Home Historical Novel Raja Muthirai Part 1 Ch60 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch60 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

50
0
Raja Muthirai Part 1 Ch60 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch60 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch60 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 60 ‘கதையொன்று சொல்வேன்’

Raja Muthirai Part 1 Ch60 | Raja Muthirai | TamilNovel.in

பாண்டிய இளவரசன் துண்டு ஓலைகளில் வரைந்து கொடுத்த போர் நாடகத் திட்டத்தைப் தனது பாசறையை அடைந்த பிறகும் பல முறை துருவிப் பார்த்த போசளத் தண்டநாயகன் மனம் பெரும் பிரமையிலும் அவநம்பிக்கை யிலும் ஆழ்ந்து கிடந்தது. அரபு நாட்டுத் தடித்த சீலைகளால் அமைக்கப்பட்டு உட்புறத்தில் பாண்டி நாட்டுப் பட்டு வேலைகளால் அழகு செய்யப்பட்டிருந்த கூடாரப் பாசறையின் உட்புறத் தூணொன்றில் நீட்டிப் பிணைக்கப்பட்டிருந்த பந்தமொன்றின் வெளிச்சத்தில் நின்ற வண்ணமே ஓலைகளைத் திரும்பிப் பார்த்தான் சிங்கணன். பிறகு வெளியில் நடந்து சென்று வீரனொருவனை விளித்துத் தனது உபதளபதிகள் இருவரையும் அழைத்து வருமாறு உத்தரவிட்டான். அவர்கள் வந்ததும் அவர்களிடம் ஓலைத் துண்டுகளைக் காட்டிக் கோட்டையில் நடந்த அனைத்தையும் விவரித்து, “இந்த ஏற்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்களா?” என்று வினவினான்.

உபதளபதிகள் இருவருமே நன்றாக ஓலைக் குறிப்புக்ளை ஆராய்ந்தார்கள். அவர்கள் இருவர் முகத்திலும் மகிழ்ச்சிக் குறிகள் நன்றாகப் படர்ந்தன. இருவரில் ஒருவன் சொன்னான், “வீரபாண்டியன் கோட்டையைத் தானாகவே உங்களிடம் சமர்ப்பிக்கிறான்,” என்று.

“நமது பெரும்படை பலத்தைக் கண்டு அவன் நடுங்கி யிருக்கவேண்டும்,” என்றான் இன்னோர் உபதளபதி.

“அது மட்டுமல்ல. போசளத் தண்டநாயகரின் படை நடத்தும் திறமையும் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்றான் முதல் உபதளபதி.

“கடல் வழியாகவும் இன்னொரு படை வருவது அவனுக்குத் தெரிந்திருக்காது. நீங்கள் விளக்கியவுடன் தோல்வி அவன் கண் முன்னால் காட்சி அளித்திருக்கும்,” என்றான் இரண்டாவது உபதளபதி.

சிங்கணன் அவர்களிருவரையும் இகழ்ச்சியுடன் மாறி மாறிப் பார்த்தான். “ஒரு முக்கிய விஷயம் வீரபாண்டியனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இந்தப் போர் நாடகத்தை வெளியிட்டிருக்கமாட்டான்,” என்று இகழ்ச்சி குரலிலும் ஒலிக்கச் சொன்னான்.

“என்ன தண்டநாயகரே, அந்த முக்கிய விஷயம்?” என்று இரு உபதளபதிகளும் ஏககாலத்தில் கேட்டார்கள்.

“நீங்களிருவரும் எனக்கு உபதளபதிகள் என்பது” என்று சிங்கணனின் பதிலில் இகழ்ச்சி பெரிதாக ஒலித்தது. மிகுந்த வெறுப்புடன் இருந்த சிங்கணன் மேலும் சொன்னான். “சண்டை செய்யாமல் பெரும் கோட்டை தங்கள் கைகளில் பழம்போல் நழுவி விழும் என்பதைக் கண்டவுடன் குதூகலிக்கும் இரண்டு களிமண் மண்டைகள் எனக்கு உபதளபதிகளாக வந்திருக்கிறார்களென்பதை மட்டும் வீரபாண்டியன் அறிந்திருந்தால் அவன் திட்டம் இதுவாயிருக்காது,” என்று.

