Home Historical Novel Raja Muthirai Part 1 Ch61 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch61 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

51
0
Raja Muthirai Part 1 Ch61 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch61 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch61 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 61 குயவன் பிடித்த குடம்

Raja Muthirai Part 1 Ch61 | Raja Muthirai | TamilNovel.in

போர்க் கோலத்தை அழித்துவிட்டுப் புனலாடிப் புதுக்கோலம் பூண்டு வரும்படி பாண்டியர் படைத்தலைவர் பணித்ததைக் கேட்ட பைங்கொடி இளநங்கையின் சித்தம் சினத்தால் படபடத்ததென்றால், அவன் கதையொன்று சொல்லப் போவதாகக் கூறியதைக் காதில் வாங்கியதும் அவள் தனது கருவிழிகளில் கனல் அபரிமிதமாக அள்ளித் தெளிக்க அவனைச் சுட்டுவிடுவது போல் பார்த்துக்கொண்டு நின்றாள். சொந்தமுடன் தீண்டிக் கன்னியழித்துக் காந்தருவ முறைப்படி தன்னை மனையாளாகச் செய்துகொண்ட மணவாளன், மகா கோழையும் பெறுதற்கரிய செயலைச் செய்ய முயன்ற விநாடி முதலே உள்ளம் கொதிப்புண்ட கொற்கைக் கோட்டைக் காவலன் மகள், தனது செயல் பற்றி இளவரசன் சிறிதளவும் வெட்கமோ வருத்தமோ கூடக் கொள்ளாமல் சர்வ சகஜமாயிருப்பதைப் பார்க்கப் பார்க்க எரிச்சல் ஆயிரம் மடங்கு அதிகமாகவே, பேசும் சக்தியைக் கூட அந்தச் சில விநாடிகளில் இழந்து நின்றாள், அவள். ஏற்கெனவே சிவந்த அவள் சிங்காரவதனம் சினத்தால் அதிகமாகச் சிவந்து விட்டதைக் கண்ட இளவல், கோபமும் அவளுக்கு எத்தனை அழகைத் தருகிறதென்பதை பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டான். அந்தப் பரவசத்தோடு பரவசமாக, “இளநங்கை உன் புதுப் போர்க்கோலத்துக்குத் தகுந்த உடை இதல்ல. இந்தக் கவசம், வாள், எதுவுமே தேவையில்லை. போய் நீராடிப் புத்தாடை அணிந்துவா,” என்று மீண்டும் கூறினான்.

அதைச் சொன்னபோது அவன் குரலிலிருந்த பேரானந்தத்தை அவள் கவனித்தாள். அந்த ஆனந்தம் அவள் எரிந்த உள்ளத்துக்கு எண்ணெயாகவே, உஷ்ணம் மிதம் மீறிய குரலில் வினவினாள் அவள். “புதுப் போர்க் கோலமா?” என்று.

இளவரசன் சீறிய குரலில் பதிலிறுத்தான். “ஆம், இள நங்கை! புதுப் போர்க்கோலம்தான்,” என்று உறுதியுடன் சொன்னான்.

இளநங்கைக்கு அவன் பேச்சும் போக்கும் அடியோடு புரியவில்லை. சற்று முன்பு இளநகை கூட்டி ஆனந்தம் துள்ளிய குரலிலும் பேசிய இளவரசன் திடீரென சீறிய குரலில் பேசியதன் காரணம் அவளுக்கு விளங்கவில்லை. எந்தப் புதுப் போர்க் கோலத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான் என்பதும் புரியவில்லை அவளுக்கு. ஆகவே குழப்பம் நிரம்பிய கண்களை அவன் மீது, சில விநாடிகள் நிலைக்கவிட்டுப் பிறகு சரேலெனத் திரும்பி, அந்த அறையை விட்டு அகன்று தனது அறைக்குச் சென்றாள். அங்கு அவள் கவசங்களைக் கழற்றத் தயாராகக் காத்திருந்த பணிப்பெண் குறிஞ்சி, “அம்மா! நானே கவசத்தைக் கழற்றி விடுகிறேன்,” என்று இளநங்கையை அணுகி வந்தாள்.

