Home Historical Novel Raja Muthirai Part 1 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

51
0
Raja Muthirai Part 1 Ch59 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch59 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 59 போர் நாடகம்

Raja Muthirai Part 1 Ch59 | Raja Muthirai | TamilNovel.in

பாண்டிய இளவரசனான வீரபாண்டியன் போசளத் தண்டநாயகனிடம் விவரித்த குறுக்கு வழியைக் கேட்ட இளநங்கைக்கு அவமானத்தால் பிராணனே போய்விடும் போலாகி விட்டது. இத்தகைய குறுக்கு வழியைக் கையாண்டு பிழைப்பதைவிடப் பிராணனை விடுவது எத்தனை சிலாக்கியமென்று அவள் நினைத்துப் புதுத் துக்கப் பெருமூச்சொன்றும் விட்டாள். அந்தக் குறுக்கு வழியைப் பிழைக்கும் வழி என்று சிங்கணன் கேவலமாகச் குறிப்பிட்டது எத்தனை பொருத்தம் என்று கொற்கைக் கோட்டைக் காவலர் மகள் எண்ணிப் பார்த்ததாள். அவள் கண்ணின் கருமணிகளில் கோபத்தின் சாயையோடு ‘இப்படி ஒரு வீரன் அழிந்துபோகிறானே’ என்ற வேதனையால், பரிதாபத்தின் சாயையும் ஒளிவிட்டது. குறுக்கு வழியை இளவரசன் விவரிக்க ஆரம்பித்தபோது அதன் போக்கை முழுதும் புரிந்துகொள்ள முடியாத இளநங்கை, இளவரசனுக்கும் சிங்கணனுக்கும் சம்பாஷணை முற்ற முற்ற இதயம் வெடிக்கும் நிலைக்கு வந்துவிட்டாள். மிக நிதானமாக, சர்வசாதாரணமாக, பல தர்ம நியாயங்களுடன் வீரபாண்டியன் தனது வழியை விவரிக்கலானான் அதற்குப் பூர்வாங்கமாகத்தனது பலத்தைாம் சுட்டி காட்டினான்.

“சிங்கணரே! உங்களிடம் இக்கோட்டையும் நாங்களும் சிக்கியிருப்பது உண்மை. ஆனால் கோட்டையை பதினைந்து நாட்கள் காக்க பலமும் புதுவகைப் போர்ச் சாதனங்களும் இருப்பதை விஜயவர்மரே கொண்டதைக் கவனித்திருப்பீர். நீர் அழைத்து வந்திருக்கும் தரைப்படை மட்டும் என்னை எதிர்ப்பதாயிருந்தால், நான் இக்கோட்டையை ஓரளவு காத்து உமது படையில் பாதியை நிச்சயமாக அழிக்க முடியும். ஆனால் என்னை முதுகிலும் குத்திக்கொல்ல வழி வகுத்திருக்கிறீர்கள். கடல் வழியிலும் பெரும்படை வந்து, கோட்டையின் பின் வாயிலும் தாக்கப்பட்டால் எனது நிலைமை சிறிது கஷ்டந்தான்” என்று துவங்கினான் வீர பாண்டியன்.

சிங்கணன் புன்முறுவலுடன் தலையசைத்தான். “நீங்கள் அதைப் புரிந்துகொண்டது பற்றி மகிழ்ச்சி,” என்றும் கூறினான்.

“இருப்பினும்…” என்று சிறிது சந்தேகத்தைக் கிளப்பினான் வீரபாண்டியன்.

சிங்கணன் முகத்தில் மீண்டும் சந்தேகக்குறி தோன்றி யது. “இருப்பினும் என்ன வீரபாண்டியரே?” என்று வினவவும் செய்தான் அவன்.

“நான் மன்னருக்கு அனுப்பிய தூதுவனைச் சிறை பிடித்ததாகச் சொன்னீர்கள்…”

“ஆம்.”

“பிறகு அவனை விடுதலை செய்து, ஓலையுடன் சேர நாடு செல்ல அனுமதித்ததாகவும் கூறினீர்கள்.”

“ஆம்.”

“இது அறிவுள்ள செய்கையல்ல சிங்கணரே!”

“எதனால் சொல்லுகிறீர்கள்?”

“சரணடைவதாக நான் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்த அம் மன்னர் தன் படையுடன் இக் கோட்டையை நோக்கித் திரும்புவர். கோடையின் முன்புள்ள உமது படை பின் புறத்தில் மன்னர் படையாலும், முன்புறத்தில் எனது விற்கூடங்களாலும் தாக்கப்பட்டால் உமது கதி என்ன் யோசித்துப் பாரும்?” என்று கூறிய வீரபாண்டியன் வசனத்தில் வெற்றிக் குறி இருந்தது.

