வீரபாண்டியன் சற்று நிதானித்தான்.

“ஆம்,” என்று ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொன்னான் சிங்கணன், அத்தனைப் பூர்வ பீடிகையும் வேறு ஏதோ முக்கிய விஷயத்துக்கு என்பதை உணர்ந்து கொண்டு.

“ஆம், சிங்கணரே! நான் சாதாரண உடல் நிலையில் இருந்தால் எப்படி உம்மைச் சந்திப்பேனோ அப்படிச் சந்திக்க இஷ்டப்பட்டேன். கோட்டைக் கொலு மண்டபத்தில் சிங்காதனங்களுடன் வாள் பிடித்த காவலருடன் சந்திக்கும் முறையில் இங்கும் சந்திக்கத் தீர்மானித்தேன். அதற்காகத்தான் வீரர்கள், சிங்காதனம்…”

“புரிகிறது,” என்றான் சிங்கணன், வீரபாண்டியன் சொன்ன எதையும் நம்பாமல்.

“ஆனால், விஜயவர்மரை ஏன் வரவழைத்தேன் என்பது உமக்கு வியப்பாயிருக்கலாம்,” என்று வீரபாண்டியன் மேலும் தொடர்ந்தான்.

“பாண்டிய இளவரசர் செய்யும் எந்தக் காரியத்திலும் வியப்பு சம்பந்தப்படாமலிருக்காது,” என்ற சிங்கணன் குரலில் சந்தேகம் மட்டுமின்றி விஷமும் கலந்திருந்தது.

“நன்றாகச் சொன்னீர்கள். எதிரியையும் பாராட்டும் பண்பைத் தமிழகத்தில்தான் பார்க்கமுடியும்,” என்று சிலாகித்த வீரபாண்டியன், “சிங்கணரே! பெரும் படையுடன் நீங்கள் வந்திருப்பதால் இந்தக் கோட்டையைச் சுலபத்தில் பிடித்துவிடலாமென மனப்பால் குடிக்கிறீர்கள். அது தவறான எண்ணம் என்பதை விளக்க எண்ணினேன். நான் சொல்லும் எதையும் நீங்கள் நம்புவது கடினமாகை யால் ஒரு சாட்சியையும் வரவழைத்தேன், அந்தச் சாட்சி விஜயவர்மன்,”

அதுவரை இருவர் சம்பாஷணையையும் வெறுப்புடன் கேட்டுக்கொண்டிருந்த இளநங்கையின் சித்தம் ஒருமுறை குலுங்கியது. தோல்வியடையப் போவதாகச் சற்று முன்பு தன்னிடம் கூறிய வீரபாண்டியன் நேர்மாறாகச் சிங்கணனிடம் பேச முற்பட்டதன்றி, தனது பலத்துக்கு விஜயவர்மனைச் சாட்சிக்கு அழைத்திருந்ததையும் கண்டு பெரிதும் பிரமித்தாள். அவள் பிரமையை வீரபாண்டியனின் அடுத்த சொற்கள் உச்ச நிலைக்குக் கொண்டு சென்றன.

“இக்கோட்டையைக் கைப்பற்றிய பின்பு நான் வாளா விருக்கவில்லை சிங்கணரே! பாண்டியர் கோட்டை முறையில் பலப்படுத்தியிருக்கிறேன். சேரநாட்டு விற்கூடங்கள் மட்டுமல்ல கோட்டைச் சுவர்களில், நெடுந்தூரம் வேலெறியும் மர இயக்கிகளையும் அமைத்திருக்கிறே என்று சிங்கணனிடம் கூறிய வீரபாண்டியன், “என்ன விஜயவர்மரே?” என்றும் கேட்டான் கோட்டைக் காவலனை நோக்கி.
கோட்டைக் காவலன் சிங்கணனை நோக்கிச் சொன்னான். “ஆம் தண்டநாயகரே! கோட்டைப் பாதுகாப்பில் பல புதுமுறை யந்திரங்கள் அமைக்கப்பட்டிக்கின்றன. எந்தப் பலமான படையினின்றும் இதைப் பதினைந்து நாட்கள் நிச்சயமாகக் காக்கலாம்” என்று.

“அதுமட்டுமல்ல…” என்று வீரபாண்டியன் துவானான்.

“வேறு என்ன விசேஷம் இந்தக் கோட்டையில்?” என்று வினவினான் சிங்கணன்.

“விஜயவர்மன் வீரர்களில் பாதிப் பேர் எனது படையில் சேர்ந்துவிட்டார்கள்.” என்றான் வீரபாண்டியன்.