இளவரசன் மீதிருந்த கோபத்தைப் பணிப்பெண் மீது காட்ட முற்பட்ட இளநங்கை, “கவசத்தை எதற்காகக் கழற்ற வேண்டும்?” என்று சீறினாள்.

“நீராட,” என்று சர்வசகஜமாகச் சொன்னால் குறிஞ்சி.

“நீராடப்போவதாக யார் சொன்னது?” என்று வினவினாள் இளநங்கை முன்னைவிட அதிக உஷ்ணத்துடன்.

“இளவரசர்.”

“நான் நீராடப்போவது அவருக்கெப்படித் தெரியும்?

“சாதாரணமாக நீங்கள் களைத்து வரும்போது நீராடுவது சகஜம்தானே?”

“சகஜமென்று யார் சொன்னது?”

“அது எனக்கே தெரியுமே.”

“உனக்குத் தெரியுமென்றால் இளவரசர் உத்தரவைக் கேட்பானேன்?”

“நான் கேட்கவில்லையம்மா?”

“அவராகச் சொன்னாரா?”

“ஆம். என்னைக் கூப்பிட்டனுப்பினார். ‘நடுப்பகலில் உன் தேவி வருவாள், களைப்புடனிருப்பாள், நீராட்டத்துக்கு ஏற்பாடு செய்,’ என்று உத்தரவிட்டார்.”

இளநங்கையின் மனம் சினத்திலாழ்ந்திருந்ததால் அவள் சிறிது நேரம் பதில் சொல்லவில்லை. “அப்பா! என்ன அக்கறை!” என்று சொன்ன போது சொற்களில் வெறுப்பே இருந்தது.

அந்த வெறுப்பை அதிகமாக்கும் வகையில் அடுத்த சொற்களை உதிர்த்தாள் குறிஞ்சி. “உண்மையில் அக்கறையுடன்தான் சொன்னார் தேவி,” என்றாள் பணிப் பெண்.
கவசத்தைக் கழற்ற முயன்ற இளநங்கை மார்புக் கவசத்தைப் பாதி அவிழ்த்த நிலையில், “என்ன! அக்கறையுடன் சொன்னாரா?”

“ஆம் தேவி,” என்றாள் பணிப்பெண்.

“என்ன அக்கறை காட்டினார்?” என்று மீண்டும் கேட்டாள் இளநங்கை.

“உங்களுக்கு நீராட்டப் பொடிகளில் எதெதை எடுத்து வைக்கவேண்டும் என்று கூடச் சொன்னார்?” என்று கூறிய குறிஞ்சியின் குரலில் வெட்கம் தொனித்தது.

“அப்படியா!” இகழ்ச்சி ஒலித்தது இளநங்கையின் குரலில்.

“ஆம் அம்மா! முதலில் சிறிது மஞ்சள் பொடியை எடுத்துக்கொள்ளச் சொன்னார்…”

“பிறகு?”

“அதில் பழையபடி வெட்டிவேரை அதிகமாகச் சேர்க்க வேண்டாமென்று கூறினார்.

“உம்…”

“வெட்டி வேரில் சிறிதும் செண்பகப் பூவின் தூளில் நிரம்பவும் சேர்க்கச் சொன்னார்….”

“ஊஹும்.”
“அடுத்தபடி மகிழம்பூத் தூளைச் சிறிது கலந்து கொள்ளச் சொன்னார்.

“நீராட்டப் பொடித் தயாரிப்பில் வல்லவர் இளவரசர்.”

“ஆம் அம்மா! அவருக்குச் சகலமும் தெரிந்திருகிறது. அதுமட்டுமல்ல, வெந்நீரில் பன்னீரை லேசாகத் தெளிக்கச் சொன்னார்.”

“அதிகமாகத் தெளித்தால் என்னவாம்?”

“வாசனை சுகமாயிருக்காதாம். மிதமான வாசலை தான் அவருக்குப் பிடிக்குமாம்.”

அதுவரை பேச்சுக்கொடுத்த இளநங்கை. “உனக்கு வேறு வேலையில்லை? இதையெல்லாம் அவருடன் எதற்காக சர்ச்சை செய்தாய்?” என்று சீறி, மார்புக் கவசத்தைச் சற்று எட்டி இருந்த மஞ்சத்தில் விட்டெறிந்தாள்.

