Home Historical Novel Raja Muthirai Part 1 Ch64 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch64 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

57
0
Raja Muthirai Part 1 Ch64 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch64 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch64 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 64 உத்தரவு

Raja Muthirai Part 1 Ch64 | Raja Muthirai | TamilNovel.in

வீரபாண்டியன் அறையில் பேச்சுக்குரல் கேட்டதையும், அதிலொரு குரல் பெண் குரலென்பதையும் உணர்ந்த உடனேயே விவரிக்க இயலாத பல உணர்ச்சிகளின் வசப்பட்ட இளநங்கை, வெளித் தாழ்வரையிலிருந்தபடியே விண்ணை நோக்கிக் கண்ணை உயர்த்தினாள். விண்மீன்களின் நிலையிலிருந்து அப்பொழுதுதான் நள்ளிரவு லேசாக நகர்ந்து சில நிமிடங்களைக் கடந்திருக்கிறதென்பதை உணர்ந்த அக் கட்டழகி, ‘இந்த நிசி வேளையில் எந்தப் பெண்ணுடன் பேசுகிறார் இவர்? எதற்காகப் பேசுகிறார்?’ என் கேள்விகளைத் தனக்குள் எழுப்பிக் கொண்டு வீரபாண்டியன் அறைப் பக்கம் பார்வையை நன்றாக ஓட விட்டாள். அறைக் கதவுகள் மூடப்பட்டிருந்தாலும், கதவுகள் சரியாகப் பதியாததால் அவற்றின் இடைவெளியிலிருந்து வெளியே கோடிட்டுக் கிடந்த வெளிச்சம் அறையின் விளக்கு அணைக்கப்படவில்லையென்பதை அறிவித்தது. அதன் விளைவாகச் சற்றே மனக் கவலையைத் துறந்தும் முற்றிலும் திருப்தியடையாத உள்ளத்துடன் இளநங்கை அந்தக் கதவை நோக்கி அடிமேலடி வைத்து பூனைபோல் நடந்து கதவை ஒட்டி நின்றாள். மற்றவ பேசுவதை ஒட்டுக் கேட்பது ஒழுக்கக் குறைவென்பரை அவள் உணர்ந்தே இருந்தாலும், பேசுபவன் தன் கணவனென்ற நினைப்பும், அவனுடன் அந்த வேளையில் தனித்து அறையிலிருப்பவள் ஒரு பெண்ணென்ற எண்ணமும் அவள் சிந்தையைப் பெரிதும் உலுக்கியதால், அவள் எதையும் சிந்தனை செய்யாமல் ஒட்டுக் கேட்டுக்

கொண்டே நின்றாள். நிற்க நிற்க அவள் வேதனை அதிகமாயிற்று. அடுத்த விநாடி உள்ளிருந்த பெண் உதிர்ந்த சிரிப்பொலியிலிருந்தே அவள் தனது பணிப்பெண் குறிஞ்சி என்பதை உணர்ந்த இளநங்கை, ‘சே சே! பணிப் பெண்ணுடன் சிரித்து விளையாடுவது ஒரு தலைவனுக்கு அழகா? அதுவும் இந்த நேரத்தில்…..?’ என்று நினைத்த அவள் வீரபாண்டியன் மீது பெரும் சீற்றமும் கொண்டாள். அந்தச் சீற்றத்தைப் பன்மடங்கு பெருக்கும் உரையாடல் அடுத்தபடி நடந்தது.

“குறிஞ்சி! உன் தலைவி தூங்கிவிட்டாளா? நன்றாகப் பார்த்தாயா?” என்று வினவினான் வீரபாண்டியன்.

“நன்றாகப் பார்த்தேன் எசமான்! சற்று அசைத்தும் நித்திரையைச் சோதித்தேன். அடித்துப் போட்டது போல் உறங்குகிறாள் தலைவி,” என்று மெல்ல நகைத்தாள் குறிஞ்சி.

“அத்தனை அலுப்பா அவளுக்கு?” என்று வினவினான் வீரபாண்டியன்.

“ஆம் எசமான்.”

“அப்படியொன்றும் வேலையில்லையே?

