Home Historical Novel Raja Muthirai Part 1 Ch62 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch62 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 1 Ch62 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch62 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch62 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 62 வலது கரத்தின் விந்தை

Raja Muthirai Part 1 Ch62 | Raja Muthirai | TamilNovel.in

சிவந்த ஆடை சற்றே நெகிழ்ந்து கிடக்க, செம்பருத்தி அதரங்கள் சற்றே விரிந்து உள்முத்துக்களை லேசாகக் கோடி காட்ட, வெட்கமும் வெட்டிக் கோபமும் முக மெங்கும் தவழ, தலையிலிருந்த செண்பகப் பூவொன்று அடுத்து என்ன நடக்குமென்று காதுப்புறமாகச் சற்றே எட்டிப் பார்க்க, சங்கடத்தால் வளைந்து தன்னெதிரே உட்கார்ந்திருந்த எழிலுருவத்தின் மேலெல்லாம் கண்களைத் தாவவிட்ட பாண்டிய இளவரசன்,“இளநங்கை! இந்தப் புதுப் போர்க்கோலம் உனக்கு எத்தனை சிறப்பாயிருக்கிறது தெரியுமா?” என்று கேட்டு, அவள் கையொன்றைத் தன் கையிலெடுத்து வைத்துக்கொண்டு மெள்ள அதை நெறிக்கவும் செய்தான்.

இளநங்கையின் உடலில் இன்ப உணர்ச்சிகள் பெரு வேகத்தில் சுழன்று ஓடியதால் அவள் அவனைப் பார்க்காமல் வேறுபுறம் தலையைத் திருப்பிக் கொண்டு “புதுப் போர்க் கோலமா?’ என்று கேட்டாள், ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக.

“ஆம். புதுப் போர்க்கோலம்தான்,” என்ற இளவரசன் மெள்ள அவளைத் தன்னை நோக்கிச் சற்று இழுக்கவும் செய்தான்.

அவளும் பஞ்சணையில் அசைந்து நகர்ந்தாள். “இது தான் போர்க்கோலம் போலிருக்கிறது!” என்று கூறவும் செய்தாள் சங்கடத்துடன்.

“ஆம்,” என்றான் இளவரசன் ஆசை ததும்பிய குரலில்.

“போர் நடப்பது இங்கல்ல. எதிரி வாசலில் இருக்கிறான் என்றாள் இளநங்கை,” அவன் கை தனது கையிலிருந்து விலகி இடையில் வளைந்ததால் சற்று நிமிர்ந்து .

“உள்ளேயுந்தானிருக்கிறான்.”

“யாரது?”

“வெளியிலிருக்கிற எதிரியைவிட மோசமானவன்.”

“அப்படியா!”

“ஆம். வெளியிலிருக்கிற எதிரி பகிரங்கமானவன் கண்ணுக்குத் தெரிகிறான். நேரிடையாகப் போருக்கு வருகிறான்…”

“இவன்?”

“மறைந்து போரிடுகிறான். எனக்கு வேண்டியவர்களைக் கொண்டு என்னை வதைக்கிறான். அவன் பாணங்கள் பார்வைக்கு மென்மை ஆனால் அவற்றைவிடக் கொடுமை வாய்ந்த பாணங்கள் எதுவும் இல்லை.”

இதைக் கேட்ட இளநங்கை தலை குனிந்து நிலையிலும் முறுவல் கொண்டாள். அவன் எந்த எதிரியை குறிப்பிடுகிறான். எந்தப் பாணங்களைக் குறிப்பிடுகிறான் என்பதை அறிந்தேயிருந்தாள் அவள். இருப்பினும் அவன் வாயால் அதை அறியக் கேட்டாள், “அத்தனை கொடுமையான பாணங்களா?” என்று.

இளவரசன் முகத்தில் அச்சம் விரிந்தது. “ஆய் இளநங்கை,’ என்றான்.

“அவற்றைக் கண்டு நீங்கள் பயப்படுகிறீர்களாக்கும்? என்று வினவினாள் இளநங்கை.

“ஆம்.”

“பயம் வீரர்களுக்கு அழகா?”

“என்னைவிடச் சிறந்த வீரர்கள் பயந்திருக்கிறார்கள்?”

‘இதற்கும் சான்று இருக்கிறது போலிருக்கிறது.”

“இருக்கிறது, அதுவும் காவியச் சான்று.”

இளநங்கை மெல்ல நகைத்தாள். “மறுபடியும் பழைய புராணத்தை ஆரம்பித்துவிட்டீர்கள்,” என்னும் சொற்களை உதிர்த்தாள்.