பணிப்பெண் அவள் சினத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாமலே சொன்னாள்: “அதுமட்டுமல்ல அம்மா! தாங்கள் அணிய வேண்டிய பட்டாடை எது, ஸ்நானத்தின்போது தலையில் தடவவேண்டிய தைலம் எது, பிறகு முடிய வேண்டிய பூ எது என்பதையெல்லாம் விவரமாகச் சொன்னார், படைத்தலைவர்,” என்று.

“எல்லாம் திட்டமாகத்தான் சொல்லியிருக்கிறார்!” என்று இகழ்ச்சியுடன் கூறிய இளநங்கை பரபரப்புடன் தனது போராடைகளைக் கழற்றிக் கழற்றி மஞ்சத்திலெறிந்தாள்.
குறிஞ்சி அவளை மேற்கொண்டும் குத்தினாள். “அம்மா இதில் கோபத்திற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டாள்.

“இல்லையில்லை, கோபத்திற்கு எதுவுமில்லை. ஆனந்தத்திற்குத் தானிருக்கிறது,” என்றாள் இளநங்கை.

“ஆம் அம்மா! இப்படி ஒரு புருஷன் கிடைத்தற்கு நீங்கள் தவம் செய்திருக்க வேண்டும்!”

“பெரும் தவம் செய்திருக்கிறேன்!”

“சந்தேகமில்லையம்மா. தனது காதலிக்கு எது பிடிக்கும் என்பதைச் சதா யோசித்துப் பார்க்கும் புருஷனால் தான் இத்தனையும் சொல்ல முடியும்.”

“ஆம், ஆம்” என்று படபடப்புடன் கூறிய இளநங்கை வெகுவேகமாக நீராட்ட அறைக்குச் சென்றாள். அங்கிருந்த தைலத்தையும் நீராட்டப் பொடியையும் பார்த்தபோதே எரிச்சல் வந்தாலும், அவற்றை உபயோகப்படுத்தியே நீராட்டத்தை முடித்த இளநங்கை மீண்டும் அறைக்கு வந்த போது அங்கு தனக்கு லேசான சிவப்பு நிறப் பட்டாடை யொன்றும் செண்பக மலர்கள் ஐந்தாறும் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள். அந்தப் பட்டாடை தனக்கு எத்தனை அழகாயிருக்குமென்று அவளுக்குத் தெரிந்தேயிருந்தாலும், கோபத்தின் காரணத்தால் அதை அவசர அவசரமாக அணிந்துகொண்டாள். தலைக்குழலையும் இருபக்கங்களிலிருந்து எடுத்துப் பின்னிய சிறு பின்னல்களுக்கிடையில் படரவிட்டு, அந்தச் சிறு பின்னல்களை நடுவில் முடித்து அவற்றின் இருபுறங்களிலும் செண்பக மலர்களைச் செருகிக் கொண்டாள். பிறகு நெற்றிக்குத் திலகமிட்டுத் தகளியில் ஒருமுறை பார்த்தும் கொண்டாள். பின்னால் நின்று குறிஞ்சி தனது தேவி தகளி பார்ப்பதைக் கண்டு குறுமுறுவல் கொண்டாள். என்ன கோபமிருந்தாலும் எந்தப் பெண்ணும் தன் அழகைப் பார்க்கத் தவறுவதில்லை ,’ என்று தனக்குள் சொல்லியும்கொண்டாள்.

பணிப்பெண் முறுவலைத் தகளியிலே கவனித்த இள தங்கை சட்டென்று அசட்டை காட்டித் தகளியை மிருசத்தில் எறிந்துவிட்டு இளவரசன் அறைக்குச் செல்ல முற்படவே, “அம்மா!” என்று குரல் கொடுத்தாள் பணிபெண்.

“ஏன் குறிஞ்சி?” சற்றே திரும்பியவண்ணம் கேட்டாள் இளநங்கை.

“உணவுத் தட்டை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்களா? நான் கொண்டுவரட்டுமா?” என்று வினவினாள் குறிஞ்சி.

“உணவுத் தட்டா?”

“ஆம் அம்மா. நீங்களிருவரும் உணவருந்த.”