“ஏனில்லை எசமான் பகலிலும் இரவிலும் அவர்களுக்கு ஒழிவேயில்லை?”

“அப்படி என்ன வேலை குறிஞ்சி?”

“எனக்கெப்படித் தெரியும் எசமான்?” என்றாள் பணிப்பெண்.

சிறிது நேரம் உரையாடல் இல்லை. பிறகு வீர பாண்டியன் சொன்னான்: “குறிஞ்சி! மலைவாசிப் பெண்ணாயிருந்தாலும் நீ நகரப் பெண்களைவிடக் குறும்புக் காரியாயிருக்கிறாய்,” என்று.

“மலையிலிருந்தாலும் மாநகரிலிருந்தாலும் பெண் பெண் தானே எசமான்?” என்றாள் குறிஞ்சி. அத்துடன் கேட்டாள், “என்னை எதற்கு எசமான் அழைத்தீர்கள்?” என்று .

“நான் எங்கே அழைத்தேன் குறிஞ்சி? என்னால் எழுந்திருக்கவும் முடியாதே. நீயாகத்தானே வந்தாய்?” என்ற வீரபாண்டியன் குரலில் விஷமம் இருந்தது.

“தலைவி இல்லாத சமயம் பார்த்துத் தங்களைச் சந்திக்கும்படி என்னைப் பணிசெய்ய அமர்த்தியபோதே உத்தரவிட்டிருக்கிறீர்களே” என்று சுட்டிக் காட்டினாள் பணிப்பெண்.

“ஆம் குறிஞ்சி! ஆனால் நீ அப்படி என்னைச் சந்திக்கவே யில்லையா?”

“எப்படிச் சந்திப்பேன் எசமான்? எப்பொழுதும் தங்களிடம் உபதளபதியிருக்கிறார்கள். இன்றிரவுதான் என்னமோ நீங்கள் தனித்து இருக்கிறீர்கள்.”

இதற்கு வீரபாண்டியனிடமிருந்து பதில் வரவில்லை. பிறகு பெருமூச்சு ஒன்று மட்டும் வெளிவந்தது. அந்த நள்ளிரவின் நிசப்தத்தில் அந்தப் பெருமூச்சு தெளிவாகவே கேட்டது இளநங்கைக்கு. அந்தப் பெருமூச்சு பெரும் புயலென அவளை ஓர் உலுக்கு உலுக்கியது. “நான் அத்தனை இடைஞ்சலாகவா இருக்கிறேன் உங்களுக்கு?” என்று பல்லைக் கடித்துக்கொண்ட இளநங்கை மெள்ளக் கதவின் பக்கத்தில் சாய்ந்து தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள். அந்தச் சமயத்தில் மீண்டும் ஒலித்தது வீர பாண்டியன் குரல். “ஆம் குறிஞ்சி! இரவில் உன்னைச் சந்திக்க முடியவில்லை. இரவில் இளநங்கையிருக்கிறாள். பகலிலும் மற்றவர்கள் இருக்கிறார்கள். சில வேளை பகலிலும் அவள் இருக்கிறாள்,” என்றான் வீரபாண்டியன்.

குறிஞ்சியின் பதில் உடனே வரவில்லை. “எசமான்! தலைவியிடம் உண்மையைக் கூறிவிட்டால் என்ன?” என்று வினவினாள் குறிஞ்சி சில வினாடிகள் கழித்து.

“கூடாது கூடாது! கூடவே கூடாது!” என்று பதற்றத்துடன் வந்தது பாண்டியப் படைத்தலைவன் குரல்.

“ஏன் எசமான் கூடாது?” என்று வினவினாள் குறிஞ்சி.

“உனக்குள்ள பக்குவம் அவளுக்கில்லை,” என்று கூறினான் வீரபாண்டியன்.

“எந்தப் பக்குவத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?”

“எல்லாப் பக்குவத்தையுந்தான்,” என்றான் வீரபாண்டியன்.
“அவர்களுக்கில்லாத பக்குவம் எனக்கு என்ன வந்த விட்டது? அவர்கள் நகரத்திலிருந்தவர்; நாகரிகமே உள்ளவர்கள்”.

