Home Historical Novel Raja Muthirai Part 1 Ch65 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch65 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

72
0
Raja Muthirai Part 1 Ch65 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch65 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch65 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 65 கனவு நிலை

Raja Muthirai Part 1 Ch65 | Raja Muthirai | TamilNovel.in

இளவரசன் அளித்த ஓலைமீது கண்களை ஓட்டிய இளநங்கை விவரிக்க இயலாத அச்சத்தை அடைந்து அந்த ஓலையைத் தனது மரணத்துக்காக ஏற்பட்ட பயங்கர ஓலையாக நினைத்தாளென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. ஓலையில் இருந்த வரிகள் நான்கேதானென்றாலும் அந்த நான்கு வரிகளும் தன்னை அழிக்க ஏற்பட்ட நான்கு அஸ்திரங்களென்பதை அவள் சந்தேகமா உணரவே செய்தாள். “உபதளபதி, இன்னும் இரண்டு நாழிகைகள் கழித்து இங்கிருந்து புறப்பட்டுத் தெற்கு வாயிலுக்கு போ. அங்கு தயாராயிருக்கும் முந்நூறு வீரர்களையும் அழைத்துக் கொண்டு தெற்கு வாயிலை, திறந்து கொண்டு அப்புறமிருக்கும் கோட்டாற்றைக் கடந்து அக்கரையில் தங்கியிரு. சரியாக நள்ளிரவில் எதிரி படையின் ஒரு பகுதி தெற்கு வாயிலைத் தாக்கும்போது நீ உன் படையை எதிர்க் கரையிலிருந்தே இயக்கு. மற்ற விவரங்களைத் தெற்கு வாயிலில் உணர்ந்து கொள்வாய்,” என்றிருந்தது ஓலையின் வாசகம். அடியில் ராஜமுத்தின இருந்தது.

உள்ளே எழுந்து சுழன்ற உணர்ச்சியின் விளைவாகத் திரும்பத் திரும்ப அந்த ஓலையைப் பன்முறை படித்தாள் இளநங்கை. ‘எதிரி முற்றுகை பலமாயிருக்கும் மூன்று வாயில் களில் ஒன்றான தெற்கு வாயிலைத் திறப்பதாவது! முன்னூறு வீரர்களுடன் வெளிச் செல்வதாவது போரிடுவதாவது! நான் வெளியே படைகளை அழைத்துச் செல்லும் போது எதிரி கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பானா? அதுவும் அவன் படைபலத்துக்கு முன்பு இந்த முந்நூறு பேர் எம்மாத்திரம்?” என்று இளநங்கை தன்னைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டாள். இவை மட்டுமல்ல அவள் இதயத்தில் எழுந்த கேள்விகள். ‘இவர் சிங்கணனை வடக்கு வாயிலைத்தான் தாக்கச் சொல்லியிருக்கிறார்? அப்படியிருக்க இப்பொழுது தெற்கு வாயிலைத் தாக்குவானென்று எழுதியிருக்கிறாரே! ஒருவேளை அவனிடம் சொன்னதை மறந்து விட்டாரோ?” என்ற கேள்வியும் எழவே அதைப் பற்றி சந்தேகம் கேட்க எண்ணி மீண்டும் கையிலிருந்த ஓலையுடன் இளவரசன் அறைக்குச் சென்றாள். கையில் ஓலையுடன் வெகு வேகமாக அறைக்குள் நுழைந்த இளநங்கையை ஒரு வினாடி கூர்ந்து நோக்கிய இளவரசன், “என்ன இளநங்கை! எங்கு வந்தாய்!” என்று வினவினான். அப்படி வினவிய சமயத்தில் அவன் முகம் பார்க்க மிகப் பயங்கரமாயிருந்தது. கண்கள் கழுகுப் பார்வையை வீசிக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையை அவள் சில சமயங்களில் மட்டுமே பார்த்திருக்கிறாள்! வீரரவியின் வீரர்களோடு தன்னர் தனியே கொற்கை மாளிகையில் போராடிய போதும், கோட்டாற்றுக்கரைப் போரின்போதும், இன்னும் இரண்டு முறைகளே கண்டிருக்கிறாளென்றாலும் ஒவ்வொரு முறையும் அப்பார்வை அவளுக்குப் பயத்தையே அளித்தது இருப்பினும் அந்தச் சமயங்கள் வேறு, தான் அவனுக்கு மனைவியாகிவிட்ட பிறகு நிலைமை வேறு, என்று நினைத்த அவள் சற்றுத் தைரியத்துடனேயே பேச முற்பட்டு, “எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது” என்றாள்.