இளவரசன் கை அவள் இடையின் பகுதியொன்றை வலிக்கப் பிடித்தது, “பழைய புராணத்தில் இருக்கும் சுவை புதுக் கதைகளில் இல்லையே, இளநங்கை. உதாரணமாக புதுப் போர்க் கோலத்துக்கு விவரணமே பழைய கதையில் தானிருக்கிறது. என் அச்சம் சரியென்பதற்கும் சான்று அதில் தானிருக்கிறது” என்றும் கூறினான்.
“உங்களுக்கு வேண்டிய சகலத்தையும் படித்திருக் கிறீர்கள்,” என்றாள் இளநங்கை.

“எனக்கு வேண்டியதா! உனக்கும் வேண்டியதை நானே படித்து வைத்திருக்கிறேன். உன் புதுப் போர்க் கோலத்தைக் காவியம் வர்ணிக்கிறது கேள் இளநங்கை கதையைச் சொல்லுகிறேன்,” என்ற இளவரசன் தொடர்ந்தான்; “இளநங்கை! முன்பு இளவல் ஒருவனிருந்தான், அரசகுமாரன்; பெருவீரன். வில்லை வளைத்தால் விண்ணும் நடுங்கும் ஆற்றல் படைத்தவன். அச்சமென்பதை அணுவளவும் அறியாதவன். அவனது அண்ணன் நண்பனொருவன் நன்றி மறந்ததால் அவனுக்குப் புத்தி புகட்ட, அவன் கோட்டைக் கதவை உதைத்து முகத்தில் கோபக்கனல் பறக்க நகருள் புகுந்தான். கோட்டைக்குள் இருந்தவர் நடுங்கினர். ஆனால் நடுங்காதவரும் ஒருவர் உண்டு. அவள் பெண். அந்த வீரனை எதிர்க்கப் போ கூடங்களை ஏவினாள். அந்தப் போர்க்கூடங்க தாங்கிவந்த கணைகளைக் கண்டதும் அச்சத்தை அறிய அந்த மகாவீரன் அச்சத்தின் வசப்பட்டான். அந்தப் போர்க் கூடங்கள் அழகாகத்தான் அசைந்து வந்தன. அந்த அசைவே அச்சத்தை அளித்தது இளவலுக்கு. கண்கள் வேலெறிந்தன. புருவ விற்கள் வளைந்து ஆர்ப்பரித்தன சிலம்புகள் முரசொலித்தன. இந்த நிலையில் புராணம் என்ன சொல்கிறது தெரியுமா இளநங்கை? ‘மெல்லியர் வளைந்தபோது பெயர்க்கரும் சீற்றம் பேரப் பார்க்கவும் அஞ்சினான் அப்பணையிலும் உயர்ந்த தோளான்’ என்று சொல்கிறது.

அவள் சொன்ன புராணக் கதை அவளுக்குத் தெரிந்தேயிருந்தது. இலக்குவனை வழிமறித்துச் சினம் தணிக்கத் தாரை அனுப்பிய இளமங்கையர் அந்த இளங் காளையைச் சூழ்ந்துகொண்ட கதையை, கதை பற்றிய கம்ப காவிய வர்ணனையை, இளவரசன் அத்தனை சாமர்த்தியமாகச் சொல்லியிருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்ட இளநங்கை, ‘வீரபாண்டியன் பெரும் வித்தகன். காரியத்திற்கு அனுகூலமாகக் காவியம் படிக்கிறான்,’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவள் மௌனத்தின் காரணத்தைப் புரிந்துகொண்ட இளவரசன் கைகள் அவளை நன்றாகத் தழுவிக்கொண்டன. அப்பொழுதும் பலவீனமான நிலை அவனுக்கு. இரத்த மிழந்து உடல் சக்தியற்றிருந்த ஸ்திதி, அந்த ஸ்தியிலும் அவன் கையில் மட்டும் பெரும் பலமிருந்ததையும் அவை தன்மீது பலபடி சுழல முற்பட்டுவிட்டதையும் உணர்ந்த இளநங்கை அடியோடு நிலைகுலைந்தாள். ‘இத்தனை தலைக் காயத்திலும் இதற்கு மட்டும் எங்கிருந்து பலம் வந்துவிடுகிறதோ?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ‘இலக்குவன்தான் இளமங்கையரின் விற்களுக்கும் வேல்களுக்கும் அஞ்சினானே தவிர, இவர் அச்சப்படுவதாகத் தெரியவில்லையே. பெண்களுக்கு நாணம் தானே, கவசம். அதை உடைத்துவிட்ட இவர் அச்சத்தைப் பற்றி எப்படிப் பேசலாம்?” என்றும் எண்ணித் தன் பலவீனம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாவதை ‘உணர்ந்தாள். அவன் கைப்படி தான் வளைவதையும் அறிந்தாள். அறிந்ததும் அந்த ஆண்மகன் ஆவலிலிருந்து விடுபடும் வகையற்றுத் தவித்தாள்.