“இருக்கலாம் குறிஞ்சி. ஆனால் அவள் வேறு, நீ வேறு?”

“எப்படி எசமான்?”

“நாட்டு மலரின் தன்மை வேறு, காட்டு மலரின் தன்மை வேறு.”

“இரண்டு தன்மைகளையும் எசமான் அறிந்திருக்கிறீர்கள்…”

“ஆம் குறிஞ்சி! காட்டு மலரின் தன்மை நாட்டு மலருக்கு இருக்க முடியாது. காட்டு மானின் அழகு, சாமர்த்தியம் வேறு. நாட்டு மானின் அழகு, சாமர்த்திய வேறு. இரண்டையும் எப்படி உபயோகப்படுத்த வேண்டுமோ அப்படி அப்படி உபயோகப்படுத்த வேண்டும்.”

இதைக் கேட்ட குறிஞ்சி நகைத்தாள். வெளியில் கதவோரம் நின்ற இளநங்கையின் இதயம் வெடித்துவிடும் நிலையிலிருந்தது. கதவைத் தடாலென்று திறந்து உள்ளே செல்லலாமா என்று ஒருகணம் நினைத்தாள். ‘சே! அதைவிடக் கேவலம் என்ன இருக்கிறது?” என்று நினைத்து அடுத்த வினாடி அவ்விடம் விட்டகன்று தன் பஞ்சணையில் வந்து விழுந்தாள்.

அப்படி விழுந்த இளநங்கையின் சித்தத்தில் பலப்பல எண்ணங்கள் எழுந்து அலைமோதின. குறிஞ்சிக்கும் வீரபாண்டியனுக்கும் நிகழ்ந்த உரையாடலிலிருந்து அவர்கள் பழக்கம் நீண்ட நாளாயிருக்கவேண்டுமென்று தோன்றியது. அது எப்படி சாத்தியம் என்பது புரியாமல் திணறினாள். கொற்கைக் கோட்டைக் காவலன் மகள். ‘இவளை விஜயவர்மன் அமர்த்தியதாக இவளே சொன்னாளே! அப்படியிருக்க முன்னமேயே இவளை எப்படி வீரபாண்டியர் அமர்த்தியிருக்க முடியும்?” என்று தன்னைத்தானே வினவிக் கொண்டாள்.

‘அப்படி நீண்ட நாள் பரிச்சயமில்லா விட்டால் நள்ளிரவில் இப்படி ஏன் அவர் அறைக்குச் செல்கிறாள், பேசுகிறாள்?’ என்றும் வினவி, விடை காணாமல் தவித்தாள்.

இருந்தாலும், இத்தனையிலும் அவளுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. தான் அறியாத உறவு, அவர்களுக்குள் ஏதோ இருக்கிறது என்ற விஷயம்தான் அது. அது காதலாயிருக்க முடியுமென்று அவள் மனம் நம்ப வில்லை. ஆனால் அவள் செவிகள் கேட்ட சொற்கள் காதலையும் சோரத்தையுமே சுட்டிக் காட்டியதையும் எண்ணியதால் அவள் பெரிதும் குழம்பிக் கிடந்தாள்.

நீண்ட நேரம் அவள் படுத்துக் கிடந்தாள். எண்ணச் சுழலில். அத்தனை நேரமும் பணிப்பெண் திரும்பவில்லை. அடுத்த அறையில் அவள் என்ன செய்கிறாள் என்ற கேள்வி இளநங்கையின் சித்தத்தில் எழுந்து அவள் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரத்துக்குப் பின்பு அந்த அறையின் கதவு மெள்ளத் திறந்தது. பணிப்பெண் மெள்ள மெள்ள அடிமேலடி வைத்து அறைக்குள் வந்து, கண்ணை மூடிப் பொய்யுறக்கம் கொண்ட இளநங்கையைச் சில வினாடிகள் கூர்ந்து கவனித்தாள். “பாவம் பேதை இவள். இளவரசரைச் சரிவர உணர்ந்து கொள்ளாதவள்,” என்று சற்று இரைந்தே சொற்களைக் கொட்டி விட்டு, இளநங்கையின் மஞ்சத்தின் அருகே கீழே விரித்திருந்த தனது படுக்கையில் உட்கார்ந்தாள். அப்படி உட்கார்ந்த நிலையில் மடியிலிருந்து எதையோ எடுத்து விளக்கொளியில் உற்று நோக்கினால் அதைப் பார்த்துப் பரவசப்பட்டாள்.