“இது உண்மையா?” என்று வினவினான் சிங்கணன் விஜவர்மனை நோக்கி.

“ஆம்” என்றான் விஜயவர்மன்.

“சேரமன்னனுக்கு இது தெரிந்தால் உமது கதி என்ன வாகும்?” என்று வினவினான் சிங்கணன்.

“கோட்டை வீரர்களைப் பாண்டியர் படையில் சேரும்படி நான் வற்புறுத்தவில்லை,” என்றான் விஜயவர்மன் இகழ்ச்சியுடன்.

“வேறு யார் செய்தது இதை?” என்று சற்றுக் கடுமையான குரலில் கேட்டான் சிங்கணன்.

“எனக்கெப்படித் தெரியும்?”

“ஏன் தெரியாது?”

“நான் காவலில் இருக்கிறேன். வெளியே நடப்பதைக எப்படி அறியமுடியும் என்னால்?”

“வீரர்கள் சேர்ந்ததை மட்டும் எப்படி அறிந்தீர்?”

“கண்ணால் பார்த்தேன்.”

“எதை?”

“சேரவீரர் அணிவகுப்பை.”

“எப்பொழுது?”

“இன்று பிற்பகலில்.”

சிங்கணன் சிந்தையில் சந்தேகம் துளிர்விட்டது. விஜயவர்மன் விஷயத்தை அறிந்துதான் சொல்கிறானா அல்லது அவன் ஏமாற்றப்பட்டானா என்பது விளங்காததால், அவனை விட்டு வீரபாண்டியனை நோக்கிய சிங்கணன் கேட்டான், “அப்படியானால் உங்கள் படை பலம் இப்பொழுது எவ்வளவு?” என்று.

“எந்த முட்டாளாவது எதிரியிடம் தனது படை பலத்தைச் சொல்லுவானா?” என்று வினவினான் வீர பாண்டியன்.
வீரபாண்டியன் கேள்வியில் நியாயமிருப்பதைப் புரிந்து கொண்ட சிங்கணன், “உண்மை வீரபாண்டியரே! நான் கேட்டது தவறுதான். அப்படியானால், நீங்கள் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான்.

“நானா?” வீரபாண்டியன் குரலில் வியப்பு ஒலித்தது.

“ஆம்,” என்றான் சிங்கணன்.

“நானா உங்களை வரவழைத்தேன் இங்கு?”

“இல்லை.”

“அப்படியிருக்க சொல்லவேண்டியது நீங்கள்தானே!”

வீரபாண்டியன் குரல் சர்வ சகஜமாயிருந்தது. இருப்பினும் அதன் உள்ளூர விஷமம் இருப்பது சந்தேகமறத் தெரிந்தது சிங்கணனுக்கு; ஆகவே மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல், “நான் சொல்வதைத் தனிமையில்தான் சொல்லவேண்டும்,” என்றான்.

வீரபாண்டியன் மிகுந்த மரியாதையுடன் தலையைத் தாழ்த்தினான். பிறகு வீரர்களையும் விஜயவர்மனையும் வெளியே செல்லும்படி கண்களால் ஜாடை செய்தான். அவர்கள் சென்றதும் கதவைச் சாத்தும்படி இளநங்கையைப் பணித்தான். இளநங்கை கதவைச் சாத்திவிட்டு வந்த பிறகும் சிங்கணன் பேசவில்லை. அவன் ஆலசியத்துக்குக் காரணத்தைப் புரிந்து கொண்ட வீரபாண்டியன், “என் உபதளபதி முன்பாக நீங்கள் எதையும் சொல்லலாம். நான் வேறு, அவள் வேறல்ல” என்று புன்முறுவலுடன் சொன்னான்.

“இருப்பினும், இது மிக முக்கிய விஷயம். நாமிருவர் மட்டுமே விவாதிக்கத்தக்கது.”

“இருவர்தானிருக்கிறோம்.”

“இருவரா?”

“ஆம்.”

“நானொருவன்…”

“நான் பாதி, அவள் பாதி. ஆக நாங்களிருவரும் ஒருவர்…”

சிங்கணன் தனது கண்களை இளநங்கையை நோக்கி ஓட்டினான். இளநங்கை தலையைக் குனிந்து கொண்டாள்.

அவள் நிலையைக் கண்ட சிங்கணன் மெள்ளப் புன்முறுவல் செய்தான். பிறகு வீரபாண்டியனை நோக்கி, “அப்படியா விஷயம்?” என்று கேட்டான்.