“அவர் கூட உணவருந்தவில்லையா?”

“இல்லை. கேட்டதற்கு நீங்கள் வரட்டுமென்று கூறி விட்டார்.”

“அப்படியா! நீயே கொண்டுவா உணவுத்தட்டை,” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டுப் புறப்பட்ட நங்கை திடீரென எதையோ நினைத்துக்கொண்டு, “வேண்டாம் என்னிடமே கொடுத்துவிடு. நானே எடுத்துப் போகிறேன்” என்று கூறவே, பணிப்பெண் தட்டை அவளிடம் அளித்தாள். அதை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்த இளநங்கையை விழுங்கி விடுவதுபோல் பார்த்தான் வீரபாண்டியன்.

சிவந்த அவள் மேனியில் தவழ்ந்த சிவப்பு ஆடை சிவப்புக்குச் சிவப்பு அழகு செய்யமுடியும் என்பதை நிரூபிக்க முயன்றதனாலும் அவள் கேசத்தின் வழவழப்பைத் தாங்க முடியாத காரணத்தாலும் திருப்பித் தூக்கிவிட வேண்டிய, அவள் கைகள் உணவுத் தட்டைப் பிடித்திருந்ததாலும், நன்றாக நெகிழ்ந்து முந்தானை நிலத்தில் புரண்டது. ஆனால் முழுவதையும் நெகிழவிடாமல் அவள் மானத்தைக் காக்க இஷ்டப்பட்ட அழகிய மார்பகம் ஆடையைத் தாங்கித் தூக்கி நிறுத்திக்கொண்டது. இப்படி ஆடை நழுவியதால் சங்கடத்திலாழ்ந்த அந்தச் சித்தினியின் சிற்றிடை அவள் நடையில் பெரிதும் நெளிந்து சுழன்று நடைக்கு ஒரு சிக்கலையும் சிங்காரத்தையும் அளித்தது. அப்படிச் சிக்கலுடன் நடந்ததால் அழகுகள் லேசாக அதிர்ந்தன; அலைந்தன. பாதவணிகள் ஒலித்தன. கண்கள் கடைகோட்டிச் சங்கடப்பட்டன. புருவங்கள் எழுந்து தாழ்ந்தன, உதடுகள் உள்மடிந்து கன்னங்களைக் குழித்தன.

அவள் அழகை, அழகிய நடையை, நடையால் விளைந்த அசைவுகளை அணு அணுவாகக் கவனித்தான் வீரபாண்டியன். அவள் சற்று எட்ட இருந்த மஞ்சத்தில் உணவுத்தட்டை வைத்து, நெகிழ்ந்த சேலையைத் தூக்கிவிட்டுச் சரிப்படுத்திக் கொண்டு உணவுத் தட்டுடன் மஞ்சத்தை நோக்கி வந்தபோதும் அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் இளநங்கை கண்ணை அவன் மீது திருப்பவே இல்லை. அவள் உள்ளத்தே உணர்ச்சிகள் சுழன்று கொண்டிருந்தன. அவை என்ன உணர்ச்சிகள் என்பதைக்கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னை வாட்டிவதைப்பது துன்பமா, இன்பமா, கோபமா, காமமா, இளவரசன்மீது ஏற்பட்டிருப்பது கசப்பா, இனிப்பா, எதுவுமே விளங்கவில்லை அவளுக்கு. ஒன்று மட்டும் திட்டமாக விளங்கியது. இளவரசன் விழிகள் தன்னை ஊடுருவி ஊடுருவிப் பார்க்கின்றன. தனது ஆடையோ, சீற்றமோ எதுவுமே அவற்றுக்குத் தடையாயில்லை என்பதுதான் அது. அதன் விளைவாக அவனைச் சரியாக ஏறெடுத்தும் பார்க்காமலேயே அவன் மஞ்சத்தருகே வந்த இளநங்கை நிலத்தில் கண்களை ஓட்டிய வண்ணமே கேட்டாள், “உணவு அருந்துகிறீர்களா?” என்று.

இளவரசன் கண்கள் அவளை ஆசையுடன் நோக்கின. “நீ கொண்டுவந்தபின் அருந்தாதிருக்க முடியுமா?” என்று உதிர்ந்தன சொற்கள் அவன் உதடுகளிலிருந்து.