பணிப்பெண் தரைப் படுக்கையில் உட்கார்ந்ததுமே ஒரு பக்கமாகப் பஞ்சணையில் திரும்பிய இளநங்கை அரைவாசிக் கண்ணைத் திறந்து பணிப்பெண்ணைக் கவனித்தாள். அவள் மடியிலிருந்து எடுத்த பொருளைக் கண்டதும் அடியோடு பிரமித்தே போனாள். வீரபாண்டியன் கையில் முதன் முதலில் தான் பார்த்த ராஜமுத்திரை அது. பொருநைத் தோப்பின் கரையில் குறுவாள் காயம் பட்டுத் தான் கிடந்த போது தனக்குச் சிகிச்சை செய்து பின்பு எந்த முத்திரையைத் தன்னிடம் அடையாளமாகக் கொடுத்துத் தந்தையிடம் காட்டச் சொன்னாரோ, எந்த முத்திரை அவர் கையைவிட்டு அசையாமலிருந்ததோ, எந்த முத்திரையின் பிரதிகள் பாண்டிய நாட்டின் முக்கிய படைத்தலைவருக்கு அனுப்பப்பட்டு வந்ததோ, அதே ராஜமுத்திரை, கேவலம் பணிப் பெண்ணொருத்தியின் கையில் அன்றிரவு பளிச்சிட்டதைக் கண்டாள் இளநங்கை. அந்த முத்திரையின் வைரங்கள் யானையாகவும், மீனாகவும், கோடாரியாகவும் பேரொளி வீசியதைப் பார்த்த இளநங்கை, ‘பணிப்பெண்ணிடம் இளவரசர் தீவிர நம்பிக்கைதான் வைத்திருக்கிறார்,’ என்று எண்ணி உள்ளூரப் பெரிதும் சினந்தாள். அந்தச் சமயத்தில் பணிப்பெண் அந்த இலச்சினையை நெற்றியில் ஒற்றிக் கொண்டதன்றித் தன் அதரங்களையும் அதன்மீது பொருத்தினாள். பிறகு அதை மார்புக் கச்சைக்குள் செருகி மறைத்துக் கொண்டு படுக்கவும் செய்தாள். அடுத்த சில வினாடிகளில் அவள் நன்றாக உறங்கிப் போனாள்.

இளநங்கைக்கு உறக்கம் அடியோடு பிடிக்காததால் வேதனையுடன் பஞ்சணையில் புரண்டாள். இளவரசனைப் பற்றிய வெறுப்பு அவள் இதயத்தில் மண்டிக் கிடந்தது அந்த முத்திரையை அவர் பணிப்பெண்ணுக்கு அளித்தது காம விகாரத்துக்கு அறிகுறியா, வேறெதற்காவது அறிகுறியா என்று விளங்கவில்லை அவளுக்கு. மன்னர்கள் பல பெண்களிடம் முறை கொள்வது வழக்கத்துக்கு முரண் பாடில்லையென்றாலும், ஒருத்தியுடன் வாழ்ந்த மன்னன் யாருமில்லையென்பது வரலாறு தானென்றாலும், இள நங்கையின் மனம் பழக்கத்தையும் ஒப்பவில்லை, வரலாற்றையும் ஒப்பவில்லை. பலபடி அலைக்கப்பட்ட இதயத்துடன், புண்பட்ட மனத்துடன், புழுவெனத் துடித்த இளநங்கை விடியும் தருவாயில்தான் சற்றுக் கண்களை மூடினாள்.