“என்ன சந்தேகம்?” என்ற வீரபாண்டியன் குரல் வறண்டு கிடந்தது. அந்தக் குரலிலோ அவன் பார்வையிலோ அன்போ கனிவோ லவலேசமும் இல்லை. ஏதோ யந்திரமொன்று சொற்களை உதிர்ப்பது போன்ற உணர்ச்சியே ஏற்பட்டது அவற்றைக் கேட்ட இளநங்கைக்கு
“இந்த உத்தரவுப்படி எதிரி தெற்கு வாயிலைத் தாக்க வேண்டும்” என்றாள் இளநங்கை.

“ஆம்.”

“சிங்கணனிடம் வடக்கு வாயிலைத்தான் தாக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.”

“ஆம்.”

“அப்படியானால் அவன் தெற்கு வாயிலை ஏன் தாக்க வேண்டும்?”

“அவனிஷ்டம்.”

“அவனிஷ்டமா! தெற்கு வாயிலைத் தாக்குவது அவனிஷ்டமா?”

“இருக்கலாம்.”

“தெற்கு வாயிலைத் தாக்கினால் இக்கோட்டையை அவனெப்படிப் பிடிக்க முடியும்?”

“அதற்குத் தகுந்த திட்டங்கள் அவனிடமிருக்கலாம்.’

அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மிக அலட்சிய மாகவும் வெறுப்புடனும் பதில் கூறினான் இளவரசன் அந்தச் சில நிமிடங்களில் அவள் பெரும் உண்மை யொன்றைப் புரிந்து கொண்டாள். பாண்டியர் படைத் தலைவனான இளவரசன் வேறு, காதலனான இளவரசன் வேறு என்ற உண்மைதான் அது. காதலால் கனிந்து குழைந்து சொற்படி கேட்டுச் சரசம் புரியும் காதலனான வீரபாண்டியனுக்கும், படைகளை நடத்த முற்படும் தளபதி வீரபாண்டியனுக்கும் அகண்டமான வித்தியாசமிருப்பதை உணர்ந்த இளநங்கை மேற்கொண்டு கேட்கத் திராணியில்லாமல் அசைவற்று நின்றுவிட்டாள் பல விநாடிகள்.

வீரபாண்டியன் கழுகுப் பார்வை அவள் மீது நன்றாக நிலைத்தது. அவன் உதடுகள் உஷ்ணத்தைக் கக்கின. “இள நங்கை! இன்னும் ஏதாவது கேட்க வேண்டியது பாக்கி யிருக்கிறதா?” என்ற கேள்வி உதிர்ந்தது வீரபாண்டியனிட மிருந்து. குரல் விஷம் போலிருந்தது இளநங்கையில் செவிகளுக்கு.

“இருக்கின்றன,” என்று கூறினாள் இளநங்கையும் அவன் கழுகுப் பார்வையளித்த அச்சத்தை உதறிவிட்டு.

“அவற்றை நாளை கேட்கலாம். போய் உத்தரவுப்படி நட” என்றான் வீரபாண்டியன்.

“உங்கள் உத்தரவைப் பற்றிய கேள்விகள் அவை” என்றாள் அவளும் பிடிவாதத்துடன்.

“என் உத்தரவு பற்றி இதுவரை கேள்வி கேட்டவர்கள் கிடையாது. கேட்டாலும் பதில் சொல்லும் பழக்கம் எனக்குக் கிடையாது. உத்தரவிட்டால் நிறைவேற்ற வேண்டியது உபதளபதியின் பொறுப்பு,” என்ற வீரபாண்டியன் பதில் அவன் படைத் தலைவனென்பதைப் பறை சாற்றியது.
“நிறைவேற்றுவது அசாத்தியமானால்?”