“தண்டநாயகரே…” என்று துவங்கினான் முதல் உப தளபதி. இன்னொருவனும் ஏதோ சொல்ல உதடுகளைத் திறந்தான். அவர்களிருவரையும் கம்பீரமான தன் கை அசைவினாலேயே நிறுத்திய சிங்கணன், “இந்த ஓலைகளை உங்களுக்கு நான் காட்ட விரும்பியது எதனால் தெரியுமா?” என்று வினவினான்.

“திட்டத்தை விளக்க,” என்றான் முதல் உபதளபதி.

“அல்ல. இந்த திட்டத்தின் உண்மையைச் சோதிக்க என்றான் சிங்கணன்.

“உண்மையைச் சோதிக்கவா!” இரண்டாம் உபதளபதி இக்கேள்வியை வியப்புடன் கேட்டான்.

“ஆம்,” அப்படியானால்…? முதல் உபதளபதி வினவினான்.

“இந்த ஓலைக் குறிப்புகள் எனக்கு நம்பிக்கை அளிக்க வில்லை,” என்றான் சிங்கணன் தீவிர சிந்தனையுடன்.

“குறிப்புக்கள் தான் தெளிவாயிருக்கின்றனவே?” என்றான் முதல் உபதளபதி.

இரண்டாமவன் ஏதோ சொல்ல வாயைத் திறந்தானானாலும் சிங்கணனின் ஒரு பார்வை அவன் வாயை அடியோடு அடைத்துவிடவே, முதல் உபதளபதி மட்டுமே சம்பாஷணையில் கலந்து கொண்டான். முதல் உபதளபதியான ராமவர்மன் சொற்களுக்குச் சிங்கணன் பதில் சொன்னான், “ஆம் ராமவர்மரே! குறிப்புகள் மிகத் தெளிவாயிருக்கின்றன,” என்று.

“பின் ஏன் சந்தேகம்?” என்று வினவினான் அவன்.

“மிகவும் தெளிவாயிருப்பதால்தான் சந்தேகப் படுகிறேன். எப்படியாவது கோட்டையை என்னிடம் ஒப்படைக்க வீரபாண்டியன் துடிப்பதை ஓலைக் குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன,” என்றான் சிங்கணன்.

“ஆம்.”

“கோட்டையிலிருந்து தப்பினால் போதுமென்பவன் தான் இத்தகைய ஒரு முறையை வகுக்கமுடியும்…”

“ஆம்.”

“அபாயத்துக்கோ, மரணத்துக்கோ அஞ்சுபவன்தான் இத்தகைய திட்டத்தைத் தயாரிக்க முடியும்.’

“ஆம்.”

சிங்கணன் மெல்லப் புன்முறுவல் செய்தான் “இப்பொழுது தெரிகிறதா நான் இந்த ஓலைச் குறிப்புகளைப் பற்றிச் சந்தேகிக்கும் காரணம்?” என்று வினவவும் செய்தான்.

“தெரியவில்லை தண்டநாயகரே,” என்றான் ராம வர்மன்.

“வீரபாண்டியன் இரண்டுக்கும் அஞ்சாதவன்…” என்று சுட்டிக்காட்டினான் சிங்கணன்.

“என்ன!”

“அபாயம், மரணம், இரண்டும் அவன் நெஞ்சு அறியாத சொற்கள்.”

“இருப்பினும்…” என்று கேட்க முயன்ற உபதளபதியைக் கை அசைவினால் தடை செய்த சிங்கணன், “ராமவர்மரே, நாம் இந்தக் கோட்டையை அணுகுமுன்பு எங்கு தங்கியிருந்தோம்?” என்று வினவினான்.