இதைக் கேட்டதும் இளநங்கையின் இதயத்தில் சற்றே துளிர்விட்டது. ஆனால் அம்பிக்கையைப் போசளத் தண்டநாயகனின் அடுத்த சொற்கள் சிதற அடித்தன.

“இதையும் நான் யோசித்தேன் வீரபாண்டியரே. இந்த ஓலை சேரநாடு செல்ல இரண்டு நாட்கள் பிடிக்கும். அந்த இரண்டு நாட்களுக்குள் நீர் சரணடைய மறுத்தால் எனது படையில் பாதி அதாவது ஐயாயிரம் வீரர்கள் பிரிந்து இவ்விடம் நோக்கித் திரும்பும் பாண்டிய மன்னரைத் தென் எல்லையிலேயே மறிப்பார்கள். அவரிடம் இருந்த படை வீரர் இரண்டாயிரம் பேர். அவர்களில் சிலர் சேரநாட்டு எல்லைத் தாக்குதல்களில் மாண்டுமிருப்பார்கள். மீதியுள்ள சுமார் ஆயிரத்து ஐந்நூறு அல்லது ஆயிரத்து எழுநூறு வீரர்களைச் சமநிலத்தில் ஐயாயிரம் வீரர்கள் எதிர் கொண்டால் என்ன ஆகும்? சிந்தித்துப் பாருங்கள்” என்று சிங்கணன் புன்முறுவல் செய்துவிட்டு மேலும் சொன்னான்: “அது மட்டுமல்ல வீரபாண்டியரே! உமது படைபலத்தையும் நான் வேவுகாரர்களைக் கொண்டு அறிந்திருக்கிறேன். நீர் இங்கு அழைத்து வந்தது இரண்டாயிரம் பேர் கொண்ட சிறு படைதான் என்பது எனக்குத் தெரியும். ஆகவே இங்கு உமது எதிரில் மலைச்சரிவில் எனது ஐயாயிரம் படைகளும் பின்புறத்தில் கடல் மூலம் வரும் ஐயாயிரம் படைகளும் தாக்கினால், உமது இரண்டாயிரம் வீரர்களில் இந்தக் கோட்டையைப் பிடிப்பதில் மாண்டவர் போக மீதிப் பேரும், விஜயவர்மன் படையில் பாதிப்பேர் இரண்டாயிரம் வீரர்களும் ஆக மொத்தம் நாலாயிரத்துக்குக் குறைவான வீரர்கள் பத்து நாட்கள்கூடச் சமாளிக்க முடியாது. அந்தப் பத்து நாட்களில் உங்கள் அண்ணன் சேரநாட்டு எல்லைப் புறத்திலும், நீங்கள் இந்தக் கோட்டையிலும் அழிக்கப்படுவீர்கள். அப்புறம் பாண்டிய நாட்டுக்கு அடுத்த பட்டத்தரசனைத் தேட வேண்டியதுதான்.”

வீரபாண்டியன் சிறிது சிந்தித்தான். “நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. இருப்பினும், நீங்கள் நினைக்கும் அளவுக்குப் பலவீனமிருப்பதாக நான் எண்ண வில்லை. நீங்கள் எதிர்பார்க்கிறபடி பாண்டிய மன்னர் உமது படையை சமநிலத்தில் சந்திக்க மறுத்தால் நிலைமை மாறிவிடுமல்லவா?” என்று வினவினான் இறுதியில்.

சிங்கணன் முகத்தில் சிந்தனை படர்ந்தது. “ஆம், அதில் சிறிது மாறுதலேற்படும்” என்றான் சிந்தனை ஊடுருவிய குரலில்.

“பாண்டிய மன்னர் உமது படைகளைச் சந்திக்க மறுத்தால் இப்பொழுது பத்தாயிரம் படைகள் மலைச் சரிவிலும் கடல்வழி மூலம் வரும் ஐயாயிரம் படைகளும் பதினையாயிரம் வீரர்கள் இருப்பதுபோக, இரண்டும் சேர்ந்து பத்தாயிரம் வீரர் கொண்ட படையே இருக்கும். மூன்று வாயில்களில் மட்டுமே நான் அமைத்திருக்கும் பாதுகாப்பு இயந்திரங்களில் சிலவற்றைக் கடல் புறமும் திருப்பினால், கோட்டையை அதிக நாசமின்றிப் பிடிக்க முடியுமா சிங்கணரே?” என்று வினவினான் வீரபாண்டியன்.