“அசாத்தியம் என்ற சொல் என் சொற்களஞ்சியத்தில் இல்லை .”

“என் களஞ்சியத்தில் இருக்கிறது.”

வீரபாண்டியன் சற்று எழுந்தே மஞ்சத்தில் உட்கார்ந் தான். “உயிருக்குப் பயப்படுகிறாயா உபதளபதி?” என்றும் வினவினான். அவன் குரலில் வெறுப்பு மறைந்திருந்தது. அந்த இடத்தை இகழ்ச்சி ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. அந்த இகழ்ச்சி அவன் முகம் பூராவுமே பிரதிபலிக்கிறது; அவன் வெறுப்பைக்கூடத் தாங்கலாம் போலிருந்தது இளநங்கைக்கு; அவன் இகழ்ச்சிக்குரல் சாட்டையெனச் சாடியது அவள் உணர்ச்சிகளை, அவன் தன்னைக் கோழையென்று நினைத்ததை எண்ணிச் சீற்றம் கொண்ட இளநங்கை சொன்னாள், சீற்றம் குரலிலும் பிரதிபலிக்க “நான் கோழையல்ல. என் உயிரைப்பற்றி நான் அஞ்சவில்லை ,” என்று .

“வேறு யார் உயிரைப்பற்றிக் கவலைப்படுகிறாய்!” என்று வினவினான் வீரபாண்டியன் இகழ்ச்சி குரலில் அதிகரிக்க.

“என்னுடன் வரப்போகும் முந்நூறு வீரர்களை பற்றி?” என்றாள் இளநங்கை.

“பாண்டிய வீரர்களைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அவர்கள் சாவை வரவேற்பார்கள்”

“அதற்காக அவர்களைக் காவு கொடுச் வேண்டுமா?”
“அதைத் தீர்மானிப்பது படைத் தலைவன் கடமை”

“அனாவசியமாகப் படைகளைக் காவு கொடுப்பது படைத் தலைவன் கடமைகளில் ஒன்றல்ல.”

“என் கடமையை எனக்கு உபதேசிப்பது உபதளபதியின் வேலையல்ல,” என்று சர்வசாதாரணமாகச் சொன்ன வீரபாண்டியன், அத்துடன் உரையாடல் முடிந்துவிட்ட தென்பதை உணர்த்தப் பஞ்சணையில் மீண்டும் சாய்ந்து கொண்டான்.

இளநங்கையின் இதயத்தில் உணர்ச்சி அலைகள் எழுந்து மோதிக் கொண்டிருந்தன. கேவலம் பொம்மை போல் தன்னை வீரபாண்டியன் இயக்க முற்பட்டதை அவள் ரசிக்கவில்லை. உயிரையும் துறக்கக்கூடிய பயங்கர அலுவலையும் தந்து அதை நிறைவேற்றச் செல்லும் தனக்கு ஆதரவாகவோ அன்புடனோ ஒரு வார்த்தை கூடச் சொல்லாத அவன் இரும்பு மனத்தை நினைத்துப் பார்த்து, அவள் பெரும் துன்பத்துக்கு மட்டுமின்றித் துன்பங் கலந்த வியப்புக்கும் உள்ளானாள். இருப்பினும், வேறு வழியில்லாததாலும், வீரபாண்டியன் யாரும் நெருங்க முடியாத நிலையை ஏற்படுத்திக்கொண்டு விட்டதாலும் அவனுக்குச் சிரம் தாழ்த்தி அறையை விட்டு வெளி யேறினாள் இளநங்கை. பிறகு வெறுத்த உள்ளத்துடன் தனது போர்க் கவசங்களை அணிந்து கொண்டதன்றித் தன்னிடம் அவன் கொடுத்திருந்த ராஜமுத்திரை மோதிரத்தையும் தனது தந்தப் பேழையிலிருந்து எடுத்து விரலில் தரித்துக் கொண்டு மாளிகையை விட்டுக் கிளம்பினாள். கிளம்பி வெளியே வந்ததும் அவள் புரவி வாயிற்படியிலேயே நின்றிருந்தது. அதைப் பிடித்து நின்ற வீரன் யார் உத்தரவின் மேல் அதை அந்தச் சமயத்தில் கொண்டு வந்தான் என்பதைக்கூட அறியத் திராணியில்லாத இளநங்கை அதன்மீது ஆரோகணித்து நகரத்தின் வீதிகளில் சென்றாள். அந்த வீதிகளில் இருந்த மாறுபாடு பெரும் விசித்திரத்தை அளித்தது அவள் சிந்தைக்கு,

நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டமிருக்கும் அந்த வீதிகளில் நள்ளிரவு நெருங்க நான்கு நாழிகைக்கு மேலிருந்த நேரத்துக்குள்ளாகவே மக்கள் நடமாட்டம் எதையும் காணவில்லை அவள் கண்கள். சாதாரண மக்களுக்குப் பதில் கடைகளிலும் இல்லங்களிலும் ஆயுதம் தரித்த வீரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அடிக்கடி அவளைத் தாண்டிச் சில புரவி வீரர்களும் சென்று கொண்டிருந்தார்கள் மக்கள் நடமாட்டமில்லாவிட்டாலும் பந்தங்களும் விளக்குகளும் மட்டும் ஜொலித்துக் கொண்டிருந்தன. மக்கள் வீடுகளுக்குள் செல்ல உத்தரவிடப்பட்டு விட்டதையும் நகர வீதிகளின் நிலையிலிருந்து உணர்ந்து கொண்ட இளநங்கை, “பந்தங்களும் விளக்குகளும் ஏனிப்படிப் பளிச்சிடுகின்றன?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். எதிரி கோட்டைக்குள் நுழைவானென்று எதிர்பார்க்கப் படும்போதே வீதிகள் படைவீரர்களிடம் ஒப்படைக்கப் படுவது போர்ச் சம்பிரதாயமென்பதையும், அப்படி ஒப்படைக்கப்பட்டால் எதிரிக்கு விவரம் புரியாதிருக்கப் பெருவாரியான பந்தங்களும் விளக்குகளும் அணைக்கப் பட்டுக் கூடிய விரைவில் இருட்டாக வீதிகளை வைத் திருப்பதே வழக்கமென்பதையும் அவள் அறிந்திருந்தாள். வழக்கத்துக்கு மாறாக வெளிச்சம் அதிகமாயிருப்பதற்குக் காரணம் விளங்கவில்லை அவளுக்கு. தவிர வீரபாண்டியன் சரணடையப் போவதாக வதந்தியும் அதனால் பீதியும் பரவியிருந்த நகரம் திடீரென எப்படி மாறிவிட்டதென்பதையும், மக்கள் நினைத்த மாத்திரத்தில் பீதியை உதறி வீடுகளுக்குள் அடங்கிச் சிறிதும் சத்தமில்லாத மௌன நகரத்தை வீரபாண்டியன் எப்படிச் சிருஷ்டிக்க முடிந்த தென்பதையும் அவளால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