வீரபாண்டியன் சிரமப்பட்டுத் தலையணையில் பாதி உட்கார்ந்தபடி சாய்ந்திருந்தான். இரண்டொரு சமயங்களில் அருகில் வரத் தாமதித்த அவள் உடலை, இழுக்கச் சற்று எழுந்திருக்கவும் செய்தான். இருப்பினும், வலியையும் அலட்சியம் செய்து அவளைச் செப்பனிட முற்பட்டாள். அவனிஷ்டத்துக்கு அவள் வளைந்தாள். அந்த இன்ப நிலையில் எங்கிருந்தோ ஒலிப்பதுபோல் மெள்ள வந்து அவன் அழைப்பு, “இளநங்கை” என்று.

“உம்.”

“கதையொன்று சொல்கிறேன் என்று சொன்னேனே?”

“அதுதான் சொல்லி விட்டீர்களே.”

“ஆம், சொன்னேன். ஆனால் அந்தக் கதை நமக்கு எப்படிப் பொருந்தும்.”

“பொருந்தாது. நாம்தான்…”

“ஆமாம். இருந்தாலும் அந்தப் போர்க் கூடங்கள் விற்கள், வேல்கள் இவை செயலாற்றும் தன்மை பொருந்து மல்லவா?”

“இளநங்கை அவனை உற்று நோக்கினாள். “என்ன சொல்கிறீர்கள்?” என்றும் கேட்டாள் சந்தேகத்துடன்.

இளவரசன் மெள்ளத் துவங்கினான்: “இளநங்கை! பூமியைப் பெண்ணாகத்தானே வர்ணிக்கிறார்கள் கவிகள்?”

“ஆம்” என்றாள் இளநங்கை, அந்தப் பூர்வபீடிகை எதற்காக என்று உணராமல்.

“இந்தக் கோட்டையை ஒரு பெண்ணென்று வைத்துக் கொள். அதன் கிழக்குவாயில் நுதலானால் அதன் மீதிருக்கும் விற்கூடங்கள் புருவங்களாகவும் சற்று அடியிலிருக்கும் வேலேறியும் இயந்திரங்கள் கண்களாகவும் வைத்துக் கொள்ளலாமல்லவா?” என்று வினவினான் இளவரசன்.

“வைத்துக் கொள்ளலாம்.”

“எதிரேயிருக்கும் எதிரியைக் கண்டு கோட்டை ராணி, புருவங்களைக் குவித்துக் கண்களைத் தாழ்த்தி நாணிச் சங்கடப்பட்டு நிற்கிறது. இந்த நிலையை எதிரி பயன்படுத்திக்கொள்ள முற்படுகிறான். அப்பொழுது பெண் என்ன செய்வாள்?”

இளநங்கைக்கு அந்த உவமை பிடிக்காததால் “கையைத் தூக்கிக் கன்னத்தில் அறைவாள்!” என்று எரிந்த விழுந்தாள்.

“நல்லது! நல்லது! கற்புடைய பெண் அதைத்தான் செய்வாள்,” என்று குதூகலித்த இளவரசன், “அடுத்து என்ன செய்வாள்?” என்றும் வினவினான்.

“கண்களால் சுட்டெரிப்பாள்,” என்று சீறினாள் இளநங்கை.

“மிக நல்லது. மிக நல்லது,” என்ற வீரபாண்டியன் “இதை எதிரி புரிந்து கொள்வது நல்லது. ஆனால் எங்கே புரியப் போகிறது?” என்று கூறினான்.

இளநங்கைக்கு ஏதும் விளங்கவில்லை . “எனக்கு ஏதும் விளங்கவில்லை” என்றும் கூறினாள்.

“பல விஷயங்கள் நமக்கு விளங்குவதில்லை, இளநங்கை. ஆனால் பலனில்லாமலும் போவதில்லை” என்ற வீரபாண்டியன் அதற்குமேல் கதையைப் பற்றியோ கோட்டையைப்பற்றியோ ஏதும் பேசாமல், “இளநங்கை! உன் உதடுகள்” என்று அவற்றில் விரலொன்றை வைத்தான்.