“இரண்டு காதத்துக்கு அப்பாலுள்ள மலைக் காட்டில்…” என்று விடையிறுத்தான் ராமவர்மன்.

“அங்கு ஒருவன் நம்மை வேவு பார்க்க வந்ததாக வீரர்கள் சொல்லவில்லையா?” என்று கேட்டான் சிங்கணன்.

“ஆம்.”

“அவன்மீது வீரர்கள் கோடரி எறிந்ததாகவும் சொன்னார்கள்….”

“ஆம்.”

“வேவுகாரன் படுகாயப்பட்டதாகவும் கூறினார்கள்.”

“சொன்னார்கள்.”
“இருப்பினும், புரவியில் கனவேகமாகச் சென்று மறைந்து விட்டதாக அறிவித்தார்கள்.”

“உண்மை.”

“சிங்கணன் உபதளபதியைக் கூர்ந்து நோக்கிவிட்டுச் சொன்னான், “அந்த வேவுகாரன் வேறு யாருமல்ல, வீர பாண்டியன்!”

முதல் உபதளபதி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அதுவரை பேசாமடந்தையாயிருந்த இரண்டாவது உபதளபதி, “உம்…” என்ற முனகலொன்றை வெளியிட்டான்.

“உண்மையாகவா? உங்களுக்குத் திட்டமாகத் தெரியுமா?” என்று கேட்டான் ராமவர்மன்.

“தெரியாது ஊகம்தான். இருப்பினும் என் ஊகங்கள் தவறுவதில்லை ராமவர்மரே. சாதாரண ஒற்றர்கள், எல்லையில் நின்றுதான் கண்காணிப்பார்கள். எதிரிப் படைகளுக்குள் ஊடுருவியோ, உடன் தங்கியோ கண்காணிப்பதானால் ஆபத்தையோ உயிரையோ லவலேசமும் லட்சியம் செய்யாதவனாய் இருக்கவேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் தமிழகத்தில் அப்படி இருவர் உண்டு! அவர்களில் ஒருவன் வீரபாண்டியன்” என்று திட்டமாக அறிவித்தான் சிங்கணன்.

“இன்னொருவன்?”

“சிங்கணன்,” என்று சர்வ சகஜமாகச் சொல்லிப் புன்முறுவலும் கோட்டினான் போசளத் தண்டநாயகன்.

சிங்கணனின் சுய பாராட்டுதலை ராமவர்மனால் ரசிக்க முடியாததால், “அப்படியா?” என்று வறண்ட குரலில் கேட்டான்.

“ஆம் ராமவர்மரே! இது ஏதோ சுயப்பிரதாபமென்று நினைக்கவேண்டாம். சிங்கத்தின் குகைக்குள்ளேயே, அதாவது காட்டுக் கோட்டைக்குள்ளேயே நான் இருந்தேன். – யாரும் கண்டுபிடிக்க முடியாத மாறுவேடத்திலிருந்தாலும், வீரபாண்டியனின் கூர்விழிகளிலிருந்து நான் தப்ப முடியவில்லை. அவன் புத்திக் கூர்மையும், வீரமும், நெஞ்சுறுதியும் அளவிட முடியாதவை. ஆகவே, இப்பொழுது அவன் தலையிலிருக்கும் காயம் நாம் தங்கியிருந்த மலைக்காட்டில் ஏற்பட்டதுதான். காயம் பலமென்பதிலும் சந்தேகமில்லை. வீரபாண்டியன் உண்மையில் ரத்தம் சேதப்பட்டு தேகபலமிழந்து படுத்திருக்கிறான். ஆனால்…” என்று சொல்லிக்கொண்டே போன சிங்கணன் சற்று நிதானித்தான்.

“ஆனால்?” என்று வினவினான் ராமவர்மன்.

“அவன் ரத்தம் சேதப்பட்டிருக்கிறது; சித்தம் சேதப் படவில்லை. அதற்கு இந்த ஓலைகள் சான்று.”

“ஓலைகள் சான்றா!”