இருப்பினும் தன் கண் முன்னாலேயே அத்தனையும் நிகழ்ந்துவிட்டதைக் கண்ட இளநங்கை வியப்பு நிறைந்த சிந்தையுடன் மெள்ளத் தெற்கு வாயிலை நோக்கிச் செல்ல முயன்றவள் ஆகாயத்தைப் பார்த்தாள். தான் தெற்கு வாயிலை விட்டுப் புறப்பட வீரபாண்டியன் குறிப்பிட்ட நாழிகைக்கு அதிக நேரம் இருப்பதை உணர்ந்து, தனது புரவியைக் கோட்டையின் பிரதான வாயிலான கிழக்கு வாயிலுக்குத் திருப்பினாள். அந்த வாயிலை அடைந்ததும் ‘இளநங்கையின் வியப்பு உச்சிக்குச் சென்றது. எதெது நடக்கக் கூடாதோ, அத்தனையும் நடந்து கொண்டிருந்தது அங்கு. எதிரி நடமாட்டத்தைக் கவனிப்பதற்கு அத்தியாவசியமான கோட்டை மதில் பந்தங்களும் விளக்குகளும் அணைந்து கிடந்தன. எதிரியை நோக்கி மதிலில் இருக்க வேண்டிய விற்பொறிகள் பழையபடியிருந்தாலும், மதிலின் அடுத்த படியிலிருந்த வேலெறியும் பொறிகள் திருப்பி நகரத்தின் வீதிகளை நோக்கிக்கொண்டிருந்தன, சில தெற்கு வாசலையும் நோக்கிக்கொண்டிருந்தன. அந்த ஏற்பாடுகளுக்குக் காரணம் விளங்காததால் இளநங்கை விற்கூடத் தலைவனை விளித்து, “வீரரே! ஏற்பாடுகள் தலைகீழாயிருக்கின்றனவே?” என்று வினவினாள்.

“ஆம் அம்மணி!” என்று அவனும் ஒப்புக் கொண்டான்.

“எதிரியிடம் சரணடையப் போகிறோமா அல்லது சண்டையிடப்போகிறோமா?” என்று வினவினாள் இளநங்கை .

“சண்டையிடப் போகிறதாகத்தான் தெரிகிறது,” என்றான் விற்கூடத் தலைவன்.

“நேற்றுவரை சரணடையப் போவதாக வதந்தி இருந்ததே?” என்று மீண்டும் வினவினாள் இளநங்கை.

“ஆம் தேவி, இன்று பகல்வரைக்கும் அதே நிலைதான்.”

“பின் எப்பொழுது மாறியது?”

“மாலைக்குச் சற்று முன்பு.”

“எப்படி மாறியது?”

“திடீரென விதவிதமான உத்தரவுகள், வினோதமான உத்தரவுகள் எல்லோருக்கும் வந்தன.”

“யார் மூலம் வந்தன?”

“ஒரு பெண் மூலம், புரவியில் வெகுவேகமாக வந்து ஓலைகளைக் கொடுத்துப் போனாள்.”

“இளநங்கையின் இதயத்தில் மெள்ளச் சந்தேகம் உதய மாயிற்று. “எப்படியிருந்தாள் அவள்?” என்றும் வினவினாள் சந்தேகத்துடன்.

“மலைவாசி மாதிரி இருந்தாள். ஆனால் புதியவளல்ல.”

“என்ன புதியவளல்லவா?”

“அல்ல.”

“எப்படித் தெரியும் உங்களுக்கு?”

“அடிக்கடி இரவு வேளைகளில் ராஜமுத்திரையுடன் வருவாள். அதைக் காட்டிவிட்டுக் கோட்டைக்கு வெளியிலும் செல்வாள்.”

“அப்படியா?”

“ஆம்.”

“எத்தனை நாளாக நடக்கிறது இப்ப்டி?”

“நாலைந்து நாட்களாகவே நடக்கிறது.”

“இதைப்பற்றி நீங்கள் என்னிடம் ஏன் தெரிவிக்க வில்லை?”

“இதில் தெரிவிப்பதற்கு என்ன இருக்கிறது தேவி! ராஜமுத்திரை மோதிரத்தை எதிரி காட்டினாலும் அதற்குப் பணியவேண்டியது வீரர்கள் கடமை. ஓலையில் உத்தரவு வந்தால் நிறைவேற்ற வேண்டியதும் கடமை.” என்றான் விற்கூடத் தலைவன்.
இதைக் கேட்ட இளநங்கை ஆச்சரியம் நிரம்பிய விழிகளை விற்கூடத் தலைவன்மீது திருப்பினாள். “உத்தரவு கள் அர்த்தமற்றதாயிருந்தாலும் நிறைவேற்றவேண்டியது தானா?” என்றும் வினவினாள் ஆச்சரியம் குரலிலும் தொனிக்க..

