Home Historical Novel Raja Muthirai Part 1 Ch63 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch63 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

53
0
Raja Muthirai Part 1 Ch63 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch63 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch63 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 63 நள்ளிரவில் ஒரு பெண் குரல்

Raja Muthirai Part 1 Ch63 | Raja Muthirai | TamilNovel.in

பட்டப் பகலில் அறைக் கதவைத் தாளிடச் சொல்லிப் பஞ்சணையில் தன்னை உட்கார வைத்துக் கொண்டு தொட்டு விளையாடி வீண் கதை பேசி, குயவன்கை மண்ணெனத் தன்னை உருட்டித் திரட்டிக் குழைத்துவிட்ட வீரபாண்டியன், கோட்டையை செய்ய வேண்டுமென்பதைப் பற்றி மாத்திரம் திட்டமாக ஏதும் சொல்லாமல் கோட்டையைப் பெண்ணாக வர்ணித்து, ‘எதிரி முறை தவறி நடந்தால் பெண் வலது கையை ஓங்கி அறையட்டும்’ எனக் கூறியதை கேட்ட இளநங்கை அவனைச் சில விநாடிகள் தன் கமல விழிகளால் கூர்ந்து நோக்கினாள். கடைசிச் சொற்களை அவன் சர்வ சாதாரணமாக உதிர்த்தாலும் அவற்றில் ஏதோ ஒரு புத்தொளி இருந்ததாகத் தோன்றவே, அவள் அதற்கு விளக்கம் கேட்கும் முறையில், “ஏதோ புதிர் போடுகிறீர்களே?” என்று வினவவும் செய்தாள்.

கேள்வியை உதிர்த்த உதடுகளையும் கேள்வி தொக்கி நின்ற கமல விழிகளையும் நோக்கிய வீரபாண்டியன் இதள்களில் இளநகை அரும்பியது. “என்ன புதிர் போட்டு விட்டேன் இப்பொழுது?” என்று கேட்கவும் செய்தான் அவன்.

“இந்தக் கோட்டையைப் பெண்ணாக வைத்துக் கொள் என்கிறீர்கள், கிழக்கு வாயில் மதில் மீதிருக்கும் விற்கூடங்களைப் புருவம் என்கிறீர்கள், சற்றுக் கீழருக்கும் வேல் இயக்கப் பொறிகளைக் கண்கள் என்கிறீர்கள், எதிரி முறை தவறி நடந்தால் வலது கரத்தால் அறையச் சொல்கிறீர்கள். உங்கள் மனத்தில் என்னதான் இருக்கிறது?” என்று வினவினாள் இளநங்கை மீண்டும் வீரபாண்டியனை நோக்கி, அவன் சொற்களின் புத்தொளியால் தூண்டப்பட்டு.

வீரபாண்டியன் மெல்ல நகைத்தான். “என் மனத்தில் நீதானிருக்கிறாய்,” என்றும் கூறி மீண்டும் அவள் இடையில் கையைச் செலுத்தினான்.

அவள் முகத்தில் பொய்க் கோபம் விரிந்தது. “உம்” அடக்க ஒலி ஒன்றை நாசி மூலம் வெளியிட்டாள்.

“என்ன இளநங்கை?”

“போதும்” என்ற இளநங்கை அவன் கையைப் பிடித்துத் தள்ளினாள்.

“எது போதும்?”

“எதுவும்தான்.”

“எனக்கு விளங்கவில்லையே?”

“உங்களுக்கு எதுவும் விளங்காது?”

“பின் என்னை ஏன் விளக்கம் கேட்டாய்?”

“எதைப்பற்றி?”

“கோட்டையைப் பற்றி.”
இளவரசனின் கடைசி வாக்கியத்தைக் கேட்ட. இளநங்கையின் கோபம் சுடர்விட்டது. “எதற்கும் எதற்கும் பிணைக்கிறீர்கள்?” என்று சீறவும் செய்தாள்.

“நான் எதையும் பிணைக்கவில்லையே?” என்று கொஞ்சினான் வீரபாண்டியன்.