“ஆம். இத்தனை விவரமாக, விளக்கமாக திட்டத்தைத் தயாரிப்பதானால் புத்தி நன்றாக இயங்கவேண்டும்.”

“ஆம்.”

“அதுமட்டுமல்ல ராமவர்மரே! வீரபாண்டியன் தனது நிலையை விவரித்தபோதும், திட்டத்தை விளக்கிய போதும் நானே சற்று ஏமாந்து போனேன். இங்கு வந்த பிறகும், இந்த ஓலைகளை முதலில் பார்த்தபோதும் கூட அவனை அயோக்கியனென்றும், பிழைக்க வழி செய்கிறானென்றும் நினைத்தேன்…”

“வேறு எதற்கு இத்திட்டம்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை. இதில் ஏதோ பெரும் சூது இருக்கிறது. பெரும் போர்கள் இத்தனை சுலபமாக முடிந்ததை நான் வரலாற்றில் கேள்விப்பட்டதில்லை. ஒரு விஷயம் ரொம்பச் சுலபமாயிருந்ததால் நமபுவதிலும் அர்த்தமில்லை. இந்த ஓலைத்திட்டம் வெகு சுளுவாயிருக்கிறது.”

ராமவர்மனும் யோசனையில் இறங்கினான். அதைக் கண்ட சிங்கணன் புன்முறுவல் செய்துவிட்டுச் சொன்னான், “இப்பொழுது ஓலைகளைப் பாருங்கள்,” என்று. அத்துடன் ஓலையில் சில இடங்களையும் சுட்டிக் காட்டினான். “வடக்கு வாயிலில் காவலிருக்காது என்று கூறுகிறான் வீரபாண்டியன். உண்மையில் இப்பொழுது அதிகக் காவலில்லை. ஆனால் படைகளை நாமறியாமல் உள்ளே நகர்த்த மாட்டானென்பது என்ன நிச்சயம்? அப்படியே நகர்த்தவில்லை யென்றாலும் அந்தப் பகுதியில் நாம் உட்புகும்போது கிழக்கு வாயிலைவிட்டுத் திடீரென எதிரி நம்மீது விழுந்தால்?” என்று வினவவும் செய்தான் சிங்கணன்.
ராமவர்மனின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. “சிறிது கஷ்டம்தான்,” என்று ஒப்புக்கொள்ளவும் செய்தான்.

“இப்பொழுது தெரிகிறதா ராமவர்மரே, கோட்டைக் குள்ளிருக்கும் தலைவன் யாரென்பது? மிகச் சிறந்த அறிவாளியுடன் நாம் போராடுகிறோம். இந்தப் போரைப் படைபலம் நிர்ணயிக்காது. அறிவின் பலம்தான் நிர்ணயிக்கும். ஆகவே…”

“என்ன செய்ய வேண்டும்?”

“அறிவிருந்தால் பயன்படுத்த வேண்டும்,” என்ற சிங்கணன், “அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் சிந்திக்கிறேன். ஒன்று மட்டும் செய்யுங்கள்..” என்றும் கூறினான்.

“என்ன செய்யவேண்டும்?” என்று வினவினான் ராம வர்மன்.

“நீரும் இரண்டாவது உபதளபதியும் படைகளை நாளை முழுதும் அணிவகுக்கவோ நடத்தவோ வேண்டாம். படைகள் அசிரத்தையுடனிருக்கட்டும். நமக்கெதிரே கோட்டைச் சுவர்களிலுள்ள விற்கூடங்கள் நகர்த்தப் படுகின்றனவா என்பதை மட்டும் கவனியுங்கள். அப்படி ஏதாவதிருந்தால் எனக்கு அறிவியுங்கள்,” என்ற சிங்கணன், அவர்கள் போகாலாமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான்.