சிங்கணன் முகத்தில் சிந்தனை தீவிரமாகப் படர்ந்தது. இளநங்கை இதயத்தில் சிறிது நம்பிக்கை உதயமாகத் தொடங்கியது. “சிறிது நாசம் ஏற்படத்தான் செய்யும்” என்று சிங்கணன் ஒப்புக்கொண்டது இளநங்கைக்கு அமுத தாரையென காதில் விழுந்தது. ஆனால் அந்த அமுத. தாரையை அடுத்த விநாடி அழித்தான் வீரபாண்டியன். “சிங்கணரே! ஒன்று எனக்குப் புரிகிறது. அப்படி நான் கோட்டையைப் பாதுகாத்தாலும் இறுதியில் உமது பெரும் பலம் சேதம் விளைவிக்க முடியும். இப்படி இருபுறத்திலும் ஏற்படக்கூடிய நாசத்தைத் தவிர்க்க ஒரு வழி இருக்கிறது” என்றான் வீரபாண்டியன்.

சிங்கணன் சிந்தனை படர்ந்த விழிகளை இளவரசன் மீது நாட்டி, “என்ன வழி வீரபாண்டியரே?” என்று வினவினான்.

“உமக்குப் பெருமை, இருதரப்பும் நாசம் ஏற்படாமை, என் வீரத்துக்கும் இழுக்கு ஏற்படாமை, இம் மூன்றையும் சாதிக்கவல்ல வழி,” என்றான் வீரபாண்டியன்.

ஒருமுறை தனது பலவீனத்தையும், மறுமுறை தனது பலத்தையும் மாற்றி வீரபாண்டியன் சொன்னதும் மண்டை குழம்பிக் கிடந்த தண்டநாயகன், “என்ன வழி வீர பாண்டியரே?” என்று உணர்ச்சி வறண்டு போன குரலில் கேட்டான்.

தண்டநாயகன் குழம்பிக் கிடந்ததை ஊகித்துக் கொண்ட வீரபாண்டியன் உள்ளூர நகைத்துக்கொண்டாலும் வெளிக்குச் சர்வசாதரணமாகவே பேசத் தொடங்கி, “தண்டநாயகரே!” என்று மதிப்பும் அன்பும் கலந்த குரலில் அழைத்தான்.

“என்ன வீரபாண்டியரே!” சிங்கணன் கேள்வியில் சந்தேகம் புதைந்து கிடந்தது.

“நீங்கள் யுத்த தர்மங்களை அறிந்தவர்கள்…” என்று துவங்கினான் வீரபாண்டியன்.

“ஓரளவு தெரியும்.” சிங்கணன் பதில் சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொன்னான், வீரபாண்டியன் பூர்வ பீடிகை எதற்கென்பதை உணர முடியாததால்.

“அத்தகைய ஒரு தர்மத்தைப்பற்றிச் சற்று முன்று குறிப்பிட்டீர்கள்.” என்று சுட்டிக் காட்டினான் வீரபாண்டியன்.

“ஆம்.”

“காட்டுக் கோட்டையில் உமது உயிர் அபாயத்திலிருந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதி உம்மைக் கட்டுப் படுத்தாது என்று கூறினீர்கள்.”

“ஆம். கூறினேன்?”

“ஆபத் தர்மம் தனியல்லவா?”

“ஆம்.”

“அந்தத் தர்மம் தனி மனிதனுக்குத்தானா, படை களுக்கும் உண்டா?”

“படைகளுக்கும் உண்டு.”

“இப்பொழுது எனது படை ஆபத்திலிருக்கிறது. அதைக் காப்பாற்ற வழிவகுப்பது அதர்மமா?”

“இல்லை.”

“போரில் வெற்றி தோல்வி…”

“சகஜம்.”

“தோல்வியடைவது?”

“தர்ம விரோதமல்ல, சாஸ்திர விரோதமுமில்லை.”

வீரபாண்டியன் மிகுந்த திருப்தியை முகத்தில் சுட்டிக் காட்டினான். “நாம் பேசிய அனைத்தையும் தொகுத்துப் பாருங்கள் சிங்கணரே.”