“எல்லாம் பிணைக்கிறீர்கள்,” என்றாள் இளநங்கை.

“எதை இளநங்கை ?”

“கோட்டையைப் பெண் என்கிறீர்கள். பிறகு….”

“பிறகு?”

“என்னைப் பார்க்கிறீர்கள்.”

“உம்…”

“கண்ணைக் காட்டுகிறீர்கள். போதாக் குறைக்கு-“

“போதாக்குறைக்கு?”

“கையும் சும்மா இருப்பதில்லை,” என்ற இளநங்கை சீறிக்கொண்டு எழுந்திருக்க முயன்றாள்.

அவள் கையைப் பிடித்து மீண்டும் பஞ்சணையில் உட்கார வைத்த இளவரசன் கண்கள் அவளைத் துருவிப் பார்த்தன. இருவரும் விளையாடியதால் கலைந்த அவள் ஆடைமீதும், பஞ்சணையில் உதிர்ந்திருந்த இரண்டொரு செண்பக மலர்கள் மீதும் அவன் விழிகள் தாவின. பிறகு அந்த மலரிலொன்றைக் கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டே, “நீ இப்படிச் சிவந்த ஆடை உடுத்தி, செண்பக மலர் சூடி நறுமணங் கமழ வைத்து, என்னை விழித பார்த்தால் என் கைகள், எப்படி வாளாவிருக்கும் வேல்விழி?” என்றான்.

“வேல்விழியா! எனக்குப் புதுப்பெயர் சூட்டுகிறீர்களா?”

“ஆம்.”

“எதற்காம்?”

“நீ அருகிலிருக்கும்போது கற்பனை ஓடுகிறது. புதுப் பெயர்கள் தோன்றுகின்றன. புதுக்கவிதைகள் தோன்று கின்றன. புதுமுறைகளும் தோன்றுகின்றன.”

“புது முறைகளா!”

“ஆம்.”

“எதற்கு ?”

இளவரசன் பதில் சொல்லாமல் நகைத்தான். அவளுக்கு அர்த்தம் புரிந்தது. சரேலென்று எழுந்து வெகு வேகமாக அறைக்கு வெளியே சென்று தன்னறையை நாடினாள்.

அங்கு அவளுக்காகக் காத்திருந்த பணிப்பெண் குறிஞ்சி அவளை நோக்கி, “அம்மா! பஞ்சணையைச் சரி செய்யட்டுமா?” என்று வினவினாள்.

அவளை நோக்கிச் சரேலெனத் திரும்பிய இளநங்கை “எதற்குக் குறிஞ்சி?” என்று சீறினாள்.

“ஆயாசத்தைப் போக்கிக்கொள்ள.”

“எனக்கு ஆயாசமென்று யார் சொன்னது உனக்கு?”

பணிப்பெண் பதில் சொல்லவில்லை. தலைவியின் ரயில் கலைந்து கிடந்த ஆடைமீதும் குழல்மீதும் தொக்கிக் கிடந்த செண்பக மலர் மீதும் கண்களை ஓட்டினாள். குறிஞ்சியின் பார்வை ஓடிய இடங்களைக் கண்ட இளநங்கை வெட்கமும் சீற்றமும் நிரம்பிய குரலில் சொன்னாள், “சரி சரி, பஞ்சணையைச் சரிசெய். சிறிது இளைப்பாறி விட்டுப் போகிறேன்,” என்று.

பணிப்பெண் தனது உள்ளெழுந்த சிரிப்பை மறைக்க முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். பிறகு பஞ்சணையைச் சரிசெய்துவிட்டுச் சென்றாள். என்றும் பகலில் உறங்காத இளநங்கை அன்று நீண்ட நேரம் உறங்கினாள். கதிரவன் சாயும் நேரம் நெருங்கிவிட்ட சமயம் வரை பொறுத்த பணிப்பெண் அதற்கு மேலும் பொறுக்காமல் அவளை அசைத்து எழுப்பினாள்.