“ஆம்,” என்ற வீரபாண்டியன் குரலில் மகிழ்ச்சி இருந்தது.

“இளநங்கை உபதளபதியானதைப் பற்றிக் கேள்விப் பட்டேன். சேர நாடே கேள்விப்பட்டிருக்கிறது. ஆனால் வீர பாண்டியனின் காதலியானதை….” என்ற சிங்கணன் வாசகத்தை முடிக்கவில்லை. அதற்கு முன்பே இடை புகுந்த பாண்டிய இளவரசன், “காதலோடு நின்றால் கூட இத்தனை கஷ்டமிருக்காது…” என்று சற்றுத் தயங்கினான்.

“அப்படியானால்…?” சிங்கணன் பிரமிப்புட இருவரையும் நோக்கினான்.

“திருமணமும் முடிந்து விட்டது.” என்ற வீரபாண்டியன், “திருமணம் மனிதனை எத்தனை மாற்றிவிடுகிறது பார்த்தீர்களா சிங்கணரே? எந்தப் படையெடுப்பையும் கண்டு அஞ்சாத வீரபாண்டியனைக்கூட கோழையாக்கி விடுகிறது” என்றும் அறிவித்தான்.

சிங்கணன் அவனைக் கூர்ந்து நோக்கினான். “வீர பாண்டியன் கோழையாக முடியாது,” என்று திட்டமாகக் கூறினான்.

“தவறு சிங்கணரே! நான் இப்படிச் சக்தியற்று அபாய நிலையில் படுத்திராமலிருந்தால், எனக்கென்று மனைவி யொருத்தி ஏற்படாதிருந்தால், நீங்கள் பேச வந்திருப்பதை நான் கேட்க இஷ்டப்பட மாட்டேன்,” என்றான் வீர பாண்டியன் வருத்தத்துடன்.

“நான் என்ன பேச வந்திருக்கிறேன்?” என்று வினவி னான் சிங்கணன்.

“என்னைச் சரணடையச் சொல்ல வந்திருக்கிறீர்கள்.”

“ஆம்.”
“என் பலவீன நிலையை அறிந்திருக்கிறீர்கள். உங்கள் படைபலம் என்னுடைய சிறு படையைவிடப் பல மடங்கு பெரியதாயிருக்கும்.”

“பன்மடங்கு பெரியது.”

ஆகவே முற்றுகையால் என்னைத் தகர்த்து விடத் தீர்மானித்திருக்கிறீர்.”

“ஆம். நாளை முதல் நான் தாக்க ஆரம்பித்தால் நான்கு நாட்களில் இந்தக் கோட்டையை அழித்துவிட முடியும் என்னால். கோட்டைக் கதவுகளை உடைக்க முப் புறத்திலும் பெரும் நீள்மரங்கள் தயாராகின்றன. அந்தக் கட்டைகளை எடுத்துத் தாக்க யானைகளும் கொண்டு வந்திருக்கிறேன். என் பலத்தை எதிர்த்து நிற்க இதைவிட பெரிய கோட்டையாலும், உங்களிடமிருப்பதைவிட இரட்டத்தனை வீரர்களாலும் முடியாது” என்று திட்ட வட்டமாக அறிவித்தான் சிங்கணன்.

வீரபாண்டியன் முகத்தில் முறுவல் விரிந்தது. “தவறு சிங்கணரே! இன்னும் பதினைந்து நாட்களுக்கு நீங்கள் இருக்கிற இடத்தில் உங்களைத் தேக்கி வைக்க முடியும் என்னால். யானைகளைக்கொண்டு நீர் நெடுமரங்களை இயக்க முனைந்தால் கோட்டைக்கு இருநூறடிக்கு முன்பே யானைகள்மீது வேல்களை வீச என்னிடம் சாதனங்கள் இருக்கின்றன. கோட்டையிலிருந்து வாசலை உமது படை அணுக முடியாதபடி நாற்புறமும் அம்பு மழை பொழிய முடியும். தவிர வேறு விதப் போர் முறைகளும் வீரபாண்டியனுக்குத் தெரியும். ஆகவே நான் சரணடையும் உத்தேசம் எனக்கில்லை. அப்படி ஏதாவது கேட்க நீர் வந்திருந்தால் உடனடியாக உங்கள் பாசறைக்குத் திரும்பலாம்,” என்றான் புன்முறுவலுடன்.