சிங்கணன் தொகுத்தும் பார்த்தான். அவனுக்கு ஏதும் விளங்காததால் விழித்தான். இளநங்கைக்கும் ஏதும் விளங்க வில்லையாதலாலும் கால் சோர்வு தட்டியதாலும் சற்று எட்ட இருந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டாள். சிங்கணன் விழித்ததையும் இளநங்கையின் சோர்வையும் கவனித்தும் கவனிக்காதவன் போல வீரபாண்டியன்தன் கருத்தை விளக்கினான். “பெரும் படைக்கு முன்பு நான் சரணடைவது எனக்கு அபக்கியாதியைத் தரும். போரிட்டுத் தோல்வியடைந்து தோல்வியின் நிபந்தனைகளால் விடுதலையடைவது வீரத்துக்கோ தர்மத்துக்கோ சாஸ்திரத்துக்கோ புறம்பானதல்ல. அப்படிச் சர்வசம்மதமான வழியொன்றிருக்கிறது. அந்த வழியால் இருவருக்கும்? பெரும் பயன் ஏற்படும். நீங்கள் என்னைத் தாக்கப் போகிறீர்கள். நான் தோல்வியடையப் போகிறேன். தோல்வியின் விளைவாக நான் கடைசியில் உங்கள் நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன். புரிகிறதா?” என்றான் வீரபாண்டியன்.

“நன்றாகப் புரிந்தது போசளத் தண்டநாயகனுக்கு, போர் வெறும் போலிப் போராயிருக்குமென்பதைச் சந்தேகமற அறிந்துகொண்ட தண்டநாயகன், “வழியைச் சொல்லுங்கள் வீரபாண்டியரே” என்று கேட்டான் கம்பீரத்துடன்.

உடனடியாக வழியைச் சொல்லவில்லை வீரபாண்டியன். இளநங்கையை நோக்கி, “இளநங்கை! இப்படி வா, என் தலையணைக்கு அடியில் ஓலைத்துண்டுகளும் எழுத்தாணியும் இருக்கின்றன், எடு” என்றான். ஆசனத்தை விட்டு எழுந்த இளநங்கை கனவில் நடப்பதுபோல் நடந்து வீரபாண்டியன் பஞ்சணையருகில் வந்து தலையணை அடியிலிருந்து ஓலைத் துண்டுகளையும் எழுத்தாணிகளையும் எடுத்துக் கொடுத்தாள்.

மெல்லத் தலையணையில் அசைந்து உட்கார்ந்து கொண்ட வீரபாண்டியன் எழுத்தாணி கொண்டு அந்த ஓலைகளில் கோடுகள் பலவற்றை வரைந்தான். மலைகளையும், நதியொன்றையுங்கூட வரைந்தான். கடைசியில் சில குறிகளையும் போட்டான். அப்படி வரைந்த ஓலைகளைக் கடைசியில் சிங்கணனிடம் கொடுத்து. “இவற்றில் வழி தெளிவாயிருக்கிறது சிங்கணரே,” என்றும் கூறினான்.

ஓலைகளை வாங்கி ஆராய்ந்த சிங்கணன் முகத்தில் பிரமிப்பு மலர்ந்தது. “வீரபாண்டியரே! விசித்திரமான திட்டம் இது,” என்றான் சிங்கணன்.

“ஆம் சிங்கணரே! மனித வாழ்வே விசித்திரம்தானே! அதிலொரு விசித்திரம் இது. வாரும், திட்டத்தை விளக்கு கிறேன்,” என்ற வீரபாண்டியன் ஓலைகளைக் கையில் கொண்டு, கோடுகளையும் குறிகளையும் குறிப்பிட்டு விளக்கலானான். “சிங்கணரே! இந்தச் சதுக்கந்தால் கோட்டை. இதன் பக்கத்தில் ஓடுகிறது கோட்டாறு. எதிரேயிருக்கிறது மலைச்சரிவு. பக்கங்களிலும் சிறிது சரிவுகள் இருக்கின்றன. இதோ இந்த மூன்று வாயில்களின் பிரதான வாயிலானதும் மலையின் பெரும் சரிவுக்கு எதிரேயுள்ளது மான கிழக்கு வாயிலில்தான் அறிவுள்ள எந்தப் படை தலைவனும் தாக்குவான்…” என்று சுட்டிக் காட்டினால் இளவரசன்.

“ஆம்,” என்று ஆமோதித்தான் சிங்கணன்.

“ஆனால் நீர் அறிவைச் சிறிது கைவிட வேண்டும்…!

“என்ன ?”

“அறிவுள்ள படைத்தலைவன் செய்வதை நீங்கள் செய்ய வேண்டாம். யாரும் நினைக்கவும் முடியாது வடப்புற வாயிலைத் தாக்குங்கள். கோட்டைப் பாது காப்புப் படைகள் பிரதான வாயிலில்தான் பலமாயிருக்கும் ஆதலால் அதை விட்டு வடக்கு வாயிலை நீங்கள் எதிர் பாராதவிதமாகத் தாக்கினால் வாயிலை உடைத்து விடலாம்… வாயிலில் அதிகப் பாதுகாப்பு இருக்காது….”