இளநங்கை நீராட்ட அறைக்குச் சென்று முகம் கழுவித் திலகமணிந்து வந்தாள். பிறகு கவசம் பூண்டு, உடை என்று வாளணிந்து மாளிகையைவிட்டுப் பூறப்பட்டுக் கோட்டையின் பிரதான வாயிலை நோக்கிச் சென்றாள்.

புரவியிலமர்ந்து இரு வீரர் அக்கம் பக்கத்தில் வாள் பிடித்துக் காவல் புரிந்து வரச் சென்ற இளநங்கை கோட்டாற்றுக் கடைவீதிகள் பரம அமைதியாக இருந்தாலும், நகரத்தில் உண்மையில் பீதி பரவி நிற்பதைக் கண்டாள். வீதிகளில் வரிசையாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகளின் சாளரங்களின்மூலம் எட்டிப்பார்த்த ஆண் பெண் முகங்களில் அசாத்தியக் கவலையும், அச்சமும் விரவிக் கிடப்பதைக் கண்டாள். வீதி மூலைகளில் நின்ற ஆடவர்கள் ஏதேதோ பேச்சு பேசிக் கொண்டிருப்பதையும் பேச்சுக்களின் தொனியில் கசப்புத் தட்டுவதையும் கவனித்தாள். இப்படிப் பார்த்துக்கொண்டே வீதிகளில் சென்ற இளநங்கை கோட்டை வாசிகளிடத்தில் அவநம்பிக்கை பெரிதாகப் பரவியிருப்பதற்குண்டான சூசகங்கள் பல இருப்பதை உணர்ந்தாள். அவள் உணர்ந்தது சரி என்பதற்குக் கோட்டையின் பிரதான வாயிலிலும் ஆதாரமிருந்தது. அந்த வாயிலை அணுகி அவள் புரவியை விட்டிறங்கி மதில் மீது ஏறிச் சென்றபோது அங்கிருந்த விற்கூடத் தலைவன், “அம்மணி! ஒரு சந்தேகம்” என்று கூறிக்கொண்டே அவளை அணுகி வந்தான்.

இளநங்கையின் இதயத்தில் சற்று அச்சம் உதயமாயிற்று. ஒருவேளை தங்கள் வீரர்கள்கூட வீரபாண்டியனைச் சந்தேகிக்கிறார்களோ என்ற பயம் சூழ்ந்துகொண்டாலும் அதை வெளிக்குக் காட்டாமலே கேட்டாள் அவள் “என்ன வீரரே” என்று.

“நமது வீரர்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாயிருக்கிறது” என்று இழுத்தான் விற்கூடத் தலைவன்.

“என்ன சந்தேகம்?” என்று அதிகாரத் தொனியில் கேட்டாள் இளநங்கை.

சாதாரண காலத்தில் ஒரு பார்வைக்கே நடுங்கக் கூடிய விற்கூடத் தலைவன் அவள் அதிகாரத் தொனியைக் கண்டு சிறிதளவும் அஞ்சாமல், திடமான குரலில் சொன்னான்: “படைத் தலைவர் எதிரியுடன் போராடப் போகிறாரா, இல்லையா என்று கேட்கிறார்கள் வீரர்கள்?”,

இளநங்கை விழிகள் அவனைச் சுட்டுவிடுவதுபோல பார்த்தன. “போரிடுவதா அல்லவா என்பதை நிர்ணயிப்பது யார் பொறுப்பு?” என்று வினவவும் செய்தாள் இளநங்கை.

“படைத்தலைவர் பொறுப்புத்தான்,” என்றான் விற்கூடத் தலைவன்.

“பிறகு வீரர்களுக்கேன் அந்தக் கவலை?” என்று சீறினாள் இளநங்கை.

விற்கூடத் தலைவன் நன்றாக நிமிர்ந்து நின்றான், “உபதளபதி! நமது வீரர்கள் கோழையல்ல…” என்று சுட்டியும் காட்டினான்.

“அது தெரியும் எனக்கு.”

“அவர்கள் வீரர்களாக வாழப் பிரியப்படுகிறார்கள்.”

“யார் தடுத்தது அதை?”

“நீங்கள்தான் அதை விளக்கவேண்டும்.”