உதடுகளை விரல் அழுத்தியதால் பேச முடியாது இளநங்கை, அவன் விரலைத் தன் கையால் நீக்கிப் பற்றிக் கொண்டாள். அவள் கைக்குவியலில் அகப்பட்டுக் கொண்ட அவன் விரல் சற்றே சுழலவே அவள் அதை உதறிவிட்டு எழுந்திருந்தாள். எழுந்தவள் சீலைத் தடுப்பை எடுத்து மேலே போட்டுக் கொண்டு, உணவை அவன் வாயில் மெள்ள மெள்ளப் புகட்டினாள். பிறகு அவளை நீரருந்தவும் செய்து வாயையும் துடைத்தாள். பிறகு அவனருகில் உட்கார்ந்து கொண்டு, “இன்னும் கதை ஏதாவதிருக்கிறதா? நான் போகலாமா?” என்று வினவினாள்.

“நீ இருக்கிற வரையில் கதைகள் உண்டு,” என்றான் இளவரசன்.

“என்ன கதை!”

“எத்தனையோ கதை,”

“சொல்லுங்களேன்”.
“சொல்லும் கதைகளும் உண்டு, சொல்ல முடியாத கதைகளும் உண்டு .”

“சொல்ல முடியாத கதை என்பது ஒன்று உண்டா?”
“உண்டு. அது செயல் கதை.” இதைச் சொன்ன இளவரசன் கண்கள் அவள் கண்களுடன் கலந்தன.

அவள் கண்களை அகற்றவில்லை. “மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள்,” என்றாள்.

“நீ அருகில் வரும்போதெல்லாம் பலவீனம் வரத்தான் செய்கிறது.”

“அந்தப் பலவீனத்தைச் சொல்லவில்லை. உங்கள் உடல் ரத்தமிழந்து இருக்கிறது.”

“இருந்தாலென்ன?”

“சில நாட்கள் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். உடல் தேறட்டும்.”

“ஆனால் உயிரைக் கொடுத்த மருந்து உடலுக்கும் உரத்தைக் கொடுக்காதா? வேண்டுமானால் மருத்துவரைக் கேட்டுப் பார்,” என்றான் இளவரசன்.

இளநங்கையின் காதல் விழிகளில் நீரும் சுரந்தது “இரண்டு நாள் பொறுங்கள். கிணற்று நீர் எங்கு போய் விடும்?” என்றாள்.
இளவரசன் கை அவள் கையுடன் கலந்து கிடந்தது “பொறுத்தார் பூமியாள்வார்,” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.

“ஆம். தரணியாளப் பொறுக்க வேண்டும்,” என்று அவளும் முணுமுணுத்தாள்.

“தரணியா, தரணியா?” என்று வினவிய அவன் நகைத்தான். அவளும் நகைத்தாள். பிறகு, “நான் வருகிறேன்,” என்று எழுந்தாள்.

“எங்கு இளநங்கை?”

“கோட்டை மதிலுக்கு!”

“எதற்கு?”

“எதிரி நிலை பார்க்க.”

“பார்க்க வேண்டாம்.”

“ஏன்?”

“நாளை இரவுதானே சிங்கணனைத் தாக்கச் சொல்லி யிருக்கிறோம்?”

“ஆம்.”

“பின் இன்று எதற்காக நீ கோட்டை மதிலைப் பரிசோதிக்க வேண்டும்?”

“எதற்கும் நாம் முன்னேற்பாடாயிருக்க வேண்டாமா?”

“தோல்வியடைய முன்னேற்பாடென்ன?” என்ற வீரபாண்டியன் நகைத்தான். பிறகு சொன்னான், “எதிரி முறை தவறி நடந்தால் பெண் வலது கையை ஓங்கி அறையட்டும்,” என்று.

அவன் சொற்களில் புது ஒலி ஒன்றிருந்தது. அதன் காரணம் அவளுக்கு அன்று புரியவில்லை . மறுநாளிரவு அது புரிந்தபோது அவன் சொன்ன கதை, உவமை அனைத்துக்குமே காரணம் புரிந்தது அவளுக்கு. அவளுக்கு மட்டுமல்ல, அந்தக் கோட்டை வாசிகளுக்கே புரிந்தது. அது வீரபாண்டியன் இளநங்கை வாழ்வை மட்டுமல்ல சிங்கணன் வாழ்வையும், பாண்டிய நாட்டின் சரித்திரத்தையும்கூட மாற்றிவிட்டது. “வலது கரத்தின் விந்தை!” என்று வீரபாண்டியனே அதற்குப் பெயர் சூட்டினான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch61 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch63 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here