“சரி. சரி. இந்தாருங்கள்,” என்று உணவுத் தட்டிலிருந்து ஒரு கிண்ணத்தை எடுக்கப் போனாள்.

“இரு இரு. கதவு திறந்திருக்கிறது.” என்றான் வீர பாண்டியன்.

“திறந்திருந்தாலென்ன?”

“யாராவது வருவார்கள்.”

“வந்தாலென்ன?”
“நாம் தனித்திருக்கும்போது யார் வருவதையும் நான் விரும்பவில்லை.”

“நாம் தனித்திருக்கப்போவதாக யார் சொன்னது?”

“நான்தான் சொல்லுகிறேனே?”

“எனக்கிஷ்டமில்லை.”

“எனக்கிஷ்டமிருக்கிறது.”

“உங்களிஷ்டப்படிதான் நான் நடக்க வேண்டுமா?”

“அப்படித்தான் பெரியவர்கள் சொல்கிறார்கள்.”

“எந்தப் பெரியவர்கள்?” என்று சீறினாள் இளநங்கை.

“எல்லா பெரியவர்களுந்தான். புருஷன் இஷ்டப்படி நடக்கவேண்டியது மனைவியின் கடமை,” என்றான் இளவரசன்.

“சரி. இப்பொழுது என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டாள் இளநங்கை.

“கதவைத் தாளிடு.”

“எதற்கு?”

“சொல்லுகிறேன்.”

“எதற்கும் காலாகாலமுண்டு.”

“இப்பொழுதென்ன காலத்திற்கு?”

“பகற் காலம்.”

“இருந்தாலென்ன?” இதைச் சொன்ன இளவரசன் முறுவல் கொண்டான்.

“சேசே! நீங்கள் ஆனாலும் மோசம்,” என்று சொன்ன இளநங்கை, வேண்டா வெறுப்புடன் சென்று கதவைத் தாளிட்டு வந்தாள்.

திரும்பிய அவளைத் தன்னருகில் பஞ்சணையில் உட்காரச் சொன்னான் இளவரசன். தன் தலையணைகளையும் சற்று உயர்த்தச் சொல்லிச் சிரமப்பட்டு அரைவாசி உட்காரவும் செய்தான். அவனைச் சௌகரியமாகச் சாய்ந்த வண்ணமிருக்கச் செய்து பக்கத்தில் உட்கார்ந்த இளநங்கை “சொல்லுங்கள்,” என்றாள் அவனை நோக்கி.

“எதை?”

“முதலில் எதைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை.”

“சொன்னால் சீறுவாய்,” என்ற இளவரசன், இளநகை கொண்டு அவள் இதழ்களில் கண்களையும் ஓட்டினான்.
இளநங்கை சங்கடப்பட்டு அசைந்தாள். அந்தச் சங்கடத்தை ஆயிரமடங்கு அதிகப்படுத்தும் சொற்களைக் கொட்டினான் இளவரசன். அவற்றில் காமவிகாரம் அளவற்றிருந்ததைக் கவனித்தாள் இளநங்கை. ஆனால் அந்தச் சொற்களைச் சரியாக மட்டும் எடை போட்டிருந்தால், ஊன்றி நோக்கியிருந்தால், அந்தக் காமச்சொற்களுக்குள் பெரும் தந்திரக் கதையொன்று ஓடிக்கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டிருப்பாள் அந்தக் கட்டழகி. ஆனால் சுரணைகள் எட்டப் போய்விட்ட சமயம் அது. காமனின் சுந்தரக்கணைகள் ஆட்டங்காட்டிய காலம் அது. அந்தச் சமயத்தில் ஆராய்ச்சி எங்கிருந்து வரும்? அவள் ஏதும் நினைக்கச் சக்தியின்றி இளவரசனிடம் குயவன் கைக் களிமண்ணென வளைந்தாள். அவள் தன்னிலை மறந்தாள். காலாகாலத்தைப் பற்றிச் சற்றுமுன்பு பேசிய அவள், காலத்தையும் மறந்தாள். அகாலமே காலமாகி விட்டது அவளுக்கு.

Previous articleRaja Muthirai Part 1 Ch60 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch62 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here