சிங்கணன் தனது ஆசனத்திலிருந்து எழுந்திருந்து வீர பாண்டியன் பஞ்சணையை நெருங்கினான். “வீரபாண்டியரே! சரணடைவது ஒன்றுதான் உமக்கு வழி. அதை நீரும் உணர்ந்திருக்கிறீர். வீணாக என்னை மிரட்டிப் பயனில்லை நீர் பாண்டிய மன்னருக்கு அனுப்பிய ஓலையுடன் உமது தூதன் என்னிடம் பிடிபட்டான்!”

வீரபாண்டியன் அதிர்ச்சியுற்றவன்போல் நடித்தான்.

“உண்மையாகவா!” என்றான்.

“ஆம்.”

“அவனை என்ன செய்தீர்கள்?”

“ஏதும் செய்யவில்லை. ஓலையைப் படித்த பின் ஓலையை மீண்டும் குழலில் அடைத்து அவனைப் பாண்டிய மன்னனிடம் அனுப்பிவிட்டேன்.”

வீரபாண்டியன் முகத்தில் துக்கம் நிரம்பி வழிந்தது! “பாண்டிய மன்னர் பெரிதும் சினமடைவார்.”

“இதில் சினமடைய ஏதுமில்லை. பல மடங்கு பெரிய படையுடன் மோதாதிருப்பது போர்ச் சம்பிரதாயம்தான்” என்று சுட்டிக்காட்டினான் சிங்கணன். அத்துடன் மேலும் சொன்னான், “வீரபாண்டியரே! நான் சேரர்களின் முழு பலத்துடன் இக் கோட்டையை முப்புறம் வளைந்திக்கிறேன். நாலாவது புறத்தில் கடல்மூலம் இன்னொரு படை வருகிறது. உமது நிர்க்கதியை நினைத்து என் போர் ஏற்பாடுகளைச் சொல்லுகிறேன்,” என்று.

வீரபாண்டியன் முகத்தில் கோபம் துளிர்த்தது. “சிங்கணரே! இது பெரும் துரோகம். காட்டுக் கோட்டையில் நான் உமக்கு உயிரளித்தபோது, சேர மன்னனை இங்கு அழைத்து வருவதாக நீர் உறுதி கூறவில்லையா?”

“வீரபாண்டியரே! போரின் தர்மங்கள் பலவகைப் பட்டவை. உயிர் அபாயத்திலிருக்கும்போது நான் உறுதியளித்தது உண்மை. ஆனால் அந்த உறுதி தர்மத்துக்குப் புறம்பானது. அதை முறிப்பது தவறல்ல. தவிர உமது போர் முறைக்குப் பதில் முறை வகுப்பதும் தண்டநாயகனான எனது கடமை.”

வீரபாண்டியன் கடைசியாக இளநங்கையை நோக்கி னான். “இளநங்கை! பார்த்தாயா நிலைமையை? இவரிடம் சிக்கியிருக்கிறோம்,” என்றான் வருத்தத்துடன்.

“அதற்காகக் கவலைப்படாதீர்கள் வீரபாண்டியரே! நீர் சரணடைந்தால், உம்மையும் இளநங்கையையும் பாதுகாப்புடன் கொற்கைக்கு அனுப்பிவைப்பது என் பொறுப்பு.”

“நன்றி சிங்கணரே!” என்ற வீரபாண்டியன் தீர்க்கா லோசனையில் இறங்கினான். பிறகு சொன்னான்: “சிங்கணரே! நான் சரணடைய முடியாது. சரணடைந்தால் பாண்டிய நாடு சிரிக்கும். பேடியென்று என்னை இகழும். நாட்டை மட்டும் பார்த்தால் போதாது. மனைவியின் நலனையும், என் பிற்கால வாழ்க்கையையுங்கூடக் கவனிக்க வேண்டும்,” என்று.

சிங்கணன் தலையை அசைத்தான். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது இருவருக்கும் அனுகூலம்,” என்றான் வீரபாண்டியன், அந்த அனுகூல மார்க்கத்தை விவரிக்கவும் செய்தான். அதைக் கேட்ட சிங்கணன் வெறுப்புடன் நோக்கினான் வீரபாண்டியனை. இளநங்கை உணர்ச்சிகளை அடியோடு இழந்து ஸ்தம்பித்து நின்றாள். சிங்கணன், “இது தான் பிழைக்கும் வழி வீரபாண்டியரே! உமது வழி எனக்கும் சம்மதம். வருகிறேன்,” என்று கிளம்பினான் அந்த அறையைவிட்டுத் தனது பாசறையை நோக்கி.

Previous articleRaja Muthirai Part 1 Ch57 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here