அவள் விழித்தபோது விடிந்து நான்கு நாழிகைகளுக்கு மேலாகியிருந்ததால் அறைச் சாளரத்தின் மூலம் சூரிய வெளிச்சமும் புலப்பட்டது. மெள்ளப் பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்து கண்களை நன்றாகக் கசக்கிவிட்டுக் கொண்ட இளநங்கை, தலைக்குழலையும் கோதி விட்டுச் சேலையை நன்றாக இழுத்துப் போர்த்துக் கொண்டு தரையிலிருந்த படுக்கையைக் கவனித்தாள். படுக்கை காலியாயிருந்தது. பணிப்பெண் அங்கில்லை.
பணிப்பெண் எழுந்திருந்து அலுவல்களைக் கவனிக்கச் சென்றிருப்பாளென்று நினைத்து, ‘குறிஞ்சி! குறிஞ்சி!’ என்று இருமுறை குரலும் கொடுத்தாள். பதிலேதும் கிடைக்காததால் எழுந்து வெளியே சென்று காவலனொருவனை விளித்து, “பணிப்பெண் எங்கே பார். வரச்சொல்,” என்று பணித்தாள்.

“குறிஞ்சி இல்லையம்மா,” என்றான் வீரன்.

“எங்கே?”

“வெளியே போய்விட்டார்கள்.”

“எப்பொழுது வருவாள்?”

“நேரமாகுமென்று தங்களிடம் சொல்லச் சொன்னார்கள்.”

“என் வேலைகளை யார் செய்வது?”

“இந்த ஒரு வேளை மட்டும் தங்களையே கவனித்துக் கொள்ளச் சொன்னார்கள். அது மட்டுமல்ல…”

“வேறென்ன?”

“இளவரசரின் தேவைகளையும் கவனித்துக் கொள்ளச் சொன்னார்கள்.”

இதைக் கேட்ட இளநங்கையின் இதயத்தில் கோபம் கொழுந்து விட்டெரிந்தது. ‘என்ன திமிர் ஒரு பணிப் பெண்ணுக்கு? எனக்கே வேலையிடுகிறாளே?’ என்று உள்ளுக்குள்ளேயே சீறிக்கொண்டு, சரேலென்று திரும்பி இளவரசன் அறைக் கதவை வேகமாகத் தட்டித் திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த இளவரசன் அவள் அவசரத்தையும், முகத்தில் சுடர்விட்ட கோபத்தையும் கண்டு வியக்கும் பார்வையொன்றை அவள் மீது செலுத்தினான். “என்ன இளநங்கை, ஏனிந்த அவசரம்?” என்று வினவினான்.

“குறிஞ்சி எங்கே?” என்றாள் இளநங்கை, குரலிலும் சீற்றத்தைக் காட்டி.

“வெளியே சென்றிருக்கிறாள்.” சர்வசகஜமாகப் பதில் சொன்னான் இளவரசன்.

“என்னிடம் ஏன் சொல்லவில்லை?”

“நீ உறங்கிக் கொண்டிருந்தாயாம்.”

“உங்களிடம் மட்டும் சொன்னாளாக்கும்”

“ஆம்.”

“ஏன்?”

“நான் விழித்துக் கொண்டிருந்தேன்” என்ற இளவரசன் மெல்லக் கேலியாக நகைத்தான்.
அந்தக் கேலி நகை அவள் சினத்தை உச்சிக்குக் கொண்டு போகவே, “இரவிலும் விழித்துப் பகலிலும் உங்களால் விழிக்கமுடியும் போலிருக்கிறது,” என்று கேட்டாள்.

“அவசியமானால் விழிப்பேன்”, என்றாம் இளவரசன்.

“இப்பொழுது அந்த அவசியம் அடிக்கடி வருகிறதோ?” என்று மீண்டும் சீறினாள் இளநங்கை.

“ஆம்.”

“எதனாலோ ?”

“எதிரி வாயிலில் இருப்பதால்.”

“இன்றிரவு விழித்திருப்பீர்களோ?”

“இருப்பேன். இன்றுதானே சிங்கணன் தாக்கப் போகிறான்.”

இளநங்கையின் விழிகளில் திடீரென ஏதோ யோசனை பிறந்தது. “ஆம்! ஆம்! இன்றிரவுதான் தாக்கச் சொல்லியிருக்கிறீர்கள்” என்று சற்று இரைந்தே சொன்னாள்.