உபதளபதிகள் இருவரும் சிந்தனை மிகுந்தவர்களாய்த் தண்டநாயகன் கூடாரத்தை விட்டு வெளியே வந்தனர். அவன் உத்தரவை இம்மியளவும் தவறாமல் நிறைவேற்றினர். அணிவகுப்புகளைச் சிறிதளவும் செய்யாமலும், படைகளை நகர்த்தாமலும் அசிரத்தை காட்டினர் இரு படைத் தலைவரும்; அந்த அசிரத்தையைப் படை வீரர்களும் கவனித்ததால், முற்றுகையின் மும்முரம் பெரிதும் தணிந்து கிடந்தது, மறுநாள், தண்டநாயகன் படை வட்டாரத்தில்.

கோட்டைக்கு வெளியில் மட்டுமல்ல இந்த நிலவரம். கோட்டைக்குள்ளும் அதிகப் போர் சிரத்தையில்லை. வீர பாண்டியன் கோட்டைப் பாதுக்காப்பைப் பற்றி எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பிறப்பிக்க முயன்ற இள நங்கையையும் தடுத்தான்.

மறுநாள் காலை இளநங்கை பூர்ண கவசமணிந்து புறப்பட்டபோது அவனிடம் வந்து, “என்ன உத்தரவு?” என்று கேட்டாள்.

“எதற்கு உத்தரவு?” அசிரத்தையுடன் வந்தது வீர பாண்டியனிடமிருந்து கேள்வி.

“படைகளை நடத்த,” என்றாள் இளநங்கை வெறுப்புடன்.

“படைகளை எதற்கு நடத்த வேண்டும்?”

“சிங்கணனிடம் கோட்டையை ஒப்படைக்க.”

“அதற்கு அவனல்லவா படைகளை நடத்த வேண்டும்?”
“வெளியே அவன் படைகளை நடத்தினால் உள்ளே நாம் அவன் வெற்றிக்குச் சௌகரியம் செய்து கொடுக்க வேண்டாமா?”

“ஆம். அவன் முதலில் படைகளை நடத்தட்டும். அதற்கேற்றபடி நாம் சௌகரியம் செய்து கொடுப்போம்.”

இதைக் கேட்ட இளநங்கை, “நல்லது, மிகமிக நல்லது” என்று சீறிவிட்டுச் சென்றாள்.

அப்படிச் சென்றவள் நடுப்பகலில் திரும்பி வந்தாள். அவள் முகத்தில் குழப்பம் பெரிதுமிருந்தது. “எல்லாம் விசித்திரமாயிருக்கிறது,” என்றாள்.

“என்ன விசித்திரம்?” என்று கேட்டான் வீரபாண்டியன்.

“சிங்கணன் படைகளைப் பிரிக்கவில்லை, நடத்தவு மில்லை.”

“அது அவனிஷ்டம்.”

“அப்படியானால் நாம்?”

“அவனைப் பார்த்து எதுவும் செய்வோம்.”

“அவன் அசிரத்தை காட்டுகிறான்.”

“நீயும் காட்டு. எந்தப் படையையும் உள்ளே நகர்த்தாதே. விற்கூடங்களிலுள்ள இயந்திரங்களும் அப்படியே இருக்கட்டும்.”

இளநங்கையின் முகத்தில் குழப்பத்துடன் கோபமும் விரிந்தது. “உங்களுக்குப் பைத்தியமா, சிங்கணனுக்குப் பைத்தியமா?” என்று வினவினாள்.

“இருவருக்கும்தான்,” என்ற வீரபாண்டியன் பெரிதாக நகைத்தான்.

“எதற்குச் சிரிக்கிறீர்கள்.”

“பைத்தியம் சிரிக்காமலென்ன செய்யும்?” என்றான் வீரபாண்டியன். “இளநங்கை! உன் போர்க்கோலம் எனக்குப் பிடிக்கவில்லை. போய் நீராடி உன் இயற்கையான ஆடைகளை அணிந்து வா.”

“எதற்கு?”

“விசித்திரக் கதையொன்று சொல்வேன்!” என்றான் வீரபாண்டியன்.

Previous articleRaja Muthirai Part 1 Ch59 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch61 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here