விற்கூடத் தலைவன் முகத்தில் ஒரு விநாடி. ஆச்சரியம் படர்ந்தது. பிறகு, “பாவம்!” என்றான் பரிதாபத்துடன்.

“எதற்குப் பாவம்?” என்று சீறினாள் இளநங்கை.

“நீங்கள் பெண்,” என்றான் அவன் மீண்டும்.

“அதனாலென்ன?” சீற்றம் அதிகரித்த குரலில் கேட்டாள் வாணாதித்தன் மகள்.

“பெண்களுக்கே சந்தேகம் அதிகம், அதுவும் வீரபாண்டியர் உத்தரவுகளைப்பற்றியே சந்தேகம் ஏற்படு வதென்றால் பெண் சிருஷ்டி அவசியமா என்பதை யோசிக்கத்தான் வேண்டும்,” என்ற விற்கூடத் தலைவன் அவளுக்குத் தலை வணங்கித் தனது அலுவல்களைக் கவனிக்கச் சென்றான்.

இளவரசனிடம் அவன் வீரர்களுக்கிருந்த அசையாத நம்பிக்கையைக் கவனித்த இளநங்கை பேராச்சரியத்துடன் அங்கிருந்த தெற்கு வாயிலுக்கு வந்தாள். அங்கு முந்நூறு பேர் கொண்ட படை தயாராக அணிவகுத்து நின்றது. அந்தப் படையின் இடையே இரண்டு வேலெறியும் பொறிகள் சக்கர வண்டிகளில் ஏற்றப்பட்டிருந்தன. அவள் வந்ததும், அந்தத் தெற்கு வாயிலைக் காத்து நின்ற படைத் தலைவன் வந்து அவள் குதிரைச் சேணத்தைப் பிடித்துக் கொண்டு, “அம்மணி, சகலமும் தயாராயிருக்கிறது?” என்றான்.

“சரி. படை நகரட்டும்,” என்றாள் இளநங்கை.

“தாங்களும் புரவியிலிருந்து இறங்கிவிடுவது நல்லது,” என்றான் அந்தப் படைத்தலைவன்.

“ஏன்?” என்று கேட்டாள் அவள்.

“வெளியில் நிலைமை அப்படியிருக்கிறது. கதவு திறந்ததும் நீங்களே புரிந்து கொள்வீர்கள்,” என்று பணிவுடன் கூறினான் அவன். இருப்பினும் அவனும் ஏதோ உத்தரவை நிறைவேற்றுவதாகவே தோன்றியது அவளுக்கு. ஏதோ சதுரங்கக் காய்களை நகர்த்துவதுபோல் வீரபாண்டியன் அனைவரையும் நகர்த்துவதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டாள். ஆகவே புரவியிலிருந்து இறங்கிப் படை வீரர்களைத் தன்னைத் தொடரச் சொல்லி வாயிற் கதவு களை நோக்கிச் சென்றாள். எங்கும் இருள் சூழ்ந்து நின்ற ‘தால் வானிலிருந்த நக்ஷத்திரங்கள் அளவுக்கதிகமாகச் சுடர் விட்டுக் கொண்டிருந்தன. அவற்றில் புஷ்பக் கொத்துப் போலிருந்த புனர்வஸு லேசாக மேற்கில் சாய்ந்துவிட்டதிலிருந்து வீரபாண்டியன் குறிப்பிட்ட நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்தாள் இளநங்கை. அந்த உணர்வு ஏற்படுவதற்கும் வாயிற்கதவுகள் ஓசைப் படாமல் திறப்பதற்கும் நேரம் சரியாகியிருந்தது. திறந்த கதவுகள் அவளை வியப்பில் ஆழ்த்தின. கண்ணெதிரே விரிந்த நிலை கனவு நிலையாக இருந்தது. சிறிதும் நம்பமுடியாத காட்சி விரிந்தது அவள் வேல்விழிகளுக்கெதிரே!

Previous articleRaja Muthirai Part 1 Ch64 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch66 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here