விற்கூடத் தலைவன் பேச்சு பெரும் விந்தையாயிருக்கவே, “நீங்கள் சொல்லுவது புரியவில்லை வீரரே,” என்றாள் இளநங்கை.

விற்கூடத் தலைவன் அவளைக் கூர்ந்து நோக்கினான். “அம்மணி! நீங்கள் இன்று காலையும் இங்கு வந்தீர்களல்லவா?” என்று துவங்கினான்.

“ஆம். வந்தேன்.”

“இப்பொழுதும் வந்திருக்கிறீர்கள்.”

“ஆம் வந்திருக்கிறேன்.”

“வரும் வழியில் மக்களைக் கவனித்தீர்களா?”

“கவனித்தேன்.”

“எல்லோரிடமும் ஓர் அச்சம் நிலவுவது புரிய வில்லையா உங்களுக்கு?”

“ஆம். அச்சப்படுவதாகத்தான் தெரிகிறது.”

“ஏன் அச்சப்படுகிறார்கள் அம்மணி? இரண்டாயிரம் வீரர்களைக் கொண்டு இப்பெரும் கோட்டையைக் கைப்பற்றிய வீரபாண்டியர் படைத் தலைவராயிருக்கையில், மக்களுக்கு அச்சம் ஏன் உதிக்கவேண்டும்?”

“எதிரிபலம் அதிகமாயிருப்பதைக் கண்டு உதித்திருக்கலாம்.”

“அதுமாத்திரம் மக்களுக்கு அச்சத்தை ஊட்டி விடுமா?”

“வீரபாண்டியர் ரணகாயப்பட்டுப் படுத்திருப்பது காரணமாயிருக்கலாம்.”

”அவர் படுத்திருந்தாலும், உபதளபதி தாங்களில்லையா? நன்றாகப் பயிற்சி பெற்ற பாண்டியப் படையில்லையா?”

இளநங்கையின் விழிகள் அவன்மீது நிலைத்தன. “அப்படி இருந்தும் மக்கள் ஏன் அஞ்சவேண்டும்?” என்று கேட்டாள்.

விற்கூடத் தலைவன் சற்று யோசித்தான். பிறகு அருகில் வந்து, “அம்மணி! நான் சொல்லுவது தவறாயிருந்தால் மன்னித்துவிடுங்கள். வீரபாண்டியர் எதிரியிடம் சரணடையப் போவதாக ஒரு வதந்தி இருக்கிறது,” என்று மிக மெதுவாகச் சொன்னான்.

இளநங்கையின் விழிகளிலும் அச்சம் விரிந்தது. “அப்படியா!” என்று அச்சம் குரலிலும் தொனிக்கக் கேட்டாள் அவள்.
“ஆம் அம்மணி,” எனறான் விற்கூடத் தலைவன்.

“யார் இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டது?” என்று கோபத்துடன் கேட்டாள் அவள்.

“யாரோ தெரியாது. ஆனால் பகலிலிருந்து அந்த வதந்தி வலுத்துவிட்டது. வீரர்கள் காதிலும் அது விழுந்து விட்டது. சில இடங்களில் மக்கள் அதைப்பற்றிச் சற்று இரைந்தே பேசுவதாக நமது ஒற்றர்கள் கூறுகிறார்கள்,” என்றான் விற்கூடத் தலைவன்.

இளநங்கையின் முகத்தில் கவலை விரிந்தது. “வீரரே! இந்த வதந்தி மக்களின் உறுதியைக் குலைத்துவிடுமே,” என்று கவலையுடன் கூறினாள்.

“குலைத்துவிட்டது அம்மணி. அதைப்பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. நமது வீரர்களும் அதை நம்புவதாகத் தெரிகிறது,” என்றான் விற்கூடத் தலைவன்.

படைவீரர் உள்ளத்தில் சந்தேகம் புகுந்துவிட்டால் ஏற்படக்கூடிய விபரீதத்தை இளநங்கை நன்றாக உணர்ந்திருந்தாள்.