“உங்கள் விற்கூடங்கள், வேலெறியும் இயந்திரங்கள்…”

“செயலற்றிருக்கும். கிழக்கு வாயிலில்தான் தாக்கு தலை எதிர்பார்ப்பதாகப் படைகளுக்கு அறிவித்துவிட்டால் வடக்கு வாயிலில் என்ன இருக்கும்?”

“சரி. அப்படி நான் வடக்கு வாயிலில் நுழைந்தவுடன்…?”

“பிரதான வாயிலில் படைகள் குழப்பமடைந்து வடக்கு வாயிலை நோக்கி வரும். அப்பொழுது உமது படையின் இன்னொரு பிரிவு பிரதான வாயிலைத் தாக்கி நுழையலாம். பிறகு தெற்கு வாயிலைப் பற்றிக் கேள்வி கிடையாது. உள்ளே ஏற்படும் குழப்பத்தில் என் படைகள் சிதறியோடும் சமயத்தில், நீங்கள் இந்த மாளிகையைச் சூழ்ந்து கொண்டால், படுத்த படுக்கையாயிருக்கும் நான் என்ன செய்ய முடியும்?” என்று வினவிய வீரபாண்டியன் விழிகளில் துயரம் நிரம்பி நின்றது.

அந்தப் பெரும் போர் நாடகத்தைக் கேட்ட சிங்கணன் இலேசாக இகழ்ச்சி நகை நகைத்தான். எதிரியிடம் கோட்டையை ஒப்படைத்துத் தான் பிழைக்க எந்தப் படைத் தலைவனும் செய்ய இஷ்டப்படாத ஈனமான வழி அது என்று தீர்மானித்த சிங்கணன், தனது வெற்றி நிச்சயமென்ற பெருமிதத்தில், ஆசனத்தைவிட்டு எழுந்தான். “இதற்குப் பதில் என்னிமிருந்து என்ன எதிர் பார்க்கிறீர்கள்?” வினவினான் கம்பீரத்துடன்.
“என் படைகளை நாசம் செய்யக்கூடாது. உயிருடன் நாங்களும் படைகளும் செல்ல அனுமதி தரவேண்டும்; என்னிடம் சேர்ந்துள்ள விஜயவர்மன் படைகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது,” என்றான் வீர பாண்டியன்.

“சரி வீரபாண்டியரே! ஒப்புக்கொண்டேன்,” என்றான் சிங்கணன். செல்லவும் கிளம்பினான்.

“சற்றுப் பொறுங்கள்,” என்ற வீரபாண்டியன் குரல் அவனைத் தடுத்தது.

“என்ன வீரபாண்டியரே?” என்று வினவினான். சிங்கணன்.

‘நீங்கள் தாக்க வேண்டிய சமயத்தைக் கேட்க வில்லையே?” என்றான் வீரபாண்டியன்.

“எப்பொழுது தாக்கவேண்டும்?” என்று கேட்டான் சிங்கணன்.

“நாளைக் கழித்து மறுநாள் இரவு இரண்டாம் ஜாம ஆரம்பத்தில்.”

“இரவிலா?”

“ஆம். அப்பொழுதுதான் நானறியாமல் நீங்கள் தாக்கி விட்டதை மக்கள் ஒப்புக்கொள்வார்கள்.”

“சரி வீரபாண்டியரே! அனைத்தையும் யோசித்து வைத்திருக்கிறீர். பிழைக்கும் வழியென்றால் இதற்குத் தான் பெயர். இந்தப் போர் நாடகத்தை, உமது யுக்தி திட்டத்தை, வரலாற்றில் எழுதி வைத்தால்கூட நல்லது” என் குத்தலாகக் கூறிவிட்டு, அறையைவிட்டு வெளியேறி சிங்கணன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது பாசறைக்குத் திரும்பினான். பாண்டிய இளவரசன் கொடுத்த ஓலைகள் அவனிடமிருந்தால், பாசறையிலும் அவன் அவற்றை நன்றாகப் பார்த்தான். வெற்றி லக்ஷ்மி அவன் முகத்தில் விளையாடினாள். “நன்று நன்று! வீரபாண்டியரே! நான் நல்ல நாடகம் இது! உன்னைவிட அயோக்கியனை நான் இதுவரை ஆயுளில் கண்டதில்லை!” என்று, சற்று இரைந்தே சொல்லியும் கொண்டான் ஒரு முறைக்கு இரு முறையாக.

Previous articleRaja Muthirai Part 1 Ch58 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch60 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here