“ஆம். இளநங்கை! இன்றிரவு சிங்கணன் தொல்லை ஒழிந்து போகும். நாம் கோட்டையை விட்டு வெளியேறலாம்,” என்றான் வீரபாண்டியன்:

“அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாமா?” என்று வினவினாள் இளநங்கை.

“ஏற்பாடுகளைச் செய்யத்தான் குறிஞ்சியை அனுப்பி யிருக்கிறேன்?” என்றான் வீரபாண்டியன்.

“குறிஞ்சியா! பணிப்பெண்ணா!” என்று வினவிய இளநங்கையின் குரலில் வியப்புமிருந்தது; வேதனையு மிருந்தது.

“ஆம், குறிஞ்சிதான். அழகுடன் அறிவும் இணைந்திருக்கிறது அவளிடம்.”

இளநங்கையின் இதயம் உணர்ச்சியின்றி உறைந்து விடும் நிலைமைக்கு வந்தது. “எனக்கு அறிவுமில்லை. அழகு மில்லை,” என்றாள் அவள் அழாத தோஷமாக.

“உன் அறிவு, அழகு இவற்றின் தன்மை வேறு. அவள் அழகு, அறிவு இவற்றின் தன்மை வேறு. எதெதை எதெதற்கு உபயோகப்படுத்த வேண்டுமென்பது எனக்குத் தெரியும்.”

“அப்படி என்ன வேற்றுமையைக் கண்டீர்கள்?”

இளவரசன் சற்றுப் புன்முறுவல் கொண்டான். பிறகு சொன்னான்: “பூசணிப் பூ அழகுதான். மார்கழி மாதத்தில் வாயிலை அலங்கரிக்க உதவும். தலைக்கு அது உதவுவ தில்லை. மல்லிகை தலைக்குத்தான் உதவுகிறது. வாயிற் சாணத்தில் அதை வைப்பதில்லை. எது எதை எங்கெங்கு வைக்க வேண்டும், எப்படி எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை நான் அறிவேன். நீ சென்று நீராடி உடையணிந்து எனக்கும் உணவு தயார் செய்து வா.”

இளவரசன் குரலில் கண்டிப்பு இருந்தது. அதற்கு மேல் பேச முடியாமல் சென்ற இளநங்கை அன்று பணிப் பெண் அலுவலில் இறங்கினாள். இரவில்தான் அந்த அலுவல் மாறியது. இரவு ஏறி நான்கு நாழிகைக்குப் பின் அவளைக் கூப்பிட்டனுப்பிய வீரபாண்டியன், “இளநங்கை! கவசங்கள் அணிந்துகொள். இந்த ஓலையில் இருக்கிறது உத்தரவு. அதன்படி நடந்துகொள்,” என்று ஓர் ஓலையை நீட்டினான்.

ஓலையைக் கையில் வாங்கிய இளநங்கை அதைப் பிரிக்காமலே கேட்டாள்: “இன்றிரவு உங்களுக்கு யார் பணிவிடை செய்வார்கள்?” என்று.

அந்தக் கேள்வியில் குத்தலிருந்தது. ஆனால் அதை வீரபாண்டியன் கவனிக்கவில்லை . “வீண் கேள்வி கேட்காதே. ஓலையில் கண்டபடி செய் போ,” என்று கூவினான் கடுங்கோபத்துடன்.

அத்தனை கோபத்தை அதுவரை அவனிடம் கண்ட தில்லை அவள். ஆகவே சற்று நடுக்கத்துடன் வெளிப் போந்து தன்னறைக்குள் வந்து ஓலையைப் பிரித்துப் பார்த்தாள். ஓலையிலிருந்த உத்தரவு அவளைத் திகைக்க வைத்தது. ‘இதென்ன விபரீதம்! என்னை அழித்துவிடப் பார்க்கிறாரா இவர்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அந்த ஓலை உண்மையில் தனது உயிருக்கே உலை என அவள் நினைத்தாள்.

Previous articleRaja Muthirai Part 1 Ch63 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch65 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here