அந்தச் சந்தேகத்தை முறித்தெறிய, வினவினாள் விற்கூடத்தலைவனை நோக்கி, “வீரபாண்டியரை அறிந்தவர்கள் கூட இதை நம்புகிறார்களா?” என்று.

“வீரபாண்டியரே இதைச் சொன்னதாக வதந்தி இருக்கிறது.” என்றான் விற்கூடத் தலைவன்.
இளநங்கையின் இதயத்தில் அச்சம் பெரிதாகச் சூழ்ந்தது. ‘மக்கள் உறுதி குலைந்தாலே முற்றுகையைச் சமாளிப்பது கஷ்டம். அப்படியிருக்க, வீரர்கள் உறுதியும் குலைந்தால் கோட்டை எதிரியின் கையில் விழுந்தது போலத்தான்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் இளநங்கை .

அந்த எண்ணத்தின் விளைவாக, அச்சம் பெரிதும் விரிந்த பார்வையுடன் விற்கூடத் தலைவனை நோக்கிய கொற்கை மகள், “விற்கூடத் தலைவரே! இதில் ஆதாரமேது மில்லையென்று வீரர்களுக்குச் சொல்லுங்கள். விற் கூடங்களை எந்த வினாடியும் இயக்கத் தயாராயிருங்கள்,” என்று கூறிவிட்டு, வேல் இயக்கப் பொறிகளின் தலைவனையும் விளித்துப் பொறிகளைத் தயாராக வைத்திருக்கும்படி எச்சரித்தாள்.

பிறகு கோட்டை மதில் காவலரிடமும் உரையாடி அவர்களுக்குத் துணிவையும் ஊட்டிவிட்டு, அனைத்தையும் ஒருமுறை மேற்பார்வை பார்த்துவிட்டு இரவு சற்று நேரங் கழித்தே மாளிகை திரும்பினாள். திரும்பியவள் நேராக வீரபாண்டியன் அறைக்குள் நுழைந்து கோட்டையின் நிலைமையையும் உலாவிய வதந்தியையும் எடுத்துக் கூறினாள்.

பாண்டியர் படைத்தலைவன் மிக நிதானமாக அவள் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டான். அதைப் பற்றி மகிழ்ச்சியே தெரிவித்தான். “அச்சமும் ஒரு சமயத்தில் பெரும் ஆயுதந்தான் இளநங்கை,” என்று கூறி மெல்லப் புன்முறுவலும் செய்தான்.
அவன் புன்முறுவல் அவளுக்கு வெறுப்பைத் தந்தது. “அச்சம் ஆயுதமா?” என்று வெறுப்பு குரலிலும் துவங்கக் கேட்டாள்.

“அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, நான்குமே பெண்களுக்கு ஆயுதங்கள், நான் கோட்டையைப் பெண்ணாக வர்ணித்தது நினைவில்லையா உனக்கு?” என்று வினவினான்.

இளநங்கையின் கோபம் எல்லை கடந்தது. அவனைச் சுட்டுவிடும் விழிகளால் பார்த்தாள். “உங்கள் வீரமெல்லாம் எங்கே போய்விட்டது” என்று வினவினாள்.

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. எதற்கும் அதை நாளை இரவு தேடிப் பார்க்கிறேன்,” என்ற வீரபாண்டியன் “நேரமாகிவிட்டது. நீ போய்க் கவசத்தைக் களைந்துவிட்டு உணவருந்தி வா” என்றான்.

இளநங்கை உள்ளம் வெடிக்க, உதடு துடிக்க, வெளியேறினாள் அவ்வறையை விட்டு, அன்றிரவு அவள் அவன் அறைக்குச் செல்லவில்லை. தன் அறையிலேயே படுத்தாள். படுத்ததும் உறக்கம் பிடிக்காததால் நள்ளிரவு எழுந்து தாழ்வரைக்குச் சென்றாள். சென்றவள் அடியோடு நிலை குலைந்து நின்றாள். வீரபாண்டியன் அறையில் பேச்சுக்குரல் கேட்டது. அதிலொன்று பெண்குரல்!

Previous articleRaja Muthirai Part 1 Ch62